Saturday, May 12, 2018

பினாங்கு - போரும் வாழ்வும்


பினாங்கு நகரில் வேலை நிமித்தம் வந்திறங்கிய நொடிமுதல், இருநூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இங்கு கொண்டுவரப்பட்ட தமிழர்களும், போரில் அவர்கள் சிக்கிக்கொண்ட விதமும், ப.சிங்காரமும் நினைவிலாடிக்கொண்டேயிருக்கிறார்கள்.  வந்த முதல் நாளே, பினாங்கு கடைத்தெரு சென்று செட்டித்தெருவை தேடினேன்.  புயலிலே ஒரு தோணியின் பாண்டியன் இங்குதானே திரிந்திருப்பான் என்று அந்த வீதிகளில் நடக்கும்போது நினைவு, காலச்சக்கரத்தில் முன்னும் பின்னுமாய் ஊசாலாடியது.


63 ஆண்டுகளுக்கு பின் மலேசியாவில் ஆட்சி மாற்றம் நடந்துள்ளது. ஓரளவு தமிழர்கள், சீனர்களுக்கு இணக்கமான மகதீர் முகம்மது ஆட்சியை கைப்பற்றியுள்ளார். அதுகுறித்து எங்கும் பெருமிதமும், மகிழ்ச்சியும் தென்படுவதை காணமுடிந்தது. 


கடைத்தெருவில் ஒரு புத்தககடையை கண்டேன். உள்ளே முழுவதும் ஆன்மிக புத்தகங்கள். சொற்பொழிவுகள், சித்தர் பாடல்கள், வழிபாட்டு முறைகள், புராணங்கள் என நிறைந்திருக்கிறது. ஒரு தமிழ்பெண்மணி வந்து மலேசிய நேரப்படி கணித்த பஞ்சாங்கம்தான் வேண்டுமென்று கேட்டுக்கொண்டிருந்தார். நான் சிறுவயதில் பார்த்த தமிழ்சினிமா பாட்டுபுத்தகங்கள் இங்கு இன்னமும் புழக்கத்தில் இருக்கிறது.

பெரும்பாலான கட்டிடங்கள், ஐரோப்பிய பாணியில் கட்டப்பட்டவை. வீதிகள் அழகாக நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. எல்லா நிறுவனங்களிலும், தமிழர்கள் முக்கிய பதவிகளை எட்டியிருப்பதை பார்க்க முடிகிறது. தமிழர்களுக்குள் பதவி வித்தியாசமின்றி தமிழில்தான் பேசிக்கொள்கிறார்கள். ஒரு ஒற்றுமை உணர்வு நிறைந்திருப்பதை உணரமுடிந்தது.அழகான செட்டிநாட்டு வீடு ஒன்று செட்டி முருகன் கோயிலாக வழங்கிவருகிறது. 


செட்டிநாட்டு வீடு


மாரியம்மன் கோயில்

பத்து ஃப்ரிஞ்ச் கடற்கரைநேற்று, பினாங்கு போர் காட்சியகத்துக்கு சென்றேன். ஓட்டுனராக வந்த தமிழ் நண்பர், தைப்பூசத்தின்போது, செட்டித்தெருவிலிருந்து, தண்ணீர்மலை கோயில்வரை கொடுக்கப்படும் விதவிதமான சாப்பாட்டு வகைகளை திரும்ப திரும்ப சொல்லிகொண்டே வந்தார்.  போர் காட்சியக பொறுப்பாளர் ஒரு மலேய பெண்மணி நுழைச்சீட்டு வழங்குமிடத்தில், ஓரளவு விரிவாக வரலாற்று சித்திரத்தை விளக்கியே உள்ளே அனுப்புகிறார். இருப்பினும், உள்ளே நுழையும் சிலர் அங்கிருக்கும் பீரங்கிகளில் சுடுவதை போல் ஏறிக்கொண்டு போட்டோ எடுத்து அப்லோடி மகிழ்கின்றனர். 


1930களில், பினாங்கின் தென்கிழக்கு ஓரத்தில் கடலோரத்தில் இருந்த மலையில் ஆங்கிலேயே ராணுவத்தால் ஒரு கோட்டை நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. 360 டிகிரி கோணத்தில் நான்குபுறமும் பார்க்ககூடிய விதத்தில் அமைந்த இந்த கோட்டையில், கடல் வழியே வரும் எதிரிகளை தாக்கும் விதத்தில் பீரங்கிகள், வான்வழி விமானங்களை தாக்க ஏவுகனைகள் இரண்டு, ஏராளமான ஆயுதங்களை காக்க அறைகள், பதுங்கு குழிகள், சுரங்க பாதைகள், தீவின் மற்றப்பகுதிகளில் இருக்கும் படையினர்க்கு தகவல் அனுப்ப வசதி என பலவசதிகளுடன் கட்டப்பட்ட இந்த கோட்டையை காக்க பஞ்சாப் ரெஜிமெண்ட் வீரர்களை கொண்டுவந்து தங்கவைத்துள்ளனர் ஆங்கிலேயே ராணுவத்தினர். தொடர்ந்து பத்துவருட காலம், காங்கிரிட்டினாலும், டன் கணக்கில் சிமிண்ட் கொண்டும் வசதிகளை மேம்படுத்தியிருக்கிறார்கள். ஆறுமாத காலம் தாக்குபிடிக்கும் வகையில் தண்ணீர் சேகரித்துவைக்க தொட்டிகள் உண்டு. ஏராளமான தமிழர்கள், மலேயர்களை கொண்டு இந்த கட்டுமானங்களை நிறுவியிருக்கின்றனர்.
பதுங்கு அறை

