Friday, July 26, 2019

ஒத்திசையும் வெறுப்பு


ஒத்திசைவு ராமசாமி, ஜெயமோகனின் ஜப்பான் பயண கட்டுரை பற்றி எழுதியிருக்கிறார் என்று ஒரு நண்பர் சொன்னார்.  வழக்கம்போல் மட்டையடி கருத்துக்கள் கொண்ட நான்கே நான்கு பாரா கொண்ட பதிவில், எப்படி பொய்யர்கள் நிரம்பிய இந்த உலகில், முற்றுணர்ந்த ஞானியான தான் வாழ நேர்ந்து துன்பங்கள் அனுபவிக்கிறேன் ரீதியான அலட்டல்களே பாதி கட்டுரையை நிரப்பி நிற்க, மீதியில் தனக்கு தெரிந்த விஷயங்களை கூறியிருக்கிறார். இதை உடனே பகிர்ந்து இன்புறும் சில வெறுப்பாளர்களை நினைத்தால் வியப்பாக இருக்கிறது. எது இவர்களை இவ்வள்வு வெறுப்பு கொண்டவர்களாக, மேட்டிமைத்தடித்தனம் கொண்டவர்களாக மாற்றியமைக்கிறது என்றே யோசிக்கவைக்கிறது.

1.     ஜெயமோகன் தனது கட்டுரையில் சாமுராய் வாட்களையும், நிஞ்சா வாட்கள் என்றழைக்கபடும் வாட்களின் படத்தையும் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த, ராமசாமி, சாமுராய் வாளை போய், ஜெயமோகன் நிஞ்சா என்கிறார். நிஞ்சா என்றெல்லாம் ஒன்னுமே இல்லை என்கிறார். முதலில் நிஞ்சாக்கள் யார் என்பதை பார்த்துவிடுவோம். நிஞ்சா என்றழைக்கபடும் வீரர்களுக்கும் சாமுராய்க்களுக்குமான முக்கிய வேறுபாடு, நிஞ்சாக்கள் பெரும்பாலும் மறைந்துதிரிபவர்கள். இவர்களுக்கு சாமுராய்க்களுக்குண்டான போர் கோட்பாடுகள் எதுவுமில்லை  பெரும்பாலும், நேரடியாக போரில் ஈடுபடாமல், கொலை, உளவு மறைந்திருந்து தாக்குவது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்களே ஜப்பானில் நிஞ்சா என்றழைக்கப்பட்டார்கள் இவர்கள் ஈடுபடும் செயல்களின் தன்மையால், சாமுராய் போல் நீண்டு வளைந்த வாட்களை இவர்கள் கொண்டிருக்கவில்லை. குறுங்கத்திகள் போன்றவையே இவர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள். பிறகு 1960 வாக்கில் நிஞ்சாக்களுக்கான அருங்காட்சியகம்  மியே மாவட்டத்தில் (Ninja museuam of Igaryu ) அமைக்கப்படுகிறது. அதில் நிஞ்சாக்கள் பயன்படுத்திய வாட்கள் 忍者刀  நிஞ்சாட்டோ என்ற பெயரில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.  இவர்கள் வடிவமைத்திருப்பது, அளவில் குறைந்த, வளையாமல் நேராக இருக்கும் வாட்கள். சாமுராய்க்கள் பயன்படுத்தும் கடானா வாட்கள் வளைந்திருப்பவை  இதையே தனது கட்டுரை படத்தில் போட்டுள்ளார் ஜெயமோகன். உடனே ஒத்திசைவு தாவிகுதித்து, நிஞ்சாவது குஞ்சாவது என்கிறார். பொதுவாக ஜப்பானிய சாமுராய் மற்றும் நிஞ்சா போன்ற ஜப்பானிய பாத்திரங்கள் ஹாலிவுட் சினிமாவின் வருகைக்கு பின் ஊதி பெரிதாக்கப்பட்டவை. இன்று உண்மையும் புனைவுமாய் ஒன்றி கிடப்பவை. பிரித்தெடுக்கமுடியாதவை. இதையும் தனது கட்டுரையில் பிறகு ஜெயமோகன் தெளிவாக குறிப்பிடுகிறார். ஆனால், அதையெல்லாம் படிக்க ராமசாமிக்கு ஏது நேரம்? படித்த ஒரே ஒரு கட்டுரையை தப்பும் தவறுமாக தனது புரிதலுக்கு ஏற்ப விளக்கி எழுதி, அதை பகிருந்து இன்புறும் மனிதர்கள் ராமசாமியின் அடுத்த கட்டுரையை படிக்க வேண்டாமா?

