Sunday, October 14, 2012

எலி பத்தாயம் - மனம் கவர்ந்த திரைப்படங்கள்.

சுந்தரபாண்டியன் என்ற உலக மகா காவியத்தை பார்த்ததில் ஏற்பட்ட வாய்கசப்பு நீங்க, இன்று மீண்டும் ஒரு முறை, எலி பத்தாயம் என்ற மலையாள படத்தை பார்த்தேன். 1981ல் அடூர் கோபாலகிருஷ்னன் எழுதி இயக்கிய இந்த படம், அப்போது பல விருதுகளை வென்று குவித்தது. அழகான மெல்லிய ஒடை போல் நகரும் இந்த படத்தின் பலம், பெரும்பாலான இடங்களில் கையாளபடும் மெளனம். உலக திரைப்படங்களில் நிச்சயம் இந்த படத்திற்க்கு ஒரு சிறந்த இடம் உண்டு.



உண்ணி, நிலபிரபுத்துவ காலக்கட்டத்தின் எச்சம். வீட்டில் திருமணம் செய்துக் கொள்ளாமல், தனது இரு சகோதரிகளோடு வாழ்ந்து வருபவன். மூத்த சகோதரி மட்டும் திருமணம் செய்து கணவனுடன் வாழ்கிறாள்.  வாழ்ந்துக் கெட்ட ஒரு குடும்பத்தின், எல்லா கல்யாண குணங்களும் அவனுள் உள்ளது. இரு சகோதரிகளில் மூத்தவள் ராஜம்மா. திருமண வயது தாண்டியும், அண்ணனின் மந்ததனம் மற்றும் சுயநலத்தால் முதிர் கன்னியாகவே, அவனுக்கு சேவகம் செய்துக் கொண்டு வாழ்ந்து வருபவள்.
இளைய சகோதரி ஸ்ரீதேவி, இந்த புதிய காலக்கட்டத்தை ஏற்றுக் கொண்டு வெளியில் செல்ல துடிப்பவள். அந்த குடும்பத்தில் நிகழ்காலத்தின் துடிப்பாக இவள் மட்டுமே விளங்குகிறாள்.

படத்தின் முதல் சில காட்சிகளிலேயே, உண்ணியின் பாத்திரத்தை இயக்குனர் விளக்கிவிடுகிறார். திடிரென்று இரவு எலி கடித்து விட்டதாய் அலறி சகோதரிகளை எழுப்பி விடுகிறான். அவர்கள் எலியை துரத்துகிறார்கள். மறுநாள் காலை, இளைய சகோதரி மச்சி மேல் ஏறி, எலிப்பொறியை எடுக்கிறாள். எலிப்பத்தாயம் என்ற வார்த்தைக்கு எலிப்பொறி என்று அர்த்தம். படம் முழுவதும் இந்த எலிப்பொறியை கொண்டு எலிகளை பிடித்து கொண்டு போய் வீட்டருகே இருக்கும் ஒரு குளத்தில் முக்குகிறாள்.   

