Friday, March 18, 2016

"ம்" - வலிந்து திணிக்கபடும் துரோகம்


ஈழத்தந்தை செல்வாநாயகம் சாத்வீகமான போராட்டங்களை கையிலெடுத்து அனைத்தும் தோல்வியைடந்து, இனி ஈழமக்களை கடவுள்தான் காப்பாற்றவேண்டும் என்று முடிவுரை எழுதி விடைபெறுகையில் அமிர்தலிங்கம் புதிய தலைவராக உருவெடுக்கிறார். இளைஞர்களால் கொண்டாடபடுகிறார். ஒவ்வொரு கூட்டத்திலும், இளைஞர்கள் தமது கையை அறுத்து அவருக்கு ரத்ததிலகமிடுகிறார்கள். கூட்டத்தில் தமது வசீகரமிக்க உரையினால் கர்ஜிக்கிறார் அமிர்தலிங்கம். அப்படி ஈழத்துக்காக உணர்வூட்டிய அமிர்தலிங்கம் பிறகு வரலாற்றின் ஒரு தருணத்தில் துரோகியாக அடையாளம் காணப்பட்டு களையயெடுக்கபடுகிறார். இப்படிபட்ட விநோதங்கள் நிரம்பியதுதான் ஈழப்போராட்ட வரலாறு.



கிறித்துவதுறவியாவதற்க்காக படித்துக்கொண்டிருக்கும் ஏர்னஸ்ட் நேசகுமாரன், 1981வருடம் யாழ்நூலகம் சிங்கள் டிஜிபி தலைமையில் எரிக்கப்படுகையில், மத்திய கல்லூரியின் ஆய்வுகூடத்தில் உள்ள ரசாயனங்களை கத்திமுனையில் கொள்ளையடித்து ஈழப்போராட்டத்தில் இணைகிறான்.காவல் நிலையத்தில் குண்டு வீச முற்ப்பட்டு தோல்வியடைகிறான். பேரினவாதம் ஒட்டுமொத்த தமிழ்மக்களையும் நாசமாக்கிகொண்டிருந்த அதே வேளையில்தான், வெள்ளாளர்கள், பள்ளர்களை அடக்கியாண்டுகொண்டிருந்தார்கள். சாதிகொடுமைக்கு எதிராக போராடபோகும் நேசகுமாரன் காவல்துறையிடம் பிடிபடுகிறான்.

ஒருபக்கம் சிங்களபேரினவாதம். எந்தவரைமுறையுமற்ற சித்ரவதைகள், கொலைகள், காவல்துறை அடக்குமுறைகள்.மறுபக்கம் தமிழ்இயக்கங்கள் இடையேயான பிரச்சினைகள், பழிவாங்குதல்கள் இதனூடாக அலைபாயும் ஒருவன் எப்படி தன்னை தக்கவைத்துகொள்கிறான் என்று சொல்லமுற்ப்பட்டிருக்கிறார் ஷோபா சக்தி.

ஈழப்போராட்டங்கள் குறித்து எழுதப்பட்ட புதினங்கள் அளவில் மிககுறைவே. இன்னும் எழுதபடாத மக்களின் பாடுகள் ஏராளம். ஆனால், தனது மற்றநாவல்களை போலவே இதிலும் ஷோபா சக்தி எழுதமுற்பட்டிருப்பது போரினுடாக அலைகழிக்கப்படும் தனிமனிதனின் அகசிக்கல்களையே.

காதுதுவாரத்தில் பென்சிலை நிறுத்தி சுத்தியால் அடித்து உள்ளே இறுக்கி உண்மையை வரவழைக்கும் சிங்கள காவல் அதிகாரி உடுகம் பொல, பிடிபட்டவனின் இயக்க பேரை கேட்டு குழப்பம் அடைகிறார். விடுதலைக்காக போராடுவது எல்லாம் இருக்கட்டும். முதலில் இயக்க பேரை ஒழுங்காக சொல். அது ரெலோ தானே (TELO) என்கிறார். இல்லை சேர், றெலோ என்கிறார் கைதி. உண்மையில் RELO என்று ஒரு இயக்கம் இருந்ததை அவர் அறியவில்லை.  கள் குடித்ததற்காக தனிமனிதர்கள் மன்னிக்கலாம், அமைப்பு மன்னிக்ககூடாது அல்லவா தோழர் என்று கேட்டு பெல்ட்டால் அடிக்கும் நேசகுமாரன், அங்கேயாவது பெரிய அதிகாரிகள் மட்டும்தான் அடித்தார்கள், இங்கே வர்றவன், போகிறவன் எல்லாம் அடிக்கிறான். இதுதான் அதிகார பரவலாக்குதலா என்று கேட்கும் பக்கிரி என முழுக்க முழுக்க வலியாலும், ரத்தத்தாலும் நிரம்பிய பக்கங்களில் தனது பகடிகள் மூலம் இன்னொரு பரிணாமத்தை அளிக்கிறார். இந்த கூர்மையான கிண்டல் ஷோபாசக்திக்கு எளிதாக கைவருகிறது. சொந்தமண்ணில் இருந்து பிரிந்து பலவருடம் பல இன்னல்களுக்கிடையே ஐரோப்பிய தேசத்தில் தஞ்சம் புகுந்து கிடைத்த அனுபவங்கள், அவருக்கு எல்லாவற்றையும் அங்கதத்துடன் பார்க்கும் பார்வையை அளித்திருக்கிறது.

