Friday, August 31, 2012

அசோகமித்திரனின் பதினெட்டாவது அட்சக்கோடு

நான் முதன்முதலில் அசோகமித்திரனை படித்தது, பள்ளியிறுதியில். பாலகுமாரன் மற்றும் பொன்னியின் செல்வனில் சுழன்றுக் கொண்டிருந்தபோது, எப்போதும் புத்தகம் வாங்கும் கடையில், இந்தியா டுடேவின் இலக்கிய மலர் என்னை ஈர்த்தது. நல்ல மழை நாளான அன்று, வாங்கிய கையோடு, அதில் இடம் பெற்றிருந்த அனைத்து படைப்புகளையும் படித்தேன். அந்த விதத்தில், தீவிர இலக்கியத்தை எனக்கு அறிமுகப்படுத்தியது இந்தியா டுடே இதழ் தான்.  அதில் இடம்பெற்றிருந்த அசோகமித்திரனின் சிறுகதை எனக்கு புதுவிதமான அனுபவத்தை தந்தது. அந்த கதை செகந்திராபாத்தில் உள்ள ஒரு மேன்ஷனில் வாழும் ஒரு முதிய பேச்சுலரை மையமாக கொண்டது. விளிம்பு நிலை மக்களை, சேரியில் உழன்றுக் கொண்டிருப்பவரை எப்படி மையமாக்கி, ஜெயகாந்தனின் படைப்புகள் பேசியதோ, அதே போல், அசோகமித்திரனின் படைப்புலகம், சாமானியனின் உலகம். இது மீண்டும் மீண்டும் பேசுவது சாமானியனின் சிக்கலையே. இங்கு ரேஷனில் அரிசி வாங்க, மஞ்சள் பையுடன், சட்டை பையில் இருக்கும் நோட்டுக்களில் ஒன்று செல்லுமா, செல்லாதா என்ற பயத்துடன் க்யூவில் நிற்கும்  மனிதன்தான் கதாநாயகன். நாட்டின் எந்த பிரச்சனையிலும் முதலில் அடிபடுவது  அவன்தான். பதினெட்டாவது அட்சக்கோடு பேசுவதும் அதை போன்ற ஒருவனின் சிக்கலைதான்.அசோகமித்திரனின் பதினெட்டாவது அட்சக்கோடு நாவலை பற்றி பார்க்கும் முன், சற்று ஹைதராபாத்தின் கதையை பார்த்து விடுவது நல்லது. இந்தியாவிற்கு சுதந்திரத்தை கொடுத்து விட்டு, வெள்ளைகாரர்கள் கப்பலேறும் போது, இந்தியாவில் ஐநூறுக்கும் மேற்பட்ட சமஸ்தானஙகள், தன்னிச்சையாக செயல்பட்டு கொண்டு இருந்தன. இந்திய சுதந்திரத்திற்கு பின், சர்தார் வல்லபாய் படேல் மற்றும் நேருவின் முயற்சியால் அனைத்து சமஸ்தானங்களும் ஒன்றிணைக்கபட்டு இந்தியா வலுவடைந்தது. ஆனால் இந்தியா சுதந்திரத்திற்கு பின்னும், தனி சமஸ்தானமாக நீடித்தது ஹைதராபாத். முதலில் ஹைதராபாத்தை ஆண்ட நிஜாம், அவரது சமஸ்தானத்தை, சுதந்திர நாடாக தானே ஆள ஆசைப்பட்டார். நான்கு புறமும், இந்தியாவால் சூழப்பட்ட ஒரு மாநிலம், அவ்வாறு நீடிக்க முடியாது என்று புரிந்த போது, பாகிஸ்தானுடன் இணைத்து விடலாம் என்று பகல் கனவு கண்டார். இதை எல்லாம் நிஜாமே, தன்னிச்சையாக முடிவு செய்தார் என்பதை விட, அவரால் அங்கு ஆட்சியில் பிரதமராக உட்கார வைக்கபட்ட மிர் லைக் அலியும், ரஜாக்கர் எனப்படும் கூலிப்படையை வைத்துக் கொண்டு அராஜகம் செய்த காசிம் ரஜ்வியும் பெரும்பாலான முடிவுகளை எடுத்தனர். சமஸ்தானத்தின் மிலிட்டரியை கொண்டு அந்த ரஜாக்கர்களுக்கு பயிற்சியும் அளிக்கபட்டது.


ஏறக்குறைய ஒரு கோடியே எழுபது லட்சம் ஹிந்துக்களையும், இருபது லட்சம் இஸ்லாமியர்களையும் கொண்டு அமைந்த மாநிலமான ஹைதராபாத் மக்களில், பெரும்பாலானோர் இந்தியாவுடன் இணைவதையே விரும்பினார்கள். ஆனால், இந்தியா சுதந்திரம் பெறும் சூழலிலும், சுதந்திரம் பெற்ற பின்னரும், ரஜாக்கர்கள் அங்கு வசித்து வரும் ஹிந்துக்களை தாக்குகிறார்கள். நிஜாம் பாகிஸ்தானுக்கு நிதி உதவி செய்கிறார். இந்தியாவுடன் இணைக்கபடுவதை தடுக்க, நிஜாம் வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்களை கொண்டு வந்து இறக்குகிறார். இந்த சூழலில் பதட்ட்த்தை தணிக்க ஹதராபாத் நிஜாமுக்கும், இந்திய அரசாங்கத்திற்க்கும், 1947லில் ஒரு வருட ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த ஒரு வருடமும், ஹைதராபாத் அப்போதய சூழ்நிலையிலேயே நீடிப்பது என்றும், அதற்கு பிறகு சூழலுக்கு ஏற்ப முடிவு செய்வது என்றும் தீர்மானிக்கபடுகிறது. ஆனால், அந்த ஒரு வருட்த்தில் நிலைமை மோசம் ஆகிறது. கைகளில், வாள் மற்றும் துப்பாக்கி ஏந்திய ரஜாக்கர்கள் தெருக்களில் வலம் வருகிறார்கள்.

இது மாதிரியான சூழலில், அங்கு புலம் பெயர்ந்து வாழும் தமிழ் குடும்பத்தின் மூத்த மகன் சந்திரசேகரின் கதைதான் இது. கதையின் ஆரம்பத்தில் அந்த புலம்பெயர் சூழலில், சந்துரு தன்னை நுழைத்துக் கொள்ளும் சித்திரம். பிறகு, அவனுடைய வயதுக்கு உரிய பருவ கோளறுகள். எந்த பெண்ணை கண்டாலும், அவன் மனது சலனம் கொள்கிறது. இந்த இயல்பான விஷயம் அவனை உறுத்துகிறது. அவ்வாறு சலனபடும் போதெல்லாம், தன்னுடைய காலால் நிலத்தை உதைத்து தனக்கு தானே தண்டனை கொடுத்துக் கொள்கிறான். கால் நகம் பெயர்ந்து ரத்தம் கொட்டுகிறது. ஆனால் அவன் பொருட்படுத்துவதில்லை.  கிரிக்கெட் விளையாட்டிலேயே அவன் காலம் கழிகிறது. எந்த அரசியலும் இல்லாத, எந்த ஐடியலிசமும் இல்லாத ஒரு எளிய இளைஞன், வரலாற்று நிகழ்வுகளால் அடித்து செல்லபடுகிறான். அவன் வயதையே ஒத்த வசதியான இளைஞர்கள்/இளைஞிகள் எப்போதும் பாதிக்கபடுவதில்லை. அவர்களுக்கு உரிய உலகத்தில் அவர்கள் செளகரியமாக இருக்கிறார்கள். இழுத்து செல்லபடுவதெல்லாம், சாமானிய நடுத்தர சந்துருவை போன்ற இளைஞர்களே.  


இந்த சூழலில், கம்யூனிஸ்ட்கள் நிஜாமிடம் இருந்து நிலங்களை பறித்து, ஏழைகளுக்கு பங்கீடு செய்கிறார்கள். காங்கிரசும் கம்யூனிஸ்ட்களுடன் கை கோர்க்கிறது.  இதற்கு உதவும் லம்பாடிகள் எனப்படும் நாடோடிகளை, ஈவு இரக்கமில்லாது ரஜாக்கர்கள் மற்றும் நிஜாமின் மிலிட்டரி கொன்று போடுகிறது. அசோகமித்திரன், இந்த காட்சியை ஒரு வசனத்தில் கடந்து செல்கிறார். ஆனால் அது நமக்கு ஏற்படுத்தும் பாதிப்பு வலுவானது.

