Friday, May 11, 2018

அன்னா கரீனினா - அன்பின் தோல்வி - 3


என்னுடைய தந்தைவழி பாட்டி, தாத்தா இறந்தபின் தனியாகவே வாழ்ந்தார். ஐந்து பெண்கள், ஐந்து ஆண்குழந்தைகள் அனைவரும் அருகில் வசித்தாலும், தனது இறுதிகாலம் வரை தனி வீட்டிலேயே வேலையாட்கள் உதவியுடன் வாழ்ந்தார். சிறுபையனான நான் அந்த வீட்டுக்கு செல்லும்போதெல்லாம் திண்பண்டம் தருவார். ஆசையாக பேசுவார். சமையல்காரர் வந்து பாட்டிக்கு நெஞ்சு வலி என்று சொன்னபோது உடனே ஓடினோம். அப்பா அருகில் நின்றார். கூடவே நான் நின்றேன்.  என்னை பார்த்தபோது அது பாட்டியின் பார்வையாக இல்லை. ஒரு வெறுப்புடன் யாரோ ஒருவனை பார்க்கும் பார்வையாக அந்த விழிகள் தெரிந்தன. சிறிது நேரத்துக்கெல்லாம் அவர் இறந்துபோனார்.  இறக்கபோகிறவரின் விழிகளில் எதிலும் ஒட்டாத ஈடுபாடில்லாத தன்மை வந்துவிடுகிறது. இவர்கள் எல்லாம் வாழ்கிறார்கள், நாம் சாகபோகிறோம் என்கிற தனிமைதான் என் பாட்டியின் கண்களில் தெரிந்தது என்று பின்னால் உணர்ந்தேன்.



லெவினின் சகோதரன் நிக்கோலே மரணபடுக்கையில் கிடக்கும்போது அந்த விழிகளில் தெரியும் வெறுப்பை எழுதுகிறார் டால்ஸ்டாய். முதலில் கிட்டியிடம் அன்பாக பேசும் நிக்கோலே பிறகு மோசமடைந்து இறக்கும் தருவாயில் இருக்கும்போது அவளை கண்டவுடன் திரும்பிக்கொள்கிறான். சாவின் தனிமை அவனை வெறுக்கசெய்கிறது.  

லெவினுக்கும் அவனது சகோதரன் நிக்கோலேவுக்குமான உறவு மற்றுமொரு புதிராகதான் நாவலில் வருகிறது. கல்லூரி காலத்தில் ஒரு முனிவனை போல் நல்லொழுக்கத்துடன் வாழ்ந்தவன் நிக்கோலே. பிறகு, ஏதோ ஒரு தருணத்தில் சட்டென்று உடைந்து வாழ்வின் மற்றொரு எல்லைக்கு செல்கிறான். குடியில் முழுகுகிறான். மாஸ்கோவின் ஒரு ஓரத்தில் பாழடைந்த விடுதி ஒன்றில், மரியா என்னும் பாலியல் தொழிலாளியுடன் வாழ்கிறான். அனைவராலும் கைவிடப்பட்டு கிடக்கும் நிக்கோலேவை ஏறக்குறைய லெவின் மறந்துவிடுகிறான். ஆனால், கிட்டியிடம் காதலை சொல்லி அந்த காதல் நிராகரிக்கப்பட்டு, வெரான்ஸ்கியால் தோற்கடிக்கப்பட்ட உணர்வுடன் தெருவில் இறங்கி நடக்கும்போது, அனைவராலும் நிராகரிக்கப்பட்ட நிக்கோலேவின் நினைவு வருகிறது. லெவின், அவனை தேடிச்செல்கிறான். உறவை சீரமைக்க முயன்று தோற்கிறான்.

வாழ்வின் பொருளிண்மை, அபத்தம் லெவினை வாழ்க்கை முழுவதும் துரத்துகிறது. எந்த கூட்டத்திலும் அவன் தனிமையை மட்டுமே உணர்கிறான். இருத்தலிய சிக்கலில் தவிக்கும் லெவினால், அவனது மனைவி மற்றும் மகனிடம் கூட உண்மையான நெருக்கத்தை உணரமுடியவில்லை. வாழ்க்கைக்கு நாம் கொடுக்கும் பொருளை தாண்டி வேறு பொருளில்லை. இந்த அகண்ட பிரபஞ்சத்தின் எல்லையில்லா பிரமாண்ட காலவெளியில், சட்டென்று தோன்றி மறையும் ஒரு நீர்குமிழி தான் தனது வாழ்க்கையெனில், இந்த பொருளிண்மை நரகத்திலிருந்து தப்பிக்க தற்கொலை ஒன்றே வழி என்று நினைக்கிறான், லெவின்.  எந்த நேரமும் தற்கொலை செய்துக்கொள்ள கூடும் என்பதால் கைத்துப்பாக்கியை மறைத்து வைக்கிறான். இறுதியில் ஒரு எளிய விவசாயி போகிறபோக்கில், “தனக்கென வாழும் வாழ்க்கையில் என்ன அர்த்தமிருக்ககூடும்? ஆன்மாவுக்கு நேர்மையாக, பிறர்க்காக வாழ்வதுதானே வாழ்க்கை“ என்று சொல்லிச்செல்லும் அந்த எளிய வரிகளிலிருந்து தனது வாழ்வை மீட்டெடுக்கிறான், லெவின். மகனும், மனைவியும் புதியவெளிச்சத்தில் தெரிகிறார்கள் அவனுக்கு. இனி அவனுக்கு துன்பமில்லை.  



