Monday, June 1, 2015

ஆழிப்பேரலையும், அழியா கொடியடும்பும் - 1

கோடைகாலம் துவங்கிவிட்டதை உறுதிபடுத்தும் வண்ணம், இதமான மதியவெயில் நொபிரு(Nobiru) நகரகடற்கரையில் பரவியிருக்கிறது.  வெள்ளை மணலை கொண்ட அழகான அந்த நீள கடற்கரையில் தன்னுடைய பத்து வயது மகனுடன் விளையாடிக் கொண்டிருக்கும் ஒகாவாவை  (Ogawa san) தவிர வேறு யாருமில்லை. வெறிச்சோடி கிடக்கும் அந்த கடற்கரையில், ஆங்காங்கே உடைந்து போன மரத்துண்டுகளும், துணிகளும், நான்கு வருடங்களுக்கு முன் இயற்க்கை அன்னை நடத்திய கோரதாண்டவத்திற்கு சாட்சியாய், கனத்த மெளனத்துடன் கவிழ்ந்து கிடக்கிறது.






பலமுறை நிகழ்ந்த தூய்மைபணிக்கு பின் கிடக்கும் மிச்சங்கள்தான் இவை என்கிறார் ஒகாவா. 2011ம் ஆண்டு மார்ச் 11ம் தேதி ஜப்பானை உலுக்கிய பூகம்பமும், அதற்க்கு பின் வந்த சுனாமியும் மியாகி மாநிலத்தின் வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றிவிட்டது.  



மார்ச் 11ம்தேதி மதியம் 2.46க்கு தோஹோக்கு பகுதியை மையமாக கொண்டு அந்த பூகம்பம் உலுக்க தொடங்கியது. தொடங்கிய சில நொடிகளிலேயே புரிந்துவிட்டது இது ஜப்பானில் அவ்வபோது வரும் பூகம்பங்களை போல் அல்ல என்று. ஜப்பான் ரிக்டர் அளவில் 9 என்று பதிவானபோது பல கட்டிடங்கள், சாலைகள் என்று முற்றிலுமாக சேதமடைந்திருந்தது. பள்ளிக்கு சென்றிருந்த, தனது ஆறு வயது மகனை அழைக்க காரை எடுத்துக் கொண்டு விரைகிறார், ஒகாவா. அழைத்துக் கொண்டு திரும்பும் வழியில் சுனாமி எனப்படும் ராட்சஸ அலை, சுமார் பத்து மீட்டர் உயரத்திற்க்கு விஸ்வரூபம் எடுத்து அந்த கடற்கரையோர நகரத்துக்குள் நுழைந்திருந்தது.  சாலைகளில், கார்கள் படகுகளை போல் வெள்ளத்தில் மிதந்து வந்து சூழ்வதை பார்த்த ஒகாவா, காரிலிருந்து மகனை தூக்கி கொண்டு அருகே இருந்த மலையின் மேல் ஏறி தப்புகிறார்.

மரவீடுகள், படகுகள் மட்டுமல்ல, காங்கிரிட் வீடுகளையும் சுனாமி, அப்பளம் போல உடைத்தெடுத்து செல்வதை மலையிலிருந்து பார்த்து செய்வதறியாது உறைந்திருக்கிறார் ஒகாவா. அந்த பேரழிவுக்கு பின் எல்லாமே மாறிவிட்டது என்கிறார். பள்ளியில் உதவியாளராக பணி புரியும் ஒகாவா, பணி முடிந்து எப்போதும் மாலை நேரத்தில் கடற்கரையோரம் உலவுவதை வழக்கமாக கொண்டவர்.  சுனாமிக்கு பின் கடலை பார்த்தாலே, தலைசுற்றி வாந்தியெடுத்துவிடுவதால், மார்ச் 11ம்தேதிக்கு பின் தொலைக்காட்சியில் கூட அவரால் கடலை பார்க்க முடியவில்லை.






ஓகாவாவின் மகன் ருவான், தன்னுடைய பள்ளித் தோழர்கள் பலரை சுனாமியில் இழந்துவிட்டான். எஞ்சியிருந்த சிலரும் வாழ்வாதாரம் தேடி, தோக்கியோ போன்ற பெரியநகரங்களுக்கு இடம்பெயர்ந்துவிட, விளையாட தோழமையில்லாது அந்த கடற்கரையோரம் ஒரு சிறு குச்சியுடன் தனக்குதானே பேசியபடி விளையாடிக் கொண்டிருக்கிறான். தன்னுடைய மகனின் தனிமை பொறுக்காது, அவனுடன் விளையாட, மீண்டும் கடலுக்கே வந்துவிட்டதாக சொல்கிறார் ஒகாவா.  






இப்படி பலருடைய வாழ்க்கையை தலைகீழாக மாற்றியிருக்கிறது.  ஒகாவா நகரத்தின் தொடக்கப்பள்ளியில் மட்டும் 70 குழந்தைகளையும், பத்து ஆசிரியர்களையும் பலிகொண்டிருக்கிறது. ஒகாவா தொடக்கப்பள்ளியில் மொத்த குழந்தைகள் 108. ஆசிரியர்களின் எண்ணிக்கை 13. பூகம்பத்திற்க்கு பின், ஜப்பானில் வழக்கமாக கொடுக்கபடும் பயிற்சியின்படி பள்ளி மைதானத்துக்கு அழைத்து செல்லப்பட்டிருக்கிறார்கள் குழந்தைகள். சுனாமி வருகிறது என்று தெரிந்தவுடன் பள்ளிக்கு அருகில் உள்ள உயரமான கட்டிடத்திற்க்கு சென்று விடலாம் என்று சொல்லியிருக்கிறார் ஒரு முதிய வகுப்பாசிரியர். அந்த கட்டிடத்திற்க்கு செல்ல ஒரு ஆற்றுபாலத்தை கடக்கவேண்டும் என்பதால், பள்ளியின் அருகிலுள்ள மலை மீது ஏறுவதுதான் உகந்தது என்று சொல்லியிருக்கிறார் மற்றொரு ஆசிரியர். இப்படி விவாதத்தில் பொன்னான நேரம் கடந்திருக்கிறது. இறுதியில் அந்த சீனியர் ஆசிரியர் சொல்லியபடி உயரமான கட்டிடத்திற்க்கு செல்வதாக முடிவெடுக்கப்பட்டு குழந்தைகளுடன் பாலத்தை கடக்கையில் 15 மீட்டருக்கும் உயரமான ஆழிபேரலை 70 குழந்தைகளையும், 10 ஆசிரியர்களையும் அடித்து சென்றது. மலைமீது ஏறிவிடலாம் என்று சொல்லிய ஆசிரியர் ஒரே ஒரு குழந்தையுடன் மலை மீது ஏறி சென்று தப்பிக்கிறார். பாலத்தில் உயிர் பிழைத்த இரண்டு ஆசிரியர்களில் ஒருவர் சம்பவம் நிகழ்ந்து சில மாதங்களில் தற்கொலை செய்துக் கொள்கிறார்.





எப்படி இந்த பள்ளியில் மட்டும் இவ்வளவு குழந்தைகள் இறந்தனர்? உண்மையில் என்ன மாதிரியான பாதுகாப்பு முன்னேற்பாடுகளை இந்த பள்ளி முடிவுசெய்திருந்தது என்று பல கேள்விகளை முன்வைத்த பெற்றோர்கள் இன்றுவரை நகர தலைமையின் விசாரணை முடிவுகளை நிராகரித்து மூன்றாவது நபர் விசாரணை குழு அமைக்கசொல்லி போராடிவருகிறார்கள்.

இப்படி 15,889 பேர் நாடு முழுவதும் ஆழிப்பேரலை மற்றும் பூகம்பத்தால் உயிரை இழந்திருக்கிறார்கள். ஒரு லட்சத்து 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் முழுவதுமாக தரைமட்டமாகியிருக்கிறது. லட்சகணக்கானோர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து இடம்பெயர்ந்திருக்கிறார்கள். நான்கு ஆண்டுகளை கடந்தபின்னரும் ஆயிரக்கணக்கான மக்கள் இன்னமும் தற்காலிக குடியிருப்புகளில் முடங்கியிருக்கிறார்கள். அப்படி ஒரு மீனவகிராமம் தான் மக்கிஹாமா.

