Friday, May 11, 2018

அன்னா கரீனினா - அன்பை விட மகத்தான ஒன்று - 1



“உபயோகமில்லாத பொருட்கள் எதையாவது எப்போதாவது

நீ கையால் தொடுகிறாயா? “

என்று தொடங்கும் தேவதச்சனின் கவிதையில் கடைசி வரிகளை இப்படி முடித்திருப்பார்.

“சென்று வாருங்கள், உபயோகமற்ற பொருட்களே

நீங்கள்
இன்னொரு ஆறைப்போல் ஓடிக்கொண்டிருக்கிறீர்கள்
எப்போது வேண்டுமானாலும் திரும்பி வாருங்கள்
வந்து,
மீண்டும் மீண்டும்
அன்பின் தோல்வியைக் காணுங்கள்.”


2015 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது கவிஞர் தேவதச்சனுக்கு வழங்கப்பட்டதை ஒட்டி நடந்த கலந்துரையாடலில் இந்த “அன்பின் தோல்வி” என்கிற வரிகள் எனக்களித்த இருண்மையை பற்றி அவரிடம் கேள்வியாக கேட்டேன். அதற்கு பதிலாக தேவதச்சன்,

“அன்பு உலகின் உன்னதங்களில் ஒன்றென கொண்டாடபடுகிறது. அன்பு, கடவுளுக்கு இணையானதாக கருதபடுகிறது ஆனால், நிதர்சனத்தில் அன்பை புரிந்துகொள்ளுதல் மிக கடினமாக இருக்கிறது. அப்போதுதான், அன்பை விட மகத்தான ஒன்று இந்த உலகில் இருக்கவேண்டும். அதை பின்புலமாக கொண்டே அன்பை புரிந்துக்கொள்ள முடியும் என்று நினைத்தேன். அப்படி பட்ட ஒன்றுதான் தன் நிலையில் இருக்கும் சுதந்திரம் “ என்றார்



அன்னா கரீனினாவின் வாழ்க்கையை இதைகொண்டுதான் புரிந்துக்கொள்ளமுடியும். வாழ்நாள்முழுவதும் தான் தேடிக்கொண்டிருந்த காதல் கிடைத்துவிட்டது. வெரான்ஸ்கிக்காக தனது எட்டு வயது மகனை, கணவனை பிரிந்து, சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்டு தன் காதலை அடைகிறாள். அவ்வாறு எல்லாவற்றையும் தான் இழந்ததனாலயே, இன்னும் இன்னும் தன்னை வெரான்ஸ்கி நேசிக்க கடமைப்பட்டவன் என்று நினைக்கிறாள்.  சிலமணி நேரங்கள் அவன் வர தாமதமானாலும், கோபிக்கிறாள். அவனுடன் சண்டைபோடுகிறாள். தன்னைவிட வேறு எதுவும் அவனுக்கு முக்கியமாக இருக்க கூடாது என்று வாதிடுகிறாள். இந்த அன்பின் குரூரத்தை வெரான்ஸ்கி கொஞ்சம் கொஞ்சமாக உணர்கிறான். தன்னுடையை சுதந்திரத்தை அன்னா பறிப்பதை அவனால் ஏற்கமுடியவில்லை. வெரான்ஸ்கிக்கு இப்போது அன்னா அலுப்பை தருகிறாள். அன்னாவுக்கோ, தான் மட்டும் சமூகத்திலிருந்து அன்னியமாகி விட, வெரான்ஸ்கி முன்பை போலவே சுதந்திரமாய் உலவுவதாய் தோன்றுகிறது. வெரான்ஸ்கியின் காதல் உண்மைதானா என்று சந்தேகிக்கிறாள். இருவரும் உண்மையில் விரும்பியது தன் நிலையில் இருந்த சுதந்திரத்தை தானோ.

அன்னா பேரழகி. பார்ப்பவர்களிடமெல்லாம் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கிறது அவளது அழகும், நற்குணங்களும். அவளது கணவன் அலெக்ஸி பீட்ஸ்பர்க்கில் அரசாங்க மேலதிகாரி. தனக்கென விதிக்கப்பட்ட வாழ்க்கையில் மேலும் உச்சங்களை எட்ட அயராது உழைப்பவன். வகுத்துக்கொண்ட விதிமுறைகள்படி, கட்டுபாடுகளுடன் வாழ்பவன்.  எட்டு வயதில் மகன் செர்யூசா. அன்னாவின் திருமண வாழ்க்கையில் பெரிய காதலில்லை. நேர்க்கோட்டில் எந்த மாற்றமுமில்லாது செல்லும் சலிப்பான பயணம். அன்னாவின் சகோதரன் ஸ்டிவ்க்கும், டோலிக்குமிடையேயான திருமண வாழ்க்கை, ஸ்டிவ்வின் திருமணம் தாண்டிய உறவுகளால் உடைந்துவிடும் நிலையில் இருக்கிறது. அதைச் சரிசெய்யவே அன்னா மாஸ்கோ வருகிறாள். மாஸ்கோ ரயில் நிலையத்தில்தான் முதன்முதலாக வெரான்ஸ்கியுடான சந்திப்பு நிகழ்கிறது. அப்போது ரயில் சக்கரங்களில் மாட்டி உயிரழக்கிறார் ஒரு தொழிலாளி. அந்த விபத்தை பார்க்கும் அன்னாவின் உள்ளுணர்வு, தவறுகள் நடக்கபோகும் சமிக்ஞையை தருகிறது. அதையெல்லாம் மீறி ஒரு புயலைப் போல் அவளுள் நுழைகிறான் வெரான்ஸ்கி.

