Friday, March 1, 2013

நூற்றாண்டு காலத் தனிமை - 1

ஓட்டுனர் உரிமம் விஷயமாக, கனகவா நகர போக்குவரத்து அலுவலகத்தில் அமர்ந்திருந்தேன். வெகு நேரம் காத்திருக்க வேண்டி இருந்தது.  அப்போதுதான் நூற்றாண்டு காலத் தனிமை நூலை படிக்க தொடங்கியிருந்தேன். என் அருகில் வந்து அமர்ந்த நபர், நீங்கள் எங்கள் நாட்டு எழுத்தாளர் எழுதிய நூலை வாசிக்கிறீர்கள். சந்தோசமாக இருக்கிறது என்றார். நானும் மகிழ்ச்சியுடன் பேச துவங்கினேன். கொலம்பியாவை சேர்ந்த அவர், வெகு நாட்களாக அமெரிக்காவில் வசிப்பவர். கொலம்பியா சென்று பல வருடங்கள் ஆகி விட்டது என்றார்.  பொதுவான விசாரிப்புகளுக்கு பின் சொன்னார். கொலம்பியா ஒரு விசித்திரமான நாடு. அங்கு எதுவும் நடக்கும். இந்த புத்தகம் உங்களுக்கு மிக சிறந்த அனுபவமாகவே இருக்கும் என்று சொல்லி விடைப்பெற்று சென்றார், ஃபெர்ணாண்டோ. உண்மையில் ஒரு நல்ல அனுபவமாகவே இருந்த்து இந்த நூல்.


1967ல் கொலம்பியாவின், கேப்ரியல் கார்ஸியா மார்க்கஸால், ஸ்பானிய மொழியில் எழுதப்பட்டு, மிகப் பெரிய வரவேற்ப்பை பெற்ற நாவல். உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, பல பதிப்புகளை தொடர்ந்து கண்ட இந்த நாவல், மேஜிக்கல் ரியலசிம் என்று வகைபடுத்தப்பட்டது. உலகின் எந்த மொழியிலும் நிகழ்ந்த இலக்கிய முயற்சிகளில், மிக முக்கிய இலக்கிய ஆக்கமாக இந்த படைப்பு முன்னிறுத்தபடுகிறது. 1987ல் மார்கஸுக்கு, இலக்கியத்திற்க்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இந்த நாவலுக்குள் நுழையும் முன்பு, இந்த படைப்பின் பின்புலமாக திகழும் கொலம்பியாவின் வரலாற்றை கொஞ்சம் புரிந்துக் கொள்வது நாவலை சரியாக உள்வாங்க ஏதுவாக இருக்கும். கொலம்பியா, 1810ல் லேயே விடுதலை அடைந்து விட்டது. ஆனால், கன்சர்வேடிவ் மற்றும் லிபரல் கட்சிகளின் இடையில் நிகழும் பகையுணர்வால், பல உள்நாட்டு கலவரங்கள், தொடர்ந்து கொலம்பியாவை வேட்டையாட்டின. இரு கட்சிகளுக்கும், பெரிய வேற்றுமைகள் ஏதுமில்லை. உழல், வன்முறை, அதிகார வெறி ஆகியவை இரண்டு குழுவிலுமே தலைவிரித்தாடின. யார் அதிகாரத்தை கைப்பற்றுவது என்ற போரில் தொடர்ந்து உயிர்கள் பலியாகின. இரண்டு குழுக்களிலுமே கொரில்லா படை இருந்தது. அவை தொடர்ந்து உள்நாட்டு போரை நிகழ்த்தின. 1899ம் ஆண்டுக்கும், 1902 க்கும் இடையில் ஆயிரம் நாட்கள் நிகழ்ந்த உள்நாட்டு போரில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். இதற்கிடையில், 1928ம் ஆண்டு, அமெரிக்காவின் யூனெட்டட் ஃபுருட்ஸ் என்ற கம்பெனி, கொலம்பியாவில் தொழில் தொடங்கி பணத்தை அள்ளியது. தொழிலாளர்களை சுரண்டி, பணத்தை கொள்ளையடித்த அந்த கம்பெனியில், தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்த போது, கன்சர்வேடிவ் அரசாங்கம், அமெரிக்காவின் கம்பெனிக்கு ஆதரவாக களத்தில் குதித்து, பேச்சு வார்த்தை என்று தொழிலாளர்களை ஒரு இடத்திற்க்கு வர சொல்லி, நூற்றுக்கணக்கான மக்களை சுட்டுத் தள்ளியது. பின்பு எந்த ஆதாரமும் இல்லாது, அந்த சம்பவத்தை சரித்திரத்தில் இருந்து துடைத்தெறிந்தது.
1946 இல் இருந்து, 1953 வரையிலான உள்நாட்டு போரில், ஒரு லட்சத்து ஐம்பதானயிரம் பேர் கொல்லப்பட்டனர். இப்படி தொடர்ந்து உயிர்கள் பலியிடப்பட்ட கொலம்பியா மண்ணில், ஆர்கடக்கா என்ற கிராமத்தில், 1927இல் தனது பெற்றோருக்கு 16வது மகனாக, கேப்ரியல் கார்ஸியா மார்கஸ் பிறந்தார். தனது தாத்தா, பாட்டியிடமே வளர்ந்தார். மார்கஸின் பாட்டிக்கு மனித சக்திக்கு அப்பாற்ப்பட்ட மந்திர மாயங்களில் நம்பிக்கை இருந்தது. மார்கஸின் தாத்தாவோ, உள்நாட்டு போர்களில் பங்கு பெற்றவர். இந்த பின்புலமே, நாவலில் பெரிதும் பிரதிபலிக்கிறது. மார்க்கஸ் முதலில் ஸ்பெயினிலும், பின்பு அமெரிக்காவிலும், அதன் பின் மெக்ஸிக்கோவிலும் வசித்தார்.