தாய்தமிழகத்தில் உள்ள குழந்தைகளின் கல்விஉதவிக்காக தோக்கியோவில் செயல்பட்டு வரும் முழுமதி அறக்கட்டளை, நாம் வாழும் பூமியான ஜப்பான் பகுதிக்கும் நம்மால் இயன்ற உதவிகளை செய்யவேண்டும் என்று முடிவுசெய்தபோது 2011 பேரழிவால் பெரிதும் பாதிக்கப்பட்ட மியாகி  (மியாகி பகுதியில் மட்டும் 9,538 பேர் உயிர்ழந்தனர்) பகுதிக்கு சென்று உதவுவது என்று முடிவானது.




மியாகியில் எங்கு செல்வது? எப்படி உதவுவது? என்றெல்லாம் யோசித்தபோது, முழுமதியின் வழிகாட்டிகளில் ஒருவராக திகழும் பேராசிரியர் திரு யமசித்தா (yamashita san) அவர்களால் மக்கிஹாமா கிராமம் முன்வைக்கப்பட்டது. யமசித்தா அவர்களது தோழர் யமகத்தா நகரத்தின் நகரத்துணைதலைவர் திரு. கொதாமா (Kodama San) அவர்கள் முழுமதியின் நோக்கம் குறித்து கேள்விப்பட்டு தாமும் கூட வந்து உதவிட முன்வந்தார். 2015 மே மாதம் 30, 31 தேதிகளில் மக்கிஹாமா சென்று அங்கு முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு இந்திய உணவைத் தயாரித்து வழங்கி அவர்களுடன் 30ம்தேதி இரவு தங்கி திரும்பி வருவதாக முடிவெடுக்கப்பட்டது.  முழுமதி அறக்கட்டளை உறுப்பினர்கள். மொத்தம் 21 பேர் மூன்று கார்களில் உணவுக்கான பொருட்களை எடுத்து கொண்டு ஏறக்குறைய 400 கிலோமீட்டர் பயணம் செய்து, 30ம் தேதி மதியம் நொபிரு கடற்கரையை அடைந்தோம். அங்குதான் மேலே குறிப்பிட்ட ஒகாவாவையும் அவரது மகனையும் சந்தித்தோம்.


                                                                        திரு தனக்கா அவர்களுடன்

2011 ஆழிப்பேரலைக்கு முன், நொபிரு கடற்கரையோரம் மூன்று கிலோமீட்டர் நீளத்திற்க்கும் மேலாக அழகாய் படர்ந்து நீல நிறத்தில் பூத்திருக்கும் ஒரு மலர், சுனாமிக்கு பின் முற்றிலுமாக அழிந்துவிட்டது. Sea bells என்றழைக்கப்படும் இந்த பூவுக்கு இரண்டாயிரம் வருட வரலாறு உண்டு. நமது சங்க இலக்கியமான நற்றிணையில்  “குன்றோங்கு வெண்மணல் கொடியடும்பு கொய்தும்” என்று குறிப்பிடபடும் இந்த மலர் நெய்தல் தினைக்குரியது. கடற்கரை மணலிலும், வறண்ட மணல்மேட்டிலும் வளரும் இந்த அடும்பு மலர் சுனாமிக்கு பின் முற்றிலுமாக அழிந்துவிட விதைகள் எஞ்சாததால் இனி அங்கு மலராது என்றே அனைவரும் கருதினர். நான்காண்டுகள் கழித்து திரும்பவும் 2015 மே மாதம், நொபிரு கடற்கரையில் ஒரு 150 மீட்டர் அளவுக்கு கொடிபடர்ந்து நம்பிக்கை புன்னகையை வீசி அழகாய் மலர்ந்து எங்களை வரவேற்றது கொடியடும்பு மலர். 




தொடரும்.

Wednesday, April 1, 2015

இரவெனும் யட்சி

மனிதர்கள், தீவிரமான அனுபவங்களுக்கு ஏங்குகிறார்கள். உச்சக்கட்ட கணங்களை தொட்டுத் திரும்பிய அனுபவங்களையே வாழ்வின் நினைவுகளாக தொகுத்துக் கொள்ள விரும்புகிறார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவ்வாறான கணங்கள் மிக சிலவையே மனிதர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. காட்டில் வேட்டையாடி உணவை சேகரித்த காலக்கட்டத்தில், காட்டின் எதிர்பாராத்தன்மை சில அற்புத கணங்களை மனிதனுக்கு வழங்கியிருக்க கூடும்.

மனித நாகரீகம் முழுவளர்ச்சியடைந்து, இன்று ஒரு வட்டத்துக்குள் வாழ்க்கையை சுருங்கியிருக்கிறது. இந்த வாழ்க்கையை நமக்கு முன்னால் கோடிக்கணக்கான மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்..எதுவும் புதிதில்லை.   தொடங்கிய இடத்துக்கே, மீண்டும் மீண்டும் திரும்புகிற குடை ராட்டின வாழ்க்கை மாபெரும் சலிப்பையே ஏற்படுத்துகிறது. இந்த அர்த்தமின்மை சராசரி மனிதர்களைக் காட்டிலும், ஆழமான தேடலுள்ள மனிதர்களையே அதிகம் துன்புறுத்துகிறது. ஒரு பக்கம் வாழ்க்கை சலிப்பான வட்டத்தில் சுழல்கிறது. மறுபக்கம் மனிதமனம் செயல்படும் விதம் விடுக்கும் சவால்கள், புதிர்கள்.







இந்த மாபெரும் சலிப்பை வெல்லும் பொருட்டே கலை, இலக்கிய செயல்பாடுகள் அமைகின்றன. தூய இசையோ, இலக்கியமோ , ஆழ்மனதுள் ஊடுருவதினாலயே மகத்தான அனுபவமாக மாறுகிறது. வார்த்தைகளை தாண்டி, உள்ளே செல்லும் பயணத்தின் ருசியை ஒருமுறை கண்டவர் விண்டிலர்.

வழமையிருந்து விலகி மாறுப்பட்ட வாழ்க்கையை வாழவிரும்பும் மனிதர்கள், ஒரு தனிக்குழுவாகதான் இயங்க முடியும். அப்படி ஒரு குழு, பகலை வெறுத்து, இரவினில் மட்டும் விழித்திருந்து, இரவை கொண்டாடி வாழ்கிறது. அவர்களிடம் சென்று சேரும் சரவணன் ஊடாக, மகத்தான அனுபவங்களை தருகிறார், தனது இரவு குறுநாவல் மூலம் ஜெயமோகன். மனிதர்கள் இரவினில் வாழப் பிறந்தவர்கள். இரவே ஏகாந்தம். இரவே அழகு என்று இரவை ரசிப்பத்தற்க்காகவே இரவினில் வாழும் விஜய்மேனன், கமலா தம்பதியினர், வாழ்வில் ஏற்பட்ட இழப்பினால் இரவிடம் தஞ்சமடைந்த நீலிமா என விரிகிறது நாவல்.



நீலிமா, சரவணன் இருவர்க்குமிடையேயான காதல், பொங்கி வரும் உணர்ச்சி பிரவாகம். உறவு மலரும் கணமும், விலகல் போன்ற அந்த மெல்லிய விரிசலும், அந்த விரிசலின் மூலமே தன்னைத் தானே கண்டுக் கொள்ளும் காதலும் என சொற்களின் ஊடாக ஒரு கனவு போன்ற அனுபவம். உண்மையில் நீலிமா போன்ற ஒரு தேவதை, தர்க்கத்துடன் பேசத் துவங்கினால் யாரால் மீள முடியும்? யட்சியின் நிசாகந்தி மணம் போல, நீலிமாவின் அன்பு சரவணனை மயக்கத்தில் ஆழ்த்துகிறது. அப்பட்டமான பெண், ஆணை கலவரப்படுத்துகிறாள். தன் அந்தரங்கத்தை உடைத்து, எந்த பாவனையுமின்றி உள்ளே நுழையும் பெண்னை தடுத்து நிறுத்துவது எளிதன்று.


