Friday, June 22, 2012

நல்லதோர் வீணை செய்தே !பார்த்தவுடன் யாருக்கும் பிடித்து விடும் முகம் ராம்பாரதிக்கு. முதன்முதலில் ராம்பாரதியை மகேந்திரன் பெட்டிக் கடையில்தான் பார்த்தேன்.ஒரு சாயம் போன நீலநிற ஜீன்ஸ், மேலே பருத்தி குர்தா. குறுந்தாடி. கையில் புகையும் சிகரெட். அழகாக சிரித்தார். ஜீன்ஸும் குர்தாவும் போல், கொஞ்சம் வித்தியாசமாக சிந்திக்கும் இளைஞனுக்கு, பாந்தமாக பொருந்தும் உடை வேறு இல்லை. இதே போல் ஒரு குர்தா வாங்க வேண்டும் என்று வெகு நாட்களாய் நினைத்து கொண்டிருந்த்து நியாபகத்துக்கு வந்தது.  நானும் மெலிதாய் சிரித்தேன்.  புதிதாக, பக்கத்து தெருவில் குடி வந்திருப்பதாய் சொன்னார். ப்லாஸ்டிக் டெக்னாலஜியில் டிப்ளமோ படித்திருப்பதாகவும், கூடிய விரைவில் சிறிய அளவில் ஒரு தொழிற்க் கூடம் நிறுவ இருப்பதாகவும் சொன்னார். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த என்னை, அவரது சுயத் தொழில் முனைப்பு ஈர்த்தது. சுய அறிமுகம் முடிந்து, அவரது சைக்கிளை எடுக்க சென்றப் போதுதான் கவனித்தேன். ரேஸ் சைக்கிள் போல், வித்தியாசமாய் இருந்தது அது. அத்தனை சிறிய டயர் நம்மூரில் கிடைக்குமா என்று யோசித்துக் கொண்டே கல்லூரி பஸ் ஏறினேன்.

அதற்குப் பிறகு அடிக்கடி சந்தித்ததில், அவரது இலக்கிய ஆர்வம் தெரிய வந்து, மனதிற்குள் மிகவும் நெருங்கி வந்தார். அவருக்கும் அப்படியே தோன்றியிருக்கும் என்று ஊகிக்கிறேன். வார விடுமுறைகளில் கிரிக்கெட் மாட்சு விளையாடுவது எங்களது பொழுதுப்போக்கு. ஒரளவு சொல்லிக் கொள்ளும்படி, எங்க டீம் அந்த பகுதிகளில் ஜெயித்து பேர் எடுத்திருந்தது. விளையாட தெரியாது என்றாலும், நாங்கள் மாட்சு விளையாட செல்லும் போதெல்லாம் எங்களுடன் வருவார் ராம். நாங்கள் இருவரும் இடைப்பட்ட நேரங்களில் இலக்கியம் பற்றி/சினிமா பற்றி பேசி பொழுதை கழிப்போம். இரவு நேரங்களிலும், அடிக்கடி சந்திப்போம். அவருக்கு பாரதி மேல் மிகப் பெரிய காதல் இருந்தது. எனக்கும் பாரதியை பிடிக்கும் என்றாலும், அவருடைய தீவிரம் வியக்க வைக்கும் ஒன்று. ஒவ்வொரு வரியும் மனப்பாடமாக அவர் நினைவில் வைத்திருந்தார். சாதாரணமாக பேசும் போது வார்த்தைகளுக்கே வலிக்காத ஒரு தொனியில்தான் பேசுவார். சிறியவர், பெரியவர் என்று எந்த வித்தியாசமும் இல்லாது அனைவருக்கும் பன்மை தான். பெரிய ப்ளேயர் யாரவது திடிரென்று வராது போனால், விளையாடுவதற்கு எப்போதும் நாங்கள் அழைத்து செல்லும், அப்போது பள்ளிக்கூடம் போய்க் கொண்டிருந்த்த கிண்டி பாபுவை கூட ராம் சொல்லுங்க பாபு என்பார்.