19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், தொடங்கும் இந்த நாவல், ஒரு குடும்பத்தின் ஏழு தலைமுறை வாழ்க்கையை, சொல்லி முடிகிறது. மக்கோண்டோ என்ற கிராமம் லத்தீன் அமெரிக்காவின் ஒரு மூலையில் உருவாகி, அழியும் வரையிலான சித்திரம் அளிக்கபடுகிறது. ஏழு தலைமுறை மனிதர்களுக்கும் திரும்ப, திரும்ப ஒரே பெயர்கள் சூட்டப்படுகின்றன. முறை தவறிய உறவுகள், காமம், தனிமை இவைகளால் அந்த மனிதர்கள் வேட்டையாடபடும் காட்சிகள் மீண்டும், மீண்டும் வருகிறது. ஏறக்குறைய ஒரே மாதிரியான அபத்தங்கள், சம்பவங்கள் தலைமுறைகள் தாண்டியும் தொடர்ந்து நிகழ்வதை, ஹோஸே ஆர்கடியோ புவெந்தியா உருவாக்கிய மக்கோண்டோ கிராமம் மெளன சாட்சியாய் பார்த்து நிற்கிறது.  


மக்கோண்டோ என்ற இந்த கிராமம் உண்மையில் மார்கஸின் சொந்த ஊரான ஆர்கடக்காவை பிரதிபலிக்கிறது. ஆனால், புவியியல் சித்தரிப்புகள், இதற்கு மாறாக புனையப்பட்டுள்ளது. நாவலின் ஆரம்பத்தில் ஹோஸே ஆர்க்கடியோ புவெந்தியா, தனக்கு சகோதரி முறையில் வரும் உருசுலாவை மணந்து கொள்கிறான். இந்த உரூசுலாதான் தனக்கு பின் வரும் ஐந்து தலைமுறைகளையும் உயிருடன இருந்து பார்க்கிறாள். 140 வயதுக்கு மேல் நாவலில் உயிருடன் இருக்கிறாள். நாவலில் வரும் அனைத்து பாத்திரங்களையும், இணைக்கும் ஒரு புள்ளியாக திகழ்கிறாள்.  கதையில் வரும் அனைவரையும், நிழல் போல் தொடரும் தனிமையை, இவள் தனது மன வலிமையால் தன் பக்கம் அண்ட விடாமல் விரட்டுகிறாள்.
சகோதரனை மணந்து கொண்டால், பன்றி வாலுடன் குழந்தை பிறக்கும் என்கிற தமது குடும்பத்தின் முற்காலத்திய நம்பிக்கையால், உரூசுலா உடலுறவை தவிர்க்கிறாள். இரும்பு பட்டையிலான, உள்ளாடையை அணிந்து பூட்டி கொள்கிறாள். திருமணத்திற்க்கு பிறகும் வெகுநாட்களாக குழந்தை இல்லாததால், ஊராரின் கேலிக்கு ஆளாகிறான் ஹோஸே ஆர்க்கடியோ. அப்படிப்பட்ட ஒரு சம்பவத்தில், தன்னை கேலி செய்யும் புருடன்ஸியோவை ஈட்டி எறிந்து கொல்கிறான். நேரடியாக வீட்டுக்கு வரும் ஹோஸே, குழந்தை எப்படியிருப்பினும் கவலையில்லை என்று கூறி தமது மனைவியுடன் உறவில் ஈடுபடுகிறான்.  தான் செய்த கொலையால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகும் ஹோஸே தனது மனைவி மற்றும் உறவினர்களுடன், தமது இடத்தை விட்டு பெயர்ந்து, புதிய இடம் தேடி நடக்கிறார்கள். இரவு பகலாக நடக்கும் அவர்கள், பல நாட்களுக்கு பிறகு ஒரு நதிக்கரையில் தங்குகிறார்கள். அங்கு கண்ணாடியிலான ஒரு நகரத்தை கற்பனை செய்துக் கொள்ளும் ஹோஸே, அந்த இடத்திலேயே ஒரு கிராமத்தை உருவாக்க முடிவு செய்கிறான். இப்படியாக எந்த புவியியல் அறிவுமில்லாத ஹோஸேவால் ஒரு கிராமம் உருவாக்கபடுகிறது.
