Monday, June 1, 2015

ஆழிப்பேரலையும், அழியா கொடியடும்பும் - 1

கோடைகாலம் துவங்கிவிட்டதை உறுதிபடுத்தும் வண்ணம், இதமான மதியவெயில் நொபிரு(Nobiru) நகரகடற்கரையில் பரவியிருக்கிறது.  வெள்ளை மணலை கொண்ட அழகான அந்த நீள கடற்கரையில் தன்னுடைய பத்து வயது மகனுடன் விளையாடிக் கொண்டிருக்கும் ஒகாவாவை  (Ogawa san) தவிர வேறு யாருமில்லை. வெறிச்சோடி கிடக்கும் அந்த கடற்கரையில், ஆங்காங்கே உடைந்து போன மரத்துண்டுகளும், துணிகளும், நான்கு வருடங்களுக்கு முன் இயற்க்கை அன்னை நடத்திய கோரதாண்டவத்திற்கு சாட்சியாய், கனத்த மெளனத்துடன் கவிழ்ந்து கிடக்கிறது.


பலமுறை நிகழ்ந்த தூய்மைபணிக்கு பின் கிடக்கும் மிச்சங்கள்தான் இவை என்கிறார் ஒகாவா. 2011ம் ஆண்டு மார்ச் 11ம் தேதி ஜப்பானை உலுக்கிய பூகம்பமும், அதற்க்கு பின் வந்த சுனாமியும் மியாகி மாநிலத்தின் வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றிவிட்டது.  மார்ச் 11ம்தேதி மதியம் 2.46க்கு தோஹோக்கு பகுதியை மையமாக கொண்டு அந்த பூகம்பம் உலுக்க தொடங்கியது. தொடங்கிய சில நொடிகளிலேயே புரிந்துவிட்டது இது ஜப்பானில் அவ்வபோது வரும் பூகம்பங்களை போல் அல்ல என்று. ஜப்பான் ரிக்டர் அளவில் 9 என்று பதிவானபோது பல கட்டிடங்கள், சாலைகள் என்று முற்றிலுமாக சேதமடைந்திருந்தது. பள்ளிக்கு சென்றிருந்த, தனது ஆறு வயது மகனை அழைக்க காரை எடுத்துக் கொண்டு விரைகிறார், ஒகாவா. அழைத்துக் கொண்டு திரும்பும் வழியில் சுனாமி எனப்படும் ராட்சஸ அலை, சுமார் பத்து மீட்டர் உயரத்திற்க்கு விஸ்வரூபம் எடுத்து அந்த கடற்கரையோர நகரத்துக்குள் நுழைந்திருந்தது.  சாலைகளில், கார்கள் படகுகளை போல் வெள்ளத்தில் மிதந்து வந்து சூழ்வதை பார்த்த ஒகாவா, காரிலிருந்து மகனை தூக்கி கொண்டு அருகே இருந்த மலையின் மேல் ஏறி தப்புகிறார்.

மரவீடுகள், படகுகள் மட்டுமல்ல, காங்கிரிட் வீடுகளையும் சுனாமி, அப்பளம் போல உடைத்தெடுத்து செல்வதை மலையிலிருந்து பார்த்து செய்வதறியாது உறைந்திருக்கிறார் ஒகாவா. அந்த பேரழிவுக்கு பின் எல்லாமே மாறிவிட்டது என்கிறார். பள்ளியில் உதவியாளராக பணி புரியும் ஒகாவா, பணி முடிந்து எப்போதும் மாலை நேரத்தில் கடற்கரையோரம் உலவுவதை வழக்கமாக கொண்டவர்.  சுனாமிக்கு பின் கடலை பார்த்தாலே, தலைசுற்றி வாந்தியெடுத்துவிடுவதால், மார்ச் 11ம்தேதிக்கு பின் தொலைக்காட்சியில் கூட அவரால் கடலை பார்க்க முடியவில்லை.