அதே ராம், ஒருமுறை, பெரியகோவிலின் மணல்பரப்பில் அமர்ந்து, வெகு தீவிரமாய் விவாதித்த போது, வேறு ஒரு மனிதராய் தோன்றினார். மனுசனோட உண்மையான குணம் வன்மமும், பொறாமையும் தானே..மேல போட்டுக்குற மேக்கப்தான் இந்த அன்பு, பண்பாடு, நாகரிகம் எல்லாம். நல்ல அடிச்சு பெய்ற மழைலே, எல்லாம் கரைஞ்சு போயிடும். அப்போ அம்மணமா நிக்க போறதுதான் உண்மை. இவர் அடித்தளத்தையே தகர்க்க முயலுகிறார் என்று தோன்றியது எனக்கு. என்ன பேசுறிங்க ராம்? அப்போ, உன்னதமான அன்புன்னு ஒன்னு இல்லவே இல்லையா? என்னை மீறிய ஆவேசத்தில் கேட்டேன். அப்படி ஒன்று, செந்திலுக்கு சாத்தியமானுச்சுன்னா சந்தோசம்தான் என்று முடித்துக் கொண்டார்.

எனக்கு வித்தியாசமாக இருந்த ஒரே விசயம், எப்போதும் ராம்தான் எங்கள் வீட்டிற்கு வருவாரே தவிர ஒருபோதும் அவரது வீட்டிற்கு என்னை அழைத்ததில்லை. வெளியே போகும் பிளான் இருந்தால், சந்திப்புமுனை மகேந்திரன் கடை தான்.

ஒருமுறை தஞ்சைக்கு, நண்பர்களோடு போகும் திட்டம் இருந்த்தால், அதை தெரிவிக்கும் பொருட்டு அவரது, வீட்டிற்கு சென்றேன். அழைப்பு மணி அடித்து வெகு நேரம் கழித்து  தாவணி போட்ட ஒரு பெண், கதவை திறந்தாள். அவள் முகத்தில் ஏன் அத்தனை சோகம்? ராம்பாரதி இருக்காரா? என்றேன். ராம்..பாரதி யா? என்று சற்று குழம்பி, ஒ..ராம்குமாரா? உட்காருங்க ..அவன் குளிக்குறான்... என்று சொல்லிவிட்டு காணாமல் போனாள். பாரதியின் மீதான அவரது நேசம் ஞாபகத்திற்கு வந்தது. எப்படி இதை யூகிக்காமல் போனோம்.. சற்று நேரத்தில் மீண்டும் உள்கதவு திறந்தது. 50 வயது மதிக்கதக்க ஒருவர் முழுகை சட்டையின் கையை மடித்தபடி வெளியே வந்தார். பூ போட்ட சட்டை, அதற்கு சற்றும் சம்பந்தமில்லாத கலரில் பேண்ட், முகத்தில் ஒரு பதட்டம். ராமின் தந்தை என்று முகஜாடை காட்டியது. உட்காருங்க...ராம்குமாரோட பிரண்டா? கேள்வியில் ஒரு எள்ளல் தொனி.  நான் மையமாக தலையசைத்தேன். சும்மா உட்காருங்க. பாக்கெட்டில் பத்து ரூபா இருந்தா, பத்து பிரண்ட் புடிக்கலாம். என்ன பிரயொஜனம்.? என்றார். இது போன்ற ஒரு அவமானத்தை நான் சந்தித்ததில்லை. முகம் வெளிறி நாக்கு வறண்டது. ஒன்றுமே சொல்லாமல் திரும்பி நடந்தேன். எப்படி வண்டியை எடுத்து கொண்டு வீட்டிற்கு வந்தேன் என்பதே நினைவில் இல்லை. சாயங்காலம், ராம் வந்தார். அப்பா உங்ககிட்ட பேசினாரா?, மன்னிச்சுக்குங்க செந்தில். அவர் அப்படித்தான். என்றார் மிகவும் வருந்தியபடி. அவர் முகத்தை பார்க்கவே சங்கடமாக இருந்தது. அந்த சம்பவத்திற்க்கு பிறகு நான் அவர் வீடு இருக்கும் திசைக்கே போவதில்லை என்றாலும் எங்கள் நட்பு வழக்கம் போல் தொடர்ந்தது.

