Thursday, November 17, 2011

ராஜேந்திரனும், அரைக்கால் ட்ரவுசரும் !

விளையும் பயிர், முளையிலேயே தெரியும் என்பது ஏறக்குறைய உண்மைதான் போல. இல்லாவிட்டால், எட்டாம் வகுப்பிலேயே, சீட்டு கட்டி ஏலம் எடுப்பது என்ற அறிய பொருளாதார சித்தாந்தத்தை, எனக்கு புரியும்படி விளக்கிய பிரபு, இன்று மன்னார்குடியில் பெரிய பைனான்சியராக திகழ்வதையும், சிட்டுக்குருவி என்ற கையெழுத்து பத்திரிக்கையில், துப்பறியும்(?) கதை எழுதிய நான், இன்று Blog எழுதி கொண்டிருப்பதையும் எப்படி புரிந்து கொள்வது ? ப்ரோக்ராஸ் கார்டில், தனது அப்பாவின் கையெழுத்தை, தானே போட்டு கடைசி வரை, சேதாரம் இல்லாமல் தப்பித்த முத்துக்குமார், இன்று பெரிய அரசியல்வாதியாய் திகழ்வதும், இதில் சேர்த்தியா? என்றெல்லாம் கேட்டு, என்னை சிக்கலில் மாட்டி விட நினைப்பவர்கள் நிலப்பறிப்பு வழக்கில் கைதாக கடவது.

பல ஆண்டுகளை கடந்த பாரம்பரியமிக்க, ஒரு பள்ளியில்தான் நாங்கள் எங்களது உயர்நிலை கல்வியை தொடர்ந்தோம். பொதுவாகவே, ஆங்கில வழி கல்வி கற்கும் மாணவர்கள் இருக்கும் வகுப்பை சமாளிப்பது, ஆசிரியர்களுக்கு ஒரு பெரிய சவால்தான். காரணம் ஒன்றும் புரிந்துகொள்ள முடியாததல்ல. பள்ளியில், தமிழ் வழி கல்விக் கற்கும் மாணவர்கள் அதிகம் என்பதால், வகுப்பின் பிரிவுகளும் அதிகம். எட்டாம் வகுப்பில் பி பிரிவில் இருக்கும் மாணவர் ஒன்பதாம் வகுப்புக்கு வரும்போது சி அல்லது டி பிரிவுக்கு செல்ல நேரிடும். இதனால் நிலையான நட்பு உருவாகும் வாய்ப்பு குறைவு . ஆனால், ஆங்கில வழி கல்வி கற்கும் மாணவர்கள் குறைவு என்பதால், ஆரம்பம் முதல் ஒரே வகுப்பாக இருக்க நேரிடும். மாணவரிடத்தில் ஒரு பெரிய சகோதரத்துவம் நிலவும். ஏறக்குறைய பதினான்கு ஆண்டுகள் ஒன்றாகவே படிப்பதால், அவ்வளவு எளிதாக ஒருவரை ஒருவர் காட்டிக்கொடுப்பதில்லை . இந்த ஒற்றுமையை குலைப்பதுத் தான் ஆசிரியர்களின் முதல் சவால்.


இப்படித்தான், எட்டாம் வகுப்பில் இருக்கும் போது, எங்களுக்கு வரலாறு வகுப்பு எடுக்க வந்த வெங்கட்ராமன், அன்று தலை வலிப்பதால், வகுப்பு எடுக்க இயலாது. நீங்கள் எல்லாம் சத்தம் இல்லாமல் இதுவரை நடத்திய பாடங்களை ரிவைஸ் செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு, மேஜையில் தலை சாய்த்து படுத்து கொண்டார். அவர் படுத்து கொண்ட நொடியில், எனக்குள் இருந்த ஜேசுதாஸ் முழித்து கொண்டார். அப்போது பிரபலமாக இருந்த பாடல்களை பாட தொடங்கினேன். எனக்கு இடதுக்கை பக்கம் இருந்தவன், அந்த வருடம்தான் நெய்வேலியில் இருந்து மாற்றலாகி, எங்கள் வகுப்பிற்கு வந்து இருந்த கோபாலகிருஷ்ணன் என்ற அப்பிராணி. வலதுக்கை பக்கமோ, எல்.கே.ஜி யில் இருந்து கூடப் படிக்கும் ராஜாராமன். பாடத் துவங்கியபோது மெலிதாக ஆரம்பித்த நான், உற்சாக மிகுதியால் உச்ச ஸ்தாயியில் பாடலானேன் . "ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு " பாடல் எங்கள் வகுப்பையும் தாண்டி அடுத்த வகுப்பு வரை பரவியது . எங்கள் வகுப்பில் ஆசிரியர் இல்லையோ என்று சந்தேகப்பட்டு ஓடிவந்தார், ஆசிரியர் சாமிநாதன். வெங்கட்ராமன் சாரை எழுப்பி "எவனோ பாடுறான் சார்" என்றார். அவமானத்தில் முகம் சிவந்த வெங்கட்ராமன் , எவண்டா பாடினது? மரியாதையா சொல்லிடுங்க என்றார்.