தோமோயுக்கி யமாசித்தா என்னும் சூறாவளி, ஜப்பானிய ராணுவத்தில் 25வது படையணிக்கு 1941ம் ஆண்டு நவம்பர் 6ம் தேதி தலைமையேற்கிறார். 1941ம் வருடம் டிசம்பர் 8, மலேயா படையெடுப்பை முன்னெடுக்கிறார். யமாசித்தா தலைமையிலான ஜப்பானிய படையின் எண்ணிக்கை வெறும் முப்பதாயிரம் பேர். மலேயா, சிங்கப்பூரில் நிலைக்கொண்டுள்ள ஆங்கிலேய, படையினரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து இருபதனாயிரம் பேர். இதில் ஆங்கிலேயர்கள், , ஆஸ்திரேலியர், இந்தியர்கள் ஆகியோர் உண்டு. கடல் வழியாக மலேசியாவின் கோட்ட பாஹரு(Kota Bahru), தாய்லாந்தின் சிங்கோரா, பட்டானி என மூன்று இடங்களில் ஊடுருவிய ஜப்பானிய ராணுவம், பினாங்கை நோக்கி முன்னேறியது. பிரிட்டிஸ் ராணுவத்தில் வீரர்கள் அதிகமிருந்தபோதிலும், மலேசியாவில் அவர்கள் வைத்திருந்த போர் விமானங்கள் (Brewster Buffaoes) காலாவதியானவை. ஜப்பான் இம்பீரியல் கடற்படை ராணுவத்தில் மிட்சுபிஷி தயாரிப்பான A6M Zeroes விமானங்கள் இருந்தன. அவை பன்மடங்கு ஆற்றலும் வேகமும் கொண்ட அந்த விமானங்கள் இரண்டு நாட்களில் ஆங்கிலேயே விமானங்களை சிதறடித்தன. பினாங்கை கைவிட்டு மெயின்லேண்டுக்கு செல்லபோவதாக ஆங்கிலேயே தளபதி ஆர்தர் பெர்ஸிவல் தெரிவித்தார். முதலில் படையினரை வெளியேற்றிய அவர், பிறகு ஆங்கிலேயே குடிமகன்களை மட்டும் நகரை விட்டு வெளியேற்றினார். இந்த கைவிடல் பினாங்கு மக்களை மிகுந்த துயருக்கும், ஆத்திரத்துக்கும் உள்ளாக்கியது. புயலில் ஒரு தோணியில், ஜப்பான் ராணுவம் தெருக்களில் நுழைகையில் மக்கள் இருபுறமும் கூடி நின்று வரவேற்க்கும் சித்திரத்தை அளித்திருப்பார். இதன் பின்னணி இந்த கைவிடலே. மக்களை பொறுத்தவரை, இரு நூறுஆண்டுகளாக அடிமைபடுத்தியிருந்த ஆங்கிலேயர்களுக்கு பதில் இப்போது ஜப்பானியர் என்கிற உணர்வே இருந்திருக்கும்.


தோமோயுக்கி யமாசித்தாபினாங்கில் குடிமகன்களாகிய தமிழர்கள், மலேயர்கள், சீனர்களை தவிர வேறு யாருமில்லாத சூழலில் ஜப்பான் ராணுவம் தொடர்ந்து விமான தாக்குதலை தொடர்ந்தது. சரவணமுத்து தலைமையிலான பினாங்கு சர்வீஸ் கமிட்டி பினாங்கில் இருந்த வானொலி நிலையம் மூலம், நாங்கள் குடிமகன்கள் மட்டுமே எஞ்சியுள்ளோம். தயவு செய்து தாக்குதலை நிறுத்துங்கள் என்று ராணுவத்திற்கு செய்தி ஒளிப்பரப்பினார்கள். பிறகு பினாங்கில் 1941ம் ஆண்டு டிசம்பர் 19ம் தேதி ஜப்பான் ராணுவம் வந்திறங்கியது. நகர் ஜப்பான் ஆளுகைக்கு வந்தது. அப்போது தான், மிகுந்த புகழ்ப்பெற்ற அந்த செய்தியை பினாங்கு வானொலி நிலையம் மூலம் ஜப்பான் ராணுவத்தினர் ஒளிப்பரப்பினார்கள். “ஹலோ சிங்கப்பூர், நாங்கள் பினாங்கிலிருந்து அழைக்கிறோம். எங்களது வெடிகுண்டு தாக்குதலை விரும்புகிறீர்களா?“  

டிசம்பர் 19ம்தேதி ஜப்பான் ராணுவம் பினாங்கை கைப்பற்றியவுடன், ஆங்கிலேயே ராணுவத்தால் கட்டப்பட்ட கோட்டை, ஜப்பான் வசமானது. இதை ஊகித்த ஆர்தர் பெர்ஸிவல், ஆங்கிலேயே –இந்திய படையினரை இந்த கோட்டையில் உள்ள பீரங்கிகள், விமான எதிர்ப்பு ஏவுகணைகள் இரண்டு ஆகியவற்றை உடைத்துவிட சொல்லியிருந்தார். அவை தகர்க்கப்பட்டிருந்தன.  பிறகு ஜப்பான் ராணுவத்தின் போர் கைதிகளையும், பினாங்கு குடிமகன்களில் சந்தேகிப்பவரை வதைக்கும் கூடமாக இந்த கோட்டை மாற்றப்பட்டது.

