Wednesday, September 18, 2013

தங்க மீன்களும், நொந்த மீன்களும்..

தங்க மீன்கள் திரைப்படம் குறித்து போதுமான விமர்சனங்கள் வந்துவிட்ட நிலையில், எழுத வேண்டாம் என்றே நினத்தேன்.  இந்து பத்திரிக்கையில் தங்க மீன்கள் பார்த்து, தம்மை தாமே நொந்து கொண்ட மீன் ஒன்றின் கட்டுரையை படித்தேன். எழுதியே விட்டேன்.நடப்புக் கணக்குப் பற்றாகுறை, டாலர் மதிப்புயர்வு போன்ற உள்நாட்டு மற்றும் உலகளாவிய பிரச்சினைகளால் பீதியடைந்திருக்கும் மக்கள், கவலையை மறக்க நமது திரை மேதைகள் எடுத்து தள்ளும்,  கெக்கே, பிக்கே சிரிப்பு படங்களை பார்க்காமல், தங்க மீன்களை பார்த்து மனதை கெடுத்து கொள்வதே அந்த நொந்த மீனின் கவலையாக தெரிகிறது.

செல்லம்மா, மற்ற குழந்தைகள் போல் இல்லை. மூன்றாவது படிக்கும் வயதில், டபிள்யூக்கும், எம்க்கும் வித்தியாசம் தெரியாமல் தடுமாறுகின்ற, சிறப்பு கவனம் தேவைபடும் குழந்தை, என படம் ஆரம்பித்த பத்து நிமிடத்தில் நான்கு முறை சொல்லபடுகிறது. பற்றாகுறைக்கு, அந்த குழந்தைக்கு தேவைபடும் கவனிப்பையும், பாசத்தையும் வழங்க முடிகிற காரணத்தினால் தான், உள்ளுரில் பாத்திரங்களுக்கு பாலிஸ் போடும் வேலை செய்து கொண்டிருப்பதாக, நாயகன் படம் ஆரம்பித்த 20 நிமிடத்தில் சொல்லி விடுகிறான். வெளிநாடு போய், கன்சல்டெண்ட் ஆகி, உள்ளுரில் ஒரு வீடு, சென்னையில் ஒரு அபார்ட்மெண்ட், என்று வாங்கி குவிக்காமல், பொறுப்பற்று திரிகிறானே இந்த துப்புகெட்ட தந்தை என்று புரிந்து கொள்கிறது, நொந்த மீன்.

கொச்சின் போயாவது, 220 கோடி சம்பாதித்து ஊர் திரும்பி மருத்துவ கல்லூரி ஆரம்பித்தானா என்றால், இல்லை. அங்கேயும் போய் உருப்படாமல், தாடியை பிய்த்து கொண்டு அழுகிறான். கதாநாயகன் என்றால், வெற்றிகரமாக இருக்க வேண்டாமா? படத்தின் ஆரம்பத்தில் லைட்டா ஏமாறலாம்.. எல்லா காசையும் இழக்கலாம். ஆனால் இண்டர்வெலுக்கு பிறகாவது, புத்தி வந்து, கோபத்துடன் நிமிர்ந்து பார்த்து,  பட்டையை கிளப்பவில்லை என்றால் அப்புறம் என்னப்பா ஹிரோ? அப்படி படம் பார்க்கதானே காலங்காலமாக நாம் பழகி இருக்கிறோம்.

ஆம், நாயகன் குழந்தையின் மீதுள்ள பாசத்தினால் சக்திக்கு மீறிய சில காரியங்கள் செய்ய விழைகிறான். முட்டாள்தனமாக கதையின் நாயகன் செயல்படவே கூடாது, என்பது எம்.ஜி.ஆர் படங்களை பார்த்து வளர்ந்தவர்களின் விதிமுறை. நல்ல திரைப்படத்திற்க்கு இப்படி எதுவுமில்லை. உணர்வுபூர்வமாக ஒரு கதையை நம்பகதன்மையுடன் சொல்ல முடிந்தால் போதுமானது என்ற அடிப்படை கூட தெரியாமல், விமர்சனம் எழுதும் தன்னம்பிக்கை, முன்பு பிரபல பதிவர்களுக்குதான் இருந்தது. இப்போது கொஞ்சம் விரிந்து, பத்திரிக்கை வரை வந்துள்ளது. சபாஷ்..