உண்ணி, மீசையில் உள்ள வெள்ளை முடிகளை தேடி தேடி வெட்டிக் கொள்கிறான். ராஜம்மா காப்பி கொண்டுவந்து தருகிறாள். ஒரு திருமணத்திற்க்கு செல்வதாக சொல்லி கிளம்பி வெளியே செல்கிறான். காலுக்கு செருப்பை கொண்டு வந்து போடுகிறாள் ராஜம்மா. சற்று தூரம் வெளியே நடந்து சென்று பார்க்கிறான். தெருவின் ஒரு பகுதியில் மழைப்பெய்து கணுக்கால் அளவு தண்ணிர் தேங்கி நிற்கிறது. அதில் கூட நடந்து செல்ல மனதில்லாமல், அலுப்புடன் வீட்டிற்க்கு திரும்பி வந்து விடுகிறான். அடுத்த காட்சியில், வீட்டு தோட்டதுக்குள், ஒரு மாடு புகுந்து செடிகளை தின்கின்றது. கண்ணெதிரிலேயே, உண்ணி ஈசிச்சேரில் உட்கார்ந்துக் கொண்டு பேப்பர் படிக்கிறான் . மாட்டை விரட்ட உட்கார்ந்த இடத்தை விட்டு அகலாமல், உஷ், உஷ் என்று சத்தம் எழுப்புகிறான். மாடு அவனை சட்டை செய்யாமல் செடிகளை தின்கிறது. அதை விரட்ட ஈசிச்சேரை விட்டு எழ வேண்டும் என்பதால், ராஜம்மே, ராஜம்மே என்று எந்த பதட்டமுமில்லாது மெதுவாக அழைத்து, அந்த மாட்டை காண்பிக்கிறான். அவள் வீட்டிற்க்கு வெளியே வந்து மாட்டை விரட்டி  செல்கிறாள். உண்ணி பேப்பர் படிப்பதை தொடர்கிறான். இதுதான் உண்ணி. தமக்கிருக்கும் வயலில் இருந்து நெல் வருகிறது. அதை கொண்டு வாழ்க்கை நடத்திக் கொண்டு, சகோதரிகளின் உழைப்பில், தனது உடலில் எந்த அலட்டலுமில்லாது, காலத்தை கழிக்கிறான். படம் முழுவதும் எதையும் அவன் மாற்ற முயல்வதே இல்லை. ஏன்,  உலகம் மாறிவிட்டது என்ற உணர்வே அவனுக்கு இல்லை.  படம் நடுவில், துபாய் சென்று உழைத்து பணம் சேர்த்த ஒருவன், பேண்ட் கூலிங்கிளாஸுடன், இவர்களை பார்க்க வீட்டிற்க்கு வருகிறான். அவனை பார்க்க, பார்க்க, உண்ணிக்கு எரிச்சல் வருகிறது.  எங்கே, அவனை பார்த்து தனது சகோதரிகள், தனது உழைப்பின்மையை உணர்ந்துக் கொள்வார்களோ என்று பதட்டபடுகிறான். அவனை அவமான படுத்தி விரட்டி விடுகிறான்.

                                 அடூர் கோபாலகிருஷ்னன்


ராஜம்மாவுக்கு வயது அதிகமாகிவிட்டதால், தெரிந்தவர் ஒருவர் இரண்டாம் தாரமாக மணமுடிக்க வரன் கொண்டு வருகிறார். உண்ணி அவரை கடிந்து விரட்டுகிறான். அவள் சென்று விட்டால் தம்மை சீராட்ட ஆள் ஏது?. இப்படி முழுக்க முழுக்க அவர்களை சார்ந்து, அவர்கள் இல்லை என்றால் வாழ முடியாது என்கின்ற பொறியில் தானே, விரும்பி மாட்டிக் கொள்கிறான், உண்ணி. இளைய சகோதரி ஸ்ரீதேவி, தனது காதலனுடன் வீட்டைவிட்டு வெளியேறிவிடுகிறாள். திருமணமான மூத்த சகோதரியோ, சொத்தில் பங்கு கேட்டு வந்து நிற்கிறாள். ராஜம்மா மட்டும் அவனுக்காக உழைத்து, உழைத்து எந்த கேள்விகளும் கேட்காது, தனது நிலையை நொந்துக் கொண்டு வாழ்க்கையை நகர்த்துகிறாள். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து, இந்த நரகத்தில் இருந்து எனக்கு விடுதலையே கிடையாதா என்று உண்ணியிடம் கேட்கிறாள். அவன் இந்த கேள்விக்கு எந்த பதில் சொல்வது என்று தெரியாமல் அவனுடைய வழக்கம் போல், சும்மா இருக்கிறான். கடைசியில் ராஜம்மா உடல் நலம் குன்றி, இருமி, இருமி, உயிரைவிடுகிறாள்.

