Friday, May 17, 2019

ஜெயமோகனின் தோக்கியோ இலக்கிய உரை


                  2002ம் வருடம் ஜெயமோகனுக்கு என்னுடைய முதல் கடிதத்தை எழுதினேன். திண்ணை தளத்தில் தொடர்ந்து அவருடைய பங்களிப்புகள் வந்துக்கொண்டிருந்த காலமது. நான் படித்த அவரது மாடன் மோட்சம் சிறுகதை குறித்தும் என்னுடைய ஆதர்சமான ஜெயகாந்தனின் படைப்புகள் குறித்தும் எழுதப்பட்ட அந்த கடிதத்திற்க்கு உடனடியாக அவரது பதில் வந்தது. ஜெயகாந்தன் குறித்து அவருக்கிருந்த மதிப்பு குறித்தும், ஜெகேவின் பங்களிப்பு பற்றியதுமான அந்த பதில் கடிதத்திலேயே, ஜெயமோகனை இன்னும் நெருக்கமாக உணர்ந்தேன். அன்றிலிருந்து இந்த பதினேழு வருடங்களில் ஒவ்வொரு நாளும், ஆசிரியராய், நண்பராய், அணுக்கராய் அவரிடமிருந்து நான் பெற்றுக்கொண்டவை ஏராளம். தளம் ஆரம்பிக்கப்பட்ட பின், ஒவ்வொரு காலையும் அவரது ஏதாவது ஒரு படைப்பிலேயே விடிகிறது.                                             

பிறகு விஷ்ணுபுரம் விருதுவிழா கூட்டங்கள் மூலம் சக ஹிருதயர்களை தொடர்ந்து சந்தித்து, விவாதித்து, ஒன்றாக சிரித்து என இன்னொரு குடும்பமாய் இன்று அந்த நண்பர் குழாம் சாத்தியமாகி இருக்கிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மூலையில் வாழ்கிறோம். ஆனால் ஒவ்வொருவரையும் பற்றி எங்களுக்குள் அறிந்தது போல், தெரிந்துக்கொண்டவர் வேறு யாருமில்லை என்கிற அளவுக்கு இந்த நெருக்கம் நீடிக்கிறது.

ஒரு விஷ்ணுபுர விருதுவிழாவின் போது, ஜெயமோகன் தன்னுடைய பெருங்கனவான வெண்முரசு பற்றி கூறியபோது, நான் அருகிலிருந்தேன். சிலிர்ப்பாக இருந்தது. இடைவிடாது ஒவ்வொரு நாளும் ஒரு அத்தியாயமென தொடர்ந்து பத்து வருடங்கள் என்கிற அந்த கனவு, எப்படி முடியும் என்கிற கேள்வியையும் கொடுத்தது. இந்த மனுசன் செய்வாரு என்று உள்ளுக்குள் தோன்றியது. இதோ, ஏழாவது வருடம் நெருங்குகிறது. தமிழில் எழுதப்பட்ட ஆகச்சிறந்த காவியமாக வெண்முரசு ஒவ்வொரு நாளும் வளர்கிறது.தமிழிலக்கியத்தில், முன்னோடிகளின் படைப்புகளை விமர்சித்து நிறுவுவது, அவர்களுக்கு விருதளித்து சிறப்பிப்பது, புதிய படைப்பாளிகளை இனம் கண்டு அடையாளபடுத்துவது, மற்ற மொழி படைப்புகளை தொடர்ந்து விமர்சனம் மூலம் தமிழில் நிறுவுவது என முப்பதாண்டுகளுக்கும் மேலாக தீவிரமாக செயல்பட்டு வரும் எழுத்தாளர் ஜெயமோகனை ஜப்பானுக்கு அழைக்கவேண்டும் என்கிற ஆசை, பிரமாண்ட அரங்குகளை உத்தேசித்தே காலதாமதமானது. ஆனால், அப்படி உத்தேசித்தது, தவறு என சென்ற வார ஞாயிறு கூட்டம் நிருபித்தது.

