Wednesday, February 10, 2021

இசூமியின் நறுமணம் - சிறுகதை தொகுப்பு - வாசிப்பு அனுபவம் - எழுத்தாளர் திருசெந்தாழை

 

சுயவிருப்பங்களுக்கும்,குற்றவுணர்ச்சிக்கும் நடுவே இருக்கின்ற கோடு மிகமிக மெல்லியது.நமது விருப்பத்தின் மீதான அறமதிப்பீடுகளை நாம் பிறரிடமே எதிர்பார்க்கிறோம். நிறைவேறிய விருப்பங்கள் மிக லேசானவை.ஞாபகத்தில் அவை மேகமென தவழ்கின்றன.அதனை எப்போதும் தன்னுடன் இறுக்கக் கட்டிக்கொள்ள விழைகின்ற மனிதமனம் குற்றவுணர்ச்சி எனும் சரடையும் எப்போதும் எடுத்துக்கொள்கிறது.

" எனக்கொன்றும் அவ்வளவு வயதாகவில்லை
ஆனாலும் குற்றவுணர்ச்சி எனும் ஊன்றுகோல் இல்லாமல் என்னால் நடமாடமுடிவதில்லை" எனும் வி.என்.சூர்யாவின் வரிகளிலிருக்கும் உண்மையானது சமகால மனங்களிலிருந்து பெறப்பட்ட ஒன்று.
குற்றவுணர்ச்சி எனும் ஜாடியில் இட்டுவைக்கப்படுகின்ற ஞாபகங்களில் துருப்பிடிப்பதேயில்லை. நினைவுகளிலிருக்கும் உயிர்ச்சத்துமிக்க பகுதியாகவும் குற்றவுணர்வே இருக்கிறது.
" இஷுமியின் நறுமணம்" தொகுப்பிலிருக்கும்,தானிவத்தாரி சிறுகதை சமீபகால சிறுகதைகளுல் முக்கியமானது மட்டுமல்ல அந்த தொகுப்பிலேயே தனித்துவமானதும் கூட
தனது கடந்தகால வாழ்வைக் கூறுகிறாள் ஒருத்தி.குடும்ப அமைப்பிற்கு வெளியே அவள் மேற்கொண்ட அந்த உறவு வெறும் பத்து நாட்களே நீடிக்கிறது.அவள் தனது குடும்பத்திற்கு திரும்பும்போது அவளது கணவன் அவளைப் புறக்கணித்துச் செல்கிறான்.தனது குழந்தையோடும்,வயதான தாயோடும் வாழ்கின்ற அவள் தனது வாழ்வை நொறுக்கிய அந்த பத்து நாட்களை முற்றிலும் ஞாபகத்திலிருந்து அழிக்க விரும்புகிறாள்.

பேசிக்கொண்டே நடந்து வருகின்ற அவள் தூரத்தில் ஒரு பறவையின் குரலைக் கேட்கிறாள்.தன்னை மறந்து புன்னகைத்தபடி, " சிமுரா பாடுவதற்குமுன் இப்படித்தான் ஒருமுறை தொண்டையை கணைத்துக் கொள்வான்.அது அவ்வளவு வசீகரமாக இருக்கும்" என்கிறாள்.
குற்றம் என எண்ணுகின்ற ஒரு செயல் ஞாபகத்தில் எப்படி இவ்வளவு துல்லியமான அடுக்குகளாக பதிந்திருக்கிறது. நாம் குற்றத்தின் இதழ்களை எப்போதும் வருடுபவர்களாக இருக்கிறோம்.குற்றம் என்பது நவீன அறங்களில் சிக்கலான வடிவம் கொண்ட ஒன்று.
" இருளைப் போல வெளிச்சத்திற்கு மீட்சி தருவது வேறில்லை" என்கின்ற போகனின் வரியில் அறமும் குற்றமும் தங்களை ஓருடலாகவே பிணைந்துகொள்கின்றன.
குற்றங்களை ஒப்புக்கொள்கிறவனுக்கும்,எழுத்தாளனுக்கும் பெரிய வேறுபாடில்லை.
படைப்பில் தன்னை அப்படியே முன்வைக்கின்ற படைப்பாளிகளை மதிப்பிடவே நாம் அஞ்சுகிறோம்.ஜி.நாகராஜனில் துவங்கி திருடன் மணியம்பிள்ளை வரை எப்போதும் வசீகரமான ஒரு தலைமுறையே இதில் நிறைந்துள்ளது.
ஏனெனில், கலை மட்டுமே குற்றங்களை ஒப்புக்கொள்கிறவனை கௌரவித்து விடுதலை செய்கிறது.
கலைவழியே முன்வைக்கப்படும் குற்றங்களிலிருந்து வழிகின்ற கண்ணீரைப்போல தூயது வேறில்லை.

