கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் 2012-ம் ஆண்டுக்கான இயல் விருது, மூத்த தலைமுறை எழுத்தாளர்களில் ஒருவரான நாஞ்சில் நாடனுக்கு வழங்கப்படுகிறது. இந்த வாழ்நாள் சாதனையாளர் விருது, கேடயமும் 2500 கனடிய டாலர்கள் மதிப்பும் கொண்டது. சுந்தர ராமசாமி, கே.கணேஷ், வெங்கட் சாமிநாதன், பத்மநாப ஐயர், ஜோர்ஜ் எல் ஹார்ட், தாசீசியஸ், லட்சுமி ஹோம்ஸ்ரோம், அம்பை, ஐராவதம் மகாதேவன், கோவை ஞானி, எஸ்.பொன்னுத்துரை, எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோரைத் தொடர்ந்து, 2012 ஆம் ஆண்டிற்க்கான விருது, நாஞ்சில் நாடன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. 2007-ம் ஆண்டிற்க்கான விருது லட்சுமி ஹோம்ஸ்ரோம் என்ற மொழிபெயர்ப்பாளருக்கு வழங்கப்பட்டபோது, ஜெயமோகன் அதை கடுமையாக விமர்சித்து எழுதிய கடிதம் நினைவில் உள்ளது. கே.கணேஷ், ஜோர்ஜ் எல் ஹார்ட் போன்றோரின் இலக்கிய சாதனைகள் குறித்தும் எனக்கு தெரியவில்லை. இருப்பினும், சுந்தர ராமசாமி, கோவை ஞானி, அம்பை,எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்களுக்கு வழங்கப்பட்டு போதுமான மதிப்பையும் இந்த விருது தக்கவைத்திருக்கிறது.
நாஞ்சில் நாடனின் தலைகீழ் விகிதங்கள் நாவல்தான் நான் முதலில் படித்த அவரது நாவல். யதார்த்த நடையில், ஏழ்மை பின்னனியில் இருந்து படித்து பட்டம் பெற்று தனது சொந்த காலில் நிற்க விரும்பும் ஒருவன், பணக்கார மாமனாரிடம் மாட்டிக் கொண்டு தனது சுய கவுரவத்திற்க்காக அல்லாடும் கதையை அழகாக சொல்லியிருப்பார். பின்பு தங்கர்பச்சான் இந்த கதையை, சொல்ல மறந்த கதை என்று சினிமாவாக எடுத்தார். தமிழில், நாவலை மூலமாக கொண்டு எடுக்கபட்ட படங்களில் போதுமான அளவு, அந்த நாவலுக்கு நியாயம் செய்த முக்கியமான வெகு சில படங்களுள் ஒன்று, இது. எந்த சமரசமும் இன்றி, இந்த படத்தை எடுத்த தங்கர்பச்சான் நிச்சயம் பாராட்டுக்குரியவர். ராஜாவின் இசை கதைக்கு தேவையான அழுத்தத்தை கொடுத்தது. பிரமிடு நடராஜன், சேரன் இருவருமே நன்றாக நடித்திருந்தனர். ஆனால், என்ன காரணத்தினாலோ, இந்த படம் நமது விமர்சகர்களால், சரியான முறையில் நிறுவபடவில்லை.
பிறகு நாஞ்சில் எழுதிய இடலாக்குடி ராசா என்ற சிறுகதை தமிழின் மிகச்சிறந்த சிறுகதைகளில் ஒன்று. தோன்றும்போதெல்லாம் அந்த கதையை தேடி எடுத்து படிப்பேன். அந்த இடாலாக்குடி ராசாவின் விட்டோத்திதனமும், இந்த உலகத்தையே தனது சொந்தமாக கருதும் மனப்போக்கும், ஒவ்வொரு முறையும் தவறாமல் எனக்குள் மிகுந்த நெகிழ்வையும், அன்பையும் ஏற்படுத்தும்.
