பாலு மகேந்திரா என்ற கலைஞனை நான் கண்டுக்கொண்ட படம் வண்ண வண்ண பூக்கள் திரைப்படம் தான். அப்போது நான் ப்ளஸ் ஒன் படித்துக் கொண்டிருந்தேன். அந்த படம் உருவாக்கிய மனஎழுச்சி இப்போதும் நினைவில் இருக்கிறது. இரண்டே வாரம் விஜயா தியேட்டரில் ஓடிய அந்த படத்தை நான் ஆறு தடவைகளுக்கு மேல் பார்த்திருந்தேன். ஒரு காட்சியில், பாலுவின் கேமரா, பறவை கூட்டத்தை விடாமல் துரத்தும். ஒவ்வொரு தடவையும் அந்த காட்சியில், திரையரங்கமே கரவொலியால் அதிர்ந்தது. இயற்க்கையை ரசித்த வண்ணம் BSLR சைக்கிளில் இளநெஞ்சை வா..வா என்று பாடியபடி செல்லும் பிரசாந்த் எனக்குள் பல கனவுகளை எழுப்பியிருந்தார். யேசுதாஸின் குரலில் ராஜாவின் இசையில் பாலுவின் ஒளிப்பதிவில் அந்த பாடல் என்னை போல் பலருக்கும் கனவுகளை தந்திருந்தது என்பதை பின்னாளில் உணர்ந்தேன்.
அந்த திரையரங்கு இப்போது இல்லை. என் நினைவு சரியாக இருக்குமானால் 92ம் வருடம் தான் அது மூடப்பட்டது. சொத்து பிரச்சினையில் மூடப்பட்டு இப்போதும் கூரை இழந்து வெறும் சுவர்களோடு தனது வசந்த காலத்தை நினைவு கூர்ந்தபடி மெளனசாட்சியாய் நிற்கிறது. அந்த திரையரங்கை கடக்கும் தோறும் எனது பால்ய கால நினைவுகளை மீட்டி செல்கிறேன்.
வாழ்க்கையை ரசிக்கும் ஒரு இளைஞன், காட்டுக்குள் ஒரு அழகியை சந்திக்கிறான். அவர்கள் இருவர்க்குள் காதல் மலர்கிறது. இருவருக்கும் மட்டுமே ஆன ஒரு உலகில் வாழ தொடங்குகிறார்கள். தினமும் காட்டுக்கு வந்து அந்த அழகியுடன் வாழ்ந்து போகிறான் அவன். எவ்வளவு அழகிய கனவு ?பாலுவின் படைப்புலகம் இப்படிதான் கனவுகளை தொடர்ந்து உருவாக்கி அளித்தது. பாலு வாழவிரும்பிய வாழ்க்கையை அவர் தனது நாயகர்களுக்கு அளித்தார். இந்த பிரபஞ்சத்தின் மகத்தான படைப்பான, தேவதைகளை அவர் நிஜத்திலும் நிழலிலும் திகட்ட திகட்ட நேசித்தார்.
மனநிலை தவறிய ஒரு அழகி, யாருமற்ற ஒரு இளைஞனுடன் கழிக்கும் பொழுதுகள்தான் மூன்றாம்பிறை. ஏற்கனவே திருமணமான ஒரு இயக்குநருக்கு அழகான நடிகையுடன் ஏற்படும் பந்தம் தான் மறுபடியும். வீட்டு வேலை செய்ய வரும் ஒரு பெண்ணுடன் இளைஞனுக்கு ஏற்படும் உறவுதான் அது ஒரு கனா காலம். இப்படி ஆண் பெண் உறவுகளை மையமாக்கித்தான் அவரது படங்கள் சுழன்றது.