அந்த கிராமத்தை நோக்கி, நாடோடிகள் வருகிறார்கள். ஒவ்வொரு வசந்த காலத்திலும் அந்த கிராமத்தை நோக்கி வரும் அவர்கள், ஒவ்வொரு முறையும் அந்த கிராமம் அதுவரை கண்டிராத, ஏதேனும் ஒரு அதிசயத்தை எடுத்து வருகிறார்கள். அந்த பொருட்கள் யாவும் ஹோஸோவின் கற்பனையையும், சாகஸ மன எழுச்சியையும் தூண்டுகிறது. முதன்முதலாக ஐஸ் அந்த கிராமத்திற்க்கு வருகிறது. இதுதான் இந்த நூற்றாண்டின் வியக்கதக்க கண்டுபிடிப்பு என்று ஹோஸே கொண்டாடுகிறான். பிறகு காந்தம் கொண்டு வருகிறார்கள். அந்த ஜிப்ஸிகளின் தலைவன் போல் இருக்கும் மெல்கீயூடிஸ், வீடு வீடாக சென்று அந்த காந்தத்தை வைத்து, இரும்பு பொருட்களை இழுத்து காண்பிக்கிறான். கதவின் தாழ்ப்பாள், அதிலுள்ள ஆணி போன்றவை உருவிக் கொண்டு, காந்தம் நோக்கி பறந்து வருவதை கண்டு, மக்கோண்டோ கிராமமே அதிசயித்து நிற்கிறது. பொருட்கள், ஒவ்வொன்றுக்கும் உயிர் இருக்கிறது. அதன், ஆன்மாவை தட்டி எழுப்பிவிட்டால் போதும் என்று தனது கண்டுப்பிடிப்பை கூறுகிறான், மெல்கீயூடிஸ்.  அந்த காந்தத்தை கொண்டு, தங்கத்தை கண்டுபிடிக்கலாம் என்று ஹோஸே நினைக்கிறான். அதை கொண்டு வரும் மெல்கீயூடிஸிடம் இருந்து தன்னிடமிருக்கும் ஆடுகளை கொடுத்து அதை வாங்கி கொள்கிறான். தங்கத்தை அது கண்டுபிடிக்காது என்ற உண்மையை சொல்லும் மெல்கீயூடிஸின் அறிவுரையால், அவனது மன எழுச்சியை, எந்த விதத்திலும் தடுக்க இயலவில்லை. ஜிப்ஸிகள் பிறகு ரஸவாதம் (இரும்பை தங்கமாக்கும் வித்தை), டெலஸ்கோப் என்று பல பொருட்களை கொண்டு வருகிறார்கள். ஒவ்வொரு முறையும்,ஜோஸ் தனது கற்பனை மூலம், அந்த பொருட்களின் பயன்களை விரித்துக் கொள்கிறான். மெதுவாக மெல்கீயூடிஸ்க்கும், ஹோஸேவிற்க்கும் இடையில் ஒரு நிரந்தர நட்பு உருவாகிறது. பயணத்தில் மெல்கீயூடிஸ் இறந்து விட்டதாக தகவல் வருகிறது. பிறகு சில நாட்கள் கழித்து மெல்கீயூடிஸ் திரும்ப வந்து விடுகிறான். சாவின் தனிமை கொடுமையானதாக இருந்ததால், திரும்ப வந்து விட்டதாக சொல்கிறான். ஆம், நாவலில் சாவில் இருந்து மனிதர்கள் திரும்ப வருகிறார்கள். செத்தவர்கள் தொடர்ந்து காட்சியளிக்கிறார்கள். மெல்கீயூடிஸ், ஹோஸே புவெந்தியாவின் வீட்டிலேயே ஒரு மூலையில் நூலகம் அமைத்து தங்குகிறான். சாவின் தனிமை பொறுக்க முடியாமல் வந்ததாக சொல்லும் மெல்கீயூடிஸ், அந்த நூலகத்தை விட்டு ஒரு போதும் வெளியே வருவதே இல்லை. சமஸ்கிருத மொழியில் ஒரு நூலை எழுதி தள்ளுகிறான். அந்த நூலை ஒரு நூற்றாண்டு கழித்தே மற்றவர்கள் புரிந்துக் கொள்ள முடியும் என்று சொல்கிறான்.

