Thursday, December 6, 2012

நீர்ப்பறவை - ஒரு பார்வை

சமூகத்தின் மீதான அக்கறை, நல்ல படம் கொடுக்க வேண்டும் என்கிற ஆர்வம், மிகச் சிறந்த கதைக் களன், கதை நடக்கும் சூழல் நன்கு தெரிந்த குழு இப்படி எல்லாம் ஒன்றாக ஒரு இயக்குனருக்கு அமைவது  மிக கடினம். அப்படி அமைந்த பின்னும், சொதப்பும் இயக்குனர்கள் வரிசையில் வசந்த்பாலனுக்கு பிறகு இணைவது, சீனு ராமசாமி. பெரும்பாலான வசந்தபாலனின் படங்களில், உள்ள பெரிய குறையே, சொல்ல வரும் விஷயங்கள் சரியாக இருந்த போதிலும், போதிய அழகுணர்ச்சியோ, காட்சி வலிமையோ, திரைக்கதையில் தொய்வின்றி பார்வையாளர்களை ஒன்ற வைப்பதோ, இன்றி அமைந்து விடுவதே. அதேதான், இந்த படத்திலும் நிகழ்ந்துள்ளது.இப்போதைய சூழலுக்கு சரியாக பொருந்தும் விதத்தில், இலங்கை கடற்படையினரால் சுடப்பட்டு, உயிர் இழக்கும் ராமநாதபுர மீனவனின் கதை. குடியினால் வாழ்வை தொலைத்துக் கொண்டிருக்கும் இளைஞர்கள் வரிசையில் ஒருவனாக அறிமுகமாகிறான் அருளப்பதாஸ்(விஷ்ணு). குடிப்பது ஒரு பழக்கமல்ல, அது ஒரு நோய் என்று சொல்லியது சரி. ஆனால், அதை மனதில் நிற்கும் விதத்தில் சொல்லவேண்டாமா? குடியினால் ஏற்படும் தீமை என்று ஆரம்பித்து விட்டு, வலிந்து நகைச்சுவையை திணிக்க முற்ப்பட்டு, சொல்ல வந்த விஷயம் வீர்யமிழந்து விடுகிறது. காட்சிகளில் ஏன் இந்த செயற்க்கைத்தனம் என்று புரியவில்லை.

எஸ்தர் (சுனேனா) அறிமுகமாகி, அவளுக்கு விஷ்ணுவுடன் ஏற்படும் சந்திப்புகளும், ”அப்பாலே போ சாத்தனே” என்று அவள் விரட்டுவதும், பிறகு, வரும் காதல் காட்சிகளும் படத்திற்க்கு அழகு கூட்டுகிறது.  பின்பு நாயகன், காதலால் திருந்தி, குடியை விட்டு, கடலுக்கு மீன்பாடு பார்க்கப் போக எத்தனிக்கையில், அவன் ஒரு ஈழ அகதி என்கிற விஷயம் தெரியவருகிறது. மீனவரல்லாத ஒருவனை கடலுக்குள் நுழைய விடமாட்டேன் என்று ஊர் தடுக்க,  பின்பு, அவனே சொந்தமாக படகு வாங்க முயற்சிக்கிறான்.

அருளப்பதாஸ், நடுவில் உப்பளத்திற்க்கு வேலை செய்ய போய், அங்கிருக்கும் உப்பளக்காரரின் தங்கை ஒரு தலையாக காதலிக்கிறாள்.  அவளை, தங்கை என்று சொல்லிவிடு என்று நண்பன் சொல்ல, அப்படி சொல்வது அவளை அவமதிப்பது மாதிரி. அதைவிட, எனக்கு காதலி இருக்கும் விஷயத்தை சொல்லிவிடுவதுதான் சரி, என்று அவளிடம் சொல்லி விலகுகிறான். இந்த மொத்த காட்சியும், இந்த ஒரு வசனத்திற்க்காக வலிந்து திணிக்கப்பட்டு இருக்கிறதோ என்று எண்ண தோன்றுகிறது. பட ஓட்டத்திற்க்கு எந்த விதத்திலும், இந்த காட்சிகள் பலம் சேர்க்கவில்லை.பிறகு, அருளப்பதாஸின் தந்தை கேட்டுக் கொள்வதால், படகு செய்யும் பாய்(சமுத்திரம்) உதவி செய்ய, படகு கிடைக்கிறது. தந்தையாக வரும் நடிகர், இயல்பாக செய்துள்ளார். தாயாக வரும் சரண்யா, ஏற்கனவே பல படங்களில் செய்த பாத்திரத்தை தான், இந்த படத்திலும் தொடர்கிறார்.

