Monday, December 31, 2018

கனவுகளில் தொடர்பவள்
அந்த டிசம்பர் மாத குளிர் இரவு எனக்கும், இசூமிக்குமானது. அந்த இரவை வாழ்வில் ஒருபோதும்  மறக்க இயலாது. “இந்த வாரம் வெள்ளிகிழமை நாம் சந்திக்கலாமா? உன்னிடம் பேசவேண்டும் .” என்ற இசூமியின் மெயிலில்தான் அந்த நாள் ஆரம்பமானது. அதை படித்தவுடன், அவள் மீது வீசும் கோலே பிராண்ட் நறுமணம்தான் முதலில் ஞாபகம் வந்தது. எப்போதும் இசூமி இப்படிதான் ஓரிருவரிகளில் மெயில் அனுப்புவாள்.

இசூமியை முதன்முதலாய் ரொப்பங்கியில் உள்ள காஸ்பானிக் டான்ஸ் பாரில்தான் சந்தித்தேன்.  ஒரு வெள்ளி இரவு, காஸ்பானிக்கில் நுழைந்து, பார் அட்டெண்டருக்கு முன், வரிசையாக உள்ள உயர நாற்காலியில் அமர்ந்தேன். அந்த இருக்கைகள் பெரும்பாலும் தனியாக வருபவர்களுக்கானது. இரவு ஏழுதான் ஆனது. கொஞ்சம் கொஞ்சமாகதான் இந்த இடம் சூடு பிடிக்கும். மொத்தமே நான்கைந்து பேர்தான் இருந்தனர்.

எனக்கு முன்பே, அதே வரிசையில் தனியாக அமர்ந்து நீல கலரில் உள்ள குயூர்சா பழரசத்தில் டெக்கிலா கலந்து செய்யப்பட்ட 901 ப்ளூ காக்டெயிலை உறிஞ்சிகொண்டிருந்தாள் அந்த பெண். கண்கள் முதலில் கவர்ந்தது. ஜப்பானிய பெண்களுக்கு அவ்வளவு பெரிய கண்கள் அரிது. தலையை செயற்கை வண்ணம் கொண்டு மாற்றிக்கொள்ளாமல், இயற்கையான வண்ணத்தில் விட்டிருந்தாள். மிதமான உயரத்தில், நீளமான விரல்களால் சுருள் முடியை ஒதுக்கிவிட்டபடி அமர்ந்திருந்தாள். நீல நிறத்து ஜீன்ஸும், ஹார்ட்டின் போட்ட வெள்ளை முழுகை டிஷர்ட்டும் அழகாக பொருந்தியிருந்தது. பார்டெண்டரிடம் மிகமெல்லிய குரலில் தனக்கு பிடித்த பாடல்களை சொல்லிகொண்டிருந்தாள். அவன், அவள் சொன்ன பாடலை எடுத்து சுழலவிட்டான் அவள் கையிலிருந்த மதுபானத்தை பார்த்தவுடன், டெக்கிலா குடிக்கதோன்றியது. சொன்னபோது கொஞ்சமாக திரும்பி பார்த்துவிட்டு, தனது கோப்பையில் கண்களை ஓட்டினாள். யாருக்காகவோ காத்திருக்கிறாள்.

நான் எனது மூன்றாவது ட்ரிங்கஸை முடித்திருந்தபோது, கூட்டம் ஏறியிருந்தது. இப்போது ஸ்பிக்கர்கள் உச்ச ஸதாயியில் அலறிக்கொண்டிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக ஜோடிகள் ஆடதொடங்கியிருந்தனர். ஆடலுக்கு ஏற்ப, ஜாக்கி பாடல்களை தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தான். இரவு எட்டரை ஆகியும், அவள் காத்திருக்கும் நபர் வரவில்லை. உண்மையில் அவள் யாருக்கும் காத்திருக்கவில்லையோ என்று தோன்றியது. தொடர்ந்து மார்கெரிட்டா, டெக்கிலா சன்ரைஸ் என்று டெக்கிலா காக்டெயிலாக சொல்லிகொண்டிருந்தாள். பாடலை முணுமுணுத்துபடி, செவன் ஸ்டார் மைல்டு புகைத்து கொண்டு தனது நினைவுகளில் ஆழ்ந்திருந்த அவள் நிச்சயம் யாருக்காகவும் காத்திருக்கவில்லை என்று தோன்றியது. அவளிடம் தெரிந்த எதோ ஒன்று அவளிடம் பேச வேண்டும் என்கிற உந்துதலை ஏற்படுத்தியது. கிளாஸை எடுத்துகொண்டு அவளை நோக்கி நடந்தேன்.

