ஆற்றின் கரையில் இருந்தது அந்த வீடு. ஆற்றங்கரையில் நிறைய வீடுகள் இருந்திருக்கவேண்டும். ஆனால் இப்போதென்னவோ அங்கொன்றும், இங்கொன்றுமாய் சில வீடுகளே இருந்தன. ஒரு காலத்தில் இந்த வீடு நான்கு கட்டுகளுடன், பிரமாண்டமான மதில்களுடன் இருந்திருக்கவேண்டும். இப்போது ஏறக்குறைய வீட்டின் பின்பக்கம் முழுவதும் இடிந்து கைவிடப்பட்டிருந்தது. முன்பக்கமும் பல இடங்களில் விரிசல் கண்டு அதில் அத்திச்செடி முளைத்திருந்தது. எப்போதோ பூசிய மஞ்சள் சுண்ணாம்பு முழுவதும் உதிர்ந்திருந்தது. விரிசல்களில் திட்டுதிட்டாக பாசி படர்ந்து, அந்த பாசி தந்த கருமை நிறம் மட்டுமே மிச்சமிருந்தது. வீட்டைத் தனியாக காட்டியது அந்த வீட்டின் மேல் இருந்த இரண்டு பெண் பொம்மைகள் மட்டுமே. புடவை அணிந்த தோழிகள் போலிருந்த அந்த பொம்மைகளை ஏன் அந்த இடத்தில் வைத்தார்கள் என தெரியவில்லை. ஒரு பொம்மையின் கை உடைந்திருந்தது. வாடாமல்லி வண்ணத்தில் அந்த பெண் அணிந்த ரவிக்கை மட்டும் இன்னமும் வண்ணத்தை தக்கவைத்திருந்தது.
நாயக்க மன்னர்களிடம் பணிபுரிந்த செட்டியார்களுக்கு இந்த ஊர் முழுவதும் நிலபுலன்கள் இருந்தன. அவர்களில் ஒருவருக்கு தமக்குப் பிறகும் தர்மங்கள் தொடர்ந்து நிகழவேண்டும் என்று கவலை இருந்தது. தனக்கிருந்த சொத்துக்களில் ஒரு பகுதியை கொண்டு அறக்கட்டளை நிறுவி, தொடர்ந்து வழிப்போக்கர்களுக்கு உணவும் உறைவிடமும் அளித்து, இன்ன பிற தர்மங்களையும் பரிபாலித்திட உயிலெழுதி மறைந்தார். அவருக்கு பிறகு வந்த வாரிசுகள் சில தலைமுறை வரை அதை சரியாக செய்தனர். பிறகு வந்தவர்கள் தமது தொழில்களுக்காக வேறு இடங்களுக்கு இடம்பெயர, எல்லாம் நின்றது. ஊரில் இருந்தவர்கள் குத்தகை என்ற பெயரில் ஆக்கிரமித்த நிலங்கள் போக மிச்சமானது இந்த வீடு ஒன்றுதான். இந்த வீடும் ஏதோ ஒரு தர்மத்துக்காக எழுதப்பட்ட ஒன்றுதான் என்பதால் அதை நிர்வகிப்பதில் எந்த நாட்டமும் இன்றி இடியவிட்டிருந்தனர். பிறகு தங்களிடம் காரியதரிசியாக இருந்து குத்தகை வசூலித்து தந்த சீனிவாசராவை அவரது குடும்ப சூழல் கருதி வாடகையில்லாமல் அந்த வீட்டில் தங்கிக்கொள்ள அனுமதித்திருந்தனர்.