ஹோஸே தம்பதிக்கு அவுர்லியானோ, ஹோஸே ஆர்க்கடியோ(இரண்டாம் ஹோஸே) என இரு மகன்களும் அமெரெண்டா என்ற மகளும் பிறக்கிறார்கள். உரூசுலாவின் தூரத்து உறவினரின் மகளான ரெபேக்கா, தனது பெற்றோரின் எலும்புகளோடு, அந்த கிராமத்திற்க்கு வருகிறாள். புவெந்தியாவின் குடும்பத்தில், வளர்ப்பு மகளாக வளர்கிறாள்.   ரெபேக்கா, இரவுகளில் எழுந்து மண்ணை தோண்டி தின்கிறாள். அவள் வந்த சில நாட்களில், கிராமத்தில் உள்ள அனைவருக்கும் தூக்கமின்மை நோய் பிடித்துக் கொள்கிறது. வாரகணக்கில் மக்கள் தூங்காமல் இருக்கிறார்கள். தூக்கமின்மையால், மறதி நோய் வந்து விடுகிறது. எந்த அளவுக்கு என்றால், எல்லா பொருட்களிலும், அந்த பொருளின் பெயர், மற்றும் எப்படி உபயோகிப்பது என்று எழுதி ஒட்டி விடுமளவுக்கு. இப்படிப்பட்ட விசித்திரங்கள் மெக்கோண்டோவில் சங்கிலித் தொடர் போல் நிகழ்கின்றன. ஒரு கட்டத்தில், வாசிப்பு மனம் எப்படிப்பட்ட விசித்திரத்திற்க்கும் தயாராகிவிடுகிறது.