நாம் ஆடலாமா ?

என்னை நிமிர்ந்து பார்த்து, ஒரு நொடி புன்னகைத்தாள்

நாம் பேசலாம்.” அருகிலிருந்த நாற்காலியை பார்த்தாள்.

அவளருகே அமர்ந்தேன்.

இந்த ஜே பாப் இசை உனக்கு பிடித்திருக்கிறதா? எனக்கு உங்கள் நாட்டை சேர்ந்த பண்டிட் ரவிசங்கரின் சிதார் இசை மிகவும் பிடிக்கும்.

, நீ இசை மாணவியா?

இல்லை. இசை காதலி. அழகாக சிரித்தாள்..

இசூமிக்கு, கர்னாடக இசையில் ஒரு சில ராகங்களின் பெயர்கள் கூட தெரிந்திருந்தது. உலகம் முழுவதும் சுற்றுவதில் ஆர்வமிருந்தது. இந்திய நேபாள மலைகளில் மலையேற்றம் செய்திருந்தாள். ஜப்பானின் வடக்கில் உள்ள ஹொக்கைடோ தீவிலிருந்து 20 கிலோமீட்டர் தள்ளியுள்ள ரிஷிரி என்னும் சிறிய மீன்பிடிதீவில்தான் இசூமியின் பெற்றோர்கள் வசித்தார்கள். மொத்தமே ஐயாயிரம் பேர் மக்கள் தொகை கொண்ட இந்த கிராமத்தில்தான் அவளது பள்ளிபருவத்தை கடந்திருக்கிறாள். பிறகு தோக்கியோவில் கல்லூரி, பியானோ டீச்சராக வேலை என்று தங்கியிருக்கிறாள்.

பனிக்காலத்தில், முழுவதும் பனியால் சூழப்பட்ட எனது தீவுக்கு உன்னை ஒரு நாள் அழைத்துசெல்கிறேன், நண்பனே என்றாள். பிறகு, நாங்கள் இருவரும் அடிக்கடி அங்கு சந்தித்தோம்.

பிறகொரு நாள் காஸ்பானிக்கில், வழக்கத்தைவிட அதிகமாக குடித்தாள். “இன்று சிமுராவிடம் பிரிந்துவிடுவோம் என்று சொல்லிவிட்டேன்என்றாள்.

ஏன்? என்ன ஆனது?

அவனுடன் நான் மகிழ்ச்சியாக இருக்கமுடியும் என்று தோன்றவில்லை.

ஆனால், நீ சிமுராவின் கண்ணியமான நடத்தை குறித்தும், அவனுடைய வக்கில் வேலை மேல் அவனுக்கிருக்கும் ஆர்வம் பற்றியும், உன்னிடம் வைத்துள்ள காதல் பற்றியும் அதிகம் பேசியிருக்கிறாயே?

ஆம், ஆனால், அவனிடம் தெரியும் மிதமிஞ்சிய ஒழுங்கு என்னை பயமுறுத்துகிறது. அவனுடன் குடித்த இரவுகளில் அவன் ஒருமுறை கூட உளறியதில்லை, தெரியுமா?. குடிக்க குடிக்க நிதானம் அடைந்துகொண்டே செல்லும் ஒருவனை நீ பார்த்திருக்கிறாயா? சிமுரா அப்படிபட்டவன்.

ஆனால், வெள்ளி இரவுகளில் மிதமிஞ்சி குடித்துவிட்டு வீட்டுக்கு செல்லும் ரயிலை தவறவிட்டு ஸ்டேஷன் பெஞ்சிலேயே, அரற்றியபடி படுத்திருக்கும் சாலரிமேன்களை விட இது சிறந்ததுதானே?

