Monday, January 28, 2013

சகிப்புத்தன்மைக்கு சங்கு..

ஏறக்குறைய நூறு கோடி ரூபாய் பொருட்செலவில் எடுக்கப்பட்ட கமலின் விஸ்வரூபம் திரைப்படம் வெள்ளித்திரையை தொடுவதற்க்கு தலையால் தண்ணீர் குடித்துக் கொண்டு இருக்கிறது. முதலில் நேரடியாக வீடுகளுக்கு தொலைக்காட்சியில் (DTH)  வெளியிடுவதற்க்கு முயன்று, அதில் ஏற்பட்ட சிக்கலில் இருந்து ஒரு வழியாக வெளியே வந்தால், அடுத்து இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பை கிளப்பி அரசு இரண்டு வாரத்திற்க்கு தடை செய்துள்ளது.அப்படி படத்தில் என்னதான் இருக்கிறது? என்பது ஒரு புறம் இருக்கட்டும். நாட்டில் சென்சார் போர்டு என்று ஒரு அமைப்பு இருக்கிறது. அதில் பல பொறுப்புமிக்க அதிகாரிகள் இருக்கிறார்கள். சமூகத்தில் நன்மதிப்பு பெற்றவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் பார்த்து ஒரு படத்தை வெளியிடலாம் என்று அனுமதித்த பின், ஏதோ சில அமைப்புகள் ஒரு படத்தை வெளியிட கூடாது என்று சொல்வதும் உடனே அரசு தடை விதிப்பதும் கேலி கூத்தானது. கிருஸ்துவர்கள் அதிகமிருக்கும் அமெரிக்காவில் டாவின்ஸி கோட் வெளியிடப்பட்டு வெற்றியடைந்தது. ஆனால் தமிழகத்தில், திமுக அரசு அதை தடை செய்தது. இப்போது அதிமுகவின் முறை. இந்த லட்சணத்தில், இந்தியா ஒரு ஜனநாயக நாடு, மதசார்பற்ற நாடு என்றெல்லாம எந்த தைரியத்தில் சொல்கிறீர்கள்?

சட்ட ஒழுங்கை காரணம் காட்டி விஸ்வரூபத்திற்க்கு விதிக்கப்பட்ட தடையால் உண்மையில் மதகாழ்ப்புணர்வு தான் வளரும். ஒரு மத அமைப்பு, மிரட்டியே ஒரு படத்தை தடை செய்ய முடியும் என்பது ஒரு தவறான முன்னுதாரணம். இனி ஹிந்து அமைப்புகளும் இதை கையில் எடுக்கும். ஆதிபகவன் படத்திற்க்கு அல்ரெடி குடைச்சல் கொடுக்க ஆரம்பித்து விட்டன இந்து அமைப்புகள். அவர்களை பொறுத்த வரை, ஒரு இரண்டு படத்தையாவது தடை செய்தால்தானே ஊருக்குள் மரியாதை.. மொத்தத்தில் சகிப்புதன்மைக்கு சங்கு...

தடை காரணமாக கமல் நொந்து போய் இருக்க, ஒரு புறம் சமூக வலைத்தளங்களில் தம்மூடைய கருத்துக்கள் கவனிக்கபட வேண்டும் என்ற ஆர்வத்தில் சிலர் எடுத்துவிடும் கருத்துக்கள் கதிகலங்க வைக்கிறது. ஒருவர் பதிவு போட்டுள்ளார். “விஜய்காந்த், மணிரத்னம், கமல்ஹாசன் அர்ஜூன் இவர்கள் அனைவரும் ஹிந்துத்துவா பின்னனியில் வெற்றிப்பெற்றவர்களாம். பாட்சா படத்தில் நடித்ததால் ரஜினிகாந்த், முற்போக்கு நபர் என்று விட்டு விட்டார் போல. சரி நம்ம பவர் ஸ்டாரை வுட்டுடீங்களே பாஸு..