சந்துருவின் அப்பாவின் உலகம் சிறியது. தான் உண்டு தன்னுடைய ரயில்வே வேலை உண்டு என்று இருக்கின்ற அவரையும், இந்த கலவர சூழல் ஆட்டி வைக்கிறது. ஊரில் நிறைய பேர் இந்த் சூழலில் இருந்து தப்பிக்க திரும்பி போகிறார்கள். ஆனால் சந்துருவின் தந்தை அமைதியை எதிர்பார்த்து அங்கேயே காலம் கழிக்கிறார்.

சந்துரு தனது நண்பன் நரஸிம்ஹராவின் பேச்சைக் கேட்டு காங்கிரஸ்காரர்களை சந்தித்து, காலேஜ்க்கு முன் சத்யாகிரகம் செய்வதாக ரத்த கையெழுத்து இடுகிறான். கல்லூரி விழா ஒன்றில் விடுதலை, விடுதலை என்ற பாரதியின் பாடலை பாடுகிறான். ஆனால், அப்போதும் அவனுக்கு பாரதி குறித்தோ, அந்த பாட்டின் கருத்து குறித்தோ, பெரிய புரிதல்கள் இல்லை. இந்த பாடலை கேட்ட கல்லூரியின் வேதியியல் பேராசிரியர் தம்பிமுத்து, சந்துருவை தனியே அழைத்து அந்த பாடலை கற்றுக் கொடுக்க சொல்லும் இடம்தான், இந்த கதையின் முதல் மையமாக, எனக்கு தெரிந்த்து. தம்பிமுத்து பல ஆண்டுகளாக புலம் பெயர்ந்து, அந்த நிஜாமின் கல்லூரியில் பணிபுரிந்து வருகிறார். தன்னுடைய சுய அடையாளம் குறித்தோ, தனக்கு கல்லூரியில் திறமை இருந்தும் மறுக்கபடும் பதவி உயர்வு குறித்து அவருக்கு கவலை இருந்தாலும், அவற்றை எல்லாம் வெற்றிகரமாக மறைத்து கொண்டு வாழ பழகிவிட்டவர் அவர். அந்த மண்ணில், ஐடியலிசத்திற்க்கு எந்த பொருளுமில்லை என்று அவர் நினைக்கிறார். பாரதி என்றால் யார் என்று கேட்கும் அளவிற்க்கு தான் அவருக்கு ஈடுபாடு இருக்கிறது. ஆனாலும் சந்துருவின் பாடல் அவரை ஏதோ செய்கிறது. அதை கற்று கொண்டு பாடுகிறார். அப்போது, சந்துரு தான் போட்ட ரத்த கையெழுத்து குறித்து உளறியவுடன் அவர் பதட்டமடைகிறார். சந்துருவை இதில் ஈடுபட வேண்டாம். இதனால் அவ்னுக்கு எந்த பலனும் கிடைக்காது என்று சொல்கிறார்.

தம்பிமுத்துவுக்கு, நேர் எதிரான பாத்திரம் ஒன்று அசோகமித்திரனால படைக்கப்பட்டிருக்கிறது. அது சையது என்று அழைக்கபடும், சந்துருவுடைய அப்பாவின் பால்ய சினேகிதர். மாயவரத்தை சொந்தமாக கொண்ட அவர், ஹைதராபாத்தில் குடி புகுந்தவுடன் அந்த பூமியை தனது சொந்த பூமி என்று கருதிக் கொள்கிறார். பாகிஸ்தானுக்கு பரிந்து பேசுகிறார். இந்த இரண்டு பாத்திரங்களும் நம்முள் பல கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருக்கிறது.

நிஜாமின் கை ஓங்க தொடங்கியவுடன் காட்சிகள் மேலும் தீவிரமடைகின்றது. இதுவரை, வெளியே வந்தே பேசாத, பக்கத்து வீட்டு காசிம், தனக்கு தண்ணீர் வராததற்க்கு காரணம், உங்கள் வீட்டில் பைப்பை திறந்து வைத்திருப்பது தான் என்று கூறி சந்துருவின் வீடு புகுந்து பைப்பை இறுக்கி மூடி செல்கிறான். போகும்போது, எருமை மாட்டை ஓங்கி உதைத்து போகிறான். எந்த அரசியல் அதிகாரத்திலும் நேரடியாக தொடர்பில்லாத சந்துருவை போலவே சாதாரண நடுத்தர குடும்பத்தை சேர்ந்த காசிமை, எது இப்படி நடந்துக் கொள்ள தூண்டிகிறது?  நிஜாமின் கை ஓங்கும் போது தான் தன்னை மதரீதியாக அடையாளபடுத்திக் கொள்கிறான்.


நிலைமை மோசமானதும், ஒரு வருட ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டு இந்திய ராணுவம், ஹைதராபாத்க்குள் நுழைகிறது. ரஜாக்கர்கள் வெறும் வாளை ஏந்திக் கொண்டு, இந்தியா ராணுவத்தை எதிர்க்க போய் பாதி பேர் செத்து மடிகிறார்கள். மீதி பேர் ஓடி ஒளிகிறார்கள். இந்திய மிலிட்டரி ஹைதராபாத்தில் நுழைந்து, பெரும்பகுதியை கைப்பற்றியதாக செய்தி வருகின்ற போது, பக்கத்து வீட்டு காசிம் இருக்குமிடம் தெரியாமல் வீட்டிற்க்குள் ஒளிந்து கொள்கிறான்.  அவன் வீட்டிற்க்கு அடைக்கலமாக வந்து தங்கியிருக்கும் காசிமின் உறவினர்கள், சந்துருவை பார்க்கும் தோறும் வணக்கம் சொல்கிறார்கள். யாரிடமும் அதிர்ந்து கூட பேசாத சந்துருவின் தந்தை, காசிமின் விட்டிற்க்குள் சென்று, உங்கள் ரேடியோ எனக்கு வேண்டும், என்று அதிகாரமாக கேட்கிறார். சந்துரு வீட்டை தாண்டி குதித்து, காசிமின் வீட்டிற்க்குள் சென்று, ரேடியோவை தூக்கி வர செல்கிறான். அதுவரை, அவன் கொண்டிருந்த களங்கமற்ற தன்மை, இந்த காட்சியில் மாசடைந்து விடுகிறது. தன்னையும், ஒரு குழுவின் அங்கத்தினராக அவன் உணர்ந்து, தனது சுயதன்மையை இழக்கிறான். சொல்லபோனால், இதற்கு முன்பே காந்தி கொலை செய்யப்பட்ட செய்தி கேட்டு, அவன் மனம் இதனை ஒரு முஸ்லிம் செய்திருக்க கூடுமோ? என்று யோசிக்க தொடங்கி விடுகிறது. எந்த அரசியலுமற்ற எந்த ஒரு பக்க சாய்வுமற்ற ஒருவன் படிபடியாக ஒரு குழுவின் அங்கமாக தன்னை உணர்ந்து, குழு மனபான்மைக்கு தள்ளபடுகிறான்.

காந்தியால் கூட காப்பாற்ற முடியாத அவனை, ஒரு பதினாறு வயது பெண் காப்பற்றுகிறாள். இந்திய மிலிட்டரி ஹைதராபாத்தில் நுழைந்தபின் இந்துக்கள் குழு, முஸ்லிம்களை தாக்குகிறது. இப்போதும், பாதிக்கபடுவது பணம் படைத்தவர்கள் அல்ல. அவர்கள் எப்போதும் பாதுகாப்பாக இருக்கிறார்கள். இந்துக்கள் ஆனாலும், முஸ்லிம்கள் ஆனாலும், தாக்கபடுவது என்னவோ ஏழைகள் தான். அந்த கலவரத்தில் சிக்கி கொள்கிற சந்துரு, ஏழை இஸ்லாமியர்கள் தங்கி இருக்கும் குடிசை பகுதிக்குள் நுழைந்து விடுகிறான். அங்கு இருக்கும் ஒரு குடிசைக்குள் நுழைந்து விட, அங்கு ஒண்டிக்கொண்டிருக்கும் ஒரு குடும்பத்தை காப்பற்ற, பதினாறு வயதிருக்கும் ஒரு சிறுமி சந்துருவின் முன் வந்து நிற்கிறாள். என்னை எடுத்துக் கொள், என் குடும்பத்தை விட்டுவிடு என்று சொல்லிக்கொண்டே தனது சல்வாரை கழட்டிவிட்டு நிர்வாணமாக நிற்கிறாள்.  சந்துரு அதிர்ந்து போகிறான். அவனுடைய அற உணர்வு தீண்டபடுகிறது.  ஐயோ என்று அலறிக் கொண்டே அங்கிருந்து ஓடுகிறான். திரும்பவும் சந்துரு தனது சுயத்தை கண்டுகொண்டதோடு கதை முடிகிறது.
 

