Saturday, May 12, 2018

பினாங்கு - போரும் வாழ்வும்


பினாங்கு நகரில் வேலை நிமித்தம் வந்திறங்கிய நொடிமுதல், இருநூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இங்கு கொண்டுவரப்பட்ட தமிழர்களும், போரில் அவர்கள் சிக்கிக்கொண்ட விதமும், ப.சிங்காரமும் நினைவிலாடிக்கொண்டேயிருக்கிறார்கள்.  வந்த முதல் நாளே, பினாங்கு கடைத்தெரு சென்று செட்டித்தெருவை தேடினேன்.  புயலிலே ஒரு தோணியின் பாண்டியன் இங்குதானே திரிந்திருப்பான் என்று அந்த வீதிகளில் நடக்கும்போது நினைவு, காலச்சக்கரத்தில் முன்னும் பின்னுமாய் ஊசாலாடியது.


63 ஆண்டுகளுக்கு பின் மலேசியாவில் ஆட்சி மாற்றம் நடந்துள்ளது. ஓரளவு தமிழர்கள், சீனர்களுக்கு இணக்கமான மகதீர் முகம்மது ஆட்சியை கைப்பற்றியுள்ளார். அதுகுறித்து எங்கும் பெருமிதமும், மகிழ்ச்சியும் தென்படுவதை காணமுடிந்தது. 


கடைத்தெருவில் ஒரு புத்தககடையை கண்டேன். உள்ளே முழுவதும் ஆன்மிக புத்தகங்கள். சொற்பொழிவுகள், சித்தர் பாடல்கள், வழிபாட்டு முறைகள், புராணங்கள் என நிறைந்திருக்கிறது. ஒரு தமிழ்பெண்மணி வந்து மலேசிய நேரப்படி கணித்த பஞ்சாங்கம்தான் வேண்டுமென்று கேட்டுக்கொண்டிருந்தார். நான் சிறுவயதில் பார்த்த தமிழ்சினிமா பாட்டுபுத்தகங்கள் இங்கு இன்னமும் புழக்கத்தில் இருக்கிறது.









பெரும்பாலான கட்டிடங்கள், ஐரோப்பிய பாணியில் கட்டப்பட்டவை. வீதிகள் அழகாக நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. எல்லா நிறுவனங்களிலும், தமிழர்கள் முக்கிய பதவிகளை எட்டியிருப்பதை பார்க்க முடிகிறது. தமிழர்களுக்குள் பதவி வித்தியாசமின்றி தமிழில்தான் பேசிக்கொள்கிறார்கள். ஒரு ஒற்றுமை உணர்வு நிறைந்திருப்பதை உணரமுடிந்தது.அழகான செட்டிநாட்டு வீடு ஒன்று செட்டி முருகன் கோயிலாக வழங்கிவருகிறது. 


செட்டிநாட்டு வீடு


மாரியம்மன் கோயில்

பத்து ஃப்ரிஞ்ச் கடற்கரை



நேற்று, பினாங்கு போர் காட்சியகத்துக்கு சென்றேன். ஓட்டுனராக வந்த தமிழ் நண்பர், தைப்பூசத்தின்போது, செட்டித்தெருவிலிருந்து, தண்ணீர்மலை கோயில்வரை கொடுக்கப்படும் விதவிதமான சாப்பாட்டு வகைகளை திரும்ப திரும்ப சொல்லிகொண்டே வந்தார்.  போர் காட்சியக பொறுப்பாளர் ஒரு மலேய பெண்மணி நுழைச்சீட்டு வழங்குமிடத்தில், ஓரளவு விரிவாக வரலாற்று சித்திரத்தை விளக்கியே உள்ளே அனுப்புகிறார். இருப்பினும், உள்ளே நுழையும் சிலர் அங்கிருக்கும் பீரங்கிகளில் சுடுவதை போல் ஏறிக்கொண்டு போட்டோ எடுத்து அப்லோடி மகிழ்கின்றனர். 






