நமுக்கு பார்க்கான் முந்திரி தோப்புகள் 1986ல் பத்மராஜன் இயக்கத்தில், மோகன்லால் நடிப்பில் வெளிவந்த மலையாள திரைப்படம். மலையாளத் திரைப்படங்கள் ஏன் திரும்ப திரும்ப புகழப்படுகின்றன? என்ற கேள்வியிருப்பின், இந்த படத்தை பார்க்க பரிந்துரைக்கிறேன்.
ஒரு அழகான மாலை பொழுதில், இந்த படத்தை பார்க்க நேரிட்டு எனது பால்ய கால நினைவுகளால் மீட்டப்பட்டேன். எந்த திடுக்கிடும் திருப்பங்களோ, அதீதமாய் உணர்வுகளை பொங்க வைக்கும் காட்சிகளோ இந்த படத்தில் இல்லை. தெளிந்த நீரோடை போல் அமைதியாக பயணிக்கும் இந்த காதல் கதையில், ஒரு கட்டத்தில், நாம் ஒரு திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதை மறந்து கதையோடு ஒன்றியிருப்போம்.
நாயகன் சாலமன்(மோகன்லால்), பணக்கார சிரியன் கிறித்துவ குடும்பத்தை சேர்ந்தவன். திராட்சை தோட்டம் பயிர் செய்து அந்த தோட்டத்திலேயே தனது பெரும்பாலான நேரத்தை செலவழிப்பவன். ஒரு நாள் ஊருக்கு திரும்பும்போது, பக்கத்து வீட்டில் புதிதாக குடிவந்துள்ள நாயகி ஷோஃபியாவைப் (சாரி) பார்க்கிறான். காதல் அரும்புகிறது. எப்பவும் தோட்டத்திற்க்கு உடனடியாக திரும்பிவிடும் சாலமன், மேலும் சில நாட்கள் தனது தாயாருடனும், தம்பியுடனும் (வினித்) சந்தோஷமாக நாட்களை கழிக்கிறான். இந்த பகுதியில், ஒரு அழகான குடும்பமும், அதனுடன், பக்கத்து வீட்டு பெண்களுக்கு ஏற்படும் நட்பும் அழகான காட்சிகளாய் விரிகின்றன.மோகன்லால் தனது காதலை சொல்லும் விதமும், அதை ஷோஃபியா ஏற்றுக்கொள்ளும் இடமும் ஒரு இனிய கவிதை.
இதற்க்கிடையில் சாலமனுக்கு ஷோஃபியை பற்றி தெரியவருகிறது. ஷோஃபியின் தாய்க்கு திருமணத்திற்க்கு முன் ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டு அதன் மூலம் பிறந்தவள்தான் ஷோஃபி. ஷோஃபியின் தந்தை திருமணம் செய்ய மறுக்க, இவர்கள் இருவரையும் ஏற்கிறார் ஆண்டனி(திலகன்). தன் மூலம் பிறக்கும் இரண்டாவது பெண் குழந்தை மேல் பாசம் வைக்கும் ஆண்டனி, ஷோஃபியை வெறுக்கிறார். தான் செய்த தியாகத்தை அவ்வபோது நினைவுபடுத்தி, அதை ஒரு முதலீடாக கொண்டு, தனது மூத்த பெண் ஷோஃபியை தன்னுடன் வேலை பார்க்கும் தனது குடி நண்பனுக்கு கட்டாய திருமணம் செய்து வைக்க பார்க்கிறார்.மேலும், தனது மூத்த பெண் ஷோஃபியின் மேலேயே காம இச்சைக் கொள்கிறார் ஆண்டனி. இதை எல்லாம் அறிந்துக் கொள்ளும் மோகன்லால், ஒரு முறை, ஷோஃபியை குடித்து விட்டு அடித்து நொறுக்கும் ஆண்டனியை தடுக்க, அவருடைய வீட்டிற்க்குள் நுழைய, ஆண்டனி மோகன்லாலை உதைத்து அவமானப்படுத்துகிறார்.