மெக்கோண்டா கிராமத்தை பற்றி அறிந்துக் கொள்ளும் கன்சர்வேடிவ் அரசாங்கம் தனது பிரதிநிதியாக ஒரு நீதிபதியை அனுப்புகிறது. அந்த மாஜிஸ்திரேட், கிராமத்தில் இருக்கும் எல்லா வீடுகளுக்கும், நீல நிறத்தில் வர்ணம் பூசப்பட வேண்டும் என்று உத்தரவு போடுகிறார். வெகுண்டு எழும் ஹோஸே அவரை அடித்து விரட்டுகிறான். இந்த கிராமம் எங்களுடையது. அரசாங்கம் இதில் தலையிட தேவையில்லை. எங்களுக்கு பிடித்த வர்ணத்தில்தான் வீடுகள் இருக்கும் என்கிறான். திரும்பவும் துப்பாக்கி ஏந்திய காவலர்களுடன் வரும் மாஜிஸ்திரேட்டிடம், ஹோஸே சமாதான உடன்படிக்கை செய்துக் கொள்கிறான்.மாஜிஸ்திரேட்டின் இரண்டாவது   மகளான ரெமேடியோஸை, ஹோஸேவின் மகன் அவுர்லியோனோ திருமணம் செய்துக் கொள்கிறான்.
அவுர்லியோனோ மற்றும் ஹோஸே (மகன்) சகோதரர்கள் இருவருக்குமே பிலர் டெர்னேரா என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்படுகிறது. அவுர்லியோனோவுக்கும், பிலர் டெர்னேராவுக்கும் மகனாக அவுர்லியோனோ ஹோஸே பிறக்கிறான். ஹோஸே ஆர்க்கடியோவுக்கும், டெர்னேராவுக்கும் இடையில் மகனாக ஆர்க்கடியோ பிறக்கிறான்.
இந்த நாவலை, வசிப்பவர்களுக்கு சவாலாக இருக்கும் விஷயம், ஒரே பெயர்கள் மறுபடி, மறுபடி பாத்திரங்களுக்கு சூட்டபடுவதுதான். ஆனால், 19ம் நூற்றாண்டில் இது உலகமெங்கும் இருந்த நடைமுறைதான். தாத்தாவின் பெயர், பேரனுக்கு சூட்டப்படுவது இன்றளவும் உள்ள விஷயம். ஆனால், இந்த நாவலை பொறுத்த வரை, இப்படி பெயர்கள் திரும்ப திரும்ப வருவதற்க்கு நடைமுறை யதார்த்தம் மட்டும் காரணமல்ல. பெயர்களுக்கு ஒரு அடிப்படை பண்பு இருக்கிறது. வாழ்வு சுழற்சியை, மாற்றமில்லாத தன்மையை, வரலாற்றின் பிரதியெடுப்பை ஒரே பெயர்கள்  மூலம் அடையாளபடுத்துகிறார் மார்க்கஸ். ஹோஸே ஆர்க்கடியோ என்று பெயரிடபடும் குழந்தைகள் தமது பெயருக்கு ஏற்ப, கற்பனை உலகில் சஞ்சரிப்பவர்களாகவும், புதிதாக எதையேனும் கண்டிபிடிக்கும் ஆவலில் தவிப்பவர்களாகவும் இருக்கிறார்கள். அவுர்லியோனோ என்று பெயரிடபடும் குழந்தைகள் ஒரே சமயத்தில் நடைமுறைவாதியாகவும், மக்கள் புரட்சிகளில் நம்பிக்கை உள்ளவர்களாகவும் இருக்கிறார்கள்.

