Monday, May 31, 2021

இசூமியின் நறுமணம் - வாசிப்பு அனுபவம் - மொழிப்பெயர்ப்பாளர் விஜயராகவன்

 ஆற்றோட்டமான செவ்வியல் கதைசொல்லல் முறை, கதைக்குள் கதையாக குள்ளசித்தன் பாணி, முன்னும் பின்னுமாக சொல்லிச்செல்லும் பிளாஷ் பேக் பாணி, ஓர்மையான மையத்திலிருந்து விலகி விளிம்பை மையப்படுத்தும் பின்நவீனத்துவ பாணி என சிறுகதை இலக்கணமாக பல்வேறு கோட்பாடுகளை நிறுவி படைப்பாளிகள் படைக்கும் ஆக்கங்களை ரசித்து ருசிக்கிறோம். மேலும் இந்த வித கோட்பாடுகளை தாண்டி சொல்ல வந்த கதைக்கருவை நீண்ட நெடிய டால்ஸ்டாயிய ஆலாபனையோடு சொல்பவர்கள் பலர். சொல்ல வந்ததை மினிமலிச சுருக்கத்தோடு ரேமண்ட் கார்வர் கோத்ர வழி வருபவர்கள் சிலர்.

இவர்களது ஆக்கங்கள் மூர்த்தி சிறிதெனினும் கீர்த்தி பெரிதென காணப்படுகின்றன. இந்த மினிமலிச கோட்பாட்டு வகைமைக்குள் வரும் தொகுப்பே ரா. செந்தில் குமாரின் ‘இசூமியின் நறுமணம்’ ஆகும்.

இவரது சிறுகதைகளில் சில நாவலாக எழுதப்படும் அளவிற்கு கரு வீச்சு மிகுந்து காணப்படுகிறன. மன்னைக்காரரான இவர் புலம் பெயர்ந்து தற்போது ஜப்பான் டோக்யோவில் நெடுங்காலம் வசிப்பதால் ஜப்பானிய கலாச்சாரம், அம்மக்களின் எண்ணப்போக்குகள், பழகும் வழமைகள், அவர்களின் சிந்தனை போகும் போக்குகளை தனது சிறுகதைகளில் நுட்பமாக கொண்டு வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் சரளமான கூறுமுறையில் Seamless ஆக உரையாடல்களும், சுற்றுசூழல் விவரிப்புகளும் கதைசொல்லியின் கூறலும் பின்னிபிணைந்து மிகுந்த வாசிப்பு இன்பத்தை கொடுக்கிறது. புதியவர்கள் பலரின் தொகுப்புகளில் சிக்கலான கூறுமுறை, நெருடலான மொழி, தேவையின்றி படிமங்களை அள்ளித்தெளிப்பது போன்ற வாசகர்களுக்கான கண்ணிவெடிகள் ஏதுமின்றி துல்லியமாக கதை அதன் கருவின் வலுவிலும் பலத்திலும் பயணித்து வாசகனுக்கு இணைவாழ்வு வாழ இடங்கொடுக்கிறது.

இசூமியின் நறுமணம் தொகுப்பில் பனிரெண்டு சிறுகதைகள் உள்ளன. அதில் எட்டு கதைகள் ஜப்பானிய பின்புலத்தை வைத்து எழுதபட்டவை. மீதமுள்ள நான்கும் நம் மண் சார்ந்து எழுதபட்டது.

ஆனால் இந்த அனைத்து கதைகளிலும் மனித மனவிகாரங்களும் குரோதங்களும் ஏக்கங்களும் ஏமாற்ற தோல்விநிலைகளும் மரணம் சார்ந்த கையறுநிலைகளும் படம்பிடித்து காட்டப்பட்டுள்ளன.

