Saturday, December 23, 2023

 

கலகக்காரர் பெரியார்

 

ஜப்பானிய மொழியில் பெரியாரின் வாழ்க்கை குறிப்புகளை, நாங்கள் மொழிப்பெயர்ப்பு செய்தபோது, பிழை திருத்தம் செய்த ஜப்பானிய ஆசிரியர் நகானோசாதியத்திற்க்கு எதிராக, பெண்ணுரிமைக்காக என இத்தனை பணிகளை ஒரே மனிதர் செய்துள்ளாரே, இவரை எப்படி நாங்கள் தெரிந்துக்கொள்ளாமல் போனோமென்றுஆச்சரியப்பட்டார். உண்மையில் எது ஒரு மனிதனை 95 வயது வரை இந்த சமூகத்திற்க்காக இயங்க வைத்தது என்கிற ஆச்சரியம் நியாயமானது. பெரியாரை எது புரட்சியாளனாக்கியது? தன்னுடைய வாழ்நாளின் இறுதிவரை தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் சென்று மக்களுக்காக குரல் கொடுக்க வைத்தது எது? மாநிலங்களை கடந்துச் சென்று சிறைபட வைத்தது எது? பதவியா, புகழா, பணமா? கடைசி வரை தனக்கு கிடைத்த எல்லா பதவிகளையும், அதிகாரத்தையும் நிராகரித்தவர் அவர். தன்னிடமிருந்த அனைத்து சொத்துக்களையும் மக்களுக்கு அர்ப்பணித்தவர் அவர். ஒருவேளை மக்கள் பணிக்கு வராதிருந்தால் அவர் செல்வந்தராக, இருபதுக்கும் மேற்ப்பட்ட கெளரவ பதவிகளை அவர் அலங்கரித்திருக்ககூடும். ஒத்துழையாமை இயக்கத்தின் ஒரு பகுதியாக ஆங்கில அரசாங்கத்தின் நீதிமன்றங்களை புறக்கணிக்க மகாத்மா காந்தி அழைப்பு விடுத்தபோது அதை ஏற்று தனக்கு வரவேண்டியிருந்த ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேலான பணத்திற்க்காக நீதிமன்றத்தை நாடாமல் கைகழுவியவர் பெரியார். பெரியாருக்கு வேண்டிய நண்பரொருவர், ”நீங்கள்தானே நீதிமன்றங்களை புறக்கணிக்கிறீர்கள், அந்த வழக்கை நான் தொடுத்து பணத்தை பெற்று தருகிறேன், பத்திரங்களை என் பேருக்கு மாற்றி தாருங்கள்என்றபோது அதை மறுத்தவர். கள் இறக்குவதற்க்காக செய்திருந்த ஒப்பந்தத்தை, மது ஒழிப்பு போராட்டத்திற்க்காக ரத்து செய்ய பெரியார் கோரியபோது குத்தகைதாரர் மறுக்க, இரவோடு இரவாக தன்னுடைய தென்னந்தோப்பில் இருந்த மரங்களை வெட்டித்தள்ளியவர் அவர்.



 


சுயசாதி மக்களுக்காகவோ, தன்னுடைய தாய்மொழிக்காகவோ பெரியார் இந்த நீண்ட நெடிய போராட்டத்தை கையிலெடுக்கவில்லை. எனில் எதுதான் பெரியாரை செலுத்தியது? தன் கண்முன்னே மதத்தின் பேரால், சாதியின் பேரால் நிகழும் ஒடுக்குமுறையும், சகமனிதன் அதனால் படும் அவமானங்களுமே பெரியாரை இந்த கலக வாழ்க்கையை கைக்கொள்ள செய்தது.இதுவே பெரியாரை ஒரு உலக குடிமகனாக, எல்லைகளை கடந்த தலைவனாக, தேசாபிமானங்களை தாண்டிய மனிதாபிமானியாக என்னை உணரச் செய்கிறது.

