Friday, March 17, 2017

தானிவத்தாரி

இருவரும் மெளனமாக அந்த சிமெண்ட் பெஞ்சில் காத்திருந்தோம். வெகுநேரமாக எதுவும் பேசிகொள்ளவில்லை. இனி காத்திருப்பதில் அர்த்தமில்லை என்று தோன்றியது. கஷுமியின் முகத்தைப் பார்த்தேன். சலிப்பின் சுவடேயில்லை. எந்த நேரமும் அது நிகழும் என்பதுபோல் அமர்ந்திருந்தாள். ஐபோனில் பதிவு செய்வதற்காக விரல்கள் தயார்நிலையில் இருந்தது. நான் சலித்துபோய், நாம் நடக்கலாம் என்று சொல்லவாயெடுத்த அந்த நொடியில் எங்கிருந்தோ பறந்து வந்து எங்களுக்கு எதிரே இருந்த மரத்தில் அமர்ந்தது, அந்த உகியிசு குருவி. மேல்பகுதி முழுவதும் ஆலிவ் ப்ரவுன் நிறத்திலும், பஞ்சுபோன்ற உடலின் அடிப்பகுதி வெளுத்தும் இருந்தது. உட்கார்ந்தவுடன், தலையைச் சிலிர்த்து, உடலில் கொத்திகொண்டது. பிறகு சிறிய வாயை மெலிதாக திறந்து பாடுவதற்க்கு முன் குரலை சரிசெய்துக்கொள்ளும் தேர்ந்த பாடகனை போல் செருமி, க்யூ..க்யூ..க்யூகுயிக்யூ என்றது. ஒரு நீண்ட விசில் போல, ரயில் வண்டியின் கூவல் போல எழுந்து, பிறகு ஏற்றஇறக்கங்களுடன் இனிமையான இசையாக மாறி காற்றில் பரவி ஓய்ந்தது. போதுமான அளவு இடைவெளி கொடுத்த பின், மீண்டும் பாடியது.
கஷுமியின் முகம் பரவசமடைந்திருந்தது. எனக்கு அந்தக் கதிர்குருவியை காண்பித்துவிட்ட மகிழ்ச்சி அவள் முகத்தில் தெரிந்தது. தொடர்ந்த அதே ஒலியை ஏற்ற இறக்கத்துடன் எழுப்பியது அந்த ஜப்பானிய கதிர்குருவி. ஐந்துநிமிடங்களுக்கு மேல் பதிவுசெய்தபின், சிவப்பு வட்டத்தை அழுத்தி பதிவை நிறுத்தினாள் கஷுமி. இருவரும் புன்முறுவல் செய்துகொண்டோம். இப்போது அந்த உகியிசு குருவியின் குரலுக்கு எதிர்குரல் மற்றொரு மரத்திலிருந்து மெலிதான சிணுங்கல் போல் கேட்கதொடங்கியது. “வந்துவிட்டாள், உனது இன்றைய தோழி” என்று சொல்லி சிரித்தாள் கஷுமி. இணையைக் கண்டெடுத்த மகிழ்ச்சியில் இன்னும் சத்தமாகப் பாடியது ஆண் உகியிசு குருவி. இருவரும் மெல்ல எழுந்து நடக்கதொடங்கினோம்.
உவேனோவையும், உகியிசுதானியையும் இணைக்கும் மரங்களடர்ந்த அந்த நீண்ட பாதையின் இரு புறமுமிருந்த மேபல் மரங்களின் இலைகள் நிறம் மாறத் தொடங்கியிருந்தன. நன்கு குளிரதொடங்கிவிட்ட நவம்பர் மாதமென்பதால், ஞாயிறு பிற்பகலிலும், பூங்காவில் ஆட்கள் இல்லை. தோக்கியோவிலிருந்து பத்துநிமிட ரயில்பயணத்தில் இருந்தபோதும், பெரிய கட்டிடங்களோ, மிகப்பெரிய அங்காடிகளோ உகியிசுதானியில் இல்லை. பெரும்பாலும் அனைத்துவீடுகளுமே தனிவீடுகளாக பழமையில் ஆழ்ந்திருந்தன. மரங்களைக் கொண்டுகட்டப்பட்டு மேலே அழகாக ஓடு வேயப்பட்டிருந்தது. அருகிலேயே உவேனோ ரயில் நிலையமிருப்பதால், உகியிசுதானி ரயில்நிலையத்தில் விரைவுவண்டிகள் நிற்பதில்லை.