2.     இரண்டாவதாக ஜப்பானிய மைய நிலத்தின் பெரும்பான்மையான குடிகள் சீனாவில் இருந்து குடியேறியிருக்கலாம் என்கிற ஜெயமோகனின் வரியை வைத்துக்கொண்டு கம்பு சுத்தியிருக்கிறார் ராமசாமி. முதலிலேயே ஜப்பானின் வரலாறு பத்தாயிரம் ஆண்டுகளுக்கு மேலான பழமையானது. அதில் வாழ்ந்த பூர்விக குடிமக்களை ஜப்பானின் பழங்குடிகள் என்று ஜெயமோகன் தனது கட்டுரையில் சொல்லிவிடுகிறார். இந்த பூர்விக குடிகள் ஐனு என்றழைக்கப்படும் இனக்குழுவினர். பிறகு ஜொமன் என்றழைக்கப்படும் இனக்குழு மக்கள் வருகிறார்கள். இவர்கள் பல பத்தாயிரமாண்டுகளாக ஜப்பானில் வாழ்ந்து வருகிறார்கள் பிறகு வெகுகாலம் கழித்து யயோயி என்றழைக்கப்படும் இனக்குழுவின் குடியேற்றம் கி.மு மூன்றாம் நூற்றாண்டு வாக்கில் நிகழ்கிறது. இந்த யயோயி இனமும் ஜொமன் இனமும் கலந்து உருவானதே இன்றைய  பெரும்பான்மை ஜப்பானிய இனம் என்பதே ஆராய்ச்சியாளர்கள் கூறுவது. அப்படி ஒரு இனகலப்பு சாத்தியமே. இந்த யயோயி மக்கள் எங்கிருந்து வந்திருக்ககூடும் என்கிற ஆராய்ச்சி முட்டி நிற்பது சீனா மற்றும் கொரியாவிலேயே. இதையே ஜெயமோகன் சீனா மக்களின் குடியேற்றம் என்று குறிப்பிடுகிறார். ஆனால் ராமசாமி அப்படியெல்லாம் நடக்கவேயில்லை என்று மட்டையடி அடிக்கிறார்.  

3.     ஓப்பீட்டளவில் ஜப்பானில், மகாபாரதம், ராமாயணம் போன்றோ ஒடிசி இலியட் போன்றோ புராணங்கள் அல்லது காப்பியங்கள் கிடையாது. இதையே ஜெயமோகன் ஜப்பானில் புராணங்கள் குறைவு என்று குறிப்பிடுகிறார். ஆனால் உடனே தனக்கு தெரிந்த ஹெய்கே மொனோகத்தாரியை வைத்துக்கொண்டு என்னப்பா இப்படியெல்லாம் எழுதுறே என்று அட்வைஸ் மழைபொழிகிறார். ஹெய்கே மோனோகத்தாரி தாய்ரா மற்றும் மினாமோட்டோ இனங்களுக்கிடையேயான வரலாற்று பகையை கொண்டு 11ம் நூற்றாண்டு வாக்கில் எழுதப்பட்ட புனைவுகள். இதை பிற்பாடு தொகுத்து ஹெய்கேவின் கதை எழுதபடுகிறது. இவ்வகை புனைவுகள் இல்லாத ஒரு இனம் இருக்கமுடியாது என்பது கூட தெரியாதவரா ஜெயமோகன்? அவர் குறிப்பிடுவது ஓப்பீட்டளவில். இவர் உடனே தனக்கேற்ப வளைத்து தனது இதிகாசங்களே இல்லை என்று எப்படி சொல்லலாம் என்று தன்னுடைய நடையில், சவடால் விடுகிறார்.