விஜய்மேனனும், கமலாவும் ஒரு உதாரண தம்பதிகள். உண்மையில் அப்படி ஒரு கணவன் மனைவி உறவு சாத்தியம்தானா என்று வியக்குமளவுக்கு. சிறிதேனும் குற்ற உணர்ச்சி இருந்தால் மட்டுமே அப்படி ஒரு இலட்சிய உறவு சாத்தியமா? தூய அன்பின் சலிப்பை, சாகஸங்கள் சரி செய்கிறதா?
யட்சியிடம் விழுந்த பிரசண்டானந்தாவின் தவிப்பை புரிந்துக் கொள்ளமுடிகிறது. தீவிரமான அனுபவங்களுக்கு ஏங்கும் சரவணனை, விஜயமேனனை புரிந்துக் கொள்ளமுடிகிறது. யட்சிகள்தான் காட்டைப் போல, யானையைப் போல, இரவைப் போல முழுவதுமாய் அறியமுடியாதவர்களாய் அந்த அறியா முடியாமையினாலயே மேலும் வசிகரிக்க கூடியவர்களாய், நிசாகந்தியின் மனம் பரப்பி அமர்ந்திருக்கிறார்கள்.

பாதர் தாமஸை யட்சிகளிமிருந்து காப்பது கிறிஸ்து அல்ல. அவர் சுமந்திருக்கும் வெறுப்பு எனும் பாவனையே. அந்த வெறுப்பை உறுதிபடுத்திக் கொள்ள, பார்க்கும் பெண்களிடமெல்லாம், எந்த உணர்வுமின்றி, நீ அழகாக இருக்கிறாய் என்கிறார்.

ஜாக்ரத் என பகலை சொல்கிறார் பிரசண்டானந்தா. பகல் பொய்களால் நிறைந்தது. போலித்தனங்கள் கொண்டது. மெல்லிய தோல்போல அது உண்மையை மூடியிருக்கிறது இரவுதான் ஸ்வப்னம். இரவுதான் உண்மையானது. அழகானது. ஆழ்மனதுக்குரியது, என்கிறார். ஆனால், அந்த பகலில்தான் பிரசண்டானந்தாவும் கமலாவும் உண்மையாக இருக்கிறார்கள்.  ஆக எது உண்மை? பகல் உண்மையென்றால், இரவு வாழ்க்கை பொய்யானதா? இல்லை இரண்டுமே உண்மையின் வெவ்வேறு வடிவங்களா?

தான்நம்பும் தத்துவம் உடைபடும்போது ஒன்று மனிதர்கள் விஜய்மேனனை போல் தப்பிசெல்கிறார்கள். அல்லது முகர்ஜி போல் பேதலிக்கிறார்கள். சரவணனை போல் வெகுசிலரே இறுதிவரை சென்று பார்க்க துணிகிறார்கள். கொல்லபடும் யானை பாகனின் மகனும், பாகனாகிறான்.

யட்சிகளாய் வரைந்து தள்ளும் முகர்ஜியின் ஆழ்மனது செல்லுமிடம் ஊகிக்ககூடியதே. இரவுபாடகன் மஜித், இரவினில் மலையாள மனோரமா படிக்கும் தோமா, கடுமையான மன அழுத்தத்தில் தவிக்கும் சரவணன், புனைபெயரில் சமூகதளங்களுக்கு சென்று வசைபாடுவது என ஒவ்வொரு பாத்திரமும், சூழலும் நேர்த்தியாக சொல்லப்பட்டுள்ளது. 

ஜெயமோகனின் மொழி சிறப்பானது, தனித்துவமானது. நாவல்களில் அது முழு வீர்யத்துடன் வெளிபடுகிறது. படிமங்கள், உவமைகளை சர்வசாதாரணமாக உருவாக்கி செல்கிறார் ஜெயமோகன்.




“மரநாய் விட்டுட்டு போன கிளையாகவும் அது போய் உக்காந்த கிளையாகவும் என் மனசு ஆடிட்டிருந்தது”  

இந்த படிமத்தைவிட்டு மனம் இறங்கவேயில்லை.

“காயலுக்குள் ஒரு ரகசியக் கண் திறந்து கொண்டதுபோல நான் ஒரு மீனைப்பார்த்தேன். பின்பு இன்னொரு கண். பின்பு கண்கள். பின்பு கண்களின் பெரு வெளி.  மீன்படலம் சுழிக்க காயலின் பெருவிழி ஒருகணம் இமைப்பதைக் கண்டேன்”

என்ற வரிகளை படிக்கும்போது, அந்த கண்கள் இமைப்பதை படிப்பவனும் காண்கிறான். முதல் வரியிலேயே காட்சிவிரிய தொடங்கிவிடுகிறது.

நீலிமா, சரவணன் இருவருக்குமிடையேயான உறவை சொல்கையில், வெளிபடும் நுட்பம், அபாரமானது.

“அவள் உடல் முதலில் எதிர்விசை கொடுக்கப்பட்டதுபோல இருந்தது. பின்பு நெகிழ்ந்து என் கைகளுக்காகவே வடிவமைக்கப்பட்டது போல இயைந்தது. பின்பு அவள் உடலில் சுயநினைவு திரும்புவதை என் உடலாலேயே உணர்ந்தேன்.”

இது போன்ற வரிகள் மூலம், யட்சி, தாந்த்ரீகம், சாக்தம், ஆழ்மனது, இரவு வாழ்க்கை என மலையாளக் நாட்டின் காயல் வழியே ஒரு மகத்தான அனுபவத்தை தந்திருக்கிறார்.

Tuesday, March 17, 2015

பொய்த் தேவு - வினாடிக்கொரு தெய்வம்

வாழ்வின் ஒவ்வொரு காலக்கட்டத்திலும், ஒவ்வொரு விஷயம் பிரதான லட்சியமாய்த் தோன்றி வாழ்வை நிகழ்த்திச் செல்கிறது. அந்த லட்சியத்தை அடைந்த பின்னரும், மனம் அமைதியடைந்து நிலைக் கொள்வதாய் இல்லை. இந்த நொடி அடையவிரும்பும் மகோன்னத லட்சியம், அடுத்த நொடியில் எந்த பொருளுமின்றி உள்ளீடு அற்று, அந்த லட்சியத்தை அடைய விரும்பிய நம்மை கேலி செய்தபடி நிற்கிறது. உண்மையில் இந்த உலகவாழ்க்கைக்கு எந்த பொருளுமிருப்பதாய் தெரியவில்லை. இப்படியான உலகவாழ்க்கையில் எந்த ஒரு விஷயத்தின் மீதும் ஒற்றைப்படையான பற்றும், வெறியும் கொண்டு அதனை அடையும் முயற்சியில், தமது வாழ்வையே இழப்பவர்கள், இறுதியில் ஏமாற்றத்தையும், வலியையுமே அடைய நேர்கிறது.



அரை ரூபாய் இருந்தால் சாத்தனூர் கடைத் தெருவையே வாங்கலாம். ஐந்து ரூபாய் இருந்தால் கும்பகோணம் கடைத் தெருவையே வாங்கலாம். பத்து ரூபாய் இருந்தால் இந்த உலகையே வாங்கலாம் என்று தனது லட்சியத்தை கண்டுக் கொள்ளும் சிறுவன் சோமு முதலியின் கதைதான், தமிழ் இலக்கியத்தின் மிக சிறந்த விமர்சகர் என்று போற்றப்படும் க.நா.சுப்ரமணியம் அவர்கள்(1912-1988) 1942ல் எழுதிய பொய்த் தேவு நாவலின் கதைக் களம்.

கும்பகோணம் அருகே உள்ள சாத்தனூர் என்னும் சிற்றூரில், கருப்பன் என்ற ரவுடிக்கும், வள்ளியமைக்கும் பிறந்த சோமு முதலி, தனது வாழ்க்கையை தானே உருவாக்கி கொள்கிறான். சோழமன்னர்களால் கட்டப்பட்ட சிவன் கோயில் மணியோசைதான் சோமுவின் முதல் ஞாபகமாக பதிவாகிறது. கருப்பனின் எதிரியால் எடுத்துச் செல்லப்பட்டு அடித்து நொறுக்கபடும் கணத்தில், இந்த உலகம் பற்றிய வியப்பே சோமுவின் மனதில் இருக்கிறது. விவசாயம் செய்யும் குடியானவர்கள், பானை செய்யும் குயவர்கள், பிசாசு ஓட்டுபவர்கள், வாழைப்பழ கடை, பட்டாணி கடை என சாத்தனூரிலேயே பார்த்து தீராத அற்புதங்கள் சோமுவிற்க்கு உண்டு. அந்த அற்புதங்கள் வழியாக உலக அனுபவத்தை கண்டுக் கொள்ளும் சோமுவிற்க்கு பள்ளிகூடம் சென்று படிக்க ஆசை பிறக்கிறது.