ஜெயமோகனின் ஜப்பான் வருகை பற்றி சமூக வலைத்தளத்தில் அறிவித்த சில நாட்களில், அவரது படைப்புகளை நேசிக்கும் நண்பர்கள், தொடர்ந்து உரைக்காக உருவாக்கப்பட்ட குழுவில், இணைந்தார்கள். தோக்கியோ கித்தா கசாய் சமூக அரங்கில் சென்ற ஞாயிறு (12-05-2019) அன்று நடந்த ஜெயமோகனின் உரைக்கு மொத்தம் நாற்பத்தி ஐந்து பேர் வந்திருந்தார்கள். அனைவரும், அவரது படைப்புகளை படித்த வாசகர்கள். ஏழெட்டு பேர் விஷ்ணுபுரம் முதல் கொற்றவை வரை அனைத்தையும் படித்தவர்கள். வெண்முரசு தினமும் படிப்பவர்கள் ஏறக்குறைய பத்து பேர். இதை விட சிறந்ததாய், பிரமாண்டமானதாய் வேறு எந்த அரங்கு அமையகூடும்?ஐந்து நிமிடங்களுக்கு முன் சகஜமாக சிரித்துபேசிக்கொண்டிருந்தவர், உரை நிகழ்த்த தொடங்கியவுடன் வேறொருவராய் நிறைவான, நெகிழ்வான ஒரு உரையை வழங்கினார். அமெரிக்காவின் சாஸ்தா மலை, இமய மலை போன்றே, முந்தைய நாள் சென்ற ஜப்பானின் ஃபுயுஜி மலையும் தனக்கு வழங்கிய தரிசனத்தில் தொடங்கி, இலக்கியத்தின் பங்களிப்பு, சிற்பங்கள், கல்விமுறை என நாற்பத்தி ஐந்து நிமிட செறிவான உரையை தந்தார் ஜெயமோகன். பிறகு 1.30 மணிநேரம் வாசக நண்பர்களின் பல்வேறு கேள்விகளுக்கான பதில்கள். விழா முடிந்தபின்னும் ஜெயமோகனை விட்டுவிலகாத நண்பர்கள், இரவு உணவுக்கு ஒன்றாக சென்று அங்கும் தமிழர்களின் வரலாறு, வரலாற்றுணர்வு என பேசி, உணவு விடுதிக்கு வந்திருந்த ஜப்பானியர்களை பீதியில் ஆழ்த்தினார்கள். பிறகு, பண்பாட்டு முறைமைபடி புகைப்படம் எடுத்து நாள் முடிவுக்கு வந்தது. நிகழ்ச்சி முடிந்தபின்பு, அதற்கென குழுவை கலைத்துவிடுவதே வழக்கம். ஆனால், கலைக்க கூடாதென கோரிக்கை விடுத்தார் ஒரு தோழி. துளிகனவு என இந்த குழு தொடரும்.  

வீட்டுக்கு வந்தபின் அவ்வளவு அயர்ச்சிக்கு பின்பும், இரவு இரண்டு மணி வரை வெண்முரசு எழுதி உறங்க சென்றார் ஜெயமோகன். மே எட்டாம் தேதி முதல் பதினாராம் தேதி வரையிலான ஜெயமோகன் உடனான பயணம் முழுக்க முழுக்க கேலியும் கிண்டலுமாய், வெடிசிரிப்புமாய் சென்றது. இவரது ஒவ்வொரு கிண்டலுக்கும் முகம் சிவக்கும் அருண்மொழி நங்கை அக்காவிற்க்கும், ஜெயமோகனுக்குமான அன்பு மற்றுமொரு கட்டுரைக்கானது.

கியோத்தோவின் சாலையில் செல்லும்போது, சாலை துப்புரவு பணியாளர் ஒருவரை பார்த்து ஜெ, "இவருகிட்டே ஏதோ வித்தியாசமா இருக்குலே?" என்று கேட்டார். ஏனென்று, அவரே சொன்னார், மூக்கு கண்ணாடி அணிந்த சாலை துப்புரவு பணியாளர் ஒருவரை இந்தியாவில் பார்த்ததே இல்லை. அதுவே இந்த வித்தியாச உணர்வுக்கு காரணமென்று புரிந்தது. இப்படி எப்போதும் பார்க்கும் பார்வையை மேலும் நுட்பமாக்கி சென்ற ஜெயமோகனிடமிருந்து எப்போதும், ஏதேனும் ஒன்றை கற்கிறேன்.