Saturday, October 12, 2013

அகிரா குரோசவாவின், செந்தாடி (Red Beard)


உலகின் எந்த மூலையில் இருந்தாலும், எந்த நாட்டினராக இருந்தாலும், திரைமொழியில் உச்சக்கட்ட சாத்தியங்களை காண விரும்பினால், அவர் தொடங்க வேண்டிய இடம், குரோசவாவாகதான் இருக்க முடியும்.

குரோசவாவின் ரோஷோமோன், செவன் சாமூராய் (சிச்சி நின் னோ சாமூராய்), போன்ற திரைப்படங்களை போலவே, அவர் எடுத்த அனைத்து படங்களுமே ஒவ்வொரு வகையிலும் முக்கியமானதே. அப்படி என்னை மிகவும் கவர்ந்த செந்தாடி (Red Beard - 1965) திரைப்படத்தை பற்றியே இந்த கட்டுரை.


குரோசவாவின் கலைக்கு பின்புலம், உலக இலக்கியங்கள் மீது அவருக்கு இருந்த ஈடுபாடு. முக்கியமாக ரஷ்ய இலக்கியங்கள். அதிலும் குறிப்பாக தாஸ்தோவெஸ்கியின் தாக்கம். குரோசாவா படங்கள் கொண்டாடபடுவதற்க்கு காரணம், மனித வாழ்க்கை பற்றிய ஒரு முழுமை பார்வையை, அவரது படங்கள் முன் வைத்ததே. குரூரமான, விசித்திரமான மனிதர்கள், சுயமைய்ய போக்கு கொண்டவர்கள் அவரது படங்களில் வந்து கொண்டே இருக்கிறார்கள். கூடவே அள்ள அள்ள குறையாத அன்பை தன்னகத்தே கொண்ட மனிதர்களும். இவர்களே நமக்கு வாழ்வு பற்றிய நம்பிக்கை அளிப்பவர்கள். ரோஷோமோன் படத்தில் புத்த பிட்சுக்கு மனிதத்தின் மீது நம்பிக்கை அளிக்கும் அந்த விறகு வெட்டியை போல.


இந்த கட்டுரை, சற்று நீளமான கட்டுரையே. 180 நிமிடங்கள் ஓடும் இந்த படத்தில் ஒவ்வொரு காட்சியும், ஒவ்வொரு கதையும் சொல்லபட வேண்டியவையே. மேலும், குரோசவாவின் படங்களை, ஆங்கிலத்தில் வரும் சப்டைட்டில் உதவியுடன் பார்ப்பதற்க்கும், ஜப்பானிய மொழியில் அசலை பார்ப்பதற்க்கும் வேறுபாடு இருக்கிறது. சில இடங்களில், மிகுந்த அர்த்தங்களை உள்ளடக்கிய ஜப்பானிய மொழி வசனம், ஆங்கிலத்தில் தட்டையாக விழுகிறது. இவ்வளவு நீண்ட கட்டுரையை மொத்தமாக ஒரு பத்து பேர் முழமையாக படித்தால் ஆச்சர்யம். ஆனால், உலகின் ஒரு மூலையில் இருந்து, இந்த படத்தை தேடி இணையத்திற்க்கு வரும் முகம் தெரியாத ஏதோ ஒரு தோழனுக்கு இந்த பதிவு உதவியாக இருக்கலாம் என்பதே, என்னை எழுத வைக்கிறது. 



நாகசாகியில் உள்ள டச்சு கல்லூரியில் மருத்துவம் படித்து விட்டு, நோபொரு யசுமோத்தோ, டோக்யோ அருகே உள்ள ஒரு கிராமத்து மருத்துவமனைக்கு வருகிற இடத்தில்தான் இத்திரைப்படம் ஆரம்பிக்கிறது. அந்த மருத்துவமனையில் ஏற்கனவே வேலை பார்த்து வரும் ஒரு இளைஞன் யசுமோத்தோ கண்டவுடன் மகிழ்ச்சியடைந்து அவனை உள்ளே அழைத்து செல்கிறான். யசுமோத்தோ வந்துவிட்டதால், இனி தான் ஊர் போகலாம் என்பதே மகிழ்ச்சிக்கு காரணம். அவன் யசுமோத்தோவுக்கு மருத்துவமனையை சுற்றி காண்பிக்கிறான்.  