ஆஸ்துமாவால் அவதிப்பட்டுவந்த சீனிவாசராவின் மனைவி ஒரு மார்கழிமாதக் குளிரில் இறந்துவிட்டதாகவும், சீனிவாசராவும் அவரது மூன்று பெண்களும் மட்டுமே அந்த வீட்டில் இருக்கிறார்கள் என்றும் அருண் சொல்லியிருந்தான். அந்தப் பெண்களையும் ஓரிருமுறை நான் பார்த்திருக்கிறேன். அருண் அவ்வபோது ரேஷன் பொருட்கள் வாங்கிதருவது, மின்சாரகட்டணம் செலுத்துவது போன்ற வேலைகளை அவர்களுக்குச் செய்து தருவான். அருணுக்கு ஊரின் எல்லா தெருக்களிலும் இப்படியான சிநேகம் இருந்தது.
கல்லூரி முடிந்து சாயங்காலம் பேருந்திலிருந்து இறங்கியபோது, பெட்டிகடையிலிருந்து அருண் பார்த்துவிட்டு கூப்பிட்டான். கூடவே ஒருவன், ஜீன்ஸ் பேண்ட், காட்டன் சட்டையில் நின்றான். மெலிதாக தாடிவிட்டிருந்தான். கையில் ஒரு இரும்பு காப்பு. விரலிடுக்கில் சிகரெட் புகைந்தது. அவனை காட்டி, இது என்னோட ஃபிரெண்ட். என்றான் அருண். மடத்து வீட்டுக்கு போறோம், வர்றியா? என்று கேட்டான். உடனே அந்த பெண்கள் ஞாபகத்துக்கு வந்தார்கள். புத்தகங்களை வீட்டில் வீசிவிட்டு அவர்களோடு நடந்தேன்.
ஆற்று பாலத்தை கடந்து மடத்து வீட்டை நெருங்கினோம். மாலைநேர காற்று சிலுசிலுவென்று வீசியது. வீட்டு வாசலில் உயரமான திண்ணை இருந்தது. அதிலிருந்து பார்த்தால் எதிரே ஆறு தெரிந்தது.. வீட்டின் கதவு கொஞ்சமாக மூடப்பட்டு இடைவெளி தெரிந்தது. நாங்கள் வீட்டின் கதவை நெருங்கியவுடனே ஒரு பெண் வெளியே தலையை நீட்டி, அருணை பார்த்து சிநேகமாக சிரித்து வா அருண் என்றாள். உள்ளே நுழைந்தோம். உள்ளே அழைத்த பெண் வெளிர்நீல கலரில் தாவணியும்,கறுப்பு பூக்கள் போட்ட பாவாடையும் அணிந்திருந்தாள்.
உட்காருங்க, எங்களை பார்த்து மையமாக பார்த்து சிரித்தபடி ஸ்டூலை காட்டினாள். தையல் மெஷின் எதிரிலிருந்த மற்றொரு ஸ்டூலையும் இழுத்து போட்டாள். தையல் மெஷினில் பாதியில் விட்டிருந்த ரவிக்கையை வாரி அறைக்கு கொண்டு சென்றாள். அருண் ஜன்னல் கட்டையிலேயே உட்கார்ந்தான். மற்றொரு ஜன்னல் கட்டையிலிருந்த, ரேடியோ எஃப்.எம்மில் “வசீகரா என் நெஞ்சினிக்க“ மெலிதாக ஒலித்துகொண்டிருந்தது.
வெளியே தெரிந்த வீட்டின் அளவுக்கும் உள்ளே இருந்த சூழலுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. உள்ளே நுழைந்தவுடன் கூடம்,. கூடத்திலிருந்த அனைத்து உத்திரங்களையுமே கரையான் அரித்திருந்தது. அவை இரும்பு பைப்புகளாலும், மூங்கில் மரங்களாலும் முட்டுகொடுக்கப்பட்டு கூரையை தாங்கியிருந்தது. கூடத்தின் ஒரு மூலையில் அந்த அறை இருந்தது. அறை வாசலில் பூக்கள் எம்பிராயடர் செய்யப்பட்ட ஒரு பழைய திரைச்சீலை தொங்கியது. சமையல் கூடம், இரண்டாம் கட்டில் இருந்திருக்கவேண்டும். இரண்டாம் கட்டே முழுமையாக இடிந்துவிட்டிருந்ததால், கூடத்தில் இருந்து பிரிந்த நடையிலேயே சமையலுக்காக ஒரு பழைய பலகை போடப்பட்டு பாத்திரங்கள் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்தன.