எழுத்தாளர் திருசெந்தாழை

Friday, February 5, 2021

இசூமியின் நறுமணம் - விமர்சனம் - எழுத்தாளர் ப.தெய்வீகன்

 1986 இல் ஐரோப்பிய தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தினால் கொண்டுவரப்பட்ட புலம்பெயர் எழுத்தாளர்களது முதலாவது சிறுகதைத்தொகுதியான "மண்ணை தேடும் மனங்கள்" நூல் முதற்கொண்டு கடந்த 35 வருடங்களில் எத்தனையோ சிறுகதைப்பிரதிகள் புலம்பெயர்ந்துள்ள எழுத்தாளர்களிடமிருந்து வெளிவந்துவிட்டன. இந்த புலம்பெயர் சிறுதைகளில் பெரும்பாலானவை சுற்றி சுற்றி ஒரேவட்டத்துக்குள் ஓடிக்கொண்டிருந்தாலும், அவற்றுக்கு இன்றும் ஒரு கவனிப்பு இருந்துகொண்டுதானிருக்கிறது. தங்களது எளிமையான - வழமையான - போராட்டம் நிறைந்த வாழ்வினை இலக்கியம் எவ்வாறு நுட்பமாக அவதானிக்கிறது என்று புலம்பெயர்ந்துள்ளவர்களும், இன்னமும் ஆச்சரியங்களை பொழிந்துகொண்டிருக்கும் வெளிநாட்டு வானத்தின் கீழ் புதிய கதைகள் ஊற்றெடுத்துக்கொண்டுதானிருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் தாயகத்தில் உள்ளவர்களும், புலம்பெயர் கதைகளின் மீது தங்கள் அதீதமான கவனத்தை குவித்துவைத்திருக்கிறார்கள்.