அந்த மருத்துவமனை, செந்தாடி என சக மருத்துவர்களாலும், நோயாளிகளாலும், அழைக்கபடும் கியோஜோ நிடே என்னும் மருத்துவரால், ஏழைகளுக்காகவும் ஆதரவற்றோருக்காகவும், நடத்தபடுகிறது.   

ஒவ்வொரு அறையிலும், நோயாளிகள் கூட்டம், கூட்டமாக குளிரில் நடுங்கியபடி அமர்ந்திருக்கிறார்கள். இங்கு இருப்பவர்கள் எல்லாம் பரம ஏழைகள். இது மாதிரியான மருத்துவமனையில் பணி புரிந்தால் உயரவே முடியாது என்று அந்த இளைஞன் சொல்கிறான். செந்தாடியோ, தனக்கென பல விதிமுறைகளை உடையவராக இருக்கிறார்.  யசுமோத்தோவின் மருத்துவ குறிப்புகளை தன்னிடம் ஒப்படைக்கும்படி கேட்கிறார்.

மருத்துவப்படிப்பை முடித்தவுடன், ராணுவத்தில் மருத்துவராக பணிபுரிய ஆசைப்பட்டேன். குறைந்தபட்சம் கவர்னருக்கு மருத்துவராக ஆக வேண்டியவன் நான். என்னுடைய மாமா, கவர்னரின் மருத்துவர். என்னால் இது மாதிரியான நரகத்தில் ஒருபோதும் இருக்க முடியாது என சொல்லி சென்றுவிட நினைக்கிறான் யசுமோத்தோ.  மருத்துவமனையில் விதிகளை கடைபிடிக்காமல் இருந்தால், அவர்களாகவே தன்னை வெளியே அனுப்பி விடுவார்கள், என்று சீருடை அணிய மறுக்கிறான்.

மெண்டிஸ் என அழைக்கபடும் மர்மமான பெண் நோயாளி, தனியே அடைக்கபட்டிருக்கும் இடத்திற்க்கு செல்கிறான். அவள் ஆண்களுடன் உறவு கொண்டபின், அவர்களை கொன்றுவிடும் விநோதமான நோய்க்கு ஆளாகி இருக்கிறாள். (மெண்டிஸ் எனபடும் பூச்சிவகையில், பெண் பூச்சி, ஆண் இனத்துடன் உறவு கொள்ளும் போது, ஆண் பூச்சியின் தலையை தின்று விடும்) . மிக பெரும் அழகியான மெண்டிஸ், யசுமோத்தோவை கொல்ல முயற்சிக்கும் போது, செந்தாடியால் காப்பாற்றபடுகிறான்.

முதல் பயிற்சியாக, புற்றுநோயால் பாதிக்கபட்டு மரணபடுக்கையில் இருக்கும் முதியவர் ரொக்குசுக்கேவுடன் அருகில் இருக்கும்படி யசுமோத்தோவை பணிக்கிறார், செந்தாடி. ரொக்குசுக்கே அங்கு வந்த நாள்முதல் அவரை பார்க்க யாரும் வந்ததில்லை. அவர் ஒரு பெரிய ஓவியராக இருந்தவர். ஆனால், இங்கு வந்த பிறகு யாருடனும் பேசியதில்லை. மிக பெரிய காயங்கள் அவருக்கு இருக்கலாம். மனிதர்கள் இறக்கும் தருவாயில் கூட இருப்பதைவிட பெரிய அனுபவம் வேறில்லை, எனவே நீ அருகில் இரு என்கிறார்.

வலியால் துடிக்கும் ரொக்குசுகேவை பார்க்க முடியாமல், குமட்டுகிறான் யசுமோத்தோ. இந்த நோயை சரி செய்யவே முடியாதா என்று கேட்கிறான். நமது மருத்துவ நுட்பம் முழுமையற்றது. நோயை கண்டுபிடிக்க உதவுமே தவிர, தீர்க்க உதவாது. மேலும், இங்கு நோய்களை மட்டும் சரி செய்வது வீண் வேலை. நோய்க்கு காரணமே, இந்த ஏழ்மைதான். இந்த ஏழ்மை ஒழிந்தால்தான் நோய் ஒழியும், என்று சொல்கிறார் செந்தாடி.


