தடம் இதழில் ஜெயமோகன் அவர்கள் ஈழ படுகொலைகள் தொடர்பாக அளித்த பேட்டியைத் தொடர்ந்து அவருக்கு எனக்கிருந்த கேள்விகளை அனுப்பியிருந்தேன். அதை தொடர்ந்து ஜெயமோகனின் தளத்தில் விளக்கமான கட்டுரையை எழுதியிருந்தார். அந்த கட்டுரையில் மீண்டும் எனக்கிருக்கும் கேள்விகளை கீழ்க்கண்டவாறு தொகுத்துள்ளேன்.
அன்புள்ள ஜெயமோகன்,
உங்களது பதில் கட்டுரைக்கு நன்றி. உங்களது பதிலில் எனக்குள்ள சில கேள்விகளையும், விளக்கங்களையும் முன்வைக்கவிரும்புகிறேன்.
- இனஅழித்தொழிப்பு 80களுக்கு முன்பும், 2009க்கு பிறகும் இலங்கையில் நடந்தது இல்லை என்று கூறியிருக்கிறீர்கள். 1956ல் பண்டாரநாயகே பதவிக்கு வந்த உடன், சிங்களா ஒன்லி என்கிற சட்டம் மூலம் சிங்களம் மட்டுமே ஆட்சிமொழியாக அறிவிக்கப்படுகிறது. அதற்க்கு தமிழர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்து, அதற்கு பிறகு நடந்த கல்ஓயா கலவரத்தில் 150 தமிழர்கள் வெட்டிக்கொல்லபடுகின்றனர். பிறகு தொடர்ந்து 1958ல் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட மிகப்பெரிய வன்முறைதான் இரு சமூகங்களுக்கும் இடையேயான நிரந்தர பிளவை ஏற்படுத்துகிறது. 1958 மே 25ம்தேதி பொலன்னறுவை பண்ணையில், குழந்தைகள், கர்ப்பிணி பெண் உட்பட எழுபது தமிழர்கள் கரும்புதோட்டத்தில் வெட்டுகொல்லப்பட்டனர். 1958ம் ஆண்டு மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள், பலியானார்கள். பிற்பாடும் தொடர்ந்து 74, 77, 78 என பல படுகொலைகள் இனரீதியாக நடந்தே வந்திருக்கிறது.
- இனஅழித்தொழிப்பு என்று ஏற்றுகொள்ளபடவேண்டும் என்றால் அது தொடர்ந்து நடைப்பெற்றிருக்கவேண்டும் என்று எழுதியிருக்கிறீர்கள். ரூவாண்டாவில் 1994ல் டுட்சி இனத்துக்கு எதிராக மிகப்பெரிய இனஅழித்தொழிப்பு நடைப்பெற்றது. உது இனத்தை சேர்ந்த மிதவாத தலைவர்களும் இதில் கொல்லப்பட்டனர். அதற்கு பிறகு அங்கு அதே மாதிரியான படுகொலைகள் நடக்கவில்லை. எனினும் 94ல் நடைபெற்றது இனபடுகொலை என்று சர்வதேச சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
- மலையக தமிழர்கள், அடிப்படையில் இந்தியாவிலிருந்து குடியேறியவர்கள். ஈழத்தமிழர்கள், இலங்கையின் பூர்வீக குடியினர். ஒரே மொழி பேசினாலும் இவையிரண்டும் அடிப்படையில் இருவேறு தேசிய இனங்கள். எனவே மலையக தமிழர்களுக்கு எதிராக படுகொலைகள் நடைபெறவில்லை என்பதால் அது இனபடுகொலையல்ல என்று எப்படி கூற முடியும்? மேலும், 2013ம் ஆண்டு விஷ்ணுபுரம் விருது விழாவில் கலந்துகொண்ட தெளிவத்தை ஜோசப் அவர்களுடன் உரையாடியபோது அவர் தெரிவித்த கருத்து, 1970களில் அகதிகளாக வடக்குபகுதிகளில் குடியேறிய மலையக தமிழர்களும் இந்த போரில் மிகமோசமாக பாதிக்கப்பட்டனர் என்பதே. 2009ல் கொல்லப்பட்டவர்களில் நான்கில் ஒரு பகுதியினர் மலையக தமிழர்களாக இருக்கலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.
- ஈழத்தமிழர்கள், மலையக தமிழர்கள், தமிழ்முஸ்லிம்கள் என இந்த மூன்று பிரிவினரிடையே 1915 முதலே பல கருத்துவேறுபாடுகளும் உள்குத்துக்களும் நடந்தேறியுள்ளன. இதன் தொடர்ச்சியாக சில காட்டிகொடுப்புகளும், பலிகளும், பின்பு புலிகள் 1990 அக்டோபரில் தமிழ் முஸ்லிம்களை வெளியேற்றியதும் நடந்தது. பிறகு, 2002ல் புலிகள் அமைப்பு, முஸ்லிம்களிடம் இதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டனர், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுஃப் ஹக்கிமிடம், பிரபாகரன், வட-கிழக்கு பகுதி தமிழ் இஸ்லாமியர்களுக்கும் உரியதே என்று வாக்குறுதி கொடுத்ததும் நடந்தது. ஏறக்குறைய இதே காலக்கட்டத்தில் மலையக தமிழர் அமைப்புகளின் தலைவர்களும் புலிகளிடம் நெருங்கி வந்ததும், தோட்ட தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போராடுவேன் என்று பிரபாகரன் சொன்னதும் நடந்தது.
