Tuesday, December 25, 2012

டெல்லி பயங்கரமும், தினமணி தலையங்கமும்


பூண்டி கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலம். தஞ்சை நோக்கி விரைந்து கொண்டிருந்த பேருந்தில், நிற்க கூட இடமில்லை. தொல்காப்பியர் சதுக்கம் அருகே வந்த போது, அந்த குரல் எழுந்தது. "கையை எடுறா, நாயே.." ஒரு தாவணி அணிந்த பெண் சீறினாள். பொறுக்க முடியாமல் சீறிவிட்டாளே  தவிர, உடல் முழுவதும் நடுங்குகிறது அவளுக்கு. அவள் அருகில் நிற்கும், அவளது தாய், "சும்மா இரும்மா" என்று தவிக்கிறாள். "நானும் பாத்துட்டே இருக்கேன், கண்ட இடத்திலே கை வைக்கிறான்மா"  என்று கூறியபடி கதறி அழுகிறாள், அந்தப்  பெண்தனது பெண்ணின் மானத்தை காக்கிறோம் என்று நினைத்துக் கொண்டு, அந்த பைத்தியக்கார தாயார் தொடர்ந்து அந்த பெண்ணை பேச விடாமல் தடுக்குகிறார். அந்த பொறுக்கி தலை குனிந்தபடி, பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் தனது நண்பர்களுடன் பஸ்ஸில் இருந்து குதித்து வெளியேறுகிறான். பேருந்தில் இருக்கும் அனைவரும் தமக்கு சம்பந்தமில்லாத நிகழ்வு போல் அமைதி காக்குகிறார்கள்.  என்னருகே உட்கார்ந்திருந்த ஒரு நாற்பது வயது மதிக்கத்தக்க, நாகரீகமாக அடையணிந்திருந்த அந்த நபர் "சரியா தடவியிருக்க மாட்டான்.." என்றான். இதை  சொன்ன போது, என்னை பார்த்து சிரித்தான்.

டெல்லியில் ஓடும் பேருந்தில் ஒரு பெண், ஆறு பேர் கொண்ட கும்பலால்,  பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுகிறாள். வல்லுறவுடன் அந்த பெண்ணை விட்டுவிட விரும்பாத அந்த கும்பல், இரும்புத் தடியைக் கொண்டு அந்த பெண்ணின் யோனிக்குள் சொருகி குடலை கிழித்து பின்பு அவளை வெளியே தூக்கி வீசுகிறார்கள். இதைத்  தடுக்க முயன்ற அந்த பெண்ணின் ஆண் நண்பரையும் தடியால் தாக்கி வெளியே எறிகிறார்கள்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, நாடே பற்றி எரிகிறது.   நினைத்துக் கூட பார்க்க முடியாத இந்த வெறி சம்பவத்தை பற்றி தலையங்கம் எழுதும் தினமணி  கீழ்க்கண்டவாறு ஆரம்பிக்கிறது.
<பாதிக்கப்பட்ட துணை மருத்துவ மாணவி ஒரு வளர்இளம் பெண். ஆனால், தனது அறிவீனத்தால் இத்தகைய நேர்வில் சிக்கினார். தனது அறியாமையால் தனக்குத் துன்பத்தைத் தேடிக்கொண்டார். குற்றவாளிகளைத் தண்டிக்கச் சொல்லும் அதேவேளையில், இந்த மாணவியின் செயலை யாரும் பேசக்கூடவில்லை.>

சரி, அந்த பெண் ஏதோ தானே வலிய  சென்று, இந்த துன்பத்தில் சிக்கிக் கொண்டார் என்று தோன்றுகிறதா?. அந்த பெண் செய்த கொலைபாதக செயல் தான் என்ன? மேலே படிப்போம். 

<துணை மருத்துவப் படிப்பு தொடர்பான பயிற்சிக்காக தில்லி வந்துள்ள, டேராடூன் கல்லூரியின் மாணவி, கணினி நிறுவனத்தில் பணிபுரியும் தனது ஆண் நண்பரான பொறியியல் பட்டதாரியுடன் ஒரு ஞாயிற்றுக்கிழமையை இனிமையாகக் கழிப்பது அவரது விருப்பம். ஆண் நண்பர்களுடன் ஷாப்பிங் மால் செல்வதும், இரவு விருந்துக்குச் செல்வதும் அவரது உரிமை.>

எப்படி வன்மம் தெறிக்கிறது பாருங்கள்? <ஆண் நண்பர்களுடன் ஷாப்பிங் மால் செல்வதும், இரவு விருந்துக்குச் செல்வதும் அவரது உரிமை.> உள்ளங்கை நெல்லிக்கனி போல்  ஆணாதிக்க சிந்தனை பப்பரக்கா, என பல் இளிக்கும் இந்த வரிகளை கூட புரிந்துக் கொள்ள முடியாதெனில் விவாதித்து மட்டும், இவர்களை வெளிச்சத்திற்கு கொண்டுவர முடியுமா என்ன?

