Sunday, October 14, 2012

எலி பத்தாயம் - மனம் கவர்ந்த திரைப்படங்கள்.

சுந்தரபாண்டியன் என்ற உலக மகா காவியத்தை பார்த்ததில் ஏற்பட்ட வாய்கசப்பு நீங்க, இன்று மீண்டும் ஒரு முறை, எலி பத்தாயம் என்ற மலையாள படத்தை பார்த்தேன். 1981ல் அடூர் கோபாலகிருஷ்னன் எழுதி இயக்கிய இந்த படம், அப்போது பல விருதுகளை வென்று குவித்தது. அழகான மெல்லிய ஒடை போல் நகரும் இந்த படத்தின் பலம், பெரும்பாலான இடங்களில் கையாளபடும் மெளனம். உலக திரைப்படங்களில் நிச்சயம் இந்த படத்திற்க்கு ஒரு சிறந்த இடம் உண்டு.



உண்ணி, நிலபிரபுத்துவ காலக்கட்டத்தின் எச்சம். வீட்டில் திருமணம் செய்துக் கொள்ளாமல், தனது இரு சகோதரிகளோடு வாழ்ந்து வருபவன். மூத்த சகோதரி மட்டும் திருமணம் செய்து கணவனுடன் வாழ்கிறாள்.  வாழ்ந்துக் கெட்ட ஒரு குடும்பத்தின், எல்லா கல்யாண குணங்களும் அவனுள் உள்ளது. இரு சகோதரிகளில் மூத்தவள் ராஜம்மா. திருமண வயது தாண்டியும், அண்ணனின் மந்ததனம் மற்றும் சுயநலத்தால் முதிர் கன்னியாகவே, அவனுக்கு சேவகம் செய்துக் கொண்டு வாழ்ந்து வருபவள்.
இளைய சகோதரி ஸ்ரீதேவி, இந்த புதிய காலக்கட்டத்தை ஏற்றுக் கொண்டு வெளியில் செல்ல துடிப்பவள். அந்த குடும்பத்தில் நிகழ்காலத்தின் துடிப்பாக இவள் மட்டுமே விளங்குகிறாள்.

படத்தின் முதல் சில காட்சிகளிலேயே, உண்ணியின் பாத்திரத்தை இயக்குனர் விளக்கிவிடுகிறார். திடிரென்று இரவு எலி கடித்து விட்டதாய் அலறி சகோதரிகளை எழுப்பி விடுகிறான். அவர்கள் எலியை துரத்துகிறார்கள். மறுநாள் காலை, இளைய சகோதரி மச்சி மேல் ஏறி, எலிப்பொறியை எடுக்கிறாள். எலிப்பத்தாயம் என்ற வார்த்தைக்கு எலிப்பொறி என்று அர்த்தம். படம் முழுவதும் இந்த எலிப்பொறியை கொண்டு எலிகளை பிடித்து கொண்டு போய் வீட்டருகே இருக்கும் ஒரு குளத்தில் முக்குகிறாள்.   

உண்ணி, மீசையில் உள்ள வெள்ளை முடிகளை தேடி தேடி வெட்டிக் கொள்கிறான். ராஜம்மா காப்பி கொண்டுவந்து தருகிறாள். ஒரு திருமணத்திற்க்கு செல்வதாக சொல்லி கிளம்பி வெளியே செல்கிறான். காலுக்கு செருப்பை கொண்டு வந்து போடுகிறாள் ராஜம்மா. சற்று தூரம் வெளியே நடந்து சென்று பார்க்கிறான். தெருவின் ஒரு பகுதியில் மழைப்பெய்து கணுக்கால் அளவு தண்ணிர் தேங்கி நிற்கிறது. அதில் கூட நடந்து செல்ல மனதில்லாமல், அலுப்புடன் வீட்டிற்க்கு திரும்பி வந்து விடுகிறான். அடுத்த காட்சியில், வீட்டு தோட்டதுக்குள், ஒரு மாடு புகுந்து செடிகளை தின்கின்றது. கண்ணெதிரிலேயே, உண்ணி ஈசிச்சேரில் உட்கார்ந்துக் கொண்டு பேப்பர் படிக்கிறான் . மாட்டை விரட்ட உட்கார்ந்த இடத்தை விட்டு அகலாமல், உஷ், உஷ் என்று சத்தம் எழுப்புகிறான். மாடு அவனை சட்டை செய்யாமல் செடிகளை தின்கிறது. அதை விரட்ட ஈசிச்சேரை விட்டு எழ வேண்டும் என்பதால், ராஜம்மே, ராஜம்மே என்று எந்த பதட்டமுமில்லாது மெதுவாக அழைத்து, அந்த மாட்டை காண்பிக்கிறான். அவள் வீட்டிற்க்கு வெளியே வந்து மாட்டை விரட்டி  செல்கிறாள். உண்ணி பேப்பர் படிப்பதை தொடர்கிறான். இதுதான் உண்ணி. தமக்கிருக்கும் வயலில் இருந்து நெல் வருகிறது. அதை கொண்டு வாழ்க்கை நடத்திக் கொண்டு, சகோதரிகளின் உழைப்பில், தனது உடலில் எந்த அலட்டலுமில்லாது, காலத்தை கழிக்கிறான். படம் முழுவதும் எதையும் அவன் மாற்ற முயல்வதே இல்லை. ஏன்,  உலகம் மாறிவிட்டது என்ற உணர்வே அவனுக்கு இல்லை.  படம் நடுவில், துபாய் சென்று உழைத்து பணம் சேர்த்த ஒருவன், பேண்ட் கூலிங்கிளாஸுடன், இவர்களை பார்க்க வீட்டிற்க்கு வருகிறான். அவனை பார்க்க, பார்க்க, உண்ணிக்கு எரிச்சல் வருகிறது.  எங்கே, அவனை பார்த்து தனது சகோதரிகள், தனது உழைப்பின்மையை உணர்ந்துக் கொள்வார்களோ என்று பதட்டபடுகிறான். அவனை அவமான படுத்தி விரட்டி விடுகிறான்.