குளிர்பானம் தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனத்தின் உற்பத்தியை திட்டமிடும் நிரலை நிறுவுவதற்க்காக, மூன்று ஆண்டுகளுக்குமுன் தோக்கியோ வந்திறங்கியபோது, முதலில் தோழியானவள் கஷுமி. உகியிசுதானியில் நான் குடியிருந்த வீட்டுக்கு எதிரில்தான் கஷுமி நடத்தும் ஜப்பானிய உணவகம் இருந்தது. மொழி தெரியாமல், கஷுமி கொண்டுவந்து கொடுத்த உணவுஅட்டையைத் திரும்பத் திரும்ப புரட்டிக்கொண்டிருப்பதைப் பார்த்து, அவளாகவே தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் உணவு குறித்துக் கூறினாள். ஜப்பானிய பெண்களுக்கே உரிய மெலிந்த தேகம், சராசரியை விட உயரம், நீள்வடிவ முகத்தில் கூந்தலை
வலதுபுறம் ஒதுக்கியிருந்தது பொறுத்தமாக இருந்தது. மெல்லிய உதடுகள், ஒவ்வொரு வாக்கியத்தின் முடிவிலும் அழகாகப் புன்னகைத்தாள். எப்போதும் போல பத்துவயது குறைவாகவே மதிப்பிட்டேன். பிறகு வெகுநாட்கள் கழித்தே கஷுமி முப்பதுகளின் இறுதியில் இருக்கிறாள் என்று தெரிந்தது. கஷூமியின் அந்த உணவகத்தில் இரண்டே பேர்தான் இருந்தார்கள். எப்போதும் வெள்ளை ஏப்ரான் அணிந்த, பருமனான கஷூமியின் அம்மா உணவு தயாரிப்பார். கஷுமி பரிமாறுவாள்.
தோக்கியோ முழுதும் இந்தவகைச் சிறிய உணவகங்கள் நிறைய இருந்தன. ஏறக்குறைய வேலைநாட்களில் முழு ஜப்பானுமே மதிய உணவு வெளியில்தான் சாப்பிடுகிறதா என்று நினைக்கும்படி, மனிதர்கள் கூட்டம்கூட்டமாக உணவருந்த வருவார்கள். இந்தியா குறித்தும், இந்தியர்கள் குறித்தும் கேட்பதற்கு நிறைய இருந்தது கஷுமிக்கு. மூதாட்டியோ, அடுப்பை விட்டு வெளியே வருவதில்லை. புகைப்பதற்கு வெளியே வரும்போது, நேரேதிரே சந்திக்க நேரிட்டால் வெட்கத்துடன் ஒரு புன்னகை. மொத்தமாக இந்த மூன்று வருடங்களில் அவருடன் ஒரு பத்து வாக்கியம் பேசியிருந்தால் பெரிது.
“இப்போது உகியுசு பாடிய பாடலின் வகை தானிவத்தாரி. பொதுவாக ஆண் உகியிசு பாடும் இசை இந்த வகைதான். இது இன்றைக்கான இணையை ஈர்க்கதான். நாளை வேறொரு பாடல், மற்றொமொரு இணை”, சிரித்தாள் கஷுமி.
“ஆனால், தானிவத்தாரி” என்றால்?.
“ஆம், தானிவத்தாரி என்றால், அடர்ந்த பள்ளதாக்கை கடந்து மற்றொரு பள்ளதாக்குக்கு செல்லும் பாடல் என்று பொருள்”, என்றாள். இருண்டுகிடக்கும் பள்ளதாக்கை கடக்க நேர்கையில், துணையாக வரும் பாடல் என்றும் பொருள் கொள்ளலாம்”, புன்னகைத்தாள்.