எவனாவது வாய் திறந்தால் தானே? "டேய் ஒழுங்கா சொல்லிடுங்க. இல்லனா.. நான் ரொம்ப பொல்லாதவன் ஆய்டுவேன்" என்று ஆரம்பித்த வெங்கட்ராமன் சார், நேரமாக ஆக, "பக்கத்துலே உள்ளவனவாது சொல்லிடுங்கடா" என்று கெஞ்ச ஆரம்பித்தார். யாரும் அசைந்து கொடுப்பதாக தெரியவில்லை. இதை ஒரு மானப் பிரச்சினையாகவே எடுத்து கொண்ட வெங்கட்ராமன், "முதல் நாலைந்து பெஞ்சுலே இருந்து தான், சத்தம் வந்துச்சு . இன்னைக்கு இதை சொல்லலைனா இது தாண்டா நான் உங்களுக்கு எடுக்குற கடைசி கிளாஸ். ஹெட்மாஸ்டர கூப்பிட்டு வந்து எல்லாருக்கும் டி.சி கொடுத்துட்டு தாண்டா மறு வேலை" என்று மிரட்ட ஆரம்பித்தார். பக்கத்தில் இருந்த கோபாலகிருஷ்ணன் நெளிய ஆரம்பித்தான். என்னிடம் மெதுவாக, "சொல்லிடலாம்டா " என்றான். எனக்கு அருகில் இருந்த ராஜாராமனிடம் நான் மெதுவாக, "இவன் சொல்லுவேங்குறான் டா "  என்றேன்.. "எட்டப்பன் பரம்பரையா இருக்கும். நம்மள பத்தி தெரியாது போல" என்று கண்களை உருட்டி ராஜாராமன் சொன்ன விதத்தை பார்த்து எனக்கே பயமாய் இருந்தது. நடுங்கி போன கோபால் வாயே திறக்கவில்லை. நேரம் கூட கூட, வெங்கட்ராமன் சாரை பார்க்கவே பரிதாபமாக இருந்தது எனக்கு. வியர்த்துக்கொட்டி, கண்கள் எல்லாம் சிவந்து, இனியும் தாமதித்தால் பி.பி எகிறி ஏடாகூடமாகி விடும் என்று உணர்ந்த நான், என்னவானாலும் சரி என்று எழுந்து "நான் தான் பாடினேன்" என்றேன்.

அவர் என்னை நெருங்கிய வேகத்தை பார்த்தே, சரி இன்றோடு நாம் காலி என்று கண்களை மூடிக்கொண்டேன். பளார்,பளார் என்று அறையும் சத்தம். என்ன இது வலிக்கவே இல்லை என்று மெதுவாக கண்களை திறந்து பார்த்தால், வெங்கட்ராமன் சார், கோபாலகிருஷ்ணனை பந்தாடி கொண்டு இருந்தார். ஏன்டா.. எவ்வளவு நாழிய கேட்குறேன் . பக்கத்துலே உள்ளவன் சொல்லுங்கன்னு.. கூட்டுக்களவானியா பண்ணறீங்க? என்றபடி, அவனை அறைந்த அறையில் கன்னங்கள் இரண்டும் பலூன் போல உப்பி கொண்டது கோபாலுக்கு. அந்த சம்பவத்திற்கு பிறகு அவன் அவசரமாக இடத்தை மாற்றி கொண்டு வேறு பெஞ்சுக்கு சென்றுவிட்டான். பள்ளி முடிக்கும் வரை என் பக்கமே வரவில்லை.

வெகு நாட்கள் கழித்து கோபாலகிருஷ்ணனை, ப்ராஜெக்ட் விசயமாக சிங்கப்பூர் சென்றபோது முஸ்தபாவில் சந்திக்க நேரிட்டது. நன்றாக பேசிகொண்டிருந்தவன், தனது கன்னங்களை அழுந்த துடைத்தப்படி உணவருந்த வீட்டிற்கு அழைத்தபோது, ஏனோ எனக்கு பழைய நினைவுகள் வந்து, அவசரமாய் மறுத்து விட்டேன்.

இப்படியாக நாங்கள் பத்தாம் வகுப்பு வந்த போது, ஏற்கனவே இரண்டு வருட குத்தகையில் அங்கிருந்த ராஜேந்திரன், எங்களுடன் சேர்ந்து மூன்றாம் வருடத்தை தொடர்ந்தான். பத்தாம் வகுப்பு வரை , மாணவர்களுக்கு அரைக்கால் சட்டை தான். +1 போன பிறகுதான் பேன்ட். இது எங்களை போன்ற சராசரி உருவம் கொண்டவர்களுக்கு பெரிய பிரச்சினையாக இருந்ததில்லை . கடைசி பெஞ்சு வளர்ந்த பசங்களுக்கு இது பெரிய மானப் பிரச்சினை . அருகில் இருந்த கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன், அப்போதே பனை மரத்தில் பாதி இருப்பான். ஊரில், நல்லது கேட்டதுக்கு அவனிடம் வந்து ஆலோசனை கேட்கும் அளவுக்கு வளர்ந்து இருந்த ராஜேந்திரனுக்கு, பள்ளி பாடங்களை விட பெரிய தொல்லையாக இருந்தது இந்த அரைக்கால் சட்டைதான். அரை டிராயர் போட்டு, மேலே லுங்கியை சுற்றி கொண்டு வந்து, பள்ளிக்கு முன் இருந்த இந்தியன் பேங்க் வாசலில் லுங்கியை கழட்டி பையில் வைத்து கொண்டு பள்ளிக்குள் நுழைவான் ராஜேந்திரன். வகுப்பில், நாங்கள் அடிக்கும் ஜோக்ஸ், பேசிக்கொள்ளும் கதைகள் எதிலும் அவனுக்கு நாட்டம் இருந்ததில்லை. அவனுடைய ஆழ்ந்த அனுபவத்திற்கு முன் அவை எல்லாம் சிறுப் பிள்ளை தனமாகத்தான் தெரிந்து இருக்கும். பத்தாம் வகுப்பை தாண்டமாட்டேன் என்ற ராஜேந்திரனின் பிடிவாதமா , மகனை பாஸ் செய்ய வைத்து ஒரு IPS, IAS ரேஞ்சுக்கு ஆக்கி காட்டுவேன் என்கின்ற அவனது தந்தையின் பிடிவாதமா ? வென்றது எது ? முடிவை பரீட்சை பேப்பரில் காண்க! என்ற ரீதியில் இது தொடர்ந்தது . எல்லாருக்கும் டெர்ரர் ஆக இருந்த ராஜாமணி சாருக்கே, ராஜேந்திரனை பார்த்தால் ஒரு கிலிதான். "பாத்தா ரெண்டு புள்ளை பெத்தவன் மாதிரி இருக்கான் . அவனை எப்படியா அடிக்கிறது என்பார்.

