எழுபதுகளின்
இறுதியில் இயக்குநர் மகேந்திரனால் எழுப்பபட்ட யதார்த்த சினிமாவின் அலை, மற்றும்
அந்த திரைப்படங்களுக்கு மக்கள் கொடுத்த பேராதரவு ஆகியவை, சில கேள்விகளை நம்முள்
எழுப்பாமல் இல்லை. இத்தகைய ஆதரவு, தரமான படங்களுக்கு கிடைக்ககூடும் என்றால், தமிழ்
திரையுலகம் ஏன் தடம் மாறியது? ஏறக்குறைய
இதே நேரத்தில் மலையாள திரையுலகில் நிகழ்ந்த யதார்த்த சினிமாவின் வெற்றியை
தொடர்ந்து மலையாள திரையுலகம் தக்க வைத்துக் கொண்டது. இதன் முலம், தரமான சினிமா
ரசனையை, ரசிகர்களிடம் வளர்த்தெடுத்தது. இந்திய யதார்த்த சினிமாவின் அடையாளமாக
மலையாள சினிமா மாறிப் போனது.
நாம், அந்த பாதையில்
பயணிக்க முடியாமல் போனதற்க்கு முக்கிய காரணம், ஏ.வி.எம், தேவர் பிலிம்ஸ், பாலஜியின் சுரேஸ் ஆர்ட்ஸ் போன்ற ஒரு சில பெரிய நிறுவனங்களே.நல்ல படங்களின்
வெற்றியை தொடர்ந்து, இந்த நிறுவனங்கள் தயாரிக்கும் மசாலா
திரைப்படங்கள் வெளியிடப்படும். நினைத்தே பார்க்கமுடியாத லாபத்தை, விநியோஸ்தர்கள்,
தயாரிப்பாளர்கள், மற்றும் திரையரங்கு உரிமையாளர்களுக்கு சம்பாதித்து கொடுத்து
விடும். ருசி கண்ட பூனையாக நமது
முதலாளிகள், இந்த இயக்குநர்களையும், நடிகர்களையும் சுற்றி வர தொடங்குவார்கள்.
நடிகர்களின் சம்பளமும் பல மடங்காக ஏற்றப்படும்.
இப்படிதான் தொடர்ந்து
நிகழ்ந்தது. எழுபத்தி எட்டில் மகேந்திரனின் முள்ளும் மலரும், எழுபத்தி ஒன்பதில்
மகேந்திரனின் உதிரிப்பூக்கள் மற்றும் ருத்ரைய்யாவின் அவள் அப்படிததான் போன்ற
படங்கள் ஒரு மாற்று சினிமாவிற்கான அடித்தளத்தை ஏற்படுத்தியிருந்த்து. ஆனால்,
எண்பதின் ஆரம்பத்திலேயே பாலஜியின் தயாரிப்பில் ரஜினி நடித்து வெளிவந்த பில்லா பெற்ற
வணிக வெற்றி, மிகப் பெரிய சபலத்தை ஏற்படுத்தியது.
அதை தொடர்ந்து
எண்பதில் வெளிவந்த மகேந்திரனின் ஜானி, பூட்டாத பூட்டுக்கள், நெஞ்சத்தை கிள்ளாதே போன்ற திரைப்ப்டங்கள் மாற்று சினிமாவின் வெற்றியை தக்க
வைத்துக் கொள்ள போராடின. ஆனால் எண்பதின் இறுதியில் வந்த, ஏவி.எம்மின் வணிக படமான முரட்டுக்காளை
பெற்ற வெற்றி, மசாலா சினிமாவின் கவர்ச்சியை கம்பிரமாக நிறுவியது.