ராஜம்மா இல்லாது வாழ முடியாமல், உண்ணி மனநிலை பாதிக்கப்பட்டு ஒரு இருண்ட அறைக்குள் ஒளிந்துக் கொள்கிறான். ஊர்காரர்கள் உள்ளே நுழைந்து, அவனை பிடித்துக் கொண்டு சென்று அதே குளத்தில் அமுக்குவதோடு படம் முடிகிறது. எலிப்பொறிக்குள் மாட்டிக் கொண்ட எலி போல் அவன் வாழ்கை முடிகிறது. என்னுடைய மனதில் மறக்க முடியாத ஒரு காவியமாக இந்த படம் தங்கிவிட்டது.

Thursday, October 11, 2012

பாலாவின் மழுப்பல்

ஆனந்தவிகடனில், பாலா பேட்டி வந்துள்ளது. அவன் இவன் பெரிய ஏமாற்றத்தை தந்தது. ஏன் இப்படி என்ற கேள்விக்கு,  "அவன் இவன்" உங்கள் பார்வையில் தான் தோல்வி. ஆனால், நான் விஷால் என்ற கலைஞனை வெளிகொண்டு வந்துள்ளேன். ஆர்யாவை, என் ஊருக்கு அழைத்து சென்று நடிக்க வைத்தேன். தயாரிப்பாளாருக்கு லாபம் சம்பாதித்துக் கொடுத்தேன். என்று பூசி மொழுகுகிறார். பாலாவிடம் இது போன்ற மழுப்பல்களை எதிர்பார்க்கவில்லை. அவன் இவன் பாலா படம் என்று நம்பி, பிளாக்கில் பணம் கொடுத்து, டிக்கெட் வாங்கி படம் பார்த்து, நொந்துப் போன ரசிகனைப் பற்றி எந்த கவலையும், இவருக்கு இல்லை. ஆனால், தயாரிப்பாளருக்கு லாபம் சம்பாதித்துக் கொடுத்தேன் என்கிறார். இதுதான் இவரது நேர்மையா? படம் ஓடாமல் சறுக்குவது எல்லாம் சகஜம், என்கிறார். படம், நன்றாக இருந்து, ஆனால் பெருவாரியான மக்களுக்கு பிடிக்காமல், ஓடாவிட்டால், அதை ஏற்றுக் கொள்ளலாம். இப்படி, ”அவன் இவன்” மாதிரியான ஒரு நேர்மையற்ற படைப்பை எடுத்தது குறித்து, இவருக்கு குறைந்தபட்ச குற்றஉணர்வு கூட இல்லை என்பதுதானே உண்மை. இல்லை, பாலா இன்னமும், இந்த படத்தை நல்ல படம் என்று நினைக்கிறாரா?



ஆமாம், தவறுதான், சறுக்கி விட்டது. என்று ஒப்புக்கொள்ளவிடாமல் எது தடுக்கிறது, இவர்களை.

பாலாவின் மற்ற படங்களை ஒப்பிடுகையில், நந்தா கூட தோல்விதான். ஆனால், அந்த படத்தில் ஒரு இயக்குனரின் உண்மையான உழைப்பிருந்தது. இங்கு நான் உண்மையான உழைப்பு என்று குறிப்பிடுவது, உடல் உழைப்பை அல்ல. ஒரு நல்ல படத்திற்க்கான முயற்சியும், தேடலும், நேர்மையும் நந்தாவில் இருந்தது. ”அவன் இவன்” திரைப்படம், முழுக்க முழுக்க, அவரது பழைய படங்களின் வெற்றியின் வழியாக, தாம் மக்களின் பல்ஸை கண்டுக்கொண்டதாக எண்ணிக் கொண்டு உருவாக்கிய உணர்வுகளற்ற ஒரு டெம்ப்ளேட் பொம்மை. இது பாலாவின் மனசாட்சிக்கு தெரியும். எனவேதான், அவரே, அதை ஜாலியாக செய்ததாக குறிப்பிடுகிறார்.