நாளாக, நாளாக அவரிடம் பழைய உற்சாகம் இல்லை. பேசிக் கொண்டிருக்கும்போதே ஆழ்ந்த சிந்திப்பில் முழ்கி விடுவார். நான் அவ்வபோது அவரது பிலாஸ்டிக் தொழிற்சாலை குறித்து கேட்டாலும் பதில் ஒன்றும் வருவதில்லை. திடிரென்று ஒரு நாள், எனக்கு ஒரு வேலை ஏற்பாடு செய்ய முடியுமா, செந்தில் என்றார். இந்த சின்ன ஊரில் என்ன பெரிய வேலை கிடைத்து விடும் என்றதற்கு, இல்லைங்க, எனக்கு ஒரு நாளைக்கு 50 ரூபா கிடைச்சா போதும். பெரிய வேலை எல்லாம் வேணாம். ஆரம்பத்துலே ஒரு நாளைக்கு பத்து ரூபா என்னோட செலவுக்கு கொடுத்துட்டு இருந்தார் எங்கப்பா. இப்போ அதையும் தர்றதில்லை. சிகரெட் குடிக்ககூட காசு இல்லை. அதுனால தான் கேக்குறேன். என்ற போது, மனதை பிசைந்தது. வாங்க என்று கூட்டிப் போய், மகேந்திரன் கடையில் சிகரெட் வாங்கி புகைக்க சொன்னேன். ஏதோ ஆதங்கத்தில் இப்படி கேட்கிறார் என்று நினைத்து அவர் வேலைக்கு சொன்னதை நான் சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் தொடர்ந்து அதையே அவர் வலியுறுத்தினார்.

ஒரளவு கெளரவமான வேலை என்று, பந்தலடியில் நிதியகம் வைத்திருந்த வள்ளியப்பா செட்டியாரிடம் கணக்கு எழுதும் வேலைக்கு சொல்லிவிட்டேன். கூடவே, செட்டியாரிடம், வேலைக்கு வருபவர் நன்கு படித்தவர் ஒரு அனுபவத்திற்காக தான் வேலைக்கு வருகிறார் என்றும் சொல்லி வைத்தேன். செட்டியாரின் சுபாவம் எனக்கு மட்டுமல்ல பந்தலடிக்கே தெரியும். கோபம் வந்தால், எந்த கெட்ட வார்த்தையுமே பயன்படுத்தாமல், வெறும் குரல் ஏற்ற இறக்கத்திலேயே, எதிராளியை கூனி குறுகி போவசெய்வதில் அவர் வல்லவர். அதனால், படித்தவர் என்ற அடையாளம் ஒரு மரியாதையை பெற்றுத் தரும் என்று எதிர்பார்த்தேன். அதோடு ராமின் மென்மையான இதயத்தை இவர் காயப்படுத்திவிட கூடாதே என்று யோசித்து ராமிடம், ஒரு முறைக்கு பல முறை கேட்டேன். ஆனால் ராம் உறுதியாக இருந்தார்.

வேலைக்கு சேர்ந்த பிறகு அவர் பகல் நேரங்களில் வீட்டிற்க்கு வருவது நின்றது. இரவு சந்திப்பிலும் முன்பை விட உற்சாகமாக தெரிந்தார். எனக்கும் சந்தோசமாக இருந்தது. எல்லாம் கொஞ்ச நாட்களுக்குத் தான். ஒரு வாரம் ராம் வீட்டுப் பக்கம் வரவில்லை. சரி வேலை பிஸி, என்று நினைத்து நானும் கண்டுக் கொள்ளவில்லை. அன்று, பந்தலடியை கடந்து வண்டியில் சென்றப் போது, செட்டியார் உரத்த குரலில், கடைக்கு வெளியே நின்று கூப்பிட்டார். வண்டியை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு, கடைக்குள் நுழைவதற்கு முன் செட்டியார் பேச ஆரம்பித்து விட்டார். நல்ல அளு கொணந்து விட்டீக தம்பி. ஒரு மாசம் தான் ஒழுங்கா வந்தார். அதுக்கு அப்புறம் ஆளே காணோம். கடைப் பையனை விட்டு பார்த்துட்டு வரச் சொன்னா, வுட்டுலே இல்லைங்கறான். இந்த வேலைக்குலெலாம் படிச்சவனுக சரிப்படாது தம்பி. பத்தாம்கிளாஸ் போதும் இந்த வேலைக்கு. சோத்துகில்லைனு, வர்றதுதான் நிக்கும். இப்படி பைஜாமா போட்டதெல்லாம் லாயக்கு படாது என்றார்.  ராமின் மீது கடும் கோபம் எழுந்த்தது. படிச்சு படிச்சு சொன்னேன். இந்த வேலை எல்லாம் வேண்டாம் என்று. அவ்வளவு உறுதியாகச் சொல்லிவிட்டு கடைசியில் என்னையும் சேர்த்து அல்லவா அவமானபடுத்தி விட்டார்.

