Monday, May 21, 2012

ஹே ராம் படமும், ஆப்பாயில் ஆய்வாளர்களும்


    வழக்கம் போல்,தூங்கும் முன் எதையாவது படிக்கும் பொருட்டு நேற்று இணையத்தை துளாவியதில் ஒரு பதிவை படிக்க நேர்ந்து, அதனால் தூக்கம் கெட்டு பாயை பிறாண்ட நேரிட்டது. வலைபூ உலகில் பெத்தபேர் வாங்கி இருக்கும் நட்டுவாக்கிலியின்(?) பின்னூட்டம் தான் அது.வெறும் வன்மத்தையும், முற்போக்கு முகமுடியும் கொண்டு ஹேராம் படத்தை வைத்து கமலை ஹிந்துத்துவவாதி என்று போட்டு தாக்கி விமர்சித்திருக்கிறார் ஒலக(?) திரைப்பட விமர்சகர்.

அந்த பதிவு, எந்த அளவுக்கு அறிவுஜீவிதனமானது என்பதற்கு உதாரணம், "ஹேராம் படத்தில் கமல் பூணூல் போட்டு கொண்டு துப்பாக்கியை தூக்கி போஸ் கொடுப்பதன் மூலம் பார்ப்பனியத்தை முன்வைக்கிறார்". என்ன தலை சுற்றுகிறதா? இதை எல்லாம் நிராகரித்து போவது தான் நல்லது என்றபோதிலும் என்னுடைய தூக்கத்தை முன்னிட்டு, சில பதில்களை எழுதினேன். அதை எழுதிய பின்னர்தான், என்னால் உறங்கமுடிந்தது (இந்த நோய்க்கு என்ன பெயர் என்று தெரியவில்லை). இப்போதெல்லாம், கொஞ்சம் முற்போக்குத்தனம் காட்ட வேண்டும் என்றால், யாரையாவது புடித்து சகட்டுமேனிக்கு ஹிந்துத்துவாகாரன் நீ என்று திட்டவேண்டும். உடனடியாக ஒரு நாற்பது லைக், இருபது கமெண்ட் போட இணையத்தில் ஆட்கள் ரெடி. அப்பபோ கொஞ்சம் முற்போக்கு முகமுடி போட்டு ஊருலே டர் கிளப்பி விட்டுவிட்டால் அப்பறம் மெதுவாக எல்லாரும் தூங்கும்போது, இடஒதுக்கீட்டை டாய்லேட்டிற்கு ஒப்பிட்டு கூட முகநூலில் படம் போட்டுகொள்ளலாம். யாரும் நம்மை சந்தேகிக்க போவதில்லை, பாருங்கள்?

சரி இப்போது நட்டுவாக்கிலி நடராசன் எழுப்பிய ஒலக தரமான கேள்விகளும், அதற்கு நமது பதில்களும்,


நட்டுவாக்கிலி நடராசனின் முதல் கேள்வி:  

1 .ஹேராம் படத்தில் எதற்கு கமலின் பாத்திரம் அய்யங்காராக படைக்கப்பட்டுள்ளது? சாதி குறிப்பிடவேண்டிய அவசியம் என்ன?

நமது பதில் :