அவன் பள்ளிக்கு வருவதே , வகுப்பு இருக்கும் இடத்தை நியாபகபடுத்தி கொள்ளத்தான். பெரும்பாலும், பெரிய கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் சமுதாயம் குறித்த தீவிர சிந்தனை, அவ்வபோது லக்ஷ்மி திரையரங்கு, காலை காட்சியில் மலையாளம் பயிலும் முயற்சி என்று தனது படிப்பில் கவனமாக இருந்தான். ஒரு மத்தியான நேரத்தில், எதேச்சையாக பள்ளியின் கழிப்பறையில் நுழைந்த லக்ஷ்மி நாராயணன், வாயில் புகை வர, கொல்லி வாய் பிசாசாக நின்ற ராஜேந்திரனை பார்த்து, பயந்து போய் தனது எல்லா முயற்சிகளையும் பாதியிலேயே கைவிட்டு ஓடி வந்தான்.

ஒருவழியாக, பத்தாம் வகுப்பு பொது தேர்வு வந்தது. கடைசி பரிட்சையான சமுக அறிவியல் முடிந்த அன்று, அனைவரும் ஒரு வித கொண்டாட்ட மனநிலைக்கு தள்ளப்பட்டனர். பெஞ்சுகளை தட்டி, பாட்டு, டான்ஸ் என்று ஒரே குதூகலம். வகுப்பு அருகே , புதிய கட்டிடதிற்காக வந்து இறங்கிருந்த ஓடுகள் உடைத்து எறியப்பட்டது . வகுப்பறையை பூட்டுவதற்காக வந்த வாட்ச்மேன் கலியனை ஒரு கும்பல் துரத்தியது. இவை எவற்றிலும் கலந்து கொள்ளாத ராஜேந்திரனோ மும்முரமாக தனது அரை டிராயரை கழட்டி, அதில் ஒரு பெரிய கல்லை வைத்து சுற்றி , கட்டிடத்தின் உச்சியை நோக்கி எறிந்து விட்டு , திரும்பி பார்க்காமல் வெளியே நடந்தான்.

Tuesday, October 25, 2011

தீபாவளி பலகாரம்

தீபாவளி எல்லா நாளும் போல மற்றுமொரு நாளே என்று ஆகி வெகு வருடங்கள் கடந்து விட்டது. ஆனால் ஒவ்வொரு முறையும், தீபாவளிக்கான சிறுவயது குதூகளிப்பை,கொண்டாட்டத்தை, திரும்பவும் பெற்று விட எங்கோ ஒரு மூலையில் மனம் ஏங்கி கொண்டு தான் இருக்கிறது. திரும்பி செல்லவே முடியாத பாதை எப்போதும் வசீகரமானதே.

சிறுவயதில் தீபாவளிக்கான உற்சாகம், ஊரில் முதல் பட்டாசு கடையாக திறக்கப்படும், சூர்யா வெடிக் கடை(கடல்), திறந்த நாள் முதல் தொற்றிக்கொள்ளும். வருடம் முழுவதும், பட்டாசு விற்கும் ராமையா பிள்ளை கடை ஊரில் இருந்தாலும், அதில் பெரும்பாலும், தேர்தல் வெற்றி, மாப்பிள்ளை ஊர்வலம், மற்றும் கல்யாண சாவு போன்ற சுப காரியங்களுக்காகவே வெடி வாங்கப்பட்டதால், தீபாவளிக்கான வெடி கடையாக அது கருதப்படவில்லை. திறந்த நாள் முதல், வெடிக்கடையில், அண்ணே, வெங்காய வெடி இருக்கா? என்ற சிறியவர்களின் குரல்களும், கடலுனு போட்டு இருக்கே?.திமிங்கில வெடி இருக்கா? என்று மப்பில் லந்து கொடுக்கும் பெருசுகளுமாய் கூட்டம் திரள ஆரம்பித்து விடும்.