அன்று இரவு அவர் வந்தப் போது நான் சரியாக எதுவும் பேசவில்லை. அவராக சொல்லட்டும் என்று காத்திருந்தேன். மவுனமாக இருந்தவர், அந்த இடம் சரியில்லை செந்தில்.. என்றார். என்ன சரியில்லை என்றேன் சற்று கோபத்துடன். கிராமத்து அளுகளை, ஏமாத்தி அநியாய வட்டி வாங்குறாரு அவரு. அந்த இடம் அழிய போகுது. அங்கே அதிர்வு சரியில்லை என்றப் போது, எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவர் அப்படிதான் என்று சில நாட்களில் என்னை தேற்றிக் கொண்டு வழக்கம் போல் அவரிடம் பேச துவங்கினேன்.

நாளடைவில் ராமின் புகைப் பழக்கம் அதிகரித்து விட்டது. ஆரம்பக் காலத்தில் வில்ஸ் குடித்துக் கொண்டிருந்தவர், இப்பொது ப்ளைன் சிக்ரெட்டுக்கு மாறி இருந்தார். பேச்சு மிகவும் குறைந்திருந்த்து. நாமாக திரும்ப திரும்ப ஏதேனும் கேட்டால், ஒரு வரியில் பதில். இப்படி போய்க் கொண்டிருந்த்து.

ஒரு நாள் வழக்கம் போல், மகேந்திரன் கடையில் தம்மடித்து கொண்டிருந்தார். என்னை பார்த்தவுடன், ஒரு செய்தி என்பது போல் சைகை செய்தார். நாங்கள், இருவரும் ஒரு ஒரமாக சென்றபின், தனது ஜீன்ஸ் பாக்கெட்டில் இருந்து எதையோ எடுத்தார். கையில் இரட்டை கிளி தீப்பெட்டியின் லேபிள்கள். தீப்பெட்டியின் மேல் அட்டை மட்டும் ஒரு இருபது இருக்கும். ரப்பர் பேண்ட் போட்டு சுற்றப்பட்டு இருந்தது. ஒன்றும் புரியாமல் அவரை பார்த்தேன். இதை பாத்தீங்களா? இந்த இரண்டு கிளியை பத்திதான் பாரதி பாடி இருக்கான். துன்ப நினைவுகளும் சோர்வும் பயமு மெல்லாம்அன்பில் அழியுமடீ!-கிளியே! னு பாடுனான் பாருங்க.. அது இதை பார்த்துதான். நல்லவேளை இப்போவாது புரிஞ்சுது என்று சொல்லிவிட்டு புகையை ஆழ்ந்து இழுத்தார். எனக்கு பகிரென்றது. உண்மையிலேயே எதுவோ சொல்ல வருகிறாரா என்று குழப்பம் ஒரு பக்கம். நெஞ்சுக்குள் உணர்ந்து விட்ட நிஜம் ஒரு பக்கம். அந்த நிஜத்தை எப்படியாவது பொய்யாக்கும் பொருட்டு திரும்பவும் கேட்கிறேன். சரி..அதுக்கு எதுக்கு இத்தனை லேபிள்கள் ராம்.. தூக்கி போட்டுங்க.. கண்களில் ஒரு கோபத்துடன் முறைத்தார்.. எதுவும் பேசாமல் தனது சைக்கிளை எடுத்துக் கொண்டு போய்விட்டார். நான் செய்வதறியாது, சரவணனை பார்க்க ஒடினேன். சரவணன் அதிரடி ஆள். எதையும் சமாளித்து விடுவான் என்ற நம்பிக்கை. நான் சொன்னதை எல்லாம் கேட்டு கொண்ட அவன், ஒன்னும் பயப்படாதே..சரியா தூங்கியிருக்க மாட்டார். நல்ல தூங்கி எழுந்தா கரெக்ட் ஆகிடும். ஒரு இரண்டு வேலியம் டேப்லட் வாங்கி தரேன். போட்டுக்க சொல்லுவோம் என்றான்.