ஒரு வயது வந்த பெண் படிக்க வந்த இடத்தில ஒரு ஆண் நண்பருடன் வெளியே செல்வது தவறா? தவறெனில் நாம் எந்த மாதிரியான சமுதாயத்தில் வாழ்கிறோம்? மேலும் தொடர்கிறார்,  அந்த தலையங்கத்தை எழுதிய தன்னிகரில்லா பண்பாட்டு காவலன்.

<இரவு 9.30 மணிக்கு, ஒரு தனியார் சொகுசுப் பேருந்தில், அதுவும் பெண்களே இல்லாமல் முரட்டு வாலிபர்கள் மட்டுமே இருந்த தனியார் பேருந்தில் பயணம் செய்யும் அளவுக்கு அறியாமையில் இருந்திருக்கிறார். அந்த இரவு வேளையில் அதைப்போன்ற ஆபத்தை அழைக்கும் செயல் வேறேதுமில்லை என்பதை அந்த மாணவியோ, அல்லது அவரது ஆண்-நண்பரோ ஏன் உணர்ந்திருக்கவில்லை?>

அரசு பேருந்திற்க்கு காத்திருக்கிறோம். வர நேரமாகிறது. அந்த வழியே செல்லும் ஒரு தனியார் பேருந்து நிறுத்தி, பாலம் செல்வதாக, உள்ளே இடமிருப்பதாக கூறினால்,  நாம் என்ன செய்வோம்? மேலும் முழுக்க கருப்பு கண்ணாடி கொண்டு மறைக்கப்பட்டிருக்கும் பேருந்தின் உள்ளே இருப்பவர்கள் யார் என்று மை போட்டு பார்த்து தெரிந்துக் கொள்ளவேண்டும் என்று சொல்கிறதா  தினமணி? அவர்கள் அப்படியே வெளியே தெரிந்தாலும், நம்மை போல் அவர்களும் சக பயணிகள்தான் என்று தானே நினைக்க தோன்றும் ? மேலும் தன்னுடன் ஒரு ஆண் நண்பர் இருக்கும்போது என்ன ஆபத்து நேர்ந்து விட போகிறது என்று யோசித்தது ஒரு தவறா? இந்தியா ஒரு ஜனநாயக நாடு. ஓரளவு கல்வியறிவு பெற்ற, கலாச்சாரம் வளம் மிகுந்த, பாதுகாப்பு உடைய நாடு என்று யோசித்ததுதான் அந்த பெண் செய்த ஒரே குற்றமா?


மேலும் தொடர்கிறார், 

<ஆண்-நண்பர் தன்னுடன் இருக்கும் தைரியத்தில், பயணிகள் குறைவாக இருக்கும் ரயில்பெட்டியைத் தேடி ஏறுவதையும், பேருந்தில் பின்இருக்கையைத் தேடிப்பிடித்து சிரித்துக் கொஞ்சிப்பேசுவதையும் பெருநகரங்களில் காண முடிகிறது. இது அவர்களது தனிப்பட்ட விருப்பம். >

தொடர்ந்து, அது அவர்களது விருப்பம் என்று சொல்லிக் கொண்டே, காழ்ப்பை உமிழ்கிறது, இந்த தலையங்கம்.  அட பாவிகளா ? ஒரு ஆணுடன், ஒரு பெண் பேசி சிரிப்பதும் தவறா, இந்த பாரதி வாழ்ந்த பூமியில் ? நெஞ்சு பொறுக்குதில்லையே..

<உடலை அதிகம் வெளிப்படுத்தும் ஆடைகளைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்வதும், பெண்கள் மதுக்கூடங்களைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்வதும், நேரத்தோடு வீடு திரும்ப வேண்டும் என்பதும் ஆணாதிக்க உலகத்தால் பெண்களுக்கு விதிக்கப்படும் தடைகள், கட்டுப்பாடுகள் என்று பெண்ணியவாதிகள் விமர்சனம் செய்கிறார்கள். முள் பட்டாலும் முள்ளில் இட்டாலும் முதலில் கிழிவது துணிதான்..>

இதோ பூனை வெளியே வந்துவிட்டதா? அவ்வபோது பெண்கள் சிகரெட் குடிப்பது போலவும், டிஸ்கோத்தே அரங்கில் ஆடிக் கொண்டிருப்பது போலவும், உலக மகா யோக்கியர்கள், தினமலரில் போட்டோ எடுத்து  போடுவார்கள். "கெட்டு போன சென்னை", "காலம் மாறி போச்சு" என்ற நெஞ்சை அள்ளும்,    தலைப்புகளில். அவர்கள் கூற விரும்புவது, இதெல்லாம் செய்ய, ஆண்களுக்கு மட்டுமே லைசன்ஸ். பெண்கள் செய்தால் உலகம் அழிந்து விடும். பண்பாடு உருகி விடும். ஆண்கள் எந்த கேப்மாறித்தனமும் செய்யலாம். தன்னிடம் வேலைப் பார்க்கும் பெண்ணுக்கு, கேவலமான குறுந்தகவல் அனுப்பலாம். யோக்கிய சிகாமணிகளுடன் சேர்ந்து, பாஷா பாருக்கு செல்லலாம். குடித்துவிட்டு கார் ஓட்டி,  பீச்சுக்கு சென்று சத்தமாக பாட்டு கேட்கலாம். வீட்டு பெண்கள் வெளியே வரலாமா? அடுக்குமா? யார் வீட்டு பெண்ணையோ, அநாகரீகமாக  இப்படி போட்டோ எடுத்து போட, எவன்  அவர்களுக்கு உரிமை கொடுத்தது? எந்த பெண்ணும் தன்னை எதிர்த்து வெளியே வந்து கேள்வி கேட்கமாட்டார்கள் என்ற தைரியத்தில்தானே, தினமலர் தொடர்ந்து இந்த கேவலமான செயலை செய்து வருகிறது?