1. கொடூரமான வன்முறை கிளைமேக்ஸ்.

2. அதற்கு முந்திய காட்சியில் கிளைமேக்ஸ் வன்முறையை நியாயப்படுத்தும் விதத்தில், வில்லனின் உச்சக்கட்ட கொடுமைகள்.

3. அவ்வபோது, ஹிரோக்கள் குடித்து விட்டு லந்து கொடுக்கும் காட்சிகள்.

4. போகிறபோக்கில் நாலைந்து கெட்டவார்த்தைகள்.

5. ஒரு பிராமின் ஜட்ஜுடன் கூடிய கோர்ட் காட்சி.


என்று ஒரு டெம்ப்ளேட் வைத்துக் கொண்டு, ஜல்லியடிக்க நினைத்தால் இப்படிதான் முடியும். ஆனாலும், அதை ஒத்துக் கொள்ளும் மனதில்லாத பாலா, என்னுடைய மதிப்பில் இருந்தது சறுக்கித்தான் விட்டார். இந்த படத்தை ஏதோ ஆர்ட் பிலிம் ரேஞ்சுக்கு ஃபில் செய்து , பாலாவின் மேல் பாரத்தை போட்டுவிட்டு முண்டக்கட்டையாக நடித்த வி.குமாரை, நினைத்தால் தான் பரிதாபமாக இருக்கிறது.

Saturday, October 6, 2012

சுந்தரபாண்டியன் என்கின்ற உலக காவியம்

சுந்தரபாண்டியன் என்கின்ற சசிகுமார் நடித்த உலக மகா காவியத்தைப் பார்த்து தொலைத்தேன். முதல் 10 நிமிடங்களிலேயே குமட்டிக் கொண்டு வந்தது. டைட்டில் போடும்போதே மதுரையின் மகத்துவம் என்ற தலைப்பில் சசிக்குமார் பேசுகிறார். மதுரையில் நேதாஜிதான் தேசதந்தையாம். பிரபு மற்றும் கார்த்திக் மட்டும்தான் அபிமான நடிகர்களாம்.. (இருவருமே முக்குலத்தோர் என்று சொல்ல வேண்டியதில்லை).. ரொம்ப பாசக்காரங்களாம். ஆனால், கள்ளிக்காட்டில் கொலை செய்து நாய் நரிக்கு உணவாக போடுவார்களாம். படம் நடுவில் ஹிரோ என்ன இனம், இறந்து போகும் அப்புக்குட்டி என்ன சாதி என்பதெல்லாம் தெள்ள தெளிவாக நமக்கு விளக்கபடுகிறது. ஹிரோயினுக்கு திருமண நாள் தேதி பார்க்க ஒருத்தர் காலண்டரை எடுக்கிறார். அதில் தேவர் படம் போட்டிருக்கிறது. இந்த படத்திற்க்கு இது போன்ற காட்சிகள் என்ன பலத்தை கொடுக்கிறது? சாதியத்தை முன்னிறுத்தி இப்படி மானவாரியாக கொம்பு சீவி விடும் பொழப்பை எப்போது நிறுத்த போகிறார்கள், இந்த சினிமாகாரர்கள்?

அப்படி எல்லாம் நிறுத்திவிட முடியாது என்றால், உங்கள் படங்களை மதுரையில் மட்டும் ரிலிஸ் செய்து கல்லா கட்டிக் கொள்ளுங்கள்.மானஸ்தர்களே.

Tuesday, October 2, 2012

மந்தையில் சேராத ஆடுகள்..

