கூடங்குளத்தை எதிர்க்கிறீர்கள், ஆனால், சில்லறை வியாபாரத்தில் அந்நிய முதலீட்டை ஆதரிக்கிறீர்களே? என்கிறார்கள்.. இது என்னய்யா கதையா இருக்கு? அரசு எதை செய்தாலும் எதிர்க்க வேண்டும். அப்போதுதான் முற்போக்குவாதியா? ஒரு தெளிவு வேண்டாமா? கூடங்குளம் அணு உலையை ஏன் எதிர்க்கிறேன் என்று ஒரு பதிவே போட்டு விளக்கியாகி விட்டது. ரீடைல் வியாபாரத்தில் ஏன் அந்நிய முதலீட்டை ஆதரிக்கிறேன் என்ற எனது புரிதலை கிழே விளக்குகிறேன்.
1. முதலில், ரீடைல் வியாபாரத்தில் முழுக்க முழுக்க அந்நிய முதலீடு என்பதே தவறு. இப்போது எப்படி, கார் மற்றும் மோட்டார் தொழிலில், அந்நிய -இந்திய கூட்டு முதலீடு செயல்படுகிறதோ அப்படிதான் ரீடைல் வியாபாரத்திலும், அந்நிய முதலீடு என்பது 51 சதவிகிதம்தான் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால், எந்த அந்நிய நிறுவனமும், உள்நாட்டு நிறுவனத்துடன் இணைந்துதான் இங்கு தொழில் செய்யமுடியும். 1991க்கு முன்பு நம் நாட்டில் வெறும் அம்பாசிடர் காரையும், ஃபியட்டையும் விட்டால் வேறு வழி கிடையாது. இன்றோ உலகத்தில் உள்ள அனைத்து பிராண்ட் கார்களும் இங்கு கிடைக்கிறது. இதை வாங்கி பயன்படுத்துபவர்கள் பெரும்பாலும் நடுத்தர வர்க்கம் தானே. இதே முறையில் ரீடைல் வியாபாரத்திலும், தரமான பொருட்களின் வருகையால், நேரடியாக பயன்பெற போவது நடுத்தர வர்க்கமே.
2. விவசாய குடும்பத்தை சேர்ந்தவன் என்ற முறையில், விவசாயிகள், இந்த வியாபாரிகளிடம் படும் துன்பத்தை நேரில் கண்டு உணர்ந்தவன் நான். விவசாயிகளை போல இந்த நாட்டில் பாவப்பட்ட மனிதர்கள் வேறு யாரும் கிடையாது. கஷ்டப்பட்டு நாளெல்லாம் உழைத்து, தாங்கள் விளைவித்த பொருட்களை விற்க, இந்த உள்ளூர் முதலாளிகளிடம் வந்து நின்றால், ஆயிரம் நொட்டாரம் சொல்லி, தட்டிக்கழித்து, கடைசியில் வேண்டா வெறுப்பாக வாங்கி கொள்வது போல் நடித்து, அடிமாட்டு விலைக்கு வாங்கி, கொள்ளை லாபம் வைத்து, நடுத்தர வர்க்கத்தின் தலையில் மிளகாய் அரைத்து வருகிறார்கள். அன்னிய முதலீட்டின் மூலம், விவசாயிகளின் பொருட்களுக்கு தரமான சந்தை உருவாகும். நல்ல விலை கிடைக்கும். தரகர்கள் அற்ற நேரடி வியாபாரம் நிகழும். இதன் மூலம் நேரடியாக பயன்பெற போவது, விவசாயிகளும், நடுத்தரவர்க்க மக்களுமே.
3. அன்னிய முதலீட்டினால், நடைபாதை வியாபாரிகள் பாதிக்கபடுவார்கள் என்கின்ற வாதம் மிகவும் அபத்தமானது. சீனாவில் வால்மார்ட் இருக்கிறது. நடைபாதை கடைகளும் இயங்கி கொண்டுதான் இருக்கிறது. இதை ஆறு மாத்திற்க்கு ஒரு முறை சீனா செல்லும் நான் நேரடியாக பார்க்கிறேன். அங்கு எந்த பாதிப்பும் இல்லை. இரு வகை கடைகளுக்கும் அங்கு வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். நம்மைப் போலவே மக்கள் தொகையை கொண்ட, சீனாவைதான் நாம் உதாரணமாக கொள்ள வேண்டும். எனவே இந்தியாவிலும் இது சாத்தியமே.
4. இந்தியாவில் பெரும்பாலான சில்லறை வியாபாரிகள், ஒழுங்காக வரி கட்டுவதில்லை. இவர்கள் அனைவரும் ஒன்றும் வறுமைக் கோட்டுக்கு கிழ் தவிக்கும் மக்கள் இல்லை. இதை படிக்கும் அனைவருமே கொஞ்சம், உங்கள் ஊரில் மளிகை கடை வைத்திருக்கும் நபர்களின் பொருளாதர வசதியை, சற்றே எண்ணி பாருங்கள். இவர்கள் இப்படி வசதியாக வாழ்ந்தாலும், இவர்கள் கடையில் வேலைப் பார்க்கும் அழுக்கு பொன்வண்டு/லைப்பாய் பனியன் போட்ட தொழிலாளிகளின் நிலைமை எப்படி உள்ளது? முழுக்க முழுக்க அவர்களது உழைப்பை உறிஞ்சித் தள்ளும் இந்த முதலாளிகள், அவர்களுக்கு அளிப்பது என்னவோ வெட்க்கேடான நாள் சம்பளமே. எந்த சங்கமும் இன்றி, வசதியும் இன்றி வருடக்கணக்கில் அல்லல்பட்டு கொண்டிருக்கும் இந்த தொழிலாளிகளின் எண்ணிக்கையைத்தான் இப்போது இந்த முதலாளிகள், அன்னிய முதலீட்டின்னால் பாதிக்கபடுவோர் என்று கணக்கு காட்டி எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அவர்கள் எப்போது அய்யா வாழ்ந்தார்கள்? இப்போது பாதிக்கபடுவதற்க்கு? இது வெட்ககேடு இல்லையா?
5. தொழிலாளிகள், விவசாயிகள், நடுத்தரவர்க்கம் என்று அனைவருக்கும் இந்த அன்னிய முதலீட்டினால் நன்மையே. எனவேதான் நான் அன்னிய முதலீட்டினை ஆதரிக்கிறேன். இதுவரை அந்நிய முதலீட்டிற்க்கு எதிராக, பொருட்படுத்தும்படியான கருத்தையோ, கட்டுரையையோ நான் காணவில்லை. எல்லாம், சும்மா படங்காட்டும் பயமுறுத்தும் வெற்று வதந்திகளே. அப்படி ஒரு வேளை நான் சிந்தித்திராத தரப்போ/உண்மைகளோ இருக்குமானால், எனது கருத்தை மறுபரிசிலினை செய்ய தயாராக இருக்கிறேன்.
No comments:
Post a Comment
Write your valuable comments here friends..