Sunday, September 23, 2012

வால்மார்ட்டும், பொன்வண்டு பனியன் போட்ட தொழிலாளியும் !

  
கூடங்குளத்தை எதிர்க்கிறீர்கள், ஆனால், சில்லறை வியாபாரத்தில் அந்நிய முதலீட்டை ஆதரிக்கிறீர்களே? என்கிறார்கள்.. இது என்னய்யா கதையா இருக்கு? அரசு எதை செய்தாலும் எதிர்க்க வேண்டும். அப்போதுதான் முற்போக்குவாதியா? ஒரு தெளிவு வேண்டாமா? கூடங்குளம் அணு உலையை ஏன் எதிர்க்கிறேன் என்று ஒரு பதிவே போட்டு விளக்கியாகி விட்டது. ரீடைல் வியாபாரத்தில் ஏன் அந்நிய முதலீட்டை ஆதரிக்கிறேன் என்ற எனது புரிதலை கிழே விளக்குகிறேன்.

1.    முதலில், ரீடைல் வியாபாரத்தில் முழுக்க முழுக்க அந்நிய முதலீடு என்பதே தவறு. இப்போது எப்படி, கார் மற்றும் மோட்டார் தொழிலில், அந்நிய -இந்திய கூட்டு முதலீடு செயல்படுகிறதோ அப்படிதான் ரீடைல் வியாபாரத்திலும், அந்நிய முதலீடு என்பது 51 சதவிகிதம்தான் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால், எந்த அந்நிய நிறுவனமும், உள்நாட்டு நிறுவனத்துடன் இணைந்துதான் இங்கு தொழில் செய்யமுடியும். 1991க்கு முன்பு நம் நாட்டில் வெறும் அம்பாசிடர் காரையும், ஃபியட்டையும் விட்டால் வேறு வழி கிடையாது. இன்றோ உலகத்தில் உள்ள அனைத்து பிராண்ட் கார்களும் இங்கு கிடைக்கிறது. இதை வாங்கி பயன்படுத்துபவர்கள் பெரும்பாலும் நடுத்தர வர்க்கம் தானே. இதே முறையில் ரீடைல் வியாபாரத்திலும், தரமான பொருட்களின் வருகையால், நேரடியாக பயன்பெற போவது நடுத்தர வர்க்கமே.


2.    விவசாய குடும்பத்தை சேர்ந்தவன் என்ற முறையில், விவசாயிகள், இந்த வியாபாரிகளிடம் படும் துன்பத்தை நேரில் கண்டு உணர்ந்தவன் நான். விவசாயிகளை போல இந்த நாட்டில் பாவப்பட்ட  மனிதர்கள் வேறு யாரும் கிடையாது. கஷ்டப்பட்டு நாளெல்லாம் உழைத்து, தாங்கள் விளைவித்த பொருட்களை விற்க, இந்த உள்ளூர் முதலாளிகளிடம் வந்து நின்றால், ஆயிரம் நொட்டாரம் சொல்லி, தட்டிக்கழித்து, கடைசியில் வேண்டா வெறுப்பாக வாங்கி கொள்வது போல் நடித்து, அடிமாட்டு விலைக்கு வாங்கி, கொள்ளை லாபம் வைத்து, நடுத்தர வர்க்கத்தின் தலையில் மிளகாய் அரைத்து வருகிறார்கள். அன்னிய முதலீட்டின் மூலம், விவசாயிகளின் பொருட்களுக்கு தரமான சந்தை உருவாகும். நல்ல விலை கிடைக்கும். தரகர்கள் அற்ற நேரடி வியாபாரம் நிகழும். இதன் மூலம் நேரடியாக பயன்பெற போவது, விவசாயிகளும், நடுத்தரவர்க்க மக்களுமே.


3.    அன்னிய முதலீட்டினால், நடைபாதை வியாபாரிகள் பாதிக்கபடுவார்கள் என்கின்ற வாதம் மிகவும் அபத்தமானது. சீனாவில் வால்மார்ட் இருக்கிறது. நடைபாதை கடைகளும் இயங்கி கொண்டுதான் இருக்கிறது. இதை ஆறு மாத்திற்க்கு ஒரு முறை சீனா செல்லும் நான் நேரடியாக பார்க்கிறேன். அங்கு எந்த பாதிப்பும் இல்லை. இரு வகை கடைகளுக்கும் அங்கு வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். நம்மைப் போலவே மக்கள் தொகையை கொண்ட, சீனாவைதான் நாம் உதாரணமாக கொள்ள வேண்டும். எனவே இந்தியாவிலும் இது சாத்தியமே.


4.    இந்தியாவில் பெரும்பாலான சில்லறை வியாபாரிகள், ஒழுங்காக வரி கட்டுவதில்லை. இவர்கள் அனைவரும் ஒன்றும் வறுமைக் கோட்டுக்கு கிழ் தவிக்கும் மக்கள் இல்லை. இதை படிக்கும் அனைவருமே கொஞ்சம், உங்கள் ஊரில் மளிகை கடை வைத்திருக்கும் நபர்களின் பொருளாதர வசதியை, சற்றே எண்ணி பாருங்கள். இவர்கள் இப்படி வசதியாக வாழ்ந்தாலும், இவர்கள் கடையில் வேலைப் பார்க்கும் அழுக்கு பொன்வண்டு/லைப்பாய் பனியன் போட்ட தொழிலாளிகளின் நிலைமை எப்படி உள்ளது? முழுக்க முழுக்க அவர்களது உழைப்பை உறிஞ்சித் தள்ளும் இந்த முதலாளிகள், அவர்களுக்கு அளிப்பது என்னவோ வெட்க்கேடான நாள் சம்பளமே. எந்த சங்கமும் இன்றி, வசதியும் இன்றி வருடக்கணக்கில் அல்லல்பட்டு கொண்டிருக்கும் இந்த தொழிலாளிகளின் எண்ணிக்கையைத்தான் இப்போது இந்த முதலாளிகள், அன்னிய முதலீட்டின்னால் பாதிக்கபடுவோர் என்று கணக்கு காட்டி எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அவர்கள் எப்போது அய்யா வாழ்ந்தார்கள்? இப்போது பாதிக்கபடுவதற்க்கு? இது வெட்ககேடு இல்லையா?