இன்னொருவர் ஃபேஸ்புக்கில் சொல்கிறார். கமல் உண்மையில் வைணவ வெறி பிடித்தவராம். நாத்திகர் மாதிரி தெரிந்தாலும், தொடர்ந்து சைவ சமயத்தை மட்டுமே தாக்கி வருகிறாராம். அன்பே சிவம் படத்தில், சதா தென்னாடு உடைய சிவனே போற்றி என்று சொல்லிக் கொண்டு இருக்கும் சிவபக்தனை கொடூரமான வில்லனாக காட்டிய விதத்திலேயே தெரியவில்லையா, கமல் ஒரு வைணவ வெறியர் என்று என்கிறார் இவர்.

சரி, தசாவதாரத்தில் பெருமாள் சிலைக்கு பின்னாடி உட்கார்ந்துதானே கடவுள் இருந்தா நல்லா இருக்கும்ன்னு சொல்கிறார் என்று நாம் திருப்பிக் கேட்டால், அது ஒன்லி சைவ கடவுளைத்தான் சொல்கிறார் என்பார். ஹேராம் படத்தில் ஒரு வைணவ சமயத்தை சேர்ந்த ஒருவன் காந்தியை கொல்ல முயல்வது போல் அமைத்துள்ளாரே போன்ற கேள்விகள், உமக்கும் எனக்கும் தான் சாமி... முன்முடிவுகளை ஏற்படுத்தி கொண்டபின், குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுபவர்களுக்கு என்ன அய்யா , கவலை?

கமலின் சில திரைப்படங்கள் குறித்து சில அபிப்பிராய பேதங்கள் எனக்கும் உண்டு. ஆனால், கமல் தனது சுய சாதியையும், மதத்தையும், சமயம் கிடைக்கும் போதெல்லாம் கிண்டலடிக்கும் அளவுக்கு, சாதி,  மத அபிமானங்களை கடந்தவர். இதில் எந்த பாகுபாடும் அவர் வைத்துக் கொண்டதாக நான் கருதவில்லை. உண்மையிலேயே நல்ல படம் எடுக்க வேண்டும் என்று முயலும் ஒரு நல்ல கலைஞன். இந்த முயற்சிகளால், சமயங்களில் அன்பே சிவம், மகாநதி போன்ற அற்புதங்களும் நிகழ்வதுண்டு. சில சமயங்களில் தசாவாதாரம் போன்ற அபத்தங்களும் நிகழ்வதுண்டு. விஸ்வரூபம் நல்ல படமா என்பது நமக்கு தெரியாது. ஆனால், எந்த கருத்தையும் முன்வைத்து படம் எடுக்க ஒரு கலைஞனாக அவருக்கு உரிமையிருக்கிறது. அது தவறி போகும் பட்சத்தில், அந்த படைப்பை நிராகரிக்க நமக்கு உரிமையிருக்கிறது. அந்த படைப்பு வெளிவரவே கூடாது என்று சொல்ல என்ன உரிமையிருக்கிறது?


எனக்கு தெரிந்து கமல் செய்வதெல்லாம் ஒரே ஒரு தவறுதான். கதையின் நம்பகதன்மையை அதிகரிக்கும் நோக்கத்தில், பின்புலத்தை விரிவாக, நம்பும்படியாக விவரிக்கிறார். இதை அவர் முற்றிலுமாக மாற்றிக் கொண்டால் எந்த பிரச்சினையும் இல்லை. இதில் அவர் அடம்பிடிக்க கூடாது. உதாரணத்திற்க்கு,
1.    பாகிஸ்தானிய தீவிரவாதிகளை காட்டும்போது, அவர்கள் கழுத்தில் உள்ள சிலுவையை அவ்வபோது ஃபோகஸ் செய்ய வேண்டும்.

2. மதுரை பக்க கதைகளை எடுக்கும் போது, வில்லனை, மீசையை முறுக்கியபடி,நான் முதலியார்டா என்று சொல்ல வைக்கலாம். எந்த முதலியார்? என்று புரியாமல் சங்கங்கள் குழம்பி எதிர்க்காமல் விட வாய்ப்பு அதிகம்.

2. மதுரை பக்க கதைகளை எடுக்கும் போது, வில்லனை, மீசையை முறுக்கியபடி, நான் முதலியார்டா என்று சொல்ல வைக்கலாம். எந்த முதலியார்? என்று புரியாமல் சங்கங்கள் குழம்பி எதிர்க்காமல் விட வாய்ப்பு அதிகம். 