பிறகும், எண்பத்தி
ஒன்றில்(1981) வெளியான கமலின் ராஜபார்வை, மகேந்திரனின் நண்டு, ராபர்ட் ராஜசேகரனின்
பாலைவனச் சோலை, ராம நாராயணனின் சுமை (ஆமாம், பிற்பாடு பாம்பை டைப் அடிக்க விட்ட
அதே இயக்குநர் தான்!) போன்ற படங்களும், எண்பத்தி இரண்டில் (1982)வெளியான,
மகேந்திரனின் அழகிய கண்ணே, மெட்டி, பாலு மகேந்திராவின்
மூன்றாம் பிறை(பொன்மேனி உருகியதை மன்னித்து விட்டால், நல்ல படமே!) போன்ற படங்கள்
தமிழில் மாற்று படங்களுக்காக வாள் உயர்த்தி போராடி கொண்டிருக்கையில், எண்பத்தி
இரண்டின் இறுதியில் (ஆகஸ்ட் 15) ஏவி.எம்மின் தயாரிப்பில், கமல்ஹாசனின்
இடுப்பசைவில் வெளிவந்த சகலகலா வல்லவன் பெற்ற வெற்றி, மாற்று சினிமாவின்
இடுப்பெலும்பை உடைத்து போட்ட்து.
நல்ல சினிமாவிற்கான
தேடலில், உள்ளே வந்த கமலஹாசனையே, மசாலா சினிமாவின் பக்கம் துரத்திய பெருமை, ஏ.வி.எம்
நிறுவனத்தையே சாரும். ரஜினி படங்கள் பெற்ற வணிக வெற்றிகளும், சேர்ந்த ரசிக
பட்டாளமும், கமலை சபலப்படுத்தியது. எண்பத்தி
இரண்டின் ஆரம்பத்திலேயே வந்து வசூலில் சாதனை செய்த ஏ.வி.எம் தந்த ரஜினியின்
போக்கிரி ராஜா, நாம் போகிற வழி தவறோ என்ற சலனத்தை கமலுக்கு ஏற்படுத்தியதின் விளைவே
சகலகலா வல்லவன்.இப்படியாக ரஜினிக்கும், கமலுக்கும் ஏற்பட்ட போட்டியை வெற்றிகரமாக,
தமது கல்லாவை நிரப்பிக் கொள்ள பயன்படுத்தியது ஏ.வி.எம் நிறுவனம். தொடர்ந்து,
1983லும், கமல்ஹாசன் நடிக்க ஏ.வி.எம் நிறுவனம் தயாரித்த தூங்காதே தம்பி தூங்காதே
வெளிவந்து, கமலுக்கு, கொஞ்சம் நஞ்சம் இருந்த கலை ஆர்வத்தையும் ஒழித்தது.
இந்த நேரத்தில்
ரஜினி, விட்டகுறை தொட்டகுறையாக, மகேந்திரனின் நல்ல சினிமா மேல் இருந்த வைத்து
மதிப்பில், தமது ஆரம்பக் கால நாடகம் ஒன்றை
மகேந்திரன் இயக்கத்தில் எடுக்க விரும்பினார். அதுதான் கை கொடுக்கும் கை என்ற
பெயரில் வெளிவந்த திரைப்படம். மகேந்திரன் தான் நினைத்தபடி படத்தை எடுக்க முடியாதபடி ரஜினியின் இமேஜ் வளர்ந்து இருந்தது. ரஜினிக்காக படத்தை
இயக்க ஒப்புக்கொண்ட மகேந்திரன் பல்முனை தாக்குதல்களை தாக்குப்பிடிக்க முடியாமல்,
படத்தை எப்படியாவது முடித்தால் போதும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டார். படம், ரஜினி
ரசிகர்களையும் திருப்திபடுத்தாமல், மகேந்திரனின் ரசிகர்களையும் திருப்திபடுத்த முடியாமல், தோல்வி கண்டது. திரும்பவும் ஏ.வி.எம்
நிறுவனம், எண்பத்தி நாலின் இறுதியில், ரஜினியை வைத்து தமது ஆஸ்தான இயக்குநர்
எஸ்.பி. முத்துராமனின் இயக்கத்தில் நல்லவனுக்கு நல்லவனை வெளியிட, படம் வரலாறு காணாத வெற்றியை பெற்றது. இதோடு, ரஜினியின் சோதனை முயற்சிகள்
முடிவுக்கு வந்தன. அதற்குப் பிறகு தனக்குரிய வழி என்றுதான் முடிவு செய்ததை விட்டு
ரஜினி வெளியே வரவில்லை.