5.    தொழிலாளிகள், விவசாயிகள், நடுத்தரவர்க்கம் என்று அனைவருக்கும் இந்த அன்னிய முதலீட்டினால் நன்மையே. எனவேதான் நான் அன்னிய முதலீட்டினை ஆதரிக்கிறேன். இதுவரை அந்நிய முதலீட்டிற்க்கு எதிராக, பொருட்படுத்தும்படியான கருத்தையோ, கட்டுரையையோ நான் காணவில்லை. எல்லாம், சும்மா படங்காட்டும் பயமுறுத்தும் வெற்று வதந்திகளே. அப்படி ஒரு வேளை நான் சிந்தித்திராத தரப்போ/உண்மைகளோ இருக்குமானால், எனது கருத்தை மறுபரிசிலினை செய்ய தயாராக இருக்கிறேன்.

Wednesday, September 12, 2012

கூடங்குளமும், ஃபேஸ்புக் விஞ்ஞானிகளும் !

அணு உலைகளில், பெரும்பாலும் எரிப்பொருளாக, யுரேனியம் பயன்படுத்தபடுகிறது. யுரேனிய துகளில் உள்ள அணு,  புரோட்டன் மற்றும் நியுட்ரான் துகள்களால் ஆனது. அணு உலையில், நியுட்ரான் மிக வேகமாக செலுத்தப்படும்போது, அவை யுரேனியத்தில் உள்ள அணுவில் மோதி, அணுவை பிளக்கின்றன். அவ்வாறு, அணு பிளக்கப்படும்போது, அதிலிருந்து மேலும் நியுட்ரான்கள் வெளியாகின்றன. வெளியேறும் நியுட்ரான்கள், யுரேனியத்தில் உள்ள மற்ற அணுக்களை பிளந்து, நியுட்ரான்களை வெளியேற செய்கிறது. இவ்வாறு தொடர் விளைவு (Chain Reaction – Nuclear fission) உருவாக்கப்பட்டு, மாதக்கணக்கில், அவை தொடர்ந்து வெப்பத்தை உமிழ்கின்றது. அவ்வாறு உமிழ்ப்படும் வெப்பத்தைக் கொண்டு, நீராவி உருவாக்கப்பட்டு, அந்த நீராவியின் மூலம், டர்பைன் சுற்றப்பட்டு,  சக்தி உருவாக்கபடுகிறது. அணுவை பிளந்து, மின்சாரம் தயாரிக்கபடும் இந்த முறை, முதன்முதலாக பயன்பாட்டுக்கு வந்தது, 1957ல் தான். 1957ல் தொடங்கி, 2011 வரையினாலான இந்த ஐம்பது ஆண்டுகளில், இதுவரை மூன்று முறை அணு உலை விபத்துகள் நடந்துள்ளன. Three Mile island (1979), செர்னொபில் (1986), ஃபுகுஷிமா (2011) என்ற இந்த மூன்று விபத்துகளுமே, அறிவியல் வளர்ச்சியில் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள, அமெரிக்கா, ரஷ்யா, மற்றும் ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளிலேயே நிகழ்ந்துள்ளது. இந்த விபத்துகள் நிகழ்ந்த போது, இந்த கட்டுபடுத்தமுடியாத தொடர் விளைவை நிறுத்த முடியாமல்,  மூன்று பெரிய நாடுகளுமே, விளைவுகளை சமாளிக்க, தலையால், தண்ணீர் குடித்தன என்பதுதான் வரலாறு.

உண்மை நிலை இவ்வாறிருக்க, கூடங்குளம் அணு உலையை எதிர்ப்பவர்கள், ஏதோ பொழுது போகாமல், விளம்பரத்திற்க்காக எதிர்ப்பதாக, அர்த்தம் செய்துக் கொள்கிறார்கள் ஒரு சில ஃபேஸ்புக் விஞ்ஞானிகள்.  அதிலும், ஒரு விஞ்ஞானி கேட்டுள்ளார். புகுஷிமா அணு உலை விபத்தில் ஒருவர் கூட சாகவில்லையே, பிறகு ஏன் கூடங்குளத்தில் அணு உலையை நிறுவக் கூடாது என்று.  உஸ்..யப்பா.., எப்படி இவர்களுக்கு புரிய வைப்பது? அய்யா , புகுஷிமா விபத்தால், ஒருவர் கூட இறக்கவில்லை என்று இப்போது எப்படி, சொல்ல முடியும்? அணு உலை விபத்து என்றால் என்ன, அணுகுண்டு போல போட்டதும், ஒரு ஆயிரம் பேர் சாகும் நிகழ்வா? பல தலைமுறைகளுக்கு, காவு வாங்கும் பூதம் அய்யா அது. இந்த அணு உலை விபத்தில் மிக அபாயகரமான விஷயமே, விளைவுகளை சரியாக யாராலும் உடனடியாக சொல்ல இயலாது என்பதுதான். 1986ல் ரஷ்யாவின் செர்னோபில் பகுதியில் அணு உலை விபத்து நிகழ்ந்த பின், அடுத்த பத்து ஆண்டுகளில், எத்தனை பேர் கேன்சர் வந்து இறந்தார்கள். இருபது ஆண்டுகள் கழித்து, எத்தனை பேர். முப்பது ஆண்டுகள் கழித்து, எத்தனை பேர்.  எத்தனை குழந்தைகள், ஊனமாக, பிண்டமாக பிறந்து, இறந்தன. இப்படி தொடர் கணக்கெடுப்பு செய்தே, அதன் முழு தாக்கத்தையும் பதிவு செய்ய முடியும். இப்படி கணக்கெடுத்து, இதுவரை, நாலாயிரம் உயிர்களை செர்னோபில் காவு  வாங்கியுள்ளதாக அறிவித்துள்ளார்கள். இன்னும் முடியவில்லை கணக்கு. இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன் நடந்த செர்னோபில் நிகழ்வின் கோரத்தையே, இன்னும் கணக்கிட்டு  மாளாத போது, இந்த விஞ்ஞானி, 2011ல் நிகழ்ந்த ஃபுகுஷிமா அணு உலை வெடிப்பில், ஒருவர் கூட சாகவில்லையே, என்கிறார். இது என்ன, சென்னை- திருச்சி நெடுஞ்சாலையில் தினந்தோறும் நிகழும் சாலை விபத்தா? மார்ச்சுவரியில் உட்கார்ந்து பிணத்தை எண்ணி சொல்வதற்க்கு. உடனடியாக சாவதை விட, இப்படி செத்து, செத்து பிழைக்கும் செண்டாய் பகுதி மக்களை கேளுங்கள். அவர்கள் சொல்வார்கள் அதன் வலியை, கோரத்தை.

