Sunday, August 9, 2015

சண்டி வீரன்

கிராமம் என்றாலே, காது வளர்த்த கிழவிகள், அரிவாள் என மதுரைபக்கத்து கிராமங்களேயே காட்டிக்கொண்டிருந்த தமிழ்சினிமாவில், அசலான தஞ்சை மாவட்டத்து கிராமத்தை திரையில் கொண்டு வந்தவர், சற்குணம். பெண்களை என்ன ஆயி? என்று அழைப்பதில் தொடங்கி, குடும்ப கஷ்டத்தை தீர்க்க திரைகடல் ஒடி திரவியம் தேடும் அப்பாக்கள், அந்த பணத்தை ஊதாரியாக செலவு செய்து ஊருக்குள் சலம்பும் மகன், முரட்டுதனத்துக்குள் ஒளிந்திருக்கும் நேசம், ஜென்மவிரோதியாக நினைக்கும் ஒருவனே மச்சான் ஆன பிறகு அவனுக்காக அரிவாளை தூக்குவது, கிரிக்கெட் டோர்னமெண்டு என்று ஊர் முழுவதும் வசூலித்து தண்ணியடிப்பது, நண்பனுக்காக போதையில் பொண்ணை தூக்க போவது என ஒவ்வொரு காட்சியையும் களவாணியில், அழகாக, அப்பட்டமாக கொண்டு வந்தவர், இந்த படத்தில் பேலன்ஸ் கிடைக்காமல் தடுமாறுகிறார்.

களவாணியை போல ஜாலியாக கொண்டுபோவதா அல்லது தண்ணீர் பிரச்சினையை வைத்து, சீரியஸாக சொல்வதா என்கிற சற்குணத்தின்
குழப்பம், படம் முழுவதும் தெரிகிறது.. ஒரு குளத்தை வைத்து இரண்டு கிராமங்களுக்கு இடையில் ஏற்படும் சண்டை என்பது தஞ்சை மாவட்ட கிராமங்களில் சகஜம். இந்த கருவை மையமாக கொண்டு சொல்ல முற்பட்டது சரிதான். ஆனால், மூர்க்கதனமாக அடுத்த கிராமத்துக்கு தண்ணீர் தர மாட்டேன் என்று ஒரு கிராமமே சேர்ந்து முடிவெடுக்க ஒரு வலுவான காரணம் வேண்டாமா? இந்த காரணமின்மையே, படத்தோடு ஒன்றவிடாமல் செய்கிறது.

சிங்கப்பூரில் ஓவர்ஸ்டே, ரோத்தான் என்பதெல்லாம் மன்னார்குடி பக்க பக்கா நேட்டிவிட்டிதான்.. ஆனால் அதையே இவ்வளோ நேரமா இழுப்பது? விமல் தஞ்சை மாவட்ட ரவுசு இளைஞருக்கு சரியான தேர்வாக இருந்தார். ஆனால், அதர்வாவிடம் அந்த அலட்சியம், தெனாவட்டு எதுவும் தெரியவேயில்லை. ஸ்கூல் பையனை போல் கதாநாயகியின் தந்தையை பார்த்து பம்மும் அவருக்கும், சண்டிவீரன் டைட்டிலுக்கும் எந்த பொருத்தமுமில்லை. சிங்கப்பூரில் ஓவர்ஸ்டேயடித்து பிடிபட்டு, உடனே ஊருக்கு திரும்பாமல் முடிவளர்த்து, ஊருக்குள் தாரைதப்பட்டை முழுங்க நாயகன் நுழையும் காட்சியில், இந்த படத்திலும் பட்டையை கிளப்பபோகிறார் சற்குணம் என்று எழுந்து உட்கார்ந்தால், அடுத்த காட்சியிலேயே பயந்த கண்களுடன், கதாநாயகி பின்னால் சுற்றி வருகிறார் நாயகன்.. 

அடுத்த ஊர்பிரமுகரை, பஞ்சாயத்தில் வைத்து செருப்பாலடிப்பது என்பது எவ்வளவு பெரிய நிகழ்ச்சி.. ஆனால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் நகர்ந்துபோகிறது அந்த காட்சி.. இந்த இடத்தில் விருமாண்டி பஞ்சாயத்து காட்சியை நினைத்து பாருங்கள்? அந்த வீர்யமும், தாக்கமும்தான் படத்தை தூக்கிநிறுத்தும். கமல் காட்டும் உடல்மொழியும் வசனமும், பசுபதியின் நரிபார்வையும் பிரமாதமாக சொல்லப்பட்டிருக்கும். இந்த காட்சிதான் மொத்த கதைக்குமான காரணமாக முடியபோகிறது என்றால், அந்த காட்சி வலுவாக சொல்லபட வேண்டாமா?
பிரசிடெண்டு தண்ணீர் பிரச்சினையை புரிந்துகொள்ளும் காட்சி எல்லாம் ஏதோ முடிக்கவேண்டுமே என்று திணித்துள்ளது போல்தான் உள்ளது.. ஊரை காப்பாற்றுவதற்க்காக உயிரைவிட துணியும்  காட்சி எந்த நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தாமல், கடந்தோடுகிறது.

கிளைமாக்ஸில் களவாணி போல் முடிக்கலாம் என்று நினைத்து அவ்வளவு நேரம் ஈகோவுடன் திரியும் கதாநாயகியின் தந்தையை காமெடியானாக்கிவிடுகிறார்.


சிறுவன் உப்புதண்ணீரால் இறப்பது, பின்னனியில் தண்ணீர் பிரச்சினையை பற்றி ஒலிக்கும் பாடல், புத்தகத்துக்குள் ஒளிக்கபடும் ஐபோன் போன்ற காட்சிகள் நன்றாக அமைந்துள்ளது.

சற்குணம் தான் வாழ்ந்த கிராமத்தையும், அந்த மக்களையும் காட்சியில் கொண்டுவருவதில் அபாரமானவர். பொறுப்பான கதைகளங்கள் தேர்ந்தெடுப்பதிலும் பாராட்டுக்குரியவர். சாதிபெருமை பேச வாய்ப்பிருந்தும் அதை கவனமாக தவிர்ப்பவர்.  அவர் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி திரைக்கதை அமைப்பாரென்றால், மிக சிறப்பான படங்களை கொடுக்க முடியும். ஏனெனில் திரையில் சொல்லபடாத தஞ்சைகிராமத்து கதைகள் இன்னும் ஏராளமிருக்கின்றன. 

No comments:

Post a Comment

Write your valuable comments here friends..