ஒவ்வொரு அறையும் எண்ணற்ற கைதிகளின் வலியையும் துன்பத்தையும் கண்ட மெளனச் சாட்சிகளாக உறைந்து நிற்கின்றன. போர் கைதிகளில் சிலரை சாமூராய் முறையில் தலையை வெட்டி, ரத்தத்தின் ஒரு துளியை தங்களது ஒயின் கோப்பையில் ஏந்திய தளபதிகளை இந்த கோட்டை சுவர்கள் கண்டுள்ளது.   பலிபீடங்கள், விசாரணை அறைகள், தகர்க்கப்பட்ட ஏவுகணை ஏவுதளம் என வரலாற்றில் உறைந்து கிடந்த இந்த கோட்டையை, 2001ம் ஆண்டு வரை ஏறக்குறை அறுபது வருடம் மறந்திருந்த மலேசிய அரசு, பிறகு இந்த கோட்டையை கண்டடெடுத்து போர் அருங்காட்சியகமாக மாற்றியுள்ளது.விமான எதிர்ப்பு ஏவுகணை தளம்கைதிகளின் பலி பீடம்தாக்குதல் தொடங்கி வெறும் எழுபது நாட்களில் மலேய – சிங்கை பகுதியை முழுவதும் கைப்பற்றி மலேயாவின் புலி என்று அழைக்கப்படுகிறார் யமாசித்தா. பிப்ரவரி 15ம்தேதி 1942ம் ஆண்டு சிங்கப்பூர் விழ்ந்தது.  நான்கு வருடங்கள் இந்த பகுதி முழுவதும் யமாசித்தாவின் ஆளுகையில் இருக்கிறது. சிங்கப்பூரை கைப்பற்றியவுடன், சீன மக்களில் சந்தேகபடுபவரையெல்லாம் கம்யுனிஸ்ட் என்று கைது செய்து சுட்டுக்கொல்லபடுகிறார்கள். ஏறக்குறைய எழுபதாயிரம் மக்கள் இப்படி படுகொலைசெய்யப்பட்டதாக தகவல்கள் சொல்கின்றன. பிறகு போரில் ஜப்பான் தோல்விக்கு பின், யமாசித்தா போர்கைதியாகிறார். பிலிப்பைன்ஸில் போர் குற்ற விசாரணை நடக்கிறது. யமாசித்தா இந்த படுகொலைகள் தமக்கு தெரியாமல் நடந்திருக்கலாம், எனக்கு தெரிந்திருந்தால் கடுமையாக தண்டித்திருப்பேன் என்று வாதிடுகிறார். போர் தளபதியாக, யமாசித்தா நேரடியாக சம்பந்தபடவில்லையென்றாலும், அவருக்கு அவரது ராணுவத்தினரின் செயல்களில் பொறுப்பு இருக்கிறது என்று நீதி வழங்கப்பட்டு, தூக்கில் ஏற்றபடுகிறார் யமாசித்தா. இது யமாசித்தா முறை (yamashita standard) என்கிற பெயரிலேயே இன்று வரை ராணுவத்தில் தலைமையின் பொறுப்பேற்பை பேசுகிறது.யமாசித்தா தூக்கு மேடை

பிலிப்பைன்ஸில் 13 படிகள் கொண்ட அந்த தூக்குமேடையில் யமாசித்தா தூக்கிலேற்றியதை ஒரு நினைவுச் சின்னமாக பினாங்கு கோட்டையில் உருவாக்கி வைத்துள்ளனர். வெற்றியின் வெறிக்கூச்சலையும், தோல்வியின் வலியையும், வரலாற்றில் அந்த இடத்தில், அந்த காலத்தில் மாட்டிக்கொண்டதை தவிர வேறு எந்த குற்றமும் செய்யாத அப்பாவிமக்களின் பெருந்துயரையும் சுமந்தபடி பினாங்கு கோட்டை மெளனமாக உறைந்திருக்கிறது.


Friday, May 11, 2018

அன்னா கரீனினா - அன்பின் தோல்வி - 3


என்னுடைய தந்தைவழி பாட்டி, தாத்தா இறந்தபின் தனியாகவே வாழ்ந்தார். ஐந்து பெண்கள், ஐந்து ஆண்குழந்தைகள் அனைவரும் அருகில் வசித்தாலும், தனது இறுதிகாலம் வரை தனி வீட்டிலேயே வேலையாட்கள் உதவியுடன் வாழ்ந்தார். சிறுபையனான நான் அந்த வீட்டுக்கு செல்லும்போதெல்லாம் திண்பண்டம் தருவார். ஆசையாக பேசுவார். சமையல்காரர் வந்து பாட்டிக்கு நெஞ்சு வலி என்று சொன்னபோது உடனே ஓடினோம். அப்பா அருகில் நின்றார். கூடவே நான் நின்றேன்.  என்னை பார்த்தபோது அது பாட்டியின் பார்வையாக இல்லை. ஒரு வெறுப்புடன் யாரோ ஒருவனை பார்க்கும் பார்வையாக அந்த விழிகள் தெரிந்தன. சிறிது நேரத்துக்கெல்லாம் அவர் இறந்துபோனார்.  இறக்கபோகிறவரின் விழிகளில் எதிலும் ஒட்டாத ஈடுபாடில்லாத தன்மை வந்துவிடுகிறது. இவர்கள் எல்லாம் வாழ்கிறார்கள், நாம் சாகபோகிறோம் என்கிற தனிமைதான் என் பாட்டியின் கண்களில் தெரிந்தது என்று பின்னால் உணர்ந்தேன்.லெவினின் சகோதரன் நிக்கோலே மரணபடுக்கையில் கிடக்கும்போது அந்த விழிகளில் தெரியும் வெறுப்பை எழுதுகிறார் டால்ஸ்டாய். முதலில் கிட்டியிடம் அன்பாக பேசும் நிக்கோலே பிறகு மோசமடைந்து இறக்கும் தருவாயில் இருக்கும்போது அவளை கண்டவுடன் திரும்பிக்கொள்கிறான். சாவின் தனிமை அவனை வெறுக்கசெய்கிறது.  