ஏறக்குறைய, அந்த ஒரு மாத காலமும், கையில் கிடைக்கும் அல்லது கையில் வந்து போகும் எந்த பணமும், அந்தந்த பணத்தின் மதிப்பிற்கு ஏற்ப, லக்ஷ்மி வெடியாகவோ, டபுள் ஷாட்/செவன் ஷாட்டகவோ(எப்போதும் செவன் ஷாட் வெடியில், இரண்டு அல்லது மூன்று வெடிகள் வெடிக்காது என்றபோதிலும், இது செவன்ஷாட் என்றே அழைக்கப்பட்டு வந்தது.) மட்டுமே கண்ணுக்கு தெரியும். கிடைக்கும் பணத்தை எல்லாம் வெடியாய் மாற்றி, நல்ல வெயிலில் காய வைத்து, சாயங்காலம் ஆனதும், திரும்பவும் மரப்பெட்டியில் எடுத்து வைக்கும் இந்த சடங்கு, நாள்தோறும் நடக்கும். தீபாவளி அன்று நான்கு மணிக்கே எழுந்து
முதலில் ஒரு சரத்தை கொளுத்தி விட்டு தான் எண்ணெய் குளியலே. குளித்து முடித்து, புத்தாடை அணிந்து வெடிக்க வெளியே சென்றோம் என்றால், விடிய விடிய தீபாவளி தான். ஒருவழியாக சுவாரசியமான வெடிகள் எல்லாம் தீர்ந்த பிறகு ,அம்மாவின் அழைப்புக்கு காது கொடுத்து , உள்ளே வந்து , திரி கிள்ளிய வெடி நாற்றம் விரல்களில் மிச்சம் இருக்க, உணவு அருந்துவது ஒரு தனி சுகம். ஒரு பதினோரு மணி வாக்கில், வெறும் பிஜிலி வெடி (ஊசி வெடி) மட்டும் மிச்சம் இருக்க, தீபாவளி முடிந்து போன ஒரு மென்சோகம் மனதை கவ்வும் . யார் வீட்டில் அதிகம் வெடித்தது என்ற அறிவிக்கப்படாதப் போட்டி எங்கள் தெருவில் நிலவியது. இது பெரும்பாலும் வெடித்த குப்பையின் அளவை கொண்டே அறியப்படும்
என்பதால், ராணி காமிக்ஸ் கோடை மலர் கொண்டு சுற்றிய உலக்கை வெடிக்கு நல்ல மவுசு இருந்தது. குப்பைகளை அதிகமாக்க, எதிர் வீட்டு பாபு, பழைய தினத்தந்தி பேப்பர் கட்டினை தனது தங்கையுடன் சேர்ந்து கிழித்து போடுவதாக பரவி இருந்த வதந்தியை பாபுவை,
தவிர அனைவரும் நம்பினார்கள்.

தீபாவளிக்கு ஒரு வாரம் முன்பாகவே, வீட்டிற்கு வந்து பலகாரம் போட்டு தரும் ராமசாமி பிள்ளையும் அவருடைய ஆஸ்தான உதவியாளர் ஞானமும், வந்து விட்டால், தீபாவளி ஜுரம் வெகு வேகமாய் உச்சத்தை தொடும். ராமசாமி பிள்ளை, மன்னார்குடியில் இனிப்பகம் வைத்து இருந்தார். அதற்குமுன்பு, வெகு காலம், எங்கள் குடும்பத்தில் வேலை பார்த்தவர். ராமசாமி பிள்ளை போன்று இனிப்பு வகைகள் செய்ய இன்னொருவர் பிறந்துதான் வர வேண்டும். எவ்வளவு பெரிய சமையல் கலைஞர்களும் சறுக்கி விடும் சமாச்சாரங்கள், ஜாங்கிரி, அல்வா. இவற்றைச்செய்வதில் பிள்ளைக்கு நிகர் அப்போது யாரும் இல்லை. இரவு ஒன்பது மணிக்கு வந்து, ஒரு டோஸ் கும்பகோணம் வெற்றிலை,ரங்கவிலாஸ் புகையிலையுடன் போட்டு கொண்டு, அடுப்பு பற்ற வைத்தார் என்றால் , விடிய விடிய வேலை நடக்கும். காலை ஏழு மணி வாக்கில் குறைந்த பட்சம் நான்கு இனிப்பு வகைகளுடன், அண்டா நிறைய முறுக்கு, மிக்சர் தயார் செய்து விடுவார். எல்லாவற்றையும் ,முடித்த பின்பும் ஆரம்பித்த போது இருந்த அதே உற்சாகம் முகத்தில் இருக்கும். வெகு நாட்களாய் எங்கள் குடும்பத்தில் பழகியவர் பிள்ளை என்பதால், வெகு இயல்பாய் எனது அத்தைகள், சித்தப்பா, பெரியப்பாக்கள் என அனைவரையும் பற்றி கிண்டல் அடிப்பார். அட்டகாச சிரிப்பும், நையாண்டியுமாய் அவர் வேலை செய்வதை பார்ப்பதே ஒரு இனிய அனுபவம். அதை எப்போதும் நான் தவற விட்டதே இல்லை. நான், என் தம்பி , அக்கா என்று அனைவர்க்கும் என்னனென்ன பிடிக்கும் என்று பிள்ளைக்கு தெரியும் என்பதால், எங்கள் அம்மா கொடுக்கும் லிஸ்டில் எப்படியும் அவற்றையும் நுழைத்து விடுவார். மிகஸ்ர்க்கு கொடுத்த கடலைமாவு மீதி இருக்கு, அதான் தம்பிக்கு பிடிக்குமே ..மைசூர் பாக்கு போட்டுறேன் என்பார் . குடும்பமே, இரவு முழுக்க,அவர் பேசுவதை கேட்டு கொண்டு இருக்க சுடச்சுட பலகாரங்களை போட்டு தட்டில் வைத்து டேஸ்டு பார்க்க சொல்லி கொடுத்து கொண்டே இருப்பார் .

