ஒழிமுறி பார்த்தேன்.. திரையில் ஒரு கிளாசிக் நாவலை படித்தது போல் இருந்தது. ஜெயமோகன், வசனம் எழுதும் எல்லா படங்களுக்கும், கதை, திரைக்கதையும் அவரே எழுதினால், எவ்வளவு நன்றாக இருக்கும் என்று தோன்றியது. மனித மனம் கூர்மையாக தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்டு போட்டுச் செல்லும் வேடங்களை, இதை விட அழகாக சொல்ல முடியாது.
கேரளத்தில், பெண்களுக்கே சொத்துரிமை என்று ஒரு காலக்கட்டம் இருந்தது. அந்த உரிமையின் காரணமாக பெண்களே, ஆண், பெண் சமூக அடுக்கில் அதிக அதிகாரம் பெற்றவர்களாக இருந்தார்கள். அப்படி, ராணி போல் வாழும் காளிப்பிள்ளை(ஸ்வேதா மேனன்), தனது கணவன் சிவன்பிள்ளையை (லால்) ஒரு புழுவை போல் நடத்துகிறாள்.தந்தையிடம் பாசம் கொண்ட சிறுவன் தாணுப்பிள்ளை(லால்), இதை கண்டு கலங்குகிறான். ஒரு நாள், வேலைக்காரியிடம், சிவன்பிள்ளையின் வெற்றிலைப்பெட்டியை தூக்கி வெளியே வைக்க சொல்கிறாள், காளிப்பிள்ளை. அந்த நாள் முதல், வீட்டின் திண்ணையில், ஒரு நாய் போல் வாழ்ந்து மறைகிறார் சிவன் பிள்ளை. இதை போல் தனது வாழ்க்கையும் ஆகிவிட கூடாது என்று நினைக்கும் தாணுப்பிள்ளை, தனது மனைவி மீனாட்சியை (மல்லிகா) அடக்கி ஆள்கிறார். தொட்டதெற்க்கெல்லாம் அடித்து நொறுக்கிறார். தாய் காளிப்பிள்ளை, மகனால் கைவிடப்பட்டு அனதையாக சாலையில் விழுந்து இறக்கிறார். இதைக் கண்டு மனம் குமுறும் மகன் சரத்(ஆசிப் அலி) தனது தந்தையை வெறுக்கிறான். இப்படியாக ஒரு வட்டத்தில் வந்து முட்டி நிற்கிறது வாழ்க்கை.
தனது மகன், தன்னை வெறுக்கிறான் என்பது காளிப்பிள்ளைக்கு நன்றாக தெரிந்திருக்கிறது. ஆனாலும், சாகும் கட்டத்தில், எல்லா தவறுக்கும் காரணம் தனது மருமகள்தான் என்று பழியை மீனாட்சியின் மீது போட்டு விலகுகிறாள், காளிபிள்ளை. எல்லா தாயும், தன் மகனை நல்லவன் என்றும், தன் மருமகளால் தான் அவன் கெட்டுவிட்டான் என்றும் நம்புவதற்க்கு காரணம், உண்மையை சந்திக்கும் திராணி இல்லை என்பது மட்டுமின்றி, தன்னுடைய வித்தில் எந்த தவறுமில்லை என்றுத் தன்னைதானே நம்ப வைத்துக் கொள்ள போட்டுக் கொள்ளும் நாடகமும் தான். அதேப் போல், மகாராணி போல் வாழ்ந்த தன்னுடைய தாய், சாலையில் அனதைப் போல் இறந்து கிடந்ததற்க்கு காரணம் நாம் தான் என்பது நன்றாக தெரிந்திருந்தும், அந்த பழியை தூக்கி சுமக்க இயலாது, மனைவி மீது குற்றம் சுமத்தி தன்னைத்தானே நல்லவன் என்று தாணுபிள்ளை ஆசுவாசப்படுத்திக் கொள்வதும், ஒரு வகையில் உயிர் வாழும் வேட்கையின் இயல்புதானோ?
முதலில், தன் தந்தை போல், மனைவியிடம் அடிமைப்பட்டு வாழாமல் இருக்கும் பொருட்டு, தனது மனைவியை அடக்கி ஆள முரடன் வேடம், பின்பு, தந்தையின் மீது உள்ள பாசத்தால், தாயை பழிவாங்குவதாய் போட்டுக் கொள்ளும் வேடம், பிறகு எல்லா பழியையும் மனைவி மீது போட்டு விடுவதால் ஏற்படும் குற்ற உணர்வு, இறுதியில் மனைவியால் நிராகரிக்கப்படும் போது தன்னுடைய, இத்தனை நாள் வாழ்க்கையும் அர்த்தமில்லாதது என்று உணரும் தருணம் என்று தாணு பிள்ளையின் வாழ்வுதான் பரிதாபமானதாகவும், கொடியதாகவும் இருக்கிறது.
