முள்ளும் மலரும்
ஏறக்குறைய, பதினெட்டு வருடங்களுக்கு முன் எங்கள் ஊர் சாந்தி திரையரங்கில் 'முள்ளும் மலரும்' படம் வந்திருந்தது. தீவிர ரஜினி ரசிகனான நான் அதுவரை பார்த்திராத பழைய படம். உடனடியாக, ஒரு இரவுக்காட்சிக்கு நானும் என் நண்பன் அருளும், அந்தப் படம், என்னை என்ன செய்ய போகிறது என்பது தெரியாது, ஒரு குதூகல மனநிலையில் உள்ளே சென்றோம்.ரஜினி ரசிகனாக உள்ளே சென்ற நான், மகேந்திரனின் பக்தனாக வெளியே வந்த நாள் அது. இதுவரை அனுபவித்தறியாத விதவிதமான உணர்வுகளுக்கு என்னை இழுத்து சென்ற அந்த படம் தான் இயக்குனராக மகேந்திரனின் முதல் திரைப்படம். அதன் பிறகு பார்க்ககிட்டிய அவருடைய அணைத்து படங்களையும், ஒன்று விடாமல் பார்த்து முடித்தேன்.
மகேந்திரனின் படங்கள் ஒரு அழகான மாலைபொழுதில, நம்மை வருடி செல்லும் இனிய தென்றலை போல் சுகமளிக்க கூடியவை. சினிமா என்ற பெயரில் பக்கம் பக்கமாய் வசனம் எழுதி நாடகங்களை, நமது இயக்குனர் திலகங்கள் அரங்கேற்றி கொண்டிருந்த வேளையில் முள்ளும் மலரும் என்ற காவியத்தின் முலம் யதார்த்த சினிமாவை அறிமுகபடுத்தினார் மகேந்திரன். 1978 ஆகஸ்ட் மாதம் வேணு செட்டியாரின் தயாரிப்பில், இளையராஜாவின் இசையில், வெளிவந்தது இந்த படம். பாலு மகேந்திராவின் ஒளிப்பதிவு. அது வரை ஸ்டைல் செய்ய மட்டும் ரஜினியை பயன்படுத்தி வந்த தமிழ் சினிமா முதன்முதலாக ரஜினியின் உள்ளே ஒளிந்திருந்த ஒரு நல்ல நடிகனை இந்த படத்தின் மூலம் கண்டுகொண்டது.
முள்ளும் மலரும் படத்தின் முதல் இரு காட்சியிலேயே, முழுபடமும் கையாளபோகிற கதையின் கருவை ஒரு அழகிய கவிதை போல் எழுதியிருப்பார் இயக்குனர் மகேந்திரன். முதல் காட்சியில், காளி தனது தங்கையின் மீது வைத்துள்ள பாசமும், இருவரின்
ஆதரவு அற்ற நிலையும் விளங்கி விடும். இரண்டாவது காட்சியில்,கைநோக சுமை தூக்கி வரும் ஒரு முதிய தொழிலாளி, தவறுதலாக காரில் உரசிவிட, அதையே சாக்காக காட்டி கூலி தர மறுத்து திட்டி அனுப்புவார் ஒரு பணக்காரர். அதை பார்த்துக்கொண்டிருக்கும் ரஜினி ஸ்டைலாக ஒரு கல்லை தனது காலால் கவ்வி எடுத்து, அந்த காரின் விளக்கை உடைப்பார். காளி பாத்திரத்தின் அலட்சியம், எதற்கும் அஞ்சாது, தனக்கு சரி என்று பட்டதை செய்யும் குணம், கோபம், எல்லாமும் அந்த ஒரு காட்சியில் வெளிப்பட்டுவிடும். அதே சமயத்தில், தனது காரில் ஏறி போவதற்காக வரும் சரத்பாபு, ரஜினி உடைத்த விளக்கின் ஒலி கேட்டு, தலை நிமிர்ந்து பார்ப்பார். எதற்காக ரஜினி செய்தார் என்பதெல்லாம் சரத்பாபுவுக்கு தெரியாது. அவர் பார்த்ததெல்லாம், ஒரு ரவுடி போன்ற காளியின் செய்கையையே. இரு பாத்திரத்திற்கும் படம் முழுவதும் விரிய போகும் விரிசல் இந்த காட்சியிலேயே விழுகிறது.
