Thursday, November 17, 2011

ராஜேந்திரனும், அரைக்கால் ட்ரவுசரும் !

விளையும் பயிர், முளையிலேயே தெரியும் என்பது ஏறக்குறைய உண்மைதான் போல. இல்லாவிட்டால், எட்டாம் வகுப்பிலேயே, சீட்டு கட்டி ஏலம் எடுப்பது என்ற அறிய பொருளாதார சித்தாந்தத்தை, எனக்கு புரியும்படி விளக்கிய பிரபு, இன்று மன்னார்குடியில் பெரிய பைனான்சியராக திகழ்வதையும், சிட்டுக்குருவி என்ற கையெழுத்து பத்திரிக்கையில், துப்பறியும்(?) கதை எழுதிய நான், இன்று Blog எழுதி கொண்டிருப்பதையும் எப்படி புரிந்து கொள்வது ? ப்ரோக்ராஸ் கார்டில், தனது அப்பாவின் கையெழுத்தை, தானே போட்டு கடைசி வரை, சேதாரம் இல்லாமல் தப்பித்த முத்துக்குமார், இன்று பெரிய அரசியல்வாதியாய் திகழ்வதும், இதில் சேர்த்தியா? என்றெல்லாம் கேட்டு, என்னை சிக்கலில் மாட்டி விட நினைப்பவர்கள் நிலப்பறிப்பு வழக்கில் கைதாக கடவது.

பல ஆண்டுகளை கடந்த பாரம்பரியமிக்க, ஒரு பள்ளியில்தான் நாங்கள் எங்களது உயர்நிலை கல்வியை தொடர்ந்தோம். பொதுவாகவே, ஆங்கில வழி கல்வி கற்கும் மாணவர்கள் இருக்கும் வகுப்பை சமாளிப்பது, ஆசிரியர்களுக்கு ஒரு பெரிய சவால்தான். காரணம் ஒன்றும் புரிந்துகொள்ள முடியாததல்ல. பள்ளியில், தமிழ் வழி கல்விக் கற்கும் மாணவர்கள் அதிகம் என்பதால், வகுப்பின் பிரிவுகளும் அதிகம். எட்டாம் வகுப்பில் பி பிரிவில் இருக்கும் மாணவர் ஒன்பதாம் வகுப்புக்கு வரும்போது சி அல்லது டி பிரிவுக்கு செல்ல நேரிடும். இதனால் நிலையான நட்பு உருவாகும் வாய்ப்பு குறைவு . ஆனால், ஆங்கில வழி கல்வி கற்கும் மாணவர்கள் குறைவு என்பதால், ஆரம்பம் முதல் ஒரே வகுப்பாக இருக்க நேரிடும். மாணவரிடத்தில் ஒரு பெரிய சகோதரத்துவம் நிலவும். ஏறக்குறைய பதினான்கு ஆண்டுகள் ஒன்றாகவே படிப்பதால், அவ்வளவு எளிதாக ஒருவரை ஒருவர் காட்டிக்கொடுப்பதில்லை . இந்த ஒற்றுமையை குலைப்பதுத் தான் ஆசிரியர்களின் முதல் சவால்.


இப்படித்தான், எட்டாம் வகுப்பில் இருக்கும் போது, எங்களுக்கு வரலாறு வகுப்பு எடுக்க வந்த வெங்கட்ராமன், அன்று தலை வலிப்பதால், வகுப்பு எடுக்க இயலாது. நீங்கள் எல்லாம் சத்தம் இல்லாமல் இதுவரை நடத்திய பாடங்களை ரிவைஸ் செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு, மேஜையில் தலை சாய்த்து படுத்து கொண்டார். அவர் படுத்து கொண்ட நொடியில், எனக்குள் இருந்த ஜேசுதாஸ் முழித்து கொண்டார். அப்போது பிரபலமாக இருந்த பாடல்களை பாட தொடங்கினேன். எனக்கு இடதுக்கை பக்கம் இருந்தவன், அந்த வருடம்தான் நெய்வேலியில் இருந்து மாற்றலாகி, எங்கள் வகுப்பிற்கு வந்து இருந்த கோபாலகிருஷ்ணன் என்ற அப்பிராணி. வலதுக்கை பக்கமோ, எல்.கே.ஜி யில் இருந்து கூடப் படிக்கும் ராஜாராமன். பாடத் துவங்கியபோது மெலிதாக ஆரம்பித்த நான், உற்சாக மிகுதியால் உச்ச ஸ்தாயியில் பாடலானேன் . "ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு " பாடல் எங்கள் வகுப்பையும் தாண்டி அடுத்த வகுப்பு வரை பரவியது . எங்கள் வகுப்பில் ஆசிரியர் இல்லையோ என்று சந்தேகப்பட்டு ஓடிவந்தார், ஆசிரியர் சாமிநாதன். வெங்கட்ராமன் சாரை எழுப்பி "எவனோ பாடுறான் சார்" என்றார். அவமானத்தில் முகம் சிவந்த வெங்கட்ராமன் , எவண்டா பாடினது? மரியாதையா சொல்லிடுங்க என்றார்.

