Monday, April 4, 2016

நாம் தமிழர் போகும் பாதை.


சீமான் இன ரீதியாக, தமிழ்நாட்டை தமிழர்களே ஆளவேண்டும் என்கிற கோஷத்தை எடுத்துள்ளார். இதன்மூலம், சீமான் குறிவைப்பது அடுத்த பத்தாண்டுகள் கழித்து இங்கிருக்கபோகும் தலைவர்களை என்பதில் சந்தேகமில்லை. அடுத்த பத்தாண்டுகள் கழித்து முதல்வர் போட்டியில் இருக்கபோகிறவர்கள் யார்? ஸ்டாலின், விஜய்காந்த், வைகோ, அன்புமணி, திருமாவளவன் போன்றவர்களே கண்ணுக்கு தெரிகிறார்கள். இதில் அன்புமணி மற்றும் திருமாவுக்கு சாதி ரீதியான முத்திரை இருப்பதால், ஒட்டுமொத்த தமிழகத்திற்க்கும் இவர்கள் தலைமை ஏற்கும் வாய்ப்பு மிகவும் குறைவு. எனில், எஞ்சியிருப்பவர்கள் ஸ்டாலின், வைகோ மற்றும் விஜய்காந்த். இதில் வடுகர்கள் நம்மை ஆள்வதா என்கிற கேள்வியை முன்வைப்பதன்மூலம் வைகோ மற்றும் விஜய்காந்தை போட்டியிலிருந்து வெளியேற்றுகிறார் சீமான். கருணாநிதி தெலுங்கர் என்கிற கோஷம், இதுவரை நிருபிக்கபடாதது. ஆனால் மீண்டும், மீண்டும் இதை சொல்வதன்மூலம் ஸ்டாலினையும் வெளியேற்ற நினைக்கிறார் சீமான். அது எந்தளவுக்கு வெற்றிபெறும் என்பது ஒரு புறம் இருக்கட்டும்.



சீமான் இப்படி தெலுங்கர், மலையாளிகள் என பிரிவினைவாதம் பேசுவது இந்த கணிப்பொறி யுகத்தில், உலகமே ஒரு கிராமமாக சுருங்கிவிட்ட இந்த நூற்றாண்டில் ஏற்புடையது அல்ல. ஆனால், சோனியா பிரதமராக கூடாது என்று தொண்டைநரம்பு புடைக்க குரல்கொடுத்தவர்கள், சீமான் பிரிவினைவாதம் பேசுகிறார் என்று குற்றம் சொல்வது பொருத்தமானது அல்ல.  சோனியா இந்தியாவின் மருமகளாக வந்தவர். அவரை தலைவியாக கொண்ட கட்சியை மக்கள் தேர்ந்தெடுத்த பின்னரும், சோனியா பிரதமராக கூடாது என்று ஏன் வாதங்கள் முன்வைக்கப்பட்டது? நம்மவர், அயலவர் என்கிற கோஷம்தானே அதற்க்கும் அடிப்படை? 

மதம், சாதி அதன் உட்பிரிவு என வகைவகையாக பிரிந்துகிடக்கும் தமிழர்களை, நாம்தமிழரால் ஒற்றுமையாக்க முடியுமா? அல்லது அந்த கட்சியும், பிற திராவிட கட்சிகளை போலவே பெரும்பாண்மை சாதிவெறியை வளர்த்து, மேலும் பிரிவினையை தூண்டுமா என்பதுதான் இன்றைய சூழலில் முக்கிய கேள்வியாக படுகிறது. திமுகவும், அதிமுகவும்  வெளியே பசப்பினாலும், முழுக்க முழுக்க சாதி ரீதியிலேயே அங்கு வேட்பாளர் தேர்வு நடைபெறுகிறது. எந்த தொகுதியில் எந்த சாதிகள் அதிகம் என்பதுதான் அடிப்படை. இதில் அதிமுக வேட்பாளர்களை அறிவித்துவிட்டால், அடுத்து திமுக, அந்த வேட்பாளரின் சாதியை சேர்ந்த வேட்பாளரையோ, அல்லது அதற்க்கிணையாக அந்த தொகுதியில் இருக்கும் அடுத்த சாதியை சேர்ந்த வேட்பாளாரையோ நிறுத்தி மறைமுகமாக மக்களின் சாதிவெறியை அணையவிடாமல் பார்த்துகொண்ட பெருமை இந்த இருகட்சிகளுக்கும் உண்டு. பேசுவது திராவிடவாதம், ஆனால், நிலைநிறுத்துவதோ சாதியவாதத்தைதான்.

இதில், நாம்தமிழரின் வேட்பாளர் தேர்வை உற்று நோக்கினால், சீமான் உண்மையில் ஒரு மாற்றத்தை புகுத்தியுள்ளார் என்று புரிகிறது. எந்த தொகுதியிலும் அவர் சாதியை அடிப்படையாக கொண்டு வேட்பாளர்களை தேர்வு செய்ததாக தெரியவில்லை. உண்மையில் அவர் சாதியை சேர்ந்த மக்கள் வாழும் இடத்திலிருந்து விலகி, கடலூரில் நிற்க முடிவு செய்திருப்பதை வியப்புடன் தான் பார்க்கவேண்டியிருக்கிறது. பெரியார், தமிழர் என்று பேசும் வைகோ இன்னமும் தமது சாதியினர் பெருமளவில் வாழும் விருதுநகரை விட்டு வெளியே வர மறுக்கிறார். இந்த சூழலில் இது ஒரு வரவேற்க்கதக்க மாற்றம்தான்.