இவன் என்னோட பிரெண்ட் ராஜேஷ். தஞ்சாவூரிலே படிக்கிறான். இது பிரசாத் நம்ம தெரு என்றான் அருண், என்னை பார்த்து. அவள் மையமாக பார்த்து புன்னகைத்தாள்.
எப்படி இருக்கே ராஜி, எங்கே ஜெயா இன்னும் வரலையா?
அவ, எங்கே இப்போ வருவா? டாக்டர் அவ்வளோ சீக்கிரம் விடுவாரா? எப்படியும் எட்டரை ஆகிடும் என்றாள்.
பெரிய மேடம் ஜெயா, டாக்டருக்கிட்டே வேலைபாக்குறாங்க..எதுனா ராங்க் காமிச்சா, ஊசி போட்டுடுவாங்க என்றான் அருண்.
ஏன் மாப்ளே, நானும்தான் ஊசி போடுவேன். அதுவும் வலிக்காம.. என்றபடி அருணை பார்த்து கண்ணடித்தான் ராஜேஷ்.
எனக்கு திகீரென்றது. ராஜியை பார்த்தேன். அவள் அந்த பேச்சை கவனிக்காததுபோல், புன்னகைத்தாள்..
உங்க வீடு போஸ்ட் ஆபிஸ் பக்கத்துலேதானே இருக்கு? என்றாள் என்னை பார்த்து.
நான் அவசரமாக இல்லையென்று தலையாட்டினேன். பிறகு கேட்டது உரைத்து ஆமாம் என்றேன். மெலிதாக சிரித்தாள் ராஜி. மாநிறம். முடியை அழகாக பின்னி, முன்பக்கம் சில முடிகளை எடுத்துவிட்டிருந்தாள்.. கைகளில் கண்ணாடி வளையல்கள். உதட்டோர மச்சம் கவர்ச்சியாக இருந்தது. எப்படியும் இருபத்தி ஐந்து வயதை தாண்டியிருப்பாள் என்று தோன்றியது. சிரித்தபோது அழகாகவே இருந்தாள். பாதி படித்த லட்சுமியின் நாவல் ஒன்று தரையில், பக்கம் மறந்துவிடாமல் இருக்க குப்புறகவிழ்த்து வைக்கப்பட்டிருந்தது.
கொல்லைபக்கம் தண்ணீர் ஊற்றும் சத்தம் கேட்டது. நான் அந்தப்பக்கம் பார்ப்பதை ராஜி, கவனித்தாள். என் சிஸ்டர் வித்யா துணி துவைக்கிறா.
சாந்தி தியேட்டர்லே இதுநம்மஆளு படம் வந்துருக்கு. நயன்தாராவை இன்னைக்கு பார்த்தே ஆகணும்ன்னு அடம்பிடிச்சான் ராஜேஷ். நாந்தான், இங்கே வந்து என்னோட பிரண்ட்ஸை பாருன்னு கூப்பிட்டுவந்துட்டேன் என்றான் அருண்.
ஓ, நயன்ன்னா ரொம்ப பிடிக்குமோ?
முன்னாடியெல்லாம் இல்லைங்க.. பில்லா படம் பார்த்தப்பதான் எனக்கு நயனோட அந்த முழு தெற..மையும் நல்லா தெரிஞ்சுது.. தெறமை என்ற வார்த்தைக்கு தேவையில்லாமல் அழுத்தம் கொடுத்தான் ராஜேஷ்.
நீ அந்த நீச்சல் தெறமையைதானே சொல்றே மாப்ளே என்றான் அருண்.