நாயகன் பாசத்தினால் உந்தபட்டு, முட்டாள்தனமான சில காரியங்கள் செய்கிறான் என்பதற்க்கும், படத்தில் பிரைவேட் பள்ளிகள் மீது வைக்கபடும் நியாயமான விமர்சனத்திற்க்கும், எந்த சம்பந்தமும் இல்லை. சொல்லபோனால் நாயகனும், முதலில் தனியார் பள்ளியையே நம்புகிறான். ஆனால், குறைந்த சம்பளத்தில், குறைவான  ஆசிரியர்களை கொண்டு, மாணவர்களை ஆட்டு மந்தைகள் போல் சேர்த்து கொள்ளையடிக்கும் பள்ளி நிர்வாகங்கள் மீதும், எந்த சிறப்பியலப்புக்கும் இடம் தராது, ஒரே மாதிரியான பிராய்லர் கோழிகளை உருவாக்கும் ஆசிரியர்கள் மீதும், இந்த படம் வைக்கும் விமர்சனம் மிகவும் சரியானதே.

மேலும் விமர்சனம் எழுதியவர், புதிதாக எதுவும் சொல்லவும் இல்லை. படத்தில் நாயகனின் தந்தை சொல்லும் டயலாக்குகளை, அப்படியே எழுத்தில் பிரதியெடுத்து படத்தையே ஓட்டுவதற்க்கு எல்லாம் ஒரு தில் வேண்டும்.  ஆம்பிளைன்னா, நாலு இடத்துக்கு போய் சம்பாதிக்கனும். அதான் வீட்டுலே செல்லம்மாவுக்கு ஒரு அம்மா இருக்காளே, நீ வேற எதுக்குடா குட்டி போட்ட பூனை மாதிரி அவ பின்னாடியே அலையுறே? என்று தந்தை கேட்கிறார். அதையே திரும்பவும் எழுதும் முன், இயக்குநர் எதற்க்கு அவ்வாறு காட்சியமைத்தார் என்று கூட யோசிக்க வேண்டாமா?


சரி, நொந்த மீன்களை கரையிலேயே விட்டு, படத்திற்க்கு வருவோம். பழைய தொழில் என்பது ஒரு குறியீடு என்பதையும், ஏன் தொன்ம கருவி என்பதையும் நல்ல ரசிகன் புரிந்துகொள்வான். இந்த படத்தின் ஓட்டத்தில், பல இடங்களில் அழகிய கவிதை போல் காட்சிகள் வந்து முடிகிறது. கல்யாணி, எவிட்டா மிஸ்சை பார்க்க போகும் இடம், மிஸ் கலங்கிய கண்களுடன் வந்து நிற்பதும், அந்த டீச்சரின் கணவன் ஸ்பிக்கர் போன் கேட்பதும், குழந்தை பேசியதை கேட்டபின், உள்ளே வாங்க சார் என்று சொல்வதுமான காட்சிகளில், கோடை கால மாலை பொழுதில் பெய்து ஓய்கின்ற மழையின் ரம்மியம்.  

படத்தின் குறை என்றால், கற்றது தமிழ் பிரபாகரின் உடல்மொழி, டயலாக் டெலிவரி, என அந்த சாடை கல்யாணியிடமும் தெரிவதே. கல்யாணியை சில இடங்களில் அடக்கி வாசிக்கவிட்டிருந்தால், படம் பார்க்கும் ரசிகர்கள் கல்யாணியுடன் இன்னும் அதிகமாக ஒன்றியிருப்பார்கள். கல்யாணி லேப்டாப்பை பிடுங்கி அடி வாங்கும் இடங்களில், ஓரிரு துளி கண்ணிரை ரசிகர்களிடம் உருவாக்கியிருந்தால் வெற்றி இன்னும் பெரிதாக இருந்திருக்க கூடும்.  மாறாக அந்த இடத்தில் நாயகனின் முட்டாள்தனம் துறுத்திக் கொண்டு தெரிவது பலவீனம்.   


இன்னைக்கு, அம்மா பூரி செய்றாங்க, நாளைக்கு சாவுறேன் என்று சொல்லும் செல்லம்மாவின் தோழி, பணம் இல்லன்னா, இல்லைன்னு சொல்லி பழகுங்கடா என்று குமுறும் இடம் என பல இடங்களில் விரியும் சிறுகதைகள், அழகாக படத்துடன் இணையும் பின்னனி இசை, மனதை வருடும் லோகேஷன்கள் என  வெகு நிச்சயமாய், தமிழில் இது பாராட்டபட வேண்டிய, கொண்டாடபட வேண்டிய திரைப்படமே.