 

.வே.சு ஐயர் நடத்திய குருகுலத்தில் பிராமணர்களுக்கு ஒரு பந்தியும், பிராமணர் அல்லாதோருக்கு வேறு சாப்பாடு பந்தியும் இடப்படுவதை கண்டித்தே பெரியார் வெகுண்டெழுகிறார். வகுப்புரிமை சட்டத்திற்க்காக தொடர்ந்து ஆறு முறை காங்கிரஸ் மாநாடுகளில் தீர்மானம் கொண்டு வர முயன்று தோற்கடிக்கப்பட்டதினாலயே, காங்கிரஸிலிருந்து வெளியேறுகிறார். மொத்த மக்கள் தொகையில் மூன்று சதவீதத்தினர், அரசாங்க பதவிகளில் அறுபது சதவீகிதத்திற்க்கும் மேலான இடங்களில் அமர, இந்து மதத்தில் அவர்களுக்கிருந்த மேலாண்மையே காரணம் என்று பெரியார் கருதினார். அனைத்து மக்களுக்கமான சமூக நீதிக்காகவே வகுப்புரிமை தீர்மானத்தை காங்கிரஸ் மாநாடுகளில் கொண்டு வர முயன்றார். அது தொடர்ந்து தோற்கடிக்கபடுவதின் பின்னணியில் சாதி இருப்பதை கண்டு கொதித்தே இனி அங்கிருந்து பலனில்லை என்று வெளியேறுகிறார். சமத்துவத்திற்க்கு எதிராக நிகழும் எந்த கொடுமைக்கும் அவர் மெளனமாக தலை குனிந்தவரல்ல.

 

சாதியபடி நிலைகளை, மூட பழக்கவழக்கங்களை இந்துமதம் ஆதரிக்கிறது என்பதனாலயே மதத்தை நிராகரிக்க சொன்னார் பெரியார். 1928ல் தாழ்த்தப்பட்டோர் மாநாட்டில் பேசிய பெரியார், ”உங்களை யாராவது சாதியின் பேரால் இழிவுபடுத்தினால் அதை எதிர்த்து நிற்கவேண்டும். முடியாவிட்டால் வேறு பட்டணங்களுக்கு சென்று குடியேறி மானத்துடன் வாழவேண்டும். அதுவும் முடியாவிட்டால் இழிவுபடுத்தும் இந்து மதத்தை விட்டு விலகி சமத்துவம் நிலவும் மதத்திற்க்கு சென்று விடுங்கள். அதுவும் முடியாவிட்டால், வேறு நாடுகளுக்கு சென்று ஜீவனம் செய்துக்கொள்ளுங்கள்”, என்று கோருகிறார். சொந்த ஊரை விட, மதத்தை விட, பிறந்த நாட்டை விட, உற்றார் உறவினர்களை விட முக்கியமானதாக தன்மானத்தை கருதினார் பெரியார். மனிதர்கள் எந்த சூழலிலும் எதன் பேராலும் இழிவுகளை அனுபவிக்ககூடாது என்கிற மனிதாபிமானமே பெரியாரை நூற்றாண்டுகளை கடந்த தலைவனாக நீடிக்க செய்கிறது.

 