Monday, August 27, 2012

அறமெனப் படுவது யாதெனக் கேட்பின்..
காலை, பதினோரு மணிக்கே, வெயில் நன்கு ஏறியிருந்தது. ஒரு காலத்தில்,அந்த தெருவிற்கே பெருமை சேர்க்கும் வகையில் விளங்கிய பெரிய வீடு அது. எழுபது அடிக்கு குறையாத அகலமும், நூறு அடி நீளமும் கொண்ட, முழுக்க முழுக்க மண் சாந்தும், சுண்ணாம்பினாலும் கட்டப்பட்ட வீடு. வாசல் முழுக்க கம்பி போட்டு அடைக்கப்பட்டு, கதவை திறந்தவுடன், விரிந்து பரந்துக் கிடக்கும் அகலமான இரு திண்ணைகள். நடுவே வீட்டிற்க்குள் நுழையும் அகண்ட பாதை. ஒரு சுவற்றின் அகலம் மட்டும் இரண்டு அடி. எளிதில் வெளி சீதோஷ்ணம் ஊடுருவ முடியாதபடி அமைக்கப்பட்ட கட்டிடம். திண்ணை அமைந்துள்ள பகுதி மட்டும் மேலே ரீப்பர் கொடுத்து ஒட்டபட்டிருந்தது. ரீப்பரின் ஒரு பகுதி வீட்டு சுவற்றிலும், மற்றொரு பகுதி பர்மா தேக்கினால் அமைந்த தூண் மீதும் சொருகபட்டு, ரீப்பரின் மேல் பகுதியில், பலகை போல் கருப்புக்கல் கொண்டு ஒட்டப்பட்ட கட்டிடம். மேல் பகுதி நிர்வாகிக்கபடாததால், மழை நீர் இறங்கி, ரீப்பரும், தூணும் சிதைந்திருந்தது. திண்ணையின், ஒரு ஒரத்தில் கட்டிடத்தை தாங்கும் தனது முயற்சியை முற்றிலுமாக கைவிட்டு, ரீப்பர்கள் தொங்கி கொண்டிருந்தது. சுவற்றின் மேல் பகுதி, சில இடங்களில் ஒழுங்காகவும், மழையால் பாதிக்கப்பட்டு, அங்காங்கே காரை பெயர்ந்தும், வாழ்ந்து கெட்ட ஒரு குடும்பத்தின், கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும் இணைக்க முயன்று தோற்றிருந்தது.

கையில் இருந்த சொம்பில் இருந்து, ஒரு வாய் தண்ணீரை குடித்துக் கொண்டார் அப்பரைசர். வங்கியில் முன்னொரு காலத்தில் அப்பைரசராக வேலை பார்த்த்தால், அந்த பெயரே நிலைத்து விட்டது அவருக்கு. டிரேட் மார்க் மஞ்சள் நிறத்தில் சட்டையும், பாலியஸ்ட்ர் வேட்டியும் அணிந்திருந்தார்.  சட்டையின் கழுத்துப் புறத்தில், காலரோடு சேர்த்து, மடித்து வைக்கப்பட்டிருந்தது உதா நிறத்தில் கட்டம் போட்ட ஒரு கைக்குட்டை. தொண்டையை ஒரு முறை செருமிக் கொண்டார். நீங்க, எதுக்கும் ஒருக்கா, முனையதிரியரை பாக்குறது நல்லதுன்னு படுது. சொல்லி முடித்தவுடன், தான் சொன்னது எந்த மாதிரியான விளைவை ஏற்படுத்தியிருக்கிறது என்று பார்க்கும் எண்ணத்தில், நவநீதம் பிள்ளையை உற்று நோக்கினார். நவநீதம் பிள்ளை, கை விரல் நகத்தை மும்முரமாக பிய்ப்பது போல் பாவனை செய்து கொண்டிருந்தார். பிள்ளை நாம் சொல்வதை அசை போடுகிறார் என்று தோன்றியதால், இந்த முறை சற்று அழுத்தமாக ஆரம்பித்தார். உங்களுக்கு தெரியாததில்லை. முனையதிரியர் முன்ன மாதிரி இல்லை. பழைய மாதிரி ஆளா இருந்தா, நானே உங்களை சொல்லிடுவேன். அந்த மரியாதை தெரியாதவன் கிட்ட எல்லாம் நீங்க போய் நிக்க வேணாம்ன்னு. முனையதிரியர் ரொம்ப பட்டுட்டார். காசு தான் எல்லாம்ன்னு என்ன ஆட்டம் போட்டாரு.. காசு மட்டுமில்லைடா..மனுசனுக்கும் அப்பாற்பட்ட, இன்னும் சிலவும், இங்கே இருக்குன்னு காமிச்சிட்டான்லே, ஆண்டவன்.. ம்ம்.. ஒரு மூச்சில் கொட்டிவிட்டு, எதையோ நினைத்து வருந்துபவர் போல் ஆழ்ந்து மூச்சை இழுத்துவிட்டார் அப்பரைசர்..

இப்போ பாவம், அளு நடமாட்டமில்லை.ரொம்ப தளர்ந்துட்டார்..நீங்க ஒருக்கா பாத்து விஷயத்தை சொல்லுங்க..எல்லாம் சரியாயிடும்..திரும்பவும் தான் சொல்ல வந்த விஷயத்தை வலியுறுத்திவிட்டு, கிளம்ப போகும் எத்தனத்துடன் எழுந்தார். பிள்ளையும் எழுந்து அப்பரைசருக்கு விடை கொடுத்துவிட்டு உள்ளே வந்தார். கதவுக்குப் பின் நின்று இது அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த பிள்ளையின் மனைவி கமலாவிற்கு, எப்படியும் பிள்ளை இதற்கு ஒத்துக்கொள்ள வேண்டுமே என்று படபடத்தது.

உள்ளே வந்து, தனது வெற்றிலை பெட்டியை தேடி எடுத்துக் கொண்டு, கூடத்தை ஒட்டிய தாழ்வாரத்தில் கிடந்த ஈசிச்சேரில் அமர்ந்தார். காலம்தான் எப்படியெல்லாம் மாறிவிடுகிறது..ஒரு காலத்தில், இந்த இரண்டு திண்ணையும், பகல் பொழுது முழுவதும் மனிதர்களால் நிரம்பியிருக்கும். வீட்டில் சமையல் வேலை செய்த தவசுப்பிள்ளைக்கு காபி கொடுத்தே மாளாது. அது எல்லாம், தனது காலத்தில் தான். அதற்கு முன், தனது அய்யா காலத்தில், திண்ணை வாசற்படிக்கு வருவதற்கே, அனைவரும் அஞ்சுவார்கள். வாசல் ஒரத்தில் காத்து நிற்கும் மனிதர்கள் பெரும்பாலும் அய்யாவிடம் பேசுவதில்லை. வாசல் கம்பி ஒரத்தில் நிற்கும் கணக்கு தான் எல்லாவற்றையும் எடுத்துக் கொடுப்பார். காளச்சேரி வீரன் கோயிலுக்கு கும்பாபிசேகம் நடந்து வருஷம் பதினைஞ்சு ஆச்சு. அதை செஞ்சுட்டா தேவலாம்ன்னு, ஊர்லே உள்ளதுங்க நினைக்குது. அதை சொல்ல வந்து இருக்கார் நாட்டமை. என்ன நாட்டமை? சரிதானே? என்பார்.. நாட்டமையிடம் இருந்து ஒரு தலையசைப்பு மட்டும். ஊர் நினைச்சா, சரியா போச்சா? கோயில் நிலத்துக்கு குத்தகை ஒழுங்கா வசூலிக்க தெரிலை. இதை சொல்ல மட்டும் வந்துடுங்க. சரி சரி.. போ பார்ப்போம்.. என்பார் அய்யா.. ஆனால், ஊர் நாட்டமை போன சிறிது நேரத்தில், அய்யா, நான்கைந்து போன் செய்தார் என்றால், அந்த கோயில் கும்பாபிசேகம் எந்த தடங்களுமில்லாது இனிதே நிகழும்.ஊரை சுற்றி உள்ள, நான்கு கிராமங்களில் அந்த குடும்பத்திற்கு பல நூறு வேலி நிலங்கள் சொந்தமாக இருந்தது. பணமும், வாக்கு தவறாத நேர்மையும், தனி மனித ஒழுக்கமும், சுப்ரமணிய பிள்ளைக்கு மிகப் பெரிய அந்தஸ்த்தை கொடுத்திருந்தது.