ஆனால் அவை எல்லாம் ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை. ஒரு நாள் கிண்டி ஒடி வந்தான். ராம் தெரு முக்கில் உட்கார்ந்து கொண்டு அடம் புடிப்பதாகவும் அவருடைய அம்மா அங்கே நிற்பதாகவும் சொன்னான். நான் வண்டி எடுத்துக் கொண்டு அங்கே போனப் போது, கூட்டம் கூடி இருந்தது. ஒரு சின்னப் பிள்ளையை போல் ராம் தெருவின் ஒரத்தில் உட்கார்ந்து அழுதுக் கொண்டிருந்தார். அவருடைய அம்மா அருகில் தவித்தபடி நின்றார். டாக்டர் வீட்டுக்கு போய்விட்டு வரும்போது இப்படி உட்காந்துட்டு, அடம் பிடிக்கிறான் என்றார். நான் அருகே சென்று, ராம் எதுக்கு அழறிங்க இப்போ? என்றேன். என்னை நிமிர்ந்து பார்த்துவிட்டு, காலை ரொம்ப வலிக்குது செந்தில். என்னால் நடக்கமுடியலை.. ரொம்ப ரொம்ப வலிக்குது என்று சொல்லிவிட்டு கேவி கேவி அழுதார். ஒரு நிமிடம், சொல்லமுடியாத துக்கம் நெஞ்சைக் கவ்வியது. சரி ராம்..நடக்கமுடியாட்டி பரவாயில்லை..என்னோட வண்டில ஏறுங்க. நான் கொண்டுப் போய் வீட்டுலே விட்டுருனே.. அழுதபடி நிமிர்ந்த ராம், என் தூரத்தை நாந்தானே நடக்கனும்.. நீங்க எப்படி என்னை சுமக்க முடியும் என்றார். சரி.. இவ்வளவு தூரம் நடந்துட்டிங்க. இன்னும் ஒரு 2 நிமிசம்தானே ராம்..ப்ளிஸ்.. எழுந்திருங்க என்றேன். என் குரல் எனக்கே பரிதாபமாக ஒலித்தது. நடக்க முடியலையே.. கால் ரொம்ப வலிக்குதே.. என்றபடி திரும்பவும் அழத் தொடங்கினார். விசயம் கேள்விப்பட்டு அங்கே வந்தான் சரவணன். நீ நவுருடா என்று என்னிடம் சொல்லிவிட்டு குண்டுக்கட்டா ராமை தூக்கி ஆட்டோவில் வைத்து வீடு வரை இறக்கிவிட்டு வந்தான்.  

அதற்கு பிறகு நான் ராமை பார்க்கவே முடியவில்லை. தஞ்சாவூரில் வைத்து வைத்தியம் செய்வதாகவும், ராமின் சித்தப்பா அருகில் இருந்து பார்த்துக் கொள்கிறார் என்றும் சரவணன் தான் சொன்னான். சென்று பார்க்க வேண்டும் என்று தோன்றிய போதும், ராமின் அப்பாவை நினைத்து ஒத்திப் போட்டுக் கொண்டே இருந்தேன். இதற்கிடையில், எனக்கு சென்னையில் வேலை கிடைத்து உடனடியாக செல்ல வேண்டிய சூழ்நிலை. சென்னை வந்தப் பிறகும், அவ்வபோது சரவணனிடம் விசாரிப்பேன். இப்போது கொஞ்சம் பரவாயில்லை என்று ஊருக்கே வந்து விட்ட்தாகவும், ஆனால் முன்பு போல் பார்க்க முடியவில்லை என்றும் சொன்னான்.

சில நாள் கழித்து வாரவிடுமுறைக்கு ஊருக்கு சென்றிருந்தப் போது, சரவணன் வந்தான்.  போன் அடிச்சா எடுக்க மாட்டியா? நீ கொடுத்த நம்பருக்கு எத்தனை தடவை டிரை செய்றது? போன வாரம் ராம், சூசைட் பண்ணிகிட்டாருடா. எனக்கே மகேந்திரன் கடையிலே நிக்கும் போது, பாடி எடுத்துட்டு போனதை பார்த்துதான் விசயமே தெரியும். ஜானேக்சா ரம்முல பாலிடாயில் கலந்து குடிச்சிருக்காரு.. ரெண்டு வாரம் முன்னாடித் தான் என்னைத் தேடி வந்து இந்த புத்தகத்தை உன்கிட்டே கொடுக்க சொன்னார், என்றான். அவன் கொடுத்த பாரதியின் கவிதை தொகுதியை பிரித்தேன். உள்ளே இரட்டைக் கிளி லேபிளில் இருந்த ஒரு கிளி என்னை உற்று நோக்கியது.