தனது அம்மா வேலைப்பார்க்கும் அய்யமார் வீட்டு திண்ணையில் உட்காரவைக்கப்படும் சோமு, தானாகவே நடந்து உள்ளே சென்று, அங்கு கிடக்கும் துணியில் படுத்து தூங்கி,. பிறகு புளியமிளாறால் எழுப்பப்பட்டு தீண்டாமையை கண்டுக் கொள்கிறான். தன்னுடைய தேவை என்ன என்பதில் சோமுவிற்க்கு நாவலின் இறுதி கணம் வரை ஒரு குழப்பமுமிருப்பதில்லை. ஊர் பெரிய மனிதர் ரங்காராவிடம் வேலைக்கு சேரும் சோமு, முதல் நாளே சாயவேட்டி வேண்டும் என்று சொல்லி அதை பெற்றுக் கொள்கிறான். பிறகு தனது அறிவுகூர்மை மற்றும் துணிச்சலினால், தன்னுடைய எஜமானனை, கொள்ளைக்கூட்டத்திடமிருந்து காப்பாற்றும் சோமு, பிரதி உபகாரமாக தன்னுடைய படிப்பாசையை நிறைவேற்றிக் கொள்கிறான்.  

கொஞ்சகொஞ்சமாக தான் பிறந்த மேட்டுத் தெருவின் சகல கீழ்மைகளிலிருந்தும் வெளியேவந்துவிட்டோம் என்று நினைக்கிற பொழுதில், குடியும், பெண் சகவாசமும் சோமுவை பிடித்துக் கொள்கிறது. தனது தந்தை கருப்பனை போலவே குடித்துவிட்டுவந்து மனைவியை அடித்து நொறுக்குகிறான். மனைவி இறந்தபின் பாப்பத்தியம்மாளை சேர்த்துக் கொள்கிறான். பிறகு ரங்காராவின் மருமகன் சம்பாமூர்த்தியின் மூலம் தனது லட்சியமான மளிகைகடையை சாத்தனூரில் திறந்து மளிகை மெர்செண்டு சோமு முதலியார் ஆகிறான். அங்கிருந்து தனது அடுத்த லட்சியமான பணத்தை நோக்கி பயணிக்கிறான். செல்லுமிடமெல்லாம் தனது வாக்கு சாதூர்யத்தாலும், வெறித்தனமான உழைப்பாலும் மேன்மேலும் உயர்ந்து கும்பகோணத்தில் மிகப் பெரிய மனிதர்களுள் ஒருவனாகிறான்.



ரங்காராவின் மருமகன் சம்பாமூர்த்தியோ, அளவுகடந்த தானதர்மத்தாலும், பக்தியாலும் சொத்துக்களை இழந்து, மனைவியும் இறந்த பின், தஞ்சை சென்று பாலாம்பாள், கமலாம்பாள் என்னும்  சகோதரிகளிடம் சிக்கி கொள்கிறார். அவரை பற்றி இவ்வாறாக பெருமூச்சுடன் நினைத்து பார்க்கிறார் சோமு முதலியார். “ஏதோ இந்த கணத்தின் தடுமாற்றத்தால், பெண்களிடம் விழுந்து கிடக்கும் சம்பாமூர்த்தியால் எந்த நேரமும் அந்த வலையிலிருந்து மீள முடியும். அப்படி மீள்வதற்க்கான ஆன்ம பலம் அவருடைய பக்தியால் அவருக்கு கிடைக்கப்பெற்றிருக்கிறது.” உண்மையில் அப்படிதான் ஆகிறது. சம்பாமூர்த்தியை மிட்க செல்லும் சோமு முதலியார் அந்த பெண்களிடம் மாட்டிக் கொள்கிறார். சம்பாமுர்த்தி தூக்கத்திலிருந்து மீண்டவர் போல, மீண்டும் பாண்டுரங்கன் கோஷம் சொல்லி சாத்தனூருக்கு திரும்புகிறார்.

வணிக கூட்டமைப்பிற்க்கு தலைவராகி, நாட்டின் பல சூழ்நிலைகளையும் தமக்கு சாதகமாக்கி பணத்தை குவிக்கிறார் சோமு முதலியார். கும்பகோணத்திலேயே மிகப்பெரிய பங்களாவை கட்டி சாத்தனூரைவிட்டு வெளியேறுகிறார். ஏதேச்சையாக தனது பழைய வாத்தியார் சுப்ரமணிய அய்யரின் மகன் சாமாவை சந்திக்கிறார். இலட்சிய வேகமும், படிப்பும் கொண்ட சாமா, அவரை நிராகரிக்கிறான். அவனை எப்படியாவது தனது பங்களா திறப்புவிழாவிற்க்கு அழைப்பதன்மூலம் அவனது அங்கீகாரத்தை வேண்டி நிற்கிறார் சோமு முதலியார். எதை தனது வாழ்வின் லட்சியமாக, வெற்றியாக கொண்டிருக்கிறாரோ, எதை அடைந்துவிட்டோம் என்று ஒவ்வொரு கணமும் நினைத்து மகிழ்கிறாரோ, அது சாமா போன்ற ஒருவனுக்கு ஒரு பொருட்டே இல்லை என்கிற உண்மை சோமு முதலியாரை குடைகிறது. சம்பாமூர்த்தி பாண்டுரங்கனை வழிபட சென்று, அவனது பாதங்களிலேயே உயிர் நீத்த செய்தி வாழ்வின் இன்னொரு கோணத்தை காட்டுகிறது.

தனது வைப்புக்களான பாலாம்பாள், கமலாம்பாள் சகோதரிகளிடம், தனது மகன் நடராஜன் கொஞ்சிகுலாவி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைகிறார். மேட்டுத் தெரு கருப்பன், தன்னை விடாமல் தொடர்வதை உணர்ந்து கொள்கிறார். சிவன் கோயில் மணியோசை காதுகளில் ஒலிக்க தொடங்குகிறது. வாழ்வின் பொருள் என்னவென்று சோமு முதலியா கண்டுக் கொண்டார். இனி அவருக்கு சலனங்கள் இல்லை.  இறுதியில் சிறைச் சென்று மீண்டு, பண்டாரமாக மாறி சாலையில் இறக்கும் சோமு பண்டாரம் சொல்வதாக வருகிறது இந்த வரிகள். “இந்த உலகம் தோன்றியதில் இருந்து எவ்வளவு வினாடிகள் உண்டோ அவ்வளவு தெய்வங்கள் உண்டு இனி பிறக்கபோகும் ஒவ்வொரு வினாடிக்கும் ஒரு தெய்வமுண்டு”

உண்மைதானே? இந்த வினாடிக்கான தெய்வம் அடுத்த வினாடிக்கு பொருந்துவதில்லை. சென்ற நொடிக்கான தெய்வம் இந்த நொடிக்கு பொய்த் தேவு (பொய்த் தெய்வம்) ஆகிவிடுகிறது., முழுமுதல் தெய்வம் என ஒன்றில்லை. வாழ்க்கை என்பதே சிறிய விஷயங்களால் ஆனதுதானே. இங்கு முழுமுதல் தெய்வம் பொய்த் தேவாக முடிவதற்க்கே சாத்தியம் அதிகம்.

மிக இயல்பான நடையில், மூன்றாம் மனிதர் சோமுவின் வாழ்வை சொல்லிசெல்லும் தொனியில் கதை அமைந்துள்ளது. வாழ்க்கை மீதான தனது தரிசனத்தை, சோமுவின் வாழ்வின் மூலம் சொல்கிறார் க.நா.சு. ஒரு நாவலுக்குண்டான முழுமை இந்த வாழ்க்கை தரிசனத்தால் கூடிவந்துள்ளது. காவிரிக் கரை, அந்தக் கால தஞ்சை மண்ணின் சித்தரிப்புக்கள் என நாவல் சில பக்கங்களிலேயே நம்மை ஈர்த்துக்கொள்கிறது.



