Saturday, September 20, 2014

போரும் அமைதியும் - மானுடத்தின் மீதான பெருங்காதல் - 1

எங்கள் தெருவிற்க்கு புதிதாக வந்தாள் துளசி. வங்கி பணியில் இருந்த தனது தந்தை மற்றும் தாயுடன் மாற்றலாகி எங்கள் ஊருக்கு வந்திருந்தாள். ஏறக்குறைய நகரின் அனைத்து இளம்பெண்களும் அப்போது சுடிதாருக்கு மாறியிருக்க, இவள் மட்டும் தாவணியில், தேவதை போல் வலம் வந்தாள். ஊரில் இருந்த அனைத்து இளைஞர்களுக்கும், எங்கள் தெருவில், நண்பர்கள் இருப்பது அப்போதுதான் ஞாபகம் வந்தது . ஆனால், தனது அழகு மற்றவர்களை என்னசெய்கிறது என்பதை பற்றி கொஞ்சமும் அறியாத குழந்தைபோல், துளசி இருந்தாள். கல்லூரிவிட்டால் வீடு, அவ்வபோது தனது தாயுடன் பெரிய கோயில் என சிறிய வட்டம். அதிர்ந்து பேசாத தன்மை, படிப்பில் கெட்டி என அவளைப் பற்றி வந்த அனைத்து செய்திகளுமே இனியவையாக இருந்தது.

அதே துளசி, பெண்களை வளைப்பதையே தன் வாழ்வின் லட்சியமாய், எந்த வேலையுமின்றி, தந்தையின் காசில் சுற்றிவரும் அசோக்குடன், பைக்கில் கட்டிஅணைத்தபடி, முவாநல்லூர் சாலையில் செல்கிறாள் என்று சரவணன் வந்துச்சொன்னபோது வாழ்வின் அபத்தத்தை நினைத்து சிரிப்புதான் வந்தது. பிறகு, எத்தனையோ பெண்கள்.. மீண்டும், மீண்டும் காதல் என்ற பேரில், பேசிபழகும் வாய்ப்பு கிடைத்த ஒரே காரணத்தினால் ,எந்த வகையிலும் இந்த உலகில் தமது இருப்பை நியாயபடுத்த முடியாத முட்டாள்களுடன் ஓடிப்போய், வாழ்க்கையை தொலைத்துவிட்டு வந்து நின்றதை பார்த்துக் கொண்டே இருக்கிறேன்.

பேரழகியும், முன்காலைபனி போன்ற புனிதமும் கொண்ட நடாஷாவை, இன்னொருவனுக்கு நிச்சயமானவளை, பொறுப்பற்று சுற்றிவரும் அனடோல் கவர்கிறான். அடுத்தவேளை உணவுக்கான சாத்தியம் கூட இன்றி, ஓடிப்போக திட்டமிடுகிறார்கள். ஏற்கனவே திருமணமான அனடோலுடனான கனவு வாழ்க்கையை பற்றி கற்பனையில் திளைக்கிறாள் நடாஷா. இது எப்படி சாத்தியமாகிறது, என்பதை டால்ஸடாய் காட்சிபடுத்துகிறார். ஒரு விருந்தில், நடாஷாவை சந்திக்கும் அனடோல், அவளது அழகு பற்றியே பேசுகிறான்.  அவளது அழகு தன்னை எப்படி பாதிக்கிறது என்பதை தொடர்ந்து வெளிப்படுத்துகிறான். பிறகு அவனது சகோதரியும் நடாஷாவை சந்திக்கும்போது, எப்படியெல்லாம் அனடோல், நடாஷாவினால் ஈர்க்கப்பட்டுள்ளான் என்று சிரித்துக் கொண்டே சொல்கிறாள்.

முட்டாள்களுக்கே உரிய அளவுக்கு மீறிய தன்னம்பிக்கையுடன் வலம் வருகிறான் அனடோல். தனது ஊதாரித்தனம் பற்றியோ, பொறுப்பின்மை பற்றியோ ஒருபோதும் அவன் சுயமதிப்பிடுகளுக்கும் சந்தேககங்களுக்கும் ஆளாவதில்லை. அதனாலயே அவனிடம் எந்த தயக்கங்களும் இல்லை. அனடோலாகிய நான் இப்படிதானே இருக்கமுடியும் என்று சுற்றிவருகிற தன்னம்பிக்கை நடாஷாவை ஈர்க்கிறது.

இப்போது யோசித்துப் பார்த்தால் அசோக்,அனடோல் இருவருக்கும் உள்ள ஒற்றுமைகள் புலப்படுகிறது. வாழ்க்கை பற்றி தீர்மானமான முடிவுகளுடன் இவர்கள் இருப்பது போன்ற போலித்தோற்றமே பெண்களை ஈர்க்கிறது. இவர்கள் வாழ்வில் உள்ள சாகஸத்தன்மையே நடாஷாக்களை கனவினில் தள்ளுகிறது. அவர்கள் வெளிப்படையான புகழ்ச்சியுரைகளை பேசக்கூடியவர்களாக இருக்கிறார்கள், சமூகத்தின் மதிப்பீடுகளை புறந்தள்ளக்கூடிய இவர்களது அலட்சியம், துளசி போன்று சமூகத்தின் மதிப்பீடுகளோடு வளர்க்கப்பட்டிருப்பவர்களுக்கு மயக்கத்தை தருகிறது.