இரண்டாம் தலைமுறை அவுர்லியோனோ லிபரலாக மாறி, கன்சர்வேட்டிவ் அரசாங்கத்தை எதிர்த்து 32 முறை கிளர்ச்சிக்கு தலைமை தாங்கி தோல்வியை தழுவுகிறான். நான்காம் தலைமுறையில், பிறக்கும் இரட்டை குழந்தைகள் ஒரே மாதிரி இருக்கிறார்கள். அடிக்கடி பெயரை மாற்றி குடும்பத்தாரை குழப்புகிறார்கள்.  இடையில் இருவருடைய பெயரும் மாறிவிட்டதாக, உரூசுலா சந்தேகம் கொள்கிறாள். அந்த சந்தேகத்தை உறுதி செய்வது போல், ஹோஸே ஆர்கடியோ செகுண்டா, தொழிலாளர் புரட்சியில் ஈடுபட்டு, சாவின் விளிம்பிற்க்கு செல்கிறான். அவுர்லியோனோ செகுண்டா, பெட்ரா கோட்டெஸுடன் காமத்தில் திளைக்கிறான். இரட்டையர் இருவரும் ஒரே நாளில் இறக்க, துக்கத்திற்க்கு வரும் ஊர்காரார்கள், மிதமிஞ்சிய குடியினால் இருவரது உடலையும் மாற்றி புதைக்கிறார்கள்.
ஹோஸே மற்றும் அவுர்லியோனோக்களுக்கு இடையில் மாறாமல் இருக்கும் விஷயம் மிதமிஞ்சிய காமமும், தனிமையும்தான். மனிதர்கள் தனிமையாக இருக்கிறார்கள். தனிமையாக இறக்கிறார்கள். நாவலின் ஒவ்வொரு பக்கத்திலும் தனிமை (Solitude) என்ற வார்த்தை வந்து விடுகிறது. சமஸ்கிருத மொழியில் புரியாமல் எதையோ எழுதி தள்ளும் மெல்கீயூடிஸ் ஒரு நாள் மரிக்கிறார். அந்த கிராமத்தில் முதன்முதலாக இறக்கும் நபர் மெல்கீயூடிஸ். அதன் மூலம், இறப்பின் வரைபடத்தில் மெக்கோண்டோ வந்து விடுகிறது. அதற்கு பின்பே அந்த கிராமத்தில் தொடர்ந்து இறப்புகள் நிகழ்கின்றன. ஹோஸே ஆர்கடியோ (முதலாம் ஹோஸே) தனது தொழிற்கூட்த்தில் தொடர்ந்து கால இயந்திரத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் இருக்கிறான். பிறகு அவனுக்கு எல்லா நாட்களும் திங்கள் கிழமையாக தெரிகிறது. நேற்றைக்கும், இன்றுக்கும் எந்த மாற்றமும் இல்லை. அதே நிலவு.. அதே காற்று. எனவே இன்றும் திங்கள்கிழமை தான் என்று அறிவிக்கிறான். மனநிலை பிறழ்ந்து, தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தில் அடியில் தங்க வைக்கபடுகிறான்.

ஹோஸே ஆர்க்கடியோ (இரண்டாம்), சாகஸங்களை தேடி, அந்த கிராமத்திற்க்கு வரும் நாடோடிகளுடன் சென்று விடுகிறான். தன்னை லிபரலாக உணரும் அவுர்லியோனோ புவெந்தியா, கன்சர்வேட்டிவ் அரசாங்காத்தின் கொடுமைகளை கண்டு கொதித்து,  உள்நாட்டு போரில் ஈடுபடுகிறான். பிள்ளை பேறின் போது, அவனது மனைவி ரெமேடியாஸ் இறந்து போகிறாள். அந்த பிரிவை தாங்கி கொள்ள இயலாமல், அவுர்லியோனோ, கன்சர்வேடிவ்களுக்கு எதிரான போரில் தலைமை தாங்கி அந்த ஊரை விட்டு செல்கிறான். செல்வதற்க்கு முன், தனது சகோதரனின் மகனான ஆர்க்கடியோவை அந்த கிராமத்திற்க்கு தலைமை தாங்க சொல்லி செல்கிறான். ஆர்க்கடியோவோ, சர்வாதிகாரியாகி அந்த கிராமத்தை வதைக்கிறான். சாண்டோ ஸோஃபியா என்ற பெண்ணை திருமணம் செய்துக் கொள்கிறான். பிறகு கன்சர்வேடிவ் ராணுவத்தால் கொல்லப்படுகிறான்.