- பொதுமக்களை, போர்முனைக்கு கொண்டு சென்றது புலிகளின் தவறு. ஆனால், ஒரு பகுதியை, யுத்தத்திலிருந்து பாதுகாக்கபட்ட பகுதி என்று அரசுதான் அறிவிக்கிறது. அதில் மக்களை குழும செய்கிறது. பிறகு அந்த பாதுகாப்பு வளையத்தில், குண்டு மழைபொழிந்து மக்களை கொல்கிறது. 2009ம் வருடம் ஜனவரி மாதம் 21ம் தேதி, சுதந்திரபுரம் என்ற இடத்தில் இதே போல், பாதுகாப்பு வளையம் என்று அறிவிக்கிறது அரசு. அதை நம்பி ஐ.நாவின் ஊழியர்கள் (11வது கான்வாய்) உணவு பொருட்களை எடுத்து செல்கிறார்கள். ராணுவத்துக்கும் தகவல் கொடுத்துவிட்டே செல்கிறார்கள். ஆனால், அவர்கள் சென்ற சில மணித்துளிகளிலேயே குண்டு வீசபடுகிறது. குறுந்தகவல்கள் மூலம் குண்டு வீசுவதை நிறுத்த சொல்லி ஐ.நா ஊழியர்கள் கதறுகிறார்கள். ஆனால் தொடர்ந்து குண்டு வீசப்பட்டு மக்கள் குடும்பம் குடும்பமாக கொல்லபடுகிறார்கள். அந்த ஊழியர்கள் குண்டுவீச்சை நிறுத்தும்படி கோரிய குறுந்தகவல்கள் உட்பட இவையெல்லாம் மிக விரிவாகவே சார்லஸ் பேட்ரி (ஐ.நா உள்ளக ஆய்வு குழு) அறிக்கையில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சார்லஸ் பேட்ரி அறிக்கையை வெளியிடுவதற்க்கே, ஐ.நா மிகவும் தயங்கியது. பிறகு முக்கியமான சில இடங்களை கறுப்பு மை கொண்டு அழித்துவிட்டு, வெளியிட்டது. இணையத்திலும் கிடைக்கிறது. NFZ1, NFZ2 NFZ3 என அனைத்து பாதுகாப்பு வளையங்களிலும் இதே ரீதியான படுகொலைகள் நிகழ்ந்துள்ளது. இறுதி போரில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், போர்முறை என பல ஆதாரங்கள் இது புலிகளுக்கு மட்டும் எதிரான போர் அல்ல என்பதை நிருபிக்கிறது.
- இலங்கையில் நடந்தது போர்குற்றம் என்றும், மனித குலத்துக்கு எதிரான குற்றம் என்றும் ஐ.நா அமைத்த நிபுணர் குழு ஏற்கனவே அறிக்கை சமர்பித்து விட்டது. எனினும் இதுவரை எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கபடவில்லை. போரின்போதே ஐ.நாவின் பாதுகாப்பு கவுன்சிலை கூட்ட சொல்லி பலமுறை கோரிக்கை விடுத்தும் பான் கீ மூன் செவிசாய்க்கவில்லை. உறுப்புநாடுகளின் ஒத்துழைப்பு இல்லை என்று மறுத்து விட்டார். 2009 ஜூனில், ஐ.நாவின் சட்டகுழு ஆர்டிக்கிள் 99படி சர்வதேச விசாரணைக்கு உத்தரவிடலாம் என்று பரிந்துரை செய்தது. அதையும் பான் கீ மூன் ஏற்கவில்லை.இந்த சூழலில், இனபடுகொலை என்று குரல் கொடுப்பதால்தான், சர்வதேச நாடுகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறுவது எப்படி சரியாக இருக்கமுடியும்? போர்குற்றம் என்றால் வெறும் அம்புகள் மட்டும் தண்டிக்கப்பட்டு, எய்தவர்கள் தப்பித்துவிட வாய்ப்பிருக்கிறது என்று கருதியே இது வெறும் போர்குற்றம் மட்டுமல்ல, இதன்பின்னே உள்ளவர்கள், இதற்கு உதவியவர்கள் என அனைவரும் தண்டிக்கபடவேண்டும் என்கிற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இனபடுகொலை என்கிற வாதம், முன்வைக்கபடுகிறது. இனபடுகொலை என்று சொல்பவர்களின் நோக்கத்தை ஆராய்வதை விட தரவுகளின் அடிப்படையில் இது இனபடுகொலையா என்று ஆராய்வதுதானே சரியாக இருக்க முடியும்?கண்ணுக்கு முன்னே குழந்தைகள் வெடித்து சிதறியதையும், வாழ்க்கைதுணைகள் செத்து மடிந்ததையும், தாய்தந்தையர் கொல்லப்பட்டதையும் பார்த்து அலறி, தமக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நீதி வழங்குபடி கோரும் அந்த தமிழர்களின் குரல் வரலாற்றில் இப்படி மறக்கடிக்கப்படவேண்டியதுதானா? நடந்த கொடுமைகளுக்கு நீதி வழங்காமல், எப்படி அவர்கள் தமது கடந்தகால இழப்புகளை மறந்து ஒரே சமூகமாக ஒற்றுமையுடன் வாழ முடியும்?இந்தியாவை தவிர மற்ற நாடுகளுக்கு புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் ஓரளவு வசதியுடன் வாழ்கிறார்கள். மிகமோசமாக நாம்தான் அவர்களை கைவிட்டுள்ளோம் என்கிற உங்களது வரிகளை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன். எங்களாலான உதவிகளை, இந்தியாவில் இருக்கும் ஈழத்தமிழர் குழந்தைகளின் கல்விக்காக செய்துவருகிறோம் என்பதையும் தெரிவிக்கிறேன்.
அன்புடன்
செந்தில்குமார்
No comments:
Post a Comment
Write your valuable comments here friends..