Tuesday, October 23, 2012

அழகிய கண்ணே..

அப்போதெல்லாம், சாயங்காலமானால், இசைமழை மியூசிக்கல் செண்டர்ல்தான் நாங்கள் கூடுவோம். அந்த கடையை வைத்திருந்தது, பாபு அண்ணா. பாபு அண்ணாவுக்கு, எப்படியும் 35 வயதுக்கு மேல் இருக்கும். பெரிதாக கடவுள் பக்தி எல்லாம் இல்லாவிட்டாலும், பளிரென்று காவி வேட்டிதான் கட்டுவார். மேலே கைகள் மடக்கிவிடபட்ட, கோடு போட்ட சட்டை. அழகாக ட்ரிம் செய்யப்பட்ட தாடி. அவருக்கு இரு தம்பிகள். இவர்தான் மூத்தவர். தந்தை இறந்து விட. தாய் மட்டும் உண்டு. தம்பிகள் இருவரும் திருமணம் செய்துக் கொண்டு குடும்பத்தோடு இருக்க, இவர் மட்டும் திருமணம் வேண்டாம் என்று இருப்பதற்க்கு, முன்னோர் காலத்தில், முதல் தெருவில் வசித்த மஞ்சு என்கிற மஞ்சுளா தான் காரணம், என்பான் சிவா. அவனுக்கு எப்படி தெரியும் என்று கேட்டால் சொல்லமாட்டான்.  ஆனால், அது பற்றி, பாபு அண்ணா ஒருபோதும் எங்களிடம் பேசுவதில்லை. காலை கடை திறந்தவுடன்,  காதல் ஒவியம்..பாடும் காவியம் என்று ராஜாவும், ஜென்சியும் உருகுவார்கள். ஜென்ஸியின் குரல் மீது அண்ணாவுக்கு தனிப்பிரியம்.


சிகரெட் மற்றும் டீ இரண்டு மட்டுமே குடித்து ஒரு ஜீவன் உயிர் வாழ முடியுமா என்று சந்தேகம் இருந்தால், நீங்கள் பாபு அண்ணாவை பார்த்து முடிவுக்கு வரலாம். அருகில் இருந்த அனைத்து கடைகளும் மூடிய பின்னரும், பலகைகள் கொண்டு இணைக்கப்பட்டிருந்த கதவின் ஒரு பலகையை மட்டும் திறந்து வைத்துக் கொண்டு, உள்ளே அமர்ந்து ரிக்கார்டிங் செய்துக் கொண்டிருப்பார். பெரும்பாலும் ராஜா பாடல்கள்தான். பாபு அண்ணா, ராஜா ஸ்பெசலிஸ்ட். ராஜா பாடலின் ஒரு துகளை கேட்டால் போதும், அவரால் என்ன பாடல், என்ன படம், அந்த பாடலில் என்ன சிறப்பு, அந்த பாடலைப் போலவே ராகம் கொண்ட பாடல்கள் எவை என்று  அடுக்குவார். ஒரு முறை தன்னிடம் இல்லாத மழை தருமோ, எந்தன் மேகம் என்ற பாடல் நாகூரில் ஒரு ரிக்கார்டிங் செண்டரில் இருக்கிறது என்று கேள்விப்பட்டு கடையை சாத்திவிட்டு உடனே பஸ் பிடித்துவிட்டார். பல இரவுகள் அண்ணன் கடையை சாத்தி வீட்டுக்கு செல்லும்போது  பெரியார் சிலை அருகில் மறு நாளைக்கான பேப்பர் கட்டு திருச்சி பஸ்ஸில் வந்து இறங்கி கொண்டிருக்கும். திரும்பவும் காலை பத்து மணிக்கு கடை திறந்து விடுவார். தூக்கம், உணவு இவை எல்லாம் எப்போது என்று வெற்றிலையில் மை தடவிதான் பார்க்க வேண்டும்.

செமஸ்டர் விடுமுறைகளில் நானும் அவருடன் இணைந்து கொள்வேன். நிசப்தமான இரவில், ஜானகியின் அழகிய கண்ணே  பாட்டை கேட்டு இருக்கிறீர்களா? மனம் மெல்ல உருகி, இசையில் இணைந்து, செல்ல இயலா ஆழங்களுக்குள் எண்ணங்கள் ஊடுருவி இருக்கும். இது போல பித்து பிடிக்க வைத்த இரவுகள் பல. சில பாடல்களை கேட்கும்போது, எந்த பேச்சும் இல்லாது மெளனத்தில் ஆழ்ந்து விடுவார் பாபு அண்ணா. சமயங்களில் கண்கள் கலங்குவது போல் இருக்கும்.

