Sunday, March 7, 2021

இசூமியின் நறுமணம் - சிறுகதை தொகுப்பு - விமர்சனம் - கனலி விக்னேஷ்வரன்

ரா.செந்தில் குமார் எழுதிய 'இசூமியின் நறுமணம்' என்கிற சிறுகதையைத் தொகுப்பை மூன்று தினங்களுக்கு முன்பு வாசித்து முடித்தேன்.

வாசித்தவுடன் எப்போதும் கொஞ்சம் மனதில் தேக்கி வைத்துத் தயங்கித் தயங்கி தான் கொஞ்சமாக எழுதவே தோன்றுகிறது.
இதிலிருக்கும் பன்னிரெண்டு சிறுகதைகளில் நான்கு சிறுகதைகள் கனலியின் இணையதளத்தில் வெளிவந்தவை. அதிலும் 'இசூமியின் நறுமணம்' என்கிற சிறுகதை வெளிவந்து பரவலாக அனைவரின் கவனத்தையும் பெற்றது. இதிலிருக்கும் இன்னொரு சிறுகதையும் கனலி தளத்தில் வந்திருக்க வேண்டும் ஆனால் அதில் சில மாற்றுக் கருத்துகள் எனக்கும் செந்திலுக்கும் வந்ததால் அந்த சிறுகதை மட்டும் வெறு ஒரு இணையதளத்தில் வெளிவந்தது.
கனலியில் வெளியான சிறுகதைகள் மற்ற இணையதளத்தில் வெளியான சிறுகதைகள் அனைத்தையும் நான் ஏற்கனவே இணையத்தில் வாசித்திருந்தாலும் மீண்டும் ஒரு முறை தொகுப்பாகப் புத்தகத்தில் வாசிக்கும் போது இதிலிருக்கும் சிறுகதைகள் இன்னும் வாசிப்பிற்கு மனதிற்கு நெருக்கமாக அமைகிறது.
தொகுப்பில் இருக்கும் பன்னிரண்டு சிறுகதைகளும் நேர்கோட்டுச் சிறுகதைகள் தான்.சிறுகதைகளின் வகைமைகளில் செந்தில் வாசகர்களுக்கு எந்தவித நெருக்கடியும் தரவில்லை. சிறுகதைகளில் பெரிய பெரிய வார்த்தை சொல்லாடல்களும் இல்லை. ஒரு தேர்ந்த ஓவியனுக்கு ஒரு ஓவியத்தை வரையத் தொடங்கும் போது ஒருவிதமான நிதானம் இருக்கும். இன்னும் கொஞ்சம் ஓவியம் அவனுக்குக் கைகூடி வரும்போது அவனுக்கும் ஓவியத்திற்கும் ஒரு நேர்த்தி கிடைக்கும். கடைசிக் கட்டத்தில் ஓவியம் முடிவுற்ற வேலையில் ஒன்று ஓவியனுக்கு தன் மனதில் ஏற்கனவே வரைந்து ஓவியத்தை அதிலும் வரைந்திருப்பான் அல்லது அதன் வடிவம் முற்றிலும் மாறிய ஒன்று அங்கே நிகழ்ந்திருக்கும். செந்திலுக்கு இப்படித்தான் நிகழ்ந்திருக்கும் என்று தோன்றுகிறது. பன்னிரண்டு சிறுகதைகளை மறுவாசிப்பு செய்யும் போது நிச்சயம் சில சிறுகதைகள் மீது அவருக்கே மாற்றுக் கருத்துகள் வரலாம் என்று தோன்றுகிறது. ஆனால் இதில் ஒன்றும் தவறில்லை என்றே நினைக்கிறேன். தொகுப்பிலிருக்கும் அனைத்து சிறுகதைகளும் சிறப்பாக அமைய வேண்டும் என்கிற நிர்ப்பந்தம் எந்தவொரு தொகுப்புக்கும் தேவையில்லை என்றே நினைக்கிறேன்.சில நேரங்களில் அத்தகைய சரியாக வராத சிறுகதைகள் தான் ஒரு எழுத்தாளர்களின் வெற்றியும். ஒருவேளையில் அடுத்த முறை அவற்றைப் பற்றி அவர்கள் அவர்களுக்குள்ளேயே ஒரு விமர்சனத்தை எழுப்பி இன்னும் முற்றிலும் புதிய ஒரு படைப்பின் வடிவத்திற்கும் அதன் அழகியல் வடிவத்திற்கும் அவர்கள் பயணம் போகலாம்.
தொகுப்பில் எனக்குப் பிடித்த சிறுகதைகள் எனில் இவற்றையெல்லாம் சொல்வேன்.
இசூமியின் நறுமணம்
தானிவத்தாரி
மடத்து வீடு
செர்ரி ஃப்ளாசம்
மலரினும் மெல்லியதாக
நடு ஆணிகளாய் எஞ்சியவர்கள்.