அன்றைக்கும் சேகர் அண்ணன், வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்தார். கைலியும், திறந்த மார்பில் சுற்றிய துண்டுமாய், எப்போதும் போல் காபியை உறிஞ்சிக் கொண்டிருந்தார். நான் அவரது வீட்டைத் தாண்டிதான் எனது பிளஸ் ஒன் கெமிஸ்ட்ரி டியுசனுக்கு செல்ல வேண்டும். தினமும் அவர் வீடு வந்தவுடன், நிமிர்ந்து பார்ப்பேன். அழகாக சிரிப்பார். அது ஏதோ சடங்குக்காக சிரிப்பதாக இருக்காது. அவ்வளவு மகிழ்ந்து, கண்களை பார்த்து சிரிப்பார். என்னைவிட எவ்வளவோ வயது மூத்தவரான அவர், என்னை மதித்து சிரிப்பது, பெருமையாக இருக்கும். வேண்டுமென்றே மற்ற நண்பர்கள் வரும் வரை காத்திருந்து, அவர்களுடன் சைக்கிளில் ஒன்றாக சேகர் அண்ணா வீட்டை கடக்கும் போது, அண்ணாவை நிமிர்ந்து பார்ப்பேன். அவரும் சிரிப்பார். அது ப்ரெண்ட்ஸ் மத்தியில் ஒரு மதிப்பாய் இருந்தது.



சேகர் அண்ணன், பார்ப்பதற்க்கு அந்த காலத்து சரத்பாபு போலவே இருப்பார். ஒப்பிடுகையில், கொஞ்சம் நிறம் கம்மி. மற்றபடி நல்ல உயரம். சுருள் முடி. வரிசையான பற்கள். அவர்களது குடும்பம் ஊரில் நல்ல மதிப்பு பெற்று விளங்கியது. சேகரின் முதல் அண்ணன் சென்னையில் டாக்டர். இரண்டாவது அண்ணன், கிரிமினல் லாயராக உள்ளுரிலேயே இருந்தார். அனைவருக்கும் திருமணம் ஆகி, கூட்டுக் குடும்பமாக வசித்தனர். சேகர் அண்ணன் மட்டும் பள்ளிப் படிப்போடு நிறுத்திக் கொண்டார். ஆனால், எல்லா விளையாட்டுகளிலும் கில்லி. மிகச் சிறந்த பேஸ்கட் பால் ப்ளேயர். கிரிக்கெட்டில், ஆஃப் ஸ்பின் பவுலர். டவுன் கிரிக்கெட் கிளப்புக்கு அவர்தான் எல்லாம். 

பள்ளிப்படிப்பு முடிந்து ரிசல்ட்க்காக காத்திருந்த போதுஅவருடைய, வீட்டிற்க்கு பின்புறம் உள்ள ஸூகூல் கிரவுண்டில், மாட்ச் விளையாட போவோம். அவரும், எப்போதாவது சேர்ந்து விளையாடுவார். சேகர் அண்ணன், வயது வித்தியாசம் பாராமல், அனைவரிடமும் மென்மையாக பேசுவார். அவர் வீட்டுக்கு அருகில் வசித்த, ஒன்பதாவது வகுப்பு பையன் வினோத், அவருடன் ஏதோ, சக வயது நண்பன் போல பேசி சிரிப்பதும், அவருடைய சட்டைப் பையில் இருந்து உரிமையுடன் பணம் எடுத்து புரோட்டா சாப்பிட செல்வதும் எனக்கு வியப்பையே அளித்தன.