திரைப்படத்தின் அரிச்சுவடியே, அந்த படம் முதலில் பார்ப்பவர்களிடம் நம்பகத்தன்மையை ஏற்படுத்தவேண்டும். முழுக்க, முழுக்க சாதிய கட்டமைப்பு உள்ள ஒரு சமுதாயத்தில், ஒரு யதார்த்த சினிமா, மதத்தை, இந்திய சுதந்திரத்தை பின்புலமாக கொண்ட ஒரு சினிமா, 1946 இல் இருந்து ஆரம்பிக்கும் சினிமா,எப்படி சாதியை விலக்கி நம்பகத்தன்மையை ஏற்படுத்த இயலும் ? மேலும் சாதி இந்த படத்தில் யதார்த்தத்தை முன்னிறுத்த பயன்பட்டுள்ளதே தவிர எங்கேனும் சாதியை நியாயப்படுத்தி உள்ளதா? இது கமல் படத்திற்கோ அல்லது இந்திய சினிமாவிற்கோ உள்ள விதி அல்ல. GODFATHER திரைப்படம் இத்தாலியில் இருந்து அமெரிக்காவில் குடியேறிய மக்களை பின்புலமாக கொண்டு அவர்களில் ஒரு சிலர் கொண்டிருந்த குற்றபின்னணியை கொண்டுதான் இயக்கப்பட்டது. SCARFACE திரைப்படம் கியூபாவில் இருந்து அமெரிக்காவில் குடியேறிய நாயகனின் குற்றபின்னணியை கொண்டு பின்னப்பட்டது. இவை தான் மக்களை நம்ப செய்தது. இது ஒரு அடிப்படை. ஹே ராம் படம் மட்டுமல்லாது. விருமாண்டி திரைப்படமும் இதே விதியை அடிப்படையாக கொண்டதே. சண்டியர் என்று பெயரிட்டால் ஒரு சாதி அடையாளம் தெரிகிறது என்று இதை எதிர்த்த கிச்சாமிக்கும், ஹேராம் படத்தை பார்ப்பனியத்தை தூக்கி நிறுத்தும் படம் என்று தட்டையாக புரிந்துக்கொள்ளும் நட்டுவாகிளிக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை.

நட்டுவாக்கிலி நடராசனின் இரண்டாவது  கேள்வி: 

2 . இஸ்லாமிய கலவரகாரர்கள், ராணி முகர்ஜியை கற்பழித்து பின்பு கழுதறுத்து போவதை விலாவாரியாக காட்டிய கமல், ஹிந்து கலவரகாரர்கள் செய்த அக்கிரமங்களை ஏன் காட்டவில்லை ?

நமது பதில் 

அய்யா கணிப்பொறி கலைஞரே, இந்த சினிமா எதை பேசுகிறது? காந்தியை கொல்லும் மனநிலைக்கு தள்ளப்படும் ஒருவன், காந்தியை இறுதியில் புரிந்துகொண்டு வருந்துவதை. காந்தியை கொல்லும் மனநிலைக்கு அவன் எவ்வாறு தள்ளபடுகிறான் என்று கதை அவனுடைய கோணத்தில் இருந்துதான் படம் நகர்கிறது. இதை முதலில் புரிந்து கொண்டு அடுத்த நிலைக்கு போவோம். தன் மனைவி கொல்லபட்டபின்பு,கையில் துப்பாக்கியுடன், தெருவில் ஒரு மிருகம் போல் அவன் போகின்றான்.
அடுத்த காட்சியிலேயே, ஹிந்து கலவர கும்பல், காலில் விழுந்து கதறும் ஒரு இஸ்லாமிய பெரியவரை கொன்று, பின்பு அவருடைய சிறிய மகனை எரியும் தீயில் கொண்டு தள்ளுகிறார்கள். இதை விட கொடூரமாக ஒரு செயலை காட்டிவிட இயலாது. கமலின் பாத்திரம் இந்த காட்சியை பார்க்கிறது. ஆனாலும் பார்க்க மனமின்றி திரும்பி கொள்கிறது. இது ஒரு சிறந்த திரைப்படத்தின் காட்சியமைப்பு. சாகேத் ராமின் இழப்பை போலவே, இன்னும் சொல்ல போனால் அதைவிட கொடூரமாகவே எதிர்தரப்பினர்க்கும் இழப்புகள் ஏற்படுகின்றன.
ஆனால், சாகேத் ராம், தன்னுடைய இழப்பை மட்டுமே முன்னிலைபடுத்தி வருந்தும் ஒரு சுயநலவாதியாக இந்த ஒரு காட்சியிலேயே தெளிவாக கமல் காட்டிவிடுகிறார். அந்த கதாபாத்திரத்தின் மேல் நமக்கும் எழும் அனுதாபம், அவர் தெருவில் திரிந்து மிருகம் போல் கண்ணில்படுபவர்களை எல்லாம் சுட்டு கொல்லும் காட்சியில் நீர்த்து விடுகிறது. இதை திட்டமிட்டே கமல் காட்சிபடுத்துகிறார். அவரால் அனாதை ஆக்கபடும் குழந்தையின் உருவம் அவரது மனசாட்சியை அவ்வபோது தட்டி செல்கிறது. அப்போதும் சாகேத் ராம் தனது இழப்பை மட்டும் மையபடுத்தும் ஒரு சுயநலவாதியாகவே தெளிவாக உருவக்கப்பட்டுள்ளார்.