கருப்பன் இருக்கும்போதும் அவன் போன பிறகும் வள்ளியம்மையிடம் ஏற்படும் மாற்றங்கள், எந்த உறவுமில்லாது, தனது வாழ்க்கையை சோமுவிற்க்காக அர்ப்பணிக்கும் பாப்பாத்தியம்மாள் சாமாவின் கண்ணோட்டம் போன்றவை போதியளவு விவரிக்கபடவில்லை. நாவல் முழுவதும் சோமு முதலியின் பார்வையிலேயே செல்வதால், மற்ற பாத்திரங்களின் ஆழத்தையும் சோமு வாயிலாகவே நாம் அறிய முடிகிறது.

ஏறக்குறைய எழுபது ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டிருந்த போதிலும், வாழ்வின் மீதான பார்வையினால் காலத்தை வென்று தமிழின் மிகச் சிறந்த பத்து நாவல்களுள் ஒன்றாய் தன்னை நிறுவிக் கொண்டுள்ளது பொய்த் தேவு.






Tuesday, March 3, 2015

திராவிடத்தால் வீழ்ந்தோமா? திராவிட கட்சிகளால் வீழ்ந்தோமா?



திடீரென்று தூக்கத்திலிருந்து விழித்தெழுந்தவர்கள் போல திராவிடத்தால்தான் நாம் வீழ்ச்சியடைந்து இருக்கிறோம். திராவிடத்தை வீழ்த்திவிட்டால, போதும், தமிழினம் எல்லா புகழையும் அடைந்துவிடும் என்று சிலர் கண்டுபிடித்து, தொடர்ந்து சில வாதங்களை முன்வைத்து வருகிறார்கள். சரி, என்ன தான் சொல்ல வருகிறார்கள் என்று பார்த்தால், திராவிட கட்சிகளின் போதாமைகளை, தவறுகளை, திராவிடத்தின் தவறுகளாக, திரிக்கிறார்கள். பெரியார், தமிழை விடுத்து ஆங்கிலத்தை படியுங்கள் என்று சொன்னார். எனவே, பெரியார் சொன்ன திராவிடம்தான் நமது எதிரி என்று அறிவுக்கு சற்றும் பொருந்தா வாதங்கள் தொடர்ந்து முன்வைக்கபடுகின்றன.



முதலில், திராவிடம் என்பது ஒரு கருதுகோள் (concept). திராவிடத்தை முதலில் அறிவித்தவர் பெரியார் அல்ல. திராவிட மொழிகளை ஆராயந்து, திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (A Comparative Grammer of the Dravidian or south Indian Family of languages)  என்ற நூலை எழுதிய ராபர்ட் கால்டுவெல் (1814-1892) தான் திராவிட கருத்தாக்கத்தை முதன்முதலில் முன்வைத்தவர். அதை தொடர்ந்து திராவிட கருத்தாக்கத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தவர், அயோத்திதாச பண்டிதர் (1845-1914). ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்த அயோத்திதாச பண்டிதர், மிகப் பெரிய கல்விபின்புலத்தை கொண்ட குடும்பத்தை சேர்ந்தவர். இவரது தாத்தா பட்லர் கந்தப்பனால்தான், இன்று நமக்கு திருக்குறள் என்கிற மாபெரும் பொக்கிஷம் திரும்ப கிடைத்தது. ஓலைசுவடிகளில் இருந்த திருக்குறளை, எல்லீஸ்துரையிடம் கொடுத்து நூலாக்கியவர் இவர்.



சரி, கால்டுவெல் முன்வைத்த திராவிட கருத்தாக்கம் என்ன? திராவிட மொழிகளை ஆராயந்த கால்டுவெல் சில முடிவுகளுக்கு வந்தார். திராவிட மொழிகள் அனைத்துக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. அந்த மொழிகள் அனைத்துக்கும் ஊற்றுக்கண், தமிழ்மொழிதான். தமிழ்மொழியிலிருந்தே, மற்ற திராவிட மொழிகள் அனைத்தும் பிறந்திருக்க வேண்டும். எனவே திராவிடத்தின் ஆணிவேர் தமிழும் தமிழினமுமே என்பதே கால்டுவெல் முன்வைத்த கருத்தாக்கம்.

தமிழின் தொன்மையையும், சிறப்பையும் இந்த கருத்தாக்கம், உலகறிய செய்வதாலயே அயோத்திதாச பண்டிதரும் இந்த கருத்தை ஏற்று  1885ல் திராவிட பாண்டியன் என்ற இதழை தொடங்குகிறார். இதே காலக்கட்டத்தில் தமிழன் என்றொரு பத்திரிக்கையையும் நடத்துகிறார், அயோத்திதாச பண்டிதர். ஆக, திராவிடன் என்பவன் தமிழன் தான் என்கிற கண்ணோட்டத்தையே கொண்டிருக்கிறார்.  பிறகு, 1891 ம் ஆண்டு திராவிட மகாஜன சபை என்ற பெயரில் ஒரு இயக்கத்தை தொடங்கி முன்னோடியாக விளங்குபவர் அயோத்திதாச பண்டிதர் தான்.

திராவிட கருத்தாக்கம், கால்டுவெல் காலத்திலேயே, அறிவுலக சான்றோர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு வழக்கில் வந்துவிட்டது. திராவிட மகாஜன சபைக்கு பிறகு, 1894லில் திராவிடர் கழகம் என்கிற அமைப்பை தொடங்குகிறார், தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஜான் ரெத்தினம் என்கிற கிருத்துவ துறவி.

இவையெல்லாம் நடந்து ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்கு பின்தான், பெரியார் 1944ல் திராவிட கழகத்தை தோற்றுவிக்கிறார். எனவே பெரியார்தான் திராவிடத்தை புகுத்தினார் என்பது சற்றும் பொருந்தாத ஒன்று. பெரியார் மதிக்கபடவேண்டியது ஒரு புரட்சியாளராகதான். அவர், அன்றைய காலக்கட்டத்தில் எதையெல்லாம் புனிதம் என்று கருதினார்களோ அவையெல்லாவற்றையும் உடைத்தெறிய வேண்டும் என்கிற வேட்கை கொண்ட ஒரு கலககாரர். வரலாற்றில், பெரியாரின் இடம், பெண்ணடிமைத்தனம், சாதி, மதம், மூடநம்பிக்கை போன்றவற்றை எதிர்த்துப் போராடிய ஒரு புரட்சிக்காரர் என்பதே. என்னை, ராமசாமி என்று கூப்பிடு, இல்லையென்றால் மயிராண்டி என்று கூப்பிடு என்று சொன்ன ஒரு கலககாரர், எப்படி மொழியை மட்டும் போற்றுவார் என்று எதிர்பார்க்க முடியும்?

ஆக, பெரியாரும், பெரியாருக்கு பின்வந்தவர்களும், திராவிடம் என்ற கருத்தாக்கத்தை எடுத்தாண்டவர்கள் மட்டுமே. அவர்களுடைய பிழைகளுக்கும் குறைகளுக்கும், திராவிடம் என்ற கருத்தாக்கம் எந்த விதத்திலும் காரணமில்லை. அந்த கருத்தாக்கம் ஏன் தேவைபடுகிறது? திராவிடம் இல்லையென்றால், தமிழின் தொன்மையையும், பிறமொழிகளின் தாயாக தமிழ் விளங்குகிறது என்பதையும் உலகுக்கு விளக்க வாய்ப்பில்லை. 

இந்த திராவிட கருத்தாக்கத்தை, மற்ற திராவிட மொழிகள் ஏற்றுக் கொள்ளவில்லையே. நாம் மட்டும் ஏன் அப்படி ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று கேட்பதே தவறானது. தமது மொழி, தமிழிலிருந்து தோன்றியது என்பதை மற்ற மாநிலகாரர்கள், எப்படி ஏற்றுக் கொள்வார்கள்? அதை அவர்கள் மறைக்கவே முயல்வார்கள். தமிழுக்கு செம்மொழி சிறப்பு என்று சொன்னால் உடனே எங்கள் மொழிக்கும் கொடு என்று சொல்கிற தெலுங்கர்களும், கன்னடர்களும், எப்படி, திராவிடத்தின் மூலமொழி தமிழ் என்பதை ஒத்துக் கொள்வார்கள்?

