Tuesday, February 2, 2016

விஷ்ணுபுரம் 2015 விருது விழா - தேவதச்சன் கலந்துரையாடல் அமர்வு - 1

பொதுவாக விஷ்ணுபுரம் விருது விழா சந்திப்புகளுக்கு சனியன்று அதிகாலையிலே சென்று விடுவது எனது வழக்கம். இந்த முறை சென்னையிலிருந்து கிளம்பியதால் நண்பர்களுடன் டெம்போ டிராவலரில் ஒன்றாக செல்ல முடிவெடுத்தேன். சென்னையிலிருந்து கிளம்பிய வேனில் நண்பர்கள் ராஜகோபாலன்(ஜாஜா), தனா, காளி, அறிவழகன், அருண் ஆனந்த், கவர்னர் சீனு, சுதா மேடம், ஓவியர் சண்முகவேல், ரகுராம் சகிதம் வெள்ளி இரவு பயணத்தை தொடங்கினோம். பயண வழியெல்லாம் நண்பர்களுடன் விவாதிக்க முடிந்தது என்றாலும், சாலைவழி பயணத்தில் சில அசெளகரியங்கள் இருக்கதான் செய்தது. அடுத்த முறை கவனத்துடன் ரயிலில் முன்பதிவு செய்துவிட வேண்டும் என்று நண்பர்கள் பேசிக்கொண்டோம். பவானி சென்றவுடன் அங்குள்ள தனது வீட்டிற்க்கு சென்று சிரமபரிகாரம் செய்துகொண்டு கோவை செல்லலாம் என்றார் ரகு. அதன்படி தொடர்ந்து கைப்பேசியில் தனது தந்தைக்கு இன்ஸ்ட்ரக்சன்ஸ் கொடுத்தபடியே வந்தார். ஆனால், பவானி வந்தவுடன் தனது வீட்டுக்கு செல்ல எந்த சாலையில் செல்லவேண்டும் என்பதை மறந்துவிட்டார். சரி அடுத்த முறை செல்லலாம் என்று முடிவெடுத்து பயணத்தை தொடர்ந்தோம். நண்பர்கள் அனைவரும் அங்கேயே காத்திருங்கள். காளிங்கராயன் வாய்க்காலில் குளித்த பிறகு செல்லலாம் என்றார் விஜயராகவன்.காளிங்கராயன் வாய்க்காலில் குளிக்கலாம் என்று சொன்னதும் நண்பர்கள் அனைவரும் குதூகலத்துடன் வாய்க்காலை அடைந்தோம். அங்கு சென்று பார்த்தால், பாலத்தை தட்டியபடி தண்ணீர் ஓடியது.. சேலம் பிரசாத், சிவா கிருஷ்ணமூர்த்தி உடன் விஜயராகவனும் அங்கு வந்து சேர்ந்தனர். 12 அடிக்கும் மேல் ஆழம், நீச்சல் நன்கு தெரிந்தால் மட்டுமே குளிக்கலாம் என்று விஜயராகவன் சொன்னதும், தண்ணீர் அவ்வளோ சுத்தமாக இல்லையே என்று பதுங்கினார்கள் வெண்முரசர்கள்.