அன்றும் அப்படிதான், எங்கள் டீமில் சேர்ந்து விளையாண்டார். நாங்கள் பேட்டிங். சதிஷ் டீம் பவுலிங். நாங்கள் ஸ்கோர் குறித்துக் கொண்டிருந்தோம். கிடைக்கிற கேப்பில் எல்லாம் ஸ்கோர் ஏற்றுவதில் மன்ன்ன் என்று அறியப்பட்டதால்நான் சைக்கிள் கேரியரில் உட்கார்ந்துக் கொண்டு ரன் ஏற்றி டீமின் வெற்றிக்காக உழைத்துக் கொண்டிருந்தேன். சேகர் அண்ணன், சைக்கிள் அருகில் வந்து, சீட்டில் ஒரு கையை வைத்து குனிந்தபடி, ஸ்கோர் என்ன? என்றார். அப்படி அவர் கேட்ட போது, மற்றொரு கை ஸ்கோர் புத்தகத்தை தொடுவது போல், எனது தொடைகளின் நடுவில் வருடியது. ஷாக் அடித்தது போல் இருந்தது, எனக்கு. தெரியாமல் பட்டிருக்குமோ, என்ற குழப்பம். சற்று நகர்ந்து உட்கார்ந்தேன். திரும்பவும், தொட்டார். இந்த முறை சற்று நெருக்கமாக வந்து தோளில் கைகளை சுற்றியபடி. அவசரமாக, அப்பா கடைக்கு போக சொன்னார், மறந்து விட்டேன் என்று சொல்லியபடி சைக்கிளை எடுத்துக் கொண்டு வீட்டை நோக்கி ஓடினேன்.

வீட்டிற்க்கு வந்த பின்பும், குமட்டலாக இருந்தது. ஏன், சேகர் அண்ணன் இப்படி ஆக வேண்டும், என்று ஒரு பக்கம் வருத்தம். மறுபக்கம், பயங்கர கோபமாக வந்தது. பிறகு, மெதுவாக நண்பர்களிடம் விசாரித்த போது, கதை, கதையாக சொன்னார்கள். பீர் வாங்கி கொடுத்து விடலைப் பையன்களை அவர் வளைத்து விடுவதாகவும், அதனால்தான் அவருக்கு திருமணம் ஆகவில்லை என்றும், உண்மை பாதி, பொய் பாதியாக பல கதைகள். எங்கள் குழுவிற்க்கே பல சம்பவங்களை சொன்னது சதிஷ்தான்.

நான் அதற்க்கு பிறகு, அவர் வீட்டு பக்கம் கூட போவதில்லை.. பிறகு ஒரு நாள், சேகர் அண்ணனுக்கு திருமணம் என்றார்கள். கோவிலுக்கு போன போது, அந்த புதுப்பெண்ணை பார்த்தேன். அழகாக இருந்தார். நிறைய வெட்கப்பட்டார்.  சில நாட்களில் கழித்து திரும்பவும் அந்த கிரவுண்ட்க்கு விளையாட சென்றோம். கிரவுண்டில் இருந்து பார்த்தால், சேகர் அண்ணனின் வீடு தெரியும். சேகர் அண்ணனின் மனைவி இப்போதெல்லாம் நிறைய மாறியிருந்தார். அதிகாரமான குரலில் அவர் ஆட்களுக்கு ஆர்டர் போடுவதும், ஒன்றுமேயில்லாத சின்ன விஷயங்களுக்கு கூட கடுமையாக திட்டுவதும், கேட்கும்.

சிறிது நாட்கள் கழித்து, திடிரென்று ஒரு நாள், சதிஷ் வந்தான். தெரியும்ல்லே.. நேத்து சேகர் அண்ணனை, வுட்டு ரவுண்டு கட்டிட்டானுங்க, சாரதா காலனி பசங்க. சாந்தி தியேட்டர்லே செகண்ட் ஷோ போய்ட்டு, பக்கத்துலே உள்ளவனை தடவியிருக்காரு. அவன், சாரதா காலனி பசங்களை கொணாந்து, பொளந்துட்டான். செம அடியாம். என்றான்.

அடுத்த நாள், வேண்டுமென்றே அவர் வீட்டுப் பக்கமாக சென்றேன். வெளியில் உட்காந்திருந்தார் சேகர் அண்ணன். நெற்றி ஒரம் பிளாஸ்திரி. கண்கள் கறுத்து கன்னி போய், பரிதாபமாக இருந்தது. என்னை பார்த்தவுடன், எப்பவும் போல் குழந்தை போல் மலர்ந்து சிரித்தார்.