மேலும், சாவு மட்டும்தான் மனிதச் சமுதாயத்தை பாதிக்க கூடிய நிகழ்வா? ஃபுகுஷிமா நிகழ்வால், இதுவரை ஒரு லட்சத்தி அறுபதானாயிரம் பேர் தங்களது வாழ்விடத்தை விட்டு வேறு இடத்திற்க்கு துரத்தப்பட்டுள்ளனரே.. இது அவலம் அல்லவா? தலைமுறை, தலைமுறையாய் வாழ்ந்த தங்களது பூமியை விட்டு, வேரோடு பிடிங்கி எறியப்படுவது, எத்தனை கொடுமை என்பதை மாண்புமிகு நாரயணசாமியின் சீடர்கள் அறிவார்களா? இல்லை, இதை எல்லாம் அறிவியலின் பக்கவிளைவுகள்தான் என்று சகித்துக் கொள்ள சொல்லி, நமக்கு பாடம் எடுப்பார்களா? இவர்கள் குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்து, வறுத்த முந்திரியை சுவைக்க, கூடங்குளத்து மீனவன், தனது உயிரையும், உடமையையும் பணயம் வைக்க வேண்டுமாம்.. அடங்கொக்கமக்கா..

அணு உலை விபத்து நடந்த ஃபுகுஷிமா பகுதியில், ரேடியேஷன் காற்றில் கலந்துவிட்டது எனவே, 20 கிலோ மீட்டர் சுற்றளவில் வசிக்கும் மக்கள் உடனடியாக, தங்கள் இருப்பிடத்தை விட்டு, வெளியேற வேண்டும். இருபது கிலோ மீட்டரில் இருந்து முப்பது கிலோ மீட்டர் பகுதியில் வசிக்கும் மக்கள் வீட்டை விட்டு, வெளியே வரக்கூடாது. 200 கிலோ மீட்டரில் இருந்து 300 கிலோ மீட்டர் தூரத்தில் வசிக்கும் மக்கள்,  மாஸ்க் அணிந்து நடமாடுங்கள் என்று தொலைக்காட்சியில் தொடர்ந்து இரவு பகலாக, சொல்லப்பட்டு, ஏறக்குறைய ஒரு மாதம் கைகுழந்தையை வைத்துக் கொண்டு, என்ன செய்வது என்று தெரியாமல், தவித்ததுண்டா? அப்படி தவித்தவர்கள், உலக பொருளாதாரத்தில், இரண்டாவது பெரிய நாட்டின் தலைநகர், டோக்யோ நகர மக்கள் என்று சொன்னால், அதுவும் ஒராண்டுக்கு முன்தான் நடந்தது என்று சொன்னால், அதன் கையறு நிலையை உங்களால் புரிந்துக் கொள்ள முடியுமா?

இதோடு விடவில்லை, அந்த விஞ்ஞானி. அவர் கூறுகிறார்..மார்ச் 2011ல் நடந்த ஃபுகுஷிமா விபத்தில், அறிவியல் போராடி வென்றது என்று.. அட, உங்க அராஜகத்துக்கு ஒரு அளவில்லையா? அது, என்னத்தை போராடி வென்றுச்சுன்னு எங்களுக்குதான் சாமி தெரியும். நிகழ்ந்த கொடூரம் என்ன, அதன் விளைவுகள் என்ன என்பது தெரிந்தும், அதை சரியாக மக்களுக்கு தெரிவிக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டு அதனால், அப்போதைய ஜப்பான் நாட்டு பிரதமர் நவட்டோ கான் ஆகஸ்ட் 2011ல் பதவி விலக நேர்ந்தது. பிறகு அந்த அணு உலையின் உரிமையாளர்களான டெப்கோ (TEPCO) நிர்வாகிகள், தங்களது நம்பகதன்மையை நிருபிக்க, சம்பவம் நிகழ்ந்த போது தமக்கும், பிரதமர் அலுவலுகத்திற்க்கும் நிகழ்ந்த சில உரையாடல் பதிவுகளை வெளியிட்டார்கள். அதிலிருந்து தெரிவது என்னவென்றால், டெப்கோ ஆசாமிகளூக்கே அப்போது என்ன நிகழ்ந்தது, அடுத்து என்ன செய்வது என்பது தெரியவில்லை என்பதைதான்.

