Wednesday, February 10, 2021

இசூமியின் நறுமணம் - சிறுகதை தொகுப்பு - வாசிப்பு அனுபவம் - எழுத்தாளர் திருசெந்தாழை

 

சுயவிருப்பங்களுக்கும்,குற்றவுணர்ச்சிக்கும் நடுவே இருக்கின்ற கோடு மிகமிக மெல்லியது.நமது விருப்பத்தின் மீதான அறமதிப்பீடுகளை நாம் பிறரிடமே எதிர்பார்க்கிறோம். நிறைவேறிய விருப்பங்கள் மிக லேசானவை.ஞாபகத்தில் அவை மேகமென தவழ்கின்றன.அதனை எப்போதும் தன்னுடன் இறுக்கக் கட்டிக்கொள்ள விழைகின்ற மனிதமனம் குற்றவுணர்ச்சி எனும் சரடையும் எப்போதும் எடுத்துக்கொள்கிறது.

" எனக்கொன்றும் அவ்வளவு வயதாகவில்லை
ஆனாலும் குற்றவுணர்ச்சி எனும் ஊன்றுகோல் இல்லாமல் என்னால் நடமாடமுடிவதில்லை" எனும் வி.என்.சூர்யாவின் வரிகளிலிருக்கும் உண்மையானது சமகால மனங்களிலிருந்து பெறப்பட்ட ஒன்று.
குற்றவுணர்ச்சி எனும் ஜாடியில் இட்டுவைக்கப்படுகின்ற ஞாபகங்களில் துருப்பிடிப்பதேயில்லை. நினைவுகளிலிருக்கும் உயிர்ச்சத்துமிக்க பகுதியாகவும் குற்றவுணர்வே இருக்கிறது.
" இஷுமியின் நறுமணம்" தொகுப்பிலிருக்கும்,தானிவத்தாரி சிறுகதை சமீபகால சிறுகதைகளுல் முக்கியமானது மட்டுமல்ல அந்த தொகுப்பிலேயே தனித்துவமானதும் கூட
தனது கடந்தகால வாழ்வைக் கூறுகிறாள் ஒருத்தி.குடும்ப அமைப்பிற்கு வெளியே அவள் மேற்கொண்ட அந்த உறவு வெறும் பத்து நாட்களே நீடிக்கிறது.அவள் தனது குடும்பத்திற்கு திரும்பும்போது அவளது கணவன் அவளைப் புறக்கணித்துச் செல்கிறான்.தனது குழந்தையோடும்,வயதான தாயோடும் வாழ்கின்ற அவள் தனது வாழ்வை நொறுக்கிய அந்த பத்து நாட்களை முற்றிலும் ஞாபகத்திலிருந்து அழிக்க விரும்புகிறாள்.

பேசிக்கொண்டே நடந்து வருகின்ற அவள் தூரத்தில் ஒரு பறவையின் குரலைக் கேட்கிறாள்.தன்னை மறந்து புன்னகைத்தபடி, " சிமுரா பாடுவதற்குமுன் இப்படித்தான் ஒருமுறை தொண்டையை கணைத்துக் கொள்வான்.அது அவ்வளவு வசீகரமாக இருக்கும்" என்கிறாள்.
குற்றம் என எண்ணுகின்ற ஒரு செயல் ஞாபகத்தில் எப்படி இவ்வளவு துல்லியமான அடுக்குகளாக பதிந்திருக்கிறது. நாம் குற்றத்தின் இதழ்களை எப்போதும் வருடுபவர்களாக இருக்கிறோம்.குற்றம் என்பது நவீன அறங்களில் சிக்கலான வடிவம் கொண்ட ஒன்று.
" இருளைப் போல வெளிச்சத்திற்கு மீட்சி தருவது வேறில்லை" என்கின்ற போகனின் வரியில் அறமும் குற்றமும் தங்களை ஓருடலாகவே பிணைந்துகொள்கின்றன.
குற்றங்களை ஒப்புக்கொள்கிறவனுக்கும்,எழுத்தாளனுக்கும் பெரிய வேறுபாடில்லை.
படைப்பில் தன்னை அப்படியே முன்வைக்கின்ற படைப்பாளிகளை மதிப்பிடவே நாம் அஞ்சுகிறோம்.ஜி.நாகராஜனில் துவங்கி திருடன் மணியம்பிள்ளை வரை எப்போதும் வசீகரமான ஒரு தலைமுறையே இதில் நிறைந்துள்ளது.
ஏனெனில், கலை மட்டுமே குற்றங்களை ஒப்புக்கொள்கிறவனை கௌரவித்து விடுதலை செய்கிறது.
கலைவழியே முன்வைக்கப்படும் குற்றங்களிலிருந்து வழிகின்ற கண்ணீரைப்போல தூயது வேறில்லை.

எழுத்தாளர் திருசெந்தாழை

No comments:

Post a Comment

Write your valuable comments here friends..