Monday, June 4, 2012

மாற்று சினிமா முயற்சிகளும், மழுங்கடித்த மசாலா படங்களும்..


எழுபதுகளின் இறுதியில் இயக்குநர் மகேந்திரனால் எழுப்பபட்ட யதார்த்த சினிமாவின் அலை, மற்றும் அந்த திரைப்படங்களுக்கு மக்கள் கொடுத்த பேராதரவு ஆகியவை, சில கேள்விகளை நம்முள் எழுப்பாமல் இல்லை. இத்தகைய ஆதரவு, தரமான படங்களுக்கு கிடைக்ககூடும் என்றால், தமிழ் திரையுலகம் ஏன் தடம் மாறியது?  ஏறக்குறைய இதே நேரத்தில் மலையாள திரையுலகில் நிகழ்ந்த யதார்த்த சினிமாவின் வெற்றியை தொடர்ந்து மலையாள திரையுலகம் தக்க வைத்துக் கொண்டது. இதன் முலம், தரமான சினிமா ரசனையை, ரசிகர்களிடம் வளர்த்தெடுத்தது. இந்திய யதார்த்த சினிமாவின் அடையாளமாக மலையாள சினிமா மாறிப் போனது.நாம், அந்த பாதையில் பயணிக்க முடியாமல் போனதற்க்கு முக்கிய காரணம், ஏ.வி.எம், தேவர் பிலிம்ஸ், பாலஜியின் சுரேஸ் ஆர்ட்ஸ் போன்ற ஒரு சில பெரிய நிறுவனங்களே.நல்ல படங்களின் வெற்றியை தொடர்ந்து, இந்த நிறுவனங்கள் தயாரிக்கும் மசாலா திரைப்படங்கள் வெளியிடப்படும். நினைத்தே பார்க்கமுடியாத லாபத்தை, விநியோஸ்தர்கள், தயாரிப்பாளர்கள், மற்றும் திரையரங்கு உரிமையாளர்களுக்கு சம்பாதித்து கொடுத்து விடும்.  ருசி கண்ட பூனையாக நமது முதலாளிகள், இந்த இயக்குநர்களையும், நடிகர்களையும் சுற்றி வர தொடங்குவார்கள். நடிகர்களின் சம்பளமும் பல மடங்காக ஏற்றப்படும்.இப்படிதான் தொடர்ந்து நிகழ்ந்தது. எழுபத்தி எட்டில் மகேந்திரனின் முள்ளும் மலரும், எழுபத்தி ஒன்பதில் மகேந்திரனின் உதிரிப்பூக்கள் மற்றும் ருத்ரைய்யாவின் அவள் அப்படிததான் போன்ற படங்கள் ஒரு மாற்று சினிமாவிற்கான அடித்தளத்தை ஏற்படுத்தியிருந்த்து. ஆனால், எண்பதின் ஆரம்பத்திலேயே பாலஜியின் தயாரிப்பில் ரஜினி நடித்து வெளிவந்த பில்லா பெற்ற வணிக வெற்றி, மிகப் பெரிய சபலத்தை ஏற்படுத்தியது.

