Sunday, June 5, 2016

குறிலாகி, நெடிலாகி, இவையிரெண்டும் உயிராகி !



    காதலை தெரிவிக்கும் நபரிடம், எனக்கு கல்யாணமாகி குழந்தைகூட இருக்கு, ஆனா லவ் செய்யறேன்னு யாருமே சொன்னதில்லை. நான் யோசிச்சு சொல்கிறேன் என்று சொல்லும் பெண்ணின் இயலாமையையும், வலியையும் அப்பட்டமாக பதிவு செய்வதில் கார்த்திக் சுப்புராஜ் தமிழ் சினிமாவில் இன்னும் ஒரு மைல் நிச்சயம் முன்னே சென்றிருக்கிறார். தன் மனைவியை திருமணம் செய்துகொள்ள இருக்கும் நபரிடம், தான் இப்போது மனைவியுடன் சேர்ந்துவிட்டதை தெரிவிக்க, கணவன் சொல்லும் வசனம், “உங்க எக்ஸ் வுட்பியோட, கரண்ட கணவன் ...நான்”. அந்த நபர் புன்னகையுடன் புரிந்துகொள்கிறார். இப்படி கவிதை போல் சில காட்சிகள்.


    மனைவியை தவிர வேறு பெண்ணுடன் ஒரு ஆண் கொள்ளும் தொடர்பு, மனைவிக்கு தெரிந்தால் கூட அதில் பெரிய அவமானம் கொள்வதில்லை. ஒன்றுக்குமேற்பட்ட பெண்ணை திருப்திபடுத்தும் ஆம்பளைதனம் மீது உள்ளூர பெருமிதம் கூட. சரி, இனி நான் அந்த பெண்ணை பார்க்கவில்லை என்று சொன்னால், உடனே முந்தானையை சரிசெய்துகொண்டு, மனைவி குடும்பம் நடத்த தயாராக இருக்கவேண்டும். ஆனால் மனைவி ஒருவனை நிராகரித்தாள் என்று தெரிந்தபின்னரும், அவன் கூட படுத்தாளா என்ற கேள்வி உயிரை உருக்கும். அவளை நெருங்கும்போதெல்லாம், என்னமோ மாதிரி இருக்கும்.. ஏனெனில் இங்கு கேள்விக்குள்ளாகிருப்பது ஆம்பளைதனம் அல்லவா? நீ எப்படி கேட்டாலும் அந்த கேள்விக்கு பதில் சொல்லமாட்டேன். அட்ஜஸ்ட் செஞ்சு குடும்பம் நடத்து என்று சொல்லும் குரலை இந்த படமளவுக்கு எந்த சினிமாவும் காட்சிபடுத்தியதில்லை. வாழ்த்துக்கள் .
    படம் பார்க்கும் ஒவ்வொரு ஆணையும் சுயபரிசோதனைக்கு உட்படுத்தியிருப்பதில் கார்த்திக் சுப்பராஜ் வெற்றிபெற்றிருக்கிறார். இந்த கேள்விகள், நிறைய பேரை எரிச்சாலூட்டுவதை இணைய பதிவுகள் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது. உண்மை சுடும்தானே?
    பொன்னி போன்ற பாத்திரத்தை வைத்துவிட்டு, மலர்விழி மைக்கேலை நிராகரித்துவிட்டு தனிமையில் அழுவது போன்ற 19ம் நூற்றாண்டு காட்சிகள் ஏன் கார்த்திக்? மலர்விழி மைக்கேலை திருமணம் செய்துகொள்வதில் என்னதான் பிரச்சினை? ஒரு உன்னதமான படமெடுத்ததாக சொல்லிக் கொள்ளும் அருளிடம் அந்த கலைமேதமைக்குண்டான எந்த குணமும் தெரியவில்லையே? டாஸ்மாக்கில் தண்ணியடித்துவிட்டு, சட்டையை கழட்டி டான்ஸ் ஆடுவதே போதும் என்று விட்டுவிட்டீர்களா?


    ஒரு நல்ல கணவன் இல்லை என்பதெல்லாம் தாண்டி, அவர்கள் பகிர்ந்துகொண்ட அன்பின் தருணங்கள் இல்லாத வாழ்க்கை என்று எதுவுமில்லை. அந்த தருணங்களின் ஒளியில்தான், அது எவ்வளவு குறைவான ஒளியென்ற போதிலும், இந்த வாழ்க்கை செல்கிறது. வெறுப்பின் உச்சத்திலும் கூட, வாழ்க்கையை சிலநாளேனும் பகிர்ந்துகொண்ட ஒருவன் பிளாட்பார்மில் நாயைபோல் செத்துகிடக்க, மழையை ரசித்தபடி ரயிலில் பயணிக்க, கணவன் மனைவி உறவையெல்லாம் விடுங்கள், மகத்தான மனித உறவே கேலிக்குரியாதாகிவிடுகிறது. எந்த நிலையிலும் உங்களது திரைபடங்கள், மானுட நேசத்தின் மீதான அந்த ஆதார நம்பிக்கையை குலைக்காதிருக்கட்டும்.

    சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை பல இடங்களில் காட்சிகளை இன்னும் வலிமையாக மனதுக்குள் கொண்டு செல்கிறது. கார்த்திக் சுப்புராஜுக்கு உடனடி தேவை ஒரு நல்ல எடிட்டர். ஒரு பதினைந்து நிமிடத்தை எளிதாக குறைத்திருக்கலாம்.  அபாரமான உடல்மொழியும் கண்களும் கொண்டு எஸ்.ஜே சூர்யா வியக்கவைக்கிறார். விஜய் சேதுபதி, படம் முழுவதும் சோர்வாக வருகிறார். இன்னும் முழுமையான படங்களை கார்த்திக் கொடுக்ககூடும். ஆனால், இதுவரையிலான அவரது படங்களில், இந்த படம், சிறப்பானது. 




No comments:

Post a Comment

Write your valuable comments here friends..