83 கலவரம், வெலிகடா சிறைச்சாலை படுகொலை, மட்டகளப்பு படுகொலை, கந்தன்கருணை படுகொலை என எல்லா சம்பவங்களிலும் நேசகுமாரன் இருக்கிறான். திரும்ப திரும்ப துரோகத்தால் மட்டும் தப்பி பிழைக்கிறான். போலிசிடம் அடிவாங்கும்போதும், கொள்கைக்காக என இறுமாப்புடன் கிடக்கும் அவன், ஜட்டி கிழிக்கப்படும் கணத்தில் ப்ளிஸ் சேர் என்று கெஞ்சி நிலைமாறும் கணம், அதிகாரத்தின் வலிமை மிகுந்த கைகளின் முன்பு, குறைந்தபட்ச சுயமரியாதை கொண்ட எவனும் நிலைகுலைவான் என்பதை நிறுவுகிறது. ஆனால், அதற்கு பின்பு அந்த பாத்திரத்திடம் ஏற்படும் மாற்றங்கள் எந்த தர்க்கத்துக்கும் உட்படாதவை. மனிதமனம் உச்சக்கட்ட நெருக்குதலில் எப்படி செய்லாற்றும் என்பதை பகுத்தறியமுடியாதுதான். ஆனால் இங்கே நேசகுமாரனிடம் ஷோபா சக்தி துரோகங்களை வலிந்து திணிக்கிறார். கண்ணெதிரே கலைசெல்வன் கொல்லபடும்போதும், கைக்குழந்தையின் தாய் துப்பாக்கிகுண்டை ஏற்று விழும்போதும், நேசகுமாரன் அதை எதிர்கொள்ளும்விதம் குறித்து எந்த விவரிப்புமில்லை. சம்பவங்களை மட்டும் சொல்லிசெல்லும் பாணியைதான் ஷோபா சக்தி கடைப்பிடிக்கிறார் எனினும், இதனாலயே நேசக்குமாரனின் பாத்திரம் பிளாஸ்டிக் வார்ப்பு போல் எந்த தாக்கத்தையும் நம்மிடையே ஏற்படுத்தாது விழுகிறது.




மனிதமனதின் இருண்மையை சொல்வது சரி. ஆனால் அந்த இருண்மையின் ஊடாக நாவலாசிரியன் சென்றடையும் இடம் எது என்பது முக்கியம். அப்படி அந்த பயணம் அமையவில்லையெனில் இது வெறும் சம்பவங்களின் தொகுப்பாக, இப்படி இவன் எதிர்வினையாற்றினான் என்பதோடு முடியும் ஒரு கதையாக மட்டுமே இருக்கும். அதற்கு மேல் இந்த நாவல் இலக்கியமாக ஏற்றுக்கொள்ளபட எந்த தரிசனமும் இதில் இல்லை. இவ்வளவு நீண்ட நெடிய வரலாறு, கண்ணெதிரே நடக்கும் கொலைகள், செய்யும் துரோகங்கள், பல்வேறு ரத்தகறை படிந்த சம்பவங்கள் வழியே பயணிக்கும் ஒருவன் சென்றடையும் இடம், அடையும் தரிசனம் என்று ஒன்று இருக்குமில்லையா? அப்படி எதுவும் இதில் இல்லை. இதுவே இந்த நாவல் இலக்கிய ரீதியாக தன்னை நிறுவிகொள்ளாமல் தோற்கும் இடம். எல்லாவற்றுக்கும் மேல் அவன் பக்கிரிக்கு செய்யும் துரோகம், நிறமிக்கு இழைக்கும் படுபாதகம் போன்றவை வலிந்து திணிக்கபடும் பாவனையான துரோகங்களே. அதில் எந்த உண்மையுமில்லை. நிறமியின் பகுதி வெறும் அதிர்ச்சி மதிப்பீட்டிற்க்காக எழுதப்பட்ட ஒன்றாக துருத்திக் கொண்டு நிற்கிறது.  ஃப்க்கிங் வெபன்ஸ் என்று துப்பாக்கி முனையை சலிப்புடன் தள்ளும் பக்கிரியின் கதாபாத்திரத்துக்கு செய்த நியாயத்தின் ஒரு பகுதியை கூட நாவலின் முக்கிய பாத்திரத்துக்கு செய்யாததால், உண்மைதன்மையின்றி படைப்பு தள்ளாடுகிறது.

ஒரு தேர்ந்த சிறுகதை எழுத்தாளனாக, தனது கூர்மையான பகடிகள் மூலம், வரலாற்று அபத்தங்களை தனது தனித்துவ நடையில் எழுதி ஈர்க்கும் ஷோபா சக்தி, ஒரு நாவலாசிரியனாக இந்த நாவலில் செல்லும் தூரம் குறைவே.

No comments:

Post a Comment

Write your valuable comments here friends..