அதை தொடர்ந்து எண்பதில் வெளிவந்த மகேந்திரனின் ஜானி, பூட்டாத பூட்டுக்கள், நெஞ்சத்தை கிள்ளாதே போன்ற திரைப்ப்டங்கள் மாற்று சினிமாவின் வெற்றியை தக்க வைத்துக் கொள்ள போராடின. ஆனால் எண்பதின் இறுதியில் வந்த, ஏவி.எம்மின் வணிக படமான முரட்டுக்காளை பெற்ற வெற்றி, மசாலா சினிமாவின் கவர்ச்சியை கம்பிரமாக நிறுவியது.
பிறகும், எண்பத்தி ஒன்றில்(1981) வெளியான கமலின் ராஜபார்வை, மகேந்திரனின் நண்டு, ராபர்ட் ராஜசேகரனின் பாலைவனச் சோலை, ராம நாராயணனின் சுமை (ஆமாம், பிற்பாடு பாம்பை டைப் அடிக்க விட்ட அதே இயக்குநர் தான்!) போன்ற படங்களும், எண்பத்தி இரண்டில் (1982)வெளியான, மகேந்திரனின் அழகிய கண்ணே, மெட்டி,   பாலு மகேந்திராவின் மூன்றாம் பிறை(பொன்மேனி உருகியதை மன்னித்து விட்டால், நல்ல படமே!) போன்ற படங்கள் தமிழில் மாற்று படங்களுக்காக வாள் உயர்த்தி போராடி கொண்டிருக்கையில், எண்பத்தி இரண்டின் இறுதியில் (ஆகஸ்ட் 15) ஏவி.எம்மின் தயாரிப்பில், கமல்ஹாசனின் இடுப்பசைவில் வெளிவந்த சகலகலா வல்லவன் பெற்ற வெற்றி, மாற்று சினிமாவின் இடுப்பெலும்பை உடைத்து போட்ட்து.நல்ல சினிமாவிற்கான தேடலில், உள்ளே வந்த கமலஹாசனையே, மசாலா சினிமாவின் பக்கம் துரத்திய பெருமை, ஏ.வி.எம் நிறுவனத்தையே சாரும். ரஜினி படங்கள் பெற்ற வணிக வெற்றிகளும், சேர்ந்த ரசிக பட்டாளமும், கமலை சபலப்படுத்தியது.  எண்பத்தி இரண்டின் ஆரம்பத்திலேயே வந்து வசூலில் சாதனை செய்த ஏ.வி.எம் தந்த ரஜினியின் போக்கிரி ராஜா, நாம் போகிற வழி தவறோ என்ற சலனத்தை கமலுக்கு ஏற்படுத்தியதின் விளைவே சகலகலா வல்லவன்.இப்படியாக ரஜினிக்கும், கமலுக்கும் ஏற்பட்ட போட்டியை வெற்றிகரமாக, தமது கல்லாவை நிரப்பிக் கொள்ள பயன்படுத்தியது ஏ.வி.எம் நிறுவனம். தொடர்ந்து, 1983லும், கமல்ஹாசன் நடிக்க ஏ.வி.எம் நிறுவனம் தயாரித்த தூங்காதே தம்பி தூங்காதே வெளிவந்து, கமலுக்கு, கொஞ்சம் நஞ்சம் இருந்த கலை ஆர்வத்தையும் ஒழித்தது.

இந்த நேரத்தில் ரஜினி, விட்டகுறை தொட்டகுறையாக, மகேந்திரனின் நல்ல சினிமா மேல் இருந்த வைத்து மதிப்பில்,  தமது ஆரம்பக் கால நாடகம் ஒன்றை மகேந்திரன் இயக்கத்தில் எடுக்க விரும்பினார். அதுதான் கை கொடுக்கும் கை என்ற பெயரில் வெளிவந்த திரைப்படம். மகேந்திரன் தான் நினைத்தபடி படத்தை எடுக்க முடியாதபடி ரஜினியின் இமேஜ் வளர்ந்து இருந்தது. ரஜினிக்காக படத்தை இயக்க ஒப்புக்கொண்ட மகேந்திரன் பல்முனை தாக்குதல்களை தாக்குப்பிடிக்க முடியாமல், படத்தை எப்படியாவது முடித்தால் போதும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டார். படம், ரஜினி ரசிகர்களையும் திருப்திபடுத்தாமல், மகேந்திரனின் ரசிகர்களையும் திருப்திபடுத்த முடியாமல்,  தோல்வி கண்டது. திரும்பவும் ஏ.வி.எம் நிறுவனம், எண்பத்தி நாலின் இறுதியில், ரஜினியை வைத்து தமது ஆஸ்தான இயக்குநர் எஸ்.பி. முத்துராமனின் இயக்கத்தில் நல்லவனுக்கு நல்லவனை வெளியிட, படம் வரலாறு காணாத வெற்றியை பெற்றது. இதோடு, ரஜினியின் சோதனை முயற்சிகள் முடிவுக்கு வந்தன. அதற்குப் பிறகு தனக்குரிய வழி என்றுதான் முடிவு செய்ததை விட்டு ரஜினி வெளியே வரவில்லை.