அடுத்த இருபதாண்டுகளுக்கு அவனிடம் திட்டமிருக்கிறது. அந்த திட்டத்தில் ஒருபகுதியாக நான் பொருத்திகொள்ளவேண்டும். வாழ்வின் எதிர்பாராதன்மையை அவன் கேள்விக்குள்ளாக்குகிறான். பள்ளி வயதிலிருந்தே தான் ஒரு சிறந்த வழக்குரைஞராக வேண்டும் என்று உழைத்தான். அதே போல் யுனிவர்சிட்டியில் ரேங்க் எடுத்தான். இப்போது ஜூனியராக பணியாற்றும் இந்த அலுவலகத்திலிருந்து, எந்த நாள் ராஜினாமா செய்வது என்று கூட அவன் கல்லூரி படிக்கும்போதே முடிவெடுத்திருப்பான்.  உனக்கு தெரியுமா, எங்கள் ரிஷிரி மலையில் வெயில்காலத்தில் ஏறிக்கொண்டேயிருப்போம். திடீரென்று சூழும் மேகங்கள், மழையை பொழியதொடங்கும். கண்ணுக்கு முன் ஒன்றுமே தெரியாத அளவுக்கு இருட்டிவிடும். குளிர் எலும்பு வரை ஊடுருவும். அது கொடுக்கும் சிலிர்ப்பும், அந்த பயம் கலந்த எதிர்பார்ப்புமல்லவா வாழ்க்கை.  எனக்கு அவன் எந்த ஆச்சர்யங்களையும் கொடுக்கபோவதில்லை. எல்லாம் திட்டத்தின் ஒரு பகுதிதான். நான் முடிவெடுத்துவிட்டேன்.

ஆனாலும் கவனமாக திட்டமிடுதலை ஒரு தவறாக என்னால் கருதமுடியவில்லை, இசூமி.

எப்போதும் போலான ஒரு வாரநாளின் காலையில் எழுந்து வானத்தை பார்க்கிறாய். பனி பொழிந்துகொண்டிருக்கிறது. அலுவலகத்துக்கு செல்வதற்கான ஆயுத்தங்களை கைவிட்டு, தூங்கி கொண்டிருக்கும் உன் மனைவியின் நெற்றியில் முத்தமிட்டு எழுப்பி, இன்று முழுவதும் நாம் இந்த பனியில் நனைவோம் கண்ணே என்று உன்னால் சொல்லமுடியும் என்றால், வாழ்க்கை ஆசிர்வதிக்கப்பட்டது. ஆனால், நீ இங்கு வந்து நாளாகிவிட்டது, சொல்லகூடும் என்று தோன்றவில்லை  கண்களை பார்த்து சிரித்தாள்.

இந்தியாவிலிருந்து வந்து, இங்கு வாழும் இந்த ஏழு வருடங்களில் ஒரு போதும் வந்திராத ஒரு பயம் எனக்குள் ஊடுருவியது. 

பிறகொரு நாள், அவளது பள்ளியில் ஆங்கில ஆசிரியனாக இருக்கும் ஜார்ஜ் பற்றி சொன்னாள். ஜார்ஜ் அமெரிக்கன். ஜப்பானிய இசையையும், இலக்கியத்தையும் எப்படி நேசிக்கிறான் தெரியுமா அவன்? என்று குழந்தை போன்ற குதூகலத்துடன் சொன்னாள்.பிறகு சில நாட்களில் ஜார்ஜை பிரிந்து விட்டேன் என்றாள் .மறுபடியும் சில உறவுகள்..திரும்ப திரும்ப பிரிவுகள்..

இறுதியாக பார்த்தபோது, பனிச்சறுக்கு பயிற்சியாளராக இருக்கும் கவாமுராவை பற்றி சொல்லியிருந்தாள். பனிச்சறுக்கின் சாகஸத்தையும், ஒருமுறை கவாமுரா ஏறக்குறைய சாவின் விளிம்பை தொட்டுவந்ததையும் கூறினாள். பனிமலையில் சறுக்கியபடி வந்தபோது, எதிர்பாராமல் பனிஉள்வாங்கி கீழே உருட்டியது. பனியில் விழுந்தவுடன் முதலில் செய்யவேண்டியது நுரையிரலில் பனிபோகாமல் காக்கவேண்டியதைதான். சுயநினைவு இழந்து விழுந்து கிடந்த கவாமுராவை, எதேச்சையாக பார்த்த அவனது நண்பன் கவாமுராவின் தலையை உயர்த்தி பிடித்து, முதலுதவி செய்ததால் அவன் வீடுதிரும்பமுடிந்தது என்று கூறினாள். 