4.     இவர் எழுதியதில் உச்சக்கட்ட காமெடி கராத்தே என்கிற எழுவு (😊) ஜப்பானில் பிறந்தது அல்ல என்கிற மட்டையடிப்பே. கரா என்றால் ஜப்பானிய மொழியில் வெற்று த்தே என்றால் கைகள். கராத்தே என்கிற வார்த்தையே வெற்று கைகள் என்று பொருள்படுகிற ஜப்பானிய மொழி வார்த்தையே. ஜப்பானின் ஒகினாவா தீவில் முதன்முதலில் கராத்தே என்கிற தற்க்காப்பு பயிற்சி வழக்கத்திற்க்கு வருகிறது. பிறகு ஜப்பான் எங்கும் பரவுகிறது. ஆனால் முருகதாஸ் படம் பார்த்து ராமசாமி போதிதர்மர் தான் சீனாவிலிருந்து கராத்தே என்கிற கலையை ஜப்பான் கொண்டுவந்தார் என்று நம்புகிறாரா என்னவோ. ஆனால் கூகிள் புண்ணியத்தில் ஜூடோவுக்கு மட்டுமாவது ஜப்பான் கலை என்று அங்கீகாரம் கொடுத்துவிடுகிறார் அண்ணாத்தே.

பொதுவாக இவருடைய கட்டுரை நடை வெறுப்பை உமிழ்வது. எங்கேயோ கிடைக்காத அங்கீகாரம் இவர்களை சதா சர்வ நேரமும் கொதிப்பில் வைத்துள்ளது. ஜெயமோகன் பதினாறு கட்டுரைகள் மூலம் ஜப்பான் பற்றிய தனது பிம்பத்தை மிக நேர்மையாக எழுதுகிறார்.  ஒரு அருமையான அறிமுகத்தை நிகழ்த்துகிறார். இந்த பயணம் தனக்கு ஜப்பான் பற்றிய அறிதலுக்கான தொடக்கமே என்றே முடிக்கிறார். இந்த எழுத்தை அணுகுவதிலும் ஒரு நேர்மை தேவை. இங்கிருந்து ஒரு நல்ல வாசகன் தனக்கான பிம்பத்தை நிறுவிக்கொள்வான்.

Friday, May 17, 2019

ஜெயமோகனின் தோக்கியோ இலக்கிய உரை


                  2002ம் வருடம் ஜெயமோகனுக்கு என்னுடைய முதல் கடிதத்தை எழுதினேன். திண்ணை தளத்தில் தொடர்ந்து அவருடைய பங்களிப்புகள் வந்துக்கொண்டிருந்த காலமது. நான் படித்த அவரது மாடன் மோட்சம் சிறுகதை குறித்தும் என்னுடைய ஆதர்சமான ஜெயகாந்தனின் படைப்புகள் குறித்தும் எழுதப்பட்ட அந்த கடிதத்திற்க்கு உடனடியாக அவரது பதில் வந்தது. ஜெயகாந்தன் குறித்து அவருக்கிருந்த மதிப்பு குறித்தும், ஜெகேவின் பங்களிப்பு பற்றியதுமான அந்த பதில் கடிதத்திலேயே, ஜெயமோகனை இன்னும் நெருக்கமாக உணர்ந்தேன். அன்றிலிருந்து இந்த பதினேழு வருடங்களில் ஒவ்வொரு நாளும், ஆசிரியராய், நண்பராய், அணுக்கராய் அவரிடமிருந்து நான் பெற்றுக்கொண்டவை ஏராளம். தளம் ஆரம்பிக்கப்பட்ட பின், ஒவ்வொரு காலையும் அவரது ஏதாவது ஒரு படைப்பிலேயே விடிகிறது.                                             

பிறகு விஷ்ணுபுரம் விருதுவிழா கூட்டங்கள் மூலம் சக ஹிருதயர்களை தொடர்ந்து சந்தித்து, விவாதித்து, ஒன்றாக சிரித்து என இன்னொரு குடும்பமாய் இன்று அந்த நண்பர் குழாம் சாத்தியமாகி இருக்கிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மூலையில் வாழ்கிறோம். ஆனால் ஒவ்வொருவரையும் பற்றி எங்களுக்குள் அறிந்தது போல், தெரிந்துக்கொண்டவர் வேறு யாருமில்லை என்கிற அளவுக்கு இந்த நெருக்கம் நீடிக்கிறது.