நானும், சிவாவும் மட்டும் கடை உள்ளே சென்று அங்கிருக்கும் ஸ்டூலில் உட்காருவோம். பேச்சு திரும்ப திரும்ப ராஜா போட்ட பாடல்களை பற்றியே சுற்றி வரும். அப்போதுதான், ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த ஜெண்டில்மேன் படபாடல்கள் ரிலீசாகி சக்கைப் போடு போட்டுக் கொண்டிருந்தது. அந்த கேசட்டை, சட்டைப்பையில் எல்லோரும் பார்க்கும்படி வைத்துக் கொண்டு, இளைஞர்கள் அலைந்து கொண்டிருந்தனர். கேசட் வாங்க வருபவர்கள், பெரும்பாலும் அதைதான் கேட்பார்கள். நாங்கள் எடுத்துக் கொடுத்துவிட்டு அவர்கள் போனவுடன் கிண்டலடிப்போம். அதே சமயத்தில் வெளியான ஆத்மா பட பாடலான கண்ணாலே, காதல் கவிதை சொன்னாளே பாட்டுதான் காலத்தில் நிற்க்கும் என்று பொருமுவோம். அவை, எல்லாம் கேசட் ரிக்கார்டிங் சக்கை போடு போட்ட காலங்கள். டி.டி.கே கேசட்டில் 90 நிமிடங்கள் இரு பக்கமும் சேர்த்து பாடல்கள் பதிவு செய்ய இருபத்தி ஐந்து ரூபாய். ஒரே நேரத்தில் பல கேசட்கள் பதிவு செய்யும் வகையில் பல ரிக்கார்டர்கள் வைத்திருந்தார் அண்ணா. ஊரில், புற்றீசல் போல் பல ரிக்கார்டிங் கடைகள் இருந்தாலும், அண்ணாவின் ஸ்டைலுக்கு தனி மதிப்பு இருந்தது. அதே போல் யாரிடமும் இல்லாத பல பாடல்கள் அண்ணாவிடம் இருந்தது.


மேலும், ஊரில் இயங்கும் தனியார் பேருந்துகளின் ஓட்டுனர், நடத்துநர்களிடம் ஒரு பாடல் பதிவகம் பிரபலமானால், அதற்கு பிறகு அதன் புகழ் திக்கெட்டும் பரவும். அந்த காலகட்டத்தில், இசைமழை பதிவகத்தை தேடி வெளியூர்களில் இருந்தெல்லாம் இசை ஆர்வலர்கள் வருவார்கள். வரும் நபர்களின் விருப்பம் அறிந்து, பதிவு செய்வதில் அண்ணன் கிங். "அண்ணே சில்னெஸ் கூட வைங்கண்ணே..ரொம்ப அதிர வேணாம்." என்று சொல்பவர்களுக்கு, ஷார்ப்பாக பதிவு செய்து கொடுப்பார். "சும்மா அதிரனும்ண்ணே" என்பவர்களுக்கு ஈரக்குலை நடுங்குமளவுக்கு பேஸ் ஏற்றிக் கொடுப்பார். அண்ணே, உங்க டேஸ்டுக்கு, பாட்டு செலக்ட் பண்ணி போடுங்கண்ணே என்பவர்கள் தான் அண்ணனின் இலக்கு. உருகி, உருகி, பாடல் தேர்ந்தெடுத்து போட்டு தருவார். முதல் பாடலின் மூடை ஒட்டியே, இம்மியளவு கூட உணர்வு மாறாமல், எல்லா பாடல்களையும் தொடர்ந்து தேர்ந்தெடுப்பது என்பது ஒரு கலை. மற்றவர்கள் இதை நல்ல தொழிலாய் மட்டும் பார்க்கையில், அண்ணாவை பொறுத்த வரை கரும்பு திங்க கூலி கிடைக்கிறது என்ற அணுகுமுறைதான். "பணம் கொஞ்சம் குறையுதுண்ணே" என்றால், பரவாயில்லை கண்ணா, அடுத்த தடவை கொடு என்பதோடு சரி. அதற்கு பிறகு இவருக்கும் ஞாபகம் இருக்காது. அவர்களுக்கும் கொடுக்கும் எண்ணம் இருக்காது.