பின்பு நண்பர் சிவா கிருஷ்ணமூர்த்தி எங்களது வேனில் ஏறிக்கொள்ள, அவருடன் பேசியபடியே அனைவரும் கோவைக்கு சென்று திருமண மண்டபத்திலேயே குளித்து தயாரானோம். விவாதம் தொடங்கியிருந்தது. வெண்முரசு பற்றிய விவாதத்தில் ஜெயமோகன் தருமனின் சூதாட்டம் குறித்து கூறிக் கொண்டிருந்தார். பிறகு, தேவதச்சன் கவிதைகள் குறித்த முதல் அமர்வு. சுநீல் கிருஷ்ணன், தேவதச்சன் கவிதைகள் குறித்து தமது அனுபவங்களை பகிர்ந்து அமர்வை ஆரம்பித்து வைத்தார்.  பொதுவாக நவீன கவிதைகளில் காண கிடைக்கும் இருண்மை, எதிர்மறைத்தன்மை பெரும்பாலான தேவதச்சன் கவிதைகளில் இல்லையென்றார். தருணங்களை, குழந்தைமையுடன் அணுகி சட்டென்று வேறோரு தளத்துக்கு செல்வதாக தேவதச்சன் கவிதைகள் உள்ளன என்பதற்க்கு உதாரணமாக ஜெல்லி மீன் கவிதையையும், பலூன் கவிதையையும் சுட்டிககாட்டினார் சுநீல். குறிப்பாக மெல்ல மெல்ல நானும் பலூன் ஆனேன் என்ற வரி தரும் அனுபவத்தை விளக்கினார்.பதிலாக, தேவதச்சன் நவீன கவிதையின் காலக்கட்டத்தை பற்றி விளக்கினார். ஐரோப்பிய புரட்சிக்கு பின் ஏற்பட்ட சோர்வு நிலை காரணமாக நவீன கவிதைகள் இருண்மையையும், அர்த்தமின்மையையும் பேசுவதாக அமைந்தன. டி.எஸ். எலியட் World is a waste land என்று எழுதியதெல்லாம் அதன் பின்னணியிலேயே. ஆனால் அதே காலக்கட்டத்தில், தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட சாதிகள் அரசியல் அதிகாரத்தையும், பொருளாதார மேம்பாட்டையும் அடைந்தன. அது ஒருவித உற்சாகத்தையே தனக்கு கொடுத்தது. பாரதியின் மொத்த கவிதைகளுக்கும் இந்தியா என்கிற மிகப்பெரிய பின்புலம் இருந்தது. கம்பனுக்கோ, வைணவம் என்கிற பின்புலம். ஆனால் நவீன கவிதைகளுக்கு இப்படி ஒரு பொது பின்புலம் கிடையாது. ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு பின்புலத்தை கொண்டு எழுந்தது. தனிமனித வாதமும், அரசியல் ஜனநாயகமும் பின்புலமாக இருந்தது. பாரதியின் மொழியிலிருந்து, பேசுப்பொருளிலிருந்து மேலேழும்பி வரவேண்டிய தேவை நவீன கவிதைகளுக்கு இருந்தது. ஆனால் பொதுவாக நவீன கவிதைகள் குறித்து நா. வானமாமலை போன்ற மார்க்சியர்கள் எதிர்மறையான விமர்சனத்தைதான் முன்வைத்தனர். ஐடியலிசம் இல்லாத நவீன கவிதைகள், கோவேறு கழுதைகள் என்று கிண்டல் அடித்தனர். தானும் அத்தகைய கடும் விமர்சனங்களை சந்திக்க வேண்டியிருந்தது என்று விளக்கினார் தேவதச்சன்.

தேவதேவன், தருணங்களை பெரிதாக்குவதன் மூலம் அதன் இருத்தலை பெரிதாக்குகிறார். நீங்கள் தருணங்களை, தத்துவதளத்துக்கு நகர்த்தி செல்வதன்மூலம் ஒரு அனுபவத்தை அளிக்கிறீர்கள். இதன் மூலம் நீங்கள் வாசகனை Enlight செய்ய விரும்புகிறீர்களா என்று கேட்டார் நண்பர் ரமேஷ். தருணங்களை இரண்டு வகையில் எதிர்கொள்ளலாம். ஒன்று, தருணங்களை அரவணைப்பது (Embrace). மற்றொன்று  தருணங்களை கேள்விக்குள்ளாக்குவது (Encounter) . தேவதேவன் தருணங்களை அரவணைக்கிறார். சாதாரணம், அசாதாரணத்துடன் பின்னி பினைந்துள்ளது. சாதாரணமாக படுக்கையிலிருந்து எழுந்து பாத்ரூம் சென்று மீள்வது அன்றாட நிகழ்ச்சி. ஆனால் பாத்ரூம் சென்று மீண்டும் திரும்பி வர முயற்சிக்கையில் கதவின் தாழ்ப்பாளை திறக்கமுடியவில்லை என்றால் அது அசாதாரணம் ஆகிறது. நாற்காலி என்பது ரூபம். அதை கவிழ்த்துப் போட்டால் அரூபம். கவிதை, இரண்டையும் கவனிக்கும். கவிதைக்கு கலைத்துப் போடும் தன்மை உன்டு என்று விளக்கினார் தேவதச்சன்.தொடந்து நவீன கவிதைகளில் இருக்கும் படிமங்கள் குறித்து விவாதம் தொடர்ந்தது. கவிதை கண், காது, மனம் என மூன்று நிலைகளில் அனுபவங்களை அளிக்கிறது. கண்ணுக்கு படிமத்தையும், காதுக்கு சந்தத்தையும், நுண்ணுணர்வையும் அளிப்பதாக இருக்கிறது. தமிழ் மனதுக்கு படிமமும், சந்தமும் ஆழ்நினைவில் இருக்கிறது. தன்னை கவிதை நோக்கி நகர்த்தியது, அதில் உள்ள ஒசை நயமும் நுண்ணுணர்வுமே. எனவே தனது கவிதைகளை இசைதன்மையுடன் உருவாக்குவதாக தெரிவித்தார். ஒரே வாரத்தில் நூற்றுக்கணக்கான எழுத்து இதழ்களை படித்ததன் மூலம் தனது நுண்ணுணர்வை வளர்த்துக் கொண்ட விதத்தை விளக்கினார். ஒரு கவிஞனுக்கு உலகத்தின் மொத்த அறிவில் பாதியாவது தெரிந்திருக்க வேண்டும். அப்படி தெரிந்திருந்தால் மட்டுமே, அவனது கவிதைகள் பல்வேறு அடுக்குகளை கொண்டதாக அமையும் என்றார் தேவதச்சன்.