சுப்ரமணிய பிள்ளையின் ஒரே மகன், நவநீதம். இரு மகள்கள். சிறு வயதில், நவநீதத்திற்கு படிப்பு ஏறவில்லை. ஊர் பெரிய மனிதரின் மகன் என்பதால், ஸ்கூலிலும் கண்டிப்பார் யாருமில்லை.மைனர் சோக்குடன் ஊரை சுற்றி வந்தார் நவநீதம். காலம் ஒடிய பின், ஊரே மெச்ச திருமணமும் நடந்தது. முழுக்க விவசாயத்தை பின்புலமாக கொண்ட பிள்ளை, பிசினஸ் செய்ய இறங்கினார். ஆன மட்டும் சொல்லி பார்த்தார், பெரியவர். தான் பிடித்த பிடியில் நின்றார், நவநீதம். ஒரு தொழில் என்று இல்லை. தியேட்டர் கட்டினார். பெட்ரோல் பங்க் திறந்தார். திறப்புவிழாவிற்கு பணம் கொடுத்து, நடிகைகளை அழைத்து வந்தார். பெட்ரோல் பங்கிற்கு, சினிமா நடிகை எதற்கு? யார் கேட்பது? செலவு செய்ய ஒரு வழி. அவ்வளவு தான். எல்லா பெரிய மனிதர்களின் மகன்களையும் போல, தந்தையை மீறி புகழெடுக்க வேண்டும் என்ற ஆசை. ஆரம்பத்தில் எல்லாம் நன்றாக போவது போல் தோற்றமளித்தது. ஆனால் பிள்ளையின் அளவுக்கு மீறிய இரக்க குணமும், ஆடம்பர செலவுகளும் பிஸினசை நொடிக்க வைத்தன. விழ்ச்சி ஆரம்பித்தது. சுப்ரமணிய பிள்ளை பல இடங்களில் முட்டுக் கொடுத்து பார்த்தார். அடித்தளமே ஆட ஆரம்பித்த பின், முட்டுக்கள் எதற்கு உதவும்? திடிரென்று ஒரு நாள் சுப்ரமணிய பிள்ளையும் மாரடைப்பால் காலமாகிவிட, தனித்து விடப்பட்ட நவநீதம் பிள்ளை, தவறுகள் மீது தவறுகள் செய்ய ஆரம்பித்தார்.

கமலா ஆச்சிக்கோ, பிள்ளை பேறுக்கு தாய் வீட்டிற்கு சென்று திரும்புவதிலேயே காலம் ஓடிவிட்டது. மூன்று பெண் குழந்ததைகளும் பிறந்து வெகு நாட்கள் கழித்து சக்தி பிறந்தான். தனது கடமையை சரி வர செய்துவிட்ட திருப்தி உணர்வுடன், கமலா முன்பை விட சற்று கூடுதல் அதிகாரத்துடன், வீட்டில் வேலை பார்ப்பவர்களை அதிகாரம் செய்து வளைய வந்தாள்.  வீட்டை துடைத்து பெருக்கும் சுப்பம்மா, சமையல் வேலை செய்யும் தவசு பிள்ளை என்று அதிகார எல்லை கொண்டிருந்தவள், இப்போது எல்லாம் டிரைவர் சாமிநாதனையும் அதட்ட தொடங்கி தனது அதிகாரத்தை விரிவுபடுத்தினாள். சாமிநாதனின் தந்தை வெகு நாள் இந்த வீட்டில் கார்வாரியாக வேலை பார்த்தவர். ஒரு டிரைவர் வேண்டும் என்று பிள்ளை சொன்ன போது, தனது மகன் சாமிநாதனை கொண்டு வந்து விட்டார். சாமிநாதன் அமைந்ததில் பிள்ளைக்கு பெரும் மகிழ்ச்சி. வெகு நாசூக்காய் கார் ஓட்டுவதில் சாமிநாதன் நிபுணன். தேவையில்லாது ஹாரனை தொடமாட்டான். அவனது சுத்தமும், எல்லாவற்றையும் விட அவன் பிள்ளையிடம் காட்டும் பணிவும், பிள்ளையின் மேல் பிள்ளையின் நண்பர்களிடத்தில் ஒரு வித பொறாமையையே ஏற்படுத்தியிருந்தது.

பிள்ளை, தியேட்டரை நிர்வகிக்க முடியாமல், முதலில் குத்தகைக்கு விட்டார். பின்பு கொஞ்ச கொஞ்சமாய் பணம் கொடுத்து தியேட்டரை தனக்கு சொந்தமாக்கி கொண்டார் சிவசு செட்டியார். நிலைமை கை மீறி செல்வதை உணர்ந்த பிள்ளை, தண்ணிரில் முழ்கும் ஒருவன், கைக்கு கிடைக்கும் எதையும் பற்றிக் கொண்டு வெளிவர துடிப்பதை போல், எதாவது செய்து தன்னை சூழ்ந்திருக்கும் கடனில் இருந்து வெளிவர தவித்தார். அப்போது தான் பிள்ளையின் வெகு நாள் நண்பரும், சக்தி டிரான்ஸ்போர்ட் உரிமையாளாருமான ராஜவேலு, பிள்ளையை பார்க்க வந்தார்.

என்ன பிள்ளை.. எல்லாம் சவுகரியம்தானே..செல்லதுரை மவன் கல்யாணத்துக்கு போயிருந்தேன்.  போன மாசமும், வட்டி ரொம்ப தாமசம் ஆச்சுன்னு, அங்கன வந்து காதை கடிச்சான் சுனில் சந்த். எங்கே வந்து எதை பேசுறே..என்கிட்ட கணக்கு வச்சுக்கன்னு சொல்லி உங்கப்பன், நவநீதம் பிள்ளைகிட்ட போய் கெஞ்சுன கதை எல்லாம் மறந்து போயிடுச்சா? ஒரு மாசம் அப்படி..இப்படிதான் கொடுத்தா என்ன? குடியா முழ்கி போயிடும்..ன்னு விழுந்து புடுங்கிவுட்டேன்.. பயலுக்கு மூஞ்சி செத்து போச்சு.. எதாவது பணம் வந்தா, முதல்ல அந்த நார பய கணக்கை முடிங்க..என்றார்

பங்க் கணக்குலேயும் ஒவர் டிராப்ட்டா போயிடுச்சு. லோடு எடுக்கவே பணம் இல்லை..இந்த வாரம் வுட்டா, பங்க் டிரை ஆயிடும். பேசாம பங்க்க்கும் பார்ட்டி பாருங்க, பத்தர். என்று ஈனஸ்வரத்தில் முனகினார் பிள்ளை..

இல்லை அவசரபடாதீங்க.. என்று சொல்லிவிட்டு, சுற்றும் முற்றும் தலையை திருப்பி பார்த்தார் ராஜவேலு. பின்பு மெலிதான குரலில், ரகசியம் போல் சொன்னார்.  நான் சொன்னதை யோசிச்சிங்களா? நம்ம ஜெயராமன், ஒரு ரூபா மாத்திட்டு வந்துட்டான்.. பணத்தை பேங்க்லேயே கொண்ட போய் கட்டமுடியும்..வேலை அவ்வளவு சுத்தமாம்.. இன்னும் பந்தலடிலே செய்தி பரவல. மெல்ல சொன்னேன்..அழைச்சுட்டு போறேன்னு சொல்றான். காதும், காதும் வச்ச மாதிரி முடிச்சுடலாம். உங்களுக்கு ஒரு ரூபா இருந்தா, எல்லாத்தையும் செட்டில் செஞ்சுட முடியாது?

ஒரு ரூபா இருந்தா எல்லாத்தையும் சரி செஞ்சுடலாம்தான்.. மெல்ல ஆசை துளிர்த்தது பிள்ளைக்கு..ராஜவேலுவும் கூட வருவதாய் சொன்னார். முவரும் ஒரு நாள், சாமிநாதன் காரோட்ட, திருச்சிக்கு சென்றார்கள். ஜெனிஸ் ஒட்டலில் தங்கி இருந்தது அந்த கும்பல். இருவரை மட்டும் உள்ளே வரச் சொன்னார்கள். ஜெயராமனும், பிள்ளையும் உள்ளே சென்றார்கள். உள்ளே ஒருவன், காபி சாப்பிட்டுக் கொண்டே, கொச்சையான தெலுங்கு கலந்த தமிழில் பேசினான். பிள்ளை, பங்க் பத்திரத்தை சிவசு செட்டியாரிடம் கொடுத்து ஏற்பாடு செய்து கொண்டு வந்திருந்த ஐம்பதனாயிரம் பணத்தை லட்சுமி சில்க் ஹவுஸ் பையில் முடிந்து ஜெயராமனிடம் கொடுத்தார். ஜெயராமன், பையை அவனிடம் நீட்டினார். வீட்டு முகவரியை ஒரு தாளில் எழுதி கொடுக்க சொன்னார்கள். இரண்டு நாளில், வீட்டில் டெலிவரி செய்யப்படும் என்றான். வீட்டிற்கு அடையாளம் கேட்டான். ஜெயராமனே சொன்னார். தெருவிலேயே பெரிய வீடு. புங்கை மரம் வெளியே நிற்கும்.