போரும் அமைதியும் நாவலில் வரும் எளிய குடியானவன் பிளாட்டேன், பியரின் மீட்சிக்கு காரணமானவனாக இருக்கிறார். இந்த நாவலில் திரும்பவும் ஒரு எளிய விவசாயியே லெவினை மீட்கிறார். பியரும், லெவினும் டால்ஸ்டாயின் குணாம்சங்கள் பொருந்திய கதாபாத்திரங்கள். கிருஸ்துவை மிக எளிதாக நெருங்க கூடியவர்கள் களங்கமில்லாத எளியவர்களே.

பெருங்குழப்பத்திலும், வாழ்க்கை பற்றிய தொடர்கேள்விகளையும் கொண்டு நாவலின் ஆரம்பத்தில் லெவின் அறிமுகமாகிறான். நாவலின் போக்கில் அவன் வளர்ந்து தனது மீட்சியை கண்டுக்கொள்கிறான். அன்னா என்னும் தேவதையோ கம்பீரமாக நமக்கு அறிமுகமாகி, பரிதாபகரமான வீழ்ச்சிக்கு ஆளாகிறாள். ஏறக்குறைய இந்த இருவரையும் நெரெதிர் பாத்திரங்களாக ஒன்றை ஒன்று சமன் செய்யும் பாத்திரங்களாக வளர்த்தெடுக்கிறார் டாலஸ்டாய்.

ஆரம்பத்தில் அன்னாவின் வாழ்க்கையில் காதலில்லை. ஆனால் தன் நிலையில் இருக்கின்ற சுதந்திரமும், அமைதியும் இருந்தது. வெரான்ஸ்கியைச் சந்தித்தபிறகு எல்லையில்லாத காதலை திகட்டதிகட்ட அனுபவிக்கிறாள் அன்னா. ஆனால், உள்ளூர அமைதியிழக்கிறாள். வாழ்க்கை முழுவதும் தேடிய காதல் கிடைத்தபின்னும் மனம் அமைதியடைவதாக இல்லை. இன்னும் இன்னும் என்று இறுக்கிகொள்ள துடிக்கிறது மனது. தான் அனுபவிக்கமுடியாத சுதந்திரத்தை எண்ணி ஏங்குகிறாள். தனது மகன் மீது காட்டிய அன்பு, அன்னாவுக்கு உள்ளூர பெருமிதத்தை தந்தது. அதுவும் இப்போது இல்லை. சொந்த மகனை விட்டுவிட்டு தான் வளர்க்கும் ஏழை சிறுமிக்குறித்து வெரான்ஸ்கிக்கு ஏளனமிருக்கும் என்று நினைக்கிறாள். வெரான்ஸ்கி, உண்மையில் தன்னை காதலித்தானா? என்கிற கேள்வி அவளுள் எழுகிறது. பிறன் மனைவியாகிய தன்னை வென்றெடுத்ததன் மூலம் வெரான்ஸ்கியின் தன்னகங்காரம் திருப்தியடைந்துவிட்டது. இனி, தான் கூட இருப்பதால் காட்டப்படவேண்டிய நேசம் மட்டுமே அவனிடமிருந்து கிடைக்கிறது என்று அஞ்சுகிறாள்.





இறுதியில் அவனுக்கு தந்திகொடுத்துவிட்டு, ரயில்நிலையத்திற்க்கு செல்கிறாள் அன்னா. செல்லும் வழியெங்கும், மனிதர்கள் துன்பத்தில் உழல்வதாக தோன்றுகிறது அவளுக்கு. ஒருவருக்கொருவர் துன்பம் விளைவித்துக்கொள்வதுதான் வாழ்க்கை என்று நினைக்கிறாள் அவளது மன நிலையை பார்க்கும் மனிதர்களின் மீது ஏற்றி செல்வதை டால்ஸ்டாய் எழுதுகிறார்.. நாயுடன் சுற்றுலா செல்லும் ஒருத்தரை பார்த்து “வீண் பயணமிது. உன்னுடன் வரும் நாய் உன்னை அமைதியாக இருக்கவிடாது” என்று மனதுக்குள் சொல்லிக்கொள்கிறாள்.


தான் இறந்தால் மட்டுமே வெரான்ஸ்கி காலம் முழுவதும், வருந்துவான் என்று முடிவெடுத்து ரயில் முன் பாய்கிறாள். அவள் மீண்டும் மீண்டும் கனவில் கண்ட ஒரு வயதான முதியவர் தண்டவாளங்களில் ப்ரெஞ்சில் ஏதோ உச்சரித்தபடி நிற்பதை இறுதியாக பார்க்கிறாள்.

1 comment:

  1. அன்னா கரீனா பற்றிய உங்கள் நுணுக்கமான விவரிப்பு இதை வாசித்த எனக்கு வேறு ஒரு கோணத்தை காட்டுகிறது.. அருமையான விமர்சனம்..

    ReplyDelete

Write your valuable comments here friends..