மீனாட்சி அம்மாளின் வாழ்வு மிக துன்பகரமானது என்ற போதிலும், அவள் தம் மகன் பொருட்டு எல்லாவற்றையும் தாங்கிக் கொள்பவளாய், தன்னுடைய நிலையைத் தெளிவாக உணர்ந்திருப்பவாளாய் இருக்கும் காரணத்தினாலேயே, எல்லா நிகழ்வுகளையும், தன்னுடைய புரிதலால் தாண்டி செல்கிறாள். சூழ்நிலையின் தீவிரம் உணர்ந்து எதிர்நீச்சல் போடும் நபர்களை விட, சூழ்நிலையின் தீவிரத்தால், காட்டற்று வெள்ளத்தில் அடித்து சொல்லபடும் நாணலாய், அலைக்கழிக்க படும் நபர்களின் வாழ்வே துன்பகரமானது.
கொஞ்சம், கொஞ்சமாய் சரத் தனது தந்தையைப் புரிந்துக் கொள்ளும் வகையில் காட்சிகள் விரிவது இயற்க்கையாக இருக்கிறது. பாவனா, சரத் இருவரிடமும் ஏற்படும் காதல், அழகாக கவர்கிறது. அந்த காதல் குறித்து உணர்ந்துக் கொள்ளும் தாணுபிள்ளை, தனது மகனுக்கு சொல்லும் அறிவுரை, வாழ்க்கையை வேறு ஒரு கோணத்தில் வாழ்ந்து பார்த்தவனின் வார்த்தைகள்.
ஜெயமோகன், ஏற்கனவே தனது வாழ்க்கை சம்பவங்களாய் எழுதியுள்ள பல நிகழ்வுகள் படத்தில் வருவதாலும், கதை நடக்கும் சூழலாலும், அடிக்கடி, சரத் கதாபாத்திரத்துடன் ஜெயமோகனை பொருத்தி பார்க்கிறது மனது.
லால், ஸ்வேதா மேனன், பாவனா, ஆசிப் அலி, இளவரசு என எல்லா பாத்திரங்களும் திறம்பட செய்துள்ளனர். மல்லிகா கணவனிடம் கஷ்டப்படும் போது காட்டும் நடிப்பு இயல்பானது. ஆனால், நீதிமன்ற காட்சிகளில், நடிப்பு போதாது. லாலின் பாத்திரத்தில், திலகன் செய்திருந்தால், படம் இன்னும் ஒரு உச்சத்தை தொட்டிருக்ககூடும்.
அழகாய் ஆடும் ஊஞ்சலை போல், முன்பின்னாய் நகரும் திரைக்கதை, நம்மை படத்துடன் கட்டிப் போடுகிறது. மலையாளத்தை எழுபது சதவிகிதம் வரைதான் புரிந்துக் கொள்வேன் என்பதால், ஒரு சில வசனங்களை இழந்திருக்க கூடும். ஆனால் வசனங்கள் ஒவ்வொன்றும், கூர்மையாக தைக்கிறது. அவ்வளவு கச்சிதம். இசையும் மிக இயல்பாக படத்துடன் பொருந்தியுள்ளது.
இந்த படம், தமிழில் வெளிவரும் பட்சத்தில் மருமக்கள் வழி மான்மியமும், அதன் விளைவுகளும் தமிழ் ரசிகர்களுக்கு புரியுமா? என்று தெரியவில்லை. காளிபிள்ளையின் பாத்திரத்தை சொர்ணாக்கா என்று புரிந்துக்கொள்ளும் அபாயங்களும் உள்ளது. எப்படியிருப்பினும் இந்த படம் ஒரு காவியம். இதை, ஒரு முறை பார்த்து, அவ்வளவு எளிதாக கடந்துச் செல்ல யாராலும் இயலாது என்பதுதான் உண்மை.
/// மனித மனம் கூர்மையாக தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்டு போட்டுச் செல்லும் வேடங்களை, இதை விட அழகாக சொல்ல முடியாது. ///
ReplyDeleteமுடியும்! பார்க்க- ஈஸ்ட் இஸ் ஈஸ்ட் - ஓம் புரி நடித்த ஆங்கிலப் படம்.
சரவணன்