2011 மார்ச் மாதம் விபத்து நிகழ்ந்து, டிசம்பர் 2011ல் ஒரு வழியாக ஃபுகுஷிமா ரியாக்டர்கள் ஒரு பாதுகாப்பான நிலைக்கு வந்துவிட்டதாக ஜப்பான் அரசாங்கம் அறிவித்தது. ஆனால், முழுமையாக அந்த அணுஉலைகளை மூடுவதற்க்கு (Cold Shutdown),  இன்னும் நாற்பது ஆண்டுகள் தேவைபடும், என்று அறிவித்துள்ளது. பயன்படுத்தப்பட்ட யூரெனிய எரிப்பொருள் கோல்களை எப்படி பாதுகாப்பாக எடுத்து, பத்திரப்படுத்துவது என்று இன்றும் புரியாமல் திண்டாடி வருகிறது. அதிக வெப்பத்தில் உருகி, உலையின் அடிப்பகுதியில் தங்கிவிட்ட, இந்த கோல்களை வெளியே எடுக்க சிறப்பு ரோபோக்கள் வேண்டுமாம். மேலும் மூன்று ரியாக்டர்களிலும் ஒரே நேரத்தில் இதை செய்ய வேண்டும். இதற்க்கு முன்பு, இதை செய்த அனுபவம் யாருக்கும் இல்லை என்பதால், எப்படி செய்வது என்று தெரியாமல் யோசித்து வருகிறது. ஜப்பானில் முப்பது கிலோ மீட்டர் சுற்றளவில் ஒரு லட்சத்தி அறுபதனாயிரம் பேர்தான் இருந்தார்கள். அவர்களால் இன்று வரை தங்களது பகுதிக்கு திரும்ப முடியவில்லை. ஒரு திறந்தவெளி மியுசியமாக, குழந்தைகள் விட்டு சென்ற விளையாட்டு பொருள்கள், தொலைக்காட்சி பெட்டிகள், யாரும் அமராமல் காத்து கிடக்கும் நாற்காலிகள் என்று, இன்றும் அவை கதிர் வீச்சில் ஜொலித்து கொண்டிருக்கிறது. இதுதான், அறிவியல் தொழில்நுட்பத்தில் தலை சிறந்து விளங்கும் ஜப்பானின் நிலைமை. இங்கே என்னவென்றால், ஃபேஸ்புக் விஞ்ஞானிகள், ஃபுகுஷிமா நிகழ்வை, அறிவியல் போராடி வென்றது என்கிறார்கள். கூடங்குளத்தின் அணு உலைக்கு 30 கிலோ மீட்டர் சுற்றளவில் குறைந்த பட்சம் பதினைந்து லட்சம் மக்கள் வசிக்கிறார்கள் அய்யா. ஒரு விபத்து நிகழ்ந்தால், அவர்கள் நிலை என்ன? கொஞ்சம் மனிதாபிமானத்தோடு சிந்தியுங்கள்.

ஃபுகுஷிமா விபத்து நிகழ்ந்து, ஏறக்குறைய, ஒராண்டுக்கு மேல் ஆன சூழ்நிலையிலும், அந்த விபத்தின் விளைவாக, கதிர் வீச்சால் பாதிக்கப்பட்ட கடல் மீன்கள், ரேடியோஆக்டிவ் ஐயோடின் கலந்த புல்லை தின்ற மாட்டின் பால், காய்கறிகள் என்று தொடர்ந்து இன்றும் கண்டுபிடிக்கபட்டு, இதனால் அந்த பகுதி விவசாயிகள், தங்களது பொருட்களை சந்தைக்கு கொண்டு வர இயலாமல், வாழ வழி தெரியாமல் தினம், தினம் அரசாங்கமும், தன்னார்வ அமைப்புகளும் கொடுக்கும் உதவி பணத்தில், உயிர் வாழ்ந்துக் கொண்டிருப்பது உங்களுக்கு தெரியுமா? அந்த பகுதி, என்று இங்கு குறிப்பிடபடுவது ஒரு 50 கிலோ மீட்டர் சுற்றளவு விவசாயிகளை. அவர்கள் இந்த விபத்திற்க்கு முன் கோடிஸ்வரர்கள் என்பதுதான், இதிலுள்ள நகைமுரண். புரிந்துக் கொள்ளுங்கள் விஞ்ஞானி ஸாரே. இன்னும் வேண்டுமானால் கேளுங்கள். ஆதாரங்களை அள்ளி போடுகிறேன்.

அதே விஞ்ஞானி மேலும் சொல்கிறார். உலகமே, மின்சார சக்தியின் தேவையில் தவிக்கிறது. எனவே அணுவை பயன்படுத்துவதுதான் சரி என்று. தோழா, ரொம்ப பசிக்கிறது என்று, நஞ்சை எடுத்து உண்ண முடியுமா? மின்சாரத் தேவை இருக்கிறது என அனைவரும் ஒத்துக் கொள்கிறோம். ஆனால், அதற்கு அணுசக்தி தீர்வல்ல. It is neither 100% secured nor 100% clear energy. வேறு எந்த தவற்றையும், சரி செய்துக் கொள்ள முடியும். அணு உலையில் நிகழும் தவறு தலைமுறைகளை பலி கேட்கும். அதை யாராலும் சரி செய்ய இயலாது. ஒரே ஒரு சதவிகிதம் மட்டுமே, ஆபத்து இருக்கிறது என்ற சூழ்நிலையில் கூட, அணுசக்தியை தவிர்ப்பது மட்டும்தான் மனிதநேய சமுதாயத்தின் அறமாக இருக்க முடியும்.

Friday, September 7, 2012

பாதகம் செய்வோரை கண்டால்...!

தேவை இல்லாமல், இந்த இடத்தில் வந்து மாட்டிக் கொண்டோமே, என்று இதோடு ஏழாவது தடவையாக, தோன்றி விட்டது. இரவு, மணி பத்தாக இன்னும் ஐந்து நிமிடங்களே இருந்தது. ரதிமீனா டிராவல்ஸ், இரவு சரியாக பத்து மணிக்கு, புளியமரத்தடியில் இருந்து, சென்னைக்கு புறப்படும் என்ற போர்டை, திரும்பவும் ஒரு தடவை படித்தேன். பத்து மணி என்பதெல்லாம் சும்மா பம்மாத்து. முன்பதிவு செய்த அனைத்து பயணிகளும் வந்து சேர்ந்து,  வண்டி கிளம்ப, எப்படியும் பத்தரை ஆகி விடும். பயணம் போகும், பொதக்குடி மரைக்காயரை பஸ் ஏற்றிவிட, ஒரு குடும்பமே டாக்ஸியில் வந்து காத்திருந்தது. ஊருக்கு போனவுடனே, போனை அடிச்சுடுங்க என்று திரும்ப, திரும்ப அவரிடம் சொல்லிக் கொண்டிருந்தான் ஒரு சிறு பையன். இன்னும் சிறிது நேரத்தில் இங்கு நிகழ இருக்கும் சம்பவத்தினால், இங்குள்ள அனைவரும் எவ்வாறு பாதிக்கபடுவார்கள் என்று நினைத்த போது பதட்டம் அதிகரித்தது. ஆர்வமும், பதட்டமும் சரி விகிதத்தில் கலந்து கிடந்த என் முகத்தை பார்த்த சரவணன்,  தேவையா இது உனக்கு? என்ன நடந்துச்சுன்னு,  நாளைக்கு வந்து சொல்றோம், நீ வீட்டுக்கு கிளம்புன்னு சொன்னாலும் கேட்க மாட்டேங்கற“ என்றான்.


