Wednesday, December 11, 2013

மு.ராமசாமியின் வியாபாரமாயணம்

ஓய்வுப் பெற்ற நாடகத்துறை பேராசிரியர் மு.ராமசாமி அவர்களின் வியாபாரமாயணம் நாடகம், திருச்சி பிஷப் ஹிபர் கல்லூரியில் ஒரு சிறப்பான அனுபவத்தை கொடுத்தது. ஏறக்குறைய ஒரு மணி நேரம் நடந்த இந்த நாடகத்தில் இரண்டே பேர் தான் நடிகர்கள். மு.ராமசாமியும், கூத்துப்பட்டறையை சேர்ந்த ஆனந்தசாமி இருவரும் தங்களது சிறப்பான உடல்மொழி மற்றும் வசனத்தால் கலக்கி எடுத்து விட்டனர். மைக் கிடையாது. ஆனால் கடைசி பார்வையாளன் வரை குரல் கேட்டது. குப்பைத்தொட்டியில் எடுத்த ஒரு பெட்டி, தொப்பி, கண்ணாடி,என்று எளிமையான அரங்க பொருட்கள். 

வியாபாரமயமாகும் உலகம் எப்படியெல்லாம் தேவைகளை உருவாக்கி தங்களது பொருட்களை நுகர்வோர் தலையில் கட்டுகிறது என்பதை அழகான காட்சி மற்றும் வசனங்களால் காட்சிபடுத்தினர். பார்க்க வந்திருந்த மாணவர்கள் யாரும் பாதியில் வெளியே செல்லவில்லை. அரசியல் வசனங்களை புரிந்து கொண்டு ஆங்காங்கே சிரித்தனர் மாணவிகள். 



கடைசியில் நன்றியுரை வழங்கிய கல்லூரி பேராசிரியர்தான், மு.ராமசாமி அவர்கள் பிதாமகன் போன்ற திரைப்படங்களில் நடித்தவர் என்று அறிமுகம் செய்ய ஆரம்பிக்க, மு.ராமசாமி இடைமறித்து, தயவு செய்து தன்னை நாடக ஆசிரியர் அல்லது கூத்தாடி என்று அறிமுகபடுத்தினால் போதும் என்று சொன்னார். ஆவேசத்துடன் லட்சியபோக்கை கடைபிடித்து, வாழும் நண்பர்களை காணும்கணந்தோறும் சிலிர்த்துதான் போகிறது.  

கடைசி நேரத்தில் எனக்கு தகவல் தெரிவித்து அழைத்து சென்ற வில்வம், மற்றும் முற்போக்கு எழுத்தாளர் சங்க நண்பர்கள் அனைவருக்கும்
நன்றி. 

No comments:

Post a Comment

Write your valuable comments here friends..