இவ்வாறான கவனத் திரட்சியின் முன்னிலையில் வைத்துப்பார்க்கக்கூடிய ஒரு சிறுகதைத்தொகுதியாக செந்தில்குமாரின் "இசூமியின் நறுமணம்" அண்மையில் படிக்கக்கிடைத்தது. போர்நெடியில்லாத புலம்பெயர் பிரதியொன்றை படிக்கும்போது அந்த உணர்வே வித்தியாசமானதாக இருந்தது.
செந்திலின் இந்த முதலாவது சிறுகதைத்தொகுதியிலுள்ள பன்னிரு சிறுகதைகளில், பத்துக்கதைகள் ஜப்பானிய நிலத்தில் நிகழ்பவை. தொழில் நிமிர்த்தம் ஜப்பானில் பல ஆண்டுகளாக வசித்தவருகின்ற செந்தில் எழுதியுள்ள இந்த சிறுகதைகள் அனைத்தும், ஜப்பானிய மண்ணை தமக்குள் ஈர்த்துக்கொள்வதற்கு தாகத்தோடு அங்கலாய்த்தபடியுள்ளன. ஆனால், அவை ஜப்பானிய கதை மாந்தர்களை, அந்த தேசத்தின் சுவாத்தியத்தை, கலாச்சாரத்தை இன்னபிற விடயங்களை அனைத்தையும் மிகவும் மெல்லிதாகத்தான் உள்ளீர்த்துக்கொண்டு, அந்த ஈரத்தினை வாசகனோடு பகிர்ந்துகொள்கின்றன. ஆழமான அவதானிப்புக்களைக்கொண்டவை என்று கூறிவிடமுடியாது.
தொகுப்பிலுள்ள பல கதைகளிலும், எல்லோருக்கும் பொதுவான வாழ்வின் தருணங்களை சமரசங்கள் நிறைந்த சாதாரண பாத்திரங்கள் வழியாக செந்தில் எழுதிச்செல்கிறார். அநேக ஜப்பானிய கதைகளிலுள்ள கதாபாத்திரங்களின் பெயர்களையும் ஊர்ப்பெயர்களையும் களைந்துவிட்டுப்பார்த்தால், அவை தமிழக சூழலில் நடைபெறக்கூடிய சாதாரணமானவைதான். ஆனால், செந்திலுக்குள் இருக்கக்கூடிய கதைசொல்லி, எல்லாக்கதைகளையும் கலையாத கனவுகளின் வழியாக வாசகனை அழைத்துச்செல்வதற்கு முடிந்தவரை முயற்சிசெய்திருக்கிறது.
தொகுதியின் கடைசிக்கதையான "நடு ஆணியாய் எஞ்சியவர்கள்" ஜப்பானிய நிலத்துக்குரிய இலட்சணங்களோடு இலக்கியத்துக்கு நெருக்கமாகிவிடுகிறது. "இசூமியின் நறுமணம்" போன்ற எத்தனையோ கதைகள் சமகாலத்தில் வெளிவந்துவிட்டபோதும், செந்திலின் கதைமொழி அந்தக்கதையை முழுமையாக உணரவைக்கிறது. ஜப்பான் நாடு தற்கொலைகளுக்கு பெயர்போன தேசம். ரயிலுக்கு முன்னால் வீழ்ந்து தங்களை மாய்த்துக்கொள்வது என்பது, அந்நாட்டில் சதா இடம்பெறுகின்ற சடங்குபோலாகிவிட்ட ஒன்று. இந்தப்பிரச்சினையை ஆழமாகச் சென்று பேசியிருக்கவேண்டிய "அன்பும் அறனும் உடைத்தாயின்" - என்ற சிறுகதை, பறக்க எழும்பிய வேகத்திலேயே வீழ்ந்துவிடுகிறது. ஏனைய கதைகளில் பெரும்பாலானவை உணர்த்தப்படுபவையாக அன்றி, சொல்லப்படுபவையாக நகர்கின்றன.
செந்திலிடமுள்ள நுட்பமான அவதானிப்புக்கள் - கதைக்களத்துக்குரிய கச்சாப்பொருட்கள் அனைத்தும் - இந்தத்தொகுதியிலுள்ள பல கதைகளில் துண்டு துண்டாக ஆங்காங்கே நின்று கண்சிமிட்டுகின்றனவே தவிர, அவற்றுக்குரிய வெளிச்சம் போதவில்லையோ என்று உணரவைக்கின்றது. அந்தவகையில் பார்க்கும்போது, ஒரு முதல் தொகுப்புக்குரிய செல்லமான குறும்புத்தனங்களோடுதான் இசூமியின் நறுமணத்தை படிக்கவேண்டியுள்ளது.
மேலோட்டமாக சொல்லிச்செல்கின்ற கதைகளின் ஆழத்துக்கு இறங்குவதும், கதைகளின் முடிவினை கதைகளே முடிவுசெய்வதற்கு அனுமதியளிப்பதும் கைகூடினால், செந்திலின் கதைகளுக்கு புதிய பரிணாமம் கிடைக்கும். கூடவே, புலம்பெயர் தேசத்திலிருந்து தமிழ் இலக்கியத்திற்கு புதியதொரு கதைசொல்லியும் கிடைப்பான்.
வாழ்த்துக்கள்
செந்தில்!

Tuesday, February 2, 2021

இசூமியின் நறுமணம் - சிறுகதை தொகுப்பு - விமர்சனம் - விமர்சகர் சரவணன் மாணிக்கவாசகம்

 இசூமியின் நறுமணம் & பிற கதைகள்- ரா.செந்தில்குமார்:

ஆசிரியர் குறிப்பு:
தஞ்சை மாவட்டம், மன்னார்குடியைப் பூர்வீகமாகக் கொண்டவர். கணிப்பொறியியல் முதுநிலைப் பட்டத்தைப் பெற்றவர். தற்போது டோக்கியோவில் வசிக்கும் இவர் பல இலக்கியநிகழ்வுகளை ஜப்பானில் முன்னெடுத்துள்ளார். இவரது முதல் சிறுகதைத்தொகுப்பு இது.
மலரினும் மெல்லிது-
தெரியாத மனுசன் என்ன பெரிய தீமையை செய்ய முடியும்ணே என்று முதலில் சொல்வதற்கும் கடைசியில் சொல்வதற்கும் எவ்வளவு வித்தியாசம்! செருப்பில்லாதவன் காலே இல்லாதவனைப் பார்த்துத் தேறுதல் கொண்ட கதை. இரண்டு கதைகள் இதில், இரண்டையும் துரோகம் எனும் சங்கிலி இணைக்கிறது.
தானிவத்தாரி-
தானிவத்தாரி என்றால் ஜப்பானிய மொழியில் இருண்ட பள்ளத்தாக்கைக் கடக்கத் துணையாக வரும் பாடல். வாழ்க்கையும் சிலநேரம் இருண்ட பள்ளத்தாக்கைக் கடப்பது போல் ஆகிறது. Momentary weakness வாழ்வைத் தடம்புரட்டுகிறது. அதெல்லாம் தாண்டிய நுட்பம் கஷுமி சிமுராவின் நாட்டுப்புறப்பாடலைக் கடைசியில் நினைவுகூர்வது.
செர்ரி ஃப்ளாசம்-
உணர்வைத் தூண்டும் கதை. பொதுவாக அளவுக்கு அதிகமாகக் குடிப்பவர்கள் வீட்டுக்கு கடைசியாகத்தான் அந்த விவரம் தெரியும். எது கனவோ சிலருக்கு அதுவே சாபமாகிறது. ஆரம்பத்தில் இருந்தே எந்தத் தகவலும் அனாவசியமாக இல்லாமல் வார்த்தை சிக்கனத்தோடு நேர்த்தியாக சொல்லப்பட்ட கதை. ஜப்பானிய டிவி பெண் பற்றிய வர்ணனை வாசகர் மனத்தில் இவர் ஏற்படுத்த விரும்பும் தாக்கத்தை சரியாக விளைவிக்கிறது.
அனுபவ பாத்தியம்:
நிலம், ஓட்டல் தொழில், மளிகைக்கடை போல சில வியாபாரங்களில் முதலாளி தினம் உட்கார்ந்தே ஆக வேண்டும். ராமசாமி, ராஜகோபால் கோணத்தில் சொல்லப்படாமல் அருண் கோணத்தில் கதை நகர்வதால் அதிக அழுத்தம்.
இசூமியின் நறுமணம் -
தாமரைத்தண்டு வறுவல் நிறையப் பேர் சாப்பிட்டிராதது. மிகவும் சுவையானது. குடிப்பவர்களின் பேச்சு பெரும்பாலான நேரங்களில் Sex talkஆக மாறும். டோக்கியோவில் இருக்கும் Culture தான் இப்போது இங்கிருக்கும் Corporateகளில். காலையில் கடுமையான முகமா இரவில் இப்படி எனத் தோன்றும். குடியும் கலவி குறித்த பேச்சுகளுமாக நீளும் கதை, கடைசிப் பத்தியில் ஒரு Quantum jump செய்து கதையின் கோணத்தையே மாற்றுகிறது. மிக நன்றாக வந்திருக்கும் கதை.
அன்பும், அறனும் உடைத்தாயின்-
கதைசொல்லி கதையின் முதலில் சொல்லும் ஒரு தகவலுக்கும், கதையின் முடிவிற்கும் நெருங்கிய சம்பந்தம் இருக்கிறது. என்ன இருந்தாலும் சிவா பிரியாவிடம் ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம் இல்லையா? அநாவசியமாக ஒரு வார்த்தை கூட இல்லாத நல்ல கதை.
கனவுகளில் தொடர்பவள்-
இசூமியின் தேடல் தான் கதை. எதையும் திட்டமிடாது வருவதை அந்நேரத்தில் எதிர்கொள்வது. எல்லாமே அவள் வாழ்க்கையில் அப்படித்தான் நடக்கிறது. மணம், மணமுறிவு, கதைசொல்லியுடனான கலவியும் கூட அப்படித்தான். ஆனால் அந்த மெயில் மட்டும் தெளிவாகத் திட்டம் தீட்டிய மெயில்.