வீடு, சந்தியாராகம் போன்றவை, அடுத்த தளத்துக்கு செல்ல, பாலு செய்த முயற்சிகள் மட்டுமே. அவரது வெற்றி இடைநிலை படங்களில் மட்டுமே சாத்தியமானது. அடிப்படையில் பாலு அழகை நேசிக்கும், எதையும் காட்சிபூர்வமாக அணுகும் ஒரு ஒளிப்பதிவாளர். எந்த காட்சியிலும், அவரது உள்ளுணர்வு, அழகியலை மையமாக்கியே சிந்தித்தது. மற்ற எந்த அம்சத்தையும் விட அழகியலையே அவர் முன் வைத்தார். அவர் அளவுக்கு கமலை அழகாக யாரும் காட்டவில்லை. ஊட்டி அவருக்கு மட்டும் தனது பொக்கிஷங்களை திறந்து வைத்தது. ராஜாவின் பாடல்களுக்கு பாலு மட்டுமே தகுந்த நியாயம் செய்தார்.
மாவு பொம்மை போன்ற பெண்களை, கதிரவனின் ஒளிப்பட்டாலே சிவந்துவிடும் பால்மேனி பதுமைகளை நடிகைகள் ஆக்கி, தமிழர்களுடைய வாழ்வோடு விளையாடிய இயக்குநர்கள் மத்தியில் பாலு மட்டும்தான் திராவிடத்தின் வண்ணத்தை கொண்ட, யதார்த்த தமிழர் வாழ்வோடு பொருந்துகிற மாநிற பெண்களான மாதவி, அர்ச்சனா, ப்ரியாமணி போன்றோரை தனது கதையின் நாயகிகள் ஆக்கினார். ஏறக்குறைய அவரது ஒவ்வொரு கதாநாயகியையும் நானும் காதலித்தேன்.
விஷ்ணுபுரம் கூட்டத்திற்க்காக கோவை சென்றிருந்தபோது, நடு இரவில் பாலுவுடன் வேலைபார்த்த கவிஞர் சாம்ராஜ் உடன் பாலுவை பற்றி பேசிக்கொண்டிருந்தது ஞாபகத்துக்கு வருகிறது. பாலுவை இவ்வளவு நேசித்த நான், யோசித்துப் பார்த்தால், எப்போதும் எங்கேயும் அவரை விதந்தோதியதில்லை. மாறாக விமர்சித்தே வந்திருக்கிறேன். இப்படி திரைப்படைத்தையும், இலக்கியத்தையும் உயிர் என நேசிக்கின்ற ஒரு மகா கலைஞன், தீவிரமான தளங்களை, கதைகளை கையிலேடுத்து, அடுத்த கட்டத்துக்கு நகராமல் இருக்கிறானே என்ற ஆதங்கமே, அதற்க்கு காரணம். இப்போது யோசித்தால் பாலு மகேந்திரா என்ற ரசிகன் இப்படித்தான் இருந்திருக்க முடியும் என்று தோன்றுகிறது.
நான் நேரில் சந்திக்கவேண்டும் என்று விரும்பிய, ஆனால் சந்திக்கவே முடியாமல் போன ஒரு கலைஞனும் பாலுமகேந்திராதான். சென்ற முறை ஊருக்கு வந்திருந்தபோது, தலைமுறைகள் படம் பார்க்க விரும்பி திருச்சி காவேரி திரையரங்கிற்க்கு சென்றால், முதல் நாள்தான் அந்த படத்தை எடுத்திருந்தார்கள்.
நான் நேரில் சந்திக்கவேண்டும் என்று விரும்பிய, ஆனால் சந்திக்கவே முடியாமல் போன ஒரு கலைஞனும் பாலுமகேந்திராதான். சென்ற முறை ஊருக்கு வந்திருந்தபோது, தலைமுறைகள் படம் பார்க்க விரும்பி திருச்சி காவேரி திரையரங்கிற்க்கு சென்றால், முதல் நாள்தான் அந்த படத்தை எடுத்திருந்தார்கள்.
அவனது நினைவுகளை அவனது படைப்புகள் கொண்டு அல்லாமல் வேறு எப்படி கடக்க?
இதோ தனிமையில், கண்ணம்மா காதல் எனும் கவிதை சொல்லடி என்ற பாடலை கேட்டபடி, கண்ணீர் துளிகளை உதிர்த்தபடி, அவனை மெளனமாக, ரகசியமாக பெரும் காதலுடன் பின் தொடர்ந்த ஒரு ரசிகன்.
No comments:
Post a Comment
Write your valuable comments here friends..