வெளியே வந்தவுடன், இருப்புக் கொள்ளாமல், பிள்ளை கேட்டார்..உடனே முடிஞ்சுடும் சொன்னிங்க. இப்படி இரண்டு நாள் ஆகும்ன்னு சொல்றானே.. ஒன்னும் கவலைப்படாதீங்க பிள்ளை.. கன் பார்ட்டிங்க இவனுங்க. சொன்னா சொன்ன மாதிரி.. தவிர, இதுக்கு இப்போ ஏக டிமாண்ட்.. நாம யோசிக்க ஆரம்பிச்சா, அவனுக்கு வேற பார்ட்டி ஈசியா கிடைக்கும்.  நமக்கு அப்படியில்லையே.. பிள்ளைக்கு, அதுவும் சரிதான் என்று பட்டது.

ஊருக்கு வந்து இரண்டு நாளும் பிள்ளைக்கு இருப்பு கொள்ளவில்லை.. வீட்டில் தான் இல்லாத நேரம், அவர்கள் வந்துவிட்டால் என்னாவது, என்று வெளியிலும் செல்லவில்லை. ஏன், என்று கேட்ட கமலாவிடம் எரிந்து விழுந்தார். பிள்ளையை விட ராஜவேலு ஆர்வமாய் இருந்தார். காலை, மாலை என்று தொடர்ந்து போனில் விசாரித்தார். பிள்ளை விஷயம் சரியாக முடிந்தால், நம்மளும் கொஞ்சம் மாற்றி விட வேண்டியது என்று தீர்மானமாக இருந்தார். ராஜவேலுக்கு இப்போது எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால், பணம் சேர்க்கும் பந்தயத்தில் பின் தங்கிவிட கூடாதல்லவா?

அவர்கள், சொன்ன இரண்டு நாள் கெடு முடிந்தது. ஆனால், பணம் வந்த பாடில்லை. முன்றாம் நாள், ஜெயராமனுக்கு போன் செய்வதற்காக எப்போது விடியும் என்று காத்திருந்தார் பிள்ளை. காலை ஆறு மணிக்கு எல்லாம், ஜெயராமனே போன் செய்தார்.

பணம் வந்திடுச்சில்லே.. நான்தான் சொன்னனே..கன் பார்ட்டிங்கன்னு. என்றார் போனை எடுத்தவுடன்..

பதறிப் போனார் பிள்ளை.. என்னங்க சொல்றீங்க.. இன்னும் பணம் கொடுக்கலையே..என்றார் அவசரமாக..

என்னாது பணம் கொடுக்கலையா? நேத்து ராத்திரி ஒரு பதினொரு மணி வாக்குலே, துணி மூட்டைலே வச்சு டெலிவரி செஞ்சிட்டதா, எனக்கு போன் வந்துச்சேங்க என்றார் ஜெயராமன்.

பிள்ளை போனை வைத்துவிட்டு, கமலாவிடம் ஓடினார். ஏதாச்சும் துணி மூட்டை வந்துச்சா நேத்து ராத்திரி? அப்படி ஏதும் வரலையே? திவாளிக்கு துணி சொல்லிருந்திங்களா.

நிதானமாய் உட்காந்து யோசித்தார் பிள்ளை. நேற்று சாமிநாதன் எப்ப வீட்டுக்கு போனான் என்றார் மனைவியிடம். சாமிநாதன் வரும் வரை இருப்புக் கொள்ளவில்லை..காரை தானே ஓட்டிக் கொண்டு சாமிநாதன் குடியிருக்கும் ஒத்தை தெருவுக்கு சென்றார். சாமிநாதன் வீட்டின் வெளியே கைலி கட்டி அமர்ந்திருந்தவன், காரைப் பார்த்தவுடன் கொஞ்சம் கூட பரபரப்பில்லாமல், இதை எதிர்பார்த்திருந்தவன் போல் மெல்ல எழுந்து காரின் அருகில் வந்தான். அவனே பேசட்டும் என்று காரின் இன்ஜினை ஆப் செய்துவிட்டு, அவன் முகத்தை உற்று பார்த்தார் பிள்ளை.

என்ன அய்யா, இன்னைக்கு வெளியூர் எங்கேயும் போகனுமா? நேத்து அம்மா சொல்லலியே.

திருட்டு பயல் எப்படி நடிக்கிறான் என்று உள்ளுக்குள் நினைத்து கொந்தளித்தார் பிள்ளை.

பணம் எங்கே? என்றார் அந்த கொதிப்பு அடங்காமலே..

எந்த பணம்?.

டேய்..எல்லாம் தெரியும்..நேத்து திருச்சிலே இருந்த வந்த பணத்தை, நீதான் வாங்குனே..மரியாதையா நீயே ஒத்துட்டு பணத்தை எடுத்துட்டு வா.. இல்லைன்னா, ஸ்டேசன்லே சொல்லி வீணா அவமானபட்டுடுவே..
பிள்ளைக்கு, பதட்டத்தில் வார்த்தைகள் குழறலாக வெளிவந்தன.

இதோ பாருங்க..வேணாம்ன்னா, இன்னைக்கே நின்னுக்குறேன்..சும்மா இந்த திருட்டு பட்டம் கட்டுற வேலை எல்லாம் வேணாம். மத்தபடி, ஸ்டேசன்லே எந்த பணம்.. ஏது பணம்ன்னு? தெளிவா சொல்லி தாராளமா கம்ப்ளைண்ட் கொடுங்க. பிள்ளையின் கண்ணை பார்த்து சொன்னான்..சாமிநாதன்.

அவனுடைய கண்ணில் தெரிந்த திமிர், பிள்ளைக்கு தனது கையறு நிலையை உணர்த்தியது.. இந்த பணம் இல்லாவிட்டால் எல்லா சொத்தும் ஏலத்துக்கு வந்துவிடும். கண்ணில் நீர் முட்டியது.

சாமிநாதா, உங்கப்பா காலத்துலே இருந்து, நம்ம வீட்டுலே இருக்கே. உங்கப்பா ரொம்ப விசுவாசமான மனுசன்டா.. தயவு செஞ்சு பணத்தை கொடுத்துடு..உனக்கு என்ன வேணுமோ கேளு தாரேன். இந்த பணம் இல்லன்னா, எல்லாமே போயிடும். உன்னை கெஞ்சி கேக்குறேன்..
சொல்லி முடித்த போது, கண்களில் இருந்து நீர் கொட்டியது. வாய் ஒரு பக்கம் கோணி கொண்டது.

நான்தான் எடுக்கலைன்னு சொல்றேன்லே..அப்புறம் இங்கே வந்து அழுதா எப்படி?..எப்ப என்னை சந்தேகபட்டீங்களோ, இனிமே அங்கே வர எனக்கு புடிக்கலை. கணக்கை முடிச்சிக்குங்க.

படாரென்று சொல்லிவிட்டு திரும்பி பார்க்காமல் வீட்டுக்குள் சென்றான் சாமினாதன். ரோட்டில் அழுது கொண்டிருப்பதை உணர்ந்து அவசரமாக முகத்தை துடைத்துக் கொண்டு செய்வதறியாமல், காரை திருப்பினார் பிள்ளை.