லெவினுக்கும் அவனது சகோதரன் நிக்கோலேவுக்குமான உறவு மற்றுமொரு புதிராகதான் நாவலில் வருகிறது. கல்லூரி காலத்தில் ஒரு முனிவனை போல் நல்லொழுக்கத்துடன் வாழ்ந்தவன் நிக்கோலே. பிறகு, ஏதோ ஒரு தருணத்தில் சட்டென்று உடைந்து வாழ்வின் மற்றொரு எல்லைக்கு செல்கிறான். குடியில் முழுகுகிறான். மாஸ்கோவின் ஒரு ஓரத்தில் பாழடைந்த விடுதி ஒன்றில், மரியா என்னும் பாலியல் தொழிலாளியுடன் வாழ்கிறான். அனைவராலும் கைவிடப்பட்டு கிடக்கும் நிக்கோலேவை ஏறக்குறைய லெவின் மறந்துவிடுகிறான். ஆனால், கிட்டியிடம் காதலை சொல்லி அந்த காதல் நிராகரிக்கப்பட்டு, வெரான்ஸ்கியால் தோற்கடிக்கப்பட்ட உணர்வுடன் தெருவில் இறங்கி நடக்கும்போது, அனைவராலும் நிராகரிக்கப்பட்ட நிக்கோலேவின் நினைவு வருகிறது. லெவின், அவனை தேடிச்செல்கிறான். உறவை சீரமைக்க முயன்று தோற்கிறான்.

வாழ்வின் பொருளிண்மை, அபத்தம் லெவினை வாழ்க்கை முழுவதும் துரத்துகிறது. எந்த கூட்டத்திலும் அவன் தனிமையை மட்டுமே உணர்கிறான். இருத்தலிய சிக்கலில் தவிக்கும் லெவினால், அவனது மனைவி மற்றும் மகனிடம் கூட உண்மையான நெருக்கத்தை உணரமுடியவில்லை. வாழ்க்கைக்கு நாம் கொடுக்கும் பொருளை தாண்டி வேறு பொருளில்லை. இந்த அகண்ட பிரபஞ்சத்தின் எல்லையில்லா பிரமாண்ட காலவெளியில், சட்டென்று தோன்றி மறையும் ஒரு நீர்குமிழி தான் தனது வாழ்க்கையெனில், இந்த பொருளிண்மை நரகத்திலிருந்து தப்பிக்க தற்கொலை ஒன்றே வழி என்று நினைக்கிறான், லெவின்.  எந்த நேரமும் தற்கொலை செய்துக்கொள்ள கூடும் என்பதால் கைத்துப்பாக்கியை மறைத்து வைக்கிறான். இறுதியில் ஒரு எளிய விவசாயி போகிறபோக்கில், “தனக்கென வாழும் வாழ்க்கையில் என்ன அர்த்தமிருக்ககூடும்? ஆன்மாவுக்கு நேர்மையாக, பிறர்க்காக வாழ்வதுதானே வாழ்க்கை“ என்று சொல்லிச்செல்லும் அந்த எளிய வரிகளிலிருந்து தனது வாழ்வை மீட்டெடுக்கிறான், லெவின். மகனும், மனைவியும் புதியவெளிச்சத்தில் தெரிகிறார்கள் அவனுக்கு. இனி அவனுக்கு துன்பமில்லை.  போரும் அமைதியும் நாவலில் வரும் எளிய குடியானவன் பிளாட்டேன், பியரின் மீட்சிக்கு காரணமானவனாக இருக்கிறார். இந்த நாவலில் திரும்பவும் ஒரு எளிய விவசாயியே லெவினை மீட்கிறார். பியரும், லெவினும் டால்ஸ்டாயின் குணாம்சங்கள் பொருந்திய கதாபாத்திரங்கள். கிருஸ்துவை மிக எளிதாக நெருங்க கூடியவர்கள் களங்கமில்லாத எளியவர்களே.

பெருங்குழப்பத்திலும், வாழ்க்கை பற்றிய தொடர்கேள்விகளையும் கொண்டு நாவலின் ஆரம்பத்தில் லெவின் அறிமுகமாகிறான். நாவலின் போக்கில் அவன் வளர்ந்து தனது மீட்சியை கண்டுக்கொள்கிறான். அன்னா என்னும் தேவதையோ கம்பீரமாக நமக்கு அறிமுகமாகி, பரிதாபகரமான வீழ்ச்சிக்கு ஆளாகிறாள். ஏறக்குறைய இந்த இருவரையும் நெரெதிர் பாத்திரங்களாக ஒன்றை ஒன்று சமன் செய்யும் பாத்திரங்களாக வளர்த்தெடுக்கிறார் டாலஸ்டாய்.