கன்னங்கள் சிவப்பேறி லேசாக வெட்கத்துடன் சிரித்தாள் ராஜி. எல்லா பேச்சையும், தான் நினைக்கும் முனைக்கே இழுத்து செல்கிறான் ராஜேஷ். முன்பின் அறிமுகமில்லாத பெண்ணிடம் இப்படி கொஞ்சமும் லஜ்ஜையின்றி பேசுவது நிச்சயம் இவனுக்கு முதல்முறையாக இருக்காது. அருணின் தோழி என்றவுடன் இப்படிதான் இருக்கும் என்று முடிவெடுத்துவிட்டானா? சட்டென்று அவள் கோபமானால், அசிங்கமாகிவிடுமே. இவனுடன் வந்திருக்ககூடாதோ. ஆனால் இங்கு வரும்போதே நானும் இதை உள்ளுர எதிர்பார்த்திருந்தேனோ..
கொல்லைகதவை திறந்தபடி வித்யா வந்தாள். மஞ்சள் நிறத்தில் சிவப்பு பூக்கள் போட்ட சுடிதாரின் டாப்ஸ் மட்டும் அணிந்து உள்ளே வந்தவள், எங்களை பார்த்தவுடன் அறைக்குள் சென்று பேண்ட் அணிந்து வந்தாள். அழகான பெரிய கண்களே முதலில் ஈர்த்தது. யாரும் கேட்காமலே, ஒரு சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து கூடத்தில் நடுநாயகமாக உட்கார்ந்திருந்த ராஜேஷிடம் முதலில் நீட்டினாள்.
ராஜேஷ் வாங்கி ஒரு வாய் குடித்துவிட்டு கண்ணை சிமிட்டியபடி, என்ன, தண்ணி சுடுது? என்றான்.
ம்ம்ம்.. தண்ணி சுடலை. நீங்கதான் சூடா இருப்பீங்க.. புத்திசாலிதனமாக பேசுவதாக நினைத்துகொண்டு இவனிடம் வாய் கொடுக்கிறாளே அசடு..
அது என்னவோ உண்மைதான்.. கைகளை உயர்த்தி நெட்டி முறித்தான்.
நான் பேச்சை மாற்றும் பொருட்டு, நீங்க படிக்கிறீங்களா என்றேன்.
சின்னமேடம் கரஸ்லேயே பிகாம் படிக்கிறாங்க.. டியூசன் எடுக்குறாங்க.. நீயும் வேணா ஜாயின் பண்ணிக்கோ
நான் புன்னகைத்தேன். அப்போது திடீரென்று கூடத்து அறையில் இருந்து மெலிதாக இருமல் சத்தம் கேட்டது. கொஞ்சம் கொஞ்சமாக சத்தம் அதிகரித்தது. எல்லோரும் அறையை பார்ப்பதை பார்த்த ராஜி, அப்பாதான், இரண்டு நாளா இருமல் ஓயலை. என்றாள்
இவ்வளவு நேரம் அவர் உள்ளேதான் இருந்தாரா? அவரை வைத்துகொண்டுதான் இப்படியெல்லாம் பேசினோமா, என்னவோ போல் இருந்தது. ராஜேஷின் முகமும் மாறியது போல் தெரிந்தது.
இருமலுக்கிடையே அவர் அழைத்தார். ராஜி உள்ளே போனாள். கதவுவிலகி, அவர் ஈசிசேரில் படுத்திருப்பது தெரிந்தது. வாய் குழறலாக ஏதோ பேசினார். அருணும் உள்ளே போனான்..இடது கையை நெஞ்சருகே வைத்திருந்த விதத்தில் வாதம் என்று தெரிந்தது. வலது கையை குடிப்பது போல் காண்பித்து லோலா.. லோ..லா என்றார்.