ஓகாவாவின் மகன் ருவான், தன்னுடைய பள்ளித் தோழர்கள் பலரை சுனாமியில் இழந்துவிட்டான். எஞ்சியிருந்த சிலரும் வாழ்வாதாரம் தேடி, தோக்கியோ போன்ற பெரியநகரங்களுக்கு இடம்பெயர்ந்துவிட, விளையாட தோழமையில்லாது அந்த கடற்கரையோரம் ஒரு சிறு குச்சியுடன் தனக்குதானே பேசியபடி விளையாடிக் கொண்டிருக்கிறான். தன்னுடைய மகனின் தனிமை பொறுக்காது, அவனுடன் விளையாட, மீண்டும் கடலுக்கே வந்துவிட்டதாக சொல்கிறார் ஒகாவா.  


இப்படி பலருடைய வாழ்க்கையை தலைகீழாக மாற்றியிருக்கிறது.  ஒகாவா நகரத்தின் தொடக்கப்பள்ளியில் மட்டும் 70 குழந்தைகளையும், பத்து ஆசிரியர்களையும் பலிகொண்டிருக்கிறது. ஒகாவா தொடக்கப்பள்ளியில் மொத்த குழந்தைகள் 108. ஆசிரியர்களின் எண்ணிக்கை 13. பூகம்பத்திற்க்கு பின், ஜப்பானில் வழக்கமாக கொடுக்கபடும் பயிற்சியின்படி பள்ளி மைதானத்துக்கு அழைத்து செல்லப்பட்டிருக்கிறார்கள் குழந்தைகள். சுனாமி வருகிறது என்று தெரிந்தவுடன் பள்ளிக்கு அருகில் உள்ள உயரமான கட்டிடத்திற்க்கு சென்று விடலாம் என்று சொல்லியிருக்கிறார் ஒரு முதிய வகுப்பாசிரியர். அந்த கட்டிடத்திற்க்கு செல்ல ஒரு ஆற்றுபாலத்தை கடக்கவேண்டும் என்பதால், பள்ளியின் அருகிலுள்ள மலை மீது ஏறுவதுதான் உகந்தது என்று சொல்லியிருக்கிறார் மற்றொரு ஆசிரியர். இப்படி விவாதத்தில் பொன்னான நேரம் கடந்திருக்கிறது. இறுதியில் அந்த சீனியர் ஆசிரியர் சொல்லியபடி உயரமான கட்டிடத்திற்க்கு செல்வதாக முடிவெடுக்கப்பட்டு குழந்தைகளுடன் பாலத்தை கடக்கையில் 15 மீட்டருக்கும் உயரமான ஆழிபேரலை 70 குழந்தைகளையும், 10 ஆசிரியர்களையும் அடித்து சென்றது. மலைமீது ஏறிவிடலாம் என்று சொல்லிய ஆசிரியர் ஒரே ஒரு குழந்தையுடன் மலை மீது ஏறி சென்று தப்பிக்கிறார். பாலத்தில் உயிர் பிழைத்த இரண்டு ஆசிரியர்களில் ஒருவர் சம்பவம் நிகழ்ந்து சில மாதங்களில் தற்கொலை செய்துக் கொள்கிறார்.

எப்படி இந்த பள்ளியில் மட்டும் இவ்வளவு குழந்தைகள் இறந்தனர்? உண்மையில் என்ன மாதிரியான பாதுகாப்பு முன்னேற்பாடுகளை இந்த பள்ளி முடிவுசெய்திருந்தது என்று பல கேள்விகளை முன்வைத்த பெற்றோர்கள் இன்றுவரை நகர தலைமையின் விசாரணை முடிவுகளை நிராகரித்து மூன்றாவது நபர் விசாரணை குழு அமைக்கசொல்லி போராடிவருகிறார்கள்.

இப்படி 15,889 பேர் நாடு முழுவதும் ஆழிப்பேரலை மற்றும் பூகம்பத்தால் உயிரை இழந்திருக்கிறார்கள். ஒரு லட்சத்து 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் முழுவதுமாக தரைமட்டமாகியிருக்கிறது. லட்சகணக்கானோர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து இடம்பெயர்ந்திருக்கிறார்கள். நான்கு ஆண்டுகளை கடந்தபின்னரும் ஆயிரக்கணக்கான மக்கள் இன்னமும் தற்காலிக குடியிருப்புகளில் முடங்கியிருக்கிறார்கள். அப்படி ஒரு மீனவகிராமம் தான் மக்கிஹாமா.