ஆரம்பத்தில் அன்னாவின் வாழ்க்கையில் காதலில்லை. ஆனால் தன் நிலையில் இருக்கின்ற சுதந்திரமும், அமைதியும் இருந்தது. வெரான்ஸ்கியைச் சந்தித்தபிறகு எல்லையில்லாத காதலை திகட்டதிகட்ட அனுபவிக்கிறாள் அன்னா. ஆனால், உள்ளூர அமைதியிழக்கிறாள். வாழ்க்கை முழுவதும் தேடிய காதல் கிடைத்தபின்னும் மனம் அமைதியடைவதாக இல்லை. இன்னும் இன்னும் என்று இறுக்கிகொள்ள துடிக்கிறது மனது. தான் அனுபவிக்கமுடியாத சுதந்திரத்தை எண்ணி ஏங்குகிறாள். தனது மகன் மீது காட்டிய அன்பு, அன்னாவுக்கு உள்ளூர பெருமிதத்தை தந்தது. அதுவும் இப்போது இல்லை. சொந்த மகனை விட்டுவிட்டு தான் வளர்க்கும் ஏழை சிறுமிக்குறித்து வெரான்ஸ்கிக்கு ஏளனமிருக்கும் என்று நினைக்கிறாள். வெரான்ஸ்கி, உண்மையில் தன்னை காதலித்தானா? என்கிற கேள்வி அவளுள் எழுகிறது. பிறன் மனைவியாகிய தன்னை வென்றெடுத்ததன் மூலம் வெரான்ஸ்கியின் தன்னகங்காரம் திருப்தியடைந்துவிட்டது. இனி, தான் கூட இருப்பதால் காட்டப்படவேண்டிய நேசம் மட்டுமே அவனிடமிருந்து கிடைக்கிறது என்று அஞ்சுகிறாள்.

இறுதியில் அவனுக்கு தந்திகொடுத்துவிட்டு, ரயில்நிலையத்திற்க்கு செல்கிறாள் அன்னா. செல்லும் வழியெங்கும், மனிதர்கள் துன்பத்தில் உழல்வதாக தோன்றுகிறது அவளுக்கு. ஒருவருக்கொருவர் துன்பம் விளைவித்துக்கொள்வதுதான் வாழ்க்கை என்று நினைக்கிறாள் அவளது மன நிலையை பார்க்கும் மனிதர்களின் மீது ஏற்றி செல்வதை டால்ஸ்டாய் எழுதுகிறார்.. நாயுடன் சுற்றுலா செல்லும் ஒருத்தரை பார்த்து “வீண் பயணமிது. உன்னுடன் வரும் நாய் உன்னை அமைதியாக இருக்கவிடாது” என்று மனதுக்குள் சொல்லிக்கொள்கிறாள்.


தான் இறந்தால் மட்டுமே வெரான்ஸ்கி காலம் முழுவதும், வருந்துவான் என்று முடிவெடுத்து ரயில் முன் பாய்கிறாள். அவள் மீண்டும் மீண்டும் கனவில் கண்ட ஒரு வயதான முதியவர் தண்டவாளங்களில் ப்ரெஞ்சில் ஏதோ உச்சரித்தபடி நிற்பதை இறுதியாக பார்க்கிறாள்.

அன்னா கரீனினா - பேரன்பின் பெருங்கருணை - 2


வெரான்ஸ்கியை சந்திக்கும் வரை, அலெக்ஸியுடனான அன்னாவின் வாழ்க்கை சாதாரணமான ஒன்றாகவே இருக்கிறது. வெரான்ஸ்கியுடன் காதலில் விழுந்தவுடன், பீட்டர்ஸ்பர்க் திரும்பி, தன்னை வரவேற்க காத்திருக்கும் கணவனை கண்டவுடன், ஏன், இவன் காதுகள் இப்படி அசிங்கமாக நீட்டிக்கொண்டிருக்கிறது? என்று நினைக்கிறாள். இப்போது அலெக்ஸியுடன் சம்பந்தப்பட்ட அனைத்தும் அன்னாவுக்கு ஒவ்வாமையை தருகிறது. அன்னா இப்படி ஒரு வெறுப்பை ஏற்படுத்திக்கொண்டால் மட்டுமே அதன் மறுபக்கமான காதலை எந்த குற்றவுணர்ச்சியுமின்றி வெரான்ஸ்கியிடம் காட்டமுடியும். இந்த நுட்பத்தை எழுதமுடிந்ததாலயே அன்னா கரீனினா, டால்ஸ்டாயின் மகத்தான படைப்புகளில் ஒன்றாக இன்றுவரை கொண்டாடபடுகிறது. டால்ஸ்டாயால் 1878ம் ஆண்டு எழுதப்பட்டு வெளிவந்த அன்னா கரீனினா நாவல் பற்றி, 140 ஆண்டுகளாக பல விமர்சகர்கள் திரும்ப திரும்ப எழுதியும் அந்த நாவலின் நுட்பங்கள் தீர்வதாகயில்லை.தன்னை பின் தொடரும் வெரான்ஸ்கியை முதலில் மறுக்கும் அன்னா மிக இயல்பாக அவனை ஏற்கிறாள். காதலில் திளைக்கிறார்கள் இருவரும். அன்னாவின் கணவன் அலெக்ஸி, எந்த முடிவும் எடுக்கமுடியாமல் மிகக்கொடுமையான வாழ்க்கையில் தவிக்கிறான். பார்ப்பவர்கள் எல்லாம் தன்னை எள்ளி நகையாடுவதாக தோன்றுகிறது அவனுக்கு. அன்னாவை வார்த்தைகளால் காயப்படுத்துகிறான். அவளை ஊருக்கு வெளியிலிருக்கும் பண்ணை வீட்டுக்கு அனுப்புகிறான்.  பிறகு வெரான்ஸ்கிக்கும் அன்னாவுக்கும் குழந்தை பிறக்கிறது. அந்த குழந்தை பிறப்பில், அன்னா சாவின் எல்லையை தொடுகிறாள். தான் சாகபோகிறோம் என்கிற உணர்வு அழுத்த தன்னை வந்து பார்க்கும்படி தந்தி அனுப்புகிறாள் அலெக்ஸிக்கு. வாழ்வு முழுவதும் எந்த பெரிய சிக்கலும் இல்லாது ஒரு அரசு அதிகாரியாகவே வாழ்ந்த அலெக்ஸி, அன்னா குறித்த எந்த முடிவும் எடுக்கமுடியாமல் தவிக்கிறான். தந்தியை பார்த்தவுடன், அவள் இறந்துவிடுவதே இந்த சிக்கலுக்கான முடிவு என்று நினைத்து அவளை பார்க்க செல்கிறான்.

