Friday, February 5, 2021

இசூமியின் நறுமணம் - விமர்சனம் - எழுத்தாளர் ப.தெய்வீகன்

 1986 இல் ஐரோப்பிய தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தினால் கொண்டுவரப்பட்ட புலம்பெயர் எழுத்தாளர்களது முதலாவது சிறுகதைத்தொகுதியான "மண்ணை தேடும் மனங்கள்" நூல் முதற்கொண்டு கடந்த 35 வருடங்களில் எத்தனையோ சிறுகதைப்பிரதிகள் புலம்பெயர்ந்துள்ள எழுத்தாளர்களிடமிருந்து வெளிவந்துவிட்டன. இந்த புலம்பெயர் சிறுதைகளில் பெரும்பாலானவை சுற்றி சுற்றி ஒரேவட்டத்துக்குள் ஓடிக்கொண்டிருந்தாலும், அவற்றுக்கு இன்றும் ஒரு கவனிப்பு இருந்துகொண்டுதானிருக்கிறது. தங்களது எளிமையான - வழமையான - போராட்டம் நிறைந்த வாழ்வினை இலக்கியம் எவ்வாறு நுட்பமாக அவதானிக்கிறது என்று புலம்பெயர்ந்துள்ளவர்களும், இன்னமும் ஆச்சரியங்களை பொழிந்துகொண்டிருக்கும் வெளிநாட்டு வானத்தின் கீழ் புதிய கதைகள் ஊற்றெடுத்துக்கொண்டுதானிருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் தாயகத்தில் உள்ளவர்களும், புலம்பெயர் கதைகளின் மீது தங்கள் அதீதமான கவனத்தை குவித்துவைத்திருக்கிறார்கள்.

இவ்வாறான கவனத் திரட்சியின் முன்னிலையில் வைத்துப்பார்க்கக்கூடிய ஒரு சிறுகதைத்தொகுதியாக செந்தில்குமாரின் "இசூமியின் நறுமணம்" அண்மையில் படிக்கக்கிடைத்தது. போர்நெடியில்லாத புலம்பெயர் பிரதியொன்றை படிக்கும்போது அந்த உணர்வே வித்தியாசமானதாக இருந்தது.
செந்திலின் இந்த முதலாவது சிறுகதைத்தொகுதியிலுள்ள பன்னிரு சிறுகதைகளில், பத்துக்கதைகள் ஜப்பானிய நிலத்தில் நிகழ்பவை. தொழில் நிமிர்த்தம் ஜப்பானில் பல ஆண்டுகளாக வசித்தவருகின்ற செந்தில் எழுதியுள்ள இந்த சிறுகதைகள் அனைத்தும், ஜப்பானிய மண்ணை தமக்குள் ஈர்த்துக்கொள்வதற்கு தாகத்தோடு அங்கலாய்த்தபடியுள்ளன. ஆனால், அவை ஜப்பானிய கதை மாந்தர்களை, அந்த தேசத்தின் சுவாத்தியத்தை, கலாச்சாரத்தை இன்னபிற விடயங்களை அனைத்தையும் மிகவும் மெல்லிதாகத்தான் உள்ளீர்த்துக்கொண்டு, அந்த ஈரத்தினை வாசகனோடு பகிர்ந்துகொள்கின்றன. ஆழமான அவதானிப்புக்களைக்கொண்டவை என்று கூறிவிடமுடியாது.
தொகுப்பிலுள்ள பல கதைகளிலும், எல்லோருக்கும் பொதுவான வாழ்வின் தருணங்களை சமரசங்கள் நிறைந்த சாதாரண பாத்திரங்கள் வழியாக செந்தில் எழுதிச்செல்கிறார். அநேக ஜப்பானிய கதைகளிலுள்ள கதாபாத்திரங்களின் பெயர்களையும் ஊர்ப்பெயர்களையும் களைந்துவிட்டுப்பார்த்தால், அவை தமிழக சூழலில் நடைபெறக்கூடிய சாதாரணமானவைதான். ஆனால், செந்திலுக்குள் இருக்கக்கூடிய கதைசொல்லி, எல்லாக்கதைகளையும் கலையாத கனவுகளின் வழியாக வாசகனை அழைத்துச்செல்வதற்கு முடிந்தவரை முயற்சிசெய்திருக்கிறது.
தொகுதியின் கடைசிக்கதையான "நடு ஆணியாய் எஞ்சியவர்கள்" ஜப்பானிய நிலத்துக்குரிய இலட்சணங்களோடு இலக்கியத்துக்கு நெருக்கமாகிவிடுகிறது. "இசூமியின் நறுமணம்" போன்ற எத்தனையோ கதைகள் சமகாலத்தில் வெளிவந்துவிட்டபோதும், செந்திலின் கதைமொழி அந்தக்கதையை முழுமையாக உணரவைக்கிறது. ஜப்பான் நாடு தற்கொலைகளுக்கு பெயர்போன தேசம். ரயிலுக்கு முன்னால் வீழ்ந்து தங்களை மாய்த்துக்கொள்வது என்பது, அந்நாட்டில் சதா இடம்பெறுகின்ற சடங்குபோலாகிவிட்ட ஒன்று. இந்தப்பிரச்சினையை ஆழமாகச் சென்று பேசியிருக்கவேண்டிய "அன்பும் அறனும் உடைத்தாயின்" - என்ற சிறுகதை, பறக்க எழும்பிய வேகத்திலேயே வீழ்ந்துவிடுகிறது. ஏனைய கதைகளில் பெரும்பாலானவை உணர்த்தப்படுபவையாக அன்றி, சொல்லப்படுபவையாக நகர்கின்றன.
செந்திலிடமுள்ள நுட்பமான அவதானிப்புக்கள் - கதைக்களத்துக்குரிய கச்சாப்பொருட்கள் அனைத்தும் - இந்தத்தொகுதியிலுள்ள பல கதைகளில் துண்டு துண்டாக ஆங்காங்கே நின்று கண்சிமிட்டுகின்றனவே தவிர, அவற்றுக்குரிய வெளிச்சம் போதவில்லையோ என்று உணரவைக்கின்றது. அந்தவகையில் பார்க்கும்போது, ஒரு முதல் தொகுப்புக்குரிய செல்லமான குறும்புத்தனங்களோடுதான் இசூமியின் நறுமணத்தை படிக்கவேண்டியுள்ளது.
மேலோட்டமாக சொல்லிச்செல்கின்ற கதைகளின் ஆழத்துக்கு இறங்குவதும், கதைகளின் முடிவினை கதைகளே முடிவுசெய்வதற்கு அனுமதியளிப்பதும் கைகூடினால், செந்திலின் கதைகளுக்கு புதிய பரிணாமம் கிடைக்கும். கூடவே, புலம்பெயர் தேசத்திலிருந்து தமிழ் இலக்கியத்திற்கு புதியதொரு கதைசொல்லியும் கிடைப்பான்.
வாழ்த்துக்கள்
செந்தில்!

No comments:

Post a Comment

Write your valuable comments here friends..