நட்டுவாக்கிலி நடராசனின் மூன்றாவது  கேள்வி: 


3.இஸ்லாமிய தீவிரவாதி கற்பழித்து கொலை செய்கிறவனாக சித்தரிக்கபடுகிறான். ஆனால் ஹிந்து தீவிரவாதி அபிவதயே என்று சொல்லி அறிமுகம் ஆகிறான்.

நமது பதில் 

இந்த பதிவையே தவிர்த்து விடலாம் என்று, நான் யோசித்ததற்க்கு காரணமே இந்த மேம்போக்கான, எந்த சிந்தனையும் தென்படாத கருத்தே. அல்டாப் டைலர் பாத்திரம், மிகப் பெரிய படிப்போ அல்லது அறிவாற்றால் உடைய பாத்திரமாகவோ சித்தரிக்கப்படவில்லை. கலவரத்தை பயன்படுத்தி தமது காம இச்சையை தீர்த்துக்கொள்ளும் ஒரு மிருகம். அவ்வளவே. ஆனால் அபயன்கரின் பாத்திரமோ படித்த, சிந்திக்க கூடிய ஒருவனாகவே சித்தரிக்கப்படுகிறது. ஆனால் அவன்தான் மிக கொடூரமாக சிந்திக்க கூடியவனாக இருக்கிறான். சாகேத் ராம் துப்பாக்கியுடன் எதிர்படுகையில், ராமின் பூணுலை கண்ட உடன் தன்னை சாதுர்யமாக அடையாளப்படுத்தி கொள்ளும் பொருட்டு தமது குலம், கோத்திரத்தை சொல்லி அபிவதையே என்று முடிக்கிறான். அடுத்த காட்சியில் ராம் அவனை தேடி போகும் போது, நேத்து நல்ல வேட்டையா? என்று மிக கொடூரமாக கேட்கிறான். இந்த ரெண்டு பாத்திரத்தில் யார் கமலால் கொடுரமான பாத்திரமாக சித்தரிக்கப்பட்டுளார் என்று சின்ன குழந்தை கூட சொல்லிவிடும் அய்யா.

ஹேராம் படம் ஒன்றும் மிக நேர்த்தியாக அமைந்துவிட்ட ஒரு கலைப்படைப்பு அல்ல. பலவீனங்கள் உள்ள ஒரு படைப்புதான். ஆனால், சம்பந்தமே இல்லாது, வெறும் கவன ஈர்ப்பை கருத்தில் கொண்டு ஹிந்துத்துவ படம் என்று விமர்சனம் செய்ததனாலேயே, பதிலளிக்க நேரிட்டது. இதை விட கொடுமை, அன்பே சிவம் படத்தை பார்த்து, கமல் எப்படி ஒரு கொடுரமான வில்லனை சைவ பக்தனாகவும், எதிர்பார்ப்பில்லாது உதவுபவர்களை கிறித்துவ கன்னியாஸ்திரிகளாகவும் காண்பிக்கலாம்? அவர் ஒரு ஹிந்து விரோதி என்று ஒரு தரப்பு எழுதியது. இப்போது சிலர் ஹேராம் படத்தில் ஹிந்துத்துவ என்று காமெடி செய்கிறார்கள் .
2 comments:

  1. நன்னா சொன்னேள் போங்கோ... சில அபிஷ்டுகளுக்கு என்ன சொன்னாலும் புரியுறதில்லை...நாக்கை புடுங்கிண்டு சாகுற மாதிரி இன்னும் நாலஞ்சு கேள்விகள் கேளுங்கோன்னா .... அய்யங்கார் முன்னேற்றப் பேரவை

    ReplyDelete
  2. ஹேராம் பற்றி தொடர் பதிவுகளாக எழுதி வருகிறேன்.
    வருகை தந்து கருத்துரைத்தால் மகிழ்வேன்.

    ReplyDelete

Write your valuable comments here friends..