ரொக்குசுகேவின் இறப்புக்கு பிறகு, மூன்று குழந்தைகளுடன் அங்கு வந்து சேர்கிறாள், ரொக்குசுகேவின் மகள். அந்த மூன்று குழந்தைகளும் திண்பண்டம் உள்ள தட்டை பார்த்து கொண்டே அமர்ந்திருக்கிறார்கள். ரொக்குசுகேவின் மர்மம் பற்றி, அவரது மகள் சொல்லும் போதுதான் தெரியவருகிறது. ரொக்குசுகேவின் மனைவிக்கு, அவரது மாணவன் ஒருவனுடன் தொடர்பு ஏற்படுகிறது. பிரிந்து போகிறார் ரொக்குசுகே. தனக்கு நாற்பது வயதானதால், அந்த இளவயது மாணவன் பிரிந்து போய்விடுவான் என்று அஞ்சும் ரொக்குசுகேவின் மனைவி, அவளுடையை மகளுக்கே, அந்த மாணவனை திருமணம் செய்து வைத்து தன்னுடன் வைத்து கொள்கிறாள். இந்த உண்மைகள் எல்லாம் தெரிந்த பின்னும் தான், தனது கணவனுடன் வாழ்ந்து குழந்தைகள் பெற்றதை எண்ணி குமட்டுகிறாள் ரொக்குசுகேவின் மகள். இறுதியில் ரொக்குசுகேவிடம் பணம் பெற்று வரும்படி தனது கணவன் துன்புறுத்தியபோது, அவனை கொன்றுவிட்டதாக சொல்கிறாள். அது கொலையில்லை. விபத்துதான்.  நான் பார்த்துகொள்கிறேன் என்று சொல்கிறார் செந்தாடி. தனது தந்தை, இறக்கும் தருவாயில் கஷ்டப்பட்டரா? என்று அழுதபடி கேட்கிறாள். செந்தாடி, இல்லை, நிம்மதியாக இறந்தார் என்று சொல்கிறார். ஆம், அது அப்படிதான் இருக்க வேண்டும். ஏனெனில், தந்தை தனது வாழ்க்கை முழுவதும் துன்பபட்டவர், என்கிறாள் மகள். உண்மையில், புற்றுநோயால் துடி துடித்து இறந்த ரொக்குசுகேவை நினைவு கூர்கிறான் யசுமோத்தோ. இப்படி வாழ்வின் விசித்திரங்களை விவரித்தபடியே செல்கிறது இத்திரைப்படம்.

கொஞ்ச, கொஞ்சமாக வாழ்க்கை பற்றியும், அந்த ஏழ்மையிலும் மக்கள் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருக்கும் பற்றையும், மனித நேயத்தையும் புரிந்து கொள்கிறான் யசுமோத்தோ. தனது ஒவ்வொரு படத்திலும் குரோசவா முன்வைத்தது தூய்மையான மனிதத்தைதான். குரோசாவாவின் கலையை உச்சகட்ட்த்திற்க்கு எடுத்து சென்றதும்,  அந்த மனித நேயம்தான்.

இப்போது மிகவும் நோய்வாய்பட்டிருக்கும் நிலையில் ஏதேனும் வேலை செய்து பணம் சம்பாதித்து மற்ற நோயாளிகளுக்கு உதவி செய்யும் சகாச்சியின் கதை சொல்லபடுகிறது. இப்படி சொல்லபடும் ஒவ்வொரு கதையும், ஒரு அழகான நாவல் போல் புதிர்களையும், இந்த வாழ்வின் தீராத மர்மங்களையும் சொல்லி செல்கிறது. எனவேதான் 180 நிமிடம் ஓடும் இந்த திரைப்படத்தின் எந்த ஒரு காட்சியும், அலுப்பை தரவில்லை.
மிகுந்த துன்பத்தில் இருக்கும், சகாச்சி, இனி நான் பிழைக்க போவதில்லை எனவே, என்னை எனது வீட்டுக்கு எடுத்து செல்லுங்கள் என்று சொல்கிறான். யசுமோத்தோவுடன் வீட்டுக்கு அனுப்பி வைக்கபட்ட பின், ஏற்படும் பூகம்பத்தால், சகாச்சியின் வீட்டு தோட்ட்த்தில் ஒரு எலும்பு கூடு கண்டெடுக்கபடுகிறது. அது தனது மனைவிதான் என்று அதிர வைக்கும் சகாச்சி தனது கதையை சொல்கிறான்.