“இந்த மொழியை எப்போது முழுவதுமாகக் கற்கபோகிறேன் என்று நினைத்தால் மலைப்பாக இருக்கிறது, கஷுமி”
சற்றுப்பெருமையுடன் சிரித்தாள், கஷுமி. “கற்றுக்கொள்ளும்போது பெறும் இத்தகைய ஆச்சர்யங்களை நீ இழக்கவிரும்புகிறாயா? வாழ்நாள் முழுவதும் எதையேனும் கற்றுக்கொண்டேயிரு, ப்ரகாஷ்”
வார்த்தைகளில் காஞ்சியின் சேர்க்கை எனக்கு வியப்பளித்தபடியே இருக்கிறது. உதாரணமாக உவாகி. இரண்டே காஞ்சிதான்..இரண்டு காஞ்சி எழுத்துக்கான அர்த்தம் “அலைகின்ற இதயம்” , இல்லையா?
அருகில் நடந்துக்கொண்டிருந்தவள், சட்டென்று நின்று என்னைக் கூர்ந்துப்பார்த்தாள். “உவாகி என்றால் அர்த்தம் தெரியுமா?”
தெரியும். திருமணத்துக்கு வெளியேயான உறவு. அதற்கு “அலைபாயும் இதயம்” என்று பொருள்வரும்படி எழுத்துக்களைச் சேர்த்தவன் கவிஞனாகதான் இருக்கவேண்டும்.
மெளனமாக நடந்தாள், கஷுமி. முகத்தில் இருந்த சிரிப்பு மறைந்திருந்தது. சற்றுப் பதட்டமாக இருந்தது. பூங்காவை தாண்டி, உகியிசுதானியின் நடைபாலத்தருகே வந்திருந்தோம். ஞாயிறு பிற்பகல் நடையின் இறுதி நிகழ்வாக பாலத்துக்கு அருகிலுள்ள ஈவ்னிங் டைம் கடையில் காஃபி அருந்துவது வழக்கம்.
காஃபி குடிக்கலாமா, கஷுமி? “இல்லை. இன்று ஒயின் அருந்த விரும்புகிறேன்”.எனது பதிலுக்குக் காத்திராமல் காஃபி ஷாப்பை தாண்டி, எப்போதும் இருண்டிருக்கும் இசக்காயாவில் நுழைந்து, எனக்கும் சேர்த்து சிவப்பு ஒயின் கேட்டாள். கொஞ்சம் கோபம் வந்தது. என்ன ஆயிற்று இவளுக்கு? இரு கண்ணாடிகுடுவையில் சிவப்பு ஒயினை ஊற்றிக் கொண்டு வந்தார் ஒரு முதியவர். எதுவும் பேசாமல் முதல் கோப்பையை முடித்தோம். இரண்டாவது கோப்பையின் இறுதியில், “அலைபாயும் இதயம் என்று பொருள்வரும்படி எழுத்துக்களைச் சேர்த்தவன் ஏன் மூடனாக இருக்கக் கூடாது?”, என்றாள்.
ஆனால், அந்த வார்ததைச் சேர்ப்பில் ஒளிந்துள்ள கவிதைதன்மை?
“ஓ. வெறும் முட்டாள்தனம்..கடைந்தெடுத்த முட்டாள்தனம்.” கோப்பையை முழுவதுமாக உறிஞ்சினாள். கண்களில் நீர் தளும்பியது. முகம் சிவந்திருந்தது. எதையோ நினைத்தபடி பேசாமல் இருந்தாள். மெளனத்தைக் கலைக்க விரும்பாமல் நான் ஒயினை உறிஞ்சிக்கொண்டிருந்தேன். அங்கு எங்களைத் தவிர ஒரு முதியவர் தனியாக ஷாக்கே அருந்திகொண்டிருந்தார்.