ஒரு விஷ்ணுபுர விருதுவிழாவின் போது, ஜெயமோகன் தன்னுடைய பெருங்கனவான வெண்முரசு பற்றி கூறியபோது, நான் அருகிலிருந்தேன். சிலிர்ப்பாக இருந்தது. இடைவிடாது ஒவ்வொரு நாளும் ஒரு அத்தியாயமென தொடர்ந்து பத்து வருடங்கள் என்கிற அந்த கனவு, எப்படி முடியும் என்கிற கேள்வியையும் கொடுத்தது. இந்த மனுசன் செய்வாரு என்று உள்ளுக்குள் தோன்றியது. இதோ, ஏழாவது வருடம் நெருங்குகிறது. தமிழில் எழுதப்பட்ட ஆகச்சிறந்த காவியமாக வெண்முரசு ஒவ்வொரு நாளும் வளர்கிறது.தமிழிலக்கியத்தில், முன்னோடிகளின் படைப்புகளை விமர்சித்து நிறுவுவது, அவர்களுக்கு விருதளித்து சிறப்பிப்பது, புதிய படைப்பாளிகளை இனம் கண்டு அடையாளபடுத்துவது, மற்ற மொழி படைப்புகளை தொடர்ந்து விமர்சனம் மூலம் தமிழில் நிறுவுவது என முப்பதாண்டுகளுக்கும் மேலாக தீவிரமாக செயல்பட்டு வரும் எழுத்தாளர் ஜெயமோகனை ஜப்பானுக்கு அழைக்கவேண்டும் என்கிற ஆசை, பிரமாண்ட அரங்குகளை உத்தேசித்தே காலதாமதமானது. ஆனால், அப்படி உத்தேசித்தது, தவறு என சென்ற வார ஞாயிறு கூட்டம் நிருபித்தது.

ஜெயமோகனின் ஜப்பான் வருகை பற்றி சமூக வலைத்தளத்தில் அறிவித்த சில நாட்களில், அவரது படைப்புகளை நேசிக்கும் நண்பர்கள், தொடர்ந்து உரைக்காக உருவாக்கப்பட்ட குழுவில், இணைந்தார்கள். தோக்கியோ கித்தா கசாய் சமூக அரங்கில் சென்ற ஞாயிறு (12-05-2019) அன்று நடந்த ஜெயமோகனின் உரைக்கு மொத்தம் நாற்பத்தி ஐந்து பேர் வந்திருந்தார்கள். அனைவரும், அவரது படைப்புகளை படித்த வாசகர்கள். ஏழெட்டு பேர் விஷ்ணுபுரம் முதல் கொற்றவை வரை அனைத்தையும் படித்தவர்கள். வெண்முரசு தினமும் படிப்பவர்கள் ஏறக்குறைய பத்து பேர். இதை விட சிறந்ததாய், பிரமாண்டமானதாய் வேறு எந்த அரங்கு அமையகூடும்?ஐந்து நிமிடங்களுக்கு முன் சகஜமாக சிரித்துபேசிக்கொண்டிருந்தவர், உரை நிகழ்த்த தொடங்கியவுடன் வேறொருவராய் நிறைவான, நெகிழ்வான ஒரு உரையை வழங்கினார். அமெரிக்காவின் சாஸ்தா மலை, இமய மலை போன்றே, முந்தைய நாள் சென்ற ஜப்பானின் ஃபுயுஜி மலையும் தனக்கு வழங்கிய தரிசனத்தில் தொடங்கி, இலக்கியத்தின் பங்களிப்பு, சிற்பங்கள், கல்விமுறை என நாற்பத்தி ஐந்து நிமிட செறிவான உரையை தந்தார் ஜெயமோகன். பிறகு 1.30 மணிநேரம் வாசக நண்பர்களின் பல்வேறு கேள்விகளுக்கான பதில்கள். விழா முடிந்தபின்னும் ஜெயமோகனை விட்டுவிலகாத நண்பர்கள், இரவு உணவுக்கு ஒன்றாக சென்று அங்கும் தமிழர்களின் வரலாறு, வரலாற்றுணர்வு என பேசி, உணவு விடுதிக்கு வந்திருந்த ஜப்பானியர்களை பீதியில் ஆழ்த்தினார்கள். பிறகு, பண்பாட்டு முறைமைபடி புகைப்படம் எடுத்து நாள் முடிவுக்கு வந்தது. நிகழ்ச்சி முடிந்தபின்பு, அதற்கென குழுவை கலைத்துவிடுவதே வழக்கம். ஆனால், கலைக்க கூடாதென கோரிக்கை விடுத்தார் ஒரு தோழி. துளிகனவு என இந்த குழு தொடரும்.  