எங்கே “ஆடி போய், ஆணி வந்தா, எம்மவன் டாப்பா வருவான்என்று சொல்லிவிடுவாரோ, என்று பயந்துக் கொண்டே இருந்தேன். சரண்யாவின் நடிப்பு இயல்பாக இருந்தாலும், தமிழ் சினிமாவின் இந்த டைப் காஸ்டிங் பாத்திரங்கள் அலுப்பை ஏற்படுத்துகின்றது. எந்த வித்தியாசமும் இல்லாது, ஒரே மாதிரி செய்வதால் வரும் பிரச்சினை இது. மீனவ பெண்ணுக்கான பாத்திரம் என்பதால், சிறிதாவது பேச்சையோ, உடல்மொழியையோ மாற்றி நடிக்க வேண்டியது அவசியமில்லையா?

சமுத்திரம் வரும் காட்சிகளிலும், அநியாயத்திற்க்கு நாடகத்தனம். டீக்கடை காட்சிகளில் வரும் துணை பாத்திரங்கள் கூட ஏதோ டீ.வி டிராமா மாதிரி செய்து அலுப்பூட்டுகிறார்கள். ஒரு நல்ல இயக்குநர், முதலில் இதைதான் சரி செய்வார். இயற்கையாக வடிவமைக்கப்படும் பின்புலக் காட்சிகளே, நம்மை படத்தோடு ஒன்ற வைக்கும். முக்கிய பாத்திரங்கள் மட்டுமின்றி, துணை பாத்திரங்களும் ஒரு நல்ல படத்திற்க்கு மிக முக்கியம். 
   

பிறகு ஒருவழியாக நல்ல நிலைக்கு வந்து, தனது சொந்த படகில் கடலுக்குள் சென்று தொழில் செய்து வரும் நிலையில் ஒரு நாள், அதிகாலையில் எஸ்தரால் கடலுக்கு அனுப்பிவைக்கப்பட்டு, இலங்கை படையினரால் சுடப்பட்டு உயிர் இறக்கிறார், மகனைத் தேடி கடலுக்கு செல்லும், தந்தை கடலில் சுடப்பட்டு இறந்து கிடக்கும் அருளப்பதாஸை சுமந்து திரும்புகிறார். யாருக்கும் தெரியாமல், தங்களது மகனின் உடலை, வீட்டு தோட்டதிலேயே புதைக்க முடிவெடுக்கிறார்கள். அது, ஏன் தங்களது சொந்த மகனுக்கு கூட தெரியாமல் வளர்க்கிறார் எஸ்தர், என்பது இயக்குனருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

எஸ்தரின் மகன் சந்தேகப்பட்டு தோண்டி பார்க்க, கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுகிறார், எஸ்தர். நடந்த விவரத்தை சொல்லும் எஸ்தரிடம், ஏன் அருளப்பதாஸ், சுடப்பட்ட விவரத்தை அரசாங்கத்திடம் சொல்லவில்லை என்று கேட்கிறார் நீதிபதி. சொல்லியிருந்தால், என்ன செய்திருப்பீர்கள் என்று திருப்பிக் கேட்கிறார் எஸ்தர்.  நமக்கு தோன்றும் அதே கேள்வி, மனதை தைக்கிறது. படம் முடிவடைகிறது.
சொல்ல வந்த விஷயத்தை, கச்சிதமாக, மனதை தீண்டும் வகையில் சொல்ல தவறுவதே, இந்த படத்தின் குறை. சுனேனா, விஷ்ணு இருவருமே இயல்பாக செய்துள்ளார்கள். சுனேனா, நன்றாக செய்துள்ள நிலையில், ஏன் இறுதி காட்சியில் நந்திதாவை கொண்டு வந்தார்கள் என்று புரியவில்லை. ஆனால் அவரும் தன் பங்கை திறம்பட செய்துள்ளார்.

அமரம் போன்ற மீனவப் பின்புலம் கொண்டு புனையப்பட்ட காவியங்களை மனதில் கொண்டு, படத்துக்கு செல்பவர்களுக்கு, இந்த படம் முழு நிறைவு தரவில்லைதான். ஆனாலும், இயக்குனர் எடுத்துக் கொண்ட தரமான கதையினாலும், வைரமுத்துவின் பாடல்களாலும், அவ்வபோது மின்னி செல்லும் ஜெயமோகனின் வசனங்களாலும் (முதுகை பாரு, பாம்பு படமெடுத்த மாதிரி, மாதா கோயிலே, பொம்பளை பேசாம, வேற யாரு பேசுவா? போன்ற வசனங்களில் ஜெயமோகனின் கைவண்ணம் தெரிகிறது), நெய்தல் நிலத்தை காட்சிபடுத்தியிருக்கும் அழகினாலும், ரகுநந்தனின் இசையாலும், நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம்.  

No comments:

Post a Comment

Write your valuable comments here friends..