“அது நடந்து பதிமூன்று வருடங்கள் ஓடிவிட்டது. அப்போதெல்லாம் நானும் என் கணவன் ஃபுயுஜிவாராவும் தோக்கியோவை சுற்றியுள்ள அனைத்து கோவில் திருவிழாக்களிலும், யாக்கிநிக்கு (குச்சியில் சொருகி தீயில் வாட்டபடும் கறி) கடை நடத்தியிருக்கிறோம். முராயாமா கோவிலில் நடந்த திருவிழாவிலும் அப்படிதான் கடை போட்டிருந்தோம். ஃப்யுஜிவாராவின் தீயில் வாட்டிய கறிக்கு கூட்டம் எப்போதும் மொய்க்கும். அன்று எங்கள் கடையை விட, அருகிலிருந்த கடையில் கூட்டம் குவிந்திருந்தது. அந்தக் கடையில் பகடியாக பேசியபடி பீரை உடைத்து தந்துகொண்டிருந்தான் சிமுரா. அவன் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் கூடியிருந்த இளம்பெண்கள் கூட்டம் வெட்கத்துடன் சிரித்தது. அவன் பேச்சை கேட்பதற்காகவே அங்கு பீர் வாங்கி அருந்தினார்கள்.
அன்றிரவு வியாபாரம் முடிந்தபின்னர், ஃபுயுஜிவாராவும், நானும் சிமுராவுடன் மது அருந்தினோம். வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தோம். முழுக்க முழுக்க வேடிக்கையும் சிரிப்புமாய் அந்த இரவு போனது. வாழ்வில் முதன்முதலாய், அட்டவணை இல்லாத ஒரு ஜப்பானியனை அன்று சந்தித்தேன். அடுத்த நாள் அல்ல, அடுத்த நிமிடத்திற்கு கூட அவனிடம் திட்டங்கள் ஏதுமில்லை. பெண்களை, எந்த பாசங்குமின்றி, வெறும் பெண்களாகவே உணர செய்பவன் அவன். அவனுடைய கூடாரத்துக்கு செல்லும்போது “நாளை காலை ஏழு மணிக்குக் கிளம்பபோகிறேன்” என்றான் “கண்களை கர்சிப்பால் துடைத்தபடி ஆழமாக பெருமூச்சுவிட்டாள் கஷுமி. பிறகு கிழவரை பார்த்து இன்னொரு கப் ஒயின் என்றாள். வெகு நேரம் பேசாமல் குடித்தபடி இருந்தாள். அவளாகப் பேசட்டும் என்று காத்திருந்தேன்.
“அன்று காலை சிமுரா அனைத்துப்பொருட்களையும் எடுத்துவைத்த பின்னர், டிரக்கின் அருகே நின்றிருந்தான், நான் எனது துணிகளுடன் சென்று டிரக்கில் ஏறிக்கொண்டேன். திடிரென்று சன்னதம் வந்தவள் போல் முகம் மாறி “ஆம். நான் ஃபுயுஜிவாராவுக்கு துரோகம் இழைத்தேன். ஐந்து வயது குழந்தையான உச்சிதாவை விட்டு சென்றவள் நான்” என்றாள். கைகள் ஒயின்கோப்பையை இறுக்கின. சில நிமிடங்கள் கரைந்தன. அவளது இந்த மெளனம் வருத்தியது. மெல்ல தளர்ந்து பேசத்தொடங்கினாள்.
“எனது அன்னை இவ்வளவு உடல் பருத்திருக்கிறாளே, ஏன் தெரியுமா? எனக்கு பத்து வயதிருக்கும்போது, திடீரென்று ஒருநாள் என் தந்தை எங்களை விட்டுசென்றார். மதுபானவிடுதிகளில் வேலைசெய்து என்னை காப்பாற்றினாள் என் அம்மா. வரும் வாடிக்கையாளர்களுடன் சேர்ந்து குடிக்கவேண்டும். அவள் குடிக்கும் ஒவ்வொரு கோப்பை ஒயினுக்கும் மூவாயிரம் யென் வாடிக்கையாளர் கொடுப்பார். அதிலிருந்து ஐநூறு யென் எனது அம்மாவுக்கு கிடைக்கும். எத்தனையோ பகல்கள் வாந்தி எடுத்துக்கொண்டே கிடப்பாள். பச்சைதேநீர் கொடுத்துக்கொண்டே இருப்பேன். அது மாதிரியான ஒரு வாழ்க்கையை எனது உச்சிதாவுக்கு கொடுக்க துணிந்தேனே.” முகத்தை மூடிக் கொண்டு குலுங்கினாள்.