பிள்ளை, தனது பேச்சின் இடையிடையே,என்னடா ஞானம்.நான் சொல்றது? என்று தனது உதவியாளரிடமும் கேட்க தவறுவதில்லை.பிள்ளை தான் இப்படி பேசுவாரே தவிர, ஞானம் அதற்கு நேர் எதிர். "ஆமாம்,ஆமா", அது சரி, "எண்ணெய் காயுது" என்று நான்கு, ஐந்து வாக்கியங்களில் சுருக்கி விடலாம் அவரது பதில்களை.ஞானம், பிள்ளையை விட ஒரு சில வருடங்கள் தான் இளையவர். பிள்ளையை தவிர வேறு யாருடனும் அவரை நான் பார்த்தது இல்லை. ஞானம் இல்லாமல் பிள்ளையும் பலகாரம் செய்ய வந்தது இல்லை. ஒரு வேடிக்கையான கூட்டணி, என்றே எனக்கு தோன்றும். எவ்வளவு பேசினாலும், அந்த பேச்சினால், ஒரு நாளும் பிள்ளை செய்யும் பலகாரம் சுவை கேட்டது இல்லை. ஒருவேளை பேசுவதை நிறுத்தி விட்டால், பலகாரம் சுவை குறைந்து விடுமோ என்று எண்ண தோன்றும் அளவுக்கு ஒரு ஒத்திசைவு.

தனது இளமை காலம் முதல், தனக்கு உதவியாக இருந்தவர் என்பதால், பொதுவாக மிக கண்டிப்பான என் தந்தை, பிள்ளையிடம் மட்டும் தனி அன்பு கொண்டிருந்தார். பலகாரம் செய்யும்போது பிள்ளை, மன்னர்குடியின் பழைய வரலாறு பற்றிப்பேச ஆரம்பித்தால் நேரம் போவதே தெரியாது. மேலவீதி ராஜவேலு, புதுசா கார் வாங்கி இருக்காரா? என்று அப்பா வெகு நாட்களுக்கு முன் நடந்த விசயத்தை பற்றி, சமிபத்தில் நடந்தது போல் கேட்பார். வாங்கி இருக்கார் .. என்ன? வாங்கி இருக்கான்னு சொல்லுங்க.நீங்க ப்ளைமௌத் கார்லே வீதிலே போறப்ப, மேல்சட்டை போடாம கார் பின்னாடியே ஓடிவருவான். அடிச்சி விரட்டுவேன் ..சிங்கப்பூர்லே அடிச்ச உண்டி காசு. இப்போ அவன், மினுக்குற மினுக்கு என்ன ?. யாருகிட்டே ? பழைய பவிசு தெரிஞ்சவன் கிட்டயா நடக்கும்? இப்பயும் என்னை பார்த்தா, பயல் பம்மி பதுங்கி தான் போவான். எல்லாம் கால கொடுமை அய்யா. என்பார் பிள்ளை. தான் எதிர்பார்த்த பதில் கிடைத்த திருப்தி , அப்பாவின் முகத்தில் தெரியும். பெரும்பாலும் பழைய கதைகள். அப்பா எலக்சனில் போட்டியிட்டது. எம்.ஜி.ஆர், தி.மு.க வில் இருக்கும் போது, ஊருக்கு அழைத்து வந்தது ..நடிகர் அசோகன் எங்கள் வீட்டுக்கு வந்த போது, பிள்ளை சாப்பாடு பரிமாறியது (மனுஷன், அப்படியே பாலில் பச்சை முட்டைய கலந்துலே குடிப்பார்) என்று எல்லாம் பழைய கதைகள் ..பல முறை கேட்டது தான் என்றாலும் பிள்ளை தனது பேச்சின் முலம் அந்த சம்பவங்களை மீண்டும் நிகழ்த்தி காட்டுவார். பிள்ளை ஒரு சிறந்த கதை சொல்லி. எல்லா கதையும் முடியும் போது, பிள்ளையின் கல்யாணத்திற்கு, அப்பா தனது ஹில்மென் காரை டிரைவர் போட்டு அனுப்பி வைத்ததை பற்றி சொல்வார். அப்போது மட்டும் பிள்ளையின் குரல் சற்று கம்முவதாக எனக்கு தோன்றும்.
பிள்ளைக்கு ஊரின் எல்லா ரகசியங்களும் தெரிந்து இருந்தது . சம்பந்தப்பட்டவர்களே நேரில் வந்து பிள்ளையிடம் சொல்லி செல்வதுண்டோ என்று எண்ண தோன்றும் அளவுக்கு அவை உண்மையாக இருந்தன. ஊரில் புதிதாக முளைத்து இருந்த ஸ்வீட் கடைகளின் தரம் , புதிதாக தோன்றி இருந்த சில பெரிய மனிதர்களின் சிறிய குணங்கள் , என்று புதிய விஷயங்கள் மீது பிள்ளைக்கு கேலியும், ஒருவித ஏளனமும் இருந்தது. என் தந்தை அவற்றை ஏதோ ஒரு விதத்தில் ஆமோதித்து வந்தார் என்றே படுகிறது .எனக்கு என்னவோ, அப்பா, பிள்ளை முலம், தனது தொலைந்து போன இளமை காலத்திற்குள் ஊடுர்வ முயல்வதாகவே தோன்றும்.

