அணு உலைகளில், பெரும்பாலும் எரிப்பொருளாக, யுரேனியம் பயன்படுத்தபடுகிறது. யுரேனிய துகளில் உள்ள அணு, புரோட்டன் மற்றும் நியுட்ரான் துகள்களால் ஆனது. அணு உலையில், நியுட்ரான் மிக வேகமாக செலுத்தப்படும்போது, அவை யுரேனியத்தில் உள்ள அணுவில் மோதி, அணுவை பிளக்கின்றன். அவ்வாறு, அணு பிளக்கப்படும்போது, அதிலிருந்து மேலும் நியுட்ரான்கள் வெளியாகின்றன. வெளியேறும் நியுட்ரான்கள், யுரேனியத்தில் உள்ள மற்ற அணுக்களை பிளந்து, நியுட்ரான்களை வெளியேற செய்கிறது. இவ்வாறு தொடர் விளைவு (Chain Reaction – Nuclear fission) உருவாக்கப்பட்டு, மாதக்கணக்கில், அவை தொடர்ந்து வெப்பத்தை உமிழ்கின்றது. அவ்வாறு உமிழ்ப்படும் வெப்பத்தைக் கொண்டு, நீராவி உருவாக்கப்பட்டு, அந்த நீராவியின் மூலம், டர்பைன் சுற்றப்பட்டு, சக்தி உருவாக்கபடுகிறது. அணுவை பிளந்து, மின்சாரம் தயாரிக்கபடும் இந்த முறை, முதன்முதலாக பயன்பாட்டுக்கு வந்தது, 1957ல் தான். 1957ல் தொடங்கி, 2011 வரையினாலான இந்த ஐம்பது ஆண்டுகளில், இதுவரை மூன்று முறை அணு உலை விபத்துகள் நடந்துள்ளன. Three Mile island (1979), செர்னொபில் (1986), ஃபுகுஷிமா (2011) என்ற இந்த மூன்று விபத்துகளுமே, அறிவியல் வளர்ச்சியில் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள, அமெரிக்கா, ரஷ்யா, மற்றும் ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளிலேயே நிகழ்ந்துள்ளது. இந்த விபத்துகள் நிகழ்ந்த போது, இந்த கட்டுபடுத்தமுடியாத தொடர் விளைவை நிறுத்த முடியாமல், மூன்று பெரிய நாடுகளுமே, விளைவுகளை சமாளிக்க, தலையால், தண்ணீர் குடித்தன என்பதுதான் வரலாறு.
உண்மை நிலை இவ்வாறிருக்க, கூடங்குளம் அணு உலையை எதிர்ப்பவர்கள், ஏதோ பொழுது போகாமல், விளம்பரத்திற்க்காக எதிர்ப்பதாக, அர்த்தம் செய்துக் கொள்கிறார்கள் ஒரு சில ஃபேஸ்புக் விஞ்ஞானிகள். அதிலும், ஒரு விஞ்ஞானி கேட்டுள்ளார். புகுஷிமா அணு உலை விபத்தில் ஒருவர் கூட சாகவில்லையே, பிறகு ஏன் கூடங்குளத்தில் அணு உலையை நிறுவக் கூடாது என்று. உஸ்..யப்பா.., எப்படி இவர்களுக்கு புரிய வைப்பது? அய்யா , புகுஷிமா விபத்தால், ஒருவர் கூட இறக்கவில்லை என்று இப்போது எப்படி, சொல்ல முடியும்? அணு உலை விபத்து என்றால் என்ன, அணுகுண்டு போல போட்டதும், ஒரு ஆயிரம் பேர் சாகும் நிகழ்வா? பல தலைமுறைகளுக்கு, காவு வாங்கும் பூதம் அய்யா அது. இந்த அணு உலை விபத்தில் மிக அபாயகரமான விஷயமே, விளைவுகளை சரியாக யாராலும் உடனடியாக சொல்ல இயலாது என்பதுதான். 