வாழ்நாள் முழுவதும் பெரியார் பிராமணிய ஆதிக்கத்திற்க்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்தபோதும், ஒருபோதும் அவர் வன்முறையை ஆதரிக்கவில்லை என்பதே வரலாறு. தனிப்பட்ட நட்புகளில் ஒருபோதும் சாதிய விரோதங்களை அவர் காண்பித்தவரல்ல. திருச்சியில் நடந்த எழுத்தாளர் சங்க மாநாட்டில், எழுத்தாளர் ஜெயகாந்தன், பெரியாரின் புராணங்கள் மற்றும் இதிகாசங்கள் பற்றிய கருத்தை விமர்சித்து, பெரியார் மேடையில் இருக்கும்போதே பேசுகிறார்.  கூட்டத்தில் சலசலப்பு எழுகிறது. தனது கைத்தடியால் மேடையில் தட்டி அவர்களை அமைதிப்படுத்தியவர் பெரியார். ”நாம எத்தனையோ பேரை விமர்சிக்கிறோம். அதுபோல இந்த தம்பி நம்மளை விமர்சிக்குதுஎன்று விமர்சனங்களை இயல்பாக எடுத்துக்கொண்ட ஜனநாயகவாதியாக அவர் இருந்தார். அன்றைக்கு அந்த கூட்டத்தில் எந்த கலவரமோ குழப்பமோ நேராததற்க்கு ஒரே காரணம், பெரியார் அவர்களும் மேடையில் இருந்ததுதான் என்றார் எழுத்தாளர் ஜெயகாந்தன். பெரியாரது நாகரீகம் மிக மேன்மையானது என்று அப்போது உணர்ந்தேன் என்று எழுதினார் எழுத்தாளர் ஜெயகாந்தன்.  

 

 

இந்துமதத்தை மட்டுமே சாடினார் பெரியார் என்பது இன்றைக்கு நிகழ கூடிய தவறான பிரச்சாரம். முற்றிலுமாக மதங்களையே நிராகரிக்க சொன்னவர் பெரியார்.ஆனால் சீலையம்பட்டியில் தாழ்த்தப்பட்டவர்கள் இஸ்லாமிய மதத்தை தழுவிய போது, அதை வரவேற்றார். தாழ்த்தப்பட்டவர்கள் தம் மீது சுமத்தப்பட்டிருக்கும் இழிவை நீக்கிக்கொள்ள, மதம் மாறிய பின்னரும் சாதிகள் நீடிக்கும் கிருத்துவ மதத்தை விட இஸ்லாமிய மதம் சரியான தேர்வுதான் என்றார். அதே சமயம் இஸ்லாமிய பெண்களிடையே திணிக்கப்பட்டிருக்கும் கோஷா முறையை எதிர்த்து 1947ல் விடுதலை இதழில் தலையங்கம் எழுதியிருக்கிறார் பெரியார். பழமைவிரும்பிகளின் திருப்திக்காக மனித இனத்தை பலியிடுவது என்பது மதியீனம் என்று கொதிக்கும் பெரியார், இத்தனை நான் எழுதிய பிறகும், இஸ்லாமிய பெண்கள் கோஷா அணிய வேண்டும் என நினைக்கும் இஸ்லாமிய இளைஞர்கள் யாராவது இருப்பின், அவர்களிடம் நான் கோருவது நீங்கள் ஓராண்டுக்காவது வீட்டில் முகமூடி அணிந்து வாழ்ந்து பாருங்கள் என்பது தான் என்று முடிக்கிறார் அந்த கட்டுரையில். தான் பிறந்த மதம் என்கிற முறையில் இந்து மதத்தை சாடுவதற்க்கான உரிமைகளை கூடுதலாக தான் பெற்றிருப்பதாக கருதும் பெரியார் அதனாலயே, புத்த மதத்தை தழுவ அழைப்பு விடுக்கும் அண்ணல் அம்பேத்காரின் கோரிக்கையை நிராகரித்து, தான் உள்ளிருந்தால்தான் இவர்களை கேள்விகேட்க முடியும் என்கிறார்.

 