தனது கவிதைகளில் காலம் பற்றி பேசிய தேவதச்சன், மேஜிக்கல் டைமிங் பற்றி விளக்கினார். உரைநடையில் லீனியர் வகையில் செயல்படும் காலம், கவிதையில் முன்பின் என அலைபாய்வதை மேஜிக்கல் டைமிங் என்று வகைப்படுத்தினார் என்று நினைக்கிறேன். உரைநடை, உரை என எதிலுமே சொல்லமுடியாதவற்றை கவிதையில் சொல்லமுடியும், என்றார். பிறகு, நண்பர்கள் தமக்கு பிடித்த கவிதைகளை சொல்லி, தமது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள். அன்றாட தருணங்களிலிருந்து சட்டென்று மேலேறி, தத்துவத்திற்க்குள் நுழையும் கவிதைகள் குறித்த வியப்பை பலரும் பகிர்ந்து கொண்டார்கள். தேவதச்சனின் கவிதைகளின் இருண்மையின்மை. நேர்மறைதன்மையுடைய கவிதைகள்,குழந்தைகளின் குதூகளிப்பை அவர்களது மொழியிலேயே சொல்லும் விதம், என்று பல கவிதைகள் வாசிக்கப்பட்டு தமது புரிதலை விளக்கினார்கள். ஒவ்வொரு வாசிப்பை பற்றியும் தமது விளக்கத்தை அளித்தார் தேவதச்சன். உபயோகமில்லாத பொருட்களை எதையாவது எப்போதாவது நீ கையால் தொடுகிறாயா என்ற கவிதையை நான் வாசித்தேன். அந்த கவிதையின் முடிவில் மீண்டும் மீண்டும் அன்பின் தோல்வியைக் காணுங்கள் என்ற வரியில் உள்ள எதிர்மறைதன்மையை, இருண்மை எனக்கு அளித்த அனுபவத்தை, பயத்தை சொன்னேன். எனவே தேவதச்சனின் கவிதைகளில் இருண்மையே இல்லை, சமூகசூழல் குறித்த குரல் இல்லை போன்ற விமர்சனங்களை தேவதச்சனின் கவிதைகள் குறித்து கூற இயலாது என்பதை சுநீல் போன்ற நண்பர்களும் பகிர்ந்து கொண்டார்கள்.