1986ல் ரஷ்யாவின் செர்னோபில் பகுதியில் அணு உலை விபத்து நிகழ்ந்த பின், அடுத்த பத்து ஆண்டுகளில், எத்தனை பேர் கேன்சர் வந்து இறந்தார்கள். இருபது ஆண்டுகள் கழித்து, எத்தனை பேர். முப்பது ஆண்டுகள் கழித்து, எத்தனை பேர். எத்தனை குழந்தைகள், ஊனமாக, பிண்டமாக பிறந்து, இறந்தன. இப்படி தொடர் கணக்கெடுப்பு செய்தே, அதன் முழு தாக்கத்தையும் பதிவு செய்ய முடியும். இப்படி கணக்கெடுத்து, இதுவரை, நாலாயிரம் உயிர்களை செர்னோபில் காவு வாங்கியுள்ளதாக அறிவித்துள்ளார்கள். இன்னும் முடியவில்லை கணக்கு. இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன் நடந்த செர்னோபில் நிகழ்வின் கோரத்தையே, இன்னும் கணக்கிட்டு மாளாத போது, இந்த விஞ்ஞானி, 2011ல் நிகழ்ந்த ஃபுகுஷிமா அணு உலை வெடிப்பில், ஒருவர் கூட சாகவில்லையே, என்கிறார். இது என்ன, சென்னை- திருச்சி நெடுஞ்சாலையில் தினந்தோறும் நிகழும் சாலை விபத்தா? மார்ச்சுவரியில் உட்கார்ந்து பிணத்தை எண்ணி சொல்வதற்க்கு. உடனடியாக சாவதை விட, இப்படி செத்து, செத்து பிழைக்கும் செண்டாய் பகுதி மக்களை கேளுங்கள். அவர்கள் சொல்வார்கள் அதன் வலியை, கோரத்தை.
மேலும், சாவு மட்டும்தான் மனிதச் சமுதாயத்தை பாதிக்க கூடிய நிகழ்வா? ஃபுகுஷிமா நிகழ்வால், இதுவரை ஒரு லட்சத்தி அறுபதானாயிரம் பேர் தங்களது வாழ்விடத்தை விட்டு வேறு இடத்திற்க்கு துரத்தப்பட்டுள்ளனரே.. இது அவலம் அல்லவா? தலைமுறை, தலைமுறையாய் வாழ்ந்த தங்களது பூமியை விட்டு, வேரோடு பிடிங்கி எறியப்படுவது, எத்தனை கொடுமை என்பதை மாண்புமிகு நாரயணசாமியின் சீடர்கள் அறிவார்களா? இல்லை, இதை எல்லாம் அறிவியலின் பக்கவிளைவுகள்தான் என்று சகித்துக் கொள்ள சொல்லி, நமக்கு பாடம் எடுப்பார்களா? இவர்கள் குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்து, வறுத்த முந்திரியை சுவைக்க, கூடங்குளத்து மீனவன், தனது உயிரையும், உடமையையும் பணயம் வைக்க வேண்டுமாம்.. அடங்கொக்கமக்கா..
அணு உலை விபத்து நடந்த ஃபுகுஷிமா பகுதியில், ரேடியேஷன் காற்றில் கலந்துவிட்டது எனவே, 20 கிலோ மீட்டர் சுற்றளவில் வசிக்கும் மக்கள் உடனடியாக, தங்கள் இருப்பிடத்தை விட்டு, வெளியேற வேண்டும். இருபது கிலோ மீட்டரில் இருந்து முப்பது கிலோ மீட்டர் பகுதியில் வசிக்கும் மக்கள் வீட்டை விட்டு, வெளியே வரக்கூடாது. 200 கிலோ மீட்டரில் இருந்து 300 கிலோ மீட்டர் தூரத்தில் வசிக்கும் மக்கள், மாஸ்க் அணிந்து நடமாடுங்கள் என்று தொலைக்காட்சியில் தொடர்ந்து இரவு பகலாக, சொல்லப்பட்டு, ஏறக்குறைய ஒரு மாதம் கைகுழந்தையை வைத்துக் கொண்டு, என்ன செய்வது என்று தெரியாமல், தவித்ததுண்டா? அப்படி தவித்தவர்கள், உலக பொருளாதாரத்தில், இரண்டாவது பெரிய நாட்டின் தலைநகர், டோக்யோ நகர மக்கள் என்று சொன்னால், அதுவும் ஒராண்டுக்கு முன்தான் நடந்தது என்று சொன்னால், அதன் கையறு நிலையை உங்களால் புரிந்துக் கொள்ள முடியுமா?