இந்தச் சிறுகதைகளை நான் தொகுப்பில் முன்னே கொண்டு வைப்பதற்குக் காரணங்கள் மிகவும் எளியது அவைகள் இவற்றின் நீளம், கதைகளின் கரு, கடைசியாகச் சிறுகதைகளின் இலக்கணமாக இங்கே அடிக்கடி பேசப்படும் ஒரு திருப்பத்தை வாசகனுக்குத் தருவது. இரண்டாவது இந்த அனைத்து சிறுகதைகளிலும் ஒருவிதமான தத்துவார்த்த உரையாடல்களைச் செந்தில் முயற்சி செய்து பார்த்திருக்கிறார். இத்தகைய முயற்சிதான் இந்த அத்தனை சிறுகதைகளுக்கும் ஒரு அழகியலைத் தருகிறது. மூன்றாவது செந்திலின் அனைத்து சிறுகதைகளிலும் தவறாமல் உறவுச் சிக்கல்கள் வந்தாலும். இந்தச் சிறுகதைகளில் வரும் உறவுச் சிக்கல்களும் அவற்றைச் சிறுகதைகளில் எதோ ஒரு கணத்தில் சேர்ந்து அல்லது விலக்கி காட்டுகிறார். இந்தச் சேர்ப்பு அல்லது விலகல் தான் செந்திலின் பலமும் கூட என்று நினைக்கிறேன். அவருக்கு மெல்லிய மூடிச்சுகளை போடவும் தெரிகிறது அவற்றைச் சரியாக தொந்தரவு இல்லாமல் கதாபாத்திரங்களுக்கு நெருடல் இல்லாமல் அவிழ்க்கவும் தெரிந்திருக்கிறது. நிற்க! இங்கேயும் செந்திலுக்கு ஒரு வேண்டுகோள் வாசகனுக்கு எல்லா நேரங்களிலும் நெருடல் இல்லாமல் முடிச்சுகளை அவிழ்க்க பிடிப்பதில்லை உண்மையில் அந்த முடிச்சுகளை இன்னும் இறுகப் போடவதை கூட வாசகன் சில நேரங்களில் விரும்புகிறான்.
இன்னொருபுறம் செந்தில் தொடர்ந்து ஜப்பானியச் சிறுகதைகளை எழுதுவதால் அவரை ஜப்பானியச் சிறுகதைகள் அதிகம் எழுதுபவர் என்கிற சின்ன விமர்சனம் இருக்கிறது. ஜப்பானிய இலக்கியத்துத்தை தீவிரமாகப் படிக்கும் சிலருக்குத் தெரிந்திருக்கும் அவர்களின் வடிவத்திற்கும் செந்தில் எழுதும் ஜப்பானியச் சிறுகதைகளுக்கும் வடிவத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன என்று. செந்தில் ஜப்பானிய நிலத்தை எடுத்துக் கொள்கிறார். அங்கிருக்கும் மனிதர்களின் பெயர்களை எடுத்துக் கொள்கிறார் தவிர அவரின் அத்தனை கதைகளின் பாடு பொருள் என்பது மறைந்திருக்கும் ஒரு தமிழ் நிலம் அதன் மனிதர்களும் என்றே நான் நினைக்கிறேன்.
ஒரு எழுத்தாளன் எல்லாவற்றையும் உன்னிப்பாகப் பார்க்க நேரிட்டால் போதும் அதுவே அவரின் சிறுகதைகளை இன்னும் சிறப்பாக எழுதித் தந்துவிடும் என்று தோன்றுகிறது. செந்திலுக்கு எல்லாவற்றையும் உன்னிப்பாகப் பார்க்கும் கலை கைவந்துள்ளது. அதனால் தான் அவரின் அத்தனை சிறுகதைகளில் வரும் மனிதர்கள், அவர்களின் உறவுகள், அவர்களின் உடல் சார்ந்த நெருக்கடிகள், நவீன வாழ்வின் அகம் சார்ந்த நெருக்கடிகள்,சுற்றுப்புறச் சூழலும், கீழ்மைக்கும் மேன்மைக்கும் மாறும் கணங்களும் இப்படி எல்லாவற்றையும் தன் வாழ்வில் செந்தில் நன்கு கூர்ந்து கவனமாகப் பார்த்துள்ளார் அல்லது ரசித்துள்ளார். அந்தக் கவனம் எனக்குப் பிடித்த மேலே உள்ள சிறுகதைகளில் மட்டுமல்ல அனைத்து சிறுகதைகளிலும் அவருக்குச் சரியாக உதவியுள்ளது.
கடைசியாகச் செந்தில் தரிசனம் கிடைக்கும் மேன்மை கதைகளிலிருந்து சற்றே கீழ்மைக்கும் போகும் கதைகளை இன்னும் நிறைய எழுத வேண்டும் என்று மட்டும் கேட்டுக் கொள்கிறேன். சிறுகதைகளின் வடிவம் சார்ந்த சில சிறுகதைகள் கூட அவர் முயற்சி செய்யலாம். கொஞ்சம் தான் இருக்கும் இலக்கிய பள்ளியின் கவனக்குவிப்பில் இருந்து வெளியே வந்து. (பள்ளியிலிருந்து அல்ல)

No comments:

Post a Comment

Write your valuable comments here friends..