அலெக்ஸி, அன்னா, மற்றும் வெரான்ஸ்கி மூவரும் சந்தித்துக்கொள்ளும் இந்த இடம் நாவலின் உச்சத்தருணங்களில் ஒன்று. காய்ச்சல்வேகத்தில், “என்னுடைய அலெக்ஸி என்னை மன்னித்துவிடுவான், எனக்கு தெரியும் அவன் ஒரு புனிதன்” என்று அரற்றுகிறாள். இதைக்கேட்டு தன்னுடைய அனைத்து தடைகளும் உடைந்து கதறுகிறான், அலெக்ஸி. அன்னாவை மன்னித்துவிட்டேன் என்று சொல்லும்போது தனக்குள் நிகழும் அந்த பெருங்கருணையில் லயித்து நிற்கிறான், அலெக்ஸி.   கண்விழித்துப் பார்த்து, “வெரான்ஸ்கியை அழைத்து வா, அலெக்ஸி” என்று சொல்கிறாள், அன்னா. அறைக்கு வெளியே நிற்கும் வெரான்ஸ்கி முகத்தை இருகைகளாலும் மூடி, அழுதபடி அன்னா அருகில் வருகிறான். “பார்த்தாயா, என்னுடைய அலெக்ஸி என்னை மன்னித்துவிட்டான்”, என்கிறாள் அன்னா. அன்னாவை முழுவதும் தோற்றுவிட்டோம் என்று தெரிகிறது வெரான்ஸ்கிக்கு. அலெக்ஸியின் மனைவியை கள்ளத்தனமாக பார்க்கவந்தபோது வெரான்ஸ்கியால், அலெக்ஸியை நேருக்கு நேர் எதிர்க்கொள்ள முடிந்தது. ஆனால், இப்போது அலெக்ஸி தனது கருணையால் அன்னாவை வென்றெடுத்துவிட்டான். அவனிடம் பரிபூரணமாக தோற்றவனாக, வெளியே ஓடுகிறான். வீட்டுக்குச்சென்று துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலைக்கு முயல்கிறான் வெரான்ஸ்கி.

பிறகு உடல்நிலை சரியானபின் வெரான்ஸ்கி தனக்காக சென்ற எல்லை அன்னாவை மீண்டும் வெரான்ஸ்கியிடம் இழுத்துச்செல்கிறது. கடைசியாக ஒரு முறை அன்னாவை பார்த்துவிடைபெற அலெக்ஸியிடம்அனுமதி கேட்கிறான் வெரான்ஸ்கி. அதை மறுப்பதன் மூலம், மீண்டும் அன்னாவின் மனதிலிருந்து விலகுகிறான் அலெக்ஸி. உண்மையில், வெரான்ஸ்கியின் தோழி பெட்ஸி அன்னாவிடம் வந்து, வெரான்ஸ்கி இறுதியாக ஒரு முறை பார்க்கவிரும்புகிறான் என்று கேட்கும்போது, அன்னாவே அதை மறுக்கிறாள். ஆனால், உள்ளூர அலெக்ஸியிடம் அந்த கருணையை எதிர்ப்பார்க்கிறாள். அலெக்ஸியின் வாயிலிருந்து அந்த மறுப்பு வரும்போது, வெரான்ஸ்கியின் தியாகம், அலெக்ஸியின் கருணையைவிடபெரிதாக தெரிகிறது அன்னாவுக்கு. இப்படி நுட்பமான தருணங்களின் மூலம் அன்னாவின் வாழ்வை, அவளது மன நிலையை வரைந்துச் செல்கிறார் டால்ஸ்டாய். மீண்டும் வெரான்ஸ்கியும், அன்னாவும் சேர்கிறார்கள். தனது மகனை விட்டு வெரான்ஸ்கியுடன் செல்கிறாள் அன்னா. 