1930களில், பினாங்கின் தென்கிழக்கு ஓரத்தில் கடலோரத்தில் இருந்த மலையில் ஆங்கிலேயே ராணுவத்தால் ஒரு கோட்டை நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. 360 டிகிரி கோணத்தில் நான்குபுறமும் பார்க்ககூடிய விதத்தில் அமைந்த இந்த கோட்டையில், கடல் வழியே வரும் எதிரிகளை தாக்கும் விதத்தில் பீரங்கிகள், வான்வழி விமானங்களை தாக்க ஏவுகனைகள் இரண்டு, ஏராளமான ஆயுதங்களை காக்க அறைகள், பதுங்கு குழிகள், சுரங்க பாதைகள், தீவின் மற்றப்பகுதிகளில் இருக்கும் படையினர்க்கு தகவல் அனுப்ப வசதி என பலவசதிகளுடன் கட்டப்பட்ட இந்த கோட்டையை காக்க பஞ்சாப் ரெஜிமெண்ட் வீரர்களை கொண்டுவந்து தங்கவைத்துள்ளனர் ஆங்கிலேயே ராணுவத்தினர். தொடர்ந்து பத்துவருட காலம், காங்கிரிட்டினாலும், டன் கணக்கில் சிமிண்ட் கொண்டும் வசதிகளை மேம்படுத்தியிருக்கிறார்கள். ஆறுமாத காலம் தாக்குபிடிக்கும் வகையில் தண்ணீர் சேகரித்துவைக்க தொட்டிகள் உண்டு. ஏராளமான தமிழர்கள், மலேயர்களை கொண்டு இந்த கட்டுமானங்களை நிறுவியிருக்கின்றனர்.




பதுங்கு அறை





தோமோயுக்கி யமாசித்தா என்னும் சூறாவளி, ஜப்பானிய ராணுவத்தில் 25வது படையணிக்கு 1941ம் ஆண்டு நவம்பர் 6ம் தேதி தலைமையேற்கிறார். 1941ம் வருடம் டிசம்பர் 8, மலேயா படையெடுப்பை முன்னெடுக்கிறார். யமாசித்தா தலைமையிலான ஜப்பானிய படையின் எண்ணிக்கை வெறும் முப்பதாயிரம் பேர். மலேயா, சிங்கப்பூரில் நிலைக்கொண்டுள்ள ஆங்கிலேய, படையினரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து இருபதனாயிரம் பேர். இதில் ஆங்கிலேயர்கள், , ஆஸ்திரேலியர், இந்தியர்கள் ஆகியோர் உண்டு. கடல் வழியாக மலேசியாவின் கோட்ட பாஹரு(Kota Bahru), தாய்லாந்தின் சிங்கோரா, பட்டானி என மூன்று இடங்களில் ஊடுருவிய ஜப்பானிய ராணுவம், பினாங்கை நோக்கி முன்னேறியது. பிரிட்டிஸ் ராணுவத்தில் வீரர்கள் அதிகமிருந்தபோதிலும், மலேசியாவில் அவர்கள் வைத்திருந்த போர் விமானங்கள் (Brewster Buffaoes) காலாவதியானவை. ஜப்பான் இம்பீரியல் கடற்படை ராணுவத்தில் மிட்சுபிஷி தயாரிப்பான A6M Zeroes விமானங்கள் இருந்தன. அவை பன்மடங்கு ஆற்றலும் வேகமும் கொண்ட அந்த விமானங்கள் இரண்டு நாட்களில் ஆங்கிலேயே விமானங்களை சிதறடித்தன. பினாங்கை கைவிட்டு மெயின்லேண்டுக்கு செல்லபோவதாக ஆங்கிலேயே தளபதி ஆர்தர் பெர்ஸிவல் தெரிவித்தார். முதலில் படையினரை வெளியேற்றிய அவர், பிறகு ஆங்கிலேயே குடிமகன்களை மட்டும் நகரை விட்டு வெளியேற்றினார். இந்த கைவிடல் பினாங்கு மக்களை மிகுந்த துயருக்கும், ஆத்திரத்துக்கும் உள்ளாக்கியது. புயலில் ஒரு தோணியில், ஜப்பான் ராணுவம் தெருக்களில் நுழைகையில் மக்கள் இருபுறமும் கூடி நின்று வரவேற்க்கும் சித்திரத்தை அளித்திருப்பார். இதன் பின்னணி இந்த கைவிடலே. மக்களை பொறுத்தவரை, இரு நூறுஆண்டுகளாக அடிமைபடுத்தியிருந்த ஆங்கிலேயர்களுக்கு பதில் இப்போது ஜப்பானியர் என்கிற உணர்வே இருந்திருக்கும்.