                                 அடூர் கோபாலகிருஷ்னன்


ராஜம்மாவுக்கு வயது அதிகமாகிவிட்டதால், தெரிந்தவர் ஒருவர் இரண்டாம் தாரமாக மணமுடிக்க வரன் கொண்டு வருகிறார். உண்ணி அவரை கடிந்து விரட்டுகிறான். அவள் சென்று விட்டால் தம்மை சீராட்ட ஆள் ஏது?. இப்படி முழுக்க முழுக்க அவர்களை சார்ந்து, அவர்கள் இல்லை என்றால் வாழ முடியாது என்கின்ற பொறியில் தானே, விரும்பி மாட்டிக் கொள்கிறான், உண்ணி. இளைய சகோதரி ஸ்ரீதேவி, தனது காதலனுடன் வீட்டைவிட்டு வெளியேறிவிடுகிறாள். திருமணமான மூத்த சகோதரியோ, சொத்தில் பங்கு கேட்டு வந்து நிற்கிறாள். ராஜம்மா மட்டும் அவனுக்காக உழைத்து, உழைத்து எந்த கேள்விகளும் கேட்காது, தனது நிலையை நொந்துக் கொண்டு வாழ்க்கையை நகர்த்துகிறாள். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து, இந்த நரகத்தில் இருந்து எனக்கு விடுதலையே கிடையாதா என்று உண்ணியிடம் கேட்கிறாள். அவன் இந்த கேள்விக்கு எந்த பதில் சொல்வது என்று தெரியாமல் அவனுடைய வழக்கம் போல், சும்மா இருக்கிறான். கடைசியில் ராஜம்மா உடல் நலம் குன்றி, இருமி, இருமி, உயிரைவிடுகிறாள்.

ராஜம்மா இல்லாது வாழ முடியாமல், உண்ணி மனநிலை பாதிக்கப்பட்டு ஒரு இருண்ட அறைக்குள் ஒளிந்துக் கொள்கிறான். ஊர்காரர்கள் உள்ளே நுழைந்து, அவனை பிடித்துக் கொண்டு சென்று அதே குளத்தில் அமுக்குவதோடு படம் முடிகிறது. எலிப்பொறிக்குள் மாட்டிக் கொண்ட எலி போல் அவன் வாழ்கை முடிகிறது. என்னுடைய மனதில் மறக்க முடியாத ஒரு காவியமாக இந்த படம் தங்கிவிட்டது.

4 comments:

  1. I have seen this movie.

    Good review.

    Venu

    ReplyDelete
  2. தங்களின் இந்த பதிவைக் கண்டு, இந்த அருமையான படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததற்காக மிக மகிழ்ந்தேன்.
    "அழகான மெல்லிய ஒடை போல் நகரும் இந்த படத்தின் பலம், பெரும்பாலான இடங்களில் கையாளபடும் மெளனம். உலக திரைப்படங்களில் நிச்சயம் இந்த படத்திற்க்கு ஒரு சிறந்த இடம் உண்டு."
    என்ற தங்களின் வரி மிகச்சரி.
    அதிக பரிச்சயமில்லாத புகழ்பெற்ற மலையாள விருதுப் படங்களில் ஒன்றான எலிப்பத்தாயம் படத்தை என் பார்வைக்கு தந்த தங்களுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி. தங்களை போன்ற தேடல் உள்ளவர்களுக்காகவே இந்த தளத்தில் தொடர்ந்து எழுதி வருகிறேன். எப்போதாவது கிடைக்கும் இது போன்ற கடிதங்கள் கொடுக்கும் மகிழ்ச்சியை நம்பியே இந்த தளம் செயல்படுகிறது. நன்றி.

      Delete

Write your valuable comments here friends..