வெரான்ஸ்கியால் கைவிடப்படும் கிட்டி, எல்லாவற்றையும் வெறுத்து பெற்றொர்களுடம் ஜெர்மனி செல்கிறாள். அங்கு சேவைசெய்யும் வெரான்காவை சந்தித்து அவளது கருணையால் ஈர்க்கபடுகிறாள். பிறகு ஒரு கட்டத்தில் வெரான்காவின் காதலன் அவனது தாயின் பேச்சைக்கேட்டு வெரான்காவை கைவிட்டுவிட்டான் என்பதை அறிகிறாள். “இப்படி காதலனால் கைவிடப்படுவது எவ்வளவு பெரிய அவமானம், இதை எப்படி தாண்டிவந்தாய்?” என்று கேட்கிறாள். “இதில் என்ன இருக்கிறது? வாழ்வில் காதலைவிடப் பெரிய விஷயங்கள் இருக்கின்றன கிட்டி” என்கிற வெரான்காவின் பதில் கிட்டியை கொஞ்சம் கொஞ்சமாக அமைதிப்படுத்துகிறது.

வெரான்ஸ்கி கைவிடும் கிட்டியை, லெவின் திருமணம் செய்துக்கொள்கிறான். லெவினை ஒரு கட்டத்தில் சந்திக்கும் அன்னா, லெவினை அந்த ஒரு சந்திப்பிலேயே முழுவதுமாய் ஈர்க்க நினைக்கிறாள். லெவின் போன பிறகு, லெவினுக்கும், வெரான்ஸ்கிக்கும் பொதுவான ஏதோ ஒரு அம்சம் இருப்பதாலயே கிட்டியால் இவர்கள் இருவரையும் காதலிக்க முடிந்திருக்கிறது என்று நினைத்துக்கொள்கிறாள். இவர்கள் இருவருக்கும் பொதுவான அம்சம் கிட்டிதான். கிட்டிதான், அன்னாவின் காதலை உள்ளுர தீர்மானிப்பவளாக இருக்கிறாள்.

அன்னா கரீனினா - அன்பை விட மகத்தான ஒன்று - 1“உபயோகமில்லாத பொருட்கள் எதையாவது எப்போதாவது

நீ கையால் தொடுகிறாயா? “

என்று தொடங்கும் தேவதச்சனின் கவிதையில் கடைசி வரிகளை இப்படி முடித்திருப்பார்.

“சென்று வாருங்கள், உபயோகமற்ற பொருட்களே

நீங்கள்
இன்னொரு ஆறைப்போல் ஓடிக்கொண்டிருக்கிறீர்கள்
எப்போது வேண்டுமானாலும் திரும்பி வாருங்கள்
வந்து,
மீண்டும் மீண்டும்
அன்பின் தோல்வியைக் காணுங்கள்.”


2015 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது கவிஞர் தேவதச்சனுக்கு வழங்கப்பட்டதை ஒட்டி நடந்த கலந்துரையாடலில் இந்த “அன்பின் தோல்வி” என்கிற வரிகள் எனக்களித்த இருண்மையை பற்றி அவரிடம் கேள்வியாக கேட்டேன். அதற்கு பதிலாக தேவதச்சன்,

“அன்பு உலகின் உன்னதங்களில் ஒன்றென கொண்டாடபடுகிறது. அன்பு, கடவுளுக்கு இணையானதாக கருதபடுகிறது ஆனால், நிதர்சனத்தில் அன்பை புரிந்துகொள்ளுதல் மிக கடினமாக இருக்கிறது. அப்போதுதான், அன்பை விட மகத்தான ஒன்று இந்த உலகில் இருக்கவேண்டும். அதை பின்புலமாக கொண்டே அன்பை புரிந்துக்கொள்ள முடியும் என்று நினைத்தேன். அப்படி பட்ட ஒன்றுதான் தன் நிலையில் இருக்கும் சுதந்திரம் “ என்றார்அன்னா கரீனினாவின் வாழ்க்கையை இதைகொண்டுதான் புரிந்துக்கொள்ளமுடியும். வாழ்நாள்முழுவதும் தான் தேடிக்கொண்டிருந்த காதல் கிடைத்துவிட்டது. வெரான்ஸ்கிக்காக தனது எட்டு வயது மகனை, கணவனை பிரிந்து, சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்டு தன் காதலை அடைகிறாள். அவ்வாறு எல்லாவற்றையும் தான் இழந்ததனாலயே, இன்னும் இன்னும் தன்னை வெரான்ஸ்கி நேசிக்க கடமைப்பட்டவன் என்று நினைக்கிறாள்.  சிலமணி நேரங்கள் அவன் வர தாமதமானாலும், கோபிக்கிறாள். அவனுடன் சண்டைபோடுகிறாள். தன்னைவிட வேறு எதுவும் அவனுக்கு முக்கியமாக இருக்க கூடாது என்று வாதிடுகிறாள். இந்த அன்பின் குரூரத்தை வெரான்ஸ்கி கொஞ்சம் கொஞ்சமாக உணர்கிறான். தன்னுடையை சுதந்திரத்தை அன்னா பறிப்பதை அவனால் ஏற்கமுடியவில்லை. வெரான்ஸ்கிக்கு இப்போது அன்னா அலுப்பை தருகிறாள். அன்னாவுக்கோ, தான் மட்டும் சமூகத்திலிருந்து அன்னியமாகி விட, வெரான்ஸ்கி முன்பை போலவே சுதந்திரமாய் உலவுவதாய் தோன்றுகிறது. வெரான்ஸ்கியின் காதல் உண்மைதானா என்று சந்தேகிக்கிறாள். இருவரும் உண்மையில் விரும்பியது தன் நிலையில் இருந்த சுதந்திரத்தை தானோ.