அறமெனப்படுவது யாதெனக் கேட்பின்-
கெட்டகுடியே கெடும் என்பது தான் கதையின் மையக்கருத்து. சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி என்பது போல் ஆனது.
மயக்குறு மக்கள்:
அதிர வைக்கும் கதை. அம்மாவிற்கு நிச்சயம் அந்தப்பொருட்கள் குறித்துத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கதையில் மேலதிகத் தகவல்கள் போல் சொல்லப்படும் விசயங்கள் கதை முடிகையில் வேறு பரிமாணம் கொள்கிறது.
மடத்துவீடு:
கன்னத்தில் அறைவது போன்ற மற்றொரு கதை. பெண்கள் அதீத பொறுப்பில் குடும்ப நிர்வாகம் செய்யும் இடங்களில் ஆண்கள் அலட்டாமல் இருப்பது வாடிக்கை. ஆனால் சீனிவாச ராவ்.........Playboyஆக முயற்சிக்கும் ராஷேஸ் கூட அந்த வீட்டுக்கு இனிபோகமாட்டான் என்றே தோன்றுகிறது.
சிபுயா கிராஸிங்க்-
ஜப்பானில் நடக்கும் கதை. வாழ்க்கையில் தோல்வி அடைந்த இருவர், அல்லது சராசரி வாழ்வை வாழ விரும்பாத இருவரின் கதை. சுனாமி, அணுஉலை வெடிப்பு எல்லாம் உண்மை. இரண்டு பகுதிகளில் தனித்தனியாக கதாபாத்திரங்கள் பற்றிய Picture, மூன்றாவது பகுதியில் கதை என்ற யுத்தி நன்றாக இருக்கிறது.
நடு ஆணிகளாய் எஞ்சியவர்கள் மீண்டும் ஜப்பானைக் கதைக்களமாக வைத்து எழுதியது. Weaker moment எப்போதாவது தான் வரும். ஜப்பானிய கலாச்சாரமும் இந்தியக் கலாச்சாரமும் சந்திக்கும் மற்றுமொரு கதை.நன்றாக வந்திருக்கும் கதை.
பன்னிரண்டு சிறுகதைகள் கொண்ட தொகுப்பு. மூன்றில் இரண்டு பங்குக் கதைகள் ஜப்பானைக் கதைக்களமாகக் கொண்டவை. இது போன்ற கதைகளே நவீன தமிழ் இலக்கியத்தின் எல்லைகளை விரிவு படுத்தும். Cross culture கதைகள் என்பது வேறு நாட்டில் வேறு கலாச்சாரத்தில் வாழ்ந்தவர்கள் இந்தியப் பார்வையுடன் பார்க்கும் கதைகள். ஜப்பானியக் கதைகளில் நாம் இதைப் பார்க்க முடியாது. பலகாலம் வேறுநாட்டில் வாழ்ந்தவர்கள், வேரை இங்கே விட்டுச் சென்றவர்கள் இது போன்ற கதைகளைத் தொடர்ந்து எழுதித் தமிழ்இலக்கியத்திற்குப் புதுரத்தம் பாய்ச்ச வேண்டும்.
செந்தில் குமாருக்கு சிறுகதை வடிவமும், வித்தியாசமான கதைக்கருக்களும் கைகூடி வந்திருக்கிறது. இசூமியின் நறுமணம் ஒரு NRI மட்டுமே எழுதக்கூடிய Perfect சிறுகதை. முழுக்க உள்ளூரை வைத்து எழுதிய மயக்குறு மக்களும் நல்லதொரு கதை.
இவர் தவிர்க்க வேண்டியது அறமெனப் படுவது... போன்ற சாதாரண கதைகளை. தி.ஜாவின் கங்கா ஸ்நானம் கதையிலிருந்து எத்தனையோ கதைகள் ஏமாற்றியவர் நன்றாக வாழ்வது பற்றி. அதே போல் பன்னிரண்டு கதைகள் கொண்ட தொகுப்பிலேயே வாழ்ந்து கெட்ட குடும்பங்கள் அடிக்கடி வருகின்றன.
இவை மிகச்சிறு குறைகள். தொகுப்பு வருமுன்னரே இவர் நல்ல சிறுகதை ஆசிரியர் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. இணையத்தில் பார்த்த ரிசல்டை மீண்டும் பள்ளியில் சென்று பார்ப்பது போன்ற உறுதிபடுத்துதலே இந்தத் தொகுப்பு.