தோமோயுக்கி யமாசித்தா



பினாங்கில் குடிமகன்களாகிய தமிழர்கள், மலேயர்கள், சீனர்களை தவிர வேறு யாருமில்லாத சூழலில் ஜப்பான் ராணுவம் தொடர்ந்து விமான தாக்குதலை தொடர்ந்தது. சரவணமுத்து தலைமையிலான பினாங்கு சர்வீஸ் கமிட்டி பினாங்கில் இருந்த வானொலி நிலையம் மூலம், நாங்கள் குடிமகன்கள் மட்டுமே எஞ்சியுள்ளோம். தயவு செய்து தாக்குதலை நிறுத்துங்கள் என்று ராணுவத்திற்கு செய்தி ஒளிப்பரப்பினார்கள். பிறகு பினாங்கில் 1941ம் ஆண்டு டிசம்பர் 19ம் தேதி ஜப்பான் ராணுவம் வந்திறங்கியது. நகர் ஜப்பான் ஆளுகைக்கு வந்தது. அப்போது தான், மிகுந்த புகழ்ப்பெற்ற அந்த செய்தியை பினாங்கு வானொலி நிலையம் மூலம் ஜப்பான் ராணுவத்தினர் ஒளிப்பரப்பினார்கள். “ஹலோ சிங்கப்பூர், நாங்கள் பினாங்கிலிருந்து அழைக்கிறோம். எங்களது வெடிகுண்டு தாக்குதலை விரும்புகிறீர்களா?“  

டிசம்பர் 19ம்தேதி ஜப்பான் ராணுவம் பினாங்கை கைப்பற்றியவுடன், ஆங்கிலேயே ராணுவத்தால் கட்டப்பட்ட கோட்டை, ஜப்பான் வசமானது. இதை ஊகித்த ஆர்தர் பெர்ஸிவல், ஆங்கிலேயே –இந்திய படையினரை இந்த கோட்டையில் உள்ள பீரங்கிகள், விமான எதிர்ப்பு ஏவுகணைகள் இரண்டு ஆகியவற்றை உடைத்துவிட சொல்லியிருந்தார். அவை தகர்க்கப்பட்டிருந்தன.  பிறகு ஜப்பான் ராணுவத்தின் போர் கைதிகளையும், பினாங்கு குடிமகன்களில் சந்தேகிப்பவரை வதைக்கும் கூடமாக இந்த கோட்டை மாற்றப்பட்டது.

ஒவ்வொரு அறையும் எண்ணற்ற கைதிகளின் வலியையும் துன்பத்தையும் கண்ட மெளனச் சாட்சிகளாக உறைந்து நிற்கின்றன. போர் கைதிகளில் சிலரை சாமூராய் முறையில் தலையை வெட்டி, ரத்தத்தின் ஒரு துளியை தங்களது ஒயின் கோப்பையில் ஏந்திய தளபதிகளை இந்த கோட்டை சுவர்கள் கண்டுள்ளது.   பலிபீடங்கள், விசாரணை அறைகள், தகர்க்கப்பட்ட ஏவுகணை ஏவுதளம் என வரலாற்றில் உறைந்து கிடந்த இந்த கோட்டையை, 2001ம் ஆண்டு வரை ஏறக்குறை அறுபது வருடம் மறந்திருந்த மலேசிய அரசு, பிறகு இந்த கோட்டையை கண்டடெடுத்து போர் அருங்காட்சியகமாக மாற்றியுள்ளது.