இவ்வளவு நாளும் தனக்கு அடங்கிப் போன தனது குடும்பமும், மகளும் திடிரென்று ஒருவன் வந்தவுடன் தன்னை அவமதிக்க துணிந்து விட்டார்கள் என்பதை எண்ணி ஆண்டனி துடிக்கிறார். வேறு ஒருவனால் ஏமாற்றப்பட்ட பெண்ணுக்கு தான் தியாகம் செய்து வாழ்க்கை கொடுத்ததாய் நம்புகிறார். தனது எல்லா கீழ்மைகளையும், மற்றவர் மறந்திட, அது ஒன்று மட்டுமே போதும் என்று எண்ணுகிறார். அது மாதிரியான தியாகத்தை தான் மட்டுமே செய்ய முடியும் என்று நினைக்கிறார். ஷோஃபியின் தந்தை, தான் இல்லை, என்று ஷோஃபியை பெண் கேட்டு வரும் சாலமனின் தாயாரிடமும், சாலமனிடமும் தெரிவிக்கிறார். இதையும் மீறி ஷோஃபியை மணமுடிக்க கெளரவமிக்க, சாலமன் குடும்பம் , முன்வராது, என்று இறுமாப்புடன் வேலைக்கு கிளம்பி செல்கிறார். அதை போலவே, சாலமனின் தாயார் இந்த திருமணம் வேண்டாம் என்று சொல்கிறார். ஆனால், இதை எல்லாம் முன்பே ஷோஃபியின் மூலம் அறிந்திருந்த சாலமன் தனது முடிவில் உறுதியாக இருக்கிறான். தொடரும் நிகழ்வுகளில், எப்படியும் ஷோஃபியை, சாலமன் திருமணம் செய்து கொள்வான் என்பதை அறிந்துக் கொள்ளும் ஆண்டனி, கடும்கோபம் கொள்கிறார்.
ஒரு நாள் ஷோஃபியை பலவந்தபடுத்தி கற்பழித்து விடுகிறார். கோபத்தில் துடிக்கும் மோகன்லாலிடம், ”இனி, நீ அவளை கூட்டிக் கொண்டு போ” என்று ஏளனமாக சொல்கிறார். இதை சொல்லும் போது திலகன் வெளிப்படுத்தும் நடிப்பும், உடல்மொழியும், கிண்டல் கலந்த தொனியும், மேதமையின் உச்சம் என்றுதான் சொல்ல வேண்டும்.
இதை அறிந்துக் கொள்ளும் சாலமனின் தாயார், இனி ஒருபோதும் தன்னால் திருமணத்திற்க்கு ஒத்துக் கொள்ள இயலாது என்று அறிவிக்கிறாள். சாலமன், இனி இங்கு வர மாட்டேன் என்று சொல்லி தனது தோட்டத்திற்க்கு ஜீப்பில் கிளம்பி செல்கிறான்.
அன்று இரவே, தனது லாரியில் கிளம்பி வந்து ஷோஃபியின் வீட்டருகே நிறுத்தி ஹாரன் அடிக்கிறான். ஷோஃபி வரவில்லை என்றவுடன், வீட்டின் கதவை தட்டுகிறான். கதவை திறக்கும் ஆண்டனி கத்தியுடன் பாய்கிறார். அவரை தட்டி கிழேத் தள்ளும் சாலமன், ”நான் வர மாட்டேன் என்று நினைத்தாயா” என்று கேட்டுவிட்டு தனது ஷோஃபியுடன் லாரியில் ஏறி திராட்சை தோட்டத்திற்க்கு செல்கிறான். ஆண்டனியின் கீழ்மையை தனது எல்லையற்ற பேரன்பினால் விழ்த்தி சாய்க்கிறான் சாலமன். இதை ஒளிந்திருந்து காணும் சாலமனின் தாயார் மகிழ்வுடன் பெருமூச்சி விடுகிறார்.
இரு எதிரெதிரான பாத்திரப்படைப்பில் அற்பத்தனத்தையும், பேரன்பையும் மோத விட்டு பார்ப்பவர்களை நெகிழ்த்துகிறார் பத்மராஜன். இந்த பாத்திரங்களில் திலகனையும், மோகன்லாலையும் போல் பொருந்துகிற வேறு நடிகர்கள் இல்லை என்று தோன்றுகிறது.
ஜான்ஸன் மாஸ்டரின் இசை கனகச்சிதமாக படத்துடன் இணைந்து படத்தை வேறு ஒரு நிலைக்கு உயர்த்துகிறது. குறிப்பாக மோகன்லால் தனது காதலை சொல்லும் அந்த இடத்தில் வரும் பின்னனி இசை, அந்த காட்சியை எந்த காலத்திலும் மறக்க இயலாத ஒன்றாய், நம் மனதில் நிறுத்துகிறது.
ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்கு முன் வந்த இந்த திரைப்படத்தை, இன்றும் உலகின் ஏதோ ஒரு மூலையில் யாரோ ஒருவர் பார்த்து அந்த பேரன்பிலும் பெருங்கருணையிலும் நெகிழ்கிறார். வாழ்வை உணர்ந்துக் கொள்ளும் உச்ச தருணங்கள் அல்லவா அவை?
மிக சிறந்த திரைப்படம், இப்படத்தினை குறித்து எழுத நினைத்து வேறு யாரேனும் எழுதியிருக்கின்றார்களா என கூகிளியதில் இங்கே வந்தேன். அருமை.
ReplyDeleteநன்றி நாடோடி இலக்கியன்.
Delete