வீட்டுக்கு வந்தபின் அவ்வளவு அயர்ச்சிக்கு பின்பும், இரவு இரண்டு மணி வரை வெண்முரசு எழுதி உறங்க சென்றார் ஜெயமோகன். மே எட்டாம் தேதி முதல் பதினாராம் தேதி வரையிலான ஜெயமோகன் உடனான பயணம் முழுக்க முழுக்க கேலியும் கிண்டலுமாய், வெடிசிரிப்புமாய் சென்றது. இவரது ஒவ்வொரு கிண்டலுக்கும் முகம் சிவக்கும் அருண்மொழி நங்கை அக்காவிற்க்கும், ஜெயமோகனுக்குமான அன்பு மற்றுமொரு கட்டுரைக்கானது.

கியோத்தோவின் சாலையில் செல்லும்போது, சாலை துப்புரவு பணியாளர் ஒருவரை பார்த்து ஜெ, "இவருகிட்டே ஏதோ வித்தியாசமா இருக்குலே?" என்று கேட்டார். ஏனென்று, அவரே சொன்னார், மூக்கு கண்ணாடி அணிந்த சாலை துப்புரவு பணியாளர் ஒருவரை இந்தியாவில் பார்த்ததே இல்லை. அதுவே இந்த வித்தியாச உணர்வுக்கு காரணமென்று புரிந்தது. இப்படி எப்போதும் பார்க்கும் பார்வையை மேலும் நுட்பமாக்கி சென்ற ஜெயமோகனிடமிருந்து எப்போதும், ஏதேனும் ஒன்றை கற்கிறேன்.

Monday, April 1, 2019

அழகிய கண்ணே.. உறவுகள் நீயே..


ஏறக்குறைய, இருபத்திஐந்து வருடங்களுக்கு முன் எங்கள் ஊர் சாந்தி திரையரங்கில் 'முள்ளும் மலரும்' படம் வந்திருந்தது. தீவிர ரஜினி ரசிகனான நான் அதுவரை பார்த்திராத பழைய படம். உடனடியாக, ஒரு இரவுக்காட்சிக்கு நானும் என் நண்பன் அருளும், அந்தப் படம், என்னை என்ன செய்ய போகிறது என்பது தெரியாது, ஒரு குதூகல மனநிலையில் உள்ளே சென்றோம்.ரஜினி ரசிகனாக உள்ளே சென்ற நான், மகேந்திரனின் பக்தனாக வெளியே வந்த நாள் அது. இவ்வளவு நேர்த்தியான பாத்திர படைப்புடன், கொஞ்சம் கூட செயற்க்கை தனமின்றி ஒரு திரைப்படம் சாத்தியமா என்று வியக்க வைத்த முள்ளும் மலரும் தான் இயக்குனராக மகேந்திரனின் முதல் திரைப்படம். அதன் பிறகு பார்க்ககிட்டிய அவருடைய அனைத்து படங்களையும், ஒன்று விடாமல் பார்த்து முடித்தேன்.