விமான எதிர்ப்பு ஏவுகணை தளம்



கைதிகளின் பலி பீடம்



தாக்குதல் தொடங்கி வெறும் எழுபது நாட்களில் மலேய – சிங்கை பகுதியை முழுவதும் கைப்பற்றி மலேயாவின் புலி என்று அழைக்கப்படுகிறார் யமாசித்தா. பிப்ரவரி 15ம்தேதி 1942ம் ஆண்டு சிங்கப்பூர் விழ்ந்தது.  நான்கு வருடங்கள் இந்த பகுதி முழுவதும் யமாசித்தாவின் ஆளுகையில் இருக்கிறது. சிங்கப்பூரை கைப்பற்றியவுடன், சீன மக்களில் சந்தேகபடுபவரையெல்லாம் கம்யுனிஸ்ட் என்று கைது செய்து சுட்டுக்கொல்லபடுகிறார்கள். ஏறக்குறைய எழுபதாயிரம் மக்கள் இப்படி படுகொலைசெய்யப்பட்டதாக தகவல்கள் சொல்கின்றன. பிறகு போரில் ஜப்பான் தோல்விக்கு பின், யமாசித்தா போர்கைதியாகிறார். பிலிப்பைன்ஸில் போர் குற்ற விசாரணை நடக்கிறது. யமாசித்தா இந்த படுகொலைகள் தமக்கு தெரியாமல் நடந்திருக்கலாம், எனக்கு தெரிந்திருந்தால் கடுமையாக தண்டித்திருப்பேன் என்று வாதிடுகிறார். போர் தளபதியாக, யமாசித்தா நேரடியாக சம்பந்தபடவில்லையென்றாலும், அவருக்கு அவரது ராணுவத்தினரின் செயல்களில் பொறுப்பு இருக்கிறது என்று நீதி வழங்கப்பட்டு, தூக்கில் ஏற்றபடுகிறார் யமாசித்தா. இது யமாசித்தா முறை (yamashita standard) என்கிற பெயரிலேயே இன்று வரை ராணுவத்தில் தலைமையின் பொறுப்பேற்பை பேசுகிறது.



யமாசித்தா தூக்கு மேடை

பிலிப்பைன்ஸில் 13 படிகள் கொண்ட அந்த தூக்குமேடையில் யமாசித்தா தூக்கிலேற்றியதை ஒரு நினைவுச் சின்னமாக பினாங்கு கோட்டையில் உருவாக்கி வைத்துள்ளனர். வெற்றியின் வெறிக்கூச்சலையும், தோல்வியின் வலியையும், வரலாற்றில் அந்த இடத்தில், அந்த காலத்தில் மாட்டிக்கொண்டதை தவிர வேறு எந்த குற்றமும் செய்யாத அப்பாவிமக்களின் பெருந்துயரையும் சுமந்தபடி பினாங்கு கோட்டை மெளனமாக உறைந்திருக்கிறது.


4 comments:

  1. Ungal udan vandhu partha mathiri unarvu.. pahirvukku mikka nandri..

    ReplyDelete
  2. அதிகார,பலம் மிகுந்த, மனிதர்களின் கோப்பைகளில் பாமரனின் குருதிக் கறை படிந்துள்ளது

    ReplyDelete
  3. Very lucid way of writing .it is mesmerising

    ReplyDelete
  4. நன்றி நண்பரே. கட்டாயம் போய் பார்க்க தூண்டும் எழுத்து. புயலில் ஒரு தோணி அளித்த ஒரு தூண்டல் இந்த அளவுக்கு உங்களை ஊக்கப்படுத்தி இருக்கிறது எனும்போது இலக்கியங்கள் மனித குலத்தின் மீது செலுத்தும் செல்வாக்கு வியக்க வைக்கிறது

    ReplyDelete

Write your valuable comments here friends..