ஜப்பானிய பின்புலத்தில் எழுதப்பட்டுள்ள கதைகளில் அந்த கலாச்சாரத்தை சேர்ந்த மக்களின் தொழில் சார்ந்த ஒற்றைபடையான ஊக்க செயல்முறை, அதன் காரணமாக அவர்களது அகவய சோர்வு, அது கொடுக்கும் புறவய தாக்கமாக குடி வழமை,சமூகமாக இயங்க முடியாமல் ஒற்றை இருப்பாக தங்களை கூண்டிலடைத்துக்கொள்ளும் அவலம். தோல்வி என கருதும் எதையும் நேர்கொண்டு சந்திக்க முடியாமல் தற்கொலை எனும் முடிவை நோக்கி செல்லுதல்,போன்ற காரணிகளை சிறுகதை எனும் உபகரணத்தை உபயோகித்து கதாசிரியர் வாசகர்களை ஆழ்ந்து சுகிக்க வைக்கிறார்.

மேலும் இவரது கதைகளில் பாலியல் விவரிப்புகளை எழுத வாய்ப்புகளிருந்தும் அதை மீறி பாலியல் மனோதத்துவத்தை ஆராயவும், வாசகனை எழுதாத வரிகளுக்கு இடையே படிக்கவும் வைக்கிறார்.

காமத்தை பற்றி நையாண்டியாக இவரது கதாமாந்தர்கள் சம்பாஷித்தாலும் அதைத்தாண்டிய கனிதல் பற்றியும், காமம் பல்வேறு மாந்தர்களுக்குள் பல்வேறு விதமாக புகுந்து எவ்விதமாக வக்கிரமாகவோ உன்னதமயமாகவோ தன்வயப்படும் மாயத்தை எழுதிக்காட்டுகிறார்.

இனி இவரது கதைகளை ஒவ்வொன்றாக அவதானிக்கலாம்.

மலரினும் மெல்லிது:

இந்த கதையில் படைப்பாளி வாழ்வின் ஒரு  சுவையான முரணை காட்சிப்படுத்துகிறார். கதைசொல்லியின் காதல் கைக்கூடாதது அவனது பொருளாதார தாழ்வு நிலையால்… அதேசமயம் லௌகீக பொருளாதார வெற்றிக்காக கடல் கடந்து பூ கட்டி  உழைத்த சைமனின் குடும்ப வாழ்வு பிறழ்ந்தது அவரது அண்மை இல்லாததால்… மேலும் தேர்ந்த சொற்ப தீற்றல் சொற்களால் கதாபாத்திரங்களின் குணாதிசயங்களை காட்சிப்படுத்துவது சிறப்பு. இக்கதையில் நண்பன் குட்டி யின் குணவார்ப்பு துலங்கி வருகிறது.

“தெரியாத மனுசன் என்ன பெரியதீமையை செஞ்சுட முடியும்ண்ணே? “எனும் சைமன் ஒரு இலவு காத்த கிளி. ஆனாலும் வாழ்வை அதன் போக்கில் ஒப்புக்கொண்டு சித்தம்போக்கு சிவன் போக்கென போகும் ஆசாமி. குணாவோ இளம் காதலன். பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால் ஷோபாவை மணக்க முடியாத அபலை. இவனுக்கு சைமனால் ஏற்படும் தெளிவுதான் கதையுச்சம்.

தானிவத்தாரி:

மேற்க்கு தொடர்ச்சி மலையான மூணார் மலைச்சாரல்களில் விடியற்காலை பொழுதுகளில் Malabar Laughing Thrush எனும் சிறு கருங்குருவி மிக இனிமையாக விசில் போன்ற இசை கோர்வையை இசைக்கும்.

இக்கதையில் உகியிசு எனும் ஜப்பானிய குருவி அதேப்போல விசிலிசையை ஒலிக்கிறது.தனது இனப்பெருக்கத்திற்கும் அன்றைய காம நிவர்த்திக்குமான இசை.

கதைத்தலைப்பான தானிவத்தாரி யின் பொருளே

கதையின் கரு.

உவாகி எனும் சொல்லுக்கு பொருள் அலைகின்ற இதயமாம்,

மானுட தாம்பத்யத்தில் லௌகீக சௌபாக்கியங்கள் நிறைந்திருந்தபோதும் ஏன் திருமணத்திற்கு மீறிய உறவை நோக்கி மனம் அலைபாய்கிறது?எந்த சாகசம் இப்படி ஈர்க்கிறது.