திராவிட கட்சிகளால் தமிழ் வீழ்ந்திருக்கிறதா? தமிழ்நாடு என்ற பெயர் மாற்றம், தனித்தமிழ் பெயர்கள் (இதை, பரிதிமாற் கலைஞரின் தனித்தமிழ் இயக்கத்தில் இருந்து எடுத்துக் கொண்டார்கள்), தமிழ் பலகைகள், பெயர்களில் இருந்து சாதியை நீக்கியது, இந்தி எதிர்ப்புப்போராட்டம் என ஒரு சில  நல்ல விடயங்களை தவிர, செய்திருக்கவேண்டிய பணிகள் பலவற்றை திராவிட கட்சிகள் செய்யவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

1.  தமிழ் வழிகல்வியை உண்மையிலேயே ஊக்கப்படுத்த விரும்பியிருந்தால், அரசு பள்ளிக்கூடங்களை முறையாக கண்காணித்து நடத்தியிருக்கவேண்டும். தரத்துடன் இயங்கியிருந்தால் பெற்றோர்களும் தமது குழந்தைகளை அரசு பள்ளிகளிலேயே சேர்த்திருப்பார்கள். அரசு ஊழியர்கள் தமது குழந்தைகளை அரசு பள்ளியில்தான் சேர்க்க வேண்டும் என்று ஒரு அறிக்கை போதும். தமிழ்வழிகல்விதானாகவே அடுத்த தலைமுறைக்கு சென்று சேர்ந்திருக்கும். ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் ஓட்டுக்கள் முக்கியம் என கருதியதால், எந்த திராவிட அரசும் இதை செய்யவில்லை.

2.  முறையான தமிழறிஞர்களும், தமிழ் ஆராய்ச்சியாளர்களும் திராவிட ஆட்சி காலக்கட்டத்தில் தான் புறக்கணிக்கப்பட்டனர். அந்த இடத்தில், வெற்றுமேடைபேச்சாளர்களும், திரைப்பட கவிஞர்களும் வந்து உட்கார்ந்துக் கொண்டதும் இவர்களது ஆட்சியில்தான். உலகதமிழ் மாநாடு என்று ஒன்றை கூட்டி, தமது குடும்ப உறுப்பினர்களை மேடையில் உட்காரவைத்துக் கொண்டு தமிழறிஞர்களை எழுப்பி நிற்கவைத்தனர்.

3. நூலகங்களை இவர்கள் வேட்டையாடிய ஒரு உதாரணம் போதும். தம்முடைய கட்சிகாரர்களை நூலகத்திற்க்கான நூல்கள் தேர்வு குழுவில் நியமித்தார்கள். அப்படி நியமிக்கப்பட்டவர்கள், தமக்கு வேண்டியவர்களின் நூல்களை மட்டும் தேர்ந்தெடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள அரசு நூலகங்களுக்கு அனுப்புவார்கள். இப்படி, உண்மையான இலக்கியங்களும், தமிழாராய்ச்சி நூல்களும் சென்று சேர வேண்டிய இடங்களிலெல்லாம், வெறும் குப்பைகள், சென்று சேர்ந்தன. நூலக விற்பனைக்காகவே, அந்த துறை பற்றி எதுவுமே தெரியாமல், மருத்துவ நூல்களையும், மாட்டுவாகட நூல்களையும் பதிப்பித்து, காசு பார்த்த கொடுமை எல்லாம் திராவிட ஆட்சியாளர்களின் காலத்தில்தான் நடந்தது. இதனால் மறுபதிப்பே பார்க்காமல் அழிந்து போன நூல்கள் ஏராளம். இன்னமும், தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூல் நிலையத்தில் பதிப்பிக்கபடாமலேயே அழிந்துக் கொண்டிருக்கும் தமிழ் சுவடிகள் ஏராளமாக உண்டு, என்பது எவ்வளவு பெரிய கேவலம்?

4.  வழக்காடு மொழியாக தமிழை நிறுவ தவறியது. ஆட்சி மொழியாக்காமல் கோட்டை விட்டது என இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

ஆனால், இவையெல்லாம் திராவிடத்தின் தவறா? திராவிட கட்சிகளின் தவறா? இப்படி திராவிடத்தையும், திராவிடகட்சிகளின் தவறுகளையும் குழப்பிக் கொள்கிற நல்ல காரியத்தைத்தான் ஒரு சில தமிழ்தேசியவாதிகள் இன்று செய்துக் கொண்டிருக்கிறார்கள்.

சரி, இவர்களில் சிலர், அப்படி என்னதான் மாற்று அரசியலை முன்வைக்கிறார்கள்? என்று பார்த்தால் திராவிட ஆட்சிகளை மிஞ்சுவதாக இருக்கிறது, இவர்களது கொடுமைகள்.

நூற்றியம்பதுக்கும் மேற்பட்ட மனிதர்களை ஈவு இரக்கமில்லாமல் கொன்றொழித்த, (இவர்களில் பலர் , காவல்துறைக்கு துப்பு சொல்கிறார்கள் என்று வெறும் சந்தேகத்தால் மட்டுமே கொல்லப்பட்ட ஏழை எளிய மக்கள்), இருநூறுக்கும் மேற்ப்பட்ட யானைகளை கொன்று தந்தங்களை கொள்ளையடித்த, சந்தனகடத்தல், ஆட்களை கடத்தி பணம் பெற்றுக் கொண்டு விடுவிப்பது, என சகல குற்றங்களையும் செய்த ஒரு கிரிமினல், இவர்களுக்கு எல்லைசாமி, சீயான் விரப்பன்.

மதுரையில் பல மலைகளை காணாமல் அடித்தவர் என்று குற்றம் சாட்டப்பட்டிருக்கிறவர், இவர்களுக்கு, அய்யா பி.ஆர்.பி. மணல் கொள்ளைக்கு எதிராக போராடுவதாக சொல்லிக்கொண்டே, ஒரு பக்கம் வைகுண்டராஜனை, உங்களது திருமணத்திற்க்கு அழைத்திருக்கிறீர்களே? என்று கேட்டால், சொந்தம் வேறு, அரசியல் வேறு என்று பக்கா அரசியல் வசனம்.

காமராஜரையும், கக்கனையும், ஜீவானந்தத்தையும் முன்னுதாரணமாக கொண்டிருக்க வேண்டிய மண்ணில், வீரப்பனை  முன்னிறுத்தும் அவலத்தை எங்கு போய் சொல்வது?

   ஒரு பக்கம் சந்தன கடத்தல் கொள்ளையன் வீரப்பன் படத்தையும், மற்றொரு பக்கம் தம் இனத்துக்காகவும் மொழிக்காகவும் போராடிய போராளி பிரபாகரன் படத்தையும் போட்டு பேனர் அடிக்கும் முட்டாள்தனங்கள்.  




    ஏதுமறியா சிறுவன் பாலச்சந்திரன், கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டான் என்கிற இனபடுகொலைக்கான ஆதாரத்தையே சிதைக்கிற விதத்தில், புலிப்பார்வை திரைப்படம் உள்ளதே என்று கேட்டால், படம் எடுத்தவர் ,பெருந்தமிழராக்கும் என்று பதில். 



      இதையெல்லாம் மாற்று அரசியல் என்று நம்பி ஏமார்ந்த, திராவிடத்துக்கும் திராவிட கட்சிகளுக்கும் வித்தியாசம் தெரியாத, வரலாறு பற்றி எந்த புரிந்துணர்வும் இல்லாத இளைஞர்களை விட்டு சமூக வலைத்தளங்களில் திராவிடத்தை சராமாரியாகத் திட்டினால் நாம் நம்புகிற புரட்சி வந்துவிடும் என்று சொல்லி, சகோதரச்சண்டையை அரங்கேற்றி, தன்படைவெட்டிசாதலை நிகழ்த்திக் கொண்டிப்பதுதான், உங்களது மாற்று அரசியலா?


       எப்படியாவது திராவிட கருத்தாக்கத்தை காப்பற்றிவிடவேண்டும் என்று எமக்கு ஒன்றும் நேர்த்திகடன் இல்லை. மக்களுக்கு உதவாது என்றால் எந்த கருத்தாக்கமும் மண்ணோடு மண்ணாகட்டும். ஆனால் அதற்க்கும் முன்னால் திராவிட கருத்தாக்கம் என்றால் என்ன? என்பதை மட்டுமாவது,  பாவம் அந்த இளைஞர்களை தெரிந்துக் கொள்ளச் செய்து பிறகு வாதிட சொல்லுங்கள்.  