கால ஓட்டத்தில், மன்னார்குடியில் மேலும் பல புதிய ஸ்வீட் ஸ்டால்கள் திறக்கப்பட்டன. முற்றிலும் கண்ணாடிகளால் சூழப்பட்டு, கோபுரம் போல அடுக்கப்பட்ட மைசூர் பாக்குகளும், ஜாங்க்ரிகளும் வெகு வேகமாய் விற்பனை ஆயின. தீபாவளி சமயத்தில் தள்ளுபடி வேறு . மிக சிறந்த சமையல் கலைஞரான பிள்ளையால், வியாபாரிகளுடன் போட்டி போட இயலவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக பிள்ளைக்கு, பழைய ஒரு சில நபர்களை தவிர , புதிய வாடிக்கையாளர்கள் இல்லாமலே போனார்கள். இதற்கிடையில், பிள்ளையுடன் ஏற்பட்ட சிறு சண்டையில், அவர் மனைவி தற்கொலை செய்து கொண்டார். இதை தாங்கி கொள்ள முடியாத பிள்ளை, குடியில் விழுந்தார். நினைத்தால் கடை திறப்பது, இல்லையென்றால் இல்லை. கொஞ்சம் கொஞ்சமாய் வீட்டுக்கு வந்து பலகாரம் போடுவதும் நின்று போனது.
 
வருடங்கள் ஓடி விட்ட நிலையில், ஒரு தீபாவளியின் போது, அப்பா இந்த முறை பலகாரம் செய்ய மீண்டும் பிள்ளையை கூப்பிடலாம் என்றார். ஏகமனதாக வரவேற்கபட்டு, பிள்ளையிடம் தெரிவிக்கப்பட்டது. பிள்ளை, சந்தோசமாக ஒத்து கொண்டதாகவும், வழக்கம் போல், இரவே வந்து விடுவதாகவும் சொன்னதாக அனுப்பிய ஆள் வந்து தெரிவித்தார். வீடே பிள்ளையின் வருகைக்கு தயார் ஆனது.

பிள்ளை சொன்ன நாளும் வந்தது. ஆனால், இரவு வெகு நேரமான பிறகும், பிள்ளை வரவேயில்லை. காத்திருந்து, எல்லோரும் நம்பிக்கை இழந்த நேரத்தில், ஒரு வழியாக வந்தார் பிள்ளை. வந்தார் என்பதை விட, அவரது உதவியாளர் ஞானத்தால் , கைதாங்கலாக அழைத்து வரப்பட்டார் என்பதே சரி.
பிள்ளை முட்ட முட்ட குடித்திருந்தார். கண்கள் சொருகி, ஒருஇடத்தில நிலையாக நிற்க இயலாது, தடுமாறினார். பிள்ளையின், மேல்சட்டை விலகிய நிலையில், வேட்டியின் மீது எப்போதும் கட்டி இருக்கும், பச்சை பெல்டை பார்த்தபடி, நான் நின்றிருந்தேன். அவரது கோலத்தை பார்க்க இயலாது அம்மா வீட்டிற்குள் சென்று விட்டார்.

தடுமாறிக்கொண்டிருந்த பிள்ளை, நிற்க இயலாது திண்ணையில் சாய்ந்தார். அய்யா வீட்டுக்கு பலகாரம் செய்ய போகிறோம் என்று தன்னை வர சொல்லிவிட்டு , வீட்டில் குடித்துவிட்டு படுத்து இருந்தார் என்று ஞானம் சொன்னார். இவரால என்னோட வாழ்கையும் நாசமா போய்டுச்சு என்று கோபத்துடன் ஞானம் சட்டென்று சொன்னதை நான் மட்டுமல்ல, அப்பாவும் எதிர்பார்க்கவில்லை. தான் இருந்த நிலையையும் மீறி, அடிபட்டது போல் நிமிர்ந்த பிள்ளை, ஞானத்தை உற்று பார்த்தார். அந்த பார்வையில் இருந்த உணர்வை எனக்கு விவரிக்க தெரியவில்லை.

Thursday, September 22, 2011

ஐஸ்கார் வீரமணி


எனக்கு, எப்போது ரஜினி பித்து பிடித்தது என்று சரியாக நினைவில்லை.  ஒரு ஏழு வயது இருக்கும்போது பிடித்திருக்கலாம், என்று நினைக்கிறேன்.  எதை செய்தாலும்,அதில் அதீதமாய் போவது, என்ற என்னுடைய இயல்புப்படி,  ரஜினி விஷயத்திலும் நான் மிகத்தீவிரமாக இருந்தேன்.  சொல்லப்போனால், என்னுடைய வயதை ஒத்த பெரும்பாலானவருக்கு சிறு வயதில் ரஜினிதான் ஆதர்சமாய் இருந்து இருக்க முடியும் என்று தோன்றுகிறது. ரஜினி பிடிக்கும் என்றால,கட்டாயமாய் கமலஹாசனை பிடித்திருக்ககூடாது என்பது அன்றைய முதல் விதி. எனக்கோ கமல் டான்ஸ் மிகவும் பிடிக்கும்.  இதை  வெளியே சொன்னால், ரஜினி ரசிகனாய் இருப்பதற்க்கான தகுதியை இழக்க நேரிடும் என்று, வெளியே மிகத்தீவிரமாய் கமலை பழிப்பேன். எங்களை பொறுத்தவரை, கமல் படத்திலேயே "கெட்டப்பழக்கம்" எல்லாம் செய்கிறார் என்றால், நிஜத்திலும் கெட்டவர்தான் என்பது ஒரு முன் முடிவு.