“பத்துநாட்கள் தோக்கியோவிலிருந்து ஒசாகா சென்றோம். செல்லும் வழியெங்குமுள்ள லவ் ஹோட்டல்களில் தங்கினோம். கையில் உள்ள இறுதி யென் வரை செலவுசெய்தபின் ஒருநாள் கோவில் திண்ணையில் தங்கினோம். கலவிக்குப்பின் சிமுரா ஆழ்ந்து உறங்கிகொண்டிருந்தான். நடுஇரவில் ஒரு குழந்தையின் அழுகுரல் என்னை எழுப்பியது. உச்சிதாவின் குரலென அதை உணர்ந்தகணம், பித்துப்பிடித்தவள் போலக் கோவிலைச் சுற்றி தேடினேன்.
இரவுமுழுவதும் நிலவை வெறித்தபடி அமர்ந்திருந்தேன். காலையில் தனது டிரக்கை பழுதுபார்த்துக்கொண்டிருந்த சிமுராவிடம் சென்று நான் திரும்பபோவதாகச் சொன்னேன். என் கண்களைப் பார்த்தபடி, சரி என்றான். அந்தநொடி, பெண்ணாகப் பிறந்த கணத்தை அப்படி வெறுத்தேன், ப்ரகாஷ். இரவு வேளையில் காரில் வேகமாகச் சென்று கொண்டிருக்கும்போது, வெகுதொலைவில் பெயர் தெரியாத கிராமத்தில் நடக்கும் வாணவேடிக்கையின் ஒரு துகள், வானில் சட்டென்று கண்ணில்பட்டு அனையுமல்லவா? அதுபோல ஒரு வாழ்க்கை. அதை நம்பி எதையெல்லாம் இழந்துவிட்டேன்!.அணிந்திருந்த செயினை விற்று, ஊர் திரும்பினேன். வீட்டுக்குச் செல்லும் வழியில் சிறிய கத்தி வாங்கினேன். குடிப்பதற்கு இரு ஷாக்கே பாட்டில்கள். உச்சிதாவை எனது அம்மாதான் கொண்டு சென்றிருப்பாள் என்று தெரியும். அவனை ஒருமுறை பார்த்துவிட்டு, ஃபுயுஜி மலைஅடிவாரத்திலுள்ள அவோக்கிஹரா காட்டில் சென்று கையை அறுத்துக்கொண்டு சாக முடிவெடுத்தேன். அவோக்கிஹரா தெரியும்தானே உனக்கு?
தற்கொலை காடு,என்று முணுமுணுத்தேன்.
தற்கொலை செய்துகொள்பவர்களில் தமது உடலை ஒரு பதிலாக இங்கு முன்வைத்துச் செல்பவர்கள் ஒரு வகை. காற்றோடு காற்றாக, இளங்காலை பனியாக முற்றிலுமாய் மறைந்துப்போய் விட நினைப்பவர்கள், அவோக்கிஹராவை தேர்ந்தெடுப்பவர்கள். அந்த அடர்ந்த காட்டிலிருந்து பெரும்பாலும் உடல்கள் கிடைப்பதில்லை. கிடைக்கும் மிச்சங்களில் அடையாளங்கள் எஞ்சுவதில்லை. அப்படிச் சட்டென்று என்னுடைய எல்லா அடையாளங்களையும் அழித்து, தொலைந்துபோய்விடத் துணிந்தேன்.
உச்சிதா, என்னைக் கண்டதும் கட்டிக்கொண்டான். ஆசைதீர கொஞ்சினேன். கிளம்ப எத்தனிக்கையில் கட்டிக்கொண்டு அழுத உச்சிதாவை, பிரிய முடியவில்லை. நான் கொடுத்த அவமானத்தை, ஃபுயுஜிவாரா போன்ற புனிதனால் தாங்கிக்கொள்ளமுடியவில்லை. என்னை விட்டு பிரிந்துவிட்டான் ஃபுயுஜிவாரா. எத்தனை பெரிய முட்டாள்தனத்தை நான் செய்திருந்தேன். தூக்கமில்லாமல் வெறித்தபடி எவ்வளவு இரவுகள்! ஃபுயுஜிவாரா ஒரு அன்பான மனிதன். உச்சிதா எனது உயிர். இவர்களை விட்டு ஒரு நாடோடியுடன் ஓட நினைத்தது நிச்சயம், நானல்ல. இந்த கஷுமி அல்ல. அதுவேறு. என்னைத் தற்கொலைவரை தள்ளிய அது நிச்சயம் என்மேல் கவிழ்ந்திருந்த சாபங்கள். அந்தச் சாபங்களிலிருந்து, தனது களங்கமற்ற புன்னகையால் கொஞ்சம் கொஞ்சமாக என்னை மீட்டெடுத்த தேவன் எனது உச்சிதா. என்னை முழுவதுமாக அழித்துகொள்ள இருந்தேன். உச்சிதா என் வாழ்க்கையிலிருந்து அந்த பத்து நாட்களை மட்டும் அழித்தெடுத்தான். “அந்த நாட்கள் இனி என் வாழ்வில் இல்லை” சற்று அழுத்தத்துடன் கூறியபடி என் முகத்தை சட்டென்று உற்று நோக்கினாள். கண்களைத் தாழ்த்தி தனியாகக் குடித்துக்கொண்டிருந்த கிழவரை பார்த்தேன்.