ஏறக்குறைய மூன்று மாதம் கழித்து அந்த டிசம்பர் மாதம் வெள்ளிகிழமை சந்திக்கவேண்டுமென்று மெயில் அனுப்பியிருந்தாள். சிபுயாவில் நாம் வழக்கமாக சந்திக்கும் கிசாதென்னில் (காபி ஷாப்) சந்திப்போம் என்று இசூமிக்கு பதில் அனுப்பினேன்.

சிபுயாவின் ரயில் நிலையத்திலிருந்து 15 நிமிட நடையில் அந்த கிசாதென் இருந்தது. மொத்தம் பத்துபேர் மட்டுமே அங்கு உட்காரமுடியும். எழுபதுகளில் இருந்த ஒரு தம்பதியினர் அதை நடத்தினர். எழுபதுகளில் இருந்த இசிபாஷிதான் காபி தயார் செய்வார். அவர் மனைவி பரிமாறுவார். வெளி உலகத்துக்கு சம்பந்தமேயில்லாதபடி உள்ளே வெளிச்சம் கம்மியாக்கபட்டிருக்கும். எப்போதும் அங்கு பீத்தோவனின் சொனோட்டா பியானோ இசை மட்டுமே எல்.பி ரெக்கார்டுகளில் சுழலவிடப்பட்டது. மணிக்கணக்கில் நாங்கள் அங்கு அமர்ந்திருப்போம். எங்கள் சந்திப்பை எப்போதும் இசூமியே முடிவுசெய்வாள்.

நான் சற்று முன்னதாகவே அங்கு சென்றுவிட்டேன். சிறிதுநேரம் கழித்து  தனது குளிர் கோட்டை கழற்றியபடி இசூமி வந்தாள். கருப்பு வெல்வெட் துணியிலான டாப்ஸும், அதே வண்ணத்தில் ஸ்கர்ட்டும் அணிந்துதிருந்தாள். அவள் இருக்கைக்கு வருவதற்க்கு முன், அவள்மீது எப்போதும் வீசும் கோலே ரோஜாவின் நறுமணம் வந்திருந்தது. நகங்களில் ஒவியம் வரைந்திருந்தாள். முடியை தளர்வாக விட்டிருந்தாள். வந்தமர்ந்தவுடனே கவாமுராவை பிரிந்ததை சொன்னாள். கண்களில் நீர் வழிய அமர்ந்திருந்த இசூமியின் கரங்களை பற்றிக்கொண்டேன். அவளது கேசத்தை மெல்ல வருடிகொடுத்தேன்.

நீ எதை தேடுகிறாய் பெண்ணே?

தோக்கியோவில் இருக்க பிடிக்கவில்லை. சூரியன் சோம்பலுடன் எழும் எங்களது தீவின் வாழ்க்கை திரும்பவேண்டும். அம்மா செய்துதரும் தேநீரை உறிஞ்சியபடி கைத்தொடும் தூரத்தில் தெரியும் ரிஷிரி மலையை பார்த்தபடி அமர்ந்திருக்கும் சாயங்காலங்கள் வேண்டும். அப்பாதானே பிடித்து வரும் மீனை சுத்தம்செய்து, இரண்டாக பிளந்து துண்டுகளாக நறுக்கி செய்துதரும் சாஷிமியை சுவைக்கும் இரவுகள் வேண்டும்.அங்கு காலம் மெதுவாக நகரும். பறவைகளின் குரல் என்னை எப்போதும் சுழ்ந்திருக்கும். ஆனால் ஒருபோதும் என்னால் அங்கு செல்லமுடியாது என்பதும் எனக்கு தெரியும்.

ஆனால், நீ உண்மையிலேயே அந்த வாழ்க்கையை விரும்பினால் அங்கு நீ திரும்பி செல்வதை எது தடுக்க கூடும்?