இதோடு விடவில்லை, அந்த விஞ்ஞானி. அவர் கூறுகிறார்..மார்ச் 2011ல் நடந்த ஃபுகுஷிமா விபத்தில், அறிவியல் போராடி வென்றது என்று.. அட, உங்க அராஜகத்துக்கு ஒரு அளவில்லையா? அது, என்னத்தை போராடி வென்றுச்சுன்னு எங்களுக்குதான் சாமி தெரியும். நிகழ்ந்த கொடூரம் என்ன, அதன் விளைவுகள் என்ன என்பது தெரிந்தும், அதை சரியாக மக்களுக்கு தெரிவிக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டு அதனால், அப்போதைய ஜப்பான் நாட்டு பிரதமர் நவட்டோ கான் ஆகஸ்ட் 2011ல் பதவி விலக நேர்ந்தது. பிறகு அந்த அணு உலையின் உரிமையாளர்களான டெப்கோ (TEPCO) நிர்வாகிகள், தங்களது நம்பகதன்மையை நிருபிக்க, சம்பவம் நிகழ்ந்த போது தமக்கும், பிரதமர் அலுவலுகத்திற்க்கும் நிகழ்ந்த சில உரையாடல் பதிவுகளை வெளியிட்டார்கள். அதிலிருந்து தெரிவது என்னவென்றால், டெப்கோ ஆசாமிகளூக்கே அப்போது என்ன நிகழ்ந்தது, அடுத்து என்ன செய்வது என்பது தெரியவில்லை என்பதைதான்.
2011 மார்ச் மாதம் விபத்து நிகழ்ந்து, டிசம்பர் 2011ல் ஒரு வழியாக ஃபுகுஷிமா ரியாக்டர்கள் ஒரு பாதுகாப்பான நிலைக்கு வந்துவிட்டதாக ஜப்பான் அரசாங்கம் அறிவித்தது. ஆனால், முழுமையாக அந்த அணுஉலைகளை மூடுவதற்க்கு (Cold Shutdown), இன்னும் நாற்பது ஆண்டுகள் தேவைபடும், என்று அறிவித்துள்ளது. பயன்படுத்தப்பட்ட யூரெனிய எரிப்பொருள் கோல்களை எப்படி பாதுகாப்பாக எடுத்து, பத்திரப்படுத்துவது என்று இன்றும் புரியாமல் திண்டாடி வருகிறது. அதிக வெப்பத்தில் உருகி, உலையின் அடிப்பகுதியில் தங்கிவிட்ட, இந்த கோல்களை வெளியே எடுக்க சிறப்பு ரோபோக்கள் வேண்டுமாம். மேலும் மூன்று ரியாக்டர்களிலும் ஒரே நேரத்தில் இதை செய்ய வேண்டும். இதற்க்கு முன்பு, இதை செய்த அனுபவம் யாருக்கும் இல்லை என்பதால், எப்படி செய்வது என்று தெரியாமல் யோசித்து வருகிறது. ஜப்பானில் முப்பது கிலோ மீட்டர் சுற்றளவில் ஒரு லட்சத்தி அறுபதனாயிரம் பேர்தான் இருந்தார்கள். அவர்களால் இன்று வரை தங்களது பகுதிக்கு திரும்ப முடியவில்லை. ஒரு திறந்தவெளி மியுசியமாக, குழந்தைகள் விட்டு சென்ற விளையாட்டு பொருள்கள், தொலைக்காட்சி பெட்டிகள், யாரும் அமராமல் காத்து கிடக்கும் நாற்காலிகள் என்று, இன்றும் அவை கதிர் வீச்சில் ஜொலித்து கொண்டிருக்கிறது. இதுதான், அறிவியல் தொழில்நுட்பத்தில் தலை சிறந்து விளங்கும் ஜப்பானின் நிலைமை. இங்கே என்னவென்றால், ஃபேஸ்புக் விஞ்ஞானிகள், ஃபுகுஷிமா நிகழ்வை, அறிவியல் போராடி வென்றது என்கிறார்கள். கூடங்குளத்தின் அணு உலைக்கு 30 கிலோ மீட்டர் சுற்றளவில் குறைந்த பட்சம் பதினைந்து லட்சம் மக்கள் வசிக்கிறார்கள் அய்யா. ஒரு விபத்து நிகழ்ந்தால், அவர்கள் நிலை என்ன? கொஞ்சம் மனிதாபிமானத்தோடு சிந்தியுங்கள்.