அன்னா பேரழகி. பார்ப்பவர்களிடமெல்லாம் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கிறது அவளது அழகும், நற்குணங்களும். அவளது கணவன் அலெக்ஸி பீட்ஸ்பர்க்கில் அரசாங்க மேலதிகாரி. தனக்கென விதிக்கப்பட்ட வாழ்க்கையில் மேலும் உச்சங்களை எட்ட அயராது உழைப்பவன். வகுத்துக்கொண்ட விதிமுறைகள்படி, கட்டுபாடுகளுடன் வாழ்பவன்.  எட்டு வயதில் மகன் செர்யூசா. அன்னாவின் திருமண வாழ்க்கையில் பெரிய காதலில்லை. நேர்க்கோட்டில் எந்த மாற்றமுமில்லாது செல்லும் சலிப்பான பயணம். அன்னாவின் சகோதரன் ஸ்டிவ்க்கும், டோலிக்குமிடையேயான திருமண வாழ்க்கை, ஸ்டிவ்வின் திருமணம் தாண்டிய உறவுகளால் உடைந்துவிடும் நிலையில் இருக்கிறது. அதைச் சரிசெய்யவே அன்னா மாஸ்கோ வருகிறாள். மாஸ்கோ ரயில் நிலையத்தில்தான் முதன்முதலாக வெரான்ஸ்கியுடான சந்திப்பு நிகழ்கிறது. அப்போது ரயில் சக்கரங்களில் மாட்டி உயிரழக்கிறார் ஒரு தொழிலாளி. அந்த விபத்தை பார்க்கும் அன்னாவின் உள்ளுணர்வு, தவறுகள் நடக்கபோகும் சமிக்ஞையை தருகிறது. அதையெல்லாம் மீறி ஒரு புயலைப் போல் அவளுள் நுழைகிறான் வெரான்ஸ்கி.

வெரான்ஸ்கி ராணுவத்தில் பணிபுரியும் ஒரு சாகஸ விரும்பி. குதிரை பந்தய வீரன். அழகன். பெண்களை விரும்புபவன். இதையெல்லாம் தாண்டி, தான் செய்யும் எந்த விஷயத்திலும் அவனுக்கு சந்தேகங்களில்லை. தத்துவார்த்த கேள்விகளில்லை. இந்த அபரிதமான தன்னம்பிக்கை பெண்களுக்கு அளிக்கும் ஈர்ப்பை போரும் அமைதியும் நாவலிலும் டால் ஸ்டாய் எழுதியிருப்பார். அன்னா வெரான்ஸ்கியின் எல்லா விதிகளையும் மீறுகிறாள். அன்னாவை பார்த்தவுடன் காதலில் விழுகிறான். அவள் திருமணமானவள், பிள்ளை உண்டு என்பதெல்லாம் அவன் கவனத்திலில்லை.டோலியின் தங்கை கிட்டி, பதினெட்டு வயதை எட்டுகிறாள். இளமையின் பூரிப்பு, இன்னும் மாறாத குழந்தைமையின் அழகு, அதிகாலை பணியின் தூய்மை, அனைவராலும் கவனிக்கபடுகிறோம் என்கிற பெருமை இவையணைத்துடன் சகுரா மரத்தை போல மேனியெங்கும் அழகு பூத்து நிற்கிறாள். தன்னிடம் வெரான்ஸ்கி காதலை சொல்லப்போகிறான் என்பதை எதிர்பார்த்து மகிழ்ச்சியுடன் காத்திருக்கிறாள். ஆனால், தன் சகோதரனுடைய நண்பனான லெவின், தன்னிடம் காதலை சொல்லும் கணத்தில் அவளுக்குள் ஏதோ ஒன்று நிறைகிறது. லெவின் சொல்லிமுடித்த அடுத்த கணத்தில் என்னால் இயலாது என்று மறுதலிக்கிறாள். லெவின் (நாவலில் டால்ஸ்டாயின் பாத்திரமாக கருதபடுபவன்), ஒரு நிலப்பிரபு. அரசு வேலைகளில் இருக்கும் மாற்றமற்ற சலிப்பையும் அர்த்தமற்ற காகிதங்களையும் வெறுப்பவன். அனைத்து அரசு பதவிகளையும் துறந்து கிராமத்தில் விவசாயம் செய்பவன். விவசாயிகளின் வாழ்க்கையில் மாற்றங்கள் செய்வது, விவசாயத்தில் நவீன முறைகளை புகுத்துவது என வேட்கையுடன் சுற்றுபவன். மனித வாழ்வின் பொருள் மீது கேள்விகள் உடையவன். தயக்கங்களும் கேள்விகளும் கொண்ட லெவினை விட கம்பீரமான வெரான்ஸ்கியை, கிட்டி விரும்புகிறாள். தன்னுடைய தமக்கை டோலியின் வீட்டில் அன்னாவை பார்த்தவுடன் அவள்மீது மிகுந்த பிரேமையுடன்தான் கலந்துக்கொள்ளபோகும் முதல் நடன விருந்துக்கு அழைக்கிறாள். அந்த நடன விருந்துக்கு செல்கிறாள் அன்னா. தன் மீது அமர்ந்திருந்த பதினெட்டு வயது இளமை என்னும் மயில் இப்போது கிட்டியின் தோள் மீது ஆடிக்கொண்டிருப்பதை காணும் கணத்தில் தன்னையும் அறியாமல், அந்த நடன விருந்தில் வெரான்ஸ்கியை வென்றெடுக்கிறாள் அன்னா.