இப்படியாக தமிழ்
திரையுலகின் எல்லா நல்ல முயற்சிகளையும் பெரிய நிறுவனங்கள் தோற்கடித்தன. இந்த
நிறுவனங்கள், சினிமாவை ஒரு தொழில் என்ற கண்ணோட்டத்திலேயே அணுகின. போட்ட முதலீட்டை
வெற்றிகரமாக லாபத்துடன் திரும்ப எடுக்க, பாதுகாப்பான கதைக்களன்களையே தேர்வு
செய்தன. தேவர் பிலிம்ஸின் சாண்டோ சின்னப்ப தேவ்ர், மெய்யப்ப
செட்டியார் போன்றவர்களின் கலைவேட்கை மற்றும் நுட்பத்தை விட, தொழில் அறிவே மீண்டும்,
மீண்டும் புகழ்ந்துரைக்கப் பட்ட்து. இவற்றோடு போட்டியிட இயலாத, மற்ற
தயாரிப்பாளர்களும், எதற்கு வம்பு என்று இவர்கள் போட்ட ராஜபாட்டையிலேயே பயணிக்க
தொடங்கினர்.
தப்பித்தவறி வந்த ஒரு
சில நல்ல படங்கள், பெரும்பாலும், சினிமா தெரியாத புதிய தயாரிப்பாளர்களாலேயே வெளிவந்தன.
எண்பத்தி நாலின் இறுதியில், பெரிய முதலீட்டிற்க்கு வழியில்லாத
தயாரிப்பாளர்களுக்கு, ஆபத்பாந்தவனாக இளையராஜா இருந்தார். ஆர். சுந்தர்ராஜன்
இயக்கத்தில் வரிசையாக படங்கள் வர தொடங்கின. நான் பாடும் பாடல், வைதேகி
காத்திருந்தாள் என்று தொடர்ந்து வந்த இந்த படங்களின் அச்சாணியே இளையராஜா தான்.
ஆரம்பத்தில் நல்ல கதையோடு வந்த படங்களுக்கு பக்கபலமாக இருந்த ராஜா, பெரிய கதைகள்
இல்லாது வெளிவந்த, இந்தக் காலக்கட்ட்த்தில் படங்களின் முதுகெலும்பாய் மாறிப் போனார். மதர்லேண்டு பிக்சர்ஸின்
கோவைதம்பி, ராஜாவிற்கு நன்றிக்கடனாய், கட்அவுட் வைத்து அடுத்த பட்த்திற்க்கும்
ராஜாவை உறுதி செய்துக் கொண்டார். எண்பத்தி ஏழு வரை தொடர்ந்த இந்த படங்களை, அதற்கு
பிறகு, ராமராஜன் கைப்பற்றிக் கொண்டார். பெரிய கதையோ, நடிப்போ தேவைப்படாத இந்த
படங்கள் வெற்றி பெற்றதற்கு ராஜாவின் இசையை தவிர வேறு எந்த நியாயமான காரணமும்
இல்லை. ஒரு பட்த்திற்க்கு நான்கு அல்லது ஐந்து பாடல்கள் மிக இனிமையாக த்ந்தார்
ராஜா. மக்கள் பாடல்களையே கேட்பதற்காகவே மீண்டும் மீண்டும் திரையரங்கிற்க்கு
படையெடுத்தனர்.
இப்படியாக தமிழர்களின்
சினிமா ரசனை தட்டையாக வார்த்தெடுக்கப்பட்டு, ஏறக்குறைய மாற்று முயற்சிகள் முடிவடைந்துவிட்ட
நிலையில், 87ன் இறுதியில் பாலுமகேந்திராவின் வீடு திரைப்படம் வந்தது. ஆனால் மசாலா
படங்கள் மூலம், மக்களின் ரசனையை மழுங்கடித்து வைத்து இருந்த பெரிய நிறுவனங்களின்
புண்ணியத்தில், வீடு, சந்தியா ராகம் போன்ற மாற்று முயற்சிகளும் பெரிய வணிக வெற்றி
பெறாது, துர்தர்ஸனின் மதிய நேர ஒளிப்பரப்போடு தமது ஆயுட்காலத்தை முடித்துக்
கொண்ட்து. ஒரளவு வணிக வெற்றியையும் பெற்று அதே சமயம் நல்ல முயற்சிகளையும் தொடர்ந்ததில்,
பாரதிராஜாவிற்கு முதல் மரியாதை, வேதம் புதிது போன்ற நடுவாந்திர திரைப்படங்கள்
சாத்தியப்பட்ட்து.