ஒரு சந்தையில் சகாச்சி தனது மனைவியை சந்திக்கிறான். இருவருக்கும் அழகான காதல் மலர்கிறது. தனக்கு ஏழு உடன்பிறந்தோரும் நோய்பட்டிருக்கும் தந்தையும் இருக்கிறார்கள். தானே ஒரு ஒப்பந்தத்தில் வேலை செய்து வருவதால், திருமணம் செய்து கொள்ள இயலாது என்று சொல்கிறாள் காதலி. பனிதுளி போன்ற மனம் படைத்த, சகாச்சி தானே அந்த கடனை எல்லாம் அடைக்கிறேன். நாம் திருமணம் செய்துக் கொள்ளலாம் என்கிறான். அதுபடியே திருமணம் நடக்கிறது. இருவரும் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்க்கையை கொண்டாடுகிறார்கள். திடிரென ஒரு நாள் , சகாச்சி வேலைக்கு சென்றிருக்கும் போது, பூகம்பம் ஏற்பட்டு வீடு இடிந்து விழுகிறது. அங்கு வந்து தனது மனைவியை தேடும் சகாச்சி அவளை காணாமல், அவள் இறந்து விட்டாள் என்று நம்பி மனம் உடைகிறான்.



இரண்டு வருடம் கழித்து, இறந்து விட்டதாக நம்பிய மனைவியை எட்டு மாத கைக்குழந்தையுடன், ஒரு நாள் சந்தையில் சந்திக்கிறான். சகாச்சி, இது உன் குழந்தையா என்று கேட்க, ஆம் என்று சொல்லி அழும் குழந்தைக்கு பாலூட்டுகிறாள். என்னுடைய மனைவி, இன்னொருவன் குழந்தைக்கு பால் கொடுப்பதை பார்த்த போது, கத்தியால் குத்தப்பட்டது போல் உணர்ந்தேன் என்று சொல்கிறான், கதை சொல்லும் சகாச்சி. இருவரும் சந்திக்கும் இந்த இடத்தை, குரோசவா எடுத்திருக்கும் விதம், வார்த்தைகளால் விவரிக்க இயலாத ஒன்றாய் இருக்கிறது. சக மனிதர்களை எந்த கட்டுபாடுமின்றி நேசிக்கும் சகாச்சி, இப்போதும் தனது மனைவியிடம் ஒரு கடுஞ்சொல் சொல்பவனாய் இல்லை. தனது மனைவி பிரியும் இடத்தில், இனி சந்திக்க முடியாதா என்று சொல்லி தயங்கி, தயங்கி நிற்கிறான்.

வீட்டுக்கு வந்து ஒரு மூலையில் ஒடுங்கி படுத்து கிடக்கிறான் சகாச்சி. அங்கு திரும்பவும் வருகிறாள் அவனது மனைவி. என்னிடம், உன்னை ஏன் பிரிந்தேன் என்று கேட்க மாட்டயா? என்று கேட்கிறாள். உனக்கு விருப்பமிருந்தால் சொல், என்கிறான் சகாச்சி. சகாச்சியை சந்திக்கும் முன்னரே, தனது வீட்டுக்கு அருகில் வசிக்கும் ஒருவர் தனது குடும்பத்திற்க்கு பல உதவிகளை செய்து வந்ததாகவும், அவரையே திருமணம் செய்துகொள்ளும்படி தனது அம்மா வற்புறுத்தினாள் என்றும் சொல்கிறாள். அந்த நபர் மீது எனக்கு விருப்புமில்லை, வெறுப்புமில்லை. அந்த சமயத்தில் தான் சகாச்சியை சந்தித்து காதல்கொண்டு திருமணம் செய்து கொண்டதாய் சொல்கிறாள்.