படத்தின் ஆரம்பத்தில்
இருந்து, சரத்பாபுவின் கதாபாத்திரம், காளியை புரிந்து கொள்ள முயலுகிறது. தொடர்ந்து
விலகி போவது காளிதான். ரஜினி, ஒரு காட்சியில் சரத்பாபுவிடம் கேட்பார், “ நானும்
ஆரம்பத்திலே இருந்து பாக்குறேன். என்னை கண்டாலே ஏன் உங்களுக்கு புடிக்கலை?” காளியை பொறுத்த வரை, தனது தங்கையின் பாசத்தை மட்டுமே
உலகத்தில் மிகப் பெரிய சொத்தாக மதிக்கிறான். தனது வேலையை இழக்கின்ற போதும் சரி,
தனது ஒரு கையை இழக்கும் நிலையிலும் சரி, அவனால் பெரிதாக அலட்டி கொள்ளாது கடந்து
போக முடிகிறது. படம் முழுவதும், காளியை நிகழ்த்தி செல்வது இரண்டு விஷயங்களே. ஒன்று
தனது தங்கை வள்ளியின் மீது அவன் கொண்டிருக்கும் எல்லையில்லாத அன்பு. மற்றொன்று,
இன்ஜினியர் மீது அவன் கொண்டிருக்கும் வெறுப்பு. இந்த ஒன்றுகொன்று முரண்பாடான இரு
விஷயங்களே காளியை வடிவமைக்கின்றன. இறுதியில் தான் ஜென்மவிரோதியாக கருதும், இன்ஜினியருக்காக,
வள்ளி தன்னை தூக்கி எறிந்து விட்டாள் என்று உணரும் நேரத்தில் அவன் நிலை குலைந்து
போகிறான். மறுபடியும், தனது தங்கை, தனக்காக, அனைவரையும் தூக்கி எறிந்து விட்டாள் என்று உணரும்
நேரத்தில், எல்லையில்லாத நெகிழ்ச்சிக்கு ஆளாகிறான். சுய கவுரவமும், பெருமிதமும்,
பொங்க, ஊர்க்கார ர்களை எதிர்க்கொள்கிறான். படம் வந்து, இத்தனை ஆண்டுகள் கழிந்த பின்னரும்
உள்ள நிஜம் என்ன்வென்றால், இந்த உணர்வுகளை மகேந்திரனை தவிர வேறு யாராலும் திரையில்
வடிவமைக்க இயலாது என்பதுதான். மனித உணர்வுகளை மகேந்திரன் அளவுக்கு உள்வாங்கிய,
வெளிப்படுத்திய தமிழ் இயக்குனர்கள் இல்லை. அவருடைய கதாபாத்திரங்கள், எந்த சுழ்நிலையிலும், தமது
இயல்பை மீறி பேசுவதில்லை. இதுதான் மகேந்திரனின் பலம். மகேந்திரனின் நாயகர்கள் நமது
இயல்பு வாழ்க்கையில் அன்றாடம் எதிர்க்கொள்ளும் மனிதர்கள். தமது வாழ்க்கை சுழலில்
சுழன்று கொண்டிருக்கும் அவர்கள், மகேந்திரனிடம்
மட்டும் தமது வாழ்க்கையை சற்று பகிர்ந்து செல்கிறார்கள். அல்லது அவருக்கு மட்டுமே
சராசரி மனிதனின் உணர்வுகள் பேசும் மொழி கேட்கிறது.
ரஜினியை பொறுத்த வரை, தமிழ்த்திரைப்பட சூழல், பிற்காலத்தில் எப்படி அவரை அடித்து செல்ல போகிறது என்பதை உணர்ந்தே, ஆரம்பத்திலேயே, இந்த வரலாற்று காவியத்தில்
நடித்து விட்டார் என்றே தோன்றுகிறது. வெறும் ஐந்து வருடங்கள் கழித்து, இந்த படம்
ரஜினிக்கு வந்திருந்தால் கூட, ரஜினியால் இந்த வாய்பை ஏற்றிருக்க முடியாது என்பது
தான் நிதர்சனம். இவ்வளவு எதார்த்தமான நடிப்பை, இதற்கு பிறகு ரஜினியிடம்
காணமுடியவில்லை என்பதுதான் உண்மை. உதாரணமாக, வின்ச் துடைத்துக் கொண்டே, அதில் போவதற்க்காக
வரும் ஊர்காரர்களிடம், ரஜினி கேலியும் கிண்டலுமாய் பேசும் காட்சி. பொண்டாடியை
அழைத்து வருவதற்காக செல்வதாக சொல்லும் நபரிடம், ரஜினி சொல்லும் வசனம்,
”டேய், இது கவர்மெண்ட்
வண்டிடா, ஏதோ அவசர, ஆத்திரத்திற்கு போனா போகுதுன்னு, உங்களை இதுலே போக விட்டா, நீங்க
ஜல்சா பண்னுரத்துக்கும் இதுலே போக ஆரம்பிச்சிட்டீங்களா.? போய் தொலைங்க.. உங்க
காட்டுலே மழை பெய்யுது.” இந்த ஒரு காட்சியில் ரஜினி காட்டிருக்கும்
அலட்சியம், கேலி , வசன உச்சரிப்பு ஒரு கவிதை. அதே போல், கிளைமாக்ஸ் காட்சியில்,
ரஜினி மாறி மாறி காட்டும் முக பாவங்கள் இப்பொது நினைத்தாலும் எத்தனை பெரிய நடிகனை
நாம் வெறும் ஸ்டைல் காட்ட செய்து திருப்திப்பட்டு கொண்டோம் என்பது புரியும்.