மாதம் முழுக்க, சென்னையில் உட்கார்ந்து, அமெரிக்க மருத்துவமனைக்கு கோடு அடித்து களைத்து, எப்பவாது விடுமுறைக்கு ஊருக்கு வரும் நமக்கு, இது நிச்சயம் தேவையில்லாத வேலைதான். இந்நேரம் வீட்டில் இருந்தால், அம்மா சுட்டு தரும் தோசையை சாப்பிட்டுக் கொண்டே, டீவி பார்க்கலாம். கல்யாணமான புதிதில், நாத்தனார்கள் செய்த கொடுமைகள் பற்றி அம்மா சொல்லும் கதைகளை கேட்டுக் கொண்டிருக்கலாம். இது மாதிரியான சூழ்நிலையில், இந்த இடத்தில் நாம் இருப்பதை, தெரிந்தவர்கள் யாரும் பார்த்தால் நிச்சயம் கேடாக முடியும். என்ன செய்வது? காலையில் நடந்த விஷயங்களே எல்லாவற்றுக்கும் காரணம்.

எப்போது ஊருக்கு வந்தாலும், நைனா கடைக்கு சென்று அங்கு கூடும் பழைய நண்பர்களை பார்க்காமல் இருந்ததில்லை. அங்கு கூடும் அனைவருமே பழக்கமானது, சரவணனால்தான். சரவணன் பள்ளியில் கூட படித்தான். படிப்பில் பெரிய ஆர்வம் ஏதுமில்லை. பள்ளி முடிந்தவுடன் அவன் அப்பாவின் தொந்தரவால், ஏதோ ஒரு பாடவதி பாலிடெக்னிக்ல் சேர்ந்து படிப்பை முடித்தான் . ஆப்செட் அச்சகம் வைக்க இடம் பார்த்துக் கொண்டிருப்பதாக, கடந்த இரண்டு வருடங்களாக சொல்லிக் கொண்டிருக்கிறான். அவன் குடியிருந்த தெருவே வில்லங்கமானதுதான்.

அவ்வபோது, பழந்தமிழர்களின் இரு கண்களில் ஒன்றான வீரத்தை, தியேட்டர், ஒயின் ஷாப் போன்ற பொது இடங்களில், சந்தேகத்திற்க்கு இடமில்லாது நிறுவுவார்கள். ஊரின் மறு கோடியில் இருந்த சாரதா காலணி பசங்களுக்கும், சரவணன் தெரு பசங்களுக்கும் தீராத பகை இருந்தது. சாரதா காலணியில் வசிப்பவர்கள், மதுரை பக்கத்தில் இருந்து வெகு காலத்திற்க்கு முன் இங்கு வந்து குடியேறியவர்கள். சோழ, பாண்டியர்களுக்குள் இருந்த பகை, இப்போது இரு தெருக்களுக்கும் புதுப்பிக்கபட்டு விட்டது. இவர்களுக்குள் எல்லை கோடு என்பது பேருந்து நிலையம் தான். பேருந்து நிலையத்தை தாண்டி, அந்த பக்கம் போனால் சாரதா காலனி. இந்த பக்கம் சரவணன் தெரு. சொல்லி வைத்தாற் போல், இரு பக்கத்திலும் இரு தியேட்டர்கள் இருந்தன. அந்த பக்கம், இவர்கள் போனால், அவர்கள் அடிப்பதும், அவர்கள் இங்கு வந்து சிக்கிக் கொண்டு உதை வாங்கி போவதும், ஊரில் அடிக்கடி நடக்கும் கேளிக்கை.

அன்று காலையும், அப்படிதான் நைனா கடைக்கு சென்றிருந்தேன். சரவணன், குட்டி, வீரமணி என அனைவரும் பேசிக் கொண்டிருந்தனர். சரவணன், என்ன மாப்ளே, எப்ப வந்தே?" என்று என்னை பார்த்துக் கேட்டுவிட்டு, என் பதிலுக்கு காத்திருக்காமல், "நைனா, மாப்ளைக்கு ஒரு டீ போடுங்க" என்றான். நடுநாயகமாக, குட்டி உட்கார்ந்து டீயை உறிஞ்சிக் கொண்டிருந்தான். அநேகமாக பள்ளிகூடத்தில் மட்டும்தான் குட்டியை, காமராஜ் என்ற அவனது பெயரை சொல்லி அழைத்திருப்பார்கள். தஞ்சாவூர் குத்து வரிசை, சிலம்பம் என்று எல்லா வித்தைகளையும் கற்றவன் இவன். கூட இரண்டு பேர் இருக்கும் தைரியத்திலும், குணா படம் பார்க்கும் ஆவலிலும், சாந்தி தியேட்டர் வந்து மாட்டிக் கொண்ட சாரதா காலனி மாட்டு பாஸ்கரை, ஒற்றை ஆளாக, குட்டி, பொளந்து கட்டியது ஒரு சரித்திர சம்பவம். அதன் நேரடி சாட்சிகள், அந்த அடியே வேறு விதமாக இருந்தது, என்றார்கள். வாயில் உள்ள சிகரெட் கிழே விழாமல் கவ்விக் கொண்டு, பாஸ்கரின் காலை பிடித்து சுழற்றி இழுத்து கம்பத்தில் அடித்தானாம். "தலைப்பை மாத்தி அடிக்கிறது" என்று அந்த ஸ்டைலுக்கு பெயர் சொன்னான் குட்டி.