இது என்ன புதுப்பழக்கம்? சாயங்காலமானா சோடா வேணுங்குறது? உடம்புக்கு நல்லதா இது? பேசாம இருங்க.
சோடாதானே ராஜி, நான் வாங்கிட்டுவரட்டா?
இல்லை, வேணாம் அருண்
டெய்லி அஞ்சு ரூபா சோடா குடிக்க வேணும்னா எங்கே போறது ? வெந்நீர் போட்டுருக்கேன். பேசாம இருக்க சொல்லு ராஜி, என்றாள் வித்யா..
நீ பேசாம இரு வித்யா. நான் வாங்கிட்டுவாரேன்..பதிலை எதிர்பாராமல் அருண் வெளியே போனான்.
சோடாவை டம்ளரில் ஊற்றி கொஞ்சமாக கொடுத்தாள் ராஜி. குடித்தார். பிறகு மெதுவாக நாற்காலியை காட்டி “வாச போ “ என்றார். இல்லை..இங்கேயே இருங்கப்பா. அப்புறம் போய்க்கலாம்.
இப்போது குரலில் கடுமை தெரிந்தது. கையை நீட்டி நீட்டி “வாச போ” என்றார். கண்களை பெரிதாக்கி முறைத்தார். அருண், “வாசலுக்குதானே போகணுங்கறாரு?.. நாற்காலியை தூக்கி அங்கே போட்டுட்டு, அப்புறம் மெதுவா அழைச்சுட்டு போய் உட்காரவைச்சுடலாம்“ என்றான்.
இல்லை வேணாம் அருண்..நீ உட்காரு
“வாச போ” கத்தியபடி ஒரு கையில் இருந்த டம்ளரை தூக்கி எறிந்தார். அதில் மிச்சமிருந்த சோடா அறைக்கு வெளியே தெறித்தது. டம்ளர் சுவற்றில் ணங்கென்று மோதி சுழன்று விழுந்தது.
இப்போ எதுக்கு வாசலுக்கு போவணும்ன்னு துடிக்கிறாரு? செஞ்சதெல்லாம் பத்தாதா? ஆவேசமாக கேட்டாள் வித்யா..
வித்யா நீ தயவு செஞ்சு பேசாம இரு.. அதட்டினாள் ராஜி..
எப்படி கேவலமா வந்து நின்னு கேட்டா அந்த பொம்பளை… நாக்கை புடுங்கிட்டு சாகலாம்ன்னு இருந்துச்சு.. இந்த வயசுலே திண்ணைலே உட்கார்ந்துட்டு பொம்பளைங்க குளிக்கிறதை கண்ணுகொட்டாம பாக்குறாரே.. வீட்டுலே இருக்குற நீங்களும் பொம்பளைங்கதானேன்னு கேட்டாளே போனவாரம்.. குரல் உடைந்து கதறினாள் வித்யா.. இதெல்லாம் எங்களுக்கு தேவையா? இன்னும் யாருகிட்டெல்லாம் நாங்க கேவலபடணும்.. எப்படி கஷ்டப்பட்டு பாத்துக்குறோம்.. மேலே பேச முடியாமல் விம்மினாள்.
மெதுவாக வெளியே வந்து நடந்தோம்.. கொஞ்ச தூரம் யாரும் பேசவில்லை. சற்றுதூரம் போனவுடன் பெட்டிகடையில் சிகரெட் வாங்கினான் அருண். பற்றவைத்தவுடன், சரி விடு மாப்ளே.. படத்துக்கே போயிருக்கலாம்.. நைட் என்ன பிளான்? என்றான் அருண். எதுவும் பேசாமல், புகையை ஊதியபடி, தூரத்தில் தெரு விளக்கின் வெளிச்சத்தில் மங்கலாக தெரிந்த அந்த வீட்டின் பொம்மைகளை வெறித்தான் ராஜேஷ்.
- பதாகை அக்டோபர் 23 2016
No comments:
Post a Comment
Write your valuable comments here friends..