இதற்கு பதிலாக அன்பு பற்றி தேவதச்சன் சொன்னவை இந்த அமர்வில் நான் பெற்ற முக்கிய தரிசனம் என்று நினைக்கிறேன். அன்பு, உலகின் மகத்தான உணர்வாக கருதபடுகிறது. அன்பு செலுத்த அனைவரும் விரும்புகிறார்கள். அன்பு கடவுளுக்கு இணையானதாக கொண்டாடபடுகிறது. ஆனாலும் அன்பை புரிந்துக் கொள்ள முடியவில்லை. அன்பு Elusive ஆக இருக்கிறது. பைபிளில் அன்பு செலுத்துவது பற்றி கிறிஸ்து திரும்ப திரும்ப பேசுகிறார். ஆனால் அந்த அன்பு குறித்து லாஜிக்கலாக, ஆய்வு ரீதியாக எந்த கருத்தையும் முன்வைக்கவில்லை. எனவே பைபிளை படிக்கும் போது கிடைக்கும் அகவிரிவு, தரிசனம் வாழ்க்கையை நேராக சந்திக்கும்போது மாறிவிடுகிறது. எனவே அன்புக்கு பின்புலமாக அன்பை விட மகத்தான உணர்வு ஒன்று இருக்கவேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். மீண்டும் மீண்டும் சிந்தித்து அன்பை விட மகத்தான அந்த ஒன்று சுதந்திரம் என்று கண்டுபிடித்தேன். அன்புக்கும், தன் நிலையில் இருக்ககூடிய சுதந்திரத்துக்கும் முரண்பாடு வருமாயின், சுதந்திரத்தையே தேர்ந்தெடுக்கவேண்டும் என்று விளக்கினார் தேவதச்சன். இதையே அன்பில் தோல்வி என்று அந்த கவிதையில் எழுதினேன் என்றார்.தமது கவிதைகளின் முன்னோடியாக காளமேகப் புலவரை சொன்னபோது, தேவதச்சன் கவிதைகளின் விதையை புரிந்துகொள்ள முடிந்தது. தனி ஒருவனுக்கு, உணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம் என்று சொன்னவர் பாரதி. இப்படி சமூகத்தை மையமாக கொண்டு எழுந்த கோபத்துக்கு நேர் எதிராக, தன்னை மையமாக கொண்டு, தனி மனிதனின் கோபங்களை, ஆசைகளை மையமாக கொண்டு கவிதைகளை புனைந்தவர் காளமேகப் புலவர்.


தேவதச்சனுடன் முதல் அமர்வு விவாதம் தொடர்ந்தது. காளமேக புலவரின் நீட்சியாக ஆண்டாள் கவிராயர் பற்றி சொன்னார் ஜெயமோகன். ஊர் ஊராக சென்று கோவில்களையும், தெய்வங்களையும் பழித்து பாடுவதையே தொழிலாக வைத்திருந்தவர் ஆண்டாள் கவிராயர். ஆண்டாள் கவிராயர் ஒரு ஊருக்கு போகிறார் என்றால், வராமல் இருக்க பரிசு கொடுக்கும் பழக்கமிருந்தது என்று சொன்னபோது அவை குலுங்கியது.

ஒரு கவிதை தத்துவத்தையோ, ஆன்மிகத்தையோ தொடாமல், நேரடியாக ஒரு நிகழ்வையோ, வலியையோ சொல்கிறது. உதாரணத்திற்கு அன்றாட அரசியல் சூழ்நிலையை மட்டும் சொல்லி நின்றுவிடுகிறது. இந்த வகையான கவிதைகளை எப்படி பார்க்கிறீர்கள் என்று கேட்டார் நண்பர் ரமேஷ். கவிதைகளை நான்கு வகையாக பிரிக்கலாம். ஒன்று ஆசுகவி. இவ்வகை கவிதைகளை யார் எழுதினால் என்பதே தெரியாமல் சமூகத்திலிருந்து எழுந்து வர கூடியவை. உதாரணம் ஒப்பாரி, தாலாட்டு போன்றவை. இரண்டாவது வகை வரகவி. இவை அன்றாட அரசியலையோ, சமூக சூழ்நிலையையோ சொல்லி செல்வது. மூன்றாவது வகை கவிதைகள், மரகதகவி. சினிமா பாடல்கள் இவ்வகை சார்ந்தவை.நான்கவது வகை வித்தார கவி(Scholarly poets). நாங்கள் வித்தார கவி வகையை சார்ந்த கவிதைகளை எழுதுபவர்கள். நான்கு வகைக்குமே சமூகத்தில் முக்கியத்துவம் இருக்கிறது. வித்தார கவிதையின் அளவுகோலை வைத்து வரகவி கவிதைகளை மதிப்பிடுவது தவறு என்று சொன்னார் தேவதச்சன். பொதுவாக பேச்சில் தேவதச்சன், கவிதைகளையும், பாட்டு என்றுதான் குறிப்பிடுகிறார்.