அதை ஆராய்கிறது இந்த கவித்துவமான கதை.

Bridges of Madison countyயின் கதை நாயகி பிரான்ஸெஸ்கா வை எது ஈர்த்ததோ அதைப்போன்ற ஒன்றுதான் இக்கதையின் கஷுமியையும் அலைக்கழித்தது.

மிகவும் மனத்தை கனக்க வைத்த கவிதை இந்த சிறுகதை.

செர்ரீ ஃப்ளாசம்:

வாழ்வின் பொருளை தேடிப்போகும்தோறும் அதன் பொருள்விளங்கா புதிரை பற்றியது இக்கதை.

காதல் தம்பதியர் சம்யுக்தாவும் வினோத்தும், படித்துமட்டும் அறிந்த புதிய மண் மற்றும் கலாச்சாரத்தை அறியும் பொருட்டு அங்கு சென்ற போது நிகழும் விபரீதம்.

இதேபோல் சுஜாதா எழுதிய கதை ஞாபகத்துக்கு வருகிறது. அதில் சூட்டே அணியாதவன் இறுதியில் மிக நேர்த்தியான சூட் அணிந்து கிடையாக கிடப்பான்.

இதில் சகூரா மலர்கள் மிளிர நீல நிற கிமோனா.

அனுபவ பாத்தியம்:

ஜெயமோகன் சொல்லுவார், இலக்கியவாதி என்பவன் எலியின் உயிர் பயத்தை சொல்லும்தோறும் பூனையின் பசிக்கொடுமையையும் சொல்லிச்செல்லவேண்டும்.

இக்கதையும் அதைத்தான் சுட்டுகிறது.

நிலச்சுவான்தார்களின் மேட்டிமை,அராஜகம் என நிலவுடமை சமூகமாயிருந்தது எப்படி ஒருயுகசந்தியில் நிலை மாறி போகிறது என்பதை நிதர்சனப்படுத்துகிறது.

கதையின் போக்கில் தலைமுறைகளின் ஆளுமை அவர்களின் உடல்மொழி ஆகியவை நுட்பமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

யானை சிறுத்தால் குதிரை மட்டம், ஆனால் இங்கு குதிரையும் சிறுக்கிறதுதான் அவலம்.

இசூமியின் நறுமணம்:

இந்த தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கதை. என் தங்கை மகள் அம்மு என்னால் சீராட்டப்பட்ட முதல் குழந்தை. அவள் சிறுகுழவியாக இருந்த போது தூக்கி கொஞ்சி முத்தும்போது புறங்கழுத்தில் போடப்பட்ட பேபி ஜான்சன் பவுடர்,முடி காய வைக்கப்போடும் தசாங்க சாம்பிராணி வாசனை,குழந்தையின் பால் மணம் அனைத்தும் கலந்துகட்டி ஒரு தெய்வீக மணம் கமழும்.

இக்கதையில் ஒரு குடி மேசையில் ஒரு கொண்டாட்ட மனநிலையில் காமம் சார்ந்த கேலிப்பேச்சுகளும் இயல்பாக அழகிய பெண்களை பற்றிய பேச்சும் எப்படி திசை மாறி உன்னத தளத்திற்கு போகிறது என்பதுதான் நறுமணம்.

அன்பும் அறனும் உடைத்தாயின்:

சூழல் எவ்வாறு ஒருவனை மாற்றி அங்கு நிலவும் கலாச்சார அழுத்தத்திற்கு பலியாக்குகிறது என விவரிக்கும் சோகமான கதை.

வாழ்வின் எல்லா நிலைகளுக்கும் துணைவரும் தமிழ் சினிமா பாடல்களை பொருத்தமான இடங்களில் பொறுத்தி பாடும் சிவாவின் முடிவு பூடகமாக விடப்பட்டதில் தெரிகிறது ஜப்பானிய மனத்தின் சாயல்.

கதை முடிவு ஒரு கவிதை.