ஃபுகுஷிமா விபத்து நிகழ்ந்து, ஏறக்குறைய, ஒராண்டுக்கு மேல் ஆன சூழ்நிலையிலும், அந்த விபத்தின் விளைவாக, கதிர் வீச்சால் பாதிக்கப்பட்ட கடல் மீன்கள், ரேடியோஆக்டிவ் ஐயோடின் கலந்த புல்லை தின்ற மாட்டின் பால், காய்கறிகள் என்று தொடர்ந்து இன்றும் கண்டுபிடிக்கபட்டு, இதனால் அந்த பகுதி விவசாயிகள், தங்களது பொருட்களை சந்தைக்கு கொண்டு வர இயலாமல், வாழ வழி தெரியாமல் தினம், தினம் அரசாங்கமும், தன்னார்வ அமைப்புகளும் கொடுக்கும் உதவி பணத்தில், உயிர் வாழ்ந்துக் கொண்டிருப்பது உங்களுக்கு தெரியுமா? அந்த பகுதி, என்று இங்கு குறிப்பிடபடுவது ஒரு 50 கிலோ மீட்டர் சுற்றளவு விவசாயிகளை. அவர்கள் இந்த விபத்திற்க்கு முன் கோடிஸ்வரர்கள் என்பதுதான், இதிலுள்ள நகைமுரண். புரிந்துக் கொள்ளுங்கள் விஞ்ஞானி ஸாரே. இன்னும் வேண்டுமானால் கேளுங்கள். ஆதாரங்களை அள்ளி போடுகிறேன்.
அதே விஞ்ஞானி மேலும் சொல்கிறார். உலகமே, மின்சார சக்தியின் தேவையில் தவிக்கிறது. எனவே அணுவை பயன்படுத்துவதுதான் சரி என்று. தோழா, ரொம்ப பசிக்கிறது என்று, நஞ்சை எடுத்து உண்ண முடியுமா? மின்சாரத் தேவை இருக்கிறது என அனைவரும் ஒத்துக் கொள்கிறோம். ஆனால், அதற்கு அணுசக்தி தீர்வல்ல. It is neither 100% secured nor 100% clear energy. வேறு எந்த தவற்றையும், சரி செய்துக் கொள்ள முடியும். அணு உலையில் நிகழும் தவறு தலைமுறைகளை பலி கேட்கும். அதை யாராலும் சரி செய்ய இயலாது. ஒரே ஒரு சதவிகிதம் மட்டுமே, ஆபத்து இருக்கிறது என்ற சூழ்நிலையில் கூட, அணுசக்தியை தவிர்ப்பது மட்டும்தான் மனிதநேய சமுதாயத்தின் அறமாக இருக்க முடியும்.
மிகச்சரியான உண்மைகள் !!!.
ReplyDeleteunmai nilaiyei pakirndhadharku mikka nandri
ReplyDeleteஉங்கள் பதிவைனை எனது முகப்புத்தகத்தில் பயன் படுத்த அனுமதிப்பீர்கள் என நம்புகிறேன்.. உங்கள் பெயருடன் வெளியிடப்படும் என் உறுதியலிக்கிறேன்.
ReplyDeleteசெந்தில்
selmsakthi/facebook
with Pleasure..Thanks.
Delete