அன்றைக்கும் சேகர் அண்ணன், வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்தார். கைலியும், திறந்த மார்பில் சுற்றிய துண்டுமாய், எப்போதும் போல் காபியை உறிஞ்சிக் கொண்டிருந்தார். நான் அவரது வீட்டைத் தாண்டிதான் எனது பிளஸ் ஒன் கெமிஸ்ட்ரி டியுசனுக்கு செல்ல வேண்டும். தினமும் அவர் வீடு வந்தவுடன், நிமிர்ந்து பார்ப்பேன். அழகாக சிரிப்பார். அது ஏதோ சடங்குக்காக சிரிப்பதாக இருக்காது. அவ்வளவு மகிழ்ந்து, கண்களை பார்த்து சிரிப்பார். என்னைவிட எவ்வளவோ வயது மூத்தவரான அவர், என்னை மதித்து சிரிப்பது, பெருமையாக இருக்கும். வேண்டுமென்றே மற்ற நண்பர்கள் வரும் வரை காத்திருந்து, அவர்களுடன் சைக்கிளில் ஒன்றாக சேகர் அண்ணா வீட்டை கடக்கும் போது, அண்ணாவை நிமிர்ந்து பார்ப்பேன். அவரும் சிரிப்பார். அது ப்ரெண்ட்ஸ் மத்தியில் ஒரு மதிப்பாய் இருந்தது.
சேகர் அண்ணன், பார்ப்பதற்க்கு அந்த காலத்து சரத்பாபு போலவே இருப்பார். ஒப்பிடுகையில், கொஞ்சம் நிறம் கம்மி. மற்றபடி நல்ல உயரம். சுருள் முடி. வரிசையான பற்கள். அவர்களது குடும்பம் ஊரில் நல்ல மதிப்பு பெற்று விளங்கியது. சேகரின் முதல் அண்ணன் சென்னையில் டாக்டர். இரண்டாவது அண்ணன், கிரிமினல் லாயராக உள்ளுரிலேயே இருந்தார். அனைவருக்கும் திருமணம் ஆகி, கூட்டுக் குடும்பமாக வசித்தனர். சேகர் அண்ணன் மட்டும் பள்ளிப் படிப்போடு நிறுத்திக் கொண்டார். ஆனால், எல்லா விளையாட்டுகளிலும் கில்லி. மிகச் சிறந்த பேஸ்கட் பால் ப்ளேயர். கிரிக்கெட்டில், ஆஃப் ஸ்பின் பவுலர். டவுன் கிரிக்கெட் கிளப்புக்கு அவர்தான் எல்லாம்.
பள்ளிப்படிப்பு முடிந்து ரிசல்ட்க்காக காத்திருந்த போது, அவருடைய, வீட்டிற்க்கு பின்புறம் உள்ள ஸூகூல் கிரவுண்டில், மாட்ச் விளையாட போவோம். அவரும், எப்போதாவது சேர்ந்து விளையாடுவார். சேகர் அண்ணன், வயது வித்தியாசம் பாராமல், அனைவரிடமும் மென்மையாக பேசுவார். அவர் வீட்டுக்கு அருகில் வசித்த, ஒன்பதாவது வகுப்பு பையன் வினோத், அவருடன் ஏதோ, சக வயது நண்பன் போல பேசி சிரிப்பதும், அவருடைய சட்டைப் பையில் இருந்து உரிமையுடன் பணம் எடுத்து புரோட்டா சாப்பிட செல்வதும் எனக்கு வியப்பையே அளித்தன.