திரும்பி செல்லும் தூரத்திற்க்குள் நான் வாழ்ந்திருந்தால், திரும்பியிருக்க கூடும்”. மெலிதாக புன்னகைத்தாள்.

முடிவுறாத மழையில் அலைகழியும்
அந்த சகுரா மலரை போல
எனது அழகும், திறமையும்
உருகுலைகிறது. நான் தனித்திருக்கிறேன்.

பெண் கவிஞர் கொமாச்சியின் வாகா கவிதையை சொன்னாள். நாங்கள் வந்து அதிகநேரமாகியிருந்தது. நாம் வேறு இடத்துக்கு செல்லலாம் என்றேன். சத்தமில்லாத பாருக்கு செல்லலாம் என்றாள். நாங்கள் வெளியே வந்து ஆட்கள் அதிகமில்லாத ஒரு மதுபானவிடுதியை தேடினோம். சிலநிமிட நடைக்கு பின் நான்கு டேபிள்கள் மட்டும் கொண்ட ஒரு சிறிய இசக்காயாவை கண்டடைந்தோம். ஷாக்கே குடிக்கலாம் என்றாள். ஒரு போத்தல் கேட்டேன். வந்தவுடன் அவளது சிறிய கிளாஸில் மெல்ல ஊற்றினேன். லவ் யூ.. பேபி எனும் ஜே பாப் பாட்டை முணுமுணுத்தாள். கம்பாய் என்ற பின் உடனடியாக குடித்தாள். மேலும் மேலும் ஊற்ற ஊற்ற குடித்துகொண்டே இருந்தாள். நேரம் ஓடிக்கொண்டிருந்தது.

இசூமி, நாம் செல்லலாம். இனியும் தாமதித்தால், இறுதி ரயிலை நான் தவறவிட நேரிடும்

போனால் போகட்டும் விடு.

இங்கிருந்து மியோதென் வரை நான் டாக்ஸியில் செல்வது எளிதல்ல.

என் மீது அன்பை பொழிபவன் நீ. உன்னை ரயில் நிலைய பெஞ்சில் உறங்கவிடுவேனா? . நாளை உனக்கு விடுமுறை தானே? என்னுடன் தங்கு. கண்கள் ரோஸ் நிறத்துக்கு மாறியிருந்தது. பணிப்பெண்ணை அழைத்து, “சூடான ஷாக்கே இரண்டு கிளாஸ்என்றாள்.

அந்த டிசம்பர் மாத குளிருக்கு சூடு செய்யப்பட்ட அந்த ஷாக்கே இதமாக இருந்தது. பாரில் கூட்டம் குறைந்திருந்ததால், இசை காதில் விழுந்தது. வெகு நேரமாகிவிட்டதை உணர்ந்த நான்,.சரி..நாம் இனி கிளம்பலாம் என்றேன்.

இருவரும் இறங்கி நடந்தோம். மணி பனிரெண்டரையை தாண்டியிருந்தது. தோக்கியோவின் டிசம்பர் மாத குளிர் ஜெர்கினை எல்லாம் தாண்டி ஊடுருவியது.  இசூமிக்கு கால்கள் பின்னியது. நினைத்ததுபோலவே இறுதி ரயிலும் போயிருந்தது. சாலையில் இரயிலை தவறவிட்டவர்கள் டாக்ஸிக்காக நின்றனர்.

இசூமியின் வீடு சிபுயாவில் இருந்து டாக்ஸியில் 15 நிமிடம் ஆனது. கதவை திறக்கமுடியாமல் தள்ளாடிய இசூமியிடம் சாவியை வாங்கி திறந்தேன். மன்னித்துகொள், இன்று உன்னை என்னால் உபசரிக்க இயலவில்லை என்றாள்.ஒரே ஒரு ரூம் கொண்ட அபார்ட்மென்ட்.. மிகச்சிறிய வீடு. வீடெங்கும் இசை தட்டுக்களும், புத்தகங்களும் இரைந்து கிடந்தது.  நான் ஷோபாவில் படுத்துகொள்கிறேன். நீ படுக்கையில் படு என்றாள். படுக்கை முழுவதும் கோலே ரோஜாவின் வாசம்.