டீ கிளாசின் அடிபக்கத்தை துண்டால் துடைத்து விட்டு, கொடுத்தார் நைனா. வாங்கி குடித்துக் கொண்டிருக்கும் போதுதான், எங்கள் அருகில் ஒருவர் தயங்கியபடி வந்தார். குட்டி சார் இருக்காருங்களா? என்றார்.. சரவணன் சிரிப்பை அடக்கியபடி, இவர்தான் என்று குட்டியை நோக்கி கையை நீட்டினான். வந்தவர், வேட்டி கட்டியிருந்தார். வெளிறிய பச்சை நிறத்தில் சட்டை. காலில் தேய்ந்து போன டயர் செருப்பு. எங்களை விட எப்படியும் ஒரு நான்கைந்து வயது மூத்தவராக தோன்றினார். ஒல்லியான தேகம், ஆனால் களையான முகம். "வணக்கங்க" என்று எல்லாரையும் பார்த்தபடி சொன்னார். சொல்லும் போது, ஒரு கையை மட்டும் முகத்திற்க்கு நேராக கொண்டு போய் சாமி கும்பிடுவது போல் செய்தார்.

என் பேரு சுந்தர்ராஜன். பண்ணைகோட்டைலே இருந்து வர்றேன். லாரி ஷெட் கீர்த்தி, நம்ம ஊருதாங்க. அவருதான் உங்ககிட்ட பேச சொல்லி உட்டாரு, என்றார். 

பண்ணைகோட்டை பக்கத்தில் இருந்த கிராமம்.

குட்டி, எந்த கீர்த்தி என்றான். பிறகு, அவனே அந்த கேள்வி அவசியமில்லை என்று நினைத்தவனாக, என்ன விஷயம்? என்றான்.

சுந்தர்ராஜன் ஒரு நிமிடம் எங்களை பார்த்தவாறே யோசித்தார். பிறகு மெதுவாக சொன்னார். "என் தங்கச்சி, மூணு வருசத்துக்கு முன்னே நெருப்பு வச்சுகிட்டு, செத்து போய்டுச்சுங்க". தன்னிச்சையாக அனைவரும் நிமிர்ந்து அவரை பார்த்தோம். பெஞ்சில் கொஞ்சம் நகர்ந்து இடம் செய்து கொடுத்து, "உட்காருங்க" என்றான்,  குட்டி.

சின்ன வயசுலேயே, எங்க ஆத்தா செத்து போயிடுச்சுண்ணே. எங்க அப்பாருதான் எங்களை வளர்த்தாரு. என்னை விட, நாலு வருசம் சின்னது என் தங்கச்சி பிரியா. கண்ணும் கருத்துமா இருக்குண்ணே. அழகுன்னா அப்படி ஒரு அழகு. சின்ன வயசுலேயே சமைக்க கத்துட்டு, எங்களூக்கு சோறாக்கி போட்டு, வீடு பெருக்கி துடைச்சுட்டு, அப்புறமா ஸூகூலுக்கு போவும்.  எப்படியும் நல்ல இடமா, பாத்து அதை கட்டி கொடுத்துடனும்ன்னுதான், நாங்க போராடிட்டு கிடந்தோம். எல்லாத்தையும் கெடுத்துட்டான் அந்த சங்கரு. எங்க ஊரு பழைய பிரசிடெண்ட் மவன்தான் அவன். ஊரு முழுக்க, அவங்களுக்கு நிலம் நீச்சு..பெரிய கல்லு வூடு, எல்லாம் உண்டு. ஆனால் அதுக்கெல்லாம் மயங்குற பொண்னு இல்லை எந்தங்கச்சி..உன்கிட்ட இருந்தா, உன்னோட.. என்னை அது என்ன செய்யும்ன்னு இருக்குற புள்ளே.

என்னமோ சூதுவாது செஞ்சு, அது மனசை கெடுத்து புட்டான். பொழுது மூச்சூடும், பேண்ட் போட்டுகிட்டு தெரு வாசல்லே நிப்பான். ஆரம்பத்திலே நான் அசால்ட்டா இருந்துட்டேன். அப்புறம் இந்த மாதிரின்னு, சிநேகிதனுங்க சொன்னப்ப கூட அவங்ககிட்ட சண்டைக்கு போனேன்.

பொறவு, அவன் நடமாட்டம் ஜாஸ்தியானதால,  பிரியா கிட்ட கேட்டேன். முதல்லே இல்லைன்னு சொல்லிடுச்சு.. கையை எடுத்து கும்பிடுறோம் புள்ளே. அந்த சகவாசம் நமக்கு வேணாம்ன்னு சொன்னப்பறம், காலை கட்டிகிட்டு அழுவுது. கட்டிக்கிறேன் சொன்னாருண்ணேங்குது.. பாவிபய கட்டிக்கிறேன் சொல்லி, வவுத்துலே கொடுத்துட்டான்.

எங்களுக்கு சுந்தர்ராஜனை பார்க்க பரிதாபமாக இருந்தது. முகம் தெரியாத சங்கரின் மேல் ஆத்திரம் வந்தது. ஆனால், இப்போது எதற்கு இதை எல்லாம் நம்மிடம் வந்து சொல்லிக் கொண்டிருக்கிறார் என்பது மட்டும் குழப்பமாகவே இருந்தது.
பேச்சை சற்று நிறுத்திய சுந்தர்ராஜன், திடிரென்று எழுந்து, நைனாவை பார்த்து, "அந்த பாட்டை நிப்பாட்டுங்க" என்றார். அதுவரை எங்களிடம் பேசிக் கொண்டிருந்த, குரல் அல்ல அது. ஏதோ ஆவேசம் வந்தவராக, திரும்பவும் "அந்த பாட்டை நிப்பாட்டுங்க" என்றார். ஸ்பிக்கரில் சிநேகிதனே. சிநேகிதனே..ரகசிய சிநேகிதனே.. என்ற அலைபாயுதே பட பாடல் கசிந்து கொண்டிருந்ததை, அப்போதுதான் நாங்களே கவனித்தோம்.

என்ன பேசி கொண்டிருக்கிறோம், என்பதே அறியாத நைனா, நம்ம கடையிலே வந்து, நாம போட்டு இருக்கற பாட்டை, நிப்பாட்ட சொல்ல, இவன் யாருங்கற மாதிரி கடுப்பாக முறைத்தார். இப்போது,  குட்டியும், "நைனா அந்த பாட்டை கொஞ்சம் நேரம் நிப்பாட்டுங்க" என்றான். முணுமுணுத்தபடி வேறு வழியில்லாமல், டேப்பை நிறுத்தினார் நைனா.