சீமான் மட்டுமல்ல, பிற வேட்பாளர்களையும் அவர் தமிழர் என்ற அடிப்படையில் மட்டும்தான் தேர்வு செய்துள்ளார். உதாரணமாக மன்னார்குடியை எடுத்துகொண்டால், காங்கிரஸ் காலத்தில் 1967 தேர்தலில் டி.எஸ் சுவாமிநாத உடையார் எம்.எல் ஏவாக இருந்தார். உடையார் சமூகம் தொகுதியில் சிறுபாண்மை சமூகம்தான். ஆனால், அதற்கு பிறகு திமுக, அதிமுக என கடந்த 45 ஆண்டுகளாக இரு கட்சிகளும் போட்டிபோட்டுகொண்டு, கள்ளர், அகமுடையோர் என தொகுதியில் பெரும்பாண்மை சாதியினரை மட்டுமே வேட்பாளர்களாக நிறுத்தி, இரு சமூகத்திற்க்குமிடையே பிளவை ஏற்படுத்தி வைத்திருக்கிறது. இது தஞ்சை பகுதிகளில் எந்தளவுக்கு என்றால், கள்ளர் சமூகத்தினர் வைத்திருக்கும் கடையில் அகமுடையோர் பொருட்கள் வாங்கமாட்டார்கள். அகமுடையோர் சமூகத்தினர் வைத்திருக்கும் கடையில் கள்ளர்கள் வாங்கமாட்டர்கள் என்கிற அளவுக்கு. ஆணவ கொலைகள் உச்சத்தை தொட்டதும் இந்த பகுதிகளில்தான். இந்த சூழலில் நாம் தமிழர் முதன்முதலாக மன்னார்குடியில் வேட்பாளராக நிறுத்தியிருப்பது பொற்கொல்லர் சமூகத்தை சேர்ந்த ஒருவரை. இப்படி பல பகுதிகளில் சாதியை பின்னுக்கு தள்ளி, தமிழர் என்ற அடையாளத்தை மட்டும் வைத்து, வேட்பாளர்களை தேர்ந்தெடுத்திருக்கிறது.

இரண்டாவதாக, இஸ்லாமியர்களையும், கிருத்துவர்களையும் இனரீதியாக தமிழர்கள் என்ற அடையாளத்துக்குள் கொண்டு வரமுயற்சிக்கிறது நாம்தமிழர் அமைப்பு. பத்து ஆண்டுகளுக்கு முன்பு இங்கு ஒரு கடையில் ஈழத்தமிழரை சந்தித்தேன். தமிழர்போல தோற்றமளித்ததால், நீங்கள் தமிழரா என்று கேட்டேன். இல்லை நான் முஸ்லிம் என்று தமிழில் விடையளித்தார் அவர். அப்படி பிளவுப்பட்ட ஒரு சமூகமாக தமிழ்நாட்டில் மாறவில்லை என்றாலும், மதத்தை தாண்டி, மொழி ரீதியாக அவர்களை இணைப்பதை ஒரு முக்கிய முயற்சியாகவே வரவேற்க்கிறேன்.

மூன்றவதாக, இங்கு திராவிட கட்சிகளால் தொடர்ந்து அன்னியபடுத்தபடும் ஒரு சமூகம் பிராமணர்கள். ஐம்பது ஆண்டுகளுக்கு முன் அவர்களது சாதிய பார்வையால், விமர்சிக்க வேண்டிய தேவை இருந்தது. ஒரு இறுக்கமான சமூகமாக, அது தேங்கியிருந்தபோது, அப்படிப்பட்ட விமர்சனத்துக்கு ஒரு அர்த்தமிருந்தது. ஆனால், இன்றைய நிலையில் பிராமணர்களை விட சாதியை இறுக்கி பிடித்திருப்பவர்கள் இடைநிலை சாதிகள்தான். இன்று அதிகளவில் கலப்பு திருமணங்கள் நடப்பது பிராமண சமூகத்தில்தான். இந்த நிலையில் இன்னமும் அவர்களை மட்டும் விமர்சிப்பதன் மூலம் தமது சாதிய பற்றை மறைத்துகொள்ள பார்க்கிறது திராவிட கட்சிகள். ஆனால், நாம் தமிழர் இயக்கம், வீட்டில் தமிழ் பேசும் பிராமணர்களை எப்படி தமிழரல்லாதவர் என்று சொல்லமுடியும் என்று கேட்கிறது. இது ஒரு முக்கிய மாற்றம்.

இது போன்ற நிலைபாடுகள் மூலம் கவனிக்கவைத்திருக்கும் நாம்தமிழர் அமைப்பு, வைகுண்டராஜன் தமிழர்தானே, அவர் மணல்கொள்ளையடிக்காவிட்டால், டாட்டாவும் பிர்லாவும் கொள்ளையடிப்பார்கள். அதற்க்கு இது பரவாயில்லை. பச்சைமுத்து பெருந்தமிழர், சந்தனகடத்தல் வீரப்பன் எல்லைதெய்வம் போன்ற கேலிக்குரிய நிலைபாடுகளால் முகம் சுளிக்கவும் வைக்கிறது. மேலும், தேர்தல் பிரச்சாரத்தில் ஆடு மாடு மேய்ப்பது அரசு வேலை போன்ற ஒற்றை வரி கோஷங்களை அது தவிர்க்கவேண்டும். உள்ளே எத்தகைய பலமான திட்டமிருப்பினும் இது போன்ற ஒற்றை வரி கோஷங்கள் மக்கள் பார்வையில் கேலிக்குரியதாகவே மாறும். இது போன்ற நிலைபாடுகளை திருத்திக் கொண்டால், தமிழக அரசியலில் ஒரு முக்கிய மாற்று சக்தியாக நாம் தமிழர் மாறகூடும்.





1 comment:

Write your valuable comments here friends..