எவனாவது வாய் திறந்தால் தானே? "டேய் ஒழுங்கா சொல்லிடுங்க. இல்லனா.. நான் ரொம்ப பொல்லாதவன் ஆய்டுவேன்" என்று ஆரம்பித்த வெங்கட்ராமன் சார், நேரமாக ஆக, "பக்கத்துலே உள்ளவனவாது சொல்லிடுங்கடா" என்று கெஞ்ச ஆரம்பித்தார். யாரும் அசைந்து கொடுப்பதாக தெரியவில்லை. இதை ஒரு மானப் பிரச்சினையாகவே எடுத்து கொண்ட வெங்கட்ராமன், "முதல் நாலைந்து பெஞ்சுலே இருந்து தான், சத்தம் வந்துச்சு . இன்னைக்கு இதை சொல்லலைனா இது தாண்டா நான் உங்களுக்கு எடுக்குற கடைசி கிளாஸ். ஹெட்மாஸ்டர கூப்பிட்டு வந்து எல்லாருக்கும் டி.சி கொடுத்துட்டு தாண்டா மறு வேலை" என்று மிரட்ட ஆரம்பித்தார். பக்கத்தில் இருந்த கோபாலகிருஷ்ணன் நெளிய ஆரம்பித்தான். என்னிடம் மெதுவாக, "சொல்லிடலாம்டா " என்றான். எனக்கு அருகில் இருந்த ராஜாராமனிடம் நான் மெதுவாக, "இவன் சொல்லுவேங்குறான் டா "  என்றேன்.. "எட்டப்பன் பரம்பரையா இருக்கும். நம்மள பத்தி தெரியாது போல" என்று கண்களை உருட்டி ராஜாராமன் சொன்ன விதத்தை பார்த்து எனக்கே பயமாய் இருந்தது. நடுங்கி போன கோபால் வாயே திறக்கவில்லை. நேரம் கூட கூட, வெங்கட்ராமன் சாரை பார்க்கவே பரிதாபமாக இருந்தது எனக்கு. வியர்த்துக்கொட்டி, கண்கள் எல்லாம் சிவந்து, இனியும் தாமதித்தால் பி.பி எகிறி ஏடாகூடமாகி விடும் என்று உணர்ந்த நான், என்னவானாலும் சரி என்று எழுந்து "நான் தான் பாடினேன்" என்றேன்.

அவர் என்னை நெருங்கிய வேகத்தை பார்த்தே, சரி இன்றோடு நாம் காலி என்று கண்களை மூடிக்கொண்டேன். பளார்,பளார் என்று அறையும் சத்தம். என்ன இது வலிக்கவே இல்லை என்று மெதுவாக கண்களை திறந்து பார்த்தால், வெங்கட்ராமன் சார், கோபாலகிருஷ்ணனை பந்தாடி கொண்டு இருந்தார். ஏன்டா.. எவ்வளவு நாழிய கேட்குறேன் . பக்கத்துலே உள்ளவன் சொல்லுங்கன்னு.. கூட்டுக்களவானியா பண்ணறீங்க? என்றபடி, அவனை அறைந்த அறையில் கன்னங்கள் இரண்டும் பலூன் போல உப்பி கொண்டது கோபாலுக்கு. அந்த சம்பவத்திற்கு பிறகு அவன் அவசரமாக இடத்தை மாற்றி கொண்டு வேறு பெஞ்சுக்கு சென்றுவிட்டான். பள்ளி முடிக்கும் வரை என் பக்கமே வரவில்லை.

வெகு நாட்கள் கழித்து கோபாலகிருஷ்ணனை, ப்ராஜெக்ட் விசயமாக சிங்கப்பூர் சென்றபோது முஸ்தபாவில் சந்திக்க நேரிட்டது. நன்றாக பேசிகொண்டிருந்தவன், தனது கன்னங்களை அழுந்த துடைத்தப்படி உணவருந்த வீட்டிற்கு அழைத்தபோது, ஏனோ எனக்கு பழைய நினைவுகள் வந்து, அவசரமாய் மறுத்து விட்டேன்.