கொஞ்ச நாளிலேயே, ஊருக்கு, பிள்ளை ஏமாந்ததது தெரிய வந்தது. ஆனால், அது பிள்ளைக்கு ஏமாளி என்ற பேரையும், சாமினாதனுக்கு கில்லாடி என்ற பட்ட்த்தையும் பெற்று தரவே உதவியது.  சாமினாதன் திருப்பூர்க்கு வேலைக்கு சென்றிருந்த தனது மச்சானை கூட அழைத்து வைத்துக் கொண்டு வட்டித் தொழிலில் இறங்கினான். வட்டி சரியாக வரவில்லை என்றால் அடாவடியாக சொத்தை கைப்பற்றினான். அதற்கு பிறகு நடந்ததெல்லாம் சரித்திரம். வெறும் பத்து ஆண்டுகளில், மிகப் பெரிய அரசாங்க காண்ட்ரக்ட்ர் ஆனார் சாமினாதன் முனையதிரியர். வட்டித் தொழில், ரூட் பஸ், ரியல் எஸ்டேட் என்று தொட்டதெல்லாம் பொன். ஒவ்வொரு தெருவிலும் ஒரு வீடாவது முனையதிரியருக்கு சொந்தமாக இருந்தது. பழைய கதை தெரிந்தவர்கள், அவ்வபோது முணுமுணுத்து வந்ததும் சுத்தமாக நின்றது. இருபது ஆண்டுகளில் அப்படி ஒரு வரலாறே இல்லை என்றானது. முனையதிரியர் ஏதோ வெறி பிடித்தது போல், சொத்துக்களை வாங்கி குவித்தார். வாழ்க்கை முழுவதும் பண்ணைக்கு வேலை செய்து, எந்த பெரிய சுகத்தையும் அனுபவிக்காது இறந்து போன தனது தந்தையின் பெயரில்  ஊர் முழுவதும் நிழற்குடைகள் அமைத்தார். முனையதிரியருக்கு இரண்டு மகன்கள். ஒரு மகள். மகள் திருமணத்தை மாநாடு போல நடத்தினார். மகன்களுக்கும் தொழிலை பிரித்து கொடுத்தார்.

ஈசிசேரில் சாய்ந்திருந்த பிள்ளை பெருமூச்சு விட்டார். எல்லாவற்றையும் இழந்தாகி விட்டது. சொத்தை இழந்த வருத்தம் கூட நாளடைவில் பழகி விட்டது. மறக்க முடியாமல், இப்போதும் நெஞ்சில் கனப்பது, தனது கடைசி பெண்ணின் திருமணத்திற்க்காக, யாரை தனது வாழ்க்கை முழுவதும் வெறுத்தாரோ, அந்த சாமினாதனிடமே கடன் கேட்க போய் நின்றதுதான். வீட்டு பத்திரம் இல்லாது பணம் தருவதில்லை என்று அப்பைரசரிடம் சொல்லி திருப்பி அனுப்பினான் சாமினாதன். வீட்டு பத்திரம் தந்தையின் பேரில் இருந்ததால், வேறு எங்கும் கடன் கிடைப்பது கஷ்டம் என்று சொல்லி பிள்ளையை சமாதானம் செய்து, அப்பைரசர்தான் முனையதிரியரிடம் சென்று பத்திரத்தை குடுத்து பணம் வாங்கி வந்தார். பணம் வாங்கிய கையோடு, பூசையறையில் தனது தந்தை காலத்தில் இருந்து, வழிபட்டு வந்த எல்லா சாமி படங்களையும், தூக்கி கொண்டு போய் கொல்லை கிணற்றில் போட்டார் பிள்ளை. தடுக்க வந்த ஆச்சியை வெறி பிடித்தாற்ப் போல் தள்ளினார்.

ஈசிச்சேரில் இருந்து தலையை தூக்கி, தண்ணீர் குவளையை தேடினார் பிள்ளை. குவளையை எடுத்து ஒரு மிடறு விழுங்கி விட்டு, துண்டால் வாயை துடைத்துக் கொண்டார்..முனையதிரியரிடம் வீட்டை வைத்து வாங்கிய கடனுக்கு, வட்டி கூட கட்டமுடியவில்லை. அப்புறம், எங்கே முதலை அடைப்பதற்க்கு. வழக்கம் போல், முதலும், வட்டியும், வீட்டை முழுங்கும் நிலைக்கு வரும் வரை விட்டு வைத்த முனையதிரியர், அப்பைரசிடம் சொல்லி அனுப்பினார். பழைய மரியாதையின் காரணமாக, இவ்வளவு நாள் விட்டு வைத்த்தாகவும், இதற்கு மேல் பொறுக்க முடியாது என்றும். ஒரு வருடம் டைம் கொடுப்பதாகவும் அதற்க்குள் வீட்டை ஒப்படைத்து விட வேண்டும் என்றும் முனையதிரியர் சொன்னதாகவும், அப்பைரசர் சொன்ன போது, நெஞ்சு வெடித்து இறந்து விடமாட்டோமா, என்று இருந்தது பிள்ளைக்கு. பிள்ளையின், ஒரே மகன் தட்டி தடுமாறி படித்து, ஏதோ ஒரு வேலைக்கு சென்னைக்கு சென்று விட்டான். அவனுக்கு என்று தான் எதுவும் விட்டு செல்ல போவதில்லை. இந்த ஒரே வீடும் இன்னும் கொஞ்ச நாளில் இல்லை என்று உணர்ந்த போது, அப்படி தோன்றியதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. 

ஈசிச்சேரில் திரும்பவும் தலை சாய்த்துக் கொண்டு உத்திரத்தை பார்த்தார். உத்திரமும், தூணும் இணையும் இடத்தில் மண்கூடு கட்டியிருந்தது குளவி. மூன்றாவது பெண் திரும்பவும் உண்டாகி இருப்பாளோ..மெல்லிய சந்தோஷம் மனதில் தோன்றியது. ஏற்கனவே இரண்டு பேரன்களை தந்து இருந்தாள், அவருடைய மூன்றாவது பெண் சங்கரி. இப்போதாவது பெண் குழந்தை பிறந்தால் நல்லது..

திரும்பவும் நினைகளில் ஆழ்ந்தார் பிள்ளை. ம்ம்.. கடைசிலே, தெய்வம் நின்னு கொல்லும்ங்குறது உண்மைன்னு ஆயிடுச்சுல்லை..எல்லாம் இப்படியே போய்டும்ன்னு, என்னா ஆட்டம் போட்டான் அவன்?.. ஒரு வருஷம் முன்னாடி வரைக்கும், அப்படிதானே எல்லாம் இருந்துச்சு.. திடீர்ன்னு, அமெரிக்காவிலே கட்டிக் கொடுத்த சாமினாதனோட மகள், கணவனை இழந்து திரும்பி வந்தாள். நண்பர்களோடு காரில் சென்ற போது,  கார் ஆக்சிடெண்ட் ஆகி சாப்ட்வேர் மாப்பிள்ளை உயிர் இழந்தான். பார்பேக்யூ போடுவதற்காக வாங்கி வைத்த கெரசின், டிரங்கில் இருக்க, பின்னாடி வந்த கார் கட்டுபாடு இழந்து மோதிய வேகத்தில், தீ பிடித்து, காரில் பயணம் செய்த ஐந்து பேரும் உயிர் இழந்ததாக தொலைகாட்சி செய்தி சொன்னது. பிள்ளைக்கே இந்த செய்தியை கேட்டு, தனது மகள்களின் ஞாபகம் வந்து ஒரு கணம் மனம் துடித்தது.

இது நடந்து சரியாக ஆறு மாதத்தில், சென்னைக்கு மருத்துவத்திற்காக, சாமினாதனின் மனைவியும், முதல் மகனும் சென்று, காரில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்த போது, அனைக்கரை பாலத்திற்க்கு முன் கட்டுபாடு இழந்த மண்லாரியில் மோதி, இருவருமே சம்பவ இடத்திலேயே பலியானார்கள். செய்தி கேட்ட அதிர்ச்சியில், வாதம் தாக்கி படுக்கையில் விழுந்தார் முனையதிரியர்.

எந்த விழாவிற்க்கும், முதல் மரியாதை குடுத்து முனையதிரியரை வரவேற்ற அதே ஊர், முனையதிரியர் வாங்கிய அநியாய வட்டிதான், இவ்வளவிற்க்கும் காரணம் என்று பேசியது. பழைய கதைகள் தோண்டி எடுக்கப்பட்டு பொது சபையில் விவாதிக்கப்பட்டது. இப்போது பேசப்பட்ட கதைகளில், பிள்ளை ஏமாறவில்லை..வஞ்சகமாக முனையதிரியரால் ஏமாற்றப்பட்டார்.