இந்த ரஜினி காதல் என்பது பொங்கல் நாட்களில், வெகு தீவிரமாகி விடும் . எங்களுடைய பள்ளி நாட்களில், நண்பர்களுக்குள் பொங்கல் வாழ்த்து  அனுப்புவது என்பது ஒரு மிகப்பெரிய கேளிக்கை. இதற்கு நண்பர்களுக்கு   பிடித்த மாதிரி பொங்கல் வாழ்த்து அட்டை சேகரிப்பது கிட்டத்தட்ட  டிசம்பர் வாக்கிலேயே ஆரம்பித்து விடும். ஆண்கள் என்றால் ரஜினி,கமல். பெண்கள் என்றால் ஸ்ரீதேவி, சற்று வயதானவர்கள் என்றால் ஏர் உழவன் அல்லது சூர்யோதயம் இவைதான், அப்போது சக்கை போடு போட்ட வாழ்த்து அட்டைகள். இதில் போட்டி என்னவென்றால், யாருக்கு அதிகமாக வாழ்த்து  அட்டை வருகிறது என்பதில்தான்.  நான் தெரிந்தவர்,தெரியாதவர் அனைவருக்கும் அனுப்பி வைப்பேன். அப்போது தானே , அவர்களும் நமக்கு  அனுப்புவார்கள்? எல்லாம், இப்போது நாம் FBலே தாறுமாறா  லைக்   போடுவது மாதிரித்தான்.  நிறைய லைக் வேண்டும் என்றால், நிறைய லைக் போட வேண்டும். இந்த கலைவெறி எல்லாம் வெளியேதான்.  வீட்டுக்குள்ளே   பப்பு வேகாது . சினிமா நடிகன் என்றாலே, எங்க அப்பாவிற்கு ஜென்ம விரோதி என்று அர்த்தம். சினிமா பத்தி பேச்சு எல்லாம் நினைத்து கூட பார்க்க முடியாது . ஒருமுறை, "ரஜினி ரசிகன்" என்ற புத்தகம் வாங்கினேன் என்று துரத்தி துரத்தி அடித்தது இன்றும் நினைவில் இருக்கிறது.

நான் படித்த காண்வென்டின் எதிரில் ஐஸ் விற்ற வீரமணிதான், எனக்கு ரஜினி  பற்றிப்பேச கிடைத்த சக நண்பர். மதியம் மூன்று முப்பதுக்கே எனக்கு பள்ளி  முடிந்துவிடும் என்றாலும், ரிக்ஷாக்காரர் என்னவோ நான்கு மணி வாக்கில்  தான் வருவார். இடைப்பட்ட முப்பது நிமிடம், எனக்கு ரஜினியின் புதுப்பட  கதைகளை சொல்வது ஐஸ்காரர் வீரமணிதான். எப்படி இவருக்கு மட்டும், யாருக்குமே தெரிந்திராத ரஜினியை பற்றிய புது புது செய்திகள் தெரிந்து இருந்தது என்பது இன்று வரை எனக்கு ஆச்சர்யமே. வீரமணி, அவருடைய ஐஸ்பெட்டியில் இருந்து ஐஸ் எடுத்து கொடுக்கும் லாவகத்தை பார்த்த முதல் நாளே,  நான் கண்டு பிடித்து விட்டேன், அவர் ஒரு ரஜினி ரசிகர் ஆகத்தான் இருக்க முடியும் என்று.

நீங்கள் கூர்ந்து கவனித்தால், ஒன்று புரியும். எல்லா ரஜினி ரசிகர்களிடமும் , கொஞ்சம் ரஜினி ஒட்டி கொண்டு இருப்பார். வீரமணியிடம், அது கொஞ்சம்   அதிகம். அதே போல்,ரஜினி படக்கதையை சுவாரஸ்யமாக சொல்ல அவரை  போல் யாராலும் முடியாது.  அவர் "தம்பிக்கு எந்த ஊர்" படத்தின் கதையை  சொன்ன விதம் இன்றும் என் நெஞ்சில் இருக்கிறது. வீரமணியை பார்த்தால், அவர் பிழைப்புக்காக ஐஸ் விற்க வந்தவர் போலவே நினைக்க தோன்றாது . எளிமையான ஆடைகள் என்றாலும் அதில் ஒரு ஸ்டைல் ஒட்டி இருக்கும் . எதை கையாள்வதிலும் ஒரு நளினம்.    ஏதோ பொழுதுப்போக்கிற்காக ஐஸ் விற்கிறார் என்றும், ஐஸ் விற்று முடித்தவுடன், தனது காரில் ஏறி  போய்விடக்கூடும், என்றே எண்ண தோன்றும் .