இப்படியாக நாங்கள் பத்தாம் வகுப்பு வந்த போது, ஏற்கனவே இரண்டு வருட குத்தகையில் அங்கிருந்த ராஜேந்திரன், எங்களுடன் சேர்ந்து மூன்றாம் வருடத்தை தொடர்ந்தான். பத்தாம் வகுப்பு வரை , மாணவர்களுக்கு அரைக்கால் சட்டை தான். +1 போன பிறகுதான் பேன்ட். இது எங்களை போன்ற சராசரி உருவம் கொண்டவர்களுக்கு பெரிய பிரச்சினையாக இருந்ததில்லை . கடைசி பெஞ்சு வளர்ந்த பசங்களுக்கு இது பெரிய மானப் பிரச்சினை . அருகில் இருந்த கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன், அப்போதே பனை மரத்தில் பாதி இருப்பான். ஊரில், நல்லது கேட்டதுக்கு அவனிடம் வந்து ஆலோசனை கேட்கும் அளவுக்கு வளர்ந்து இருந்த ராஜேந்திரனுக்கு, பள்ளி பாடங்களை விட பெரிய தொல்லையாக இருந்தது இந்த அரைக்கால் சட்டைதான். அரை டிராயர் போட்டு, மேலே லுங்கியை சுற்றி கொண்டு வந்து, பள்ளிக்கு முன் இருந்த இந்தியன் பேங்க் வாசலில் லுங்கியை கழட்டி பையில் வைத்து கொண்டு பள்ளிக்குள் நுழைவான் ராஜேந்திரன். வகுப்பில், நாங்கள் அடிக்கும் ஜோக்ஸ், பேசிக்கொள்ளும் கதைகள் எதிலும் அவனுக்கு நாட்டம் இருந்ததில்லை. அவனுடைய ஆழ்ந்த அனுபவத்திற்கு முன் அவை எல்லாம் சிறுப் பிள்ளை தனமாகத்தான் தெரிந்து இருக்கும். பத்தாம் வகுப்பை தாண்டமாட்டேன் என்ற ராஜேந்திரனின் பிடிவாதமா , மகனை பாஸ் செய்ய வைத்து ஒரு IPS, IAS ரேஞ்சுக்கு ஆக்கி காட்டுவேன் என்கின்ற அவனது தந்தையின் பிடிவாதமா ? வென்றது எது ? முடிவை பரீட்சை பேப்பரில் காண்க! என்ற ரீதியில் இது தொடர்ந்தது . எல்லாருக்கும் டெர்ரர் ஆக இருந்த ராஜாமணி சாருக்கே, ராஜேந்திரனை பார்த்தால் ஒரு கிலிதான். "பாத்தா ரெண்டு புள்ளை பெத்தவன் மாதிரி இருக்கான் . அவனை எப்படியா அடிக்கிறது என்பார்.

அவன் பள்ளிக்கு வருவதே , வகுப்பு இருக்கும் இடத்தை நியாபகபடுத்தி கொள்ளத்தான். பெரும்பாலும், பெரிய கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் சமுதாயம் குறித்த தீவிர சிந்தனை, அவ்வபோது லக்ஷ்மி திரையரங்கு, காலை காட்சியில் மலையாளம் பயிலும் முயற்சி என்று தனது படிப்பில் கவனமாக இருந்தான். ஒரு மத்தியான நேரத்தில், எதேச்சையாக பள்ளியின் கழிப்பறையில் நுழைந்த லக்ஷ்மி நாராயணன், வாயில் புகை வர, கொல்லி வாய் பிசாசாக நின்ற ராஜேந்திரனை பார்த்து, பயந்து போய் தனது எல்லா முயற்சிகளையும் பாதியிலேயே கைவிட்டு ஓடி வந்தான்.

ஒருவழியாக, பத்தாம் வகுப்பு பொது தேர்வு வந்தது. கடைசி பரிட்சையான சமுக அறிவியல் முடிந்த அன்று, அனைவரும் ஒரு வித கொண்டாட்ட மனநிலைக்கு தள்ளப்பட்டனர். பெஞ்சுகளை தட்டி, பாட்டு, டான்ஸ் என்று ஒரே குதூகலம். வகுப்பு அருகே , புதிய கட்டிடதிற்காக வந்து இறங்கிருந்த ஓடுகள் உடைத்து எறியப்பட்டது . வகுப்பறையை பூட்டுவதற்காக வந்த வாட்ச்மேன் கலியனை ஒரு கும்பல் துரத்தியது. இவை எவற்றிலும் கலந்து கொள்ளாத ராஜேந்திரனோ மும்முரமாக தனது அரை டிராயரை கழட்டி, அதில் ஒரு பெரிய கல்லை வைத்து சுற்றி , கட்டிடத்தின் உச்சியை நோக்கி எறிந்து விட்டு , திரும்பி பார்க்காமல் வெளியே நடந்தான்.

4 comments:

  1. மன்னையின் தமிழ் மணம் ம்ணக்கிறது. நகைச்சுவை இயல்பாய் வருகிறது. தொடரட்டும் இது......

    ReplyDelete
  2. Slang and way of expression is good..Keep going ..Sathiya

    ReplyDelete

Write your valuable comments here friends..