2011-ம் ஆண்டிற்க்கான சாகித்ய அகாடமி விருது பெற்ற நாஞ்சிலின் சூடிய பூ சூடற்க சிறுகதை தொகுப்பும் முக்கிய சிறுகதைகளை உள்ளடக்கியதே.
”அமி காணார்…அமி காணார்” (யாம் உண்போம்), வயது முதிர்ந்த வறியவர்களை காணும் கணந்தோறும் என் காதில் ஒலிக்கும் வார்த்தைகள் இவை.. மகனை குடும்பத்துடன் வறுமைக்கு பலி கொடுத்துவிட்டு, பசியின் கொடுமையில் பாபுராவிடம், நாத்ரே இரந்துண்ட போது, கூறிய மகத்தான வார்த்தைகள். நாத்ரேவின் மகனுக்கு குடும்பமே உலகம். நாத்ரேவிற்க்கோ உலகமே குடும்பம். சொல்லபோனால் பசியின் பெருந்துண்பத்தையும், ருசியின் இனிமையையும், நாஞ்சில் போல் எழுத்தில் வடித்த வேறு ஒருவர் இல்லை.
2011 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்ட பின், தமிழக அரசு விழித்துக் கொண்டு, கலைமாமணி என்ற உலக சிறப்புமிக்க விருதை நாஞ்சில் நாடனுக்கு வழங்கியது. கலைமாமணி விருது விழாவின் போது சென்னையில் இருந்தேன். ஜெயகாந்தன், இளையராஜா கலந்துக் கொண்டு சிறப்பித்த அந்த நிகழ்ச்சியில், நாஞ்சிலாருடன் சேர்த்து, தமன்னா, அனுஷ்கா, ரோபோ சங்கர் போன்ற பெரும் சாதனையாளர்களுக்கும் விருது வழங்கப்பட்டது. தமன்னா, அனுஷ்கா இருவரும் கரகோஷம் முழங்க, விருது வாங்கி, கிழே வர புகைப்படம் எடுக்க, ஒரு கும்பல் முட்டி மோதியது. தமன்னா, கலைஞர் பொற்பாதம் பணிந்து, விருதை வாங்கிய கணத்தில், தாழ்ந்த தமிழகமே, தலை நிமிர்ந்தது. ரோபோ சங்கருக்காக வந்திருந்த கூட்டம், சங்கர் விருது வாங்க வந்த நொடியில் இருந்து, மேடையில் இருந்து இறங்கும் வரை கத்தி தீர்த்தது. விருது வழங்கிய கலைஞரே சற்று குழப்பமானார். கிரைம் கதை ராஜேஷ்குமாருக்கு (கோயமுத்தூரில்ருந்து டிரிங்..ட்ரிங்) கூட ஒரிரு கைத்தட்டல்கள் கிடைத்தன.
விழா முடிந்த தருணத்தில், நாஞ்சிலாரை அணுகி சாகித்ய அகாடமி விருதுக்கு வாழ்த்து தெரிவித்தேன். சற்று திகைத்து, பின்பு மலர்ந்து சிரித்தார். புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றேன். உடனே, “எங்க நின்னு எடுத்துக்கலாம்”? என்றார் சிநேக பாவத்துடன். அநேகமாக அன்று, அந்த சூழ்நிலையில், நாஞ்சில் நாடனுடன் கைக்குலுக்கி, புகைப்படம் எடுத்துக் கொண்டது நான் மட்டும்தான் என்று நினைக்கிறேன். டெல்லிக்கு விருது வாங்க போவது பற்றி மகிழ்வுடன் விளக்கினார். சிறிதோ, பெரிதோ, விருதுகள் தரும் அங்கீகாரம் நிச்சயமாக கலைஞர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் என்று தோன்றுகிறது. இயல் விருது பெற்ற இந்த மண்ணின் மகத்தான கலைஞனுக்கு வாழ்த்துகள்.
No comments:
Post a Comment
Write your valuable comments here friends..