தான் சொன்ன எல்லாவற்றையும் இறுதிவரை கடைபிடிக்கிற நேர்மையாளராக பெரியார் இருந்தார். ஈரோடு கள் மறியல் போராட்டம், வைக்கம் போராட்டம் என பல போராட்டங்களில் பெரியார் வீட்டு பெண்களான மனைவி நாகம்மையாரும், தமக்கை கண்ணம்மாளும் கலந்துக்கொண்டு அந்த போராட்டங்களை முன்னெடுத்தனர். வீடுகளில் அடுப்பாங்கரை இருக்கும்வரை பெண்களுக்கு விடிவு இல்லை. அடுப்புகளை இடித்துபோடுங்கள் என்று அவர் கோரினார். கூட்டு சமையல் முறை எனபடும் கம்யூனிட்டி குக்கிங் வந்துவிட்டால் பெண்களுக்கு சமையலில் இருந்து விடுதலை என 1950 ஆம் ஆண்டு பேசுகிறார் பெரியார். ஆண்களை விட பெண்களுக்கே படிப்பு முக்கியமென்று பெரியார் கருதினார். கற்பு என்பதெல்லாம் பெண்களை அடிமையாக்கும் சூழ்ச்சி என்று அவர் சொன்னது இன்றிலிருந்து 80 ஆண்டுகளுக்கு முன்பு. பெண்களுக்கு சொத்தில் சம உரிமை என்று அவர் முழங்கி இத்தனை ஆண்டுகளுக்கு பின்பும், அது சட்டமாக்கப்பட்ட பின்பும் இன்று வரை நடைமுறையில் ஏற்றதாழ்வுகள் இருக்கிறது. பெண்கள் எந்த சாதியில் இருந்தாலும் அவர்கள் தாழ்த்தப்பட்டவர்களாக தான் நடத்தபடுகின்றனர் என சாதிகளை தாண்டி பெண்களுக்கு குரல்கொடுத்தார். விதவைகள் மறுமணத்திற்க்காக அவர் முன்னெடுத்த முயற்சிகள், பிராமண சாதியை சேர்ந்த பெண்களுக்கும் சேர்த்தே பெரும் விடுதலையை பெற்றுத்தந்தது. எனவே தான் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்து போராடிய பெண்களின் பட்டியல் மிக நீண்டது.

 

பெரியார் அளவுக்கு தனது சொந்த வாழ்க்கையை அப்பட்டமாக பொதுவெளியில் முன்வைத்தவர்கள் வரலாற்றில் இல்லை. இன்று அவரது சொந்த வாழ்க்கையை விமர்சிக்க முனைபவர்கள் கூட பெரியார் பொதுவெளியில் ஏற்கனவே சொன்ன விஷயங்களை தான் திரும்ப கூறவேண்டியிருக்கிறது. ஜெர்மனி சென்றபோது நியூடிஸ்ட் காலனிக்கு நிர்வாணமாக சென்றதை அவரே புகைப்படமாக வெளியிடும் தைரியமும் நேர்மையும் பெரியாரிடம் இருந்தது. நான் கூறுகிறேன் என்பதற்க்காக எதையும் ஏற்கவேண்டியதில்லை. உனது அறிவால் ஆராய்ந்து உண்மையென்றால் ஏற்றுக்கொள். இல்லையென்றால் தூக்கிபோட்டுவிடு என்று கூறும் தைரியம் அவருகிருந்தது.

 

சமூக அழுத்தம், பல்லாண்டுகளாக தொடர்ந்த சாதிய ஆதிக்கம், மத தூய்மை, அறிவார்ந்த கலைகளிலிருந்து புறக்கணிப்பு என காலங்காலமாக ஒரு சமூகம் அழுத்தப்பட்டால் அந்த சமூகம் என்னவாக மாறும்? எத்தகைய தாழ்வு மனப்பாண்மையில் அது அழுத்தப்பட்டிருக்கும்? அந்த நச்சு சூழலிருந்து அவர்களை வெளியே எடுத்துப்போட்டதுதான் பெரியார் செய்த மாபெரும் பணியென்று நான் கருதுகிறேன். புனிதமென கருதப்பட்டவை அனைத்தையும் உடைத்து காண்பித்தவர் பெரியார். அது மாபெரும் நம்பிக்கையை அழுத்தப்பட்ட சமூகத்திற்க்கு அளித்தது. அத்தகைய கட்டுடைப்பு அந்த காலக்கட்டத்தில் நடைபெறவில்லையென்றால், காட்டுத்தீ போல் பரவிய தன்னம்பிக்கை சாத்தியப்பட்டிருக்காது.