கமலா கொண்டு வந்து குடுத்த டீயை, ஈசிசேரில் இருந்து எழுந்து உட்கார்ந்தபடி குடித்தார், பிள்ளை. கமலாவிற்க்கு, பிள்ளையின் யோசனையை பார்த்து, கொஞ்சம் சந்தேகம் வந்தது. திரும்பவும் ஏதோ பேசி, இந்த மனுசன், சாமினாதனை பார்க்காம விட்டுட்டா, இந்த வீடும் இல்லைன்னு ஆயிடும். இருக்கோ, இல்லையோ, ஏதோ ஒரு பெருமைலே வாழ்க்கை ஓடுது. இந்த வீடும் இல்லைன்னா, எங்கே போய் நிக்குறது? கொஞ்சம் தைரியத்தை வரவழைத்து கொண்டவளாக, சாயங்காலமா, ஒரு எட்டு அவரை பாத்து கேட்டுங்களேன்.. இன்னும் கொஞ்சம் டைம் கொடுத்து, கொஞ்சம் வட்டியை மட்டும் தள்ளிக்கிட்டாருன்னா, சக்தி எப்படியும் தோது பண்ணிடுவான்..

ம்ம். ம்.. என்றபடி தலையை சாய்த்துக் கொண்டார் பிள்ளை. சக்தி, தன்னை போல் இல்லை. அவனிடம் ஒரு வெறி இருந்தது. தானாகவே ஒழுங்காக படித்தான். சென்னை சென்றான்..ஊரில் உள்ள மற்ற பிள்ளைகளை போல் ஒரு சினிமா, டிராமா எதுவும் இல்லை. பொழுது முழுக்க படிப்பு, இல்லை என்றால் அவன் அம்மாவிடம் பேசிக்கொண்டிருப்பான். அவன் தலை நிமிர்ந்த பின்னர்தான், இப்போது கொஞ்சம் நிம்மதியாக மூச்சு விடமுடிகிறது. ஆனால் அவனுக்கு இந்த வீட்டை கூட குடுக்க முடியாதோ, என்று முனையதிரியர் கெடு கொடுத்த நாளில் இருந்து, தூக்கம் போனது பிள்ளைக்கு.

முனையதிரியர், வீட்டுக்கு கொடுத்த கெடு முடிந்தே ஆறு மாதங்களாகி விட்டது. பழைய நிலைமையில் இருந்திருந்தால், இந்நேரம், சாமினாதன், வீட்டை காலி செய்து, இடிக்க ஆள் அனுப்பியிருப்பான். இப்போது, சாமினாதன் உள்ள நிலைமையில், இந்த வீடு பற்றி எல்லாம் சிந்தித்திருக்க நியாயமில்லை.

எத்தனை தலைமுறையை, அதிகாரத்தை பார்த்த வீடு இது.. ஏதோ, என் பொல்லாத நேரம், இப்படி குடும்ப பெருமையை அடகு வைச்சு குடும்பத்தை நடத்த வேண்டியதா போச்சு..ம்ம்..எல்லாம் நல்லதுக்கே. காலங்காலமாக தர்மம் செய்த என் முன்னோர்களின் செயல், அப்படியெல்லாம் பயனற்று போய்விடுமா? அப்புறம் உலகில், நீதி, நியாயத்திற்க்கு என்னதான் அர்த்தம்? . இறைவன் நிருபித்து விட்டார் அல்லவா? இந்த உணர்வு சாமினாதனுக்கும் வந்திருக்கும். பணமில்லையே தவிர, எனக்கு என்ன குறை. அவன் முகத்தை இப்போது நேருக்கு நேர் பார்க்க வேண்டும், என்று தோன்றியது பிள்ளைக்கு.

இந்த எண்ணம் வந்ததாலோ என்னவோ, சாயங்காலம், சற்று சீக்கிரமாகவே கிளம்பி விட்டார் பிள்ளை. சாமினாதனின் வீடு அரண்மனை போல் இருந்தது. நாயின் சத்தம் எதிரொலித்து, ஒரு கூடுதல் கம்பீரத்தை கொடுத்தது அந்த வீட்டிற்க்கு. இதே தெருவில் நின்று, எடுத்த பணத்தை திருப்பித் தரச் சொல்லி எப்படி கெஞ்சினோம். ஒரு குரூர திருப்தி நிலவியது பிள்ளையின் மனதில்.  வீட்டின் வெளியே, சாமினாதனின் இரண்டாவது மகன் நின்றான். வாங்க அய்யா என்று உள்ளே அழைத்துப் போனான். அவனிடம் தெரிந்த பணிவு, ஆச்சர்யம் அளித்தது. எல்லாதுக்கும் ஒரு கணக்கு வச்சுதானே இருக்கான், படைச்சவன்..
வீட்டின் உள்ளறையில் ஏசி உறுமிக் கொண்டிருக்க, படுக்கையில் முடங்கி இருந்தார் சாமினாதன். அப்பா, அய்யா வந்திருக்காங்க என்று எழுப்பினான் சாமினாதனின் மகன். சாமினாதனை பார்க்கவே பரிதாபமாக இருந்த்து பிள்ளைக்கு. மனுசன், இப்படி ஓகோன்னு கொடிக்கட்டி பறந்திருக்கவும் வேண்டாம், இப்படி சீரழியவும் வேண்டாம். மெதுவாக படுக்கையை உயர்த்த, சாமினாதன் சாய்ந்த வண்ணம் உட்கார்ந்தார்.

சங்கடமான மவுனம் உறுத்தவே, பிள்ளை பேச்சை ஆரம்பித்தார். hநடந்தது, நடந்து போச்சு சாமினாதா..ஒன்னும் மனசை விட்டுடாதே.. ஆமோதிக்கும் வண்ணம் சிறிய தலையசைவு மட்டும் முனையதிரியரிடமிருந்து.
மீண்டும் மவுனம் படர, பிள்ளை குரலை கனைத்துக் கொண்டார். இப்போ என் பையன் சக்தி மெட்ராஸ்லே வேலைலே, இருக்கான். உன்கிட்டே வாங்குன பணத்தை உடனடியா திருப்ப முடியாது போய்டுச்சி. கொஞ்சம் நாள் குடு. எப்படியும் உன் பணத்தை சக்தி அடைச்சுடுவான். உனக்கு தெரியாததில்லே..நம்ம வீடு ஒன்னுதான் இப்போ என்கிட்டே இருக்கு. பிள்ளை சொல்லி முடிக்கும் வரை, கண் கொட்டாது பார்த்துக் கொண்டிருந்த முனையதிரியர் தலையை மட்டும் அசைத்த மாதிரி இருந்தது. இரும ஆரம்பித்தார். இருமல் என்றால், தொடர்ந்து சங்கிலி தொடர் போல் இருமல். பிள்ளைக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. சாமினாதனின் மகன், ஓடி வந்தான். தண்ணீர் எடுத்து குடுத்து, நெஞ்சை தடவினான். இருமல் சற்று கட்டுப்பட்டது. முனையதிரியர் திரும்பவும் தலையை சாய்த்து படுத்துக் கொண்டார், அப்ப நான் வாரேன் சாமினாதா..ரொம்ப நன்றி என்று சொல்லியபடி   பிள்ளை எழுந்துக் கொண்டார்.

அய்யா, காலை நேரத்துலே வந்திங்கன்னா, அப்பா நல்ல பேசுவார்.. சாயங்கால நேரத்துலே இருமல் வந்துடுது என்றான் சாமினாதனின் மகன்.
பரவாயில்லைப்பா, சொல்ல வேண்டியது எல்லாம் சொல்லிட்டேன். அப்புறம் இன்னொரு நாள் வாரேன். என்றார் பிள்ளை.

வீட்டுக்கு வந்தவுடன் கமலா கேட்டாள், என்ன சொன்னான் சாமினாதன்?
என்ன சொல்லுவான்.. ஆளை பார்க்கவே பாவமா இருக்கு.. அவனுக்கு, இப்ப இந்த வீட்டை பத்திதான் நெனைப்பா? ஆளு உயிரோடு இருக்கறதே அந்தரத்துலே இருக்கு. அடங்கிப் போய் கிடக்கான்.. என்று சொல்லியபடி சட்டையை கழட்டினார் பிள்ளை.

மறுநாள் காலை, பிள்ளை, வீட்டின் வெளியே வந்து பார்த்த போது, தூரத்தில் பொக்லைன் வண்டியுடன், முனையதிரியரின் ஆட்கள் வந்துக் கொண்டிருப்பது தெரிந்தது. 