தினமலர் அந்துமணி கொண்டிருக்கும் விழுமியத்தையும்,  நிலைப்பாட்டையும் தானே இந்த தலையங்கத்தை எழுதிய பெருமகனாரும் கொண்டிருக்கிறார். அப்புறம் என்ன பொல்லாத நடுநிலை பத்திரிகை? ஒரு தந்தையோ, அண்ணனோ தனது வீட்டு பெண்ணிற்க்கு சொல்வதுதானே இதெல்லாம் என்கிறார்கள். அவர்கள் சொல்லலாம். அதை அந்த பெண் எதிர்க் கொள்வாள். ஒரு பத்திரிகையோ, அரசியல்வாதியோ, சமூதாயத்தின் கோபத்தை வேறு பக்கம் திசை திருப்பும் இந்த இழிவான செயலை, அதுவும் இந்த நேரத்தில்  செய்யவே  கூடாது. ஒரு பத்திரிகை எந்த நிலையிலும், ஆணாதிக்க சிந்தனையை உமிழக்கூடாது . இது மாதிரியான ஆபத்தான கருத்துகள்,  பெண்கள் பற்றிய பார்வையை மோசமாக வடிவமைக்கும். "அவன், சரியா தடவியிருக்க மாட்டான்" என்று சொன்னானே  ஒரு பொறுக்கி, அந்த பொறுக்கிக்கு, தார்மீக பலத்தை இது மாதிரியான  கருத்துகள்தான் கொடுக்கின்றன. எனவேதான், இதை வேரோடும் வேரடி மண்ணோடும் எதிர்க்கிறேன். 


இதில் ஒரு முரண்நகை என்னவென்றால் இந்த கொடுமையை செய்த அந்த கயவர்களில் ஒருவனும் இதே போன்ற ஒரு கருத்தைதான் அவனுக்கு தெரிந்த மொழியில் தெரிவித்தான். இரவு நேரத்தில் வெளியே சுற்றும் பெண்களுக்கு பாடம் கற்பிக்க நினைத்தோம் என்றான். 



சமூதாயத்தின் மனசாட்சியை உலுக்க வேண்டிய பத்திரிக்கைகள், இப்படி திசை மாறி பயணிப்பதையே பேராபத்து என்று வெறுக்கிறேன்.  இது போன்ற நிகழ்வுகள் மிச்சமிருக்கும் இந்தியாவின் ஆன்மாவை தட்டி எழுப்ப வேண்டும். அதை விட்டு, பாதிக்கபடுபவர்களையே குறி வைத்து தாக்கும்  இந்த தலையங்கம் குற்றவாளிகளுக்கு, மறைமுகமாக குறைந்தபட்ச நியாயங்களை உருவாக்கி  அளிக்கும் என்ற பயத்தினாலேயே இதை எதிர்க்கிறேன். எந்த காரணத்தால், சின்மயி விவாகாரத்தில் இரண்டு பக்கம் இருக்கிறது என்பதை மறுத்தேனோ, அதே காரணம்தான்.

தினமணியில் வெறும் ஒரு பக்கத்தில் எழுதப்பட்ட ஒரு தலையங்கத்தையே புரிந்துக்கொள்ள முடியாதவர்கள், தொடர்ந்து தமது கருத்தில் விடாபிடியாக மல்லுக்கட்டுவதால், அவர்களை தெளிவித்து உய்விக்கும் பொருட்டு, இந்த பதிவு எழுத நேர்ந்தது.

3 comments:

  1. சிறை காக்கும் காப்பு எவன்செய்யும்- மகளிர்
    நிறை காக்கும் காப்பே தலை
    -திருக்குறள்

    ReplyDelete
  2. அந்தப் பெண் தனியாகச் சென்றிருந்தால், தனியாகப் போனது தப்பு என்பார்கள். ஆண் நண்பனுடன் போனால் ஆணுடன் வெளியில் போனது தப்பு; பெண் தோழியுடன் போயிருந்தால், ஆண் துணை இல்லாமல் போனது தப்பு; இப்படியே சொல்லிக்கொண்டே போவார்கள்.

    சரவணன்

    ReplyDelete
    Replies
    1. உண்மை நண்பா. ஆணாதிக்கத்தின் பொய் வேடங்களுக்கு முடிவேது?

      Delete

Write your valuable comments here friends..