ஆனால், இது ரஜினியே தீர்மானித்து கொண்ட பாதைதான்.
அதே போல், சரத்பாபுவும், ஷோபாவும், படம் முழுவதும் கொஞ்சம் கூட செயற்கைதனமில்லாது,
நம்மை கதையோடு ஒன்றச் செய்திருப்பார்கள். மகேந்திரனை பெரிதும் கவர்ந்த நடிகர்கள்
சரத்பாபுவும், சாமிக்கண்ணுவும். தொடர்ந்து இவர்களை பயன்படுத்தி வந்துள்ளார்.
முள்ளும் மலரும் பட்த்தை தூக்கி நிறுத்தியதில் மிக முக்கியப் பங்கு இசைஞானிக்கு உண்டு. இந்த படம் மூலம், தொடங்கிய மகேந்திரன், ராஜா கூட்டணி, பல படங்களில்
தொடர்ந்து ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்த்து. குறிப்பாக, கிளைமாக்ஸ் காட்சியில்
ரஜினி, சரத்பாபுவிற்கு தனது தங்கையை திருமணம் செய்து தர ஒப்புக் கொண்ட உடன், எழும்
பின்ணனி இசை, மனதின் சொல்ல இயலாத ஆழங்களுக்குள் ஊடுருவி நம்மை நெகிழ செய்யும்.
எல்லா நல்லபடங்களும் போலவே இந்த படமும், பல தடைகளை தாண்டிதான் வெளிவந்தது. சிவாஜி சௌத்ரியாக வந்து அனைவரையும் அழவிட்ட தங்கபதக்கத்தின் வசனகர்த்தாதான் நமது படத்தின் இயக்குனர், அண்ணன் தங்கை கதை, என்று குஷியாக படம் தயாரிக்க வந்த வேணு செட்டியார், அதுவரை மகேந்திரன் எடுத்திருந்த படத்தை பார்த்து அழுதே விட்டார். படத்தின் பெரிய செலவே, வசனம் எழுத வாங்க வேண்டிய பேப்பர் தான் என்று அவர் கனவு கொண்டிருக்க, மகேந்திரனின் கதாநாயகனோ, "ரெண்டு கை ரெண்டு கால் போனாலும் பொழச்சிப்பான்..... கெட்ட.. பய சார், காளி" என்று, தன் கை போனதால் தன்னை வேலையை விட்டு தூக்கிய சூப்பர்வைசரிடம், இரண்டு வரியில் டைலாக்கை முடித்துக்கொண்டால் அவர் அழாமல் என்ன செய்வார்? ஒருகட்டத்தில் வேணு செட்டியார், எடுத்த வரைக்கும் போதும்.. இதற்கு மேல் செலவு செய்ய இயலாது என்று கைவிரித்துவிட்டார். செந்தாழம் பூவில் என்று தொடங்கும் பாடலுக்கு, லீட் சீன் எடுக்க வேண்டி மகேந்திரன், ஒரு நாள் படபிடிப்பிற்காக கெஞ்சி பார்க்கிறார். முடியவே முடியாது என்று செட்டியார் கைவிரித்துவிட, அப்போது மகேந்திரனின் நல்ல படத்திற்கான தேடலை புரிந்து கொண்டிருந்த கமல்ஹாசன், தனது பணத்தை கொடுத்து அந்த காட்சியை எடுக்க உதவினாராம். இதை ஒரு பேட்டியில் மகேந்திரனே விளக்கினர். அந்த வகையில் ஒரு நல்ல படம் வெளிவர உதவிய கமல் நமது நன்றிக்கு உரியவர். இப்படி மகேந்திரனின் முதல் படத்திலேயே, அவரின் திறமையை புரிந்து கொண்டு உதவிய கமல் பிறகு ஏன் மகேந்திரனின் ஒரு படத்திலும் நடிக்கவில்லை என்பது ஒரு விடை தெரியாத கேள்வி.
தமிழ்த் திரைப்பட வரலாற்றில் எப்போதோ ஒரு முறை நிகழும் அதிசயமே முள்ளும் மலரும் என்ற இந்த குறிஞ்சி மலர்.
- படங்கள் உதவி – ஜான் ரோஸன்
மகேந்திரனுக்கு மரியாதை.
ReplyDelete