திருமணத்திற்க்கு பின், திகட்ட திகட்ட இன்பத்தை கொண்டதாய் வாழ்க்கை இருந்தது. எந்த அளவுக்கு மகிழ்ச்சிகரமாய் இருந்தது என்றால், நான் ஏன் இவ்வளவு மகிழ்ச்சியாய் இருக்கிறேன் என்று பயப்படும் அளவுக்கு. நான் அந்த நபரை ஏமாற்றி வந்தவள். நான் இவ்வளவு மகிழ்ச்சியாய் இருக்க நியாயமில்லை என கருதி, அவ்வபோது தனிமையில் பயந்து வந்தேன் என்று சொல்கிறாள். அந்த சமயத்தில்தான் நில நடுக்கம் ஏற்பட்டது. இது இறைவன் எனக்கு கொடுத்த தண்டனை என கருதி, உன்னை பிரிந்து எனக்கு நானே தண்டனை கொடுத்து கொண்டு என்னுடைய பழைய நபரை தேடி போய் திருமணம் செய்துகொண்டேன் என்று சொல்கிறாள். திருமணத்திற்க்கு பின் அவள் மகிழ்ச்சியாய் இருந்தாய் சொல்கிறாள். ஆனால் உன்னை சந்தையில் திரும்ப பார்த்தவுடன், என்னுடைய கணவன், குழந்தை என அனைவரும் என்னைவிட்டு வெகு தூரம் சென்றுவிட்ட்தாய் உணர்கிறேன். உன்னை மட்டுமே நெருக்கமாய நினைக்கிறேன். என்னை இறுக்க தழுவி கொள்ள மாட்டாயா என்கிறாள். சகாச்சி தழுவி கொள்ளும் போது கத்தியால் தன்னை தானே குத்தி கொண்டு இறக்கிறாள். அவளை தனது வீட்டிலேயே புதைத்த சகாச்சி, தனது மனைவியின் கணவருக்கும், குழந்தைக்கும், தன்னால் துன்பம் நேர்ந்து விட்டது, எனவே நான் வாழ்நாள் முழுவதும் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று கருதியே, வேலை பார்த்து வந்ததாக சொல்லி இறக்கிறான்.

விபச்சாரம் நடக்கும் இடத்திற்க்கு சென்று அங்கு துன்பத்தில் உழலும் ஒரு சிறுமியை காப்பற்றி வருகிறார் செந்தாடி. தாயை இழந்த அந்த சிறுமி, பக்கத்து அறையில் விபச்சாரம் நடத்தும், பெண்ணால் கொடுமைக்கு ஆளாகி அடித்து துவைக்கபடுகிறாள். செந்தாடியும், யசுமோத்தோவும் அவளை காப்பற்ற முனையும் போது அங்கிருக்கும் ரவுடிகள் தாக்க முயல்கிறார்கள். தனது தற்காப்பு கலையால், அவர்களை அடித்து வீழ்த்தும் செந்தாடி, அந்த சிறுமியை கூட்டி வந்து யசுமோத்தோவின் முதல் நோயாளியாக அவனிடம் ஒப்படைக்கிறார்.