இவ்வளவு நுட்பமாக தனது போரும் அமைதியும் காவியத்தில், மனித உணர்வுகளை எழுதமுடிந்ததாலேயே தல்ஸ்தோய் இவ்வுலகின் மகத்தான நாவலாசிரியனாக போற்றபடுகிறான்.நெப்போலியனின் படையெடுப்பை கதைகளனாக வைத்துக்கொண்டு, ரஷ்ய பிரபு குடும்பங்களை கதைமாந்தர்களாக்கி வாழ்வின் பொருளை, மகத்தான வரலாற்று சம்பவங்களின் பிண்ணனியில் உள்ள, தற்செயல்களை, வெற்றித் தோல்வியை நிர்ணயிக்கும் சிறு நிகழ்வுகளை, மனித உணர்வுகளை, ஆன்மிக தேடல்களை விவரிக்கிறது லியோ தல்ஸ்தோய் 1869ல் எழுதிய போரும் அமைதியும் என்ற காவியம்.

19ம் நூற்றாண்டில், 1806க்கும், 1813க்கும் இடைப்பட்ட காலக்கட்டம். நெப்போலியனின் படைகள், ஐரோப்பிய நாடுகளை வெற்றிக் கொள்ளும் வெறியில், சில நாடுகளை வென்ற வெற்றிக் களிப்பில் ரஷ்யாவுக்குள் நுழைகிறது. பிரஞ்சு படைகளின் படையெடுப்பை பற்றியும், நெப்போலியனின் போர்வெறியை பற்றியும், ஒரு விருந்தில், ரஷ்ய பிரபுகுடும்பத்தினர் பிரஞ்ச் மொழியில் பேசிக்கொள்ளும் போலித்தனத்தில் ஆரம்பிக்கிறது நாவல்.ஏறக்குறைய அனைத்து ரஷ்ய பிரபுக்களும், ராணுவதளபதிகளும் பிரஞ்சில் பேசிக் கொள்கிறார்கள். பிரஞ்சு மொழி மேட்டுகுடியினரின் மொழியாக மகுடம் சூட்டியிருக்கிறது. நாவல் முழுவதும் நிலப்பிரபுக்கள் விருந்துகள் கொடுக்கிறார்கள், போகத்தில் திளைக்கிறார்கள். ஆடம்பரமான உணவுவகைகளை தயாரித்து தங்களது விருந்தினர்களை மகிழ்விக்கிறார்கள். எண்ணற்ற பண்ணையாட்களை கொண்டு பண்ணைகளை பராமரிக்கிறார்கள். அவர்களுடைய கடமை உணர்வு, மேன்மை, கீழ்மை, போலித்தனம், கட்டுபாடு என அனைதையும் விமர்சிக்கிறார் தல்ஸ்தோய் . நிலபிரபுக்களில் ஒருவராய் ஏராளமான சொத்துக்களை கொண்டிருந்தவர் தான் டால்ஸ்டாய். ஒருகாலக்கட்டத்தில் இந்த நாவலில் வரும் பியரை போலவே தனது சொத்துக்களை பண்ணையாட்களின் நலனுக்கு செலவழித்ததார். பண்ணையாட்களை கொத்தடிமையிலிருந்து விடுவித்தார். எப்போதும் அறத்திற்க்கான குரலாய் தல்ஸ்தோய் இருந்தார். போரும் வாழ்வும் நாவலின் அடித்தளம் அறமும், மானுடத்தின் மீதான நேசமும் தான்.தல்ஸ்தோய் , தனது சமகாலத்திய இலக்கியங்களை, உலக காப்பியங்களை தேடிதேடி படிப்பவராக இருந்திருக்கிறார்.  பிரபுக்கள் குடும்பத்தில் பிறந்த அவரது நூலகத்தில் இருபதாயிரத்துக்கும் அதிகமான நூல்கள் இருந்திருக்கிறது.  தல்ஸ்தோய் , தமிழ்மொழியின் அறநூலான திருக்குளை நேசித்திருக்கிறார். மகாத்மா காந்திக்கு எழுதிய கடிதத்தில் திருக்குறளை, ஹிந்துகுறள் என்று சொல்லி மேற்கோள்காட்டியிருக்கிறார். கீதையை பற்றி பேசியிருக்கிறார். ஆன்மிகசாரத்தை தனது பலமாக கொண்ட நாடான இந்தியாவை, எண்ணிக்கையில் பலமான இந்தியாவை, எந்த தத்துவபலமும் இல்லாத இங்கிலாந்து எப்படி வென்றிருக்க முடியும் என்று ஆச்சரியபடுகிறார் காந்திக்கான கடிதத்தில். காந்தி தனது பாதையாக அகிம்சையை தேர்ந்தெடுத்ததில் மிகமுக்கியமான பங்கு தல்ஸ்தோய்க்கு இருந்திருக்கிறது. 


1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

Write your valuable comments here friends..