இவ்வளவு வருடங்களுக்கு பிறகும் ஷாக்கே எனக்கு ஒத்துக்கொள்வதில்லை. படுத்தால் போதும் என்று இருந்தது. எப்போது தூங்கினேன் என்றே தெரியவில்லை. திடீரென்று தொடு உணர்வு ஏற்பட்டு விழிப்பு வந்ததது, அப்போதுதான் குளித்துவிட்டுவந்திருந்த இசூமி வெள்ளை துண்டு மட்டும் உடுத்தியிருந்தாள், என் மேல் சாய்ந்து எனது உதடுகளில் தனது உதட்டை பொருத்தினாள். எனது காதுதுவாரங்களில் முத்தம் கொடுத்தாள். முகம்முழுவதும் முத்தம் அளித்தபடியே இருந்தாள். இசூமி என்று பிதற்றியவனாய் இரு கைகளாலும் அவளை இழுத்து அணைத்துகொண்டேன். முடிவதை போல் ஒளிர்ந்த கணங்களில் எல்லாம் புதிதாய் தொடங்கினாள். முழுவதுமாய் கட்டுக்குள் சென்றவனாய், அவளது தீவிரத்தை கண்டு திகைத்திருந்தேன். அந்த இரவு விடியபோவதில்லை என்று தோன்றியது.

எழுந்து மணி பார்த்தபோது மணி ஏழாகியிருந்தது. எனக்கு முன்பே இசூமி எழுந்திருந்தாள். கழிவறை போய்விட்டு வந்தபோது காபி தயாரித்திருந்தாள் இசூமி. இருவரும் ஏதும் பேசிகொள்ளவில்லை. குடித்துவிட்டு கிளம்பினேன். அந்த வாரம் முழுக்க போனில் பேசிக்கொள்ளவில்லை. அவளாக தொடர்பு கொள்ளட்டும் என்று காத்திருந்தேன். ஆனால் இருப்பு கொள்ளவில்லை. நானே தொடர்பு கொண்டபோது போன் அணைக்கப்பட்டிருந்தது. கொஞ்சம் கோபம் வந்தது. ஆனால், இசூமி அப்படிதான். இனி அவளாக தொடர்புகொண்டால்தான். உண்டு  

ஏறக்குறைய மூன்று மாதங்கள் கழித்து காஸ்பானிக் இன்றுதான் செல்கிறேன். வழக்கம்போல் இசை அலறிகொண்டிருந்தது. பெரும்பாலோனோர் ஆட தொடங்கியிருந்தனர். ஜார்ஜ் தனியாக அமர்ந்து குடித்து கொண்டிருந்தான். பார்க்காதது போல் கடந்து நடந்தேன். ஆனால், அவன் என்னை பார்த்துவிட்டு எப்படியிருக்கிறாய் நண்பா என்றான்.. நிறைய குடித்திருக்கிறான் என்பது கண்களில் தெரிந்தது.

இசூமி ஒரு தேவதை. அவளுக்கு இப்படி நேர்ந்திருக்கவேண்டியதில்லை

ஏன், இசூமி எங்கே?

உனக்கு தெரியாதா? அவள் ஒரு மாதம் முன்பு பிலிப்பைன்ஸ் சென்றிருந்தாள். அங்கு நண்பர்களுடன் காரில் சென்றபோது பின்னால் வந்த டிராக் மோதிவிட்டது. பார்பெக்யூ போடுவதற்க்காக வைத்திருந்த கெரெஸின் கார் டிரங்கில் இருந்திருக்கிறது. விபத்து ஏற்பட்டு, அது வெடித்து எரிந்ததில், காரில் இருந்த அனைவரது உடலும் கரியாகிவிட்டது. அவளது பெற்றோர்கள் அங்கே சென்று மீண்டும் எனது இசூமியை எரியூட்டி சாம்பலுடன் திரும்பினர், என்றான்

அதிர்ந்துபோய் நான், என்னுடைய மொபைலில் தட்டி திரும்பவும் மெயிலை பார்த்தேன். இந்த வாரம் வெள்ளியன்று, நாம் காஸ்பானிக்கில் சந்திக்கலாமா ? என்றிருந்தது.

- கபாடபுரம் - 2018