மிகுந்த மன அழத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கும், அந்த சிறுமிக்கு மனிதர்கள் மீது நம்பிக்கை போய்விட்டது. சதா சர்வ நேரமும், துணியால் தரையை துடைத்து கொண்டே இருக்கிறாள். அவள் துடைத்தெடுக்க நினைப்பது ச்முதாயத்தின் மீது படிந்து விட்ட அழுக்கையல்லவா? உதவி செய்ய வரும் யசுமோத்தோவை அவமானபடுத்துகிறாள். தொடர்ந்து போராடி அவளை வென்றெடுக்கிறார், செந்தாடி. காய்ச்சலில் படுக்கும் யசுமோத்தோவிற்க்கு பணிவிடை செய்வதன் மூலம், தனக்குள் ஒளிந்திருக்கும் மனித தன்மையை கண்டெடுக்கிறாள் ஒட்டோயா எனபடும் அந்த சிறுமி. அந்த மருத்துவமனையில் பசியின் கொடுமையால், அவ்வபோது வந்து திருடி செல்லும் ஏழு வயது சிறுவனுடன், அவளுக்கு நட்பு ஏற்படுகிறது. இந்த சிறுவனின் நடிப்பும், முகமும் நம் மனதில் வெகு நாட்கள் தங்கி விடும். தனக்கு இரண்டு சகோதரர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லும் அந்த சிறுவனிடம், நீ திருடுவது உனது வீட்டு நபர்களுக்கு தெரியுமா என்று கேட்கிறாள் ஒட்டோயா. அவர்களுக்கு தெரியும். ஆனால் தெரியாதது போல் முகத்தை வைத்து கொள்வார்கள் என்று அப்பாவியாக சொல்கிறான் அந்த சிறுவன்.

திருட வேண்டாம், நானே உனக்கு இரவு உணவு தருகிறேன் என்று சொல்கிறாள் ஒட்டோயா. சில நாட்கள் கழித்து வரும் அந்த சிறுவன், நாங்கள் அனைவரும் வேறு ஒரு நகரத்திற்க்கு செல்கிறோம். அங்கு பசியே இல்லை. பறவைகள் எந்நேரமும் அங்கு அழகாக பறந்து கொண்டேயிருக்கும். அந்த நகரத்திற்க்கு இன்று இரவே செல்கிறோம். என்று சொல்கிறான்.



அடுத்த நாள், அந்த வீட்டில் உள்ள அனைவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்கிறார்கள். அந்த சிறுவனை மட்டும் செந்தாடி காப்பாற்றி விடுகிறார். அந்த சிறுவனை கண்டு அழுகிறாள் ஒட்டோயா. ஒட்டோயாவின் கதை மட்டும் தாஸ்தோவெஸ்கியின் நாவல் ஒன்றில் இருந்து குரோசவாவினால் எடுத்தாளப்பட்டது. நான் இன்னும் அந்த நாவலை படிக்கவில்லை.

இவ்வளவு நிகழ்வுகளுக்கு பின், உண்மையான மருத்துவம் என்னவென்பதையும், மனித நேயத்தையும் கண்டு கொள்கிறான் யசுமோத்தோ. தான் அங்கேயே இருக்க போவதாக முடிவெடுக்கிறான்.
இந்த படத்தில் செந்தாடியாக ஆர்பாட்டமில்லாத இயல்பான நடிப்பால் ஈர்ப்பவர், குரோசாவாவின் ஆஸ்தான நடிகர், தொஷிரு மிஃபுனே. ரோஷோமோன் பட்த்தில் கொள்ளையனாகவும், செவன் சாமூராய் பட்த்தில் குடிகார சாமூராய் ஆகவும் நடித்தவர்தான் இவர். இவரும், தகாஷி சிமுராவும் தான் குரோசவாவின் ஆஸ்தான நாயகர்கள். தகாஷி சிமுரா செவன் சாமூராய் பட்த்தில் தலைமை சாமூராய் ஆக வருபவர். ரோஷோமோனில் விறகு வெட்டி.


குரோசவா ரசிகர்கள், நல்ல சினிமாவின் காதலர்கள், மருத்துவம் பயிலும் மாணவர்கள், இந்த படத்தை தவறவே விட கூடாது என பரிந்துரைக்கிறேன்.   

7 comments:

  1. பயனுள்ள பதிவு, நன்றிகள்

    ReplyDelete
  2. ஒரு நல்ல திரைப்படத்தை அறிமுகம் செய்ததற்கு நன்றி. நான் அவருடைய இகிறு, ரோஷோமொன் மட்டுமே பார்த்திடுர்க்கிறேன்.
    த.துரைவேல்

    ReplyDelete
  3. நான் படித்துவிட்டேன்.........அருமை........

    ReplyDelete
  4. ஜப்பானியப் படத்தின் காட்சிகளை அழகாய்ப் பதிவு செய்துள்ளீர். பாராட்டுகள் !

    ReplyDelete

Write your valuable comments here friends..