வெரான்ஸ்கி ராணுவத்தில் பணிபுரியும் ஒரு சாகஸ விரும்பி. குதிரை பந்தய வீரன். அழகன். பெண்களை விரும்புபவன். இதையெல்லாம் தாண்டி, தான் செய்யும் எந்த விஷயத்திலும் அவனுக்கு சந்தேகங்களில்லை. தத்துவார்த்த கேள்விகளில்லை. இந்த அபரிதமான தன்னம்பிக்கை பெண்களுக்கு அளிக்கும் ஈர்ப்பை போரும் அமைதியும் நாவலிலும் டால் ஸ்டாய் எழுதியிருப்பார். அன்னா வெரான்ஸ்கியின் எல்லா விதிகளையும் மீறுகிறாள். அன்னாவை பார்த்தவுடன் காதலில் விழுகிறான். அவள் திருமணமானவள், பிள்ளை உண்டு என்பதெல்லாம் அவன் கவனத்திலில்லை.



டோலியின் தங்கை கிட்டி, பதினெட்டு வயதை எட்டுகிறாள். இளமையின் பூரிப்பு, இன்னும் மாறாத குழந்தைமையின் அழகு, அதிகாலை பணியின் தூய்மை, அனைவராலும் கவனிக்கபடுகிறோம் என்கிற பெருமை இவையணைத்துடன் சகுரா மரத்தை போல மேனியெங்கும் அழகு பூத்து நிற்கிறாள். தன்னிடம் வெரான்ஸ்கி காதலை சொல்லப்போகிறான் என்பதை எதிர்பார்த்து மகிழ்ச்சியுடன் காத்திருக்கிறாள். ஆனால், தன் சகோதரனுடைய நண்பனான லெவின், தன்னிடம் காதலை சொல்லும் கணத்தில் அவளுக்குள் ஏதோ ஒன்று நிறைகிறது. லெவின் சொல்லிமுடித்த அடுத்த கணத்தில் என்னால் இயலாது என்று மறுதலிக்கிறாள். லெவின் (நாவலில் டால்ஸ்டாயின் பாத்திரமாக கருதபடுபவன்), ஒரு நிலப்பிரபு. அரசு வேலைகளில் இருக்கும் மாற்றமற்ற சலிப்பையும் அர்த்தமற்ற காகிதங்களையும் வெறுப்பவன். அனைத்து அரசு பதவிகளையும் துறந்து கிராமத்தில் விவசாயம் செய்பவன். விவசாயிகளின் வாழ்க்கையில் மாற்றங்கள் செய்வது, விவசாயத்தில் நவீன முறைகளை புகுத்துவது என வேட்கையுடன் சுற்றுபவன். மனித வாழ்வின் பொருள் மீது கேள்விகள் உடையவன். தயக்கங்களும் கேள்விகளும் கொண்ட லெவினை விட கம்பீரமான வெரான்ஸ்கியை, கிட்டி விரும்புகிறாள். தன்னுடைய தமக்கை டோலியின் வீட்டில் அன்னாவை பார்த்தவுடன் அவள்மீது மிகுந்த பிரேமையுடன்தான் கலந்துக்கொள்ளபோகும் முதல் நடன விருந்துக்கு அழைக்கிறாள். அந்த நடன விருந்துக்கு செல்கிறாள் அன்னா. தன் மீது அமர்ந்திருந்த பதினெட்டு வயது இளமை என்னும் மயில் இப்போது கிட்டியின் தோள் மீது ஆடிக்கொண்டிருப்பதை காணும் கணத்தில் தன்னையும் அறியாமல், அந்த நடன விருந்தில் வெரான்ஸ்கியை வென்றெடுக்கிறாள் அன்னா.

2 comments:

  1. மீண்டும் வாசி என்று தூண்டி விட்டீர்கள்.... நன்றி.

    ReplyDelete
  2. படிக்க இருந்தேன். உங்கள் சுருக்கம் ஆர்வத்தை அதிகப்படுத்தியுள்ளது

    ReplyDelete

Write your valuable comments here friends..