இப்படியாக தமிழ் திரையுலகின் எல்லா நல்ல முயற்சிகளையும் பெரிய நிறுவனங்கள் தோற்கடித்தன. இந்த நிறுவனங்கள், சினிமாவை ஒரு தொழில் என்ற கண்ணோட்டத்திலேயே அணுகின. போட்ட முதலீட்டை வெற்றிகரமாக லாபத்துடன் திரும்ப எடுக்க, பாதுகாப்பான கதைக்களன்களையே தேர்வு செய்தன. தேவர் பிலிம்ஸின் சாண்டோ சின்னப்ப தேவ்ர், மெய்யப்ப செட்டியார் போன்றவர்களின் கலைவேட்கை மற்றும் நுட்பத்தை விட, தொழில் அறிவே மீண்டும், மீண்டும் புகழ்ந்துரைக்கப் பட்ட்து. இவற்றோடு போட்டியிட இயலாத, மற்ற தயாரிப்பாளர்களும், எதற்கு வம்பு என்று இவர்கள் போட்ட ராஜபாட்டையிலேயே பயணிக்க தொடங்கினர்.

தப்பித்தவறி வந்த ஒரு சில நல்ல படங்கள், பெரும்பாலும், சினிமா தெரியாத புதிய தயாரிப்பாளர்களாலேயே வெளிவந்தன. எண்பத்தி நாலின் இறுதியில், பெரிய முதலீட்டிற்க்கு வழியில்லாத தயாரிப்பாளர்களுக்கு, ஆபத்பாந்தவனாக இளையராஜா இருந்தார். ஆர். சுந்தர்ராஜன் இயக்கத்தில் வரிசையாக படங்கள் வர தொடங்கின. நான் பாடும் பாடல், வைதேகி காத்திருந்தாள் என்று தொடர்ந்து வந்த இந்த படங்களின் அச்சாணியே இளையராஜா தான். ஆரம்பத்தில் நல்ல கதையோடு வந்த படங்களுக்கு பக்கபலமாக இருந்த ராஜா, பெரிய கதைகள் இல்லாது வெளிவந்த, இந்தக் காலக்கட்ட்த்தில் படங்களின் முதுகெலும்பாய்  மாறிப் போனார். மதர்லேண்டு பிக்சர்ஸின் கோவைதம்பி, ராஜாவிற்கு நன்றிக்கடனாய், கட்அவுட் வைத்து அடுத்த பட்த்திற்க்கும் ராஜாவை உறுதி செய்துக் கொண்டார். எண்பத்தி ஏழு வரை தொடர்ந்த இந்த படங்களை, அதற்கு பிறகு, ராமராஜன் கைப்பற்றிக் கொண்டார். பெரிய கதையோ, நடிப்போ தேவைப்படாத இந்த படங்கள் வெற்றி பெற்றதற்கு ராஜாவின் இசையை தவிர வேறு எந்த நியாயமான காரணமும் இல்லை. ஒரு பட்த்திற்க்கு நான்கு அல்லது ஐந்து பாடல்கள் மிக இனிமையாக த்ந்தார் ராஜா. மக்கள் பாடல்களையே கேட்பதற்காகவே மீண்டும் மீண்டும் திரையரங்கிற்க்கு படையெடுத்தனர்.இப்படியாக தமிழர்களின் சினிமா ரசனை தட்டையாக வார்த்தெடுக்கப்பட்டு, ஏறக்குறைய மாற்று முயற்சிகள் முடிவடைந்துவிட்ட நிலையில், 87ன் இறுதியில் பாலுமகேந்திராவின் வீடு திரைப்படம் வந்தது. ஆனால் மசாலா படங்கள் மூலம், மக்களின் ரசனையை மழுங்கடித்து வைத்து இருந்த பெரிய நிறுவனங்களின் புண்ணியத்தில், வீடு, சந்தியா ராகம்  போன்ற மாற்று முயற்சிகளும் பெரிய வணிக வெற்றி பெறாது, துர்தர்ஸனின் மதிய நேர ஒளிப்பரப்போடு தமது ஆயுட்காலத்தை முடித்துக் கொண்ட்து. ஒரளவு வணிக வெற்றியையும் பெற்று அதே சமயம் நல்ல முயற்சிகளையும் தொடர்ந்ததில், பாரதிராஜாவிற்கு முதல் மரியாதை, வேதம் புதிது போன்ற நடுவாந்திர திரைப்படங்கள் சாத்தியப்பட்ட்து.