"மன்னிச்சுக்கங்கண்ணே. இந்த பாட்டை கேட்டா, வெறி புடிச்ச மாதிரி ஆயிடுது" என்று நைனாவை பார்த்து சொல்லிவிட்டு, எங்களிடம் தொடர்ந்தார்.  நடந்த விஷயத்தை சொல்லி, எப்படியும் அவங்கப்பனை சம்மதிக்க வச்சுடாலாம்ன்னு நானும், எங்கப்பாரும் அவர் கால்லே விழுந்து கதறினோம். ஒன்னும் கவலைபடாதீங்க. ஒரு வாரத்துலே முடிவு செஞ்சுக்கலாம்ன்னு சொல்லி எங்களை அனுப்பிட்டு, பையனுக்கு விசா ஏற்பாடு செஞ்சு, சிங்கப்பூர் அனுப்பிட்டான் அந்த பெரிய மனுசன்.

விஷயம் தெரிஞ்சு, நான் போய் கேட்டப்ப, இதோ பாருப்பா, என் மவன் மட்டுமில்லை. சங்கரோட கூட்டாளி  துரை கூட, உங்க வீட்டுக்கு வர போக இருந்தான்னு என் மவன் சொல்றான். ஒன்னும் பெருசாக்கிக்காதேன்னு கூசாம பொய் சொன்னான்.

கொஞ்சம் இடைவெளி விட்டு சுந்தர்ராஜன் தொடர்ந்தார்.

பிரியாவை ஒரு ராத்திரி முழுக்க, தஞ்சாவூரு மெடிக்கல் காலேஜிலே வச்சு இருந்தோம். என்னை மன்னிச்சுடுண்ணே, மன்னிச்சுடுண்ணேன்னு திரும்ப, திரும்ப சொல்லிட்டே இருந்தது.  காபிதண்ணி வைக்கயிலே, தெரியாம கையிலே சுட்டுகிட்டுன்னாலே துடிச்சு போயிடும். ஆனா, உடம்பு பூரா எரிஞ்சு கிடந்தப்ப, வலியே இல்லைன்னுச்சுண்ணே. கூடவே உட்கார்ந்து கிடந்தோம். போதும்டா இந்த மனுசபய வாழ்க்கைன்னு விடியகாலைக்கெல்லாம் போய் சேர்ந்துடுச்சு.

சுந்தர்ராஜனின் கண்களில் கண்னீர் கொட்டியது. நைனா, அவராகவே டீ போட்டு நீட்டினார். குட்டியும் ஸ்தம்பித்து போயிருந்தான். சுந்தர்ராஜன் தொடர்ந்தார்.
காரியம் எல்லாம் முடிஞ்சு, ஒரு நாள் அவ பொட்டியை துழாவினப்ப, காதுலே மாட்டி கேக்குற சின்ன டேப்ரிக்காடரும், கேசட்டும் கிடைச்சுது. அந்த கேசட்டுலே சிநேகிதனே, சிநேகிதனே பாட்டை மாத்திரம் திருப்பி, திருப்பி  இரண்டு பக்கத்திலேயும் பதிவு செஞ்சு குடுத்துருக்கான், அந்த பாவி. அப்புறம் ஒரு நாற்பது பக்கம் நோட்டுல, ப்ரியா, ப்ரியான்னு மந்திரம் மாதிரி எழுதி இருந்துச்சு.

அவ போன கொஞ்ச நாள்லே, எங்கப்பாரும் போய் சேர்ந்துட்டாரு. அப்புறம் அங்கே இருக்க புடிக்காம, திருப்பூர் பனியன் பேக்டரிலே போய் சேர்ந்துட்டேன். போன வாரம் அங்கே, எங்க ஊர்க்கார பையனை பார்த்தப்பதான் விஷயத்தை சொன்னாரு. மூணு வருஷம் கழிச்சு, லிவுக்கு அந்த சங்கரு, ஊருக்கு வந்து இருக்கான்னு. அன்னைக்கே புறப்பட்டு வந்துட்டேன். இன்னைக்கு நைட்டு பஸ்லே, அவன் மெட்ராஸ்க்கு திரும்பி போறான். எனக்கு பெருசா ஒன்னும் தேவை இல்லண்ணே..ஒரே ஒரு அறை, அவனை விடனும். கொலைக்கு அஞ்சாத பயலுங்க. நான் மாட்டிகிட்டா என்னை கொண்டு போய் வைக்கோல் போருக்குள்ள துணிச்சு எரிச்சிடுவானுங்க. அடிச்சப்பறம், எப்படியாச்சும் என்னை எஸ் ஆக்கிட்டிங்கன்னா போதும்ணே..முழு மூச்சில் சொல்லி எங்களை பார்த்து கும்பிட்டார்.

குட்டி கேட்டான், எத்தனை பேர் வருவாங்க?

அவன் கூட சுத்துற ரெண்டு பேருதாண்ணே, வந்தாக்க வருவாய்ங்கே.

இரண்டு பேரை சமாளிச்சிக்கலாம்..நீங்க இங்க இருக்க வேணாம் கிளம்புங்க. நைட் பார்க்கலாம் என்றான் குட்டி.

சரிண்ணே என்று கிளம்பியவர், கொஞ்ச தூரம் சென்று விட்டு திரும்பவும் வந்தார். அண்ணே, தப்பா நினைச்சுக்காதீங்க..தண்ணிசாப்பிட இதை வச்சுக்குங்கண்ணே என்றபடி ஒரு மடங்கிய ஐநூறு ருபாய் தாளை நீட்டினார்.

மணி பத்தே கால், ஆகிவிட்டது. இன்னும் அந்த சங்கரை காணவில்லை. புளியமரத்தடியின் பின்னே, யாருக்கும் தெரியாதபடி, சுந்தர்ராஜன் நின்றிருந்தார். குட்டி மற்றும் சரவணன், பஸ் அருகே நின்றனர். பஸ்ஸின் அந்த பக்கம் குட்டி அழைத்து வந்திருந்த இன்னும் இரண்டு பேர். சுந்தர்ராஜன், சங்கரை அடித்தவுடன் ஏற்படும் குழப்பத்தை பயன்படுத்தி, சங்கர் கூட வரும் நபர்களை, குட்டியும் அவனுடைய நண்பர்களும், பிடித்து தள்ளுவது. இந்த நேரத்தில், சுந்தர்ராஜன் தப்பித்து பஸ் ஸ்டாண்டின், மறு முனையில் இருந்த கடைத்தெருவுக்குள் நுழைந்து, தாமரைக்குளம் வழியாக ஓடி, ராணி டிம்பர் டிப்போ பின்புறம் இருக்கும் கருவ காட்டிற்க்குள் சென்று விடுவது என்று பிளான்.