கிளர்ச்சிக்கு தலைமை தாங்கி செல்லும் கர்னல் அவுர்லியோனோ, கொலம்பியா முழுவதும் சுற்றி திரிகிறான். பல்வேறு போர்களுக்கு தலைமை தாங்குகிறான். போகும் இடமெல்லாம் பெண்கள் அவனை சூழ்கிறார்கள். இப்படியாக 17 மகன்களுக்கு அப்பாவாகிறான். 17 மகன்களுக்கும் அவுர்லியோனோ என்று பெயரிடபடுகிறது. போரில் கைப்பற்றிய இடங்களில், லிபரல் தலைமையை நிறுவுகிறான். ஆனால் அதிகாரத்திற்க்கு வரும் லிபரல்கள் அரசாங்காத்திலும் உழல், வன்முறை கொடிக்கட்டி பறப்பதை கண்டு மனம் நொந்து போகிறான் அவுர்லியோனோ.  தொடர் போரும், அதிகாரமும் அவுர்லியோனோவை முற்றிலும் அன்பில்லாதவனாக மாற்றுகிறது. தனது சொந்த கிராமத்திற்க்கு திரும்பி வந்து கன்சர்வேட்டிவ்களை தோற்கடித்து, தலைமை கர்னல் மன்கோடாவை கைது செய்கிறான். மன்கோடா கன்சர்வேடிவ் என்ற போதிலும் நல்ல நிர்வாகத்தை கொடுத்தவர். அவுர்லியோனோவின் தாயார் உரூசுலாவிற்க்கு நல்ல நண்பனாக இருந்தவர். உரூசுலா எத்தனையோ முறை கெஞ்சியும் கேட்காமல் மன்கோடாவை கொலை செய்ய உத்தரவிடுகிறான். உன்னை கொல்வது நான் அல்ல.. புரட்சி என்கிறான்.

அவுர்லியோனோவின் போக்கு பிடிக்காத அவனது உற்ற நண்பன் கர்னல் ஹெரினெல்டோ மார்க்கஸ், நீ தவறான பாதையில் போகிறாய் என்று எச்சரிக்கிறான். அவனையும் கொல்ல துணியும் அவுர்லியோனோ, ஒரு கட்டத்தில் தெளிகிறான். போரின் வெறுமையையும், பொருளற்ற தன்மையையும் உணரும் அவுர்லியோனோ, கன்சர்வேடிவ்களுடன் சமாதானமாக போய்விடலாம் என்கிறான். அதை ஏற்காத லிபரல்கள் அவனை அவமதிக்கிறார்கள். ஒரு தற்கொலை முயற்சியில் உயிர் பிழைக்கும் அவுர்லியோனோ, போரில் இருந்து விலகி, தனது வீட்டில் தனது தந்தையின் தொழிற்கூடத்தில் தனிமையில் ஒதுங்குகிறான்.  மிக நேர்த்தியாக தங்க மீன்களை செய்யும் அவுர்லியோனோ, அதை கொண்டு விற்று, தங்க காசு வாங்கி, மறுபடியும் அதை உருக்கி தங்க மீன் செய்கிறான். ஏறக்குறைய போரின் மூலம் அவன் சாதிக்க நினைத்த காரியமும், இதை போல் பொருளற்ற ஒன்றுதானே..அரசாங்கம் அவுர்லியோனோவை கெளரவிக்க நினைக்கிறது. அவன், பிரதிநிதிகளை விரட்டியடிக்கிறான். நிறுவனமயமாக்கபடும் அவுர்லியோனோவின் பெயர் அந்த தெருவிற்க்கு சூட்டப்படுகிறது. அவனோ, தனிமையில் தங்க மீன் செய்துக் கொண்டு இருக்கிறான்.

No comments:

Post a Comment

Write your valuable comments here friends..