Thursday, August 23, 2012

எனக்கு பிளாடி மாரி தான் புடிக்கும் !ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரம், இந்தியாவிற்கு ஒரு ஷார்ட் டிரிப் செல்ல நேரிட்டது. சென்னையில் உள்ள ஒரு நண்பருடன், ராஜ அண்ணாமலைபுரத்தில் உள்ள ரெயின் ட்ரி ஹோட்டல் மாடியில் இயங்கும் பார்க்கு, ஞாயிறு மதியம் சென்றேன். முன்பு கிழே, முதல் தளத்தில் பெரிய இடத்தில் இயங்கி கொண்டிருந்த பாரை, மொட்டை மாடியின் இடுக்கு  பிடித்தாற் போல் உள்ள இடத்திற்க்கு நகர்த்தியது ஏன் என்று தெரியவில்லை. எங்களுக்கு அருகில், இரண்டு ஜோடி அமர்ந்திருந்தது. இரு பையன்களுக்கும் வயது 25 ல் இருந்து 28 க்குள் இருக்கும்.  கழுத்தில் சங்கிலிகள், ஐ போன், காஸ்ட்லி ஸு என்று ஒரு ரேஞ்சில் இருந்தனர் இருவரும். நேர்மாறாக, கூட இருந்த இரு பெண்களின் உடைகளும், பாவனைகளும் வெகு சாதாரணமாக இருந்தன. இருவருமே ஜீன்ஸ் அணிந்து, டாப்ஸ் போட்டிருந்தனர் என்ற போதிலும், அவை கிடைப்பதிலேயே மலிவானதாக தெரிந்தது. இவர்களுக்கும், இந்த பசங்களுக்கும் எந்த வித்த்திலும் ஒத்து போகவில்லையே என்பது, உறுத்த, நான் அவர்களின் சம்பாஷனையை கவனிக்க தொடங்கினேன்.

அந்த இரண்டி இளைஞர்களில், சேட்டு பையன் போல் தோற்றமளித்தவன் அவனருகில் இருந்த பெண்ணிடம், இன்னும் குடிக்கலையா? சீக்கிரம் முடிங்க. அப்பதானே, இன்னொன்னு ஆர்ட்ர் செய்ய முடியும்.. என்றான்.

அந்த பிங்க கலர் டாப்ஸ் அணிந்த பெண், என்னாது, இன்னொன்னா? சான்ஸே இல்லை என்றாள்.

நீங்கதானே பிளாடி மாரி கேட்டீங்க? அப்புறம் என்னா?

எனக்கு பிளாடி மாரி தான் புடிக்கும். ஆனா, இன்னொன்னு எல்லாம் முடியாது. ஆள விடுங்க..

சரி அப்ப, இந்த பீரை குடிச்சு பாருங்க..

அவள் வெட்கப்பட்டுக் கொண்டே வாங்கி ஒரு சிப் குடித்து விட்டு வைத்தாள்.
எப்படி இருக்கு என்று கேட்டபடி வெகு இயல்பாக, அவளுடைய இடுப்பில் கை வைத்து இறுக்கி கொண்டான் அந்த பையன். அவனுக்கு எதிரில் இருந்த பையனை பார்த்து, அவனுக்கு மட்டும் தெரியும்படி கண்ணடித்தான். ஜாடையை புரிந்துக் கொண்ட எதிரில் இருந்த பையன், அவன் அருகில் இருந்த பெண்ணிடம், வாங்க, அவங்க பேசிட்டு இருக்கட்டும்..நாமா வெளியே நின்னு வியூ பார்க்கலாம் என்று அழைத்துப் போனான். போகும் போதே, அந்த கறுப்பு கலர் டாப்ஸ் பெண்ணின் தோளில் கை போட்டு இறுக்கி கொண்டான்.

இப்போது பிங்க் கலர் டாப்ஸ் பெண் மற்றும் சேட் பையன் இருவரும் மிகவும் நெருங்கி அமர்ந்திருந்தனர். அவன் கேட்டான்..

நீங்க எந்த ஊர்?

திருச்சி..

அவங்களும் திருச்சியா?

இல்லை அவ புதுக்கோட்டை.

ஓ..அது எங்கே இருக்கு?

ம்ம்...பழைய கோட்டைக்கு பக்கத்துலே..

ஓ..ஒகே..

இங்கே என்ன வேலை பாக்குறீங்க?

ம்ம்..ஐ.டி லேதான்..நீங்க?

நாங்க ரெண்டு பேருமே பிசினஸ்..

ம்ம்...

இதை முடிச்சுட்டு, ஜாலியா காருலே ஒரு ரைட் போகலாமா?

அய்யோயோ.. நைட்டுக்குள்ளே ஹாஸ்டல் போகணுமே..

நைட் தானே.. டோண்ட் ஒர்ரி.. அதுக்குள்ளே வந்துடுலாம்..இப்ப இன்னும் ஒரு பிளாடி மாரி சொல்லவா?

இதற்க்குள், வெளியே சென்றவன், அந்த கறுப்பு டாப்ஸ் பெண்ணை, மொட்டைமாடியில் இருந்த நீச்சல் குளத்திற்க்குள் தள்ள போவதாய், விளையாடிக் கொண்டிருந்தான். போலியாய் பயந்து அவள் அவனை கட்டிக் கொண்டாள்..

பின்பு சிறிது நேரம் கழித்து இருவரும் உள்ளே வந்த பின், இளைஞர்கள் இருவரும், டாய்லெட்க்கு சென்றனர்..பெண்கள் இருவரும் பேசிக் கொண்டனர்.

என்னாடி, இவன்ங்க ரைட்க்கு கூப்பிடுறாங்க? என்ன செய்யலாம்?

நமக்குதான் ஹாஸ்டல் போக சாயங்காலம் வரைக்கும் டைம் இருக்கே.. போவோமா?..என்ன சொல்றே?

நீயே சொல்லிட்டே..ரைட் விடு போகலாம்.

இதற்க்குள் இளைஞர்கள் இருவரும் பில் செட்டில் செய்துவிட்டு வர, நான்கு பேரும் சிரித்தபடி சிறிது தள்ளாட்டத்துடன் வெளியே சென்றனர்.

இது நிகழ்ந்த இரண்டு மணி நேரமும், நாங்கள் இரண்டு பேர் அருகில் அமர்ந்திருப்பதோ, நான் அவர்களுடைய பேச்சை கவனிப்பதோ எந்த விதத்திலும், அவர்களை தொந்தரவு செய்யவில்லை.. எனக்கு இருவரும் நல்லபடியாக ஹாஸ்டல் திரும்ப வேண்டுமே என்று இருந்தது.

Tuesday, August 7, 2012

யார் காரணம்?


கிழக்கு தஞ்சையில் ஒரு கிராமம். ஊரில் பெரும்பான்மை சமுகமாக ஒரு இனமும், அதற்கு அடுத்ததாய், தலித்களும் வாழும் இடம். காலகாலமாக பண்ணைக்கு உழைத்து கொட்டியதை தவிர வேறு எந்த பலனையும் அடையாத அந்த ஏழை தலித் குடும்பத்தில், உத்ராபதி மட்டும் அடங்க மறுத்தான். பண்ணைக்கு கூலி வேலைக்கு செல்ல விரும்பாமல், திருப்பூர்க்கு சென்று உழைத்து, ஊருக்கு திரும்பி, ஆறு மா நிலத்தை, குத்தகைக்கு பிடித்து சொந்தமாக விவசாயம் செய்தான். அவனை பார்த்து இன்னும் சில பேரும் திருப்பூருக்கு பஸ் ஏறினர். காலங்காலமாக அவனது முன்னோர் கண்ட கனவின், விளைவாய் திகழ்ந்தான்.

ஒரு நாள் உத்ராபதியின் தந்தை இறந்து விட சவ ஊர்வலம் செல்ல ஏதுவாய், அந்த ஊரின் பெரிய புள்ளியின் தோட்டத்தில் இருந்து வெளியே நீட்டியிருந்த மரக்கிளை, துக்கதிற்கு வந்திருந்த ஒரு இளவட்டங்களால் ஒடிக்கப் பட்டது. மறு நாள் பஞ்சாயத்து கூடி, மரக்கிளைக்கு அபராதமாய், ஐம்பாதயிரம் ருபாய் கட்ட சொல்லி ஆனையிட்டது. பணத்தை கட்டமுடியாமல், நிலத்தை திருப்பி தந்து, கடன்பட்டு, செங்கல் சூளைக்கு உத்ராபதியின் குடும்பமே வேலைக்கு சென்றது.

இப்படியாக ஒரு யுகத்தின் கனவு முறியடிக்கப் பட்டது.
கைபர் கணவாய் வழியே வந்த ஆரிய படை தான் இந்த சாதி கொடுமைக்கு காரணம் என்று திராவிட வேங்கைகள் உறுமுகின்றன.
எல்லா கொடுமைக்கும் காரணம், வர்க்க பிரிவினை தான் என்று சிவப்பு தோழர்கள் முழங்குகின்றனர்.

இதை படிக்கும் உங்களுக்கு வேறு காரணம் தோன்றலாம். உத்ராபதியை யார் கேட்க போகிறார்கள்?