Monday, February 16, 2015

முழுமதி பொங்கல் விழா 2015

நிஷிகசாய் பகுதி, முழுமதி தமிழ்வகுப்பு குழந்தைகள் தமிழ்த்தாய் வாழ்த்து பாட, நான்காமாண்டு முழுமதி பொங்கல் நிகழ்ச்சி, பிப்ரவரி மாதம் 14ம் தேதி காலை தோக்கியோ நக்காமச்சி அரங்கில் இனிதே தொடங்கியது. சிறப்பு விருந்தினர் பேராசிரியர் திரு ஹிரோஷி யமசித்தா அவர்கள் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஜப்பான் தமிழர்களில் மூத்த உறுப்பினரான திரு ஜீவானந்தம் மற்றும் சரஸ்வதி ஜீவானந்தம் அவர்களை கொண்டு சிறப்புவிருந்தினருக்கு மரியாதை செலுத்தினார்கள்.






6500 ஆண்டுகள் பழமையான கற்கோடாரி மயிலாடுதுறை பகுதியில் கண்டெடுக்கபட்டதையும், அந்த கற்கோடாரியில் சிந்துசமவெளி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்ததையும் விளக்கி வரவேற்புரையை தொடங்கினோம் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களாகிய நானும்,செம்மலரும். 2006ம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட அந்த கற்கோடாரி வரலாற்றின் பல இருண்டப்பகுதிகளை வெளிச்சமாக்கியது. இந்தியாவில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட எழுத்துக்களில் மிக பழமையானது சிந்துசமவெளி எழுத்துக்கள்தான். வேதங்களில் மிக பழமையானதாக கூறப்படும் ரிக் வேதத்தைவிட பல ஆண்டுகள் பழமையானது சிந்துவெளி நாகரீகம்.



சிந்துசமவெளி நாகரீகம் என்பது திராவிடர் நாகரீகம் தான். சிந்துவெளியில் வசித்த திராவிடர்கள் பல்வேறு காரணங்களினால் தென்னகம் நோக்கி புலம்பெயர்ந்தனர் என்று அறிஞர்பெருமக்கள் கருதியபோதிலும் போதிய ஆதாரங்கள் கிடைக்காமல் இருந்தது. கற்கோடாரி தமிழகத்தில் கிடைத்ததும், அந்த எழுத்துக்கள் எப்படி பண்டைய தமிழாக இருக்கலாம் என்று இந்தியாவின் புகழ்ப்பெற்ற ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் விளக்கியதும் பல முடிவுகளுக்கு அடித்தளமாக அமைந்தது. ஆனால் நமது ஊடகங்கள் இந்த முடிவுகளை கண்டுக்கொள்ளவில்லை.

முழுமதியின் சேவை குறித்து முழுமதி உறுப்பினர்கள் சுதாகர், வேல்முருகன், ரகு மற்றும் கணேஷ் ஏழுமலை ஆகியோர் எடுத்த ஆவணப்படம் ஒளிப்பரப்பபட்டது.

தொடர்ந்து குழந்தைகள் தமது திறமையை ஆடல், பாடல் மூலம் நிருபித்தனர். தமிழர்களின் நாட்டார் கலைகளான தேவராட்டம், பறையாட்டம், பொம்மலாட்டம், தெருக்கூத்து போன்றவற்றைதான் அரங்கின் முகப்பாக செய்திருந்தோம். அதை போலவே இந்த நிகழ்வில் குழந்தைகள் தமிழர் கலைகளைதான் அதிகம் நிகழ்த்திக் காட்டினர்.



பறையாட்டம் ஆடிய குழந்தைகளை மறக்கவே முடியாது.. அப்படி ஒரு லயத்துடன் இணைந்து உண்மையான பறையாட்ட கலைஞர்களை போலவே பிரமாதமாக ஆடினார்கள்..அடுத்து காவடியாட்டம். இந்த காவடிகளை செய்ய எவ்வளவு உழைத்திருப்பார்கள் என்பது பார்த்தவுடன் புரிந்தது.



பிறகு சினிமா பாடல்களுக்கான நடனம், நாட்டுபுறபாடல்களுக்கான நடனம் என்று பல்வேறு விதமான நடனங்களை நிகழ்த்திக் காட்டினார்கள். தமிழ் வகுப்பில் ஒரு நாள் என்ற தலைப்பில், தோக்காய் சீபா பகுதி முழுமதி தமிழ்வகுப்பு குழந்தைகள் ஒரு குறுநாடகம் நடத்தினார்கள். கடல்கடந்து வாழும் சூழலிலும், மொழியை கைவிடாது அடுத்த தலைமுறைக்கு கையளிக்க வாரந்தோறும் முழுமதி நடத்தும் இந்த தமிழ் வகுப்புகள் எந்தளவுக்கு குழந்தைகளை கற்கவைத்துள்ளன என்பதை புரியவைத்தது இந்த நாடகம். இயக்குநர்கள் செந்தில்வடிவேலன் மற்றும் அறிவுமுதல்வனுக்கு பாராட்டுக்கள்.



பிறகு நான் எழுதிய “அடுத்த ஆப்பு உனக்குதான்” என்ற குறுநாடகம்.  தமிழ்ச்சமூகத்தை பாதிக்க இருக்கும் மீத்தேன் பூதம் ஆபத்தை பற்றி, கிண்டல் கேலியுடன் நடித்துக் காட்டினோம். என்னுடன் இணைந்து சுதாகர், ரகு மற்றும் விக்ரம் கலக்கினார்கள். இனி ஜப்பான் பகுதியில் ஸ்டேஜ் பிராப்பர்ட்டி ஏற்பாடு செய்யவேண்டுமென்றால், சுதாகரிடம் சொன்னால் போதும். மனுசன் எள் என்றால் எண்ணெயாக இருக்கிறார். கடைசி வரைக்கும், அந்த போராட்ட போர்டை கண்ணுலேயே காண்பிக்கலையே சம்முவம்? ஆனால், நடிப்பில் பட்டாசை கிளப்பினார் சுதாகர். செம நக்கல் உடல் மொழியுடன், மன்னாரு பாத்திரத்தை கண்முன்னே நிறுத்தினாய் தம்பி.. எனவே போர்டு பிழையை மன்னித்தருளினோம்.. பிழைத்து போ. கடைசி நிமிஷம் வரைக்கு திருத்தம் சொல்லி ரகுவை காயவைத்தேன். ஆனால் பொறுமையுடன் எடிட் செய்து காத்தருளினார் ரகு. தம்பி, விக்ரம் உன்னோட வாய்சுக்கு நீ எங்கேயோ போக போற? ஏங்க அந்த போன் வாய்ஸ்லே பேசினது உண்மையாவே தமிழ்தெரியாத ஆசாமியா என்று கேட்டார்கள் உணவு இடைவேளையில்.. எல்லா புகழும் விக்ரமுக்கே.. அனைவரையும் ரிகர்ஸல் என்று நோகடித்த பாவத்திற்க்கு சட்டையை உடனே மாற்ற முடியாதபடி தண்டனை கொடுத்து கடவுள் இருக்காரு கொமாரு என்று காண்பித்தார். கெழட்டிய சட்டையை வால் போல் பேண்டில் சொருகியபடி சீன் மூன்றுக்குள் நுழைந்தேன். அட வசனமே பேசலை அதுக்குள்ள எப்படி இப்படி சிரிக்கிறாங்கே என்று பார்த்தால் வால் தெரிகிறது.. இப்படி எங்களது எல்லா பிழைகளையும் மன்னித்து நாடகத்தை நன்றாகவே ரசித்தார்கள் தோக்கியோ பெருமக்கள். நன்றி மக்களே.





உணவு இடைவேளையில், மீத்தேன் அழிவு பற்றி மே 17 இயக்க நண்பர்கள் எடுத்த ஆவணபடத்தை ஒளிப்பரப்பினோம். சென்ற வருடம் போலவே அருமையான பொங்கல் விருந்தை தயார் செய்து அசத்தினர் ஶ்ரீபாலாஜி உணவகத்தினர். சென்ற வருடம் போலவே, யாழ் நூலக நினைவு புத்தகச்சாலை என்ற பெயரில் தமிழகத்திலிருந்து இலக்கிய புத்தகங்கள், பெரியாரிய, அம்பேத்காரிய புத்தகங்கள் என்று பல்வேறு நூல்களை கொண்டு வந்து ஒரு கண்காட்சியை அரங்கத்திற்க்குள் ஏற்பாடு செய்திருந்தோம். ஏங்க, உங்க புத்தகம் இங்கே கிடைக்கவே இல்லை? என்று கேட்டு எனக்கு ஒரு தம்பி இன்ப அதிர்ச்சியை கொடுத்தார். இம்மாதிரியான உடன்பிறப்புகளை பெற என்னதவம் செய்துவிட்டேன்?