பாபுவின் முதல் தம்பி குமார், அவ்வபோது கடைக்கு வருவார். அவர் வந்தால், சட்டென்று ஒரு சங்கடம் பரவும். பாபு அண்ணா, கல்லாபெட்டியில் இருந்து எழுந்து, அருகில் உள்ள ஒரு ஸ்டூலில் உட்கார்ந்துக் கொள்வார். குமார், கல்லாபெட்டியில் உட்கார்ந்து கணக்கு பார்ப்பார். தனது அண்ணன் ஒரு பிழைக்கத் தெரியாத மனிதன் என்று நினைக்கும் பெரும்பாலான தம்பிகளை போலவே, குமாரும் நினைத்தார். குமார், சிறிய வயதிலேயே தேர்வு எழுதி கிராம நிர்வாக அலுவலராக, அரசாங்க பணியில் இருந்தார். சிறிய வயதிலேயே சம்பாதிக்க தொடங்கி, திருமணம் நிகழ்ந்து, குழந்தை பெற்று  இப்படி வாழ்க்கையின் எல்லா தளங்களிலும் பெற்ற வெற்றி அசாத்தியமான தன்னம்பிக்கை தர, மற்ற அனைவரையும் துச்சமாக நினைத்தார். பொழுது போனால் அங்கு வந்து குழுமி, அப்பா சம்பாத்தியத்தில் கேசட் வாங்கி, இசையை பற்றி பேசி காலம் தள்ளும், எங்களை மட்டும் எப்படி அவர் மதிப்பார்? மேலும் அவரது அண்ணாவின் பித்துக்கு நாங்களும் ஒரு காரணம் என்று உள்ளுர அவர் நம்பியிருந்தார்.

குமார், தனது அண்ணனை மிக நுட்பமாக அவமதிப்பார். உள்ளே நுழைந்தவுடன், ஏற்கனவே சரியான இடத்தில் இருக்கும் எஸ் டைப் நாற்காலியை,  மிகுந்த சப்தம் எழும்ப நகர்த்தி, சரி செய்வார். மேஜையில், இல்லாத தூசியை துடைப்பதாய் பாவனை செய்வார். கல்லாபெட்டியை இழுத்து பார்த்து, உச் கொட்டுவார். அண்ணா குடித்து வைத்த டீ கிளாஸை, ஏதோ தீண்டதகாத பொருள் போல ஒற்றை விரலால் நகர்த்தி வைப்பார்.

பெரும்பாலும் குமார் உள்ளே வந்தவுடன், மெதுவாக நழுவிவிடும் நான், அன்று மாட்டிக் கொண்டேன். குமார், உள்ளே நுழைந்தார். வழக்கம் போல் கேசட் வரிசையை உச்சு கொட்டியபடி தூசி தட்டினார். எத்தனை நாளைக்குதான், இந்த இத்துபோன கேசட்டை, ரேக்லே வைச்சி இருப்பேன்னு, நானும் பாக்குறேன். என்றார். இரு பறவைகள், மலை முழுவதும் என்று ஜென்சியின் நிறம் மாறாத பூக்கள் பட பாடல் மீது அண்ணா கொண்டிருந்த தீராத பிரேமையின் காரணமாகவே, அந்த கேசட் அங்கு வெகு நாட்களாக உட்கார்ந்திருந்தது.
பாபு அண்ணா, கேள்வி யாரை நோக்கியோ கேட்கபடுகிறது என்ற பாணியில், கேசட்டில் ஸ்குருவை கழற்றிக் கொண்டிருந்தார். பெரும்பாலும் அவர் இப்படிதான் தனது தம்பியிடம் மெளனம் சாதிப்பார். நான் ஒருவன் அங்கிருப்பதை, குமார் அங்கீகரிக்கவேயில்லை. எப்பவும், பாபு அண்ணா கணக்கு எதுவும் எழுதி நான் பார்த்ததில்லை. பாடல் பதிவு செய்ய கொடுக்கப்படும் பாடல்கள், எழுதிய தாளிலேயே கொடுக்கப்படும் அட்வான்ஸ் தொகையை குறிப்பிட்டு, சில சமயங்களில் பணத்தையும் அந்த தாளோடு சேர்த்து கேசட்டில் சுற்றி, ரப்பர் பேண்ட் போட்டு உள்ளே வைத்துக் கொள்வார். பதிவு முடிந்து திரும்ப கொடுக்கும்போது மீதம் உள்ள பணம் வசூலிக்கபடும்.
அப்படி பதிவு செய்ய கொடுக்கப்பட்ட கேசட்களில் ஒன்றை தேடி எடுத்தார், குமார். இந்த டப்பா கேசட்டை, இந்த எழவெடுத்தவன் திரும்ப வாங்க வருவான்னு, என்னா நிச்சயம்? தேவை இல்லாம கரண்ட் காசு அழுவனுமா ? அட்வான்ஸ் கூடுதலா வாங்குன்னு, எத்தனை தடவை சொன்னாலும்,உன் மண்டைலே ஏறாதா?”, என்றார்.