முள்ளும் மலரும் படத்தின் முதல் இரு காட்சியிலேயே, முழுபடமும் கையாளபோகிற கதையின் கருவை ஒரு அழகிய கவிதை போல் எழுதியிருப்பார், இயக்குனர் மகேந்திரன். முதல் காட்சியில், காளி தனது தங்கையின் மீது வைத்துள்ள பாசமும், இருவரின் ஆதரவு அற்ற நிலையும் விளங்கி விடும். இரண்டாவது காட்சியில்,கைநோக சுமை தூக்கி வரும் ஒரு முதிய தொழிலாளி, தவறுதலாக காரில் உரசிவிட,
அதையே சாக்காக காட்டி கூலி தர மறுத்து திட்டி அனுப்புவார் ஒரு பணக்காரர். அதை பார்த்துக்கொண்டிருக்கும் ரஜினி ஸ்டைலாக ஒரு கல்லை தனது காலால் கவ்வி எடுத்து, அந்த காரின் விளக்கை உடைப்பார். காளி பாத்திரத்தின் அலட்சியம், எதற்கும் அஞ்சாது, தனக்கு சரி என்று பட்டதை செய்யும் குணம், கோபம், எல்லாமும் அந்த ஒரு காட்சியில் வெளிப்பட்டுவிடும். அதே சமயத்தில், தனது காரில் ஏறி போவதற்காக வரும் சரத்பாபு, ரஜினி உடைத்த விளக்கின் ஒலி கேட்டு, தலை நிமிர்ந்து பார்ப்பார். எதற்காக ரஜினி செய்தார் என்பதெல்லாம் சரத்பாபுவுக்கு தெரியாது. அவர் பார்த்ததெல்லாம், ஒரு ரவுடி போன்ற காளியின் செய்கையையே. இரு பாத்திரத்திற்கும் படம் முழுவதும் விரிய போகும் விரிசல் இந்த காட்சியிலேயே விழுந்துவிடும்.பூட்டாத பூட்டுக்கள் போன்ற ஒரு கதையை எடுக்கவேண்டும் என்று மனித உறவுகளை நேசிக்கும், மனித உணர்வுகளை ஆராதிக்கும் ஒரு கலைஞனுக்கே தோன்றும்.  முள்ளும் மலரும், உதிரிபூக்கள், நெஞ்சத்தை கிள்ளாதே, ஜானி, மெட்டி இவை தமிழ்சினிமா பெருமைப்பட்டுக்கொள்ள மகேந்திரன் தந்த முத்துக்கள்.

மூன்று முறை சந்தித்திருக்கிறேன். சில மணிநேரங்கள் உரையாடியிருக்கிறேன். கொஞ்சமும் அதிராமல், அழகான உடல்மொழியுடன் அவர் பேசும் அந்த கணங்கள் இன்றும் நினைவில் ஒளிர்கிறது. கொஞ்சம் வற்புறுத்தினால் விஷத்தைகூட சாப்பிடவைத்துவிடலாமென்கிற அந்த மென்மையே, ஜானி படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்கு கூட்டம் ஏற்பாடு செய்யாமல், இருப்பதை வைத்து எடுத்துகொள் என்று தயாரிப்பாளர் சொல்லும்போது, மறுபேச்சின்றி எடுக்க வைத்தது. ஒவ்வொருமுறையும், எவ்வளவு வற்புறுத்தியும் கேட்காமல் கார் கதவு வரை வந்து வழியனுப்பும் அந்த அன்பை என் வாழ்நாள் முழுவதும்  நெஞ்சில் சுமப்பேன்.

தனது பெயர்பலகையை ஜப்பானிய மொழியில் எழுதி மாட்டிவைத்திருக்கும் அளவுக்கு ஜப்பானின் காதலர். எப்படியாவது ஒரு முறை தோக்கியோ அழைத்துவந்து விடமென்று முயற்சித்து, ஒரு முறை எல்லாம் தயாராகிவிட்ட சூழலில், அவர் நடிகராகிவிட, சூட்டிங் காரணமாக வர இயலாத படி போனது, ஒரு குறையாக உறுத்துகிறது.  

அழைக்கும்போதெல்லாம், ”அழகிய கண்ணே” என்று பாடும் அவரது தொலைபேசி மெளனமாகிவிட்டதை மனம் நம்பமறுக்கிறது.