உணவு அரங்கம் ரொம்ப ரொம்ப பெரியது(?) என்பதால், பாதுகாப்பு கருதி முப்பது முப்பது பேராக உணவருந்த அனுப்பினோம். அதனால் அனைவரும் சாப்பிட சற்று காலதாமதமானது, மன்னிக்கவும். இந்த தாமதத்தின் போது, நம்ம செந்தில் சுப்பையா ரொம்பவே ஜூடாகிவிட்டார். யாரையும் வெளியே நிற்கவிடாமல் தடுக்கிறேன் பேர்வழி என்று போன் பேச வெளியே போன நபரை தடுக்க முயல, அவர் செந்தில் சுப்பையாவை லெப்ட், ரைட் என்று பேரேடு எடுத்துக் கொண்டிருந்தார். சண்டையிலே கிழியாத சட்டை எங்கே இருக்கு? போங்க தம்பி, நாங்கெல்லாம் திட்டு வாங்காத ஏரியாவே இல்லை என்ற ரீதியில் நின்றுக் கொண்டிருந்த செந்தில் சுப்பையாவை பார்த்து அந்த நேரத்தில் நான் கண்ணடித்து கொஞ்சம் ஓவர்தான்.



உணவரங்கத்தில் மிகசிறப்பாக கூட்டத்தை சமாளித்து, அனைவருக்கும் உணவு பரிமாறி வியக்கவைத்துவிட்டனர் பாலு, வேல்முருகன் மற்றும் குகன். வாழ்த்துக்கள் தங்கங்களே..


மதிய அமர்வில், தூய்மையான இந்தியா என்று நடிகர்நடிகைகள் அடிக்கும் கூத்துக்கள் பற்றியும் உண்மையில் அது எப்படி நடக்கவேண்டும் என்பதையும் அழகாக செய்துக் காட்டினார்கள் ஜேஜிசி தமிழ் குழுவினர். ஆனாலும், இந்த குழுவினரின் அலும்புக்கு அளவேயில்லை. அரங்கத்தில் கிடைத்த பொருட்களையெல்லாம் தமது நாடகத்திற்க்கு சமயோசிதமாக பயன்படுத்திக் கொண்டார்கள். வெளிநாடு சென்று திரும்பும் ஒரு இளைஞர் போல் நடித்த சிவா, ஒரு பெட்டியை தள்ளிக் கொண்டே மேடைக்கு வந்தார். பார்த்தால் அது நான் வைத்திருந்த உடைகளுக்கான பெட்டி அதுபோல் குழந்தைகளுக்கு கொடுக்கவைத்திருந்த புத்தகப்பெட்டியையும் தமது நாடகத்திற்க்கான ஸ்டேஜ் பிராப்பர்ட்டியாக பயன்படுத்திக் கொண்டுவிட்டு, ஒப்பனை அறையில் போட்டுவிட்டு சென்றுவிட்டனர். பரிசு கொடுக்கும் நேரம், புத்தகங்களை காணாமல், உண்மையிலேயே நாம் இந்தியாவிலிருந்து புத்தகங்களை கொண்டு வந்தோமா இல்லையா என்றெல்லாம் என்னை மண்டையை பிய்த்துக் கொள்ளவைத்த ஜேஜிஸி தமிழ்குழுவினருக்கு அன்பு முத்தங்கள்.. அடுத்த முறை வாங்க பிரதர்ஸ், திண்டுக்கல் பூட்டு போட்டு பூட்டி புடுறேன்..




நிகழ்ச்சியின் நடுவே அவ்வபோது வினாடிவினா நடத்தப்பட்டு டி.எம்.வி.எஸ் நிறுவனம் வழங்கிய உணவுபொருட்களுக்கான பரிசு கூப்பன்கள் வழங்கப்பட்டன. சென்னை மாகாணம் என்றழைக்கப்பட்ட போது, தமிழ்நாடு என்று பெயர் மாற்ற கோரி 73 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர் துறந்தவர் யார் என்று கேட்டபோது சங்கரலிங்கனார் என்று சரியான பதிலை சொல்லி பரிசை தட்டிசென்ற மறத்தமிழர் முழுமதி உறுப்பினரான கணேஷ் ஏழுமலை.வாழ்த்துக்கள்

பிறகு திரு ஹிரோஷி யமோசித்தா அவர்கள் முழுக்க முழுக்க தமிழில் பேசி கூட்டத்தினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். கோவில்கள் பற்றியும், இந்துமதம் பற்றியும் தான் செய்த ஆராய்ச்சிகள், எப்படி சமஸ்கிருதம் கற்கசென்ற தான் தமிழ் கற்க ஆரம்பித்தேன் என்பதை பற்றியும் விரிவாக விளக்கினார். கோவில்கள் பற்றி பல கட்டுரைகள் எழுதியுள்ளபோதிலும் தன்னை திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசாமி கோவில் உட்பட பல கோவில்களில் உள்ளே அனுமதிக்கவில்லை. அதனால் என்ன, நானும் இறைவனை பார்த்ததில்லை, அந்த நந்தனாரும் இறைவனை பார்த்ததில்லை என்று அவர் சொல்லியபோது அரங்கே கைத்தட்டலால் அதிர்ந்தது.



பிறகு நிகழ்ச்சி முக்கிய கட்டத்தை எட்டியது. இந்த நிகழ்ச்சிக்காக ஏறக்குறைய இரண்டு மாத காலம் முன்பே முழுமதி குழுவினர் திரு சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்களை சிறப்பு விருந்தினராக நிகழ்ச்சிக்கு வரும்படி அழைத்திருந்தோம் முழுமதியின் சேவைகள் பற்றி கேட்டறிந்த சகாயம் அவர்களும் வருவதாக ஒப்புக் கொண்டிருந்தார். அரசு அதிகாரி என்பதால் தடையில்லா சான்றிதழுக்காக ஒரு மாதம் முன்பே அவர் விண்ணபித்திருந்த போதிலும், கடைசிவரை தமிழக அரசு எந்த முடிவும் எடுக்காமல் பயணம் நிகழ முடியாதபடி பார்த்துக் கொண்டது. இந்தியாவில் நேர்மைக்கான விலை இதுதான். இருந்தபோதிலும் அன்பிற்க்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்பதற்க்கேற்ப, ஜப்பான் தமிழர்களுடன் சகாயம் அவர்கள் இணையம் மூலம் விழாநாளன்று இணைந்து நேரடியாக உரையாற்றியதை தமிழக அரசால் தடுக்கமுடியாமல் போயிற்று. விழாவிற்க்கு வந்தவர்கள் சகாயத்துடன் நேரடியாக பேசிய திருப்தியடைந்தார்கள் என்றபோதிலும், தமிழக அரசின் இந்த நடவடிக்கை குறித்து மிகுந்த வேதனையை வெளிப்படுத்தி சென்றார்கள்.

இறுதியாக முழுமதி உறுப்பினர் திரு அருள் நன்றி கூற விழா இனிதே முடிவடைந்தது.





முழுமதி பொங்கல் விழாவின் ஒவ்வொரு நிகழ்ச்சியும் மிகுந்த பொறுப்புடனும், சமூக அக்கறையுடனும் தயாரிக்கப்பட்டிருந்தது. குழந்தைகளுக்கு பரிசாக சிறுவர் இலக்கிய நூல்களை கொடுத்தது, மீத்தேன் எடுப்பதின் விளைவுகள், தமிழை கைவிடுவதுமூலம் அடையாளம் இழக்கும் பேராபத்து, சமூக இயக்கங்களில் பங்கு பெறாமல், சுயநலத்துடன் ஒதுங்குவது மூலம் விளையும் அபாயம் என பல தளங்களையும் தொட்டுச் சென்றதன் மூலம், முழுமதி அமைப்பு மற்றுமொரு வெளிநாட்டு தமிழ் சங்கமல்ல என்பதை ஆணியடித்தது போல்புரியவைத்தது. 

புகைபடங்கள் உதவி - விஜயசிம்மன்