அண்ணாவின் முகத்தை பார்க்கவே கஷ்டமாக இருந்தது. சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டேன். அன்று இரவு சிவாவிடம், என்னடா அந்த குமாரு, இப்படி கொஞ்சம் கூட மரியாதை இல்லாம பேசுறான், என்றேன். நீ சொல்லுவேடா..சம்பாதிக்கிறவனுக்குதான் தெரியும் அந்த கஷ்டம். அந்த கடை வைக்க அவரும் காசு போட்டு இருக்காருடா.. என்றான் சிவா.

பின்பு ஒரு வெள்ளியன்று கோவிலில், அந்த மஞ்சுவை காட்டினான் சிவா. விடுமுறைக்கு இரு குழந்தைகளுடன் ஊருக்கு வந்திருந்தாள். பார்த்தவுடன் சப்பென்றானது. இவளையா, அண்ணன் காதலித்தார்?. டேய், சன்னதிக்கு போவலாம் என்றேன். திரும்பவும் அருகில் பார்க்கும் எண்ணத்தில். சன்னதிக்குள் திரும்ப பார்த்த போது ஏதோ ஒன்று ஈர்த்தது. அவள் பையன் தீபராதனை தட்டை எக்கி தொட முயன்ற போது, அவனை பார்த்து ஒரு ஒரமாய் சிரித்தாள். தீபத்தின் ஒளியில் அந்த தெற்றுபல்லும், சுருள் முடியும் தொடர்ந்து ஏதோ சொல்ல முயலும் அகண்ட கண்களும், அவள் தேவதை , தேவதை என்றன. கொஞ்சம் கூட தெவிட்டாத, ஏதோ ஒரு மர்மம், திரும்ப திரும்ப பார்க்க வைத்தது. "பாபு அண்ணன், மகா ரசிகன்டா" என்றேன் வாய்விட்டு. எனக்கு அண்ணாவிடம் போய் சொல்ல வேண்டும் போல் இருந்தது. ஆனால், அவர் என்னவோ, எப்பவும் போல்தான் அன்றும் இருந்தார்.

பின்பு சில வருடங்கள் கழிந்து ஒரு முறை கடை இருநாட்களாக மூடியிருந்தது. சிவாவையும், வீட்டுபக்கம் காணவில்லை. ஒருபோதும் அண்ணா, இப்படி தொடர்ந்து கடையை சாத்துபவர் இல்லையே என்பது உறுத்த பக்கத்தில் தேங்காய் கடை வைத்திருக்கும் மாரியப்பன் அண்ணனிடம்  பாபு அண்ணன் கடை திறக்கலையே? எங்கேயும் வெளியூர் போயிருக்காரா எனறேன்

ம்ம்.. என்று முனகியபடி, என்னை பார்த்த அண்ணாச்சி, ஏதோ பேச முற்படுபவர் போல சைகை செய்து, எழுந்து வெளியே வந்து ரோட்டு ஓரத்தில் புளிச்சென்று வெற்றிலை எச்சியை துப்பினார்..வேட்டியை இறுக்கி கட்டி, தண்ணீர் கூஜாவை தூக்கி குடித்து இரு முறை கொப்பளித்து துப்பியபின், வந்து அமர்ந்தபடி சொன்னார்.

வெளியே என்ன வெளியே?..இனிமே எல்லாம் உள்ளே தான். சாமியார் மாதிரி காவி வேட்டி சுத்திகிட்டு, என்னம்மா, வேஷம் கட்டுனான் அந்த பய.