பெரும்பாலானோர் ஏறி பஸ்ஸிற்க்குள் உட்கார்ந்துவிட்டனர். பொதக்குடி மரைக்காயர் மற்றும் ஒன்றிரண்டு பேர் மட்டும் கிழே நின்று தம் அடித்துக் கொண்டிருந்தனர். இது குட்டி எதிர்பார்க்காதது. ஒரளவு கூட்டம் இருந்தால் தான், ஓடுவதற்க்கு வசதி. பஸ் ஸ்டாண்டிலும் பெரிய கூட்டம் ஏதுமில்லை. கடைகள் சாத்திக் கொண்டிருந்தனர்.  இன்னும் அந்த சங்கர் வரவில்லை. ஒரு வேளை, அவன் வரவே போவதில்லையோ? என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே ஒரு டாட்டா சுமோ காமராஜர் சிலை முனையில் வந்து திரும்பி புளியமரத்தடி நோக்கி விரைந்து வந்து கொண்டிருந்தது.

சுமேவில் இருந்து திபுதிபுவென்று ஆட்கள் இறங்கினார்கள். ஒருவன் மட்டும், நல்ல கலராய், சுருள் முடியும், பெரிய கிருதாவுமாய், பேண்ட் சர்ட்டில். அவன் தான் சங்கர் என்று பார்த்தவுடன் புரிந்து விட்டது. மற்ற அனைவரும் வேட்டி சட்டை. திக்கென்றானது. சுந்தர்ராஜன் இரண்டு பேர் என்றார். இப்போது ஏழு பேர் நின்றனர். இறங்கியவுடன் ஒருவன் போய் பெட்டிக் கடையில் தண்ணீர் பாட்டில் வாங்கினான். மாப்பிள்ளை, அடுத்த தடவை வரும் போது சென்னையிலேதான் பார்ட்டி கொடுக்குற என்றான் ஒருவன் சங்கரை பார்த்து. சங்கர் அட்டகாசமாக சிரித்து பேசிக் கொண்டிருந்தான். அனைவரும் சங்கரை சூழ்ந்துக் கொண்டு நின்றனர். ஒவ்வொருவரும் நூறு கிலோ இருப்பார்கள் என்று தோன்றியது. இவர்களை தள்ளி விடுவதோ, அடிப்பதோ சாத்தியமே இல்லை.  

சரவணன், குட்டியை பார்த்தான். குட்டி வேணாம்ங்குற மாதிரி, தலையை ஆட்டினான். சரவணன், கடைக்கு போற மாதிரி பாவனை செய்து அந்த பக்கம் போனான். நானும் சரவணன் கூடவே போனேன். அந்த பக்கம் போனவுடன், எதிர் சைடில் நின்ற சுந்தர்ராஜன் தெரிந்தார். சரவணன் அவரை பார்த்து,  பிறகு பாத்துக்கலாம் என்கிற மாதிரி சைகை செய்தான். எந்த சலனமும் இன்றி சுந்தர்ராஜன் நின்றார்.

முன்பதிவு செய்த அனைவரும் வந்துவிட்டனர், என்பதை புளியமரத்தடி அலுவலகத்தில் உறுதி செய்துக் கொண்டு வந்த கண்டக்டர், சங்கரை பார்த்து வண்டி புறப்படப் போகுது, ஏறுங்க சார் என்றார். சங்கர் உள்ளே ஏற ஆயுத்தமானான்.

திடிரென்று மரத்தின் பின்னிருந்து வெளியே வந்தார் சுந்தர்ராஜன். கையில் என்ன அது? கட்டையா? கத்தியா? முட்டாள்தனம் செய்கிறார். குட்டி பதட்டத்தில் செய்வதறியாது நிற்கிறான். கூட்டத்திற்க்குள் ஊடுவிய சுந்தர்ராஜன், பொளெரென்று சங்கரின் கன்னத்தில் அடித்தது தெரிந்தது. அது கட்டையல்ல..செருப்பு. ஆம் செருப்பால் அடித்து விட்டார்.  அடித்த வேகத்தில், பக்கத்திலிருந்தவர்களை தள்ளியபடி ஓடினார். அவர் கூடவே குட்டியும் கூட வந்தவர்களும் ஒடினார்கள். பத்தடி ஓடுவதற்க்குள், பிடித்து விட்டனர். யார் அடித்தது என்பதுக் கூட புரியவில்லை. அதற்க்குள் சுந்தர்ராஜனின் முகத்தில் இருந்து ரத்தம் கொட்டியது.  சுந்தர்ராஜனின் கழுத்தில் துண்டை போட்டு இறுக்கி ஒருவன் பிடித்து கொண்டான். இன்னொருவன், கைகளை மற்றொரு துண்டினால் கட்டினான். அடி சரமாரியாக விழுந்த வண்ணம் இருந்தது. குட்டி அழைத்து வந்த இருவரும் எங்கு போனார்கள் என்பது கூட தெரியவில்லை. சரவணன் அருகிலிருந்த மருந்து கடையில் மருந்து வாங்க நிற்பது போல் ஒதுங்கியிருந்தான். அதற்க்குள் பஸ்ஸில் இருந்தவர்கள் இறங்கியிருந்தார்கள். என்ன சார் பிரச்சினை என்று கேட்டனர். சங்கிலியை அறுக்க பார்த்தான், புடிச்சிட்டோம் என்று பதில் சொல்லியபடி ஒருத்தன் சுந்தர்ராஜனை சுமோவிற்க்குள் நெட்டித் தள்ளினான். அப்போது, சுந்தர்ராஜனின் கண்களை ஒர் விநாடி பார்த்தேன். வாழ்ந்து முடித்தவனின் திருப்தி தெரிந்தது.