Wednesday, June 30, 2021

இசூமியின் நறுமணம் - வாசிப்பு அனுபவம் - எழுத்தாளர் வாசு முருகவேல்

 ரா.செந்தில்குமாரின் "இசூமியின் நறுமணம் & பிற கதைகள்" என்ற சிறுகதை தொகுப்பை ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன். இந்த சிறுகதை தொகுப்பில் எனக்கு பிடித்தமான கதை எதுவென்று, சிலமுறை, எனக்குள் ஓட்டிப் பார்த்து கொண்டேன். "அனுபவ பாத்தியம்" என்ற கதைதான் கண்களில் முட்டிக்கொண்டு நிற்கிறது. முதல் மூன்று கதைகளை கடந்து வந்து இந்தக் கதையை வாசித்து முடிக்கும் போது ஒரு இடைவேளை தேவைப்பட்டது. கைவிட்டுப் போன தோட்டம் ஒன்றின் ஓரத்தில் இருக்கும் பூவரசின் நிழலில் சாய்ந்து இருக்கும் சிறு நிம்மதியை எனக்குள் அடைந்தேன்.

இந்த சிறுகதை தொகுப்பில் வரக்கூடிய ஆண்கள் எல்லோரும் நமக்கு பிடித்தவர்களாக மாறி விடுகிறார்கள். சாதாரண மனிதர்களாக இருந்த போதிலும் பெரும் இழப்புகளை அதன் போக்கில் ஏற்கும் பக்குவம் அவர்களை நம்முள்ளே நிலைபெற வைத்து விடுகிறது. ரா.செந்தில்குமாரின் பெண் பாத்திரங்கள் வழக்கமான பெண்கள் தான் என்ற உணர்வை தந்தாலும் கூட, நுண் உணர்வுடன், அவர்களை பற்றிப் பிடிக்காமல் பின் தொடர்ந்தால் அது ஒரு புதிய அனுபவமாக இருக்கும். ஒரு சிலர் வழக்கம் போல "பெண்களைப் புரிந்து கொள்ள முடியாது" என்ற வழக்கமான சொற்றொடரை இன்னும் வலுவாக்கிக் கொள்ளவும் கூடும்.
"மலரினும் மெல்லிது" என்ற முதல் கதையில் வரும் "தெரியாத மனுசன் என்ன பெரிய தீமைய செஞ்சுட முடியும் ?." போன்ற பல வார்தைகள் இந்த தொகுப்பில் ஆங்காங்கு தனித்து மின்னி நம் கவனத்தைக் கோருகின்றன. அவற்றை இரண்டு மூன்று முறை அசை போட்டுக் கொண்டு இந்த தொகுப்பை வாசியுங்கள். அவை உங்களை கதைகளுக்குள் அழைத்துச் செல்லும் வழிப்போக்கர்கள்.
இசூமியின் நறுமணம், மடத்து வீடு போன்ற ஒவ்வொரு கதையையும் கொஞ்சம் விவரிக்கலாம் என்று பார்த்தால்...அது வோறெரு இடத்திற்கு இந்த பதிவை இட்டுச் சென்று விடும் என்பதால் "தவிர்க்கிறேன்".
உங்கள் படைப்புகளை தொடர்ந்து வாசிக்க காத்திருக்கிறேன் ரா.செந்தில்குமார். மகிழ்ச்சி.