3.    காந்தியை கொல்ல ஒரு வைஷ்ணவன் முயல்கிறான் என்று காண்பிப்பதை விட, ஒரு ஷிண்டோ மதக்காரன் முயல்கிறான் என்று காண்பிப்பது சால சிறந்தது.காந்தியை கொல்ல ஒரு வைணவன் முயல்கிறான் என்று காட்டுவதை விட, ஒரு ஷிண்டோ மதத்துக்காரன் முயல்கிறான் என்று காட்சியமைக்கலாம். ஜப்பானில் இருந்து யாரும் வந்து எதிர்ப்பு தெரிவிக்க நியாயமில்லை.

4.   முக்கியமாக ஹீரோ அவ்வபோது வில்லனை பார்த்து, உன்னை மாதிரி ஆட்களால, புனிதமான உங்க மதத்திற்கே கெட்ட பெயர்டா என்று பல்லை கடித்துக் கொண்டு சொல்வது நல்ல பலனை தரும்.

5.    பகாண்டா,லித்தியோப்பியா என்று நாடுகளின் பெயர்களை இஷ்டத்திற்க்கு மாற்றி விளையாடலாம். நம்ம நாட்டை சொல்லவில்லை என்று விட்டு விடுவார்கள்.


வேறு என்ன சொல்ல? மொத்தத்தில் கஷ்டகாலம்...

Saturday, January 5, 2013

ரஜினியின் புரிதலும், சாதியமும் !


கருணாஸ் பேசுனதை பார்க்கும்போது, அந்த முத்துராமலிங்க தேவரே பேசுனது மாதிரி இருந்துச்சு என்றார் ரஜினி அவரது பிறந்த நாள் விழாவில்.


அப்படி என்னடா கருணாஸ் பேசிவிட்டார் என்று மண்டையே உடைந்துவிடும் போல் இருந்தது எனக்கு. தேடி ஒருவழியா யூடீயுபில் பிடித்து விட்டேன்.


அண்ணாதுரை ஐந்தெழுத்து, கருணாநிதி ஐந்தெழுத்து, ஜெயலலிதா ஐந்தெழுத்து, ஆக அடுத்து ஆளப் போகும் ரஜினிகாந்த் ஐந்தெழுத்து இல்லையே என்று யோசிக்காதீர்கள். ரஜினிகாந்தின் நிஜ பெயர் சிவாஜிராவ் ஐந்தெழுத்துதான்.. 

என்ன பார்க்கிறீர்கள்? இதுதான் நடிகர் கருணாஸ், ரஜினியின் பிறந்தநாள் விழாவில் பேசியது. இதற்க்கும் முத்துராமலிங்க தேவருக்கும் என்ன சம்பந்தம்? ஒரு சம்பந்தமும் இல்லை.. கருணாஸ் முக்குலத்தைச் சேர்ந்தவர் என்பதை தவிர..இப்படி தொடர்ந்து ரஜினி சாதிவழியாகத்தான் தமிழகத்தையே பார்க்கிறாரோ என்று தோன்றுகிறது. முன்பு ஒரு முறை, நடிகர் விவேக்கை பாராட்டி பேசும் போது, ”முதல்லே விவேக்கோட அறிவை (?) பார்த்து வியந்து, அவர் பிராமின்னாதான் இருக்கனும்ன்னு நினைச்சேன், பின்புதான் தெரிந்தது அவர் முக்குலத்து சாதியை சேர்ந்தவர் என்பது” என்று திருவாய் மலர்ந்தார், சூப்பர் ஸ்டார். (இதற்க்கு சேதுராமன் குழுவினர் மல்லுக்கட்டியது தனி காமெடி)..

இப்படிபட்ட புரிதல்கள் கொண்ட, சாதி லட்சணங்களை நம்பும் ஒரு முற்ப்போக்கான ஒரு தலைவருக்காகத்தான் தமிழகமே, கன்னத்தில் கை வைத்துக் காத்து கிடக்கிறது. காவியங்கள் உனைப் பாட காத்திருக்கும் பொழுது, காவி உடை நீ கொண்டால் என்னவாகும் மனது??