தேவதச்சன் பயன்படுத்தும் வார்த்தைகள் குறித்து விவாதம் தொடர்ந்தது.

எல்லோர் கூடவும் போன நிலா பிறகு
எங்கே போனதென்று
எல்லோருக்கும் தெரியவில்லை

என்ற கவிதையில், யாருக்கும் தெரியவில்லை என்று முடிக்காமல் எல்லோருக்கும் தெரியவில்லை என்று முடித்திருக்கும் வார்த்தை பிரயோகம் குறித்து கேட்டேன். தனது கவிதைக்கான வார்த்தைகளை சாலையோரங்களில் செல்லும் கீரை விற்கும் பெண், சந்தையில் நிற்கும் மனிதர்கள் என்று சாமான்யர்களின் பேசும் மொழியில் இருந்தே எடுப்பதாக சொன்னார் தேவதச்சன். அவர்களது பேச்சில் இருக்கும் ஓசை நயத்தை தான் கையாளுவதாக சொன்னார்.

கிளிங் என்று
கீழே விழுந்து
உடைகிறது கண்ணாடி டம்ளர்
அழகிய இளம்பெண் துறவியைப் போல
இருந்த அது
அல்லும் சில்லுமாய்
உடைந்தாலும்
ஒவ்வொரு துண்டாய்
சுத்தம் பண்ணுகையில்
விரல் கீறி
குருதி கொப்புளிக்கும் என்றாலும்
நீர்மையின் அந்தரங்க ரகசியத்தை
போட்டு உடைத்து விட்டது என்றாலும்
இனிமையாகவே இருக்கிறது
கிளிங் ஒலி.
ஏனோ நினைவிற்கு வருகிறாள்
என் தேநீர்த்தோழி

தேவதச்சனின் கவிதையில் இடம்பெறும் கிளிங், ஹைய் ஜாலி போன்ற வார்த்தைகள் குறித்து நண்பர் கிருஷ்ணன் தனது அவதானிப்பை முன்வைத்தார். சைக்கிள்கள் அதிகம் நிறைந்த ஊர் கோவில்பட்டி. சனநெருக்கடி, ஓசைகளின் இடையே வாழும் தேவதச்சனை, இந்த வார்த்தைகள் அதிகம் ஈர்த்துள்ளன. மேலும் குழந்தைகளுக்கான விளையாட்டுகள் இன்னும் தொலைந்துபோய்விடாத கோவில்பட்டியின் நிலத்தில் இருந்தே ஹைய் ஜக்கா போன்ற வார்த்தைகளை கையாளுகிறார் தேவதச்சன் என்றார் கிருஷ்ணன்.


மேலும் தேவதச்சன் தனது கவிதைகளில் பயன்படுத்தும் நோயா மலர், கைக் பறவை போன்ற படிமங்களை பற்றி கேட்டார் கிருஷ்ணன். ஒரு நிகழ்வுடன், நூற்றுக்கணக்கான ஐடியாக்கள் மோதும்போது ஏற்படுவதே படிமம். படிமங்கள் உற்பத்தி ஆவது நனவிலியில்தான். கைக் பறவை என்பது மைனா தான். மைனா பறக்கும்போது கைக் என்ற ஓசையுடன் பறக்கும். ஹேம்ஸ் என்னும் காற்று என்பதும் நான் உருவாக்கிய சொற்றொடர்தான். அதற்கென எந்த அர்த்தமுமில்லை என்றார் தேவதச்சன்.

தமிழ் நவீன கவிதையில் தொடர்ந்து கவிஞரின் குரல் ஒலித்துகொண்டே இருக்கிறது. தேவதேவனின் கவிதை தேவதேவன் குரலாக இருக்கிறது, தேவதச்சனின் கவிதையில் தேவதச்சன் தெரிகிறார். அப்படி இல்லாமல், தேவதச்சனின் கவிதையில் ஒரு கூலிதொழிலாளியின் குரல் ஒலிக்காதா? மற்றொரு கதாபாத்திரமாக கவிதையில் மாறுவது என்பது ஏன் தமிழின் நவீன கவிதையில் அவ்வளவாக முயற்சிக்கபடவில்லை? கவிதையில் இருந்து கவிஞன் உதிர்ந்துபோவது என்பதை தேவதச்சன் முயற்சி செய்ததுண்டா ? என்று கேட்டார் ஜெயமோகன். தனது கவிதை என்பது தனது தேடலின் ஒரு உபகரணம்தான். என்னுடைய கவிதைகள் அனைத்துமே ஆட்டோபயகிராபிக்கல் தன்மைவாய்ந்தது என்பதால் அப்படி நான் எதுவும் எழுதவில்லை. ஒருவேளை இனி முயற்சிக்கலாம் என்று பதிலளித்தார் தேவதச்சன்.