பச்சை இலைகள்

அகாலத்தில்

உதிரும்போது

முற்றியவை

கனிந்து

நகைக்கின்றன

கனவுகளில் தொடர்பவள்:

வானவில்லை தேடிச்செல்லும் இன்னொரு இசூமி…

” தோக்கியோவில் இருக்க பிடிக்கவில்லை. சூரியன் சோம்பலுடன் எழும் எங்களது தீவின் வாழ்க்கை திரும்பவேண்டும். அம்மா செய்துதரும் தேநீரை உறிஞ்சியபடி கைத்தொடும் தூரத்தில் தெரியும் ரிஷிரி மலையை பார்த்தபடி அமர்ந்திருக்கும் சாயங்காலங்கள் வேண்டும்”

என ஏங்கும் இசூமியை நினைக்கும்போது தென்கடல் தீவில் வாழ்ந்த ஓவியர் பால் காகின் நினைவில் நிழலாடுகிறார்.அவர் அங்கு வாழ கொடுப்பினையிருந்தது. இவளுக்கு இல்லை.

” முடிவுறா மழையில் அலைக்கழியும்

அந்த சகுரா மலரைபோல

எனது அழகும்,திறமையும்

உருக்குலைகிறது.

நான் தனித்திருக்கிறேன்.”

கொமாச்சியின் வாகா கவிதைபோலவே கனவாக கலைந்த வாழ்வு.

அறமெனப் படுவது யாதெனக் கேட்பின்:

கற்பிக்கப்பட்ட கோட்பாட்டு அறம் மாறி, அவரவர்களுக்கான வன்மமே அறமாக மாறும் கலிகாலத்தை சொல்லும் கதை.

மயக்குறு மக்கள்:

மிக நுட்பமான மனோதத்துவத்தை ஆராய்கிறது இக்கதை.

திருமணத்தையும் அது ஏழாவது வருடத்தில் விவாகரத்தானதையும் ஒருவரியில் கடந்து செல்லும் கதைசொல்லி, அதன் தாக்கத்தால் காயப்பட்ட அம்மாவின் ஆளுமை மாற்றத்தை சொல்லாமல் சொன்னது அபாரம்.

மடத்து வீடு:

வாழ்ந்து கெட்ட வீட்டில், நிகழில் வாழும் பெண்கள் சந்திக்க நேரும் அல்லல்களையும் அவமானங்களையும் நுட்பமாக சொல்லும் கதையிது.

பாலியலாக அத்துமீற வாய்ப்பிருந்தும் படைப்பாளி தான் சொல்லவந்த கருவை துல்லியமாக சொன்ன ஆக்கம்.

சிபுயா கிராசிங்:

ஒரு அறைக்குள் தம் வாழ்வை சுருக்கிக்கொண்டவர்கள் ஜப்பானில் பதினைந்து லட்சத்திற்கும் மேல் என அறியப்படும்போது அவர்களது ஆளுமையின் நிறைவின்மையையும் வாழ்வில் கண்ட சலிப்பையும், சமூக சோர்வாக பதிவிடுகிறார் கதாசிரியர்.

‘வாழ்வில் எல்லாம் முக்கியம்தான் ஆனால் முடிவில் எதுவும் முக்கியமில்லை’ எனும் சித்தாந்தத்தை சகமனிதனுக்கு செய்யும் சேவையும் அன்பும் நிறைவடைய வைக்கும் எனும் நேர்மறை கருத்தோடு முடியும் கதை மனதிற்கு மிகவும் அண்மையானது.

நடு ஆணிகளாய் எஞ்சியவர்கள்:

மானுட சரித்திரமே ஆதிக்கவாதிகளாலும் அடிமைகளாலும் நிறைந்து காணப்படுவதை,அதன் இளம் தலைமுறை எவ்வளவு ஆதங்கத்தோடும் சோகத்தோடும் பாவிக்கிறது என்பதை நடைமுறை சாட்சியங்களோடு சொன்ன கதை.

கதைகளின் போக்குகளுக்கு தன்னை ஒப்புக்கொடுத்து அதன் ஒழுக்கில் சரளமாக கதை சொல்லும் வித்தை பூரணமாக கைகூடியுள்ளது இவருக்கு.

இவரது இரண்டாவது தொகுப்பை எதிர்பார்த்துக்கொண்டுள்ளேன்.