தாய்தமிழகத்தில் உள்ள குழந்தைகளின் கல்விஉதவிக்காக தோக்கியோவில் செயல்பட்டு வரும் முழுமதி அறக்கட்டளை, நாம் வாழும் பூமியான ஜப்பான் பகுதிக்கும் நம்மால் இயன்ற உதவிகளை செய்யவேண்டும் என்று முடிவுசெய்தபோது 2011 பேரழிவால் பெரிதும் பாதிக்கப்பட்ட மியாகி  (மியாகி பகுதியில் மட்டும் 9,538 பேர் உயிர்ழந்தனர்) பகுதிக்கு சென்று உதவுவது என்று முடிவானது.
மியாகியில் எங்கு செல்வது? எப்படி உதவுவது? என்றெல்லாம் யோசித்தபோது, முழுமதியின் வழிகாட்டிகளில் ஒருவராக திகழும் பேராசிரியர் திரு யமசித்தா (yamashita san) அவர்களால் மக்கிஹாமா கிராமம் முன்வைக்கப்பட்டது. யமசித்தா அவர்களது தோழர் யமகத்தா நகரத்தின் நகரத்துணைதலைவர் திரு. கொதாமா (Kodama San) அவர்கள் முழுமதியின் நோக்கம் குறித்து கேள்விப்பட்டு தாமும் கூட வந்து உதவிட முன்வந்தார். 2015 மே மாதம் 30, 31 தேதிகளில் மக்கிஹாமா சென்று அங்கு முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு இந்திய உணவைத் தயாரித்து வழங்கி அவர்களுடன் 30ம்தேதி இரவு தங்கி திரும்பி வருவதாக முடிவெடுக்கப்பட்டது.  முழுமதி அறக்கட்டளை உறுப்பினர்கள். மொத்தம் 21 பேர் மூன்று கார்களில் உணவுக்கான பொருட்களை எடுத்து கொண்டு ஏறக்குறைய 400 கிலோமீட்டர் பயணம் செய்து, 30ம் தேதி மதியம் நொபிரு கடற்கரையை அடைந்தோம். அங்குதான் மேலே குறிப்பிட்ட ஒகாவாவையும் அவரது மகனையும் சந்தித்தோம்.


                                                                        திரு தனக்கா அவர்களுடன்

2011 ஆழிப்பேரலைக்கு முன், நொபிரு கடற்கரையோரம் மூன்று கிலோமீட்டர் நீளத்திற்க்கும் மேலாக அழகாய் படர்ந்து நீல நிறத்தில் பூத்திருக்கும் ஒரு மலர், சுனாமிக்கு பின் முற்றிலுமாக அழிந்துவிட்டது. Sea bells என்றழைக்கப்படும் இந்த பூவுக்கு இரண்டாயிரம் வருட வரலாறு உண்டு. நமது சங்க இலக்கியமான நற்றிணையில்  “குன்றோங்கு வெண்மணல் கொடியடும்பு கொய்தும்” என்று குறிப்பிடபடும் இந்த மலர் நெய்தல் தினைக்குரியது. கடற்கரை மணலிலும், வறண்ட மணல்மேட்டிலும் வளரும் இந்த அடும்பு மலர் சுனாமிக்கு பின் முற்றிலுமாக அழிந்துவிட விதைகள் எஞ்சாததால் இனி அங்கு மலராது என்றே அனைவரும் கருதினர். நான்காண்டுகள் கழித்து திரும்பவும் 2015 மே மாதம், நொபிரு கடற்கரையில் ஒரு 150 மீட்டர் அளவுக்கு கொடிபடர்ந்து நம்பிக்கை புன்னகையை வீசி அழகாய் மலர்ந்து எங்களை வரவேற்றது கொடியடும்பு மலர். 
தொடரும்.