திரும்பவும் தலை கவிழ்ந்தபடி கண்களைக் கர்சிப்பால் ஒற்றியெடுத்தாள். லேசான கேவல் ஒலி, அந்தக் கிழவரை உற்று நோக்க செய்தது. நான் அவரைப் பார்த்தபோது, கவனிக்காதது போல் ஷாக்கே பாட்டிலின் லேபிளை ஆராய்ந்தார். அவளாகவே தெளியட்டும் என்று அமர்ந்திருந்தேன். சற்று நேரம் கழித்து, நிமிர்ந்தாள். என்னுடைய ஒயின் கோப்பை காலியானதை கண்டு, “இன்னொன்று சொல்” என்றாள்.
மன்னித்துக் கொள் கஷுமி. எதையோ பேசி, கசப்பான நினைவுகளைக் கிளறிவிட்டேன்.
“இல்லை ப்ரகாஷ். இது நடந்தபின் உடனடியாக நாங்கள் முராயமாவிலிருந்து வெளியேறிவிட்டோம். ஏறக்குறைய பழைய உறவுகள் அனைத்தையும் துண்டித்துக்கொண்டு, நானும் உச்சிதாவும் உகியுசுதானியில் குடியேறினோம். இன்று வரை நான் யாரிடமும் இதைப் பற்றிப் பேச நேர்ந்ததில்லை. உன்னிடம் பேசுமளவுக்கு நெருங்கியிருக்கிறேன் என்று நினைக்கும்போது வியப்பாக இருக்கிறது. உன்னிடம் மிக இயல்பாக உணர்கிறேன் ப்ரகாஷ், நன்றி.” கைவிரல்களை நீட்டி மேஜையின்மேலிருந்த எனது விரல்களுடன் கோர்த்துக்கொண்டாள்.
“ப்ரகாஷ், இந்தமுறை இந்தியாவுக்குச் சென்றால் உனக்குத் திருமணம் முடிவாகிவிடும்தானே? அப்புறம் எங்களது மோசமான உணவை நீ உண்ணவேண்டியதில்லை.” சிரித்தாள்
நேரமாகிவிட்டதா? கடிகாரத்தைப் பார்த்தபடி கேட்டாள்.
கைப்பையிலிருந்து தனது முக அலங்கார பெட்டியை எடுத்தாள். கலைந்திருந்த கண்களில் மைபூசினாள். ரோஸ் நிறத்தில் ஒரு தாளை எடுத்து முகம் முழுதும் ஒத்தியெடுத்தாள். உதட்டுசாயம் பூசினாள். கலைந்துபோயிருந்த கஷுமி கொஞ்சம், கொஞ்சமாகத் துலங்கிவந்தாள். எதையோ நினைத்து சிரித்தபடி, “சிமுரா மிக நல்ல பாடகன். இன்று பார்த்தாயே, அந்த உகியுசு பறவை குரலை சரிசெய்துகொண்டு பாடதொடங்கியதை போல, சிமுரா சற்று செருமியபடி பாடத்தொடங்கும் கந்தாகவா நாட்டுப்புறபாடல் அவ்வளவு இனிமையானது” என்றாள்.

-  சொல்வனம் ஜனவரி 2017 இதழ் -