நான் அக்கௌன்ட் வைத்த முதல் பேங்க் வீரமணி தான்.  எனக்கு அப்படி, ஒரு  சலுகை அவர் கொடுத்ததற்கு காரணம், நானும் ரஜினி ரசிகன்  என்பதாலேயே,என்று நான் உறுதியாக நம்பினேன்.  ரஜினியின் புதுப்படம்  வரப்போகிறது என்றால், அந்த ஒரு மாதகாலமும் அவரது உடல் மொழியில்  ஒரு தீவிரம் கூடி விடும் . எந்த நேரமும், அந்த படத்தை பற்றி மட்டுமே பேச்சு, நினைவு . நாட்கள் நெருங்க நெருங்க ரஜினியே அவருள் இறங்கி  விட்டதாகவே நான் உணர்வேன் . படிக்காதவன் ரிலீஸ் என்று நினைக்கிறேன் தஞ்சை ஜுபிட்டர் திரைஅரங்கில், படம் பார்த்த அடுத்த நாளே காக்கி சட்டையும், பேண்டும் தைத்து போட்டு கொண்டு வந்தார் .என்னுடைய டான்ஸ்க்கு மிக பெரிய ரசிகரும் வீரமணி தான்.  அப்போது எல்லாம் பள்ளியில் எந்த விழா என்றாலும், நிச்சயம் என்னுடைய டான்ஸ் ஒன்று இருக்கும்.  இதை முன்கூட்டியே வீரமணிக்கு நான் தெரிவித்துவிடுவேன் நிகழ்ச்சி அன்று,எப்படியாவது வாட்ச்மேனின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு, பள்ளிக்குள் நுழைந்து விடுவர்.

ஒரு முறை,  வீரமணிக்கும், அவரது போட்டியாளர் இக்பால்க்கும் ஐஸ் விற்பதில்  சண்டை வந்து விட்டது . இக்பால், மிகவும் கனத்த சரீரம். சண்டை வந்த நொடியில், அருகில் இருந்த எனக்கு,  இந்த சண்டையை வீரமணி தவிர்த்து விட வேண்டும் என்றே தோன்றியது.வீரமணி எங்களை ஒதுங்க சொல்லிவிட்டு, இக்பாலை அடித்த விதம், எந்த ரஜினி படத்திற்கும்   நிகரானது.  பெருத்த உருவமான இக்பால் அடி தாங்க முடியாமல் ஓட, ஒரு கையால், தலையை கோதி விட்டு கொண்டு , மற்றொரு கையால் தாவி பிடித்து உதைத்த உதையில் இக்பால், அதற்கு பிறகு, அங்கு வராமலே போனார்.

காலப்போக்கில் நான் ஆறாம் வகுப்பிற்காக வேறுஉயர்நிலைப்பள்ளி சென்ற  உடன், வீரமணியை பார்க்கமுடியாமலே போனது.காலமும் உருண்டோடியது .நான் என்னுடைய பழைய பள்ளியை, கடக்கும் போது எல்லாம், வீரமணியை தேடினேன்.  ஆனால் அதற்கு பிறகு அவரை காணவே இல்லை.


ஏறக்குறைய இருபது ஆண்டுகள் கடந்து விட்டது.நான் என்னுடைய பள்ளிப்படிப்பை முடித்து பின்பு கல்லூரியும் முடிந்து சென்னையில் வேலையில் அமர்ந்தேன். ஒரு முறை,  சென்னையில் இருந்து மன்னை  செல்லும் இரவு பேருந்தில், பயணித்து கொண்டிருந்தேன் . நன்கு தூங்கி விட்ட  நிலையில் ஒரு இடத்தில உணவு அருந்துவதற்காக பேருந்து நிறுத்தப்பட்டு,  அங்கு எழும்பிய கானா பாடலில் கண் விழித்து கொண்டேன். தூக்கம் போனதால், இறங்கி தேனீர் அருந்திவிட்டு, காசு கொடுக்க கை நீட்டியபோது , கல்லா பெட்டியில் இருந்த முகம் பழகிய முகமாய் தெரிய சட்டென்று பொறி தட்டியது. அது வீரமணியேதான். கூட்டம் அதிகம் என்பதால், படு வேகமாக காசை வாங்கி கல்லா பெட்டியில் எறிந்து கொண்டு இருந்தார். அதே லாவகம். நான் சற்று தாமதித்து, நீங்கள் ஐஸ்கார் வீரமணிதானே என்று கேட்ட உடன் சட்டென்று நிமிர்ந்து என்னை பார்த்தார் . வீரமணியை காலம் சிதைத்து இருந்தது. தலை முழுக்க நரைத்து, முகம் வதங்கி, மிகவும் மெலிந்து காணப்பட்டார் . மிகவும் உருமாறியிருந்த, அவரை எப்படி நான் அடையாளம் கண்டுக்கொண்டேன் என்பதெல்லாம், வாழ்க்கையின் விசித்திரங்களில் ஒன்று.

என்னை அடையாளப்படுத்திக் கொண்டதும்,  எழுந்து வந்து என்னை தழுவி  கொண்டார்.  என் வேலை, குடும்பம் குறித்து எல்லாம் மிகுந்த அன்புடன்  கேட்டுக்கொண்டார்.

அந்தக்கடை,  தனது தங்கையின் கணவரது என்றும், தான் அதில் வேலை பார்ப்பதாகவும் சொன்னார்.   குடும்ப வறுமை காரணமாக,வெகு நாட்களுக்கு, முன்பே இந்த ஊருக்கு குடிபெயர்ந்து விட்டதாகவும் தெரிவித்தார். சட்டென்று, நினைவுக்கு வந்தவராய், "தெரியும் இல்லே, பாபா படத்துக்காக ஒரு பெரிய ஆலமரத்தையே, ஏரோப்லேய்ன்லே, இமய மலைக்கு கொண்டு போறாங்க. தலைவர் பாபாவில் கலக்குவார் பாரு"      என்றார் . இதை சொன்ன நொடியில் , என் கண்ணெதிரே பழைய ஐஸ்காரர் வீரமணி தோன்றி மறைந்தார்.