ஒன்றும் புரியாமல் நான் திகைத்து போய் நின்றிருந்தேன்,

பதினைஞ்சு வயசு பச்சைப் மண்ணை ஏமாத்தி, வவுத்துலே கொடுத்துபுட்டான் உங்கண்ணன்.. வீட்டுலே அடிதாங்க முடியாம, அந்த புள்ளே தூக்குலே தொங்கிடுச்சி.. போலிஸ் வந்து ரோட்டுலேயே அடிச்சி இழுத்துட்டு போச்சு அந்த பயலை..எல்லாத்தையும் ஒத்துட்டானாம்.. பூனை மாதிரி இருந்துட்டு, என்னா வேலை பாத்து இருக்கான். அப்படி பொம்பளை கேக்குதுன்னா, போவ வேண்டியதுதானே சந்தை பேட்டைக்கு. ருவாய்க்கு முணுன்னு லைன் கட்டி நிக்குறாளுகளே. சின்ன புள்ளையே போய், கொன்னுட்டான். அவனை, தேடிட்டு அந்த தெருபக்கம் எல்லாம் போகாதே.. வெளுத்துடுவானுங்க.. என்றார்.அவர் துப்பிய வெற்றிலை எச்சில் பாதி மண்ணிலும், பாதி ரோட்டிலுமாய் சிவப்பாய் வழிந்தோடியது. அதை பார்த்தபடி நின்றிருந்தேன்.

அண்ணன் இருந்த தெருவில் வசித்த கெமிஸ்ட்ரி குரூப் சரவணை போய் பார்த்தேன். என்னை பார்த்தவுடன் சட்டையை போட்டுக் கொண்டு வெளியே வந்தவன், இங்கே ஒன்னும் பேச வேணாம், வா தெருமுக்குக்கு போவோம் என்றான். போனவுடன், என்னடா நடந்துச்சு என்றேன்.

ரொம்ப நாளா நடந்திருக்கும் போல இருக்குடா. பக்கத்து வீடுதான் அந்த பொண்ணு. நைட் ஆனா, அவரு சுவரேறி குதிச்சி கொல்லைக்கு போவாராம். அன்னைக்கு இருட்டுல குதிக்கச்ச பொண்ணோட அப்பாரு பாத்துட்டு, துரத்தவும், வீட்டுக்குள்ளே நுழைஞ்சி கதவை சாத்திட்டாராம். அப்புறம் பார்த்தா அந்த பொண்ணு முழுகாம வேற இருந்திருக்கு. எவ்வளோ அடிச்சும் அந்த பொண்ணு வாயே திறக்கலை.  நைட் பாத்ரூம் போறேன்னு எழுந்து போய் தூக்குலே தொங்கிட்டு. சின்ன பொண்ணுடா..கண்ணுக்குள்ளேயே நிக்குது.  அந்த பய எல்லாம் மனுசனே இல்லைடா. கல்யாணம் வேணாம்னு, இதுக்குதான் நடிச்சான் போல என்றான். வாய், முழுவதும் கசந்தது. காய்ச்சல் அடிப்பது போல் இருந்தது.

வெகுநாட்கள், அந்த துரோகம் மனதை பிசைந்தது. நல்லவேளையாக, படிப்பு முடியவும் சென்னை வந்துவிட்டேன். பல வருடங்கள் கழிந்த பின் ஒரு முறை ஊருக்கு சென்ற போது சிவாவுடன் பேசிக் கொண்டிருந்தேன். மனிதர்களை நம்பவே கூடாதுன்னு நான் கத்துகிட்டது, பாபு அண்ணா விசயத்துலே தான்டா, என்றேன். சட்டென்று நிமிர்ந்து என்னை கூர்மையாக பார்த்தான், சிவா. சற்று நேரம் சங்கடமான மெளனமாக கழிந்தது. பின்பு மெதுவாக, அன்னைக்கு நைட், சுவரேறி குதிச்சது, குமார்டா  என்றான். 

5 comments:

 1. இது புனைவா, அனுபவமா? பின்றங்களே!

  சரவணன்

  ReplyDelete
  Replies
  1. நன்றி சரவணன். எனது எல்லா கதைகளையும் போல இந்த கதையும், நிகழ்வும், புனைவும் கலந்ததே.

   Delete
 2. அருமை செந்தில் குமார் .கடைசி சொடுக்கு ஒரு திருப்பம்...சூப்பர் ..வாழ்த்துகள்...நிறைய எழுதுங்கள்...writersuprajaa@gmail.com

  ReplyDelete
 3. wordpress. id sariyaa open aagavillai..niraiya murai muynaten..ungalaal mudinthaal sari seiyavum..suprajaa

  ReplyDelete

Write your valuable comments here friends..