 (பெரியார் மலரில் வெளியிடப்பட்ட கட்டுரை)

ரா.செந்தில்குமார்.

Thursday, December 16, 2021

நுண்வினை ஆபரணம்

திருச்செந்தாழையின் சிறுகதைகளை அவரெழுதிய காலக்கட்டத்தை கொண்டு  பிரித்துக்கொள்ள முடிகிறது. 2006 முதல் 2012 போன்ற காலக்கட்டங்களில் அவரெழுதிய தேவைகள், ஆண்கள் விடுதி : அறை எண் 12 போன்ற கதைகள் நேரடியான கதை சொல்லல் பாணியில் அமைந்திருக்கிறது.

ஆண்கள் விடுதி : அறை எண் 12 மேன்ஷன் வாழ்க்கையின் பாலியல் வறட்சியை மையமென கொண்டிருக்கிறது. பாலியல் தொழிலாளியிடம் தங்கிவிட்டு வெளியே வருகையில் அவளது  மகள் வண்ணத்துப்பூச்சியுடன் விளையாடுவதை காணும் காட்சி உருவாக்கும் வேதனை இந்த கதையை மறக்கமுடியாத ஒன்றாக்குகிறது.  

தேவைகள் சிறுகதையில், மகனை இழந்துவிட்ட தந்தை மருமகளின் ஒழுக்கத்துக்கு காவலாகிவிடும் சூழலைச் சொல்கிறது. வீட்டில் வாசனை மாறுபடுவதின் வழியே நிகழ்ந்தவற்றை ஊகித்துவிடும் சிவசு, ஒரு மனம் நெகிழ்ந்த தருணத்தில்தின்னுட்டு போ கழுதைஎன்று நாய்க்கு சோறிடுவது, ஆண்டு அனுபவித்தவனின் மனது வந்தடையும் தரிசனம். கதையின் தலைப்பை நேரடியாக வைத்தது பிரசுரமானது வெகுஜன பத்திரிக்கை என்பதால் இருக்கலாம்.

2020க்கு பிறகு எழுதிய அவர் சிறுகதைகள் சட்டென்று வேறு வகையான பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறது. வணிகர்களை, “நெடுநுகத்துப் பகல் போல் நடுவு நின்ற நன்னெஞ்சினோர்” என்கிறது சங்கபாடல்.   பெரும்பாலான திருச்செந்தாழை சிறுகதைகளின் களம் வியாபார உலகம். ஆனால், எந்திரத்தில் அமர்ந்து பேலன்ஸ் சீட்டை ஆராய்ந்து செய்யப்படும் பங்கு வணிகம் அல்ல அது. மண்ணுடனும், மழையுடனும் உறவாடி, போராடி தானியங்களை விளைவிக்கும் விவசாயிகளிடம் செய்யும் வணிகம். குரூரத்தின் எல்லைக்கும், கனிவின் உச்சத்துக்கும் ஒரு நொடியில் சென்றடைந்து விடும் குணத்தை சம்சாரி அவனுடைய மண்ணிலிருந்தே பெற்றிருக்க முடியும். அப்பாவித்தனமும், தந்திரமும் குதர்க்கமுமாய் விதவிதமான மனிதர்கள். அவர்களுடன் வியாபாரம் செய்யும் கமிஷன் மண்டி மனிதர்கள் கூற எத்தனை ஆயிரம் கதைகள் மீதமிருக்கும்? இப்படி ஒரு களம் தமிழ் சிறுகதையுலகிற்க்கு புதியதுதான். .மாதவனின் சாலை தெரு கதைகள் வேறு விதமானவை.

 

வாசகனை நின்று நிதானிக்க வைத்து தனது மாயச் சூழலுக்குள் இழுத்துக்கொள்வது திருச்செந்தாழையின் மொழி. அவர் கவிஞனாகவும் இருப்பதின் வழியே இந்த மொழிநடைக்கு வந்தடைந்திருக்ககூடும்.