அன்றும் அப்படிதான், எங்கள் டீமில் சேர்ந்து விளையாண்டார். நாங்கள் பேட்டிங். சதிஷ் டீம் பவுலிங். நாங்கள் ஸ்கோர் குறித்துக் கொண்டிருந்தோம். கிடைக்கிற கேப்பில் எல்லாம் ஸ்கோர் ஏற்றுவதில் மன்ன்ன் என்று அறியப்பட்டதால், நான் சைக்கிள் கேரியரில் உட்கார்ந்துக் கொண்டு ரன் ஏற்றி டீமின் வெற்றிக்காக உழைத்துக் கொண்டிருந்தேன். சேகர் அண்ணன், சைக்கிள் அருகில் வந்து, சீட்டில் ஒரு கையை வைத்து குனிந்தபடி, ஸ்கோர் என்ன? என்றார். அப்படி அவர் கேட்ட போது, மற்றொரு கை ஸ்கோர் புத்தகத்தை தொடுவது போல், எனது தொடைகளின் நடுவில் வருடியது. ஷாக் அடித்தது போல் இருந்தது, எனக்கு. தெரியாமல் பட்டிருக்குமோ, என்ற குழப்பம். சற்று நகர்ந்து உட்கார்ந்தேன். திரும்பவும், தொட்டார். இந்த முறை சற்று நெருக்கமாக வந்து தோளில் கைகளை சுற்றியபடி. அவசரமாக, அப்பா கடைக்கு போக சொன்னார், மறந்து விட்டேன் என்று சொல்லியபடி சைக்கிளை எடுத்துக் கொண்டு வீட்டை நோக்கி ஓடினேன்.
வீட்டிற்க்கு வந்த பின்பும், குமட்டலாக இருந்தது. ஏன், சேகர் அண்ணன் இப்படி ஆக வேண்டும், என்று ஒரு பக்கம் வருத்தம். மறுபக்கம், பயங்கர கோபமாக வந்தது. பிறகு, மெதுவாக நண்பர்களிடம் விசாரித்த போது, கதை, கதையாக சொன்னார்கள். பீர் வாங்கி கொடுத்து விடலைப் பையன்களை அவர் வளைத்து விடுவதாகவும், அதனால்தான் அவருக்கு திருமணம் ஆகவில்லை என்றும், உண்மை பாதி, பொய் பாதியாக பல கதைகள். எங்கள் குழுவிற்க்கே பல சம்பவங்களை சொன்னது சதிஷ்தான்.
நான் அதற்க்கு பிறகு, அவர் வீட்டு பக்கம் கூட போவதில்லை.. பிறகு ஒரு நாள், சேகர் அண்ணனுக்கு திருமணம் என்றார்கள். கோவிலுக்கு போன போது, அந்த புதுப்பெண்ணை பார்த்தேன். அழகாக இருந்தார். நிறைய வெட்கப்பட்டார். சில நாட்களில் கழித்து திரும்பவும் அந்த கிரவுண்ட்க்கு விளையாட சென்றோம். கிரவுண்டில் இருந்து பார்த்தால், சேகர் அண்ணனின் வீடு தெரியும். சேகர் அண்ணனின் மனைவி இப்போதெல்லாம் நிறைய மாறியிருந்தார். அதிகாரமான குரலில் அவர் ஆட்களுக்கு ஆர்டர் போடுவதும், ஒன்றுமேயில்லாத சின்ன விஷயங்களுக்கு கூட கடுமையாக திட்டுவதும், கேட்கும்.
சிறிது நாட்கள் கழித்து, திடிரென்று ஒரு நாள், சதிஷ் வந்தான். தெரியும்ல்லே.. நேத்து சேகர் அண்ணனை, வுட்டு ரவுண்டு கட்டிட்டானுங்க, சாரதா காலனி பசங்க. சாந்தி தியேட்டர்லே செகண்ட் ஷோ போய்ட்டு, பக்கத்துலே உள்ளவனை தடவியிருக்காரு. அவன், சாரதா காலனி பசங்களை கொணாந்து, பொளந்துட்டான். செம அடியாம். என்றான்.
அடுத்த நாள், வேண்டுமென்றே அவர் வீட்டுப் பக்கமாக சென்றேன். வெளியில் உட்காந்திருந்தார் சேகர் அண்ணன். நெற்றி ஒரம் பிளாஸ்திரி. கண்கள் கறுத்து கன்னி போய், பரிதாபமாக இருந்தது. என்னை பார்த்தவுடன், எப்பவும் போல் குழந்தை போல் மலர்ந்து சிரித்தார்.
No comments:
Post a Comment
Write your valuable comments here friends..