முதல் கவிதை படைப்பு மற்றும் அங்கீகாரம் பற்றி கேள்வி வந்தபோது, “முதன்முதலில் நான் ஒரு ரெபல் போலதான் கவிதையுலகில் வந்தேன். அந்த காலக்கட்டத்தில் நடை என்று ஒரு பத்திரிக்கை வந்தது. அதன் அட்டையில் உங்களது படைப்புகளை யார் படிக்கவேண்டும் என்று நினைக்கிறீர்களோ அவர்களிடம் எடுத்துச் செல்லும் பத்திரிக்கை என்று ஒரு வரி இருந்தது. அதாவது, கண்ணதாசன், வெங்கட்சாமிநாதன் போன்றவர்கள் படிக்கும் பத்திரிக்கை என்ற அர்த்தத்தில். அவர்கள் யார், என்னுடைய கவிதையை படிப்பதற்க்கு என்று என்னுடைய கவிதையை அனுப்பவேயில்லை. பிறகு கசடதபற பத்திரிக்கைக்கு என்னுடைய ஒரு கவிதையை பெயர்போடாமல் அனுப்பிவைத்தேன். அது மூன்று மாதங்கள் கழித்து வெளிவந்தது. அதுவே முதலில் வந்த படைப்பு” என்றார் தேவதச்சன்.

சுந்தர ராமசாமிக்கும் தனக்குமான உறவு பற்றி தேவதச்சன் விவரித்தது புதுமையாக இருந்தது. நான் அவரை பலமுறை சந்தித்து மணிக்கணக்கில் பேசியிருக்கிறேன். முக்கியமான நாவல்கள் பலவற்றை அவர் எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். ஆனால் சில நேரங்களில் யோசித்தால் அவரை சந்திக்கவே இல்லையோ என்று தோன்றுகிறது. நான் அவரை சந்தித்திருக்கிறேன். ஆனால் அவர் என்னை சந்திக்கவேயில்லையோ என்று நினைக்கிறேன். அவரது உரைநடை குறித்து எனக்கு கடுமையான விமர்சன பார்வை இருந்தது. என்றார்.

புனைவுகளில் கவிதையை பயன்படுத்துவது பற்றி எதிர்மறையான கருத்தை தெரிவித்தார் தேவதச்சன். ஒரு நாவல் அதற்குண்டான சாத்தியங்களை கொண்டே அதன் உச்சங்களை தாண்டி வரவேண்டும் என்றார். அதற்கு பதிலளித்த ஜெயமோகன், தேவதச்சன் சொல்வது நவீன நாவல்களை மனதில் கொண்டு. ஆனால், விஷ்ணுபுரம், கொற்றவை போன்ற கிளாசிக் ஆக்கங்களுக்கு அந்த பதில் பொருந்தாது. நாவலுக்குள் எழும் கனவை, உச்சத்தை கவிதை கொண்டு சொல்லிசெல்வது காவியங்களுக்கு உண்டான மரபுதான் என்றார்.இப்படியாக தேவதச்சனுடனான முதல் அமர்வு முடிவுக்கு வந்தது. தேவதச்சன் கவிதைகள் மட்டுமல்ல, தேவதச்சனிடம் பேசிக்கொண்டிருப்பதும் இனிமையான அனுபவமே. தனது தாளலயத்தில் லயித்து, கேட்கும் கேள்விகளை தலையை ஆட்டியபடி உள்வாங்கி, சிறிது நேரமெடுத்து, பிறகு பதில் சொல்கிறார். ஒரு கனிந்த நல்லாசிரியனிடம் கற்றுக் கொள்கிற அனுபவத்தை தந்தது முதல் அமர்வு.