தென்னம்தோப்பிற்க்குள் சிறியதொரு கோவிலில் மாடவிளக்கு பொருத்தப்பட்டிருக்க, சாம்பலான இருளுக்குள், அது அம்மாவின் நெற்றியைப் போல் இளவெளிச்சம் கொண்டிருந்ததுஎன்கிற விவரிப்பை எப்படி ஒரு வாசகன் சட்டென்று கடந்து கதைக்குள் புகுவது?

விலாஸம் கதையில் தன்ராஜிடம் முதலில் வெளிபடுவது, மானின் கழுத்தை கவ்வி சென்று நிதானமாக உயிர் அடங்குவதை ரசிக்கும் சிங்கத்தின் வன்மம். தன்ராஜ் தனது பழைய முதலாளியை பார்க்க வருவது, அந்த வீழ்ச்சியை உள்ளூர ரசிப்பதற்க்கு. கூடவே மென்மேலும் வெற்றிகளை குவிக்க, மனிதர்களுக்கு கொஞ்சம் சீண்டலும், சிறிய அவமானங்களும் கூட வேண்டியதாக இருக்கிறது.  புது பணக்காரரான தன்ராஜின் புதிய கார், அதன் ஓட்டுனர், இவர்களை எதிர்க்கொள்ளும் பழைய முதலாளியின் ஓட்டுனரிடம் தெரியும் அலட்சியம், முதலாளி வந்தவுடன் உடனடியாக அவரிடம் தெரியும் உடல்மொழி மாற்றம், முதலாளியின் பியட் கார் இவற்றை கொண்டே அந்த காட்சியை கச்சிதமாக வாசகனுக்கு கடத்திவிடுகிறார் ஆசிரியர். மிக சிக்கனமான வரிகளில் பாத்திரங்களை நம்பகமாகவும் லாவகமாகவும் படைத்துவிட திருச்செந்தாழையால் முடிகிறது.

புகழேந்தி அண்ணனின் கிண்டலை அமைதியாக வாங்கிக்கொண்டு அவரை திருப்திபடுத்துவதின் வழியே அவரை போன்றவர்களை காலம் முழுவதும் அப்படியே விட்டுவிடுவதில் அடங்கியிருக்கிறது தன்ராஜின் வன்மம்.

அப்பா இப்படிதானென்று தன்ராஜின் மகன் முடிவுகட்டியபின்பு, இவை மட்டுமல்ல அவர் என்பது தெரியவருகிறது. வேட்டையின் வெற்றி இரையில் மட்டுமல்ல.  வேட்டையாடுதலின் ருசி, அந்த ஆட்டத்தின் களிப்பிலிருக்கிறது என்பதை உணரும் மகன் மெளனமாக அமர்ந்திருக்கிறான்.

துலாத்தன் சிறுகதையில் ஏறக்குறைய அய்யாவுவை ஓடவைப்பதும் இந்த ஆட்டத்தின் ருசிதான். தரகுக்கும் மிஞ்சாது என்று தெரிந்தபின்பும், அய்யாவு, யூரியா சாக்குகளை கொண்டு, விவசாயிகளிடம் தானியங்களை கொள்முதல் செய்வது, வியாபாரம் என்பது வெறும் லாப நட்ட கணக்கல்ல என்பதால் தான். ஒவ்வொரு கணத்திலும் அங்கு எடை வைக்கப்படுவது அவருடைய இத்தனை நாள் வாழ்வின் அனுபவமும் அதன் பெறுமதியும் தான். அந்த ஊசலாட்டத்தை அப்படியே எழுத்தில் கொண்டு வருவதில்தான் திருச்செந்தாழையின் நுட்பம் அடங்கி உள்ளது.  இருபது ரூபாய் கூட்டி கொடுப்பதால் வேறு வியாபாரியிடம் தமது தானியங்களை கொடுக்க ஒத்துக்கொள்ளும் சம்சாரிகள், இத்தனை நாள் பழகிய அய்யாவுவை நிராகரிக்கிறார்கள். இனி தோல்விதான் என்கிற நிலையிலிருந்து துவளாதவனாக போராடி ஒரே ஒரு காட்டில் தனது கொள்முதலை நிகழ்த்திகாட்டிவிடும் அய்யாவுவை, அதே சம்சாரிகள் மதிப்புடன் பார்த்து நகருமிடத்தில் அய்யாவு கொள்ளும் பெருமிதத்தை வாசகனும் உணர்கிறான். அய்யாவு அந்த வெற்றியின் ருசியை சப்புக்கொட்டி அமர்ந்திருக்கையில் உதிர்ந்த சோளத்தட்டையாக மகள் பரமு நினைவில் எழுந்து சுருள வைக்கிறாள்.

இரு மணம் இணைந்து, உயிரில் கலந்த அற்புதமான உறவிலும்,  ஏதோ ஒரு மூலையில், கொஞ்சமாய் துரோகத்தின் சுவடு வெளிபட தருணம் வேண்டி காத்துக்கொண்டுதான் இருக்கிறது. அற்புதமான இணை என்று உள்ளும் புறமும் நெகிழ்கையில், தெய்வம் கள்ளசிரிப்பு கொள்ளுமோ? தன்னுடைய வாழ்வை கொஞ்சம் கொஞ்சமாய் மாற்றியவள் திடீரென்று வேறொருவனுடன் சென்று விடும் மர்மத்தை புரிந்துக்கொள்ளவே அவளை தேடி ஜே.பி செல்கிறான். அந்த கொலுசின் சிரிப்பில் அதை கண்டுக்கொண்டு திரும்பி நடக்கிறான் டிஷர்ட் சிறுகதையில்.

காப்பு சிறுகதை முழுக்க முழுக்க தாழம்பூவின் வாசம் கொண்ட மயக்க நிலையிலே நிகழ்கிறது. சிறு பிள்ளை பருவத்தில், தாத்தா தாழம்பூவின் வாசம் நினைவழிக்கும்”, என்கிறார். அவர் காசுகொடுத்து அனுப்பிய பெண்ணை பார்த்தோமா, இல்லையா என்கிற மயக்கமே தீர்ந்தபாடில்லை.  கதையின் இறுதி வரிகளில் சட்டென்று கதை திருப்பமெடுத்து, அந்த தாழம்பூவின் வாசம் தான் நாயகனுக்கு காப்பாக அமைந்து அவனை நிலையழிதலிருந்து காத்து நிற்கிறது. அழகான படிமமாக தாழம்பூவின் மணம், உத்தரகோசமங்கையின் சந்தனக்காப்பு, கதையின் இறுதி திருப்பம் என சிறுகதையின் அத்தனை இலக்கணங்களும் பொருந்திய கதையாக இந்த கதை திகழ்கிறது.

த்வந்தம் சிறுகதை திருச்செந்தாழையின் இரு முக்கிய கதை கருக்களான வணிகத்தின் சூது மற்றும் ஆண் பெண் உறவில், காலங்காலமாக தொடரும் பகடையாட்டம் இவற்றை மையமாக்கி நிகழ்கிறது. அப்பாவி கணவனை கொண்டுள்ள பெண் அடைவதற்கு எளிதானவளாக தோன்றுகிறாள். ஒவ்வொரு சிப்பாயாக வெட்டி ராணியை நெருங்குகையில் சட்டென்று ராணி அந்த ஆட்டத்தின் சூதில் கைதேர்ந்து ராஜாவை வெற்றிக்கொள்கிறாள்.  கொஞ்சம் கொஞ்சமாக அந்த ஆட்டத்தை புரிந்துக்கொள்கிறாள் லீலா, அவளிடம் தடுமாறுவதில் ஆட்டத்தின் நுணுக்கத்தை தவறவிடுகிறான் கதைச்சொல்லி. வியாபாரத்தில் இயல்பாக வந்து விழுவது போல் சொல்லப்படும் கூர்மையான அம்புகள், இருவருக்குமிடையேயான உரையாடல்கள் என இந்த பகடையாட்டம் தொடர்கிறது. ”கரிசனத்தின் முதலீடு என்கிற வார்த்தையில் அவனை சரியான இடத்தில் நிறுத்துகிறாள் லீலா. இனி, அவன் எந்த பக்கம் அடியெடுத்து வைத்தாலும் மென்மேலும் சிறியவனாவான். அவனுடைய கூர்மையும், தன்மதிப்பும் அப்படி அவனை கீழிறங்க வைக்காது என்று கணிப்பதில் அடங்கியிருக்கிறது லீலாவின் நுட்பம். மற்றொரு புறம் அவன் விரும்பியது இந்த வணிகத்தின் குரூர ருசியை கண்ட லீலாவை அல்ல. இப்போது அவன் லீலாவின் ஆகிருதி முன் போரிட முடியாதவனாய், அவளை அஞ்சுகிறவனாய், அவளிடம் தோல்வியடைய விரும்பாதவனாய், ஏதோ ஒரு நிறுத்தத்தில் ரயிலிலிருந்து மெளனமாக வெளியேறி மறைகிறான்.

இந்த வரிசையில் ஆபரணம்  மற்றொரு அற்புதமான சிறுகதை. காட்டுச்செடியாய் வளர்ந்த அண்ணன், போன்சாய் மரமாக இருக்கும் தம்பியை கொஞ்சம்கொஞ்சமாக மென்றுவிழுங்கும் பங்காளி துரோகம்தான் களம். ஆனால், இங்கு போர் நிகழ்வது சித்திரைக்கும், மரியத்துக்குமிடையில். ஒன்றில் தோற்பதை மற்றொன்றில் வெல்வதின் மூலம் நிகர் செய்துக்கொண்டு கணக்கு வழக்கை நேர் செய்துக்கொள்கிறார்கள். ”அழுக்கடைந்த மெழுகுவர்த்தி போல் என்று சித்திரையை வர்ணிக்கையில் வேறு எதைக்கொண்டும் அவளை இவ்வளவு பொருத்தமாக வர்ணித்துவிடமுடியாது என்று தோன்றுகிறது. குழந்தைகள் சூழ அவள் அமர்ந்திருக்கும் சித்திரம், ”மெழுகுவர்த்தியை சுற்றிலுமுள்ள ஸ்படிக துளிகள் என்கிற உவமை அழகு.

த்வந்தம், ஆபரணம் போன்று பலமான கதைகரு இல்லாது ஒரு சம்பவத்தை மட்டும் எடுத்துக்கொண்டு மொழியின் துணையோடு அவர் எழுதி பார்க்கும் துடி போன்ற சிறுகதைகள் அவருடைய மாற்று முயற்சிகளாக இருக்கலாம்.

சாணை தீட்டிய கத்தி போல் உரையாடல்கள், ”இரண்டு மூணு லைன் எச்சு போறான்” போன்ற இயல்பான வட்டார வழக்குகள், துல்லியமான காட்சி விவரிப்பு, உடல்மொழியை சொல்லி உணர்வை கடத்திவிடுவது, புத்தம்புதிய களம் இவையெல்லாம் திருச்செந்தாழையின் பலம். அது அப்படியே இந்த கதைகளில் நிகழ்ந்திருக்கிறது.

தொடர்ந்து இப்படி நல்ல கதைகள் ஒரு எழுத்தாளனிடமிருந்து வருவது திருச்செந்தாழை இப்போதிருக்கும் அற்புதமான படைப்பூக்கத்து காலக்கட்டத்தை காட்டுகிறது. விஷ்ணுபுர விருதுவிழாவின் விருந்தினராக அழைக்கப